-மீனாட்சி பாலகணேஷ்

பிள்ளைத்தமிழ் இலக்கியங்கள் தமிழுக்கே உரிய ஐவகை நிலங்களின்  செழிப்பையும் அழகையும் புகழ்ந்து இயற்றப்பட்ட பல பாடல்களை அனைத்துப் பருவங்களிலும் இயற்றிய புலவர்களின் கற்பனைக்கேற்பக் கொண்டமைந்து விளங்குகின்றன. இலக்கியச் சுவையையும் மேம்படுத்துகின்றன. பாட்டுடைத்தலைவன் அல்லது தலைவியின் நாட்டின் வளம் இந்த ஐவகை நிலங்களின் செழிப்பாலும் உணரப்படும்.

முருகப்பெருமான் மீதான பிள்ளைத்தமிழ் நூல்களில் இந்த நயங்கள் மிகச்சிறப்பாகப் பாடப்படும். ஏனெனில் குறிஞ்சிநிலத்திற்குக் கடவுள் குமரப்பெருமானல்லவா?

இந்தவரிசையில் நாம் முதலில் காண்பது திருச்செந்தூர் பிள்ளைத்தமிழ்ப் பாடலொன்றினையே! திருச்செந்தூரானது கடல்சார்ந்த நெய்தல் நிலப்பகுதியாயினும் குன்றுதோறுமுறைபவனாகிய குமரப்பெருமானின் குறிஞ்சிமலை வளத்தையும் பாடுதல்தானே முறைமை?

பகழிக்கூத்தர் விளக்கும் ‘மலையும் மலைசார்ந்த இடமுமான’ குறிஞ்சிநிலத்து மலைப்புறத்தின் அச்சமூட்டும் பேரழகு அருமையான பாடல்வரிகளாக விரிகிறது:

நெடிய மரங்கள் கொடிகளுடன் பின்னிப்பிணைந்து அடர்ந்து வளர்ந்துள்ளமையால் பகல்போதிலும் இருள் meena1சூழ்ந்திருக்கும் அச்சம்தரும் மலைப்பிரதேசம். இங்கு எவ்வாறு வழிபார்த்து நடந்து செல்வது? அந்த இருளை நீக்கவும் இயற்கையே வழிசெய்கிறது. அங்குள்ளதான கொடிய நஞ்சினை உடைய ஒரு பாம்பு தன் வாயை அகலத்திறந்து மாணிக்கல்லை உமிழ்கின்றது; அந்த மாணிக்கக்கல் ஊழிக்கால இருள்போன்ற கொடிய இருளை நீக்குகின்றதாம்.

மலையில் வாழும் குறவர்கள் உணவுக்காகத் தினை பயிரிடுவர். அதுவே அவர்களின் முக்கிய உணவாகும். meena2அதற்கு எருவாக அவர்கள் பயன்படுத்துவது என்ன தெரியுமா? கவரிமானின்  முலையிலிருந்து பெருக்கெடுத்தோடும் பால் சூரியஒளியினால் காய்ந்து, பாறைகள்மீது படர்ந்துள்ளது; சூரிய ஒளியில் அது வெள்ளித்தகடுகள் போன்று பளபளவென்று ஒளிவீசுகின்றது. மலைவாழ் குறவர்கள் அதனை எடுத்து தங்களது தினைப்பயிருக்கு உரமாகப் பயன்படுத்துகிறார்களாம். ஆச்சரியமாக இல்லை? மலையின் வளப்பத்தைக்கூற இன்னும் வேறுபல சொற்கள் வேண்டுமோ?

இக்குறிஞ்சி நிலத்தில் வாழும் கருநிறம் கொண்ட குறமகளிரின் இன்றியமையாத வேலை, தினைப்பயிரைத் தின்னவரும் கிளிகளையும் மற்ற பறவைகளையும், ‘ஆலோலம்,’  எனக்கூறி கவண் எறிந்து ஓட்டுவதே! சிலபொழுது அவர்களின் கவனம் பறவைகளை விரட்டுவதில் ஈடுபடுகிறது; இன்னும் சிலபொழுது தங்கள் குலமகளான வள்ளியின் உள்ளம் கவர்ந்த குமரனையும் அவன் திருவுருவையும் எண்ணி நெகிழ்ந்து கனிகின்றது. இவ்வாறு இருவிதமான எண்ணங்களும் மாற்றி மாற்றி அவர்களுடைய உள்ளங்களில் ஊசலாடுகின்றனவாம்!

இவ்வாறெல்லாம் குறிஞ்சிநிலவளம்கூறிப் பின்பு
குறமகளிரின் செம்மைபாய்ந்த கண்களைக் கொள்ளைகொண்ட முருகப்பெருமானைத் தலையசைத்து, திருவாய் திறந்து சில சொற்களைக்கூறிச் செங்கீரையாட வேண்டுகிறார் திருச்செந்தூர் பிள்ளைத்தமிழினை இயற்றிய புலவர் பகழிக்கூத்தனார்.

‘வெங்காள கூடவிட மொழுகுபற் பகுவாய்
………………………………….
மங்காம லிரசதத் தகடெனச் சுடர்விட
மலைக்குறவர் கண்டெடுத்து
வண்டினைக் கெருவிடுஞ் சாரலிற் கரியகுற
மகளிருள மூசலாட…….’ (திருச்செந்தூர்ப் பிள்ளைத்தமிழ்-செங்கீரைப்பருவம்)

***

அடுத்து நாம் காணப்போவது திருமலை முருகன் பிள்ளைத்தமிழிலிருந்து சுவையான ஒருபாடல். இது குறிஞ்சிநிலமான வள்ளிமலையில் நடந்த நிகழ்வைத் தெரிவிக்கின்றது!

வள்ளிமலையில் ஒரு சிவமுனிவர் தவம்செய்து கொண்டிருந்தபோது அவர்முன்பு அழகானதொரு மான் வந்து உலவியது. முனிவர் மோகத்துடன் அம்மானை நோக்கவும் அது கருப்பமடைந்து, ஓடோடிச்சென்று ஒரு குழிக்குள் கருவை ஈன்றுவிட்டுச் சென்றது. அவ்விடம் வந்த வேட்டுவர்கள் தோகைமயில் போல் விளங்கிய அக்குழவியான வள்ளியை எடுத்துவந்து மிக்க பெருமையுடன் வளர்த்தனர்.

வளர்ந்து இளம்குமரியான வள்ளியைத் தினைப்புனக் காவலுக்கும் அனுப்பிவைத்தனர். அப்போது அங்குவந்த முருகவேள் அவள்மீது மோகம் கொண்டான். meena3அவ்வள்ளியின் கையால் தேன்கலந்த தினைமாவைப் பெற்றுண்ண ஆசைப்பட்டு அவளிடம் வேண்டவும் செய்தானாம்.

‘அத்தகைய குமரனே! சிறுபறையை முழக்குக,’ என வேண்டுவதாகத் திருமலை முருகன் பிள்ளைத்தமிழ் நூலினை இயற்றிய கவிராச பண்டாரத்தையா பாடியுள்ளார்.

‘வள்ளிமலை தனில்முதிய சிவமுனிவன் முன்னர்ஒரு
மான்வந் துலாவ மானை
………………………………………….
…………………. தினைப்புனத் தினில்வைத்த
வேட்டுவமடந்தை கையால்
தெள்ளுதினை மாவுக் கவாவுற்ற மோகனே
சிறுபறை முழக்கி யருளே…’ (திருமலை முருகன் பி. த. சிறுபறைப்பருவம்)

இது வள்ளியம்மை பற்றிய பாடல்.

***

முருகன்மீது பிள்ளைத்தமிழ் பாடிய புலவர்களெல்லாம் அவன் உறையும் குறிஞ்சிநிலத்தின் பெருமைகளைப் பலவிதமாகப் பாடி மகிழ்ந்தனர்.

திருவிரிஞ்சை முருகன் பிள்ளைத்தமிழினை இயற்றிய வரகவி மார்க்கசகாய தேவரும் இதற்கு விதிவிலக்கல்ல. சந்தநயம் பொங்குமொரு அழகான பாடலைத் தாலப்பருவத்தில் பாடிவைத்துள்ளார்.

சிறுகுழந்தைகள் பசியால் வாடிவிடாமல் அன்னை அவர்களின் பசியறிந்து அன்போடு பாலூட்டுவாளல்லவா? நிலம் என்னும் குலமகள் அத்தகைய தாய் போன்றவளாம். தனது சிறார்களான சின்னஞ்சிறு பயிர்கள் பசியால் வாடிவதங்காமல் காப்பதற்காக மலையிலிருந்து விழும் தாய்ப்பால் போன்ற அருவிநீரை விரைந்தோடி வரச்செய்கின்றாள். இதனால் குறிஞ்சிநில மக்கள்கூட்டம் மிக்க மகிழ்ச்சியுடன் தங்கள் கடவுளான முருகனைக் கொண்டாடுகின்றனராம். ‘அந்தக் குறிஞ்சிநிலத்து வாழும் முருகன் பச்சைநிறம் கொண்ட பெரியமயில்மீது அமர்ந்திருப்பவன். முனிவர் போற்றும் சிவபிரானின் பாலகன். சரவணபவன்,’ என அவனுக்குத் தாலாட்டுப் பாடுகின்றார் புலவர்.

‘நிலனெனும் ஒருகுல மடமகள் சிறுபயி
ராயசி றார்க ளெலாம்
…………………………………………….
மலைதரும் அருவி விரைந்து வரக்குற
வாணர் இனங்க ளெல்லாம்
மகிழ்வுட னாடுகு றிஞ்சிநி லந்தனில்
வாழ்பசு மாமயிலா….’ (திருவிரிஞ்சை முருகன் பி. த. தாலப்பருவம்)

இவ்விதமாக ஒவ்வொரு புலவரும் சளைக்காமல் மலைவளம்கூறிக் குமரனை வழுத்துகின்றனர்.

***

மீனாட்சி க. (மீனாட்சி பாலகணேஷ்)
{முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை,
கற்பகம் பல்கலைக் கழகம், கோவை,
நெறியாளர்: முனைவர் ப. தமிழரசி,
தமிழ்த்துறைத் தலைவர்.}

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *