Blog

  • பாரத விண்வெளி ஆய்வுப் பிதா டாக்டர் விக்ரம் சாராபாய்​

    Dr. Vikram Sarabhai

    (1917 – 1971)


    சி. ஜெயபாரதன், B.E.(Hons), P.Eng. (Nuclear) Canada.


    “முன்னேறி வரும் ஓர் நாடு விண்வெளி ஆராய்ச்சியைச் செய்து வருவதின் நோக்கம் என்ன என்று பலர் வினா எழுப்பி வருகிறார்கள்!  இந்த முயற்சியில் நாங்கள் இரு மனதில்லாமல் ஒரே சிந்தனையில் ஈடுபட்டிருக்கிறோம்.  வெண்ணிலவை நாடியோ, விண்கோள்களைத் தேடியோ, மனிதர் இயக்கும் விண்சிமிழ்ப் பயணத்திற்கோ முற்படும், செல்வந்த நாடுகளுடன் போட்டியிடும் பெருங் கனவு எங்களுக்கு அறவே இல்லை!”

    டாக்டர் விக்ரம் சாராபாய்.

    இந்தியாவில் எழுந்த விண்வெளி ஆய்வுப் புரட்சி

    1963 இல் முதன் முதல் ரஷ்யாவும், அமெரிக்காவும் மனிதர் இயக்கும் விண்சிமிழ்களில் [Spacecrafts] அமர்ந்து அண்டவெளியில் சுற்றி வந்த போது, இந்தியாவின் விண்வெளிப் புரட்சி சிறிய அளவிலே ஆரம்பம் ஆனது!  அந்த ஆண்டு நவம்பர் 21 ஆம் தேதி பாரதத்தின் முதலாவது ஈரடுக்கு உளவு ஏவுகணை, நைக்-அபாச்சி [Two Stage Sounding Rocket, Nike-Apache], திருவனந்தபுரம் தும்பா ஏவு தளத்திலிருந்து, இடிக்கனலுடன் உறுமிக் கொண்டு, வானைக் கிழித்துக் கொண்டு, புவியீர்ப்பை எதிர்த்துக் கொண்டு உயரத்தில் எழுந்தது!  அது 50 பவுண்டு எடையுள்ள சோடியம் ஆவி வீசு கலனைச் [Sodium Vapour Release Payload] சுமந்து கொண்டு, 125 மைல் உயரத்தை எட்டி இந்தியா விண்வெளிப் படையெடுப்பில் தனது முன்னடியை வைத்தது!  தேர்ந்தெடுக்கப்பட்ட தும்பா ஏவுகணை மையம், ராக்கெட் ஏவிடச் சாதகமானப் பூகோளத்தின் காந்தசக்தி பூமத்திய ரேகையில் [Earth’s Magnetic Equator] அமைந்துள்ளது!

    “முன்னேறி வரும் ஓர் நாடு விண்வெளி ஆராய்ச்சியைச் செய்து வருவதின் நோக்கம் என்ன என்று பலர் வினா எழுப்பி வருகிறார்கள்!  இந்த முயற்சியில் நாங்கள் இரு மனதில்லாமல் ஒரே சிந்தனையில் ஈடுபட்டிருக்கிறோம்.  வெண்ணிலவை நாடியோ, விண்கோள்களைத் தேடியோ, மனிதர் இயக்கும் விண்சிமிழ்ப் பயணத்திற்கோ முற்படும், செல்வந்த நாடுகளுடன் போட்டியிடும் பெருங் கனவு எங்களுக்கு அறவே இல்லை!  ஆனால் மனித, சமூகப் பிரச்சனைகளைத் தீர்க்க முற்போக்கான விஞ்ஞானப் பொறியியல் நுணுக்கங்களைப் பயன்படுத்துவதில், உலக சமூகத்தின் முன்பாக நாங்கள் இரண்டாம் தரத்தில் இருக்க மாட்டோம்!  தேசீய ரீதியாக அர்த்தமுள்ள ஓர் பணியை மேற்கொள்கிறோம் என்னும் உறுதியில் இருக்கிறோம்!” என்று இந்தியாவின் விண்வெளித் திட்டத்தின் குறிக்கோளை ஆணித்தரமாக அறிவித்தவர், விஞ்ஞான மேதை டாக்டர் விக்ரம் சாராபாய்.

    புதிய பாரதத்தைச் செதுக்கிய பொற்காலச் சிற்பி

    சுதந்திர சூரியன் பாரத தேசத்திலே உதித்ததும், மேதைகளிடம் அடங்கிக் கிடந்த ஆக்க வெள்ளத்தை மடைதிறந்து விட்டவர், பிரதமர் ஜவஹர்லால் நேரு!  விண்வெளி ஆராய்ச்சியைத் துவங்க, விக்ரம் சாராபாயைக் கண்டு பிடித்து, இந்திய விண்வெளி ஆராய்ச்சிப் பேரவையை [Indian National Committee for Space Research] நிறுவி, அவரை அதிபர் ஆக்கியவர், நேரு.  இப்போது இந்தியா ஆசியாவிலே அண்டவெளி ஏவுகணை விடுவதில் முன்னணியில் நிற்கிறது.  அண்டவெளி ஏவுகணைகள், துணைக் கோள்கள் முழுக்க முழுக்க இந்தியப் படைப்பு.  அப்பெரும் விஞ்ஞானச் சாதனைகள் நிகழ்ந்த, இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியைப் இந்திய விஞ்ஞானத் தொழிற்துறையின் பொற்காலம் என்று வரலாற்றில் அழுத்தமாக எழுதி வைக்கலாம்!

    பொற்காலத்தைப் பாரதத்தில் உருவாக்கிய ஒப்பிலாச் சிற்பிகளான அரசியல் மேதை ஜவஹர்லால் நேரு, அணுவியல் மேதை டாக்டர் ஹோமி பாபா ஆகியோர் வரிசையில் டாக்டர் விக்ரம் சாராபாய் ஒருவராகக் கருதப்படுகிறார்.  பாரதத்தின் விண்வெளிப் படையெடுப்பு, விக்ரம் சாராபாயின் குறிப்பணியோடு அடி எடுத்து வைத்து ஓங்கி வளர்ந்தது!  இந்திய விண்வெளி யுகத்தின் தந்தை என்று போற்றப்படும், விக்ரம் சாராபாய் அண்டவெளிப் பௌதிக நிபுணர்.  அதில் அகிலக்கதிர் [Cosmic Rays] விஞ்ஞானத்தில் சிறப்பறிவு பெற்றவர்.  விக்ரம் சாராபாய் பல்துறைப் பகுதிகளில் திறமை யுள்ள ஓர் தொழிற் துறைஞர்.  விஞ்ஞானப் பொறியியல் தொழிற்துறைக் கூடங்களை நிர்மாணிக்கும் அமைப்பாளர்.  நிர்வாக வல்லமை மிக்க திறமைசாளி.  பயிற்சிப் பணியில் கருமமே கண்ணான கல்வி ஆசிரியர்.

    விஞ்ஞானி விக்ரம் சாராபாயின் வாழ்க்கை வரலாறு

    1919 ஆம் ஆண்டு ஆகஸ்டு 12 ஆம் தேதி விக்ரம் அம்பலால் சாராபாய் [Vikram Ambalal Sarabhai] குஜராத் மாநிலத்தில் அகமதாபாத் நகரில் பிறந்தார்.  ஆரம்பத்தில் தாயார் சரலாதேவி நடத்திய தனியார் பள்ளிக்கூடத்தில் படித்துப், பிறகு குஜராத் கல்லூரியில் இடைநிலைக் கல்வியை முடித்தார்.  அதன்பின் மேற்படிப்புக்கு 1939 இல் இங்கிலாந்து சென்று கேம்பிரிட்ஜ் ஸெயின்ட் ஜான் கல்லூரியில் சேர்ந்து, இயற்கை விஞ்ஞானத்தை [Natural Science] எடுத்துப் படித்தார். அப்போது இரண்டாம் உலகப் போர் மூண்டதால், அவர் உடனே இந்தியாவுக்குத் திரும்ப வேண்டிய தாயிற்று.

    இந்தியாவுக்கு மீண்டதும் விக்ரம் சாராபாய் நேராகப் பெங்களூர் சென்று இந்திய விஞ்ஞானக் கழகத்தில் [Indian Institute of Science] சேர்ந்தார்.  நோபெல் பரிசு பெற்ற விஞ்ஞான மேதை ஸர் சி.வி. ராமன் வழிகாட்ட அகிலக்கதிர் விளைவுகளின் [Cosmic Ray Effects] ஆராய்ச்சியில் ஈடுபட்டார்.  அங்கே அதே சமயத்தில் அகிலக்கதிர், மேஸான் [Meson] ஆராய்ச்சியில் ஆழ்ந்திருந்தவர் டாக்டர் ஹோமி ஜெ. பாபா. பாரதத்தின் எதிர்கால உன்னத விஞ்ஞான மேதைகள் இருவர் சி.வி. ராமனின் சிஷ்யர்கள்!  அவரது அடுத்த ஆய்வு, அகிலக்கதிர் வேறுபாடுகளின் புதிய சூரிய உறவுகள் [New Solar Relationships of Cosmic Ray Variations].  உலகப் போர் முடிந்த பிறகு, விக்ரம் சாராபாய் மறுபடியும் இங்கிலாந்துக்குச் சென்று மேற்படிப்பைத் தொடர்ந்தார். 1947 இல் சமர்ப்பித்த, “வேனில் வரம்பு மட்டங்களில் அகிலக்கதிர் ஆய்வுகள் [Cosmic Ray Investigations in Tropical Latitudes]” என்னும் ஆராய்ச்சிக் கோட்பாடுக்கு, கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகம் டாக்டர் பட்டத்தை [Ph.D] விக்ரம் சாராபாயிக்கு அளித்தது.

    விக்ரம் சாராபாய் ஓர் உன்னதக் கலை ஞானி.  கலைமேல் இருந்த மோகத்தால், அவர் கேரள நாட்டிய அரசி மிரிநாளினி சுவாமிநாதனைக் கலப்புமணம் புரிந்து, பாரத மக்கள் ஒருமைப்பாட்டுக்கு ஓர் வழிகாட்டியாக விளங்கினார்.  அவருக்குக் கார்த்திகேயன் என்ற புதல்வனும் மல்லிகா என்ற புத்திரியும் உள்ளார்கள்.  அவரது மனைவி மிரிநாளினி சாராபாய் [Mrinalini Sarabhai], அருமை மகள் மல்லிகா சாராபாய் [Mallika Sarabhai] இருவரும் புகழ் பெற்ற இந்திய நாட்டியக் கலா மேதைகள்.  கலைத்துவக் கலாச்சாரத்தில் மிகவும் ஈடுபாடுள்ள அவரும் அவரது மனைவி மிரிநாளினியும் சேர்ந்து தர்பனா கலைக்கூடத்தை [Darpana Academy] அமைத்து பாரத நாட்டின் பூர்வீகக் கலைகள் புத்துயிர் பெற நிகழ்ச்சிகள் நடத்தி வந்தார்கள்.

    விக்ரம் சாராபாய் தோற்றுவித்த தொழிற்துறைக் கூடங்கள்

    டாக்டர் பட்டம் பெற்று சாராபாய் இந்தியாவுக்கு மீண்டதும், அகமதாபாத்தில் 1947 நவம்பர் மாதம் பௌதிக ஆய்வுக் கூடத்தை [Physical Research Laboratory (PRL)] நிறுவனம் செய்து அங்கே தனியாகத் தனது விஞ்ஞான ஆராய்ச்சிகளைத் தொடங்கினார்.  அடுத்து அகமதாபாத் நெசவுத் தொழில் ஆராய்ச்சிக் கூட்டகத்தை [Ahmedabad Textile Industries’ Research Association] அதே ஆண்டு நிறுவனம் செய்து 1956 வரை அவரே அதன் ஆணையாளராய்க் கண்காணித்து வந்தார்.  தொழில் நிர்வாகத் துறையில் சாராபாயிக்கு மிகுந்த வேட்கை இருந்தது.  அந்த ஆர்வத்தை நிறைவேற்ற 1957 ஆம் ஆண்டு அகமதாபாத் நிர்வாகக் கூட்டகத்தைத் [Ahmedabad Management Association] துவக்கம் செய்தார். 1950 முதல் 1966 வரை பரோடாவில் சாராபாய் கெமிகல்ஸ், சாராபாய் கிளாஸ், சாராபாய் எஞ்சினியரிங் போன்ற பல தொழிற் சாலைகள் நிறுவ சாராபாய் காரண கர்த்தா வாகினார். இந்தியாவில் ஓர் ஒழுங்கான நிர்வாகத் துறைக் கல்வி வளர 1962 இல் இந்திய நிர்வாகக் கூடத்தை [Indian Institute of Management] நிறுவி, 1965 வரை சாராபாய் அதன் ஆணையாளராக இருந்தார்.

    விக்ரம் சாராபாய் நேரு, டாக்டர் ஹோமி பாபா போல் ஓர் தீர்க்க தரிசி!   இந்தியாவில் பிரம்மாண்டமான அணுசக்தியைப் பயன்படுத்தி, செழிப்புள்ள கங்கை நதி வளத்தைத் திருப்பி விட்டு தெற்கே உள்ள வரட்சிப் பிரதேசங்களுக்குப் பாய்ச்ச வேண்டும் என்ற பெரிய திட்டங்களை வகுத்தவர்!  1965 இல் அகமதாபாத்தில் பள்ளிச் சிறுவர்களுக்கு விஞ்ஞானத்தைப் பரப்ப சமூக விஞ்ஞான மையத்தை [Community Science Centre] நிறுவினார்.

    இந்தியாவின் முதல் ராக்கெட் ஏவு மையம் அமைப்பு

    பிரதம மந்திரி ஜவஹர்லால் நேரு 1962 இல் இந்திய விண்வெளி ஆராய்ச்சிப் பேரவையை [Indian National Committee for Space Research (INCOSPAR)] நிறுவனம் செய்து, அதன் அதிபராக டாக்டர் விக்ரம் சாராபாய் அவர்களை நியமித்தார்.  அதன் திட்டப்படி முதலில் தும்பா பூமத்திய ராக்கெட் ஏவு நிலையத்தை [Thumba Equatorial Rocket Launching Station (TELRS)], விக்ரம் சாராபாய் திருவனந்த புரத்தில் அமைக்க ஏற்பாடு செய்தார்.  தேர்ந்தெடுக்கப்பட்ட தும்பா ஏவுகணை மையம், ராக்கெட் ஏவிடச் சாதகமானப் பூகோளத்தின் காந்தசக்தி பூமத்திய ரேகையில் [Earth’s Magnetic Equator] அமைந்துள்ளது! இந்தியாவில் முதன் முதலாக ராக்கெட் டிசைன் செய்து, பல்வேறு அங்கங்களை இணைத்து, அதனைச் சோதனை செய்யத் திட்டங்கள் வகுத்தார்.  அடுத்து செயற்கைத் துணைக்கோள் [Artificial Satellite] ஏவும் திட்டத்தை வகுத்தார்.  அப்பணிகளில் அவருடன் உழைத்தவர் தற்போதைய இந்திய ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் அவர்கள்.  துணைக் கோள்களின் வழியாகக் கல்வியைத் தொலைக்காட்சிச் சாதனங்களின் மூலம் [Satellite Instructional Television Experiment (SITE)] பரப்பிக் கிராமங்களில் பாமர மக்களும் பயில வசதி செய்தார்.

    1966 ஜனவரி 24 ஆம் தேதி வியன்னாவில் அகில நாட்டு அணுவியல் நிகழ்ச்சியில் பங்கு கொள்ளச் செல்லும் போது, ஆல்·ப்ஸ் மலைத்தொடரில் விமானம் மோதி, இந்திய அணுசக்தித் துறையகத்தின் அதிபர், டாக்டர் ஹோமி பாபா அகால மரணம் எய்தினார்.  அப்போது பிரதமரான இந்திரா காந்தி பாபாவின் இடத்தை நிரப்ப விக்ரம் சாராபாயை அழைத்து, இந்திய அணுசக்தித் துறையகத்தின் அதிபராக 1966 ஆம் ஆண்டில் நியமித்தார்.  விண்வெளி ஆராய்ச்சித் துறைகளின் பொறுப்பையும் மேற்கொண்டு, விக்ரம் சாராபாய் புதிய அணுசக்தி துறையகப் பணிகளையும் கண்காணித்து வந்தார்.

    இந்திய விண்வெளி ஆய்வுத் துறையின் சாதனைகள்

    சுதந்திரம் பெற்று 25 ஆம் ஆண்டு விழாக் கொண்டாட்டத்தின் போது, 1972 இல் பொதுவான முறையில் ஆரம்பிக்கப் பட்டு, இந்தியாவின் விண்வெளித் திட்டங்கள் சீராக அமுலாக்கப் பட்டன.  முக்கியமாகப் பாரதத்தின் விண்வெளிப் பேரவை [Space Commission (SC)], விண்வெளித் துறையகம் [Dept of Space (DOS)] இரண்டும் முதலில் நிறுவனம் ஆயின.

    இந்திய விண்வெளித் திட்டத்தில் வானியல் பௌதிகம், கோட்பாடு பௌதிகம் [Theoretical Physics], பூகோளத்தின் விஞ்ஞானம், விண்கோள்களின் சூழ்நிலை, சூரிய குடும்பத்தின் ஆராய்ச்சி ஆகியவற்றை நுணுக்கமாய் அறிந்து கொள்ள வழிமுறைகள் வகுக்கப் பட்டுள்ளன.  அவற்றைத் திட்டமிட்டு நிறைவேற்ற நான்கு ஆய்வு நிலையங்கள் பணி புரிந்து வருகின்றன.  அகமதாபாத்தில் பௌதிக ஆராய்ச்சிக் கூடம், விண்வெளிப் பயன்பாடு மையம் [Physical Reseach Laboratory & Space Application Centre], திருவனந்தபுரத்தில் விண்வெளிப் பௌதிக ஆய்வகம் [Space Physics Laboratory], பெங்களூரில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பகம் [Indian Space Research Organization].  அந்த மையங்களில் செயற்கைத் துணைக் கோள்கள் [Satellites], ஏவிடும் வாகனங்கள் [Launch Vehicles], உளவு ராக்கெட்டுகள் [Sounding Rockets] ஆகிய விண்வெளிச் சாதனங்களின் ஆராய்ச்சி, வளர்ச்சி முயற்சிகள் நிகழ்ந்து வருகின்றன.

    முதல் துணைக்கோள் ஆரியபட்டா 1975 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் தேதி ரஷ்ய ராக்கெட் மூலம் சுமக்கப் பட்டுச் சுழல் வீதியில் விடப் பட்டது.  அடுத்து மூன்று துணைக் கோள்களும் [பாஸ்கரா-I, பாஸ்கரா-II, ஆப்பிள்] ரஷ்ய ராக்கெட் மூலமே [1979-1981] எடுத்துச் செல்லப் பட்டன.  ஐந்தாவது துணைக்கோள் ரோகினி முதன் முதல் இந்திய ராக்கெட் SLV-3 மூக்கில் அமர்ந்து கொண்டு விண்வெளியில் விடப்பட்டது.

    இதுவரை 32 துணைக் கோள்களை இந்தியா அண்டவெளியில் ஏவி இருக்கிறது. அவற்றில் 16 துணைக் கோள்களை இந்தியாவில் அமைக்கப் பட்ட நான்கு வித ராக்கெட்டுகள் SLV-3 [Satellite Launch Vehicle-3], ASLV [Augmented Satellite Launch Vehicle], PSLV [Polar Satellite Launch Vehicle], GSLV [Geo-Synchronous Satellite Launch Vehicle] வெற்றிகரமாக விண்வெளியில் தூக்கிச் சென்றுள்ளன.  மற்ற 16 துணைக் கோள்களை, ரஷ்ய, அமெரிக்க, ஈரோப்பியன் ராக்கெட்டுகள் சுமந்து சுழல்வீதிகளில் எறிந்துள்ளன.  1993 இல் ஏவப்பட்ட ஒரே ஒரு துணைக்கோள் [Indian Remote Sensing Satellite (IRS-1E)] மட்டும் சுழல்வீதியைத் தொட முடியாது தவறி இழக்க நேரிட்டது!

    செயற்கைத் துணைக் கோள்கள் செய்துவரும் பணிகள்

    1983 ஆகஸ்டு 30 ஆம் தேதி அமெரிக்க விண்வெளி மீள்கப்பல் [Space Shuttle] இன்சாட் [INSAT-1B] இந்தியத் துணைக் கோளை சுழல்வீதியில் ஏவி விட்டது.  ஏவப்பட்ட பல இன்சாட் இணைப்பணித் துணைக் கோள்களில் [INSAT Network Satellites] அதுவும் ஒன்று.  இந்திய தேசியத் துணைக்கோள் கூட்டு ஏற்பாடு [Indian National Satellite System] உள்நாட்டுத் தொடர்பு, சூழகக் காலநிலைக் கண்காணிப்பு [Meteorology], நேரடித் துணைக்கோள் தொலைக்காட்சி ஒளிபரப்பி [Direct Satellite Television Broadcasting] ஆகியவற்றுக்குப் பயன்படுகிறது.  இன்சாட் இணைப்பணியில் [INSAT Network] 167 தொலைத் தொடர்பு முனைகள் [Telecommunication Terminals], ஏறக்குறைய 4172 இருவழிப் பேச்சு இணைப்புகளை [Two-Way Speech Circuits] ஏற்படுத்த முடியும்.  இன்சாட் இணைப்பு இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் கிராமியத் தொலைவரைவை [Rural Telegraphy] ஏற்கனவே நிலை நாட்டியுள்ளது.  இன்சாட் துணைக்கோள் இணைப்பு, சமிக்கைகளை 650 தொலைக்காட்சி அலை அனுப்பிகளுக்குப் [TV Transmitters] பரிமாறி, 80 சதவீத இந்திய மக்களுக்குக் கலைக் காட்சிகளையும், செய்திகளையும் அனுதினமும் அளித்து வருகிறது.

    குறிப்பாக துணைக்கோள் மூலம் தொடர்பு [Communication through Satellite], காலநிலை முன்னறிவிப்பு செய்ய பூகோளச் சூழக ஆய்வு [Meteorology] ஆகியவற்றைச் செய்ய செயற்கைத் துணைக்கோள்கள் உதவுகின்றன.  சூறாவளி, கடல் கொந்தளிப்பு [Cyclone] போன்றவை ஊர்களைத் தாக்கும் முன்பே, துணைக்கோள் மூலம் பேரழிவு எச்சரிக்கை விடும் அபாய அறிவிப்பிகள், கிழக்குக் கடலோர ஊர்களில் நூற்றுக்கும் மேற்பட்ட இடத்தில் அமைக்கப் பட்டுள்ளன. அவை சரியான சமயத்தில் எச்சரிக்கை செய்து, பெரும்பான்மையான மக்களையும், ஆடு மாடுகளையும் காப்பாற்றி யுள்ளன.  அத்துடன் விண்வெளித் தூர உளவு [Remote Space Sensing] வேளாண்மை, நீர்வளம், நிலவளம், தாதுக்கள் [Minerals], வனவியல் [Forestry], சூழக நிலை [Environment], கடல்துறை வளர்ச்சி [Ocean Development], வெள்ளத்தால் சேதங்கள், மழையற்ற பஞ்சத்தின் விளைவுகள் போன்றவற்றையும் கண்காணிக்க உதவுகிறது.

    2002 செப்டம்பர் 12 இல் ஏவப்பட்ட மெட்சாட் [METSAT] துணைக்கோள் முதன் முதல் பூகோள இணைவு மாற்றுச் சுழல்வீதியில் [Geo-synchronous Transfer Orbit] வெற்றிகரமாக எறியப்பட்டது.  அது 22,000 மைல் உயரத்தில் சுற்றிவரும் போது பூமியின் ஒரே முகத்தை நோக்கிக் கொண்டு தேவையான வானலைச் சமிக்கைகளை அனுப்பும்!  மெட்சாட் மிக்க உயரத்தில் பறந்து, பூகோளம் முழுவதையும் படமெடுத்துப் பூமிக்கு அனுப்பியுள்ளது!

    தும்பாவில் டாக்டர் விக்ரம் சாராபாயின் மர்மான மரணம்

    1962 இல் பௌதிகச் சாதனைகளுக்கு விக்ரம் சாராபாய் சாந்தி ஸுவரூப் பட்நாகர் பரிசைப் [Shanti Swaroop Bhatnagar Award] பெற்றார்.  பாரத அரசு 1966 இல் பத்ம பூஷண் [Padma Bhushan] கௌரவப் பெயரையும், அவர் காலமான பிறகு பத்ம விபூஷண் [Padma Vibhushan] கௌரவப் பெயரையும் விக்ரம் சாராபாயிக்கு அளித்தது.  1968 இல் ஆக்க வினைகளுக்கு அண்டவெளி ஆய்வு ஐக்கியக் கூட்டத்தின் [United Nation Conference on the Exploration & Peaceful Uses of Outer Space] அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.  1970 இல் உலக நாடுகளின் அணுசக்திக் கூட்டக [International Atomic Energy Agency, Vienna] ஐக்கிய பேரவையின் தலைவராகவும், ஆக்க வினைகளுக்கு அணுசக்தி ஐக்கியக் கூட்டத்தின் [United Nation Conference on the Peaceful Uses of Atomic Energy] துணைத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    டாக்டர் விக்ரம் சாராபாய் 1971 டிசம்பர் 30 இல் தும்பா ராக்கெட் ஏவுதளத்தைப் பார்வை யிடச் சென்ற சமயம், திருவனந்தபுரம் தங்குமிடத்தில் இரவில் தூங்கச் சென்றவர் தூங்கிக் காலையில் எழுந்திருக்கவே வில்லை!  சாராபாய் குடும்பத்தினர் மரணச் சோதனை [Autopsy] எதுவும் செய்ய வேண்டாம் என்று தடை செய்து உடம்பை நேரே அகமதாபாத்துக்கு அனுப்ப ஏற்பாடு செய்தனர்!  ஆதலால் அவரது அகால மரணம் எப்படி உண்டானது என்று அறிய முடியாமல் மர்மமாகவே போய் விட்டது!

    இந்திய விண்வெளி யுகத்தின் தந்தை என்று போற்றப்படும், விக்ரம் சாராபாய் அண்டவெளிப் பணிகளுக்கு அடிகோலி, வளரும்படிச் செய்து, பெருகும்படி வழிகாட்டி, ஆசியாவிலே சிறந்த நிறுவனத்தைத் திறமையுடன் உருவாக்கிய விஞ்ஞான மேதை.  ஐம்பத்திரண்டு வயதிலே மறைந்த அந்த அரிய விஞ்ஞானியின் இடத்தை நிரப்ப இந்தியாவில் யாருமில்லை!  அவர் காலமான பின்பு தும்பா ராக்கெட் ஏவுதள நிலையம், விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் [Vikram Sarabhai Space Centre] எனப் பெயரிடப்பட்டு யாவரது நினைவிலும் அவரது பெயரை நிலைநாட்டி யிருக்கிறது.

    ************************
    jayabarathans@gmail.com/   S. Jayabarathan [Sep 2002]

    1.  http://jayabarathan.wordpress.com/2007/05/19/dr-abdul-kalam-2/

    2.  http://jayabarathan.wordpress.com/2007/04/20/dr-abdul-kalam/

    Posted by Jayabarathan S on ஜனவரி 10, 2007 at 5:16 மு.பகல்
    Filed under: விஞ்ஞான மேதைகள், விஞ்ஞானம்Leave a commentTrackback URI

    Share
  • தளிர் உலகில்!

    பழமைபேசி

    யோகா கிளாசுக்கு
    பாரதி நகர் போயிருக்கும்
    அம்மாவுக்குத் தெரியாமல்
    தாத்தாவுக்கு காப்பி
    போட்டுக் கொடுக்கிறாள்
    தாயம்மா பாட்டி!
    அந்த மாமாவிடம்
    இனிமேல் இங்கு
    வர வேண்டாமென்று
    சொல்லி அழும்
    சின்னமணி அக்காவுக்கு
    கன்னத்தில் நல்ல அறை!!
    சாக்கடையில்
    தவறி விழுந்த
    பிரவீணாவுக்கு
    கைகால் கழுவிவிட்ட
    பிச்சைக்காரத் தாத்தாவை
    பிடித்துக் கொண்டு
    போகிறது போலீசு!
    சதர்ன் மில்
    முரளி அண்ணனுக்கு
    ஷிப்ட் மாறினது தெரியாமல்
    மொட்டை மாடிக்குப் போகும்
    மெளலி மாஸ்டர் வீட்டு
    சந்திரகலா அக்கா!
    மேரி மிஸ்ஸுடைய
    செல்போனில் ரீடையல்
    போட்டுப் பார்த்ததில்
    அது எங்க ஸ்கூல் பஸ்
    டிரைவர் அண்ணன்தானாம்
    பிடீ பிரியடில் சொன்னான்
    த்ரீ ஏ தினேஷ் குமார்!
    அம்மாவிடம் சொல்லி
    பெர்மிசன் வாங்க வேண்டும்
    என்னுடைய ஸ்கூல் டே
    பெர்பாமன்சுக்கு ட்ரீட்
    ஓசன் ரெஸ்டாரண்ட்டில்!
    ஆமாம் நான் இன்றைக்கு
    கலைமகள் வித்யாலயா
    பிரைமரி ஸ்கூலில்
    ஒன் சீ படிக்கும் வித்யா!!

    Share
  • பிரபஞ்சப் பிறப்பை விளக்கிய விஞ்ஞானி ஜார்ஜ் காமாவ்

    (George Gamow)

    1904-1968

    சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா

    புனித வேத நூல்களில் நாம் காணும் மேன்மையான நியதிகளை நிலைநாட்டி மெய்ப்பிக்கவே, மனித முயற்சிகள் விஞ்ஞானத்தில் மேற்கொள்ளப் பட்டன என்று எனக்குத் தோன்றுகிறது.

    விஞ்ஞான மேதை ஜான் ஹெர்ச்செல் [1792-1871]

    விரியும் பிரபஞ்சத்தைப் பற்றி அறிய ஒரு பிறவிக் காலம் முழுதும் அர்ப்பணித்தாலும் போதாது! மறைந்து கிடக்கும் அகிலத்தின் மர்மங்கள் சிறிது சிறிதாகவே மலர்கின்றன! அநேக புதிய புதிர்களை வரப் போகும் எதிர்கால யுகங்களுக்காக, இயற்கை தனியாக வைத்துள்ளது! எல்லா மர்மங்களையும் ஒரே காலத்தில் விடுவிக்க, இயற்கை ஒருபோதும் நம்மை விடுவதில்லை!

    ஸெனேகா (முதல் நூற்றாண்டு ஞானி)

    “நமது பிரபஞ்சம் பெரும் பாய்ச்சலில் (Big Bounce) உதித்ததே தவிரப் பெரு வெடிப்பில் (Big Bang) தோன்ற வில்லை ! அதாவது முதலில் குவாண்டம் ஈர்ப்பாற்றல் நிகழ்த்திய விந்தை விளைவுகளால் உள்வெடிப்பு தூண்டிப் புற வெடிப்பில் (An Implosion Triggering an Explosion) உண்டானது.”

    மார்டின் போஜோவால்டு, (Martin Bojowald, Asst Professor of Physics, Penn. State, USA) (Authour of Big Bounce Theory) (July 2007)

    அணுவியல், அகிலவியல், உயிரியல் பெளதிக விஞ்ஞானி

    விண்வெளியை வில்லாய் வளைக்க முடியுமா ? பிரபஞ்சத்தின் முடிவுக்கும் ஒழுங்கீனக்  கோட்பாடு எனப்படும் ‘என்ட்ராப்பி நியதிக்கும்’ [Theory of Entropy] என்ன தொடர்பு ? அண்ட வெளியில் ஊடுருவிச் செல்லும் ராக்கெட் ஏன் சுருங்குகிறது ? விண்மீன்கள் வெடிப்பதற்கு ஆதி அடிப்படையும், அவற்றுக்குக் காரணமும் யாவை என்று நாம் அறிந்து கொண்டவை என்ன ? சந்ததியின் மூலவிகள் [Genes] புரியும் விந்தைப் புதிர்களைப் பற்றி நவீன  விஞ்ஞானம் கண்டு பிடித்தவை என்ன ? உலகத்தைப் பற்றி நாம் அறிந்ததை, ‘இலக்கங்களின் விதிப் பிரச்சனைகள்’ [Problems in Laws of Numbers] எவ்விதத்தில் பாதிக்கின்றன ? இத்தனை வினாக்களையும் தான் எழுதிய ‘ஒன்று, இரண்டு, மூன்று…முடிவின்மை’ [One, Two, Three…Infinity] என்னும் நூலில் எழுப்பியவர், ரஷ்ய அமெரிக்க விஞ்ஞானி ஜார்ஜ் காமாவ் [George Gamow]! ரஷ்யாவிலே பிறந்து அமெரிக்கக் குடியினராகிய ஜார்ஜ் காமாவ் அணுக்கரு பெளதிகம் [Nuclear Physics], பிரபஞ்சவியல் [Cosmology] பெளதிகம், மூலக்கூறு உயிரியல் ரசாயனம் [Molecular Biochemistry] ஆகிய முப்பெரும் விஞ்ஞானத் துறைகளில் மேன்மை மிக்க மேதை!

    பிரபஞ்சத்தின் முழுத் தோற்றத்தைப் புரிந்து கொள்ள வேண்டுமானால் அதன் மூலமான நுண்ணிய பரமாணுக்களையும் [Microscopic], விரிந்து குமிழிபோல் உப்பும் அதன் பிரமாண்ட வடிவத்தையும் பற்றிய [Macroscopic] எல்லாக் கருத்துக்களைத் தனித்தனியாக அறிய வேண்டும்! பிரபஞ்சத்தின் முதல் தோற்றம் ஒரு மாபெரும் வெடிப்பில் [Big Bang Theory] உண்டானது என்பதற்கு முதன் முதல் நிரூபணத்தைக் காட்டியவர் ஜார்க் காமாவ்!  அதாவது பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பேரளவு வெடிப்பு நிகழ்ச்சியில் [Colossal Explosion] பிரபஞ்சம் தோன்றி விரிவடைந்து வந்துள்ளது என்ற ஒரு கருத்தை ஆதரித்து, அதற்கு விளக்கம் அளித்து மெய்ப்பித்தவர்களில் முதல்வர், ஜார்ஜ் காமாவ்!  பெரு வெடிப்புக்குப் பின்பு பிரபஞ்சம், பின்புல நுண்ணலைக் கதிர்வீச்சை [Background  Microwave Radiation] உண்டாக்கி யிருக்க வேண்டும் என்று உறுதியாகக் கூறி, அதையும் நிரூபித்தும் காட்டினார்! அடுத்து அணுக்கருப் பெளதிகத்தின் [Nuclear Physics] ஆரம்ப கால  அடிப்படை வளர்ச்சியில், காமாவ் மிகவும் ஈடுபட்டவர். அவற்றிலிருந்து முற்றிலும்  வேறுபட்ட உயிரியல் விஞ்ஞானத்தில் [Biology] ஆர்வம் கொண்டு, இனவிருத்தியில் டிஎன்ஏ [DNA] பற்றி ஆராய்ந்து, நவீன மூலவி நியதியில் [Modern Genetic Theory] ஓர் அடிப்படைத்  தத்துவத்தை ஜார்ஜ் காமாவ் இயற்றி யுள்ளார். மேலும் புரோடான் சேர்க்கை [Protein  Synthesis] விளக்கத்தில் ஒரு முக்கியமான பகுதியை ஆக்கியுள்ளார் காமாவ்.

    ஜார்ஜ் காமாவ் புரிந்த அரும்பெரும் விஞ்ஞானச் சாதனைகள்

    1936 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஜார்ஜ் காமாவின் மிக்க விஞ்ஞானச் சாதனைகள்  பிரபஞ்சத்தின் தோற்றம் பற்றியும், விண்மீன்களின் பிறப்பு, வளர்ச்சியைப் பற்றியும்  சார்ந்திருந்தன. 1938 இல் ஹெர்ட்ஸ்பிரங்-ரஸ்ஸல் [Hertzsprung-Russel (H-R Diagram)]  வரைபடத்துக்கு ஒரு சிறந்த விளக்கத்தைக் கொடுத்தார். H-R வரைபடத்தில்  விண்மீன்களின் ஒளித்திறம் [Brightness] நேரச்சிலும், அவற்றின் உஷ்ணம் மட்ட அச்சிலும் குறிக்கப் பட்டுப் பல விண்மீன்களின் நிலைப்பாடு காட்டப் பட்டுள்ளது. 1939 இல் விரியும் பிரபஞ்சத்தின் மாதிரிக் [Model of the Expanding Universe] கோட்பாட்டை ஆதரித்து அதை அபிவிருத்தி செய்தார். அத்துடன் நிபுளாக்களின் பிறப்பு [Origin of Nebulae], பூதச் செம்மீன்கள் [Red Giant Stars] சக்தியை உற்பத்தி செய்யும் முறைகள் ஆகியவற்றை ஆராய்ந்தார். விண்மீன்கள் வெடிக்கும் போது, அவற்றிலிருந்து நியூட்ரினோ துகள்கள் [Neutrino Particles] வெளியேறுவதை 1940 இல் ஆய்வு செய்து, தான் ஆக்கிய பூத நோவாவின் நியூட்ரினோ நியதியை [Neutrino Theory of Supernova] வெளியீடு செய்தார்.

    1948 இல் விஞ்ஞானி ரால்ஃப் ஆல்ஃபருடன் [Ralph Alpher] காமாவும் சேர்ந்து, யூகிப்பட்ட  பெரு வெடிப்புக்கு [Postulated Big Bang] நிகழ்ச்சிக்கு முன்பு, பிரபஞ்சத்தின் நிலைமை என்ன என்று ஆராய்ந்ததில் எஞ்சிய நுண்ணலைக் கதிர்வீச்சு [Residual Microwave Radiation]  இருப்பதைக் கண்டார்கள்! அவர்களது அவ்வரிய கண்டுபிடிப்பு மெய்யானது என்று 1965 இல் பிரின்ஸ்டன் பல்கலைக் கழக விஞ்ஞானிகள், தாமும் கண்டு உறுதிப் படுத்தினர்!

    பிரபஞ்சத்தின் பிறப்புக் கோட்பாடுகளில் ஒன்றான ‘பெரு வெடிப்பு நியதியை’ [Big Bang  Theory] உறுதியாக நம்பி அதை விருத்தி செய்த முன்னோடிகளான, ரஷ்ய விஞ்ஞானி  அலெக்ஸாண்டர் பிரைடுமான் [Alexander Friedmann], அமெரிக்க விஞ்ஞானி எட்வின் ஹப்பிள் [Edwin Hubble], பிரிட்டிஷ் விஞ்ஞானி பிரெட் ஹாயில் [Fred Hoyle] ஆகியோருள்  முக்கியமானவர் ரஷ்ய விஞ்ஞானி, ஜார்ஜ் காமாவ்.

    ரஷ்ய மேதை ஜார்ஜ் காமாவின் வாழ்க்கை வரலாறு

    ரஷ்யாவில் ஜார்ஜ் காமாவ் ஒடிஸ்ஸா என்னும் நகரில் [Odessa now in Ukraine] 1904 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 4 ஆம் தேதி பிறந்தார். ஒடிஸ்ஸாப் பள்ளியில் படிக்கும் போது, 13 ஆம் வயதுப் பிறந்த நாள் பரிசாக அவரது தந்தையார் தந்த ஒரு தொலை நோக்கி, காமாவ் வானியல் விஞ்ஞானத்தில் ஈடுபட ஆர்வத்தை தூண்டியது! 1922 இல் லெனின்கிரார்டு பல்கலைக் கழகத்தில் [Now St. Petersburg] சேர்ந்து, புகழ் பெற்ற பேராசிரியர் அலெக்ஸாண்டர்  பிரைடுமான் [Alexander Friedmann] அவரிடம் ஒளியியல் [Optics], பிரபஞ்சவியல் விஞ்ஞானம் [Cosmology] இரண்டையும் முதலில் பயின்றார். பேராசிரியர் பிரைடுமான், ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் படைத்த ஒப்பியல் நியதிச் [Theory of Relativity] சமன்பாடுகளின் பிரச்சனைகளைத் தவிர்க்க ஒரு தொகுப்புத் தீர்வு முறைகளை [A Set of Solutions] ஆக்கியவர்!  அகிலவெளி விரிந்து கொண்டுதான் போகிறது என்ற கருத்தைக் காமாவுக்கு முதலில் ஊட்டியவர், பிரைடுமான்! ஆனால் அப்போது காமாவ் பிரைடுமான் கூறிய அகிலவெளித் தத்துவத்தைத் தொடராது, கதிர்த்துகள் நியதி [Quantum Theory] மீது வேட்கை மிகுந்து தன் திறமையை விருத்தி செய்ய முயன்றார். 1928 இல் Ph.D. பட்டம் பெற்றபின், ஜெர்மனிக்குச் சென்று காட்டிங்கன் பல்கலைக் கழகத்தில் [University of Gottingen] சேர்ந்து, பேராசிரியர் வெர்னர் ஹைஸன்பர்க் [Werner Heisenberg (1901-1976)] விஞ்ஞான மேதையிடம் ஆராய்ச்சி  செய்தார். அதே சமயத்தில் அங்கு பயில வந்த ஹங்கேரியின் விஞ்ஞானி எட்வெர்டு  டெல்லருன் [Edward Teller] பழகி இருவரும் கூட்டாக அணுக்கரு பெளதிகத்தில் [Nuclear  Physics] பல விஞ்ஞான ஆராய்ச்சிகள் செய்தனர்.

    காமாவின் அரிய திறமையை வியந்து, அணுவியல் துறை மேதை நீல்ஸ் போஹ்ர் [Neils Bohr (1871-1962)] அவரைக் கோபன்ஹேகன் கோட்பாடு பெளதிக ஆய்வுக்கூடத்தில்  [Copenhegan, Institute of Theoretical Physics] ஆராய்ச்சி செய்ய டென்மார்க் வரும்படி அழைத்தார்.  அப்போதுதான் ஜார்ஜ் காமாவ் முதன் முதல் அணுக்கரு அமைப்பைத் ‘திரவச் சொட்டு மாதிரி’ [Liquid Drop Model] போன்றது என்று எடுத்துக் காட்டினார்! அம்முறையே பின்னால் அணுப்பிளவு [Nuclear Fission], அணுப்பிணைவு [Nuclear Fusion] இயக்க நியதிகளுக்கு அடிப்படையாக அமைந்தது! அடுத்து ஹெளடர்மன்ஸ் [F. Houtermans], அட்கின்ஸன் [R. Atkinson] ஆகியோருடன் கூட்டுழைத்து,  விண்மீன்களின் உள்ளே நிகழும் அணுக்கரு இயக்கங்கள் பற்றி ஆய்வுகள் செய்தார். அதன்பின் 1929 இல் இங்கிலாந்து சென்று, கேம்பிரிட்ஜ் காவென்டிஷ் ஆய்வுக் கூடத்தில் அணுவியல் மேதை ஏர்னஸ்ட்  ரூதர்ஃபோர்டுடன் [Ernest Rutherford (1871-1937)] ஆராய்ச்சிகள் செய்தார். அப்பணியில்  விரைவாக்கிய புரோட்டான் கணைகளைப் [Accelerated Protons] பயன்படுத்தி அணுவைப் பிளக்க எவ்வளவு சக்தி தேவைப்படும் என்று கணித்தார். அப்போதுதான் முதன் முதலாக காமாவ் மூலகங்களின் செயற்கை ரசவாத முறைகளுக்கு [Artificial Transmutation of Elements] அடிப்படைக் கோட்பாடுகளை அமைத்தார். 1932 இல் அவற்றைப் பின்னால் ஜான் காக்கிராஃப்ட் [John Cockcroft (1897-1967)] தனது நேர்போக்கு விரைவாக்கியில் [Linear Accelerator], போரான், லிதியம் [Boron & Lithium] ஆகிய இரண்டையும் புரோட்டான் கணைகளால் தாக்கி  ஹீலியத்தை வெற்றிகரமாய் உண்டாக்கினார்! அதுவே முதன் முதல் செய்யப் பட்ட மூலக  மாற்றம் அல்லது ரசவாதம் [Artificial Transmutation].

    அமெரிக்கா நோக்கி ஜார்ஜ் காமாவ் புறப்பாடு

    1931 இல் சோவியத் யூனியன் ரோமில் நடந்த அணுக்கரு பெளதிகக் கூட்டரங்குக்குச்  [Nuclear Physics Conference] செல்ல அனுமதி தராமல், ஜார்ஜ் காமாவைத் தடை செய்து  அவரை அடைத்துப் போட்டது!  மறுபடியும் 1933 இல் பிரஸ்ஸல்ஸ் [Brussels] பெல்ஜியத்தில் நடந்த கூட்டரங்குக்கு அனுமதி கிடைக்கவே, அதைப் பயன்படுத்தி ஜார்ஜ் காமாவ்  விடுதலைப் பறவையாய், அமெரிக்காவுக்குப் புலம்பெயர்ந்து 1940 இல் அமெரிக்கக் குடியினரானார்!

    அமெரிக்காவில் ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக் கழகத்தில் [Washington D.C.] காமாவ்  ஆசிரியராகப் பணி ஏற்றார். அங்கே ஆசிரியராக இருந்த விஞ்ஞான மேதை எட்வெர்டு  டெல்லரை மறுபடியும் சந்தித்தார்!  அவருடன் கூட்டாளியாகச் சேர்ந்து, காமாவ் அணுக்கரு பெளதிகத்தில் தொடர்ந்து ஆய்வுகள் செய்தார்! 1936 இல் கன உலோகங்கள் கதிரியக்கத்  தேய்வின் போது [Radiactive Decay of Heavier Elements] பீட்டா பரமாணுக்கள் [Beta Particles] வெளியேறும் முறைகளைச் சீராக வகுத்து இருவரும் புதியக் கோட்பாடுகளை எழுதினார்கள். அவற்றில் ஒன்றான காமா-டெல்லர் பீட்டா தேய்வு நியதி [Gamow -Teller Theory of Beta Decay] கதிரியக்க விளைவின் போது, எலக்டிரான் எழுச்சியைப் பற்றிக் கூறுகிறது.  அடுத்து விண்மீன்களின் தோற்ற ஆரம்பத்தில் எழும் வெப்ப அணுக்கரு இயக்கங்களைப்  [Thermo Nuclear Reactions] பற்றி இருவரும் ஆராய்ச்சிகள் செய்தனர்.

    1942 இல் அந்த ஆய்வுகளைப் பயன்படுத்திப், பிரபஞ்சவியல் நிகழ்ச்சிகளுக்கும், அணுக்கரு இயக்கங்களுக்கும் இடையே உள்ள தொடர்புகளை ஆராய்ந்தார். அதே ஆண்டில் காமாவ் டெல்லருடன் கூட்டுழைத்து ‘பூதச் செம்மீன்களின்’ [Red Giant Stars] உள்ளமைப்பை  விளக்கி ஒரு புதிய கோட்பாடை இயற்றினார். விண்மீன்களின் மூலப் பிறப்பைப் [Stellar  Evolution] பற்றி டெல்லர் எழுதிய கருத்துக்களைப் பயன்படுத்தி, ஜார்ஜ் காமாவ் பரிதியின் பிரமாண்டமான சக்தி [Sun ‘s Energy] வெப்ப அணுக்கரு இயக்கங்களினால் [Thermo Nuclear  Processes] வெளியாகிறது என்று உறுதியாகக் கூறினார்!

    இரண்டாம் உலகப் போர் முடிந்த பிறகு, 1948 இல் அமெரிக்க அணுசக்திப் பேரவை [Atomic Energy Commission] ரஷ்ய அமெரிக்க விஞ்ஞானி ஜார்ஜ் காமாவுக்கு உச்சப் பாதுகாப்பு நம்பிக்கை உறுதி [Top Security Clearance] அளித்து, நியூ மெக்ஸிகோ லாஸ் அலமாஸ்  மறைமுகத் தளத்தில் முதல் ஹைடிரஜன் குண்டு தயாரிக்க நியமனம் செய்யப் பட்டார்!  1949 ஆகஸ்டில் சோவியத் ரஷ்யா தனது முதல் புளுடோனிய அணுகுண்டை வெடித்ததும்,  எட்வெர்டு டெல்லர் அந்த நிகழ்ச்சியைப் பயன்படுத்தி அவரது ஒரே குறி ஆயுதமான  வெப்ப அணுக்கருக் குண்டை அதி விரைவில் தயாரித்து, அமெரிக்காவைப் பாதுகாக்க  வேண்டு மென்று வாதித்தார்!

    ஊமைப் போர் ஊழலில் [Cold War Politics], ரஷ்யா  அமெரிக்காவுக்கு முன்பே ராட்சத குண்டை ஆக்கி விட்டால், அமெரிக்காவின் கதி என்ன ஆவது என்று டெல்லர் கவலை அடைந்தார்! அவரது எச்சரிக்கைக்கு அடி பணிந்து,  அமெரிக்க ஜனாதிபதி ட்ரூமன் 1950 ஜனவரி இறுதியில் ஹைடிரஜன் குண்டு திட்டத்திற்கு  ஒப்புதல் தந்து அங்கீகார மளித்தார்! லாஸ் அலமாஸ் மறைமுகத் தளத்திற்கு மாற்றாக, புதிய லாரென்ஸ் லிவர்மோர் ஆய்வுக் கூடம் [Lawrence Livermore Laboratory]  கலிஃபோர் னியாவில் அமைக்கப் பட்டது. அதற்கு எட்வெர்டு டெல்லர் அதிபதியாக ஆக்கப்  பட்டார்! டெல்லருக்கு வெப்ப அணுக்கரு ஆயுதப் பணியில் உதவியவர் முக்கியமாக  இருவர்: விஞ்ஞான மேதைகள், டாக்டர் ரிச்சர்டு கர்வின் [Richard Garwin], டாக்டர் ஸ்டனிசியா உலாம் [Stanisiaw Ulam].

    காமாவ் வாஷிங்டன் பல்கலைக் கழகத்தில் 1934 முதல் 1956 வரை பெளதிகப்  பேராசிரியராகவும், அதன் பின் கொலராடோ பல்கலைக் கழகத்தில் 1956 முதல் அவரது  மரணம் வரை [1968] பெளதிகப் பேராசிரியராகவும் பணி யாற்றினார்.

    பிரபஞ்சப் பிறப்பைக் கூறும் பெரு வெடிப்பு நியதி

    பிரபஞ்சத்தின் பிறப்பைப் பற்றி யூகிக்கும் பல கோட்பாடுகளில் ஒன்றான, ‘பெரு வெடிப்பு  நியதியைத்’ தற்போது பெரும்பான்மையான விஞ்ஞானிகள் ஒப்புக் கொண்டுள்ளனர்.  அக்கருத்துப்படி ஆதியில் பிரபஞ்சம் பேரளவுத் திணிவுள்ள, மிகத் திட்பமான, வெட்பக்  கட்டியாக [Extremely Dense, Compact & Hot] இருந்தது! 10-20 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, ஏதோ ஓர் அகிலப் பெரு வெடிப்பு நிகழ்ந்து [Cosmic Explosion], அதன்பின் பிரபஞ்சம் பெருகி, விரிந்து, குளிர்ந்து போய் வருகிறது!

    பெரு வெடிப்புக் கோட்பாடு 1917 இல் ஐன்ஸ்டைன் பொது ஒப்பியல் நியதி விளைவித்த  ஒரு கருத்து! அதை விருத்தி செய்தவர், பெல்ஜிய விஞ்ஞானி ஜார்ஜ் லெமைட்டர் [George  Lemaitre], ஹாலந்து விஞ்ஞானி வில்லம் சித்தர் [Willem de Sitter], ரஷ்ய விஞ்ஞானி  அலெக்ஸாண்டர் பிரைடுமான் [Alexander Friedmann]. அம்மூவரது கருத்துக்களும் பிரபஞ்சம்  தோற்றத்திற்குப் பின்பு, எவ்வாறு ஒழுங்கானது என்றுதான் கூறினவே தவிர, அகிலத்தின்  ஆதித் துவக்கத்தைப் பற்றி எதுவும் ஆராயவில்லை! 1940 இல் ஜார்ஜ காமாவ்  அப்பணியைச் செய்ய தனது மாணவர் ரால்ஃப் ஆல்ஃபர் [Ralph Alpher], ராபர்ட் ஹெர்மன் [Robert Herman] இருவருடன் கூட்டுழைத்து, ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் பொது ஒப்பியல் நியதிக்காக எழுதிய பிரைடுமான் தீர்வுகளை எடுத்துக் கொண்டு, அவற்றைப் பின்னும் அபிவிருத்தி  செய்தார்.

    அடுத்து ஆல்ஃபர், ஹெர்மன் இருவரும் தனியாகக் காமாவின் கருத்துகளை விரிவு  செய்தனர். அதன்படி கதிர்வீச்சுக் கடலில் [Sea of Radiation] கொந்தளிக்கும் புரோட்டான்,  நியூட்ரான், எலக்ட்ரான் [Proton, Neutron, Electron] ஆகிய பரமாணுக்களைக் [Subatomic Particles] கொண்ட இலெம் [Ylem] என்னும் ஆதி அண்ட நிலையிலிருந்து [Primordial State of Matter] பிரபஞ்சம் விரிந்தது! பிரபஞ்சம் பெரு வெடிப்பின் போது மிக மிகச் சூடான நிலையில் இருந்து, பரமாணுக்கள் இணைந்து ஹைடிரஜன் மூலகத்தை விட கனமான மூலகங்கள் [Heavier Elements] முதலில் உண்டாயின! காமாவ், ஆல்ஃபர், ஹெர்மன் குழுவினர் பெரு  வெடிப்பில் விளைந்த வெப்பவீச்சுக் கடல் [Sea of Radiation] இன்னும் அகிலத்தில் தங்கி  இருக்க வேண்டும் என்று முன்னறி வித்தார்கள்! அவர்கள் கணக்கிட்ட அகிலப் பின்புலக்  கதிர்வீச்சுக்கு [Cosmic Background Radiation] இணையான உஷ்ணம் [3 டிகிரி K (கெல்வின்)], 1960 இல் பின்வந்த விஞ்ஞானிகளால் மெய்ப்பிக்கப் பட்டு, பிரபஞ்சத்தின் பெரு வெடிப்பு நியதி மேலும் உறுதியாக்கப் பட்டுள்ளது!

    பெரு வெடிப்பு நியதியின்படி, பிரபஞ்சம் முதற்சில இம்மி வினாடிகளில் [microseconds] அதி விரைவாக விரிந்து விட்டது! ஒரே ஓர் உச்சவிசை [Force] மட்டும் முதலில் இருந்து, பிரபஞ்சம் விரிந்து போய்க் குளிர்ந்ததும் அந்த ஒற்றை விசையே, பின்னால் நாமறிந்த ஈர்ப்பியல் விசை [Gravitational Fprce], மின்காந்த விசை [Electromagnetic Force], அணுக்கரு வலுத்த விசை [Strong Nuclear Force], அணுக்கரு நலிந்த விசை [Weak Nuclear Force] ஆகிய நான்கு பிரிவுகளாய் மாறியது! விஞ்ஞானிகள் ஒளித்துகள் யந்திர வியலையும் [Quantum  Mechanics], ஈர்ப்பியலையும் ஒருங்கே பிணைக்கும் ஒரு நியதியைத் தேடி வருகிறார்கள்! இதுவரை யாரும் அதைக் கண்டுபிடிக்க முடிய வில்லை! புதிதான ‘இழை நியதி’ [String Theory] அவ்விரண்டையும் பிணைக்கும் என்று விஞ்ஞானிகள் நம்புகிறார்கள். ஈர்ப்பியல் விசையை மற்ற மூன்று வித விசைகளுடன் பிணைத்துக் கொள்ளத் ‘இழை நியதி’ முயல்கிறது! ஆனால் பெளதிக விஞ்ஞானிகள் இப்போது இந்த நான்கு வித விசைகளையும் ஒருங்கே பிணைத்து விளக்கும் ‘மகா ஐக்கிய நியதி’ [Grand Unified Theory, GUT] ஒன்றைத் துருவிக் கண்டு பிடிக்க முற்பட்டு வருகிறார்கள்!

    சோப்புக் குமிழிபோல் உப்பிடும் [Inflationary Model] பிரபஞ்சம், அந்நிலை முடிந்ததும்  மெதுவாகவே விரிகிறது! கோளமாய் விரியும் பிரபஞ்சத்தின் விளிம்பு திறந்த வெளிக்கும், மூடிய வெளிக்கும் இடையே அமைகிறது! பிரபஞ்சம் திறந்த வெளியாக இருந்தால், எப்போதும் அது விரிந்து, விரிந்து, விரிந்து போய்க் கொண்டே யிருக்கும்! மூடிய விளிம்பாகப் பிரபஞ்சம் இருந்தால், அதன் விரிவு நிலை ஒரு காலத்தில் நின்று விடும்!  பிறகு அது சுருங்க ஆரம்பித்து, திணிவு அடர்த்தி மிகுந்து, இறுதியில் வெடித்துச் சிதறிவிடும்! பிரபஞ்சம் மூடிய கோளமா அல்லது திறந்த வெளியா என்பது அதன் திணிவு [Density], அன்றிப் பளு அடர்த்தியைச் [Concentration of Mass] சார்ந்தது! பிரபஞ்சம் அடர்த்தி  மிகுந்த பளுவைக் கொண்டிருந்தால், அதனை மூடிய கோளம் என்று கூறலாம்!

    பிரபஞ்சத்தின் பெரு வெடிப்பு நிகழ்ச்சிக்கு முன்பு எந்த நிலை இருந்தது என்று, ஸ்டிஃபன் ஹாக்கிங் [Stephen Hawking] போன்ற விஞ்ஞான மேதைகள் கேள்வி எழுப்பி யிருக்கிறார்கள்!  பெரு வெடிப்பு நியதியில் பிரபஞ்சத்தின் முற்கால நிலை பற்றி எந்த விளக்கமும்  இல்லை! காலக் கடிகாரமே பெரு வெடிப்பிற்கு பின்பு ஓட ஆரம்பித் திருக்கலாம்! ஆகவே  பெரு வெடிப்புக்கு முன்பு என்ன இருந்திருக்கும் என்று மூளையைக் குழப்புவதில் அர்த்த மில்லை!

    பெரு வெடிப்பு நியதியை மெய்ப்படுத்தும் நிகழ்ச்சிகள்

    பிரபஞ்சம் பெரு வெடிப்பிற்குப் பிறகு விரிந்து கொண்டே குளிர்ந்து போகிறது. பெரு  வெடிப்பிற்கு ஓரு வினாடி கழித்துப் புரோட்டான்கள் உண்டாயின. முதல் மூன்று  நிமிடங்களில் புரோட்டான், நியூட்ரான்களும் பிணைந்து, ஹைடிரஜனுடைய ஏகமூலமான [Isotope] டியூடிரியம் [Deuterium], அடுத்து எளிய மூலகங்களான ஹீலியம், லிதியம், பெரிலியம், போரான் [Helium, Lithium, Beryllium, Boron] ஆகியவை உண்டாயின!

    விண்வெளியில் மித மிஞ்சிய அளவு ஹீலியம் இருப்பது, பெரு வெடிப்பு நியதியை  மெய்ப்படுத்தி உறுதிப் படுத்துகிறது. டியூடிரியம் பிரபஞ்சத்தில் பேரளவில் பரவி யிருப்பது, அகிலத்தின் அண்டத் திணிவைக் [Density of Matter] கணிக்க அனுகூலமாய் இருக்கிறது!

    பெரு வெடிப்பு ஏற்பட்டு ஒரு மில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு, பிரபஞ்சத்தின் உஷ்ணம் 3000 டிகிரி C அளவுக்குக் குறைந்தது! அப்போது புரோட்டான்களும் எலக்டிரான்களும்  சேர்ந்து ஹைடிரஜன் அணுக்கள் உண்டாயின. ஹைடிரஜன் அணுக்கள் ஒளியின் குறிப்பிட்ட சில அலை நீளங்கள், நிறங்கள் ஆகியவற்றை எழுப்பவோ அன்றி விழுங்கவோ  செய்யும்! அவ்வாறு உண்டான அணுக்கள், தனித்த எலக்டிரான்களுக்கு இடையூறு செய்யும், ஒளியின் மற்ற அலை நீளங்களை வெகு தூரத்திற்கு அப்பால் தள்ளி விடுகின்றன.

    இந்த  மாறுதல் கதிர்வீச்சை விடுவித்து இன்று நாம் காணும்படிச் செய்கிறது! பல பில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு குளிர்ந்த அந்த ‘அகிலவியல் பின்புல கதிர்வீச்சு’ [Cosmic Background Radiation] சுமார் 3 டிகிரி Kelvin [3 K (-273 C/-454 F)]. 1964 இல் முதன் முதல்  அகிலவியல் பின்புல கதிர்வீச்சைத் தேடிக் கண்டு பிடித்த அமெரிக்க வானியல் மேதைகள் இருவர்: ஆர்னோ பென்ஸையாஸ், ராபர்ட் வில்ஸன் [Arno Penzias & Robert Wilson].

    1989-1993 ஆண்டுகளில் தேசிய வானியல் விண்வெளி ஆணையகம், நாசா [NASA, National Aeronautics & Space Administration] ‘அகிலப் பின்புல உளவி ‘ [Cosmic Background Explorer, COBE] என்னும் விண்வெளிச் சிமிழை [Spacecraft] ஏவி, அண்ட வெளியில் அகிலப் பின்புல கதிர்வீச்சைத் தளப்பதிவு [Mapping] செய்தது. அந்த தளப்பதிவு ‘பெரு வெடிப்பு நியதி’ முன்னறிவித்தபடி மிகத் துள்ளியமாக பின்புல கதிர்வீச்சு அடர்த்தியை [Intensity of the  Background Radiation] உறுதிப் படுத்தியது! அத்துடன் அகிலவியல் பின்புல கதிர்வீச்சு சீராக நிலவாது [Not Uniform], சிறிது மாறுபட்டுக் காணப் பட்டது! அந்த மாறுதல்கள் பிரபஞ்சத்தில் காலக்ஸிகள் [Galaxies], மற்ற அமைப்பாடுகளின் வளர்ச்சிக்கு அடிப்படையாய்க் கருதப்  படுகின்றன!

    பின்புலக் கதிர்வீச்சு பிரபஞ்சப் பெரு வெடிப்பிற்குப் பிறகு எஞ்சிய நீண்ட கால விளைவு!  ஜெர்மன் விஞ்ஞானி மாக்ஸ் பிளான்க் [Max Planck (1858-1947)] கருங்கோளக் கதிர்வீச்சை [Black Body Radiation] ஆராய்ந்து எழுதிய, ‘பிளான்க் கதிர்வீச்சுக் கணிப்பாடு [Planck ‘s Radiation  Formula] மூலம் உட்சிவப்பு, நுண்ணலை, வானலை [Infrared, Microwave, Radio Waves] ஆகியவற்றின் அலை நீளங்களைத் தனியே கணக்கிட்டு விடலாம்! அவற்றின் கூட்டமைப்பே பின்புலக் கதிர்வீச்சுகளின் அடர்த்தியாகக் [Intensity of Background Radiation] காணப் படுகிறது. ‘ஓர் குறித்த உஷ்ண நிலையில் கதிர்வீச்சு அடர்த்திக்கும், அதன் அலை நீளத்திற்கும் உள்ள ஓர் ஒப்பான உறவை ‘மாக்ஸ் பிளான்க் வளைகோடு’ முன்னறிவிக்கிறது. பெரு வெடிப்பின் பின் தங்கிய பின்புலக் கதிர்வீச்சு 3 டிகிரி K [-270 C/- 450 F] உஷ்ண நிலையில், மாக்ஸ் பிளான்க் முன்னறிவித்த வளைகோட்டை வியக்கத்  தக்கவாறு ஒத்துள்ளது! ஏறக்குறைய பின்புலக் கதிர்வீச்சு பிரபஞ்சத்தில் எத்திசையிலும்  ‘சம வெப்பநிலை’ [Isotropic State] கொண்டுள்ளதாக அறியப் படுகிறது.

    ஜார்ஜ் காமாவ் எழுதிய நூல்கள், பெற்ற மதிப்புகள்

    கடினமான ஐன்ஸ்டைனின் ஒப்பியல் நியதி [Relativity Theory], சிக்கலான அகிலவியல்  கோட்பாடு [Cosmology] ஆகியவற்றை எளிய முறையில் பொது நபர்கள் புரிந்து சுவைக்கும்  வண்ணம் காமாவ் எழுதிய விஞ்ஞான நூல்கள்: விந்தைபுரியில் திரு. டாம்கின்ஸ் [Mr. Tomkins in Worderland (1936)], பிறகு பல்லடுக்குப் பதிவுகளில் திரு. டாம்கின்ஸ் [Multi Volumes  Mr. Tomkins (1939-1967)], பரிதியின் பிறப்பும், இறப்பும் [The Birth & Death of the Sun (1940)], ஒன்று, இரண்டு, மூன்று…முடிவின்மை [One, Two, Three …Infinity (1947)], பிரபஞ்சத்தின் படைப்பு [The Creation of the Universe (1952,1961)], பூமி என்னும் ஓர் அண்டம் [A Planet Called  Earth (1963)], பரிதி என்னும் ஓர் விண்மீன் [A Star Called the Sun (1964)].

    1950 இல் காமாவ் டென்மார்க் ராஜிய விஞ்ஞானக் கழகம் [Royal Danish Academy of Siences  (1950)], அடுத்து அமெரிக்க தேசீய விஞ்ஞானக் கழகம் [U.S. National Academy of Sciences (1953)] ஆகியவற்றின் உறுப்பினர் ஆனார். விஞ்ஞான அறிவை எளிய முறையில் பரப்பி ஒப்பிலாப் பெயர் பெற்ற ஜார்ஜ் காமாவுக்கு, 1956 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகளின் கல்வி, விஞ்ஞானக், கலாச்சாரப் பேரவை [UNESCO, United Nations Educational, Scientific & Cultural  Organization] காலிங்கப் பரிசை [Kalinga Prize] அளித்துக் கெளரவித்தது. 1965 இல் காமாவ்  பிரிட்டனின் கேம்பிரிட்ஜ் சர்ச்சில் கல்லூரியின் சிறப்புநர் [Fellow Churchil College, Cambridge] மதிப்பைப் பெற்றார்!

    பிரபஞ்ச விஞ்ஞானத்திலும், அணுக்கரு பெளதிகத்திலும் திறமை பெற்ற ரஷ்ய அமெரிக்க விஞ்ஞானி ஜார்ஜ் காமாவ் 1968 ஆகஸ்டு 20 ஆம் தேதி போல்டர் கொலராடோவில் தனது  64 ஆவது வயதில் காலமானார்.

    ++++++++++++++

    Images : NASA, Wikipedia

    Information :

    1.  Physicists  – The Biographical Dictionary of Scientists  Edited By :  David Abbott, Ph.D.   (1984)

    2.  Wikipedia –  George Gamow  (February 13, 2011)

    3.  George Gamow – Answers.com

    ++++++++++

    S. Jayabarathan (jayabarat@tnt21.com) February 19, 2011

    www.jayabarathan.wordpress.com/

    Share
  • வெற்றிக் கனியை எட்டிப் பறிப்போமா! (6)

    பவள சங்கரி

    “உன் நாவுக்கு அஞ்சு. அது குறி தவறக்கூடிய அம்பாகும்.” – ஹஸரத் அலி.

    தேவையற்ற கவலையை விட்டொழியுங்கள்!

    நம்மில் பலர் ஏதோ பெரிதாக பிரச்சனை வரப்போகிறது என்ற கவலையிலேயே அப்போதைய நிம்மதியைத் தொலைத்தவர்களாக இருக்கிறோம். பொருளாதார பிரச்சனை, இயற்கைச் சீற்றம், விபத்து, தீவிரவாதம், ஆரோக்கியக்கேடு, நெருங்கிய உறவின் பிரிவு, மரண பயம் போன்ற பல காரணங்கள் இதற்கு அடிப்படையாக இருக்கின்றன. இதில் சிலவற்றை நாம் திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் கட்டுக்குள் வைக்க முடியும். ஆனால் நம் சக்தியின் எல்லைக்கப்பால் நிகழக்கூடிய சில விசயங்கள் பற்றி கவலைப்படுவதை விட்டு நடக்கக்கூடியவைகளில் கவனம் செலுத்துவதே அறிவார்ந்த செயல்.

    எந்த ஒரு காரியத்திலும் முன்னேற்பாடுகள் மூலம் பல பிரச்சனைகளைத் தவிர்க்க முடியும். அதாவது வருமுன் காப்போம் என்ற கொள்கையை கடைப்பிடிக்கலாம். இந்த முன்னேற்பாடுகள் பற்றி பேசும்பொழுது, நான்கு விதமாக  நடந்து கொள்ளும் போக்கு நம்மிடம் இருக்கிறது. அதாவது ஒரு சிலர் பிரச்சனைகளை எதிர்கொள்ளும் நல்ல முன்னேற்பாடுடன் தயாராக இருந்தும் தேவையற்ற கவலையை விட்டொழிக்காமல், என்ன நடக்குமோ என்ற அச்சத்திலேயே இருப்பார்கள். அடுத்த வகை முன்னேற்பாடு பற்றிய சிந்தையே இல்லாமல் எதற்கெடுத்தாலும் கவலைப்பட்டுக் கொண்டிருப்பார்கள். அடுத்த மூன்றாவது வகை முன்னேற்பாடும் இல்லாமல் எதைப்பற்றிய கவலையும் இல்லாமல் இருப்பவர்கள். (இவர்களுக்குத்தான் கட்டாயம் உதவி தேவைப்படும்)  நான்காவதாக வருபவர் வெற்றியாளருக்குரிய குணத்தைக் கொண்டவர். அதாவது எந்த ஒரு காரியத்தையும் உணர்வுப்பூர்வமாக அணுகுவதைத் தவிர்த்து, அறிவுப்பூர்வமாக அணுகுவதோடு, அவசர காலத்திற்கான முன்னேற்பாடுகளைச் சரியாக வைத்துக்கொண்டு, அதற்குரிய சரியான தகவல்களை சேகரித்து வைத்துக்கொண்டு, தேவையற்ற கவலைகளால் சக்தியை இழக்காமல் தன்னம்பிக்கையுடன் எந்த ஒரு பிரச்சனையையும் எதிர்கொண்டு சமாளிப்பவர்.

    நம் கட்டுப்பாட்டையும் மீறி நடக்கக் கூடிய இயற்கை சீற்றம், தீவிரவாதம் போன்ற அசம்பாவிதங்கள் குறித்த அச்சத்தினால் சக்தி விரயம் செய்யத் தேவையில்லை. முன்னேற்பாடுகளை சரியாகக் கவனித்துக் கொண்டு நம் போக்கில் பணிகளைத் தொடருதலே விவேகமான செயல். இல்லாவிட்டால் நம் உடல் மற்றும் மனதின் பெரும் சக்தியை அது தின்றுவிடும். எந்த இழப்பாக இருப்பினும் கூடியவரை விரைவில் மீண்டுவர முழு முயற்சி மேற்கொள்ள வேண்டும். திரும்பப் பெற முடியாத இழப்புகளை நினைத்து வேதனையில் உழன்று, கடமையில் தவறுதல் சரியானதன்று. அத்தகையப் போக்கு நம் வாழ்க்கைத் தரத்தையே குறைக்கக் கூடியது. அதைவிட வாழ்க்கையின் அழகான பகுதிகளை நினைவில் கொண்டு கடமைகளைச் சரிவர செய்யத் திட்டமிடல் வெற்றிக்கான வழியல்லவா?

    மன உறுதியைக் குலைக்கும் முக்கிய எதிரி!

    ஒருவர் வாழ்க்கையில் பெறுகிற நீங்காத செல்வம், மன உறுதிதான். இதனைக் குலைக்கும் முக்கிய எதிரி அனுதாபம்தான். ஆம் ஒருவரின் அனுதாபத்தை வேண்டி நிற்கும் நிலை ஏற்படும்போது சுய மரியாதையுடன், மன உறுதியும் சுத்தமாக விலகிவிடும். மன உறுதி இல்லாதபோது வெற்றியின் எல்லையை நெருங்குவது எளிதல்ல.

    ஆந்திர மாநிலம் ஐதராபாத் அருகே உள்ள ஒரு கிராமத்தில் பிறந்தவர், மாதவி லதா, இன்று சென்னைவாசி. இவருடைய விசேசம என்னவென்றால் எவருடைய அனுதாபத்தையும் சற்றும் எதிர்பாராதவர். மாற்றுத் திறனாளிகளால் சுலபமாக செய்துவிட முடியாத நீச்சல் பயிற்சியில் தனித்திறன் பெற்றுள்ள இவர் இந்த ஆண்டு சென்னையில் நடந்த தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான ‘ஒலிம்பியாட்’ போட்டியில், ப்ரீ ஸ்டைல் 100 மீட்டர் நீச்சல் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போட்டியில், கடந்த 2010-ம் ஆண்டு ‘சிறந்த ஊக்கமளிக்கும் விளையாட்டு வீராங்கனை’ என்கிற விருதையும் பெற்றுள்ளார் என்பதும் மகிழ்ச்சிக்குரிய செய்தி. தனியார் நிறுவனம் ஒன்றில் சீனியர் மேலாளராகவும் பணிபுரிகிறார். ஒரு வேளை இவர் அடுத்தவரின் அனுதாபத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தால் இந்த அளவிற்கு சாதனை புரிந்திருக்க முடியுமா என்பது கேள்விக்குறியே.

    இவரைப் போலவே குருடு, செவிடு, ஊமை இவற்றுடன் ஏழ்மையும் சேர்ந்து முடக்கிப் போட்டிருந்த ஹெலென் கெல்லர், அடுத்தவரின் அனுதாபம் வேண்டி முடங்கிப் போகவில்லை. தம்முடைய பலகீனங்கள் அனைத்தையும் வெற்றி கொண்டு உலக மக்களுக்கு ஒரு முன்னுதாரணமாக விளங்கியது நாம் அனைவரும் அறிந்ததே. அந்த வகையில் நாம் வெற்றியை நாடுபவராக இருந்தால் முதலில் செய்ய வேண்டியது அடுத்தவரின் பரிதாபத்தை எதிர்பார்த்து மன உறுதியை இழந்து நிற்பதை தவிர்க்க வேண்டியதுதான்.

    ஹெலென் கெல்லர், மாதவி லதா போன்று இல்லாமல் ஆண்டவன் அருளால் எந்த குறைபாடும் இல்லாமல் இருப்பவர்கள் இன்னும் பன்மடங்கு மன உறுதி கொண்டவராக அல்லவா இருக்க வேண்டும்? எடுத்த காரியத்தை தொய்வில்லாமல் முடிக்கும் முயற்சியை இன்றே துவங்குவோம். வெற்றிக்கனியை எட்டிப் பறிப்போம்!

    தொடரும்

    படத்திற்கு நன்றி:

    http://www.rogancy.com/humor/Achievement.jpg

    Share
  • உண்மைக்காதல்

    தேமொழி

    “வேணாம், வேணாம் …சிலிண்டரத் தூக்காத ஆனந்தி. நான் ஸ்டவ எடுத்துக்கிட்டு முன்னால போறேன், நீ பின்னாடியே  உருட்டிகிட்டே வா..என்ன? நேத்துதான் புது கேஸ் சிலிண்டர் போட்டேன் கனமா இருக்கும், பார்த்து உருட்டு”, என்றால் அகிலா.

    “சரிங்கம்மா” என்று எரிவாயு சிலிண்டரை உருட்டியவாறு அடுப்பை எடுத்து முன் செல்லும் அகிலாவைத் தொடர்ந்தாள் ஆனந்தி. வயது ஐம்பதைத் தாண்டிய அவளால் முடியவில்லை என்பது அவள் படும் சிரமத்தில் இருந்து புரிந்தது அகிலாவிற்கு. வேலையை மாற்றிக்கொள்ளலாம் என நினைத்து அடுப்பைக் கீழே வைக்கப் போனவளுக்கு மகனை உதவிக்குக் கூப்பிடலாமே எனத் தோன்றியது.

    “கொஞ்சம் பொறு ஆனந்தி”, என்று சொல்லிவிட்டு, “அசோக், இங்க கொஞ்சம் வாயேன்” என்று கூவினாள்.

    “என்னம்மா, இதோ இந்த வீட்டுப்பாடம் முடிசிட்டேன்னா நான் விளையாடப் போகலாமில்ல”, என்று அவன் சலித்துக் கொள்ளும் குரல் கேட்டது.

    “கொஞ்சம் வாடா ராஜா, உடனே போய்டுவியாம், வந்து ஆனந்திக்கு உதவி பண்ணு”, என்றாள்.

    தொம் தொம் என்று சத்தமாக அடி எடுத்து வைத்து, முணுமுணுத்தவாறு வந்ததில் அசோக்கின் கோபமும் எரிச்சலும் தெரிந்தது.

    “அசோக், நீ சிலண்டர் அடியப் புடி, ஆனந்தி நீ மேல் வலயத்தப் புடிச்சிக்கோ, பார்த்து கால்ல போட்டுக்காத”, என்று அடுக்கடுக்காக ஆனந்தி போட்ட கட்டளைகளுக்கேற்றவாறு செயல்பட்டு அகிலா, ஆனந்தி, அசோக் மூவரும் கேஸ் அடுப்பை ஊர்வலமாக சாப்பாட்டு அறைக்கு கொண்டு வந்து தரையில் வைத்தார்கள்.

    அசோக் மீண்டும் ஓடிப் போய் வீட்டுப் பாடத்தைத் தொடர்ந்தான். சாப்பாட்டு அறை மேஜை மேல் புத்தகங்களையும், நோட்டுகளையும் கடை பரப்பியிருந்தான் அவன். அவனது தங்கை, அவனுக்கும் இளையவளான பப்பி என அழைக்கப் படும் பத்மினி மேஜை மேலேயே ஏறி உட்கார்ந்து கொண்டு அவளும் வீட்டுப் பாடம் செய்து கொண்டிருந்தாள்.

    அடுத்த சில நாட்களில் வரும் தீபாவளிக்காக முறுக்கு சுடும் படலம் தொங்கியிருந்தது. ஆனந்தி உதவிக்கு வந்திருந்தாள். அவள்தான் முதலில் அகிலாவின் வீட்டில் வேலை செய்தாள். பிறகு தனது மகள் சுகந்தி பள்ளிப் படிப்பை முடிந்ததும் அவளைத் துணைக்கு அழைத்து வந்து, பழக்கி விட்ட பின்னர் அவள் வேறு இடத்திற்கு வேலைக்குச் சேர்ந்துவிட்டாள். ஆனந்தி கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்தவள். அவளுக்கும் அவள் கணவருக்கும் வசந்தி, சுகந்தி, ஜெயந்தி என மூன்று பெண்கள்தான். அம்மாவும் பெண்களும் அவர்களது பெயர்கள், பூ, பொட்டு, உடை உடுத்துவது என எதிலும் வேறுபாடு காட்டாததால் முதலில் பார்ப்போருக்கு அவர்களை கிறிஸ்துவர்கள் எனப் புரிந்து கொள்ள முடியாது.

    அந்த ஊருக்கு மாற்றலாகி வந்தவுடன் அகிலா வேலைக்கு ஆள் தேடிய பொழுது, குழந்தைகளைப் பள்ளிக்கு அழைத்துச் செல்லும் ரிக்க்ஷாக்காரர் அழைத்து வந்தவள் ஆனந்தி. வேலை, சம்பளம் எல்லாம் பேசி முடிக்கும் பொழுது, ஞாயிறு காலை மட்டும் சர்ச்சுக்குப் போவதால் பத்து மணி போலத்தான் வேலைக்கு தாமதமாக வரமுடியும் என்று ஆனந்தி சொன்ன பொழுதுதான் அவள் கிறிஸ்டியன் என அகிலாவிற்குத் தெரிந்தது. அவளும் ஞாயிறு அன்று தாமதமாக எழுபவள் என்பதால் அதைப் பொருட்படுத்தியதில்லை.

    ஆனந்தியின் பெண்கள் அனைவருமே படிப்பில் கெட்டிக்காரிகள். பெரியவள் வசந்தி பட்டம் வாங்கிய பின்பு ஆசிரியை வேலைக்குப் பயிற்சிக்குச் சென்றாள். அங்கு உடன் பயிற்சிக்கு வந்த ஒருவனுடன் காதல் ஏற்பட்டு அவனைத்தான் மணப்பேன் என்று ஒற்றைக்காலில் நின்றாள். ஆனந்திக்கு ஏனோ அந்தப் பையனின் மூஞ்சும், முழியும் கொஞ்சமும் பிடிக்கவில்லை. வேண்டாம் என்று சொன்னாள். ஆனால், வசந்தி அவனது குழந்தைக்குத் தான் தாயாகப் போவதால் உடனே திருமணம் நடத்த வேண்டும் என்றவுடன் அரண்டு போனவளாகக் கன்னா பின்னா என்று மகளைத் திட்டிவிட்டு “எப்படியோ நாசமாப் போ, ஒழி” என்று ஆசீர்வாதம் செய்து ஒத்துக் கொண்டாள். திருமணமாகி சில நாட்கள் ஆனதும்தான் தெரிந்தது தனது பெற்றோர்களை ஒத்துக் கொள்ள வைப்பதற்கு வசந்தி அவ்வாறு பொய் சொல்லி தன் காரியத்தை சாதித்துக் கொண்டது.

    அடுத்தவள் சுகந்தி, இவள் ஒரு செவிட்டூமை. ஆனந்தியின் சோகமே இவள்தான். சிறு வயதில் துறு துறுவென்று ஓடி விளையாடியவளுக்கு ஏதோ காய்ச்சல் வந்து ஒரு வாரம் படுக்கையில் கிடந்தது எழுந்த பின்னர், காது கேட்பதும், வாய் பேசமுடிவதும் இயலாது போய் விட்டதாக ஆனந்தி புலம்புவாள். ஆனாலும் அவளும் பள்ளி இறுதி வரை படித்து வந்து விட்டாள். சுகந்தி அந்த ஊனங்களையும் கடந்த மிக மிகப் புத்திசாலி என்பது அவளுடன் பழகியவர்களுக்கு மட்டுமே தெரியும். அதனால் தனக்குப் பதிலாக ஆனந்தி தனது மகள் சுகந்தியை வேலைக்கு விட்ட பொழுது அகிலா ஒன்றும் மறுப்புச் சொல்லவில்லை.

    தனது வீட்டைப் போன்ற ஒரு பாதுகாப்பான வீடு அந்த செவிட்டூமைப் பெண்ணுக்குக் கிடைக்காது என்பதால் ஏற்படும் இடையூறுகளை சமாளித்துக் கொள்ள முடிவு செய்திருந்தாள். சுகந்தியும் எந்த வேலையையும் நறுவிசாகச் செய்து விடுபவள். அதனால் அவளை வேலைக்கு வைத்திருப்பதில் பிரச்சனை வந்தது இல்லை. ஆனந்தியின் கடைசி மகள் ஜெயந்தி இப்பொழுதான் பிளஸ் டூ சேர்ந்திருக்கிறாள், அவளும் படிப்பில் சூட்டிகை.

    அகிலாவின் வீட்டில் சுகந்தியுடன் அதிகம் உரையாடுவது பப்பிதான். சிறுவயது பிள்ளைகளுக்கே உரிய பிறர் குறைகளைப் பொருட்படுத்தாதது, சலிக்காமல் பேசுவது போன்ற குணங்களினால் பப்பி சுகந்தியின் தோழியாகி விட்டாள். சுகந்தி ஏதாவது திரைப்படம் பார்த்துவிட்டு வந்தால் அந்தக் கதையைக் கூட அபிநயத்துடன், விசித்திரமான ஒலியுள்ள ஊமை மொழியில் பப்பிக்குச் சொல்லுவாள். பப்பியும் மேலும் சொல்லு, சொல்லு என்று சைகை செய்து உற்சாகப்படுத்துவாள். அவள் சொல்லும் கதையைக் கேட்டு விழுந்து விழுந்தும் சிரிப்பாள், ஆனால் சுற்றி உள்ளவர்களுத்தான் அவர்களது உரையாடல் ஒன்றுமே புரியாது. அகிலா ஓரளவிற்கு மேலே அவளால் சைகையால் விளக்க முடியாமல் போனால், பேசாமல் சுகந்தியிடம் எழுதிக் காண்பித்துவிடுவாள். நேற்று பப்பியின் துணை கொண்டு சுகந்தியிடம் பேசி, முறுக்கு சுற்ற உதவியாக ஆனந்தியை இன்று வரவழைத்திருக்கிறாள்.

    சமையலறையில் இடம் போதாமல், இது போல சாப்பாட்டு அறைக்கு அனைத்தையும் எடுத்து வந்து பலகாரம் செய்வது அகிலாவின் வழக்கம். அடுப்புக்கு எதிர் எதிராக இரண்டு பலவாக்கட்டைகள் போடப்பட்டு, இருப்புச்சட்டி, ஜல்லிக்கரண்டி, முறுக்குக்கம்பி, முறுக்கு அச்சு, எண்ணையை உறிஞ்ச பழைய செய்தித்தாள் பரப்பிய பெரிய தாம்பாளம், பெரிய பித்தளை செம்படங்கள், எண்ணெய்த் தூக்கு,பிசைந்த மாவு உள்ள பாத்திரம் இவைகளும் கொண்டு வந்து வைக்கப் பட்டது. அகிலாவும் ஆனந்தியும் எதிர் எதிராக உட்கார்ந்து கொண்டார்கள். இருப்புச்சட்டிக்குப் பின் அமர்ந்து, ஜல்லிக் கரண்டியின் மேல் அச்சால் பிழிந்து முறுக்கு சுற்றி எண்ணெயில் போட வேண்டியது ஆனந்தியின் வேலை, அடுப்பின் முன் இருந்துசுட்ட முறுக்கை கம்பியால் எண்ணெயில் இருந்து எடுத்து, தாம்பாளத்தில் எண்ணெய்யை வடியவிட்ட பின்பு, செம்படத்தில் அடுக்க வேண்டியது அகிலாவின் பொறுப்பு.

    இருவரும் ஊர்க்கதைகளைப் பேசியபடி முறுக்கு சுட்டுக் கொண்டிருந்தார்கள். அசோக் வீட்டுப்பாடத்தை முடித்துவிட்டு தெருவில் மற்ற பசங்களுடன் கிரிக்கெட் விளையாட ஓடிவிட்டான். பப்பி இன்னமும் வீட்டுப்பாடத்தை முடித்தபாடில்லை. சுகந்தி வீடு கூட்ட விளக்குமாறுடன் வந்து, முன்னறையில் இருந்து கூட்டத் துவங்கினாள். ஆனந்தியுடன் பேசிக்கொண்டிருந்த அகிலாவை இடைமறித்துக் கணக்குப் பாடத்தில் உதவச் சொன்னாள் பப்பி.

    “அம்மா வேலையா இருக்கேன் பப்பிம்மா, அசோக் வந்ததும் கேளு, சொல்லிக் கொடுப்பான்”.

    “நீங்க எங்க வேலையா இருக்கீங்க, பேசிக்கிட்டுத்தானே இருக்கீங்க, சுகந்தி அம்மாவ பார்த்துக்கச் சொல்லிட்டு இங்க வந்து எனக்குச் சொல்லிக் கொடுங்க”

    “பப்பிம்மா, சொல்றதக் கேளுடா …” என்று அகிலா சொல்லிக்கொண்டிருந்த பொழுது அசோக் தட தட வென உள்ளே ஓடிவந்தான். “அசோக், பப்பிக்குக் கொஞ்சம் கணக்கு சொல்லிக் கொடுப்பா,” என்றாள் அகிலா.

    வேகமாக தனது அறைக்கு ஓடி ஒரு பந்தை எடுத்து வந்த அசோக், “போங்கம்மா, இப்ப முடியாது, பந்து காணாப் போச்சுன்னு வேற பந்து எடுக்க வந்தேன், விளையாடி முடிச்சிட்டு வந்து சொல்லித்தரேன்,” என்று சொல்லியவாறே பதிலுக்குக் காத்திராமல் ஓடி விட்டான். பப்பிக்கு கோபம் வந்து தனது அருகில் இருத்த பென்சில் டப்பாவை எடுத்து அவன் போன திசையைப் பார்த்து விட்டெறிந்தாள்.

    “வர வர இந்தப் பொண்ணு அதோட அப்பாகொடுக்கிற செல்லத்தில ஆட்டமா ஆடுது, அடி கொடுக்க வேண்டிய நேரம் வந்தாச்சு, என்ன பழக்கம் இது பத்மினி”, என்று சீறினாள் அகிலா.

    பப்பி உர் என்று முகத்தை வைத்துக் கொண்டாள். இதுவரை நடந்தது எதுவும் காதில் விழாததால் விச்சிராந்தியாகத் தரையைக் கூட்டிக் கொண்டிருந்த சுகந்தி, பென்சில் டப்பா அவள் முன் வந்து விழவும், துடைப்பத்தைக் கீழே போட்டுவிட்டு, டப்பாவில் இருந்து சிதறியவற்றை மீண்டும் பெட்டியில் போட்டுக் கொண்டு வந்து பப்பியிடம் கொடுத்தாள். பப்பியின் கோபத்திற்குச் சைகையால் காரணம் கேட்டாள். பப்பி வீட்டுப் பாடத்தைக் காட்டி விளக்கினாள். சுகந்தி பப்பியிடம் ஒரு தாளும் பென்சிலும் சைகையால் கேட்டாள். பப்பி கிழித்தது தெரியாது இருக்குமாறு, நோட்டுப் புத்தகத்தின் நடுப்பக்கத்தை ஒரு குயர் நோட்டில் இருந்து கிழித்துக் கொடுக்க, சுகந்தி அதில் எழுதி சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தாள்.

    “எதுவானாலும் சுகந்திய நீ படிக்க வச்சிட்ட ஆனந்தி, இல்லாட்டி …” என்று ஏதோ சொல்ல ஆரம்பித்தவாறே திரும்பிய அகிலா, ஆனந்தி கண்களில் வழிந்த கண்ணீரைப் புடவைத் தலைப்பால் துடைத்துக் கொள்வதைப் பார்த்ததும் நிறுத்தினாள்.

    “என்னாம்மா செய்யிறது, ரொம்ப புத்திசாலிப் பொண்ணும்மா. மேலே படிக்க வச்சாலும் நல்லாப் படிக்கும். இந்தக் குறை இல்லாட்டி டியூஷன் வேலயப் பாத்தே பொழச்சிக்கும். படிச்சிருந்தும் இப்ப படிக்காத என்ன மாதிரி வீட்டு வேலைய செய்யுது. எங்களுக்கு அப்புறம் இதுக்கு யார் துணை. நினச்சாலே அடிவயிறு கலங்குது. இந்தக் குறையோட இதுக்கு ஒரு கல்யாணம் காட்சின்னு நெனச்சி கூடப் பாக்க முடியுமா? இது சபிக்கப்பட்ட பொண்ணும்மா” என்ற ஆனந்தியின் குரல் தழு தழுத்திருந்தது.

    *

    ஆனால் யாரும் எதிர் பாராததும் நடந்தது, அது காலத்தின் கோலம். ஒரு நாள் பப்பியும் சுகந்தியும் பேசிக் கொண்டிருந்தார்கள். பப்பி உற்சாகத்தில் கூச்சலிட்டாள்.

    “அம்மா, அம்மா சுகந்திக்கு கல்யாணமாம்”.

    “நல்லா கேளு, அவளுக்குக் கல்யாணமா? இல்லை ஏதாவது கல்யாணத்திற்குப் போக லீவு வேணும்கிறாளா?”

    “இல்லம்மா, சுகந்திக்குத்தான் கல்யாணமாம்”.

    “என்னது? உண்மையாவா!!!!” என்று கேட்டவாறு வந்த அகிலா “உன் மாப்பிள்ளையின் பேர் என்ன?” என்று கழுத்தில் தாலி கட்டுவது போல சைகை செய்து கேட்டாள்.

    சுகந்தி ஒரு தாளில் எழுதினாள். சண்முக சுந்தரம்.

    “இது என்ன இந்துப் பெயரா இருக்கு? பப்பிம்மா இந்த சுகந்தி ஏதோ உளறுதுன்னு நினைக்கிறேன், அவங்க அம்மாவ சாயங்காலம் அழச்சிட்டு வரச் சொல்லு நான் பேசிக்கிறேன்”.

    *

    சாயங்காலம் வந்த ஆனந்தியின் வாயெல்லாம் பல். “கடவுளுக்கு சோஸ்திரம் அம்மா, இந்தப் பொண்ணு அதிர்ஷ்டக்காரிதான் போல. இவளையும் கட்டிக்கிடணும்னு ஒருத்தன் துடியாத் துடிக்கிறான், என்னால நம்பவே முடியல்ல”

    “விவரமா சொல்லு, மாப்பிள்ளை பேரு சண்முக சுந்தரம்னு சொல்லிச்சு, என்ன நடக்குது, ஏதாவது கிழவனா? ரெண்டாம் தாரமா கட்டிக் குடுக்கிறியா?”

    “இல்லம்மா, பையன் சின்ன வயசுதான். ஹைஸ்கூல் முடிச்சிருக்காப்ல, ஏதொ ஏஜென்சில வேலையாம். அநாதைப் பையன். சொந்த பந்தம் இல்லையாம். தனக்குன்னு ஒரு குடும்பம் வேணும்மின்னு வீட்டோட மாப்பிள்ளையா இருக்கவும் விருப்பமாம்.”

    “எங்க புடிச்ச இந்த மாப்பிள்ளைய?”

    “அட, நீங்க வேறம்மா, நான் எங்கன புடிச்சேன்? காதல் கல்யாணம் அம்மா”.

    “இரு, இரு, என்ன சொல்ற நீ? சுகந்தி காதலிச்சுதா? என்னென்னு பேசி அந்த ஆளுக்கு இது மனசப் புரிய வச்சிது? பதினைஞ்சு வருஷமாவுது கல்யாணமாகி, இன்னமும் பப்பி அப்பாவுக்கு நான் சொல்றது எதுவும் புரியற மாதிரி தெரியல்லியே? நம்பவே முடியல்ல ஆனந்தி.”

    “ஆமாம்மா, எங்களாலேயும் நம்ப முடியல்ல, ஒரு நாள் தெருவில அந்தப் பையன் சைக்கிள ஒரு கையில் புடிச்சிகிட்டு சுகந்தி கூட பேசினதைப் பார்த்தேன். இதுவும் கையைக் கையை ஆட்டி ஏதோ சொல்லிச்சு. யாரோ ஏதோ அட்ரெஸ் கேக்கிறாங்களோ? பேச முடியாத இவளப் போய் கேக்கிறாங்களே? கேலி செய்யறாங்களான்னு நெனச்சி எனக்குக் கோவம் கூட வந்திச்சு. அப்புறம் அந்தப் பையனே வீட்டுக்கு வந்து விவரமா பேசி கல்யாணம் செய்து தரச் சொல்லிச்சு அம்மா”.

    “ஆமா, எப்ப கல்யாணம்? எதுக்கும் கவனமா பையனப் பத்தி நிறைய விசாரிச்சிடு ஆனந்தி, நாளைத் தள்ளிப் போடாத, பொறாமையில அடுத்தவங்க அந்தப் பையன் மனச மாத்துறதுக்கு முன்னால கல்யாணத்த சுருக்க முடிச்சிடு.”

    “சரிங்கம்மா.”

    அடுத்த சில நாட்களில் பப்பியின் விருப்பப்படி, வெள்ளைப் பட்டில் சிவப்பு சரிகைக்கரை போட்ட கல்யாணப் புடவையை பரிசாக சுகந்திக்கு வாங்கிக் கொடுத்து, சர்ச்சில் கல்யாணத்திற்கும் சென்று வந்தார்கள். சண்முக சுந்தரம் மதம் மாறி, அருள் பிரகாசம் என்ற புதுப் பெயருடன் சுகந்தியை மணந்து கொண்டான். பார்க்க வாட்ட சாட்டமாக, களையாக இருந்தான். நல்ல சம்பளத்துடன் வேலை பார்க்கும், நல்லக் களையுடன் இருக்கும் ஒருவன், சல்லிக்காசு வாங்காமல், அவளுக்காக மதம் மாறி, செவிட்டூமையான சுகந்தியைக் கைபிடித்ததுடன், காதல் மனைவியின் வீட்டிலேயே மகன் இல்லாதக் குறை நீங்க வீட்டோடு மருமகனாக இருக்க சம்மதித்தான் என்ற செய்தியே அனைவருக்கும் வியப்பாக இருந்தது. சிலர் உண்மைக்காதல் இதுவல்லவா என்றார்கள். சிலர் இவன் சரியான கிறுக்கன் போலிருக்கிறது என்றார்கள். ஆனால் அனைவரும் வியந்தது பாராட்டியது இப்படி ஒரு மாப்பிள்ளையைப் பிடித்த சுகந்தியையும், அவளது அதிர்ஷ்டத்தையும்தான். போதாக் குறைக்கு அவள் கர்ப்பமானவுடன், நீ வேலை செய்தது போதும் எனச் சொல்லி அவளை வேலையில் இருந்து நிறுத்திவிட்டு, ஒரு தையல் கடையும் ஆரம்பித்துக் கொடுத்தான். ஆனந்தி புது ஆளை அகிலாவின் வீட்டுவேலைக்குப் பேசிச் சேர்த்து விட்டாள்.

    *
    ஒரு நாள் அகிலா வாசலில் பூ வாங்கிக் கொண்டிருந்தாள். “சவுக்கியமா இருக்கீங்களா அம்மா?” என்ற குரல் கேட்டுத் திரும்பினாள். ஆனந்தி நின்று கொண்டிருந்தாள்.

    “அடடே!!! ஆனந்தியா? வா… வா..வா…பூக்காரரே இன்னும் ரெண்டு முழம் மல்லிப்பூ கொடுங்க” என்று வாங்கி அதை ஆனந்தியின் கையில் கொடுத்து, “சுகந்திட்ட நான் கொடுத்தேன்னு சொல்லிக் கொடு, உன் மாப்பிளை எப்படி இருக்கார்? சுகந்திக்கு எப்போ பிரசவம்? நீ எப்படி இருக்க? நீ வீட்டு வேலைய நிறுத்திட்டு ஸ்கூல் புள்ளைங்களுக்கு சாப்பாடு கொண்டு போற பிசினஸ் பண்றதா இப்போ இங்க வீட்டில வேலை பாக்கிற அம்மா சொன்னிச்சு. எப்படி இருக்கு பிசினெஸ்?”

    “ஆமாம் அம்மா, அதுக்குதான் நானும் வந்தேன், நம்ம பப்பிம்மாவுக்கும், அசோக்குக்கும் நானு சாப்பாடு கொண்டு போய் குடுக்கட்டுங்களா?”

    “நல்ல யோசனைதான், நாளைக்கு வாயேன், புள்ளைங்களையும் அவரையும் கேட்டுட்டு சொல்றேன். உன் கடைசிப் பொண்ணு ஜெயந்தி எப்படி இருக்கு? எப்படிப் படிக்குது? அதுக்கும் நீதான் சாப்பாடு கொண்டு போறியா?”

    “இல்லம்மா, ஜெயந்தி ஊரில இல்ல, நாகர்கோயில்ல என் அக்கா வீட்டில தங்கிப் படிக்குது?”

    “ஏன்? என்னாச்சு? எதுக்கு அங்க விட்டு வச்சிருக்க?”

    “மாப்பிள்ளை, அந்த நாசமாப் போற சுகந்தி புருஷன், ஜெயந்தியையும் எனக்கே கட்டி வைங்க, உங்க செவிட்டூமை பொண்ணுக்கு வாழ்வு கொடுதிருக்கேன்ல? உங்க சின்ன பொண்ணையும் எனக்குக் கட்டி வச்சா என்னக் கேடு? அப்படின்னு தெனம் தெனமும் ஒரே ரப்ச்சரும்மா. வயசு வந்தப் பொண்ண அந்தப் படுபாவிக் கண்ணில இருந்து காப்பாத்துரத்துக்கோசரம் ஊர்ல அவ பெரியம்மாவுக்கு ஒடம்பு சரியில்ல, போய் ஒத்தாசை செய்யப் போறான்னு சொல்லி அனுப்பி வச்சிட்டேன்.”

     

    படம் உதவி: http://1.bp.blogspot.com/-xmI9RPSXGWk/UCJ4ximJnII/AAAAAAAAC_o/Br4-Dxu7mqw/s1600/Love-wallpaper-love-4187609-1920-1200.jpg

     

    Share
  • வாழ்க்கை நலம் – 3

    குன்றக்குடி அடிகள்

    3. குழந்தைகள்

    குழந்தைகள் வளர்க்கப் பெறுதல் வேண்டும். நாளைய நாடு இன்றைய குழந்தைகள் கையில்தான் இருக்கப் போகிறது. மனிதர்கள் வருவார்கள் — போவார்கள்! ஆனால், நாடு என்றும் இருக்கும். ஆதலால் நாட்டின் நிலையான தன்மையை நினைவிற்கொண்டு எதிர்வரம் தலைமுறையைச் சீராக வளர்க்க வேண்டும். நமது நாட்டின் நேற்றைய தலைமுறை, அதாவது நமக்கு முந்திய தலைமுறை நாட்டுக்குச் சுதந்திரம் வாங்கிக் கொடுத்த தலைமுறை.

    இன்றைய தலைமுறையினராகிய நாம் சுதந்திரத்தை அனுபவிக்கின்றோம். அதேபோழ்து, நாம் மற்றவர்கள் சுதந்திரத்தில் ஆக்கிரமிப்புச் செய்து கொண்டிருக்கிறோம். கையூட்டு, வரதட்சணை, முறை பிறழ்ந்த குடியாட்சி முறைகள் மற்றவர்களுடைய சுதந்திரதிற்கு கேடு விளைவிப்பதுதானே! ஆனாலும், நாம் எதிர்வரும் தலைமுறையைச் சீராக வளர்க்க வேண்டும்.

    கிராமம் தோறும் முன்கல்விப் பள்ளி (Primary Schools) தொடங்கப் பெற வேண்டும். இந்தப் பள்ளி மூன்று முதல் ஐந்து வயதுக் குழந்தைகளுக்குரியது. இந்தப் பள்ளியில் பயில ஏடுகள் வேண்டாம். கரும்பலகைகள் வேண்டாம். கூடவும் கூடாது. காணல், கேட்டல், சொல்லுதல் ஆகியனவே பயிற்சி. இந்தப் பருவத்தில் உற்றுக் காணல், கவனமாகக் கேட்டல், ஆர்வமுடையன சொல்லுதல் ஆகிய பயிற்சிகள் விளையாட்டுகளுடனும் இசையுடனும் சொல்லித்தரப் பெறுதல் வேண்டும்.

    குழந்தைகளுக்கு பாரம்பரியமும் சூழ்நிலையும் சீராக அமைந்தால் சிறப்பாக வளர்வார்கள். இன்றைய கிராமக் குழந்தைகளுக்கு இவை இரண்டுமே பாராட்டத்தக்க வகையில் அமையாதது ஒரு பெருங்குறை. இன்றைய அறங்களில் தலைசிறந்தது — இன்றைய நாட்டுப் பணிகளில் சிறந்தது இன்றைய குழந்தைகள் நன்றாக வளர்வதற்குரிய சூழ்நிலைகளை அமைத்துத் தருவதேயாம். இந்தப் பணியைச் செய்வதில் பெற்றோர்களுக்கும் சமூக நிறுவனங்களுக்கும் அரசுக்கும் நிறைய பொறுப்புண்டு.

    குழந்தைகள் வளர்ச்சி நிலைப்பருவம் 18 மாதம் முதல் 13 வயது வரை ஆகும். இந்த வயதுக் காலத்தில் குழந்தைகள் பாலர் பள்ளி, ஆரம்ப பாடசாலைகளில் கல்வி பயிலுகின்றனர். பல சிற்றூர்களில் பாலர் பள்ளிகள் இல்லை. இருக்கும் இடங்களில் தக்க ஆசிரியர்கள் இல்லை. இன்றைய ஆரம்ப பாடசாலைகளின் நிலை…..எழுதக் கை நடுங்குகிறது! அவ்வளவு மோசமான நிலை!

    இன்றைய ஆரம்பக் கல்வி குழந்தைகளை ஊக்கப்படுத்தி ஆற்றுப்படுத்துவதாக இல்லை. ஆரம்பப் பாடசாலை ஆசிரியர்களிலும் தங்களுடைய பொறுப்பு வாய்ந்த பணியை உணர்ந்து செயற்படுவோர் சிலரே! எல்லாவற்றையும்விட இந்தக் குழந்தைகளைச் சுற்றியுள்ள உலகம் திருத்தமுறுதல் நல்லது. காரணம், இந்தக் குழந்தைகள் தாம் காண்பனவற்றைத் தான் முன் மாதிரியாக எடுத்துக் கொள்கின்றன.

    நவம்பர் 14 குழந்தைகள் தினவிழா, குழந்தைகள் நலனுக்குரியான செய்வோம்! முறையாக வளர்ப்போம்! சீராக வளர வாய்ப்பளிப்போம்! இன்றைய குழந்தைகளின் — நாளைய தலைவர்களின் அறிவையும், ஆற்றலையும் முறையாக வளர்ப்பது நமது கடமை! நீங்காக் கடமை.



    படம் உதவி: http://im.rediff.com/getahead/2010/nov/19kids-kalaam.jpg
    _________________________________
    REF: http://www.tamilvu.org/library/nationalized/pdf/47.KUNDRAKUDIADIGALAR/VAZAKAINALAM.pdf
    இது ஒரு நாட்டுடைமையாக்கப்பட்ட நூல், நாட்டுடைமையாக்கப்பட்டது நிதியாண்டு 2007-2008 ல்

    மின்பதிப்பாக்க உதவி: தேமொழி

    Share
  • அறுமுகநூறு (6)

     

    சச்சிதானந்தம்

     

    தக்கன் கொடுத்த தளிரை ஏற்ற,

    முக்கண் எடுத்த ஈசன் கூற்றை,

    தர்க்கம் செய்து எதிர்த்த காற்றே,

    பழனியில் வீசும் சரவணக் காற்று!                                                                                   26

     

    பாத மெனும் செம்பூவைப் பற்றிப்,

    பாட லெனும் வெண்பூவைச் சூடிப்,

    பால மெனப் பாலகனைக் கொண்டு,

    பாரிருள் வாழ்வைப் பண்புடன் கடப்போம்!                                                                     27

     

    பாடுபொருள் கிடைத்துவிட்ட பரவசத்தில் நாம்,

    பாடும்பொருள் பரமனவன் கண்ட பொருள்,

    வாடுமிருள் மனம் நீக்கி, வந்து

    கூடுமருள் குமரனருள் என்ற பொருள்!                                                                            28

     

    பாலதண் டாயுத பாணியின் பெருமையைப்,

    பாடிய படியே படிகளில் ஏறிப்,

    பாதச் சுவடுகள் பதிய நடந்தால்,

    பாவச் சுவடுகள் விலக்கிடு வானே!                                                                                  29

     

    உண வுண்ண மறுத்துச் சிரித்து,

    உடை யணிய மறுத்துக் குதிக்கும்,

    உல கின்னும் அறியா மழலையாய்,

    உன தருளை ஏற்க மறுத்தோம்!                                                                                        30

     

    படத்துக்கு நன்றி: http://www.vallamai.com/wp-content/uploads/2012/11/vayalur-murugan4.jpg

     

    Share
  • கனம் கோர்ட்டார் அவர்களே! – 16

     

    இன்னம்பூரான்

    கனம் கோர்ட்டார் அவர்களே ~14

    http://www.ecotippingpoints.org/our-stories/indepth/india-rajasthan-rainwater-harvest-restoration-groundwater-johad/Village-elder.jp

     

    எறும்பூர கல்லும் தேயும் என்பார்கள். மதம் பிடித்த யானை ஏறி, ஏறி மிதித்தாலோ, முதலையின் பல்லிடுக்கில் அகப்பட்டுக்கொண்டாலோ, என்ன ஆவது? இந்த பாரத தேசவாசிகள் அத்தகைய பேராபத்தில் சிக்கிக்கொண்ட வேளையிலும், வாதப்பிரதிவாதங்களில், பட்டிமன்றங்களிலே, அரட்டைக்கச்சேரியிலே, குடலாடி (மடலாடலில் ஒரு வகை!) மகிழும்போது, மலையை தடவிப்பார்க்கிறார்கள், ஊர்ந்த எறும்பு நகர்ந்த பின்!

    என்.ஹெச்.சசிதல் என்ற அரசு ஊழியர் மீது அதீதமாக ரூ.33.44 லக்ஷம் சொத்து சேர்த்ததாக வழக்கு தொடர்ந்து 27 வருடங்கள் ஆயின. அக்காலத்தில், இது ஒரு கணிசமான தொகை. அவரோ, அலுத்துப்போய், வழக்கை வாபஸ் வாங்கக் கோரியுள்ளார். தற்காலிக பதவி நீக்கம், கீர்த்தி நாசம், வாழ்வியல் பாதிப்பு எல்லாம் தன்னை மிகவும் பாதித்து விட்டதாக, அவருடைய பிராது. அதை நிராகரித்த உச்ச நீதிமன்ற வாசகங்கள் (obiter dicta):

    “லஞ்சலாவண்யம் மக்களுக்கு ஒரு மந்திரமாகிவிடுமோ என்ற கவலை…தற்காலம் நம் தேசத்தின் குடலுருவி, நீக்கமற நிறைந்துள்ளது லஞ்சம். தம்பிடியோ, தங்கக்கட்டியோ, குற்றம் குற்றமே…இப்பெல்லாம் கோடிக்கணக்கில்… பதவி துஷ்பிரயோகம் செய்து சலுகைகள் காட்டுவது சமூக விரோதம்; மக்களை இழிவு படுத்துவது; சட்டத்தைத் துச்சமென கடாசுவது ஆகும்…அரசு நிறுவனங்கள் மீது நம்பிக்கை இல்லையெனில் ஆட்சி நன்றாக அமையாது…பதவி துஷ்பிரயோகம் பெருவாரி வியாதியாக எங்கும் பரவி விட்டது. லஞ்சம் கொடுத்தால் தான் வேலை நடக்கும் என்ற எண்ணம் வலுத்து வருகிறது…லஞ்சப்பேய், ~குட்டிச்சாத்தான், கொள்ளிவாய் பிசாசு எதாக இருந்தாலும்…அந்த கூளி குழப்பம் விளைவித்து, சமுதாய முன்னேற்றத்தில் குண்டு வீசி, ரவுடிகளின் கொம்பு சீவி, மனசாட்சியை கொன்று, சமுதாய மையங்களை குலைத்து, தேசத்தின் செல்வத்தை சூறையாடி, நல்லிணக்கத்தைத் தொலைத்து, அரசாளுமையின் புற்று நோயாக அமைந்து, சர்வநாசினி என்க…கன்னாபின்னாவென்று, முறைகேடாக, சொத்து சேர்ப்பதின் முதல் பலிகடா, மக்களின் நம்பிக்கை இழப்பு…பொது வாழ்வில் யோக்கியதை இல்லையென்றால், அடி வாங்குவது, மக்கள்…இது தான் தீர்ப்பின் பின்னணி.

    தீர்ப்பு: என்.ஹெச்.சசிதலின் மனு நிராகரிக்கப்படது. தாமதம் மோசம் தான். அந்த சால்ஜாப்பைச் சொல்லி, லஞ்ச வழக்குகளை வாபஸ் செய்தால், அது ‘தடியெடுத்தவன் தண்டல்காரன்’ என்ற போக்கில் கயவாளிகள் கொள்ளையடிக்க வழி வகுக்கும்.

    இதை எங்க கிராமத்துப் பெரிசு ஆறுமுகம் சேர்வையிடம் சொன்னேன். ‘இப்போ மட்டும் என்ன வாழுது?’ என்று கேட்டார். மயக்கம் வருமளவுக்கு, ஹூடாவின் ஹூடா, அப்பாவின் தாதுபுஷ்டி சப்பைக்கட்டு, நீர்மூழ்கியானாலும், பறக்கும் தட்டு ஆனாலும் ‘அடிடா கமிஷன்’ மந்திரம், மலை முழுங்கி தந்திரம், மணல் அள்ளும் யந்திரம் என்று அனுமார் வால் போல ஒரு நீண்ட பட்டியலை வாசித்தார். அந்த அளவுக்கு ல.லா. அபகீர்த்தி துர்வாசனை அடிக்கிறது.

    அவருக்கு மூச்சு வாங்கியதை சாக்காக வைத்துக்கொண்டு, விடை, மத்திய அரசு அசோக் சவான் வழக்கில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாணபத்திரத்தில் இருக்கிறதே என்றேன். அவர் தான் மூச்சுமுட்ட எல்லா ஊடக செய்திகளை படிச்சுட்டாரே.  நான் சொன்னால், கேட்கமாட்டீர்கள். அவரே சொன்னார். கேளும், ஐயாமாரே! அம்மாமாரே!

    பெரிசு ஆறுமுகம் சேர்வை: 

    ராஜூ! என்னமோ காலேசிலே போய் படிச்சுட்டோம், ஜனநாயகம், தேசாபிமானம், தியாகம், அரசியல் சாஸனம், தேர்தல், பிரதிநிதி, அது, இது என்று உளறிக்கொட்டி, கிளறி மூடிரீங்க. என்ன தான் இருந்தாலும், வெள்ளைக்காரன் இப்படி வயத்திலே மண்ணடிக்கல்லை. அசோக் சவான் என்ற பிரதிநிதி சாமான்ய ஆசாமி இல்லை. முதல் மந்திரியாக்கும். அவர் மேலே ஆதர்ஷ் ஊழலிலும் பிராது கொடுத்தாங்க. தேர்தலில், பணத்தை வாரி இழைத்ததாகவும், ஊடகங்களில் காசு கொடுத்து, தற்புகழ்ச்சியை செய்தியாக போட்டு, வாக்கு என்று கொக்கின் தலை மேல் வெண்ணெய் வைத்ததாகவும், தேர்தல் கமிஷனுக்கு உண்மைக்குப் புறம்பான பிரமாணம் தாக்கல் செய்ததாக பேசறாங்க. இப்போ போய் தேர்தல் கமிஷனுக்கு அது பற்றி விசாரிச்சு, அவர் பதவிக்கு லாயாக்கா, இல்லையா என்று சொல்ல உரிமை இல்லை என்று மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாணபத்திரத்தில் அடிச்சுப்பேசறது. கணக்குக்கொடுக்காவிட்டால் தான் அவர்கள் தலையிடலாமாம். பொய்யும், புனைசுரட்டும் பேசினாக்க, தேர்தலில் நிற்க தகுதி இல்லை என்று சொல்லலாமா? அந்த தகுதி தேர்தல் கமிஷனுக்கு இல்லை என்று ராசாங்கம் சொல்லுது, அப்பா, கொஞ்சம் கூட வெட்கம் இல்லாமல். இத்தனைக்கும், இந்த ‘அப்புராணை’ பிரமாணம் ஒரு உச்சநீதி மன்ற தீர்ப்புக்கு எதிர்மறை. (பல வருஷங்க முன்னாலெ அப்பு.) உனக்குத்தான் தெரியுமே, ராசாங்கத்தின் “ஆடிட்டர் ஜெனெரல் ஒழிக” அப்டிங்கிற கண்ணியம்! என்று சொல்லி விட்டு, புகையிலை துண்டு ஒண்ணை வாயில் அடக்கிக்கிட்டு, கொள்ளை சிரிப்புச் சிரித்தார், யாகாவா முனிவர் மாதிரி.

    ஓசை அடங்கின பின், ‘தணிக்கைத்துறை சமாச்சாரம் நிறைய இருக்கு, மாமு’ என்றதற்கு ஒரு நமுட்டுச்சிரிப்பு தான் பதில். முத்தாய்ப்பா, சொன்னேன், ‘மாமு! சேதி தெரியுமா? இதே அசோக் சவான் மீது அவரிடம் ‘தோத்துப்போனவர்’ ஒருவர் போட்ட வழக்கில், “ ‘ கொடுக்கப்பட்ட தகவல்களை வைத்துக்கொண்டு, அவரை பதவியிலிருந்து நீக்கணும்’ என்ற மனுவை ஜனவரியிலேயே உச்ச நீதி மன்றம் நிராகரித்து விட்டது.” என்றேன். நான் பேசியது குட்டிச்சுவருடன். அவர் எழுந்து போய்விட்டார், மாட்டுக்குத் தண்ணி காட்ட.

    (தொடரும்)

     

    சித்திரத்துக்கு நன்றி: http://www.ecotippingpoints.org/our-stories/indepth/india-rajasthan-rainwater-harvest-restoration-groundwater-johad/Village-elder.jpg

    Share
  • இயந்திரர்கள்

    Take the time to smell the rose!

    மாதவன் இளங்கோ

     

    எந்திரன் திரைப்படத்தில் ROBOT-ஐ மனிதனாக மாற்ற முயலுவார்கள். எந்திரன் என்றவுடன் உங்கள் புருவங்கள் சுருங்குவது தெரிகிறது. கவலைப்படாதீர்கள்! இந்தக் கட்டுரையில் எந்திரன் திரைப்படத்தைப் பற்றியெல்லாம் நான் பேசப்போவதில்லை. ஆனால், எந்திரன் திரைப்படத்தின் கரு இன்று நான் எடுத்துக்கொண்ட தலைப்பிற்குப் பொருத்தமானது – ‘எந்திரனுக்கு மனித உணர்வுகளை ஊட்டி, ஒரு பெண்ணை நேசிக்கச் செய்வது’.

    சில நாட்களுக்கு முன்புகூட இது தொடர்புடைய செய்தி ஒன்றை வாசித்தேன். இத்தாலி நாட்டிலுள்ள பைசா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், ‘FACE’ என்கிற மனித உணர்வுகளைப் வெளிப்படுத்தக்கூடிய ஒரு ரோபோவை உருவாக்கியுள்ளார்களாம். FACE ரோபோவில் பயன்படுத்தப்பட்டுள்ள ‘HEFES’ என்கிற மென்பொருளைக் கடந்த முப்பது வருடங்களாக படிப்படியாக உருவாக்கி வந்துள்ளார்கள் என்பது ஒரு ஆச்சர்யமான விஷயம்.

    ஒரு இயந்திரத்தை சிரிக்கவைக்கவும், கோபப்படவைக்கவும் கிட்டத்தட்ட ஒரு மனிதனின் அரை ஆயுள் தேவைப்பட்டுள்ளது. ஆனால் இன்று FACE பற்றியோ, HEFES பற்றியோ நான் எழுதப்போவதில்லை. இதற்கு நேர்மாறாக, ‘ஆராய்ச்சியாளர்களின் உதவியின்றி’ தன்னிச்சையாக நடந்துகொண்டிருக்கும் ஒரு மாற்றத்தைப் பற்றித்தான் பார்க்கப் போகிறோம்.

    இயந்திரங்கள் எல்லாம் மனிதர்களைப் போலச் சிரிக்க ஆரம்பிக்கும் அதே வேளையில், மனிதர்கள் எல்லாம் இயந்திரர்களாக மாறிக்கொண்டு வரும் ஒரு வேதனையான விஷயத்தைப் பற்றிய என் உணர்வுகளை உங்களோடு பகிர்ந்து கொள்ள இருக்கிறேன்.

    ஒருமுறை பெல்கியத்தில் ரயிலில் பயணித்துக்கொண்டு இருந்தபோது ஒரு சிறுகுழந்தை அழகாக RHYMES பாடிக்கொண்டிருந்தது. எனக்கு டச்சு மொழி சிறிதளவே தெரியுமென்றாலும், அது உரக்கப் பாடிய விதத்தையும், அதன் அழகிய முகபாவங்களையும் பார்த்து ரசித்துக்கொண்டிருந்தேன்.

    திடீரெனெ ஏதோ தோன்றி, தலையைச் சற்று உயர்த்தி சுற்றி இருந்தவர்களை நோட்டம் விட்டேன். ஒரே ஒரு மனிதர் மட்டும் என்னைப் போலவே புன்னகைத்துக்கொண்டு இருந்தார். மற்ற அனைவருமே, ஏதோ ‘அவர்களுடைய உணவை வேறு யாரோ தெரியாத நபர் பிடுங்கித் தின்றுவிட்டதைப் போன்று’ அந்தக் குழந்தையை முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். வெறுப்பை  உமிழ்ந்துகொண்டும், அருவருப்பு உணர்வுகளை ஏந்திக்கொண்டும் இருந்த அவர்களின் பார்வை, அந்தப் பிரயாணமே ஒரு மழலை உரக்கப் பாடியதால் வீணடிக்கப்பட்டுவிட்டது போன்றதொரு தோற்றத்தை ஏற்படுத்தியது.

    “மழலைச் சொல் கேளாதவர்” என்று கூறிய வள்ளுவன் நினைவுக்கு வந்தான். கூடவே, FACE ரோபோவும் நினைவிற்கு வந்தது. “ஒருவேளை, இந்தக் குழந்தை செய்துகொண்டிருப்பதை ஒரு ரோபோ அந்தக்கணம் செய்து காட்டியிருந்தால் என்ன செய்திருப்பார்கள்? நிச்சயம் சிரித்திருப்பார்கள்! கைதட்டிப் பாராட்டியிருப்பார்கள்!” என்று யோசித்த அடுத்தகணம் என்னையும் வெறுப்பு வந்து தொற்றிக் கொண்டது.

    இவர்களிடம் ரசிப்புத்தன்மையைப் பற்றிப் பேசுவது வீண். ரசிப்புத்தன்மையை விடுங்கள்! சகிப்புத்தன்மை வேண்டாமா? சகிப்புத்தன்மை அறவேயின்றி  வாழும் (இயங்கும்) இவர்கள் ஒரு வகையான இயந்திரர்களே!

    நான் முதன்முதலில் பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரீஸ் நகரத்திற்கு 2005-ல் சென்றேன். அதற்குப் பிறகு, இதுவரை நான்கு முறை சென்று விட்டேன். ஆனால் இன்னமும் முழுமையாக பார்த்ததில்லை. அந்நகரில் பார்ப்பதற்கும், ரசிப்பதற்கும், ருசிப்பதற்கும் அவ்வளவு விஷயங்கள் இருக்கின்றன. இதைப்பற்றி ஒரு பயணக் கட்டுரையே வரையலாம்.

    குறிப்பாக ஐபில் டவரை பார்க்கும்போதெல்லாம் அவ்வளவு பிரமிப்பாக இருக்கும். இப்படியொரு பிரம்மாண்டத்தை அந்த காலகட்டத்திலேயே எப்படி உருவாக்கியிருப்பார்கள் என்று நினைக்கும்போதெல்லாம் ஆச்சரியமாக இருக்கும். ‘குஸ்தவ் ஐபில்’ மீது ஒரு பெரும் மரியாதையே வந்துவிட்டது. இதை எப்படி வடிவமைத்திருப்பார்? கட்டுமானப் பணி ஆரம்பிக்கப்பட்ட நேரத்தில் எழுந்த கடும் எதிர்ப்புகளையும், விமர்சனங்களையும் மீறி, ஆயிரக்கணக்கான பணியாளர்களைக் கொண்டு எப்படிக் கட்டிமுடித்திருப்பார் என்பதை என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை.

    ஆனால், ஐபிலுக்கு அத்தனை அருகே சென்றாலும், அதன் கம்பீரத்தை கண்விரியப் பார்த்து, மலைத்துப்போய் ரசிப்பவர்களைவிட கேமரா லென்சினூடே பார்த்து ‘க்ளிக்குபவர்களே’ அதிகம். அந்த நேரத்தில் புகைப்படங்களை மட்டும் எடுத்து விட்டு, பிறகு எப்போதாவது நேரம் கிடைக்கும் போது அவற்றையெல்லாம் மெதுவாக ரசிக்கலாம் என்கிற இயந்திர மனநிலையை என்னவென்று சொல்வது. இதற்கு அடிப்படைக் காரணம் – ‘நாம் எப்போதுமே எதிர்காலக் கனவுகளிலோ அல்லது கடந்தகால நினைவுகளிலோ இருப்பதைத்தான் விரும்புகிறோம்’.

    இன்னும் சிலபேர் வேகவேகமாய் கோபுரத்தின் மேலே சென்று, சில மணித்துளிகள் மட்டும் இருந்துவிட்டு (க்ளிக்கிவிட்டு) உடனே கீழே இறங்கி அவர்களின் பட்டியலில் இருக்கும் அடுத்த இடத்துக்கு சென்று விடுவார்கள். மேலே சென்று எனக்கு மிகவும் பிடித்த எழிலிய ‘செய்னே’ நதியையும், அந்த காலகட்டத்திலேயே திட்டமிட்டு உருவாக்கப்பட்ட, பரந்து விரிந்த சாலைகளுடன் கூடிய அந்த பாரிஸ் நகரின் அழகை சிறிது நேரம் நின்று ரசிக்கக்கூட அவர்களுக்கு நேரம் கிடையாது.

    அலுவலகத்தில் நாம் சில செயல்களை ‘OPEN’ நிலையிலிருந்து ‘CLOSED’ நிலைக்கு நகர்த்த வேண்டுமென்பதற்காகவே, வேண்டாவெறுப்போடு, ஈடுபாடின்றி, ரசனை உணர்வு சிறிதுமின்றி செய்து முடிப்போம். அதுபோலத்தான் இவர்களின் பாரிஸ் சுற்றுலாவும். நம்மில் பலருக்கு ஒரு செயலை ‘முடிப்பதில்’ இருக்கும் ஆர்வம் அதைச் செய்வதில் இருப்பதில்லை.

    உங்களுக்கு யாரேனும் ஓவிய நண்பர் இருந்தால், அவர் ஓவியத்தை வரையும்போது அருகே இருந்து கவனித்துப் பாருங்கள்.  நான் என்ன சொல்ல வருகிறேன் என்பது உங்களுக்குப் புரியும். அவர்கள் ஓவியம் வரையும் போது ஒருவித யோகநிலையில் இருப்பதாகவே எனக்குத் தோன்றும். அவர்களின் எண்ண ஓட்டங்களுக்கு ஏற்ப ஓடும் வண்ண வண்ணத் தூரிகைகளின் ஓட்டத்தில் லயித்துப்போய் ஒருவகையான லயயோக நிலையில் இருப்பார்கள். வரைந்து முடித்துவிட்டு, “அடடா முடிந்துவிட்டதே?” என்று அவர்கள் வருத்தப்பட்டாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை; அப்படி ஒரு ஓவிய நண்பர் வருத்தப்பட்டும் பார்த்திருக்கிறேன். அவர்களுக்கு OPEN அல்லது CLOSED போன்ற சமாச்சாரங்கள் எல்லாம் தெரியாது. அதற்கு இடைப்பட்ட நிலையில் லயித்து, ரசித்து யோகம் செய்யும் யோகிகள் அவர்கள்.

    ஓவியம் என்றவுடனே ‘மோனலிசா’ ஓவியம் நினைவுக்கு வருகிறது. லியோனார்டோ டாவின்சி வரைந்த அசல் மோனலிசா ஓவியம் தற்போது பாரிஸ் நகரிலுள்ள உலகப் புகழ்பெற்ற லூவர் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. லூவரை முற்றிலுமாகச் சுற்றிப் பார்க்க குறைந்தது ஒருவாரமாவது தேவைப்படும். ஆனால் அதைக்கூட இரண்டு மணிநேரங்களில் சுற்றிப்பார்த்த அன்பர்களும் உண்டு. I am also not a big fan of museums. லூவர் மட்டும் இதற்கு விதிவிலக்கு.

    லூவரின் கலைக்கூடத்தில் (ART GALLERY) டாவின்சி மட்டுமன்றி மைக்கேல் ஏஞ்செலோ, ரபேல் போன்ற இன்னும் எத்தனையோ தலைசிறந்த ஓவியர்கள் வரைந்த ஆயிரக்கணக்கான ஓவியங்கள் அங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. ஆயினும், அத்தனை அழகான, பிரம்மாண்டமான, வெவ்வேறுவிதமான ஓவியங்களை ரசிப்பதை விட்டுவிட்டு, எல்லோருமே அந்த அருங்காட்சியகத்தின் வரைபடத்தைப் பார்த்துக்கொண்டே எதை நோக்கியோ ஒடிக்கொண்டு இருப்பார்கள்.

    அவர்களைத் தொடர்ந்து நாமும் ஓடினோமென்றால், கலைக்கூடத்தின் ஒரு பகுதியில் முட்டி மோதிக் கொண்டும், எட்டி எட்டிப் பார்த்துக் கொண்டும், புகைப்படம் எடுத்துக்கொண்டிருக்கும் ஒரு பெருங்கூட்டத்தில் சென்று கலப்பார்கள். அங்கே பலவகையான காமிராக்களின் பளிச்சொளி தொடர்மின்னல் போல் வெட்டிகொண்டிருக்கும். இந்த லூவர் கலைக்கூடத்தில் ஓவியங்களுக்கா பஞ்சம், அது என்ன இங்கு மட்டும் இவ்வளவு கூட்டம் என்று அவர்களை விலக்கிகொண்டே உள்ளே நுழைந்து பார்த்தால், அங்கு மோனலிசா தனக்கே உரித்தான மர்மப் புன்னகையை வீசிக்கொண்டிருந்தார்.

    மோனலிசா ஓவியத்திற்கு மிக அருகிலேயே இருக்கும் இன்னொரு ஓவியம் தான் எனக்கு மிகவும் பிடித்தமான ஓவியம்.  சிலுவையைத் தாங்கிக்கொண்டிருக்கும் முற்கிரீடம் அணிந்த ஏசு கிறித்துவின் கண்களில் இருந்து வழியும் கண்ணீர்த் திவலைகள் அவ்வளவு தத்ரூபமாக அந்த ஓவியத்தில் வரையப்பட்டிருக்கும். கிறித்துவின் முகத்தில் தெரியும் அந்த வலி உணர்வு நம்மை என்னவோ செய்யும்.

    ஆனால் அந்த ஓவியத்தின் அருகே யாரும் சென்றதாகக் கூடத் தெரியவில்லை. அப்போதுதான் எனக்குப் புரிந்தது. எல்லோரும் ஓட்டமும் நடையுமாகச் சென்றது கலையின் மேல் இருந்த காதலினால் அல்ல. உலகப் புகழ்பெற்ற மோனலிசா ஓவியத்திற்கு அருகே நானும் நின்றவன் என்கிற ஆதாரத்திற்காக.

    ‘I-TOO-WENT-TO-PARIS’ என்கிற பெருமித உணர்வே அவர்களை ஓடவைத்திருக்கிறது. இந்த ஓட்டத்தின் வேகத்தில் மோனலிசாவை விடப் பலமடங்கு பெரிய, பலமடங்கு அழகான எத்தனை ஓவியங்களை இவர்கள் கண்ணாரக் காணும் வாய்ப்பை இழந்துவிட்டார்கள்.

    இவர்களிடமும் ரசிப்புத்தன்மையை எதிர்பார்க்கமுடியாது.

    எப்போதுமே ஒருவித பரபரப்பு நிலையில் இருக்கும் (இயங்கும்) இவர்கள் இன்னொரு வகையான இயந்திரர்கள்!

    நாள்தோறும் அலுவலகத்திற்குச் செல்வதிலிருந்து சுற்றுலா வரை ‘அதே வேகம்’ – ‘அதே இயந்திரத்தனம்’.

    சென்னையில் எனக்குத் தெரிந்த அன்பர் ஒருவர் எப்போதாவது தான் என்னை தொலைபேசியில் அழைப்பார். ஆனால் “நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? குழந்தை எப்படி இருக்கிறான்?” என்று நம்மைப் பற்றியெல்லாம் விசாரிக்கவே அவருக்கு நேரம் இருக்காது, தோன்றவும் தோன்றாது. அவருக்கு வேண்டிய விஷயங்களை மட்டும் அவசர அவசரமாகக் கேட்டுத் தெரிந்துகொண்டு, உடனே அழைப்பைத் துண்டித்துவிடுவார். நான் ஏதாவது கேட்க ஆரம்பித்தால், அதைக் காதில்கூட வாங்கிக்கொள்ளமாட்டார். ஒவ்வொரு முறை அவருடன் தொலைபேசியில் பேசும்போதும் அவர் இயந்திரத்தனமாகக்  கேட்பதை ரசித்துக்கொண்டே நானும் ஒரு கணிப்பொறியைப் போல் பதிலளிப்பது வழக்கமாகி விட்டது. இவரும் ஒரு ‘OPEN-TO-CLOSE’ ஆசாமிதான்.

    மேற்கூறிய அனைத்து விஷயங்களையும் எதிர்கொள்ளும் போதெல்லாம் சார்லி சாப்ளினின் ‘MODERN TIMES’ திரைப்படத்தின் ஆரம்பத்தில் வரும் ‘Section 5 More Speed…’ காட்சியில், தலைசொறியக்கூட நேரமில்லாமல் தொகுப்புவரிசையின் (Assembly Line) வேகத்திற்கு ஈடுகொடுத்து அவர் வேலை செய்யும் விதம்தான் என் நினைவுக்கு வருகிறது. அந்தக் காட்சியை நினைத்துச் சிரிப்பு வந்தாலும், அதுவே இன்றைய நிதர்சனமாகிப் போனதை பார்க்கும்போது கவலையாகவும் இருக்கிறது.

    நாம் செய்யும் செயலிலோ, தொழிலிலோ அல்லது ஏதாவதொரு கலையிலோ  MASTERY அடைய விரும்பினால், முதலில் அதை ரசிப்பதும், அதில் லயிப்பதும் மிகவும் அவசியம்.

    ஓவியம் பற்றிக் கூறினேன். ஆனால் நாட்டிய சாஸ்திரமும் கிட்டத்தட்ட இதையே தான் கூறுகிறது.

    “யதோ ஹஸ்த ததோ திருஷ்டி

    யதோ  திருஷ்டி  ததோ  மனா

    யதோ மனஸ் ததோ பாவா

    யதோ பாவா ததோ ரசா” 

    சுருங்கச் சொன்னால், ‘கைகள், கண்கள், மனம், பாவம் இவை அனைத்தும் செய்யும் கலையில் கலந்திருக்கும் நிலையில்தான் ரசசித்தி கிட்டும்’. இது நாட்டியக் கலைக்கு மட்டும் அல்ல, கிட்டத்தட்ட எல்லா செயல்களுக்கும் பொருந்தும்.

    நாம் செய்யும் செயலில் சித்தி உண்டாக, இந்த விழிப்புணர்வும், ரசனையும், லயிப்பும் அவ்வளவு முக்கியம். இயந்திரத்தனம் இதற்குச் சற்றும் உதவாது. மாறாக மன உளைச்சல் போன்ற மனப் பிறழ்வு நோய்கள்தான் உண்டாகும். இந்த பாழாய்ப்போன இயந்திரத்தனமே பெரும்பாலானோரின் மன உளைச்சலுக்கு ஒரு மூலகாரணம்.

    எனவே,

    மன உளைச்சலைத் தூக்கி எரிய..

    நாம் அறியாமலேயே நமக்குள் INSTALL செய்யப்பட்டுவிட்ட ‘இயந்திரத்தனம்’ என்னும் மென்பொருளை UNINSTALL செய்ய…

    நாம் செய்யும் தொழிலில், கலையில் சித்தி உண்டாக…

    OPEN மற்றும் CLOSE இவற்றிற்கு இடைப்பட்ட நிலையை ரசிப்போம்.

    பிறப்பு மற்றும் இறப்பு இவற்றிற்கு இடையில் இருக்கும் வாழ்க்கை என்னும் ஒரு உன்னதமான நிலை – அதை, ரசிப்போம், ருசிப்போம்!

    Let us be a fan of our own life! நம் வாழ்க்கையின் ரசிகனாக – நாமே!

    படத்திற்கு நன்றி: http://fc04.deviantart.net/fs30/i/2009/240/8/2/Stop_and_Smell_Blue_Roses_by_MidgetMe.jpg

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 62

     

     

    நான் அறிந்த சிலம்பில் இடையில் 62-ம் பகுதி விட்டுப்போய்விட்டதற்கு வருந்துகிறோம். இதோ அந்த பகுதி

     

    மலர் சபா

     

    புகார்க் காண்டம் – 07. கானல் வரி

    (27)

    காவிரியே!
    நின் கணவனது நாடு
    வளநாடு ஆகுக!
    அந்நாடு நின் குழந்தையாக,
    நீ அதைத் தாயாய் நின்று வளர்த்து,
    தவறாது உதவி செய்கிறாய்!
    அதனால் காவிரியே! நீ வாழ்க!

    அங்ஙனம் நீ காத்து நிற்கக் காரணம்,
    நாடு காத்து ஓம்புகின்ற
    ஆணைச் சக்க்ரம் ஏந்தியவனும்,
    நடுவு நெறி பாராட்டுபவனும்.
    அனைவராலும் விரும்பப்படுபவனுமாகிய
    நின் கணவன் சோழமன்னனது அருளேயாகும்;
    அதனால் காவிரியே! நீ வாழ்க!

    (28)

    “சார்த்துவரி”
    “புகாரைப் பற்றிய பாடல்கள்”
    “கையுறை மறுத்தல்”

    இனிய கதிர்களையுடைய
    திங்களது போலும்
    ஒளிர்ந்திருக்கும் முகத்தையுடைய
    தலைவியின் சிவந்த வாயில் இருக்கும்
    அழகிய பற்களுக்கு
    நீ தரும் இந்த முத்துகள் ஈடாகா;

    எனினும்
    ‘முத்துகளை நீங்கள் வாங்குங்கள்’ என்று கூறித்
    திருமாலின் மகன் காமன் அவன் போல் பித்தேறி
    கடலே! நீயும் நாள்தோறும் இங்கு வருகின்றாய்!

    ஐயனே!
    ஒலிமிகுந்த கடல் அலைகள்
    ஒளிமிகுந்த வெண் முத்துகள் தந்து
    அவற்றுக்கு ஈடாக வணிகர்கள் போல்
    மணம்மிக்க மலர் மாலைகளைக்
    கானலிடத்தே பெற்று விளங்குகின்ற
    புகார் அன்றோ எமது ஊர்?!

    அடிப்படையாய் அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே:

    அடிப்படையாய் அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே:
    படத்துக்கு நன்றி:
    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்!……(50)

     சக்தி சக்திதாசன்

    அன்பினிய நெஞ்சங்களே !

     

    இனியதோர் மடலினிலே மீண்டும் உங்களுடன் இணைவதில் மகிழ்கிறேன், .
    குழந்தைகளாக இருப்போர் எப்போது வாலிபர்களாக மாறுகிறார்கள் ? இவ்வாலிபர்கள் எனும் அந்தஸ்தையடைந்தவர்களுக்கு கொடுக்கப்படும் உரிமைக தானென்ன ? தாமாகவே வாழ்வில் பல தீர்மானங்களை எடுக்கக்கூடிய வயதை அடைந்து விட்டார்கள் எனும் முடிவுக்கு வருபவர்கள் தமது முடிவில் எத்தனை வீதம் நம்பிக்கை கொண்டுள்ளார்கள் ?

    என்ன இது கேள்விக்கு மேல் கேள்வியாக வருகிறதே ! எதை நோக்கி இவனது இந்த மடல் நகர்கிறது என்று எண்ணுகிறீர்களா ?

    ஸ்கொட்லாந்து நாட்டிலே தேர்தலில் வாக்களிக்கும் உரிமையை 16 வயது அடைந்தவர்களுக்கும் விஸ்தரிப்பது எனும் சட்டமூலம் அமூலாக்கப்படும் நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது.

    என்ன ? எதற்கிந்த அவசரம் ? 16 வயதே நிரம்பியவர்களுக்கு தமது நாட்டை வழி நடத்திச் செல்லக்கூடியவர்கள் யார்? என்று நிர்ணயிக்கக்கூடிய அளவிற்கு வாழ்க்கை அனுபவமும் அதனுடன் கூடிய அரசியல் ஆய்வுத் திறனும் உண்டா ?

    சிந்திக்க வேண்டிய கேள்விதான் !

    இதற்கான விடைக்காக நம் சிறிது ஸ்கொட்லாந்து நாட்டின் அரசியல் நிலைப்பாடுகளைச் சிறிது உள்நோக்கிப் பார்க்க வேண்டும். ஸ்கொட்லாந்து , ஜக்கிய இராச்சியத்தில் ஒரு பகுதி அது ஒரு தனிநாடாக இல்லை. ஆனால் ஸ்கொட்லாந்திலே அந்நாட்டின் ஒரு பெரிய அரசியல் கட்சி தாம் ஜக்கிய இராச்சியத்திலிருந்து பிரிந்து செல்ல வேண்டும் என்று அரசியல் போராட்டம் நடத்தி வருகிறது.

    இதன் காரணமாக சில வருடங்களுக்கு முன்னால் இங்கிலாந்து அரசாங்கம் ஸ்கொட்லாந்து, வேல்ஸ் வட அயர்லாந்து ஆகிய பிராந்தியங்களுக்கு மாநில சுயாட்ச்சி வழங்கியது. அதன்படி அவர்களுக்கு என்று தனியான பாராளுமன்றமும் முதன் மந்திரியும் , மாநில அளவிலான மந்திரி சபையும் உண்டு. ஓரளவு இந்தியாவிலுள்ள அமைப்பு போல் என்று வைத்துக் கொள்ளலாம்.

    ஆனால் அது போதாது தமக்கு தனிநாடு தேவை எனக் கோஷமெழுப்புகிறார்கள் தற்போது அங்கு மாநில ஆட்சி நடத்தும் கட்சியினர். அவர்களின் கோரிக்கையை திருப்திப்படுத்துவதற்காக அவர்களுக்கு தனிநாடு வேண்டுமா ?இல்லையா ? என்பது குறித்து ஸ்கொட்லாந்து மக்களைக் கேட்கும் பொது வாக்கெடுப்பு நடத்தும் அதிகாரத்தை இங்கிலாந்து அரசாங்கம் அளித்துள்ளது.

    இவ்வாக்கெடுப்பு அடுத்த வருடம் 2014ம் ஆண்டு நடுப்பகுதியில் நடைபெறவுள்ளது . இந்த வாக்கெடுப்பில் பெரும்பான்மையான மக்கள் ஜக்கிய இராச்சியத்திற்குள் இருப்பதையே விரும்புவார்கள் என்பதுவே எதிர்பார்க்கப்படுகிறது . இந்நிலையில் மிகவும் இளைய வயதினர் தனிநாட்டுக்கு சார்பாக இருப்பார்கள் அத்தோடு அவர்களைத் பிரச்சாரத்தின் மூலம் இலகுவாக தம் வயப்படுத்தி விடலாம் என நம்பும் மாநில அரசே இவ்வாறு 16வயதானவர்களும் தேர்தலில் வாக்களிக்கலாம் எனும் சட்டத்தை அமுலாக்க முயல்கிறது என்பது அரசியல் அவதானிகளின் கணிப்பு .

    இந்தப் பதினாறு எனும் பருவம் இருக்கிறதே ! அது மிகவும் சர்ச்சைக்குரிய ஒரு பருவம் . அவர்களின் நிலை திரிசங்ட்கு சொர்க்கம்தான் !

    இங்கிலாந்தைப் பொறுத்த வரையில் 18 வயது வந்த ஒருவரைத்தான் வயதுக்கு வந்த ஒரு இளைஞனாகவோ அன்றி யுவதியாகவோ சட்டமூலம் கணிக்கிறார்கள்.

    பதினாறு வயது கொண்டவர்கள் சிறுவர்களே ! அவர்களின் கைகளில் இத்தகைய பொறுப்புகளைச் சுமத்துவது ஏற்கக்கூடியதா ? எனும் வாதம் பலமாகக் கிளம்புகிறது.

    16 வயது உடைய ஒருவர் திருமணம் புரியலாம் , இராணுவத்தில் சேரலாம் தனியாக வாழலாம் என்றெல்லாம் அனுமதிக்கிறோம் வாக்களிக்க மட்டும் முடியாதா என்ன ? என்கிறார்கள் ஒரு சாரார்.

    உன்னிப்பாக பார்த்தால் உண்மை அதுவல்ல.

    16 வயது உடைய ஒருவர் இங்கிலாந்தி திருமணம் செய்வதற்கு பெற்றோரின் அனுமதி தேவை , அது தவிர இராணுவத்தில் சேர்வதற்கும் பெற்றோரின் அனுமதி தேவை. அது மட்டுமின்றி 18 வயதுக்குக் குறைந்த இராணுவத்தினர் எவரும் யுத்தமுனைக்கு அனுப்பப்படுவதில்லை. இதுவே இங்கிலாந்து அரசின் சட்டம் . சமீபத்தில் இங்கிலாந்து இராணுவம் ஈடுபட்ட யுத்தங்கள் எவற்ரிலும் 18 வயதிற்குட்பட்ட எவரும் இறக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    ஆனால் ஸ்கொட்லாந்து மாநில அரசின் சட்டப்படி 16 வயது உடைய ஒருவர் பெற்றோரின் அனுமதி இன்றித் திருமணம் செய்து கொள்ளலாம் .

    ஆனால் இங்கிலாந்திலோ தற்போதைய அரசு 18 வயது வரை ஒருவர் கல்லூரியிலோ அன்றி வேலைக்கான பயிற்சியிலோ ஈடுபட்டு இருக்க வேண்டும் என்பதைச் சட்டமாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

    கடந்த காலங்களை விட தற்போதைய குழந்தைகளின் வளர்ச்சி வேகமாக இருக்கிறது. அதனால் முந்தைய 16வயதுடைய ஒருவரின் பொது அறிவிற்கும் , தற்போதைய 16 வயதுடைய ஒருவரின் பொதுஅறிவிற்கும் இடைவெளி அதிகம் அதனால் வாக்களிப்பு எனும் ஜனநாயக உரிமையை 16 வயதுடையவர்களுக்கு கொடுப்பதில் எதுவிதத் தவறுமில்லை என்று வாதாடுகிறார்கள் ஒரு சாரார்.

    பாலியல் சம்மந்தமான குற்றங்களில் 18 வயதுடையவர்களுக்கு கீழுள்ளவர்களை ஈடுபடுத்தினால் அது கிரிமினல் குற்றமாக்கப்பட்டிருக்கிறது. அப்புறம் எப்படி 16 வயதுடையவர்கள் வாக்களிக்கலாம் ? இது மறு சாரார்

    அதேபோல் வாணவேடிக்கைகளில் பயன்படுத்தப்படும் வாணங்களை வாங்குவதற்கு 18 வயது ஆக இருக்க வேண்டும் என்பதும் சட்டமாக உள்ளது. அப்புறம் எப்படி ? . . . வாதம் வலுக்கிறது.

    ஆமாம் 16 வயதுக்கும், 18 வயதுக்குமிடைப்பட்டவர்கள் ஒரு கலங்கிய நிலையில் உள்ள காலத்துக்குள்ளே சிக்கப்பட்டிருப்பது போலத் தோன்றுகிறது. .

    சரி 18 வயதுக்குக் குறைந்த ஒருவரால் பட்டாசு வெடிகளை வாங்க முடியாது ? அப்புறம் எப்படி அவர்களுக்கு வாக்குரிமை அளிப்பது கேள்வி எழுகிறது ?

    வெடி கையில் வெடித்து விடக்கூடும் ! ஜனநாயக முறையிலான வாக்குரிமை அதுவும் கையில் வெடித்து விடுமோ ?

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்
    14.03.2013

    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

    Share
  • மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்!

    -மேகலா இராமமூர்த்தி


    இயற்கையின் படைப்பில் மனித இனம் மட்டுமே சிந்திக்கும் ஆற்றலைத் தன்னகத்தே கொண்டதாய் விளங்குகின்றது. ஏனைய உயிரினங்களுக்கு அத்தகைய வாய்ப்பு அமையவில்லை. தமிழின் தன்னேரில்லாத இலக்கண நூலான தொல்காப்பியத்தை இயற்றிய ஒல்காப் பெரும்புகழ்த் தொல்காப்பியர்,

    ”ஒன்றறி வதுவே உற்றறி வதுவே
    இரண்டறி வதுவே அதனொடு நாவே
    மூன்றறி வதுவே அவற்றொடு மூக்கே
    நான்கறி வதுவே அவற்றொடு கண்ணே
    ஐந்தறி வதுவே அவற்றொடு செவியே
    ஆறறி வதுவே அவற்றொடு மனனே
    நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத் தினரே. ”

    என்று ஓரறிவு முதல் ஆறறிவு வரை அமையப்பெற்ற உயிரினங்களை அவற்றின் புலன்கள் அடிப்படையில் (தொல்காப்பிய) பொருளதிகாரத்திலுள்ள ‘மரபியல்’ என்ற பகுதியில் அழகாக வகைப்படுத்தியுள்ளார். மெய், வாய், மூக்கு, கண், செவி என்று ஒவ்வொறு புலனுணர்வும் கூடிக்கொண்டே வந்து இறுதியில் மனத்தையும் தன்னகத்தே கொண்டதாக மனித இனம் தோன்றியது என்பதனை இந்நூற்பா தெளிவாக விளக்குகின்றது. இத்தகைய உன்னதமான மனித இனம் தோன்றப் பல மில்லியன் வருடங்கள் ஆயின என்று அறிவியல் கூறுகின்றது. இதனையே பரிணாமக் கொள்கை (The theory of evolution) என்று அறிவியலாளர்கள் அழைக்கின்றார்கள்.

