செண்பக ஜெகதீசன்

 

அற்றா ரழிபசி தீர்த்த லஃதொருவன்

பெற்றான் பொருள்வைப் புழி.

       –திருக்குறள் –226(ஈகை)

 

புதுக் கவிதையில்…

 

வறியவர் பசியைப்

போக்கவேண்டும்,

பொருள் இருப்பவன்..

 

அதுவே அவனுக்குப்

பிற்காலத்தில் உதவிடத்தக்க

சேமிப்பாகும்…!

 

குறும்பாவில்…

 

வைத்திருக்கும் செல்வத்தினால்

வறியேர் பசிப்பிணி போக்குபவனுக்கு,   

பிற்கால சேமிப்பாகும் அது…!

 

மரபுக் கவிதையில்…

 

அதிகப் பசியில் வாடுவோர்க்கே

அன்ன மளித்துக் காப்பாற்ற

அதிகப் பொருளைச் செலவிட்டே

அவர்தம் பசிப்பிணி போக்கிட்டால்,

அதில்வரும் செலவது இழப்பல்ல

அறப்பணி செய்த செல்வருக்கே,

எதிர்வரும் காலத் தேவைக்கது

ஏற்ற நல்ல சேமிப்பே…!

 

லிமரைக்கூ..

 

வறியவரின் பசிப்பிணியைப் போக்கு

செல்வமது இதிலே செலவிட்டதை

வருங்கால சேமிப்பாய் ஆக்கு…!

 

கிராமிய பாணியில்…

 

குடுத்துவாழணும் குடுத்துவாழணும்

கைப்பொருளக் குடுத்துவாழணும்,

காசில்லாத ஏழபசிபோக்க

கைப்பொருளக் குடுத்துவாழணும்..

 

பெரும்பசியில வாடுறவன்

பசிபோக்கச் செலவளிச்சா

பணக்காரனுக்கு அது போக்கில்ல,

எதிர்காலத்தில அவன் தேவைக்கு

இப்பவே சேமிச்ச சேமிப்புதான்..

 

அதால,

குடுத்துவாழணும் குடுத்துவாழணும்

கைப்பொருளக் குடுத்துவாழணும்,

காசில்லாத ஏழபசிபோக்க

கைப்பொருளக் குடுத்துவாழணும்…!

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *