Featuredஇலக்கியம்கட்டுரைகள்பத்திகள்

நலம் .. நலமறிய ஆவல் (73)

நிர்மலா ராகவன்

பிறர் போற்ற

நலம்
தனது முதல் குழந்தையை முதன்முதலாகப் பார்க்கும் தாய், `இவனுக்காக உயிரையே கொடுப்பேன்!’ என்று எண்ணக்கூடும். பார்ப்பவர்கள் அனைவரும் தன் குழந்தையை மெச்சவேண்டும் என்ற ஆவல் பிறக்கும்.

ஆனால், பிறருக்கு அதுவே தொல்லையாகிவிடும்.

`எப்போதும் அந்தக் குழந்தையையே பாக்கணும் என்பார்கள்!’ என்று ஒருவரும், `எத்தனையோ குழந்தைகளைப் பாத்தாச்சு, போ!’ என்று அலுத்துக்கொண்ட பெண்மணிகளையும் கண்டிருக்கிறேன்.

அந்தமாதிரி ஒர் உறவினர் வீட்டில் தங்கியபோது, `இவளைப் பாருங்களேன்!’ என்று தன் இரண்டு வந்து மகளின் பராக்கிரமத்தை ஓயாது பறைசாற்றினாள் அவளுடைய தாய்.

குழந்தை என்னவோ, வயதுக்கு மீறிய புத்திசாலிதான். ஆனால், அவளை மெச்சுவதைத் தவிர நமக்கு வேறு வேலை இல்லையா, என்ன!

ஒரு முறை, `நான் படிச்சுண்டு இருக்கேன். தொந்தரவு பண்ணாதே!’ என்றேன் முகத்தை சற்றே திருப்பி. அவளுடைய வாய் அதிர்ச்சியில் பிளந்தது.

சில வருடங்கள் கழித்து, அவளுடன் பேசும்போது, “உன் குழந்தையைப் பார்ப்பவர்களிடமெல்லாம் காட்டிப் பெருமைப்பட்டுக்கொள்ளாதே!” என்றேன், அறிவுரை கூறும் வகையில்.

“நான் இப்போதெல்லாம் அப்படிச் செய்வதில்லை. அவளுடைய அப்பாவை அப்படித்தான் நடத்தினார்களாம். அதனால் வேண்டாம் என்கிறார்!” என்றாள். ஏன் கூடாது என்று அவளுக்குப் புரியத்தானில்லை.

பிறரிடம் தம்மைப் புகழ்கிறார்களே என்று குழந்தைகளுக்கு முதலில் பெருமையாக இருக்கும். நாளடைவில், `நான் செய்வதெல்லாம் பெற்றோருக்குப் பெருமை தரக்கூடியதாக இருக்கிறதோ?’ என்று யோசித்து, யோசித்து ஒவ்வொரு காரியத்தையும் செய்ய முனைவர். அதற்கு ஈடாக, பெற்றோரும் குழந்தைகள் செய்ய வேண்டிய காரியத்தையும் தாம் செய்வர். இரு தரப்பினருக்குமே நிம்மதி கிடைப்பதில்லை. குழந்தைகளுக்குச் சுதந்திர உணர்ச்சி எப்படி வரும்?

எதிலாவது வெற்றி பெறாவிட்டால், `பெற்றோர் கலங்குவார்களே!’ என்ற ஏமாற்றம் எழும். புதிதாக எதையும் செய்யும் ஆர்வமோ, துணிவோ இல்லாது போய்விடுவதும் இதனால்தான்

`நான் ரொம்ப அழகாம்!’

பதின்ம வயதினருக்கான பள்ளிக்கூடம் ஒன்றில், கல்வியில் நாட்டமோ, திறமையோ இல்லாத மாணவிகள் நிரம்பிய வகுப்பில் ஒரு பொதுவான தன்மை இருந்ததைக் கண்டு ஆச்சரியம் எழுந்தது எனக்குள். எல்லாருமே அழகாக இருந்தார்கள்.

சிறு வயதில், `அழகு!’ என்று பலரும் கொஞ்சியிருப்பார்கள். அதனால் அதற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து வளர்ந்திருக்கிறார்கள். வகுப்பில் ஒரு சிறு கண்ணாடியைக் கையில் வைத்துக்கொண்டு தம் முகவசீகரத்தை ரசித்துக்கொண்டிருப்பார்கள்!

அழகு, அறிவு – இப்படி ஏதாவது ஒன்று இருந்தால் போதுமா? குணம்?

உணர்ச்சிமயமான தாய்

அச்சிறுமிக்கு இரண்டு வயதுதான். ஆனாலும், முதல் குழந்தை ஆயிற்றே, பிறர் பாராட்டுவதுபோல் நடக்க வேண்டாமா என்று தாய் ஓயாது அவளைத் திருத்துவாள். வெளியில் அழைத்துப் போகுமுன்னர் `அதைச் செய்யாதே, இப்படிப் பேசாதே’ என்று போதனை நடக்கும். மகள் மிரண்டுபோய் வாய்பேசாது இருப்பாள். அப்படியும் தப்பு கண்டுபிடித்து, வீட்டிற்கு வந்ததும் திட்டுவாள் தாய்.

ஐந்து வயதிற்குள் தாயின் குணம் குழந்தைக்குப் படிந்தது. தாய் பேசுவதைப்போலவே அவளிடமும் பிறரிடமும் மரியாதையின்றி பேச ஆரம்பித்தாள்.
`எவ்வளவு கண்டிப்பாக வளர்த்தேன்! இப்படி நடந்துகொள்கிறாளே!” என்று பெரியவள் கலங்குகிறாள். அவளுடைய வசவு அதிகரிக்கிறது.

பெரியவர்களைப்போல் குழந்தைகள் எப்போதுமே நடக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு சரியல்ல. அவர்கள் செய்யும் சிலவற்றை `குழந்தைத்தனம்’ என்று விட்டுவிட வேண்டியதுதான். அளவுக்குமீறி உணர்ச்சிவசப்பட்டால் எதிர்விளைவுக்குத் தயாராக இருக்க வேண்டும்.

எல்லாரையும் மட்டம் தட்டும் தாய்

தன் மகன் புத்திசாலி என்று பெருமைப்பட்டுக்கொள்ளும் தாய் அவள். ஆனால் எங்கள் பள்ளிக்கூடத்தில் அவன் வாங்கிய மதிப்பெண்களோ அவள் நினைப்பைப் பொய்ப்பிக்க வைப்பதாக இருந்தது.

`உங்கள் ஆசிரியைகள் எல்லாரும் முட்டாள்கள்! உன் அறிவை அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை!’ என்று மகனிடமே பழித்தாள். மகன்மூலம் பள்ளிக்கு ஒரு கடிதம் அனுப்பினாள், `என் மகனுக்கு நீங்கள் அளிக்கும் மதிப்பெண்களைவிட அதிகம் வாங்கத் திறமை இருக்கிறதென்று எண்ணுகிறேன்!’ என்று!

சிலர், “நம் பக்கத்து வீட்டுக்காரர்கள் காட்டுமிராண்டிகள். இப்படியா, உரக்க டி.வியும் ரேடியோவும் போடுவார்கள்!” என்பார்கள்.

இதையெல்லாம் கேட்டு வளரும் மகன் மட்டும் எப்படிப் பிறரை மதித்து நடப்பான்?
முதலில் வீட்டுக்கு வெளியே இருப்பவர்களைக் குறை கூறுவதில் ஆரம்பித்து, பிறகு பெற்றோரிடமும் மரியாதை இல்லாதுதான் நடப்பான். ஏனெனில், அதுதான் சிறுவயதிலேயே அவனிடம் படிந்த குணம்.

முன்பு, கிழக்கு மலேசியாவில் (போர்னியோ) பணியாற்றிய ஆசிரியர் ஒருவர் சிரித்தபடி கூறினார்: “பெற்றோர் பிரம்பைக் கொண்டு கொடுத்து, `எங்கள் மகன் தவறு செய்தால் இதைக்கொண்டு அடியுங்கள்!’ என்பார்கள்!”

அதைக் கேட்டுக்கொண்டு இருந்த நாங்கள், “இப்போது, மகனை அடித்தால், அப்பாவே நம்மை அடிக்க வருவார்!” என்று சிரித்தோம்.

`பெரியவர்களிடம் மரியாதையாக இரு!’ என்று குழந்தைகளுக்குப் போதித்தால் மட்டும் போதாது. நாமும் அவர்களது உணர்ச்சிகளுக்கு மதிப்பு கொடுத்து, பிறரிடமும் அப்படி நடந்துகொண்டால், இளையவர்களுக்கு இயல்பாகவே அக்குணம் வரும்.

அன்பில்லாமையால் எதிர்ப்பு

தாயற்ற பெண் என்று வீட்டிலுள்ள பெண்டிர் எல்லாரும் தன்னைத் திட்டுவதாக எப்போதும் என்னிடம் குறையாகக் கூறுவாள் என்னுடன் படித்துக்கொண்டிருந்த வித்யா. அவள் அடிக்கடி எங்கள் வீட்டுக்கு வருவாள்.

ஒரு முறை, என் தாய் சமையலறையிலிருந்து, “கடைக்குப் போய் கொஞ்சம் சாமான் வாங்கி வருகிறாயா?” என்று உரக்க என்னிடம் கேட்டபோது, “இப்போதே வேண்டுமா, இல்லை, கொஞ்ச நேரம் கழித்துப் போகட்டுமா?” என்று கேட்டேன்.

“அவசரமில்லை,” என்று பதில் வந்தது.

எங்கள் உரையாடலைக் கேட்டுக்கொண்டிருந்த வித்யா, “என்ன, நீ! உடனே சரியென்று சொல்கிறாய்! நானாக இருந்தால், `மாட்டேன்!’ என்று சண்டை பிடித்திருப்பேன்,” என்றாள்.

அவள் ஏன் அதிசயப்பட்டாள் என்று நான் யோசித்தபோது புரிந்தது: பிறர் சொல்வதை உடனுக்குடன் நிறைவேற்றியாக வேண்டும் என்ற கட்டாயம் எனக்கு இருக்கவில்லை.
அம்மா, `வாங்கி வா!’ என்று கட்டளை இடவில்லை. கோரிக்கை விடுத்தாள். அதனால், செய்யலாமா, வேண்டாமா என்ற முடிவு எனக்கே விடப்பட்டிருந்தது.

வித்யாவை வளர்த்தவர்களோ, தாயற்ற பெண்ணைத் தவறாக வளர்த்துவிட்டோம் என்று பிறர் குறை கூறிவிடுவார்களோ என்று பயந்து, அன்பை மறைத்து, கடுமையாக நடந்துகொண்டார்கள்.

அவர்கள் போக்கால் ஆத்திரமும் வருத்தமும் ஒருசேர, தன்னிடம் ஓயாது குற்றம் கண்டுபிடிப்பவர்கள் அனைவரையும் அயர்ச்சி அடையச்செய்வதுதான் தன் வெற்றி என்பதுபோல் நடந்துகொண்டாள்.

வகுப்பில் ஆசிரியை கேள்வி கேட்கும்போது, அலட்சியமாக எங்கோ பார்த்துக்கொண்டிருப்பாள். `வெளியே போய் நில்!’ என்று ஆசிரியை வழக்கமாக இரையும்போது, எதையோ சாதித்துவிட்டதுபோல், அளவுகடந்த ஓசையுடன் வெளிநடப்பாள். எங்களுக்கு அது வேடிக்கையாக இருக்கும். சிரிப்பை அடக்கப் பாடுபடுவோம்.

தோல்வியிலும் வெற்றி

குழந்தைகளிடம் உண்மையான அக்கறை கொண்ட பெற்றோர், அவர்கள் தோல்வி அடையும்போதும் கலங்காது, பக்கபலம் அளிப்பவர்களாக இருப்பார்கள். உதாரணமாக, ஒரு சிறுவன் ஏதாவது போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெறாவிட்டால், தாயும் சேர்ந்து அழுகிறார்கள் (தொலைகாட்சியில் பார்த்தது). அதைவிட்டு, `நீ சிறப்பாகத்தான் செய்தாய். ஆனால், மற்றவர்கள் உன்னைவிட வயதிலும் அனுபவத்திலும் பெரியவர்கள். அந்த வயது வந்தால், நீயும் நன்றாகச் செய்வாய்!’ என்றால், அவனுடைய உற்சாகம் குன்றாது. `போட்டி’ என்றால் வெற்றியும் இருக்கும், தோல்வியும் இருக்கும் என்று புரிந்துகொள்வான்.

ஒரே நிலையான நடப்பு

சிறுவர்கள் செய்த தவற்றை சில சமயம் கண்டுகொள்ளாமல் இருப்பதும், வேறு சமயங்களில் (பிறர் தப்பாக நினைத்துவிடப்போகிறார்களே என்று) அளவுக்குமீறி தண்டிப்பதும் அவர்களைக் குழப்பத்தில்தான் ஆழ்த்தும். பிறர் பார்க்க, முக்கியமாக, அவர்கள் நண்பர்கள் எதிரே கண்டிப்பதும் தண்டிப்பதும் வெறுப்பைத்தான் வளர்க்கும்.

“நீங்கள் சொன்னால் வாய்மூடி கேட்டுக்கொள்கிறான்! இதையே நாங்கள் சொன்னால் எதிர்த்துப் பேசுவான்!” என்று பல பெற்றோரும் வளர்ப்பவர்களும் என்னிடம் வருத்தத்துடன் கூறியிருக்கிறார்கள்.

மரியாதை கொடுத்தால்தான் திரும்ப வாங்கலாம். இந்த நியதி எல்லா வயதினருக்கும் பொருந்துமே! அவர்களுடைய நன்மைக்காகச் சொல்கிறாம், நம் அதிகாரத்தை நிலைநாட்டுவதற்காக இல்லை என்பதைப் புரிய வைத்தால், அதன்படி நடப்பார்கள். பிறர் பாராட்டும்போது தம்மை அப்படி வளர்த்தவர்களிடம் கொண்ட மரியாதை கூடும்.

தொடருவோம்

Print Friendly, PDF & Email
Download PDF
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க