    மனம் என்று அறியப்படுகின்ற, சிந்தனைக்கு வித்திடும் ஆறாமறிவால் மனித இனம் மற்ற உயிரினங்களிலிருந்து வேறுபட்டதாயும், தனித்தன்மை மிக்கதாயும் விளங்கிவருகின்றது. ’அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது’ என்று அவ்வையாரும் மனிதப் பிறவியின் சிறப்பைப் போற்றுகின்றார். ஆயினும், மனம் என்ற ஒன்று இருக்கின்ற காரணத்தினாலேயே மனிதர்கள் எல்லாருமே உயர்ந்தோர் என்றோ, உத்தமர் என்றோ நாம் ஓர் முடிவுக்கு வந்துவிட முடிகின்றதா?….இல்லையே!

    மனத்தை மனிதன் எவ்வாறு பண்படுத்துகின்றான், பயன்படுத்துகின்றான், அதில் முகிழ்க்கின்ற சிந்தனைகளும், செயற்பாடுகளும் அவனுக்கும் அவன் சார்ந்த சமூகத்திற்கும் எந்த அளவிற்கு நன்மை அல்லது தீமையைத் தருகின்றன என்பதன் அடிப்படையிலேயே நாம் மனிதனின் பண்பை, குணத்தை முடிவுசெய்ய இயலும். குறையற்ற மனிதன் என்று யாரேனும் உண்டா? என்ற வினா உடனேயே நம் உள்ளத்தில் எழும்; அதற்கு ‘இல்லை’ என்பதனைத்தான் நாம் விடையாகச் சொல்லமுடியும். அப்படியானால், ஓர் மனிதனை நல்லவன் என்றோ தீயவன் என்றோ எவ்வாறு முடிவெடுப்பது..? என்ற நம் ஐயத்தை உணர்ந்தவராய் அதனைத் தெளிவிக்க வருகின்றார் தெய்வப் புலவர் திருவள்ளுவர். ஒருவனிடமுள்ள குணம், குறை என்ற இரண்டையும் நிறுத்துப் பார்த்துத்தான் அவன் குணத்தை நாம் எடை போடமுடியும் என்று கூறும் அவர் அதனை,

    குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்

    மிகைநாடி மிக்கக் கொளல்.” என்ற குறட்பா வாயிலாக விளக்கியுள்ளார்.

    இக்குறள் சொல்வது போலவேதான் நம் சமுதாயமும் மனிதரில் அதிக நற்குணங்கள் கொண்டவரை நல்லவர் என்றும், மாறாகத் தீய குணங்களையே உடன்பிறப்புக்களாகக் கொண்டோரைத் தீயவர் என்றும் முடிவெடுக்கின்றது.

    மண்ணில் பிறக்கும்போது அனைத்துக் குழந்தைகளும் நல்ல குழந்தைகளே. வளர்ப்பில் இருக்கும் வேறுபாட்டாலேயே அவர்கள் நல்லவர்களாகவும், தீயவர்களாகவும் மாறுகின்றனர் என்று கருத்து நம் மக்களால் பரவலாகச் சொல்லப்பட்டு வருகின்றது.

    எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே

    பின் நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பதிலே.” என்று ’கவிஞர் புலமைப்பித்தன்’ எழுதிய ஓர் பிரபலமான திரைப்படப் பாடல் உண்டு. (பாருங்கள்..! அதிலும் பிள்ளையை வளர்க்கும் முழுப் பொறுப்பும், அவன் நடை தவறினால் அதற்கான பழியும் அவன் தாய்க்கு மட்டும்தான்!!)

    ஆனால் பிறக்கும் குழந்தைகள் அனைத்துமே நல்ல குழந்தைகள்தாமா? என்பது குறித்த ஐயங்கள் தற்போது எழுந்துள்ளன. ஏனெனில் சமீபத்திய மனநோய்கள் குறித்த ஆராய்ச்சிகளில், மனநலத்தை பாதிக்கும் நோய்களையும், குறைபாடுகளையும் தீர்மானிப்பதில் மனிதனின் மரபணுக்கள் (genes) முக்கியப் பங்காற்றுகின்றன என்பது கண்டறியப்பட்டுள்ளது. ஆகவே ஒரு மனிதனின் சமூக விரோத நடவடிக்கைகளையும், வக்கிர எண்ணங்களையும் தீர்மானிப்பதிலும் அவற்றின் பங்களிப்பு இருக்கவே செய்கின்றது என்று ஒரு சாராரும்; இல்லை, இல்லை சூழ்நிலையே ஒரு மனிதனின் போக்கையும், நடத்தையையும் பெரிதும் தீர்மானிக்கிறது என்று மற்றொரு சாராரும் தங்கள் வாதப் பிரதிவாதங்களை அறிவியல் பூர்வமாகவும், அனுபவங்கள் வாயிலாகவும் எடுத்து வைக்கின்றனர். இவ்விரு வாதங்களையும் கேட்டபின் ’ஒரு மனிதனின் மரபணுக்களும், அவன் வாழும் சமூகமும் சேர்ந்தே அவனை வடிவமைக்கின்றன, அவன் குணத்தைத் தீர்மானிக்கின்றன’ என்பதனையே நாம் தீர்ப்பாக எடுத்துக்கொள்வதில் தவறில்லை எனத் தோன்றுகின்றது.

    மனிதன் மனது வைத்தால் நல்ல கருத்துக்களையும், நற்சிந்தனைகளையும் தொடர்ந்து தன் உள்ளத்தில் செலுத்தி உள்ளே உறைந்திருக்கும், மறைந்திருக்கும் தீய எண்ணங்களையும், சிந்தனைகளையும் (மரபணுக்கள் வாயிலாக வந்திருந்தாலும் கூட) அகற்றிவிடலாம். ‘மனிதன் என்பவன் தெய்வமாகலாம்’ என்ற கவியரசு கண்ணதாசனின் பாடல் வரிகளை, நாம் மனது வைத்தால் நிஜ வாழ்விலும் சாத்தியமாக்கலாம். நம்மிடையே வாழ்ந்து மறைந்த ஞானியரும், அருளாளர்களும், தலைவர்களும் அதற்குச் சான்றுகளாய்த் திகழ்கின்றனர் எனலாம்.

    நல்ல எண்ணங்கள், நற்பண்புகள் என்று பொதுப்படையாகக் கூறுவதைவிட அவற்றில் சிலவற்றைச் சற்று விளக்கிக் காட்டுவதன் மூலம் அவை குறித்த சிந்தனையை மக்கள் மனத்தில் நாம் விதைக்கலாம் அல்லவா? ஆகவே, மனித மனத்தையும், வாழ்வையும் சீர்ப்படுத்தும், செம்மைப்படுத்தும் நற்பண்புகள் சிலவற்றை இங்கே காண்போம்.

    ”எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே யல்லால்

    வேறொன்றறியேன் பராபரமே.” என்றார் தாயுமானவர்.

    எல்லா மக்களும் குறைகள் ஏதுமின்றி இன்பமாயிருக்கவேண்டும் என்பதே தாயுமானவ சுவாமிகள் இறைவன்முன் சமர்ப்பிக்கும் வேண்டுகோளாய் உள்ளது. மனம் உயர்ந்ததாய் இருந்தால்தானே இத்தகைய உயரிய சிந்தனை முகிழ்க்கும்.

    சமரச சன்மார்க்கம் கண்ட வள்ளலாரோ இன்னும் ஒருபடி மேலேபோய்,

    வாடிய பயிரைக் கண்டபோ தெல்லாம்

    வாடினேன் பசியினால் இளைத்தே

    வீடுதோ றிரந்தும் பசியறா தயர்ந்த

    வெற்றரைக் கண்டுளம் பதைத்தேன்”

    என்று துன்பத்தைத் தாம் எவ்விடத்துக் கண்டாலும், அஃது ஓரறிவுள்ள பயிராகட்டும் அல்லது ஆறறிவுள்ள உயிராகட்டும், தம் மனம் வாடுகின்றது; பதைக்கின்றது என்கின்றார். இதுவல்லவோ உண்மையான உயிரிரக்கம் (ஜீவகாருண்யம்) என்பது! பிற உயிர்கள் படும் துன்பம் நம் மனத்தைப் பாதித்தாலே போதும் நாம் அவ்வுயிர்கட்கு ஊறு செய்ய அஞ்சுவோம். ’இரக்கம் அல்லது அருள்’ என்று கூறப்படும் உயர் பண்பும், அது பிறப்பதற்குக் காரணமாயிருக்கும் ’அன்பு’ என்ற தாய்ப்பண்பும் மனிதர்கள் அனைவரும் கைக்கொள்ள வேண்டிய உயர்ந்த பண்புகளாகும்.  தூய அன்பின் பிடியில் வசப்படாதார் யார்?

    ”அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே” என்றும், “அன்பே சிவம்” என்றும் நம் அருளாளர்கள் இறைவனையே தம்அன்பினால் கட்டிவைத்தனர் என்று திருமுறைகளும், இன்னபிறச் சமய நூல்களும் சான்றாதாரம் காட்டவில்லையா? அப்படியிருக்க மனித மனங்களை வசப்படுத்த, அவர்தம் மனத்தில் இடம்பிடிக்க அன்பைவிட உயர்ந்த சாதனம் வேறென்ன இருக்க முடியும்? அத்தகைய உயர்ந்த அன்பையும், அதன் இளவலான மனிதநேயத்தையும் சக மனிதர்கள்பால் செலுத்துவோம்.

    ”மனிதர் நோக மனிதர் பார்க்கும்

    வாழ்க்கை இனியுண்டோ?” என்ற மகாகவியின் வரிகளை உணர்ந்து கொள்வோம். கொலைவெறியும், வக்கிர எண்ணங்களும் நம்மைவிட்டு முற்றிலும் ஒழியட்டும். அன்பும், அருளும் நம் பார்வையில் நிரம்பி வழியட்டும்.

    அடுத்து நாம் பின்பற்ற வேண்டிய ஓர் உயர்ந்த குணம் அல்லது கொள்கை எனக் கூடச் சொல்லலாம் – அதன் பேர் எளிமை. காட்சிக்கு எளிமையும், கடுஞ்சொல்லற்ற தன்மையும் உடைய ஓர் அரசனின் நாட்டை உலகமே புகழும் என்கின்றார் வள்ளுவப் பெருந்தகை.

    காட்சிக் கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்

    மீக்கூறும் மன்னன் நிலம்.” என்பது அவர் வாக்கு.

    மன்னனே இப்படியிருக்கவேண்டுமென்றால் அவனால் காக்கப்படும் மக்களும் அவ்வாரிருத்தல்தானே முறை. ஆகவே பகட்டும், படாடோபமும் அற்ற எளிமையை மனிதர்கள் கடைப்பிடிப்பது சிறந்தது. அத்தகு எளிமை நம்மிடம் குடிபுக ’அவா அற்ற தன்மை’ நம்மிடம் முதலில் வந்து சேரவேண்டும். ’ஆசையே துன்பத்திற்குக் காரணம்’ என்றார் புத்தர் பெருமான். துன்பத்திற்கு மட்டுமல்ல தேவையற்ற வீண் ஆடம்பரங்களுக்கும், வீண் செலவுகட்கும், போலி கௌரவத்திற்கும் கூட அளவுக்கு மீறிய ஆசைதானே அடித்தளம் அமைத்துக் கொடுக்கின்றது.

    ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள்
    ஈசனோடு ஆயினும் ஆசை அறுமின்கள்
    ஆசைப் படப்பட ஆய்வரும் துன்பங்கள்
    ஆசை விடவிட ஆனந்தம் ஆமே.”  என்று ஈசனாரிடம் கூட ஆசையோ, பற்றோ கொள்ள வேண்டாம், ஆசையினால் துன்பங்களே நேரும்; அதனை விட விட ஆனந்தம் சேரும் என்று திருமூலரும் தன் திருமந்திரத்தில் புத்தரின் கருத்தையே வலியுறுத்திச் சொல்கின்றார்.

    நம் வான்புகழ் வள்ளுவரும் ஆசையை அறுப்பதன் அவசியத்தைத் தன் ”அவா அறுத்தல்” என்ற அதிகாரத்தில் விரித்துக் கூறி விளங்க வைக்கின்றார்.

    வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை

    யாண்டும் அஃதொப்பது இல்.” என்பது குறள்.

    செல்வத்திலேயே உயர்ந்த செல்வம் எது தெரியுமா? எதையும் வேண்டாத அவா அற்ற தன்மையே ஆகும். அதற்கீடான செல்வம் எங்குமே இல்லை என்கின்றார் அவர்.

    வள்ளுவரும், ஏனைய சான்றோரும் போற்றிக் கொண்டாடும் ஆசை ஒழிப்புக் கொள்கையானது சொல்லும் அளவிற்குச் சுலபமாகச் செயல்படுத்த முடியாத ஒன்றுதான் என்பதனை மறுப்பதற்கில்லை. அதுவும் போட்டிகள் நிறைந்த இன்றைய உலகில் வெல்வதற்கும், நம் அடிப்படைத் தேவைகளைப் பெறுவதற்கும் ஆசைகள் தேவையானவைதான் என்ற கருத்தும் நம்முன் வைக்கப்படுகின்றது. எனவே ஆசைகளை முற்றாக ஒழிப்பது என்ற கடுமையான கொள்கையைச் (rigid principle) சற்றே தளர்த்தி, முதலில் நம் ஆசைகளைப் பட்டியலிடுவோம். அத்தியாவசியமானது, அவசியமானது, ஆடம்பர வகையைச் சேர்ந்தது என்று அவ்வாசைகளைப் பிரித்து வைப்போம். முதல் வகையைச் சார்ந்த ஆசைகளை மட்டும் நம் கவனத்தில் கொண்டு அவற்றை அடைய முயலுவோம். வெற்றிகரமாக அவற்றை அடைந்துவிட்டால் இரண்டாவதாக இடம்பெற்றுள்ள ‘அவசியமானது’ வகையைச் சேர்ந்த ஆசைகளைப் பற்றி ஆய்வு செய்வோம். அவ்வாசைகள் நிறைவேறாவிட்டாலும் நமக்கொன்றும் (பெரிய) இழப்பு இல்லை என்பது உறுதியானால் அவற்றைக் கூட நாம் விட்டுவிடலாம். மூன்றாவதான ’ஆடம்பர வகை’யைச் சேர்ந்த ஆசைகளை நாம் நம் பட்டியலிலிருந்தே நீக்கிவிடலாம். அவற்றை அடையமுயல்வது நமக்குத் தேவையற்ற துன்பத்தைத் தருவதோடல்லாமல் நம்மைக் கடனாளியாகக் கூட ஆக்கிவிடக்கூடும். ஆகவே தேவையற்ற ஆசைகளை முளையிலேயே கிள்ளி எறிந்துவிட்டு நிம்மதியாக வாழ்வோம். வீண் ஆசைகளை ஒழித்து வருமானத்திற்குள் குடும்பம் நடத்தப் பழகிக்கொள்வதுதான் வாழ்வின் வெற்றிக்கும், பாதுகாப்பிற்கும் வழிவகுக்கும்.

    ஆகாறு அளவிட்டி தாயினும் கேடில்லைப்

    போகாறு அகலாக் கடை.” என்பது எல்லாரும் நடைமுறையில் செயற்படுத்த வேண்டிய வள்ளுவரின் அனுபவ மொழி.

    அடுத்து, மனிதர்களை மனிதர்களாக வாழவைக்கும் மற்றுமோர் தலையாய பண்பு குறித்துச் சிந்திப்போம். பீடிகை எதற்கு…? ‘ஒழுக்கம்’ என்ற மந்திரச் சொல்லே அது.

    ஒழுக்கத்தின் இன்றியமையாமையை அறிய வள்ளுவத்தினும் உயர்ந்த சான்றை யாங்கணுமே காண இயலாது என்று உறுதிபடச் சொல்லலாம்.

    ஒழுக்கத்தை உயிரினும் மேலாய் மதித்துப் போற்றவேண்டும் என அறிவுறுத்தும் வள்ளுவர், அப்பண்பிலிருந்து தவறுதலால் பெரும்பழிதான் ஒருவனுக்கு ஏற்படும் என்று எச்சரிக்கவும் தவறவில்லை.

    ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்

    எய்துவர் எய்தாப் பழி.” என்கின்றார்.

    சமுதாயத்தில் தற்போது அதிக அளவில் நடைபெற்றுவரும் ஒழுக்கக்கேடான செயற்பாடுகளும், அதன் விளைவாய் ஒழுக்கம் தவறுவோர் அடைகின்ற துடைக்கவியலாப் பழியும், அவர்களால் பாதிக்கப்பட்டோரின் துன்பங்களும், சொல்லொணாத் துயரங்களும் ஒழுக்கத்தின் அவசியத்தை மீண்டும் மீண்டும் வலியுறுத்துவதாகவே உள்ளன.

    வாழ்வியல் நன்னெறிகளைப் போதிக்கும் உலகப் பொதுமறையாம் திருக்குறளையும், வீரத் துறவி விவேகானந்தரின் சிந்தனைகளையும் நம் இந்திய மாணாக்கர் அனைவரும் அறிந்து பின்பற்றும் வகையில் அகில இந்திய அளவில் அதனை மாணாக்கரின் பள்ளிப் பாடத்திட்டத்தில் வைப்பது அவர்தம் ஒழுக்கத்தையும், உயர் சிந்தனைகளையும் வளர்ப்பதில் பேருதவி புரியும் எனத் தோன்றுகிறது. ஒழுக்கம் என்பது ஏதோ இல்லறத்தைத் துறந்தார்க்கும், ஞானியர்க்கும் மட்டுமே வகுக்கப்பட்ட வாழ்க்கை முறை போலவும்; இளைஞர்களும், இல்லறத்தை மேற்கொள்வோரும் எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்றும் எண்ணுகின்ற மனநிலை முதலில் மாறவேண்டும். நல்லொழுக்கமும், நன்னெறிகளும், பெண்களைத் தாயாகவும், உடன்பிறப்பாகவும் எண்ணும் நற்பண்பும் சிறுவயதிலேயே குழந்தைகளுக்கு வீட்டிலும், கல்விக் கூடங்களிலும் கற்பிக்கப்பட வேண்டும். சமுதாய மாற்றத்திற்கு அவை உண்மையிலேயே பேருதவி புரியும்.

    மேலே கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள நற்பண்புகளில் ஏதேனும் ஒன்றிரண்டையேனும் நம் மக்கள் குறிப்பாக இளைய தலைமுறையினர் உணர்ந்து பின்பற்றத் தொடங்குவார்களேயானால் சமுதாயம் செம்மையுறும். தனிமனித விருப்பு, வெறுப்பு, தேவையற்ற போட்டி, பொறாமை, பேராசை ஆகியவை மறையும். நல்லெண்ணமும், மனிதநேயமும் மலர்ந்து மணம்வீசும். வீடும், நாடும் வளம் பெறும். மகாகவி கனவு கண்டதுபோல் எல்லாரும் அமரநிலை எய்தும் வழிமுறையை இந்தியா உண்மையிலேயே உலகிற்கு அளிக்கும்.

    படத்திற்கு நன்றி: http://www.tamilhindu.com/2008/07/specialfeatureanjal/

    Share
  • சாய்ந்து சாய்ந்து… அவள் பார்த்த போது …

    பிரவீண் குமார்

    இன்று… மதியம்… பெங்களூர் – சென்னை நெடுஞ்சாலை.

    இதுவரை அப்படி ஒரு விரக்தியை என் வாழ்க்கையில் நான் அனுபவித்ததில்லை. காரை வேகமாக ஓட்டிக்கொண்டு பெங்களூரில் இருந்து சென்னை செல்கிறேன். வேகம். வேகம்.. என்னால் முடிந்தவரை வேகமாக ஓட்டிக்கொண்டு இருக்கிறேன். ஸ்பீடா மீட்டரை பார்க்கவில்லை. பார்க்கவும் விரும்பவில்லை.  எனக்கு ஏன் இந்த நிலைமை. எங்கேயாவது போய் செத்துவிடலாமா என்று கூட இந்த மூன்று நாட்களில் தோன்றிவிட்டது.  எங்கே என் அனிதாவை நிஜமாகவே என்னை  விட்டு பிரித்து விடுவார்களோ என்று தூக்கம் கூட வரவில்லை. அவள் இல்லாமல் எப்படி என்னால் வாழ முடியும்? இன்னும் பத்து நாட்கள் தான் இருக்கிறது  எனக்கும் அவளுக்கும் திருமணம் நடைபெற.  அவள் தான் என் மனைவி என்று மனதளவில் முழுதாக நம்பிக்கொண்டு இருக்கிறேன். நண்பர்கள் அனைவரிடமும் அவளைப்பற்றியே பேசியபடி இருக்கிறேன். திருமணத்திற்கு  மண்டபம் கூட புக் பண்ணியாயிற்று. நகை, புடவை, எனக்கு வேட்டி சட்டை என்று அனைத்தும் எடுத்தாயிற்று.  சொல்லப்போனால் நானும் அவளும் ஒன்றாக கடைக்கு சென்றுதான் எங்களுக்கான உடைகளை வாங்கினோம்.  எல்லா உறவினர்களுக்கும் பத்திரிக்கை வைத்தாயிற்று. நண்பர்கள் மட்டும் தான் பாக்கி.

    இப்போ போய் ஜாதகம், தோஷம், மாங்கல்ய பலம்னு. ச்சே.. என்ன மயிருக்கு அந்த ஜோசியக்காரனை போய் பார்த்தாங்க? அந்த நாதேறி  மட்டும் என் கையில கெடைச்சான்.. கடைசி நேரத்துல அவள் குடும்பத்தினரையும் குழப்பி அவளையும் குழப்பி. அனிதா ஒன்றும் விவரம் இல்லாதவள் இல்லையே. எப்படி இதை நம்பினாள் என்று புரியவில்லை.  ம்ம்ம்… என்னை கல்யாணம் செய்தால் நான் இறந்துவிடுவேன் என்று சொன்னால் யார் தான் பயப்படமாட்டார்கள்? பாவம் என் அனிதா. மனதளவில் எவ்வளவு கஷ்டம் அவளுக்கும். எப்படி இந்த சூழ்நிலையில் என்னிடம் அவளால் பேச முடியும்.

    பிளாஷ் பேக்:

    அனிதா. என் வாழ்கையை புதுப்பிக்க வந்தவள். அவளை எனக்கு சிறுவயதில் இருந்தே தெரியும்.  கோயமுத்தூரில் உள்ள எங்கள் வீட்டிற்கு பக்கத்து தெரு தான் அவர்கள் குடும்பமும். அவள் அக்கா  ஜோதிக்கு என் வயதுதான். நாங்கள் வேறு பள்ளிகளில் படித்தாலும் எப்பொழுதாவது படிப்பில் சந்தேகம் இருந்தால் எங்கள் வீட்டிற்கு வந்து என்னிடம்  கேட்பாள். நானும் எனக்கு தெரிந்தவரை அவளுக்கு  உதவி இருக்கிறேன். . நான் படிப்பில் சூரப்புலி இல்லையென்றாலும் என்னை விட அவள் நிஜமாகவே மக்காக இருந்ததினால் அது சாத்தியமாயிற்று.

    ஒவ்வொரு முறை அவள் அக்கா என் வீட்டிற்கு வரும்போது அனிதாவையும் துணைக்கு தன்னுடன் அழைத்து வருவாள். அப்படிதான் அனிதா எனக்கு பரிட்சயம். அப்போ ரொம்ப குட்டி பெண் அவள். என்னைவிட ஐந்து வருடம் சிறியவள் அவள்.  அண்ணா, அண்ணா என்று மடியில் வந்து உட்கார்ந்து விளையாடுவாள். பிற்காலத்தில் அந்த அண்ணனை தான் அவள் கல்யாணம் செய்துகொள்ள போகிறாள் என்று அவளுக்கு அப்போது தெரியாது. தெரிந்திருந்தால் அண்ணா என்று அழைத்திருக்கமாட்டாள். கடைசியாக அவளிடம் பேசியபோது போது கூட இதை சொல்லி இருவரும் சிரித்துக்கொண்டோம்.

    சிறுவயதில் அவளை கொஞ்சி இருக்கிறேன். அவளிடம் விளையாடி இருக்கிறேன். அது ஒரு அழகிய நிலாக்காலம். நாட்கள் தான் ஜெட் வேகத்தில் ஓடுகிறதே. அதன் பிறகு இன்ஜினியரிங் சென்னையில் சேர்ந்தேன். ஆச்சரியத்தக்க வகையில் எனக்கு படிப்பில் ஈடுபாடு அதிகமானது.  ஒரு கேர்ல் ப்ரெண்டும் கூட எனக்கு  செட் ஆகாமல் போனது தான் அதற்கு முக்கிய காரணம். காதல் படத்தில் வரும் அந்த விரிச்சககாந்த் உருவத்தில் இருப்பவனுக்கு கூட அதே படத்தில் வரும் சந்தியா போன்ற பெண்களை கரெக்ட் செய்து பைக்கில் ஏற்றி செல்லும் திறமை கடைசிவரை எனக்கு கை கூடி வரவில்லை. ஆனால் ஒரு வகையில் எனக்கு நல்லது தான்.

    இன்னும் என்னுடன் படித்தவர்கள் பலர் வேலைக்கே திண்டாடிகொண்டு இருக்க எனக்கு படித்துமுடித்ததும்  பெங்களூரில் கூகிள் கம்பெனியில் வேலை..  என் கனவு வேலை அது.  பின்னே உலகின் தலை சிறந்த நிறுவனம் ஆயிற்றே  கை நிறைய சம்பளம் பிசியான வாழ்க்கை. கட கடவென வருடங்கள் ஓடியது. நமக்கும் வயசாகிறது என்று வீட்டில் கல்யாண பேச்சு வரும்போது தான் நம்மால் உணரமுடிகிறது. ஒரு விடுமுறை தினத்தில் கோயமுத்தூரில் வீட்டிற்கு சென்றபோதுதான் நானும் அதை உணர்ந்தேன்.

    “அதான் அந்த பாண்டியன் சின்ன மவ அனிதா இருக்காள்ள. இப்போதான் காலேக் படிச்சு முடிச்சி இருக்கா. பாக்க ரொம்ப லட்சணமா இருப்பா. ரெண்டு நாளைக்கு முன்னாடி கூட கோவில்ல அவங்க அம்மாவை பார்த்தேன். நம்ம அருணுக்கு அவளை குடுக்க அவங்களுக்கு விருப்பம் இருக்கு போல “ என்றார் அம்மா.

    “இவனுக்கும் வயசாச்சி. அந்த ஜாதகத்தை வாங்கியாந்து பாரு. நல்ல குடும்பம் தான். ஜாதகம் ஒத்து வந்தா சட்டுபுட்டுன்னு  கல்யாணத்த முடிச்சிடலாம்.” என்று அதற்கு ஆமோதித்தார் என் அப்பா.

    வீட்டில் என்னுடய அறையில் இருந்து இந்த உரையாடலை கேட்க்கும்போது எனக்குள் ஒரு புது வித உணர்வு.  அதுவரை தனியாக வாழ்க்கையை நடத்திக்கொண்டிருந்த  எனக்கு துணை தேடுகிறார்கள் என்றதும் ஒரு இனம் புரியா சந்தோசம். அப்போ இனிமேல் என் உலகத்துக்குள்  என்னைத்தவிர இன்னொருவரும்  வரப்போகிறார். என்னை  முழுநேரம் கொஞ்சுவதற்கும் தேவைப்படும்போது திட்டுவதற்க்கும்  ஒருவர். அடடா.  என் தனிமை சுகத்தை பகிர்ந்துக்கொள்ள  வரப்போகும் அந்த பெண் யார்? “. அவள் பெயர் என்ன. அவள் எப்படி இருப்பாள்? ஆர்வம் தாங்காமல் அப்பா இல்லாத போது அம்மாவிடம்  கேட்டே விட்டேன்.

    நீ ஸ்கூல் படிக்கும்போது உன்னையும் ஒரு ஆளா மதிச்சி உன்கிட்ட படிப்ப பத்தி பேச நம்ம வீட்டுக்கு ஒரு பொண்ணு வருமே. . அதாண்டா நம்ம ஜோதி… பக்கத்துக்கு தெருவுல இருக்காங்களே.

    ஐயோ, அம்மா. .. அவளா?!! அது மொக்க பிகருமா. ஆறு மாசம் முன்னாடி கூட  குமாரு கல்யாணத்துல பார்த்தேன். அதுமட்டும் இல்லாம என்னோட அஞ்சாறு மாசம் அவ பெருசுனு கூட நினைக்கறேன்.

    டேய்..  ரொம்ப பேசாதடா.. அவளுக்கு கல்யாணம் ஆகி ஒரு வருஷம். ஆகுது. அன்னைக்கி அவ கூட  அவன் புருஷன் இருந்திருப்பான். அத கூட கவனிக்காம என்னத்த பார்த்தயோ.  நான் அப்பாகிட்ட பேசுனது  அவ தங்கச்சி அனிதவைடா:”

    ச்சீ போ..மா… உனக்கு வேற வேலையே இல்ல என்று சொல்லிவிட்டு வெட்கத்தோடு அங்கிருந்து நகர்ந்தேன். எனக்கு வெட்கப்படதெரியும் என்று எனக்கே அப்போது தான் தெரியும்.  ஆனால் அம்மா சொன்னது போல் நான் கனவில் தான் இருந்தேன். கனவில் மிதந்துக்கொண்டு இருந்தேன்.  அனிதா சிறுமியாக இருந்த உருவத்தை நினைத்து இப்போது எப்படி இருப்பாள் என்று கற்பனை செய்துப்பார்த்தேன். ம்ம்.ஹூம்.. அதே குழந்தை முகம் தான் ஞாபகம் வந்துப்போனது. இப்போ அவள் எப்படி இருப்பாள்? இன்னும் அதே மாதிரி துருதுருவென்று இருப்பாளோ? எப்படி அவளை பார்ப்பது?

    இன்னமும் என்னால் நம்பமுடியவில்லை. பக்கத்து தெருவில் இருந்த ஒரு வயசுப்பெண்ணை  இத்தனை நாளாக எப்படி பார்க்காமல் தவறவிட்டோம். நமக்கு தெரியாமல் நம்ம ஏரியாவில் ஒரு பிகரா? சரிதான். நான் சென்னையில் கல்லூரி படிக்க சென்று, பெங்களூரில் வேலைக்கு சென்ற அந்த சில வருடங்களில் தான் அவள் வயசுக்கே வந்திருப்பா. சின்ன பொண்ணு இப்போ வளந்துடுச்சு. இந்த அருணுக்குகாக இப்போ காத்து இருக்குது. உள்ளம் குதூகலித்தது.

    “டேய்.. இன்னும் பொண்ணு பார்க்கவில்லை,  வெறும் யோசனை தான் அது. அதனால கற்பனையில் மிதக்க வேண்டாம்டா “என்று அம்மா சொன்ன ஞாபகம் வந்துப்போனது. ஐம்புலன்களையும் அடக்கிக்கொண்டு மேற்கொண்டு புலன் விசாரணையில் இறங்காமல் மறுநாள் வேலைக்கு பெங்களூர் சென்றுவிட்டேன்.

    ரெண்டு நாள் தாக்குப்பிடித்தேன் முடியவில்லை. என் தெருவில் இருக்கும் ஒரு நண்பனுக்கு அதே வாரத்தில் போன் போட்டு விசாரித்தேன்.

    சூப்பரா இருப்பாள் மச்சா.. நான் கூட அவளை நெறையவாட்டி ரூட்டு விட்டு பார்த்தேன். ஆனா அவ மசியவே இல்ல. படிச்சிட்டு இப்போ வீட்ல தான் இருப்பா போல. எவனுக்கு அவல கட்டிக்கற பாக்கியமோ தெரியல. அதுசரி ஏன்டா கேட்கற?

    எனக்கு அவளை பொண்ணு பாக்கறாங்க!

    எதிர்முனை கப்சுப். அவன் பெயர் சுதாகர். சிறுவயதில் என்னுடன் ஸ்கூலில் படித்தான். எவ்வளோ தூரம் சொல்லியும் கல்லூரி சேராமல் அவங்க அப்பாவோட மளிகை வியாபாரம் பார்த்துக்கொண்டு இருக்கறான். அப்போ அப்போ எனக்கு மொக்கை ஜோக்கா எஸ்.எம்.எஸ் அனுப்பிக்கொண்டு இருப்பான். இப்பவும் ஒரு எஸ்.எம்.எஸ் வந்தது.

    “சோறின்றி வாழ்ந்தாலும் வாழ்வார் மனிதர்

    பிகரின்றி வாழ்வது அரிது.”

    என்று வள்ளூவர் அப்போவே சொல்லி இருக்காரு மச்சான். என்னை மன்னிச்சிடு. அனிதா எனக்கு இப்போ தங்கச்சி மாதிரி டா. “ என்று என்னை சமாதனம் செய்ய முயற்சித்தான்.

    ஆனால் எனக்கு அவன் மேல் சுத்தமாய் கோபமில்லை. அவளை பற்றி யாரிடம் கேட்பது என்று அலைந்த போது கிடைத்த ஒரு முக்கிய செய்தி இது. அவனிடம் பேசிய பிறகு இன்ஜினியர் இன்றி, கொத்தனார் இன்றி, மிகவும் பிரம்மாண்டமாய் எனக்குள் காதல் கோட்டை எழும்பிக்கொண்டு இருந்தது.

    அந்த முக்கியமான நாள் வந்தது. அனிதா வீட்டிற்கு அம்மா அன்று போவதாய் சொன்னார்கள். எனக்கு கையும் ஓடவில்லை. காலும் ஓடவில்லை. பத்து நாள் ஆனாலும் நானாக அம்மாவுக்கும் அப்பாவுக்கும் இதுவரை போன் போட்டதில்லை. அவர்களாக எனக்கு போட்டால் தான் உண்டு. ஒவ்வொருமுறையும் “ஒரு போன் போட்டா என்னடா அருண் “ என்று தான் அம்மா ஆரமிக்கும்.

    “சாருக்கு இன்னைக்கு ரொம்ப பாசம் பொங்குது போல. காலைல இருந்து போன் மேல போன் போட்டுட்டு இருக்க.”

    இல்லம்மா. சும்மா தான். எங்க இருக்க?

    இப்போ தான் அனிதா வீட்டுல இருந்து வரேன்.

    வாவ்.. ஜாதகம் பாத்தியா? அவங்க வீட்ல என்ன சொன்னாங்க? அப்புறம்…. உன் மருமவ புள்ள பாக்க எப்படி இருக்கா? உன்னை மாதிரி அழகா இருக்காளா? போட்டா வாங்கினியா?

    அதான பார்த்தேன்… மொச புடிக்கிற நாய மூஞ்ச பார்த்தா தெரியும்டா.

    ஹி ஹீ. அது இல்லம்மா… எனக்காக இல்லைன்னாலும் உனக்கு ஒரு அழகான மருமவ அமைஞ்சா எனக்கு அது போதும்மா.

    ரொம்ப வழியுதடா

    ஐயோ அம்மா.. அங்க என்ன ஆச்சுன்னு சொல்லு.

    .

    .நமக்கு ஜாதக பொருத்தம் அருமையா இருக்கு. அவங்களுக்கும் நம்மக்கு கொடுப்பதில் விருப்பம். ஜாதகம் பார்த்துட்டு சொல்றதா சொல்லி இருக்காங்க. உன்னோட போட்டோ எதுனா இருந்தா அனுப்புடா. அவங்களுக்கு கொடுக்கணும். ஒழுங்கா லட்சணமா .மீசை இருக்கற போட்டோவா பாத்து அனுப்பு.

    சரி அனுப்பறேன். அனிதா இருந்தாளா?

    இருந்தாடா.. அப்படியே கைய புடிச்சு நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வந்துடலாம்னு தோணுச்சுடா அருண். எனக்கு அவளை அவ்வளோ புடிச்சிருக்கு டா.

    ஓ. அவ போட்டோ இருக்கா?

    போட்டோவ கேட்டேன். அவ லேப்டாப்ல தான் இருக்கு வேணும்னா மெயில் அனுப்பறேன்னு சொன்னா.

    ஐயோ.. என் மெயில் ஐடி கொடுக்க வேண்டியது தானா? நீ ஒரு மங்குணிமா. அத சொல்லி இருக்க மாட்டியே..

    டேய். வந்தனா பல்லை தட்டிடுவேன். நான் உன் அம்மாடா. உன்னை பத்தி எனக்கு தெரியாதா… கூடவே ஒக்காந்து உன்னோட ஈமெயிலுக்கு போட்டோ அனுப்பி வச்சிட்டுதான் வந்தேன். ஒரு அரைமணி நேரம் முன்னாடி தான் அனுப்பினோம்.. இப்போ தான் வீட்டுக்கு வந்தேன். பாத்துட்டு சொல்லுடா.

    சரி சரி போனை வை என்று கட் பண்ணிவிட்டு அவசர அவசரமாக மெயில் ஓபன் செய்து பார்த்தேன்.. அனிதா பாண்டியன் என்ற பெயரில் மெயில் வந்திருந்தது. கூடிய சீக்கிரம் அனிதா அருண் என்று மாத்திவிடுகிறேன் என்று மனதுக்குள் சொல்லிக்கொண்டேன். எனது க்யுபிகலில் யாரும் இல்லை என்றாலும் சுத்தி முத்தி பார்த்துக்கொண்டேன். ஒரு மெயிலை திறப்பதற்கு நான் இத்தனை வித்தை செய்ததில்லை. கிளிக் செய்து பார்த்தால் அது ஒரு பிளான்க் மெயில். போட்டோவும் இல்லை ஒன்னும் இல்லை. ச்சை.. என்னை ஏமாற்றி விட்டாள்.

    எனக்குள்ளே சிரித்துக்கொண்டேன். இன்னமும் அனிதா கொஞ்சமும். மாறவில்லை. . போட்டோ அட்டாச்மென்ட் மிஸ்ஸிங் என்று அவளுக்கு மெயில் அனுப்பினேன். முதலில் உங்கபோட்டோவை அனுப்புங்க, அதுக்குள்ள என்னோட போட்டோவை கேட்டா எப்படி என்று உடனே அவளிடம் இருந்து பதில் மெயில் வந்தது. என்னிடம் இருப்பதிலேயே சிறந்த புகைப்படம் மூன்றை தேர்வு செய்து உடனே அனுப்பினேன். ஏதாவது ஒன்றிலாவது சுமாராக இருக்க மாட்டேனா என்ற நப்பாசை தான். ஆனால் இரண்டு மணிநேரமாகியும் அப்போதும் அவளிடம் இருந்து போட்டோ வரவில்லை.  நான் விடவில்லை.. இந்த காலத்தில்  மொக்க பிகர் கூட ஓவரா பண்ணுவாளுங்க. இவ ரேஞ்சுகு இது கூட பண்ணலேன்னா எப்படி என்று மனதை தேத்திக்கொண்டு மீண்டும் மெயில் அனுப்பினேன். ஒருவழியாக அவளை  சேட்டில் பிடித்தேன்.  நல்ல போட்டோ ஏதும் இப்போ இல்லை விரைவில் அனுப்புறேன் என்று மழுப்பினாள்.

    அடுத்து இரண்டு நாட்களும் சேட்டிலே பேசிக்கொண்டோம். சிநேகம் வளர்ந்தது. நம்பிக்கை பிறந்தது. அனிதா என்ற பிசாசு உடலெங்கும் முழுதாய் ஊடுருவிக்கொண்டு இருந்தது.  ஆபிசில் வேலை ஓடவில்லை. இரவில் சரியாக தூக்கமும் இல்லை. சோறும் இறங்கவில்லை. இதுவரை எந்த பெண்ணையும் பற்றி  இப்படி முழுநேர தொழிலாய் நான் சிந்தித்துக்கொண்டு இருந்ததில்லை. ஒரு பெண் உள்ளே வந்துவிட்டால்  எவ்வளோ கஷ்டம் என்று அப்போது தான் புரிந்தது. என இதயப்பூந்தோட்டத்தில் கொஞ்சம் கொஞ்சமாய் நீர் ஊற்றி காதல் செடி வளர்த்தாள் அவள்.  மூன்றாவது நாள் அதற்கு பலன் கிடைத்தது. ஒருவழியாக அவள் போன் நம்பரை வாங்கிவிட்டேன். கடவுளின் விலாசம் கிடைத்த பக்தனாய் பரவசமடைந்தேன். போனை போட்டேன்.

    “ஹலோ.. “

    முதன் முறை அவள் குரலை கேட்க்கிறேன். ரெண்டு  பீரை பாட்டம் ஸிப்  அடிச்ச மாதிரி ஜிவ்வென்று இருந்தது..  “நான் அனிதா பேசறேன்… சாரி.. அருண் இருக்காங்களா?.. ஆஹ்…. நான் அருண் பேசறேன்.. ”.  முதல் பேச்சிலேயே பயங்கரமாய் சொதப்பினேன்.  அவள் சாதரணமாய் தான் பேசினாள். பரஸ்பரம் விசாரிப்புக்குப்பின் நான் நேரடியாக விஷயத்திற்கு வந்தேன்.

    “அனிதா, ஏன் உன்னோட போட்டோவை கடைசி வரை நீ அனுப்பவே இல்லை.”

    இப்போ எதுக்குங்க போட்டோ லாம்.

    “உன்னை சின்ன வயசுல பார்த்தது தான். இப்போ எப்படி இருப்பன்னு கூட தெரியல. என்னோட போட்டோ பாத்துட்டு கூட நீ ஏதும் சொல்லவில்லை? எங்க வீட்ல உன்ன பொண்ணு கேட்டிருக்காங்க உனக்கு தெரியுமில்ல. அப்புறம் என்ன பிரச்சனை.

    தெரியும்,,, ஆனா இப்போ வேணாம்க.

    சரி. வேணும்னா ஒரு அஞ்சு நிமிஷம் கழிச்சு அனுப்பு. நான் வெயிட் பண்றேன்.

    ஐயோ வெளயாடாதீங்க. ப்ளீஸ் பி சீரியஸ். எனக்கு இப்போ கல்யாணம் வேணாம்ங்க. சொன்னா புரிஞ்சிக்க ட்ரை பண்ணுங்க.

    அட கடவுளே.. … ஏன்..? என்னை புடிக்கலையா?

    அப்டி இல்ல. பட்.

    என்ன பட்.. உங்கவீட்ல இதுல சம்பந்தம் இல்லையா?

    அது இல்லைங்க…  நான் ஏற்கனவே ஒருத்தரை லவ் பண்ணிட்டு இருக்கேன். காலேஜுல என்னோட சீனியர் அவர். இப்போ சென்னையில் வேலை செஞ்சிட்டு இருக்கார். அடுத்த மாசம் எனக்கு டீ.சி.எஸ் கம்பெனியில் சாப்ட்வேர் வேலை. நானும் சென்னை போயிடுவேன். அங்க போனதும் ரெண்டு மாசத்துல கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருக்கோம். இது தான் காரணம்.

    எனக்கு ஒரு நிமிடம் என்ன சொல்வது என்று தெரியவில்லை. தலையே சுத்த ஆரம்பிப்பது போல் ஆயிற்று. இதயம் படத்தில் முரளி பாடும் அந்த சோக பாடல் ஏதோ நினைவிற்க்குள் வந்து போனது. வார்த்தைகள் வரவில்லை. அமைதியானேன்.

    ஹலோ..  லைன்ல இருக்கீங்களா?

    ம்ம்ம். இருக்கேன்.” உடைந்து போயிருந்தேன்.

    அயம் சாரி.. உங்களை ஹர்ட் பண்ணி இருந்தா.

    தட்ஸ் ஓகே. தேங்க்ஸ் பார் லெட்டிங் மே நோ. இது உங்க அம்மாவுக்கு தெரியுமா?

    அம்மாவுக்கு மட்டும் தெரியும். அவங்களுக்கு இஷ்டம் இல்லை. பட் கன்வின்ஸ் பண்ணிட்டேன்.

    கோபத்தில் போனை வைத்தேன்.

    எஸ்.எம்.எஸ் அனுப்பினாள்.

    “சாரி.. உங்களை கஷ்டப்டுத்தி இருந்தால் மன்னிக்கவும்”.

    “கடைசி வரைக்கும் உங்களுக்கு நல்ல ப்ரெண்ட் ஆக இருப்பேன்”

    அவளுடைய எல்லா மெசேஜும் எனக்கு டெம்ப்ளேட் மெசேஜாக தான் தோன்றியது. அவளுக்கு ப்ரெண்ட் ஆகா மாறி அவளுடைய ரெஜிஸ்டர் மாரேஜிக்கு கையெழுத்து போட்டுவிட்டு “எங்கிருந்தாலும் வாழ்க” பாடிவிட்டு வரும் முட்டாளாக நான் இருக்க விரும்பவில்லை.

    அம்மாவுக்கு போனை போட்டேன்.. “லவ் பண்ணினா வீட்ல சொல்லி தொலைய வேண்டியது தான. வீட்ல மாப்பிள்ளை பார்க்க விடாமல் பண்ணி இருந்தால் எனக்கு இந்த நிலைமை வந்திருக்குமா? என் மனசுல ஆசை காட்டிவிட்டு ச்சே… கடவுள் என்னை மட்டும் ஏன் இப்படி சோதிக்கிறான்.” என் புலம்பல் அம்மாவுக்கு முதலில் புரியவில்லை. அப்புறம் அவங்களுக்கும் அது அதிர்ச்சி அளிதத்து.

    சரி விடுடா. உனக்கு என்ன குறைச்சல்.. உனக்கு ரதி மாதிரி ஒரு பொண்ணை பார்த்து அவளுக்கு முன்னாடி உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கறேன் என்று சொன்ன அம்மாவின் குரலில் சக்தியில்லை.

    என்னை விட அம்மாவிற்கு அனிதா ரொம்ப பிடிக்கும். நான் தான் அவளை பார்த்ததில்லையே தவிர அம்மா விற்கு அவள் பழக்கம் தான். அவங்க வீட்ல மாப்பிள்ளை கேட்டவுடன் அதிகம்  சந்தோசப்பட்டது அவங்கதான். ஜாதகம் பொருந்தி வந்தவுடன் என்னை விட அதிகம் கனவு கண்டதும் அவங்கதான்.

    அதன் பிறகு அனிதாவுடன்  பேசவில்லை. அவர்கள் வீட்டில் இருந்தும் தகவல் ஏதுமில்லை.  அவளிடம் இருந்து முற்றிலும் விலகி இருந்தாலும் கடல் அலைபோல் ஞாபகங்கள் சிலசமயம் வந்து நெஞ்சில் மோதிக்கொண்டு தான் இருந்தது. எனக்கே தெரியாமல் அவளை நான் காதலித்து இருந்தேன். இன்னும் கொஞ்சநாளில் சரி ஆகிவிடும் என்று அந்த வலிகளை பொறுத்துக்கொண்டேன்.   “எம்மா எம்மா காதல் பொன்னம்மா..”.. “அவ என்ன என்ன தேடி வந்த அஞ்சல” போன்ற பாடல்களே எனக்கு மருந்தாயின.  மூன்று மாதம் நான் கோவை செல்லவே இல்லை. செல்லவும் மனம் வரவில்லை.

    ஒரு நாள் அம்மாவிடம் இருந்து போன் வந்தது. “அனிதாவோட அம்மா வீட்டுக்கு வந்தாங்க டா… “

    என்ன சொல்ற? அதான் எல்லாம் முடிஞ்சிடுச்சு இல்ல. இப்போ என்னவாம்?

    அவங்களுக்கு ஜாதகம் பொருந்தி வருதாம். மேற்கொண்டு பேசலாம்கற மாதிரி சொன்னாங்கடா. இவ்வளோ நாள் எதுமே பேசல.. இப்போ திடீர்னு… எனக்கு என்ன நடக்குதுனே புரியலடா.

    நம்மளை முட்டாள்னு நினைசிடாங்களா? எனக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது. அனிதாவை கண்டபடி திட்ட வேண்டும்  போல் இருந்தது. அவள் நம்பரை எப்போதோ மொபைலில் இருந்து அழித்திருந்தேன். அவள் அனுப்பிய இமெயிலில் அதை மீண்டும் தேடி பிடித்து போனை போட்டேன்.

    ஹலோ… அருண்?

    “எஸ்.. இன்னும் ஞாபகம் இருக்கா?” நான் யோசித்து வைத்திருந்த அத்தனை கேட்டவர்தைகளையும் சொல்லிவிட வாயை திறந்தேன்.

    எதிர் முனையில் அழுகை சப்தம்…

    ஹே…. அனிதா..

    ……..

    அழறியா?

    ம்ம்….

    என்ன ஆச்சு

    ஒரு ரெண்டு மூணு வருஷத்துக்கு முன்னாடி நீ என்னை பாத்திருக்க கூடாதா? எனக்கு நீ  ப்ரோபோஸ் செய்து இருக்க கூடாதா?

    “கமான் அனிதா.. எனக்கு ஒன்னும் புரியல..”

    தேம்பித்தேம்பி அழுதாள். எனக்கு சங்கடமாக இருந்தது. மவுனமானேன். சில நொடிகளில் அவளே பேசத்தொடங்கினாள்.

    என்னோட லவ் பிரேக் அப் ஆயிடுச்சு அருண். எல்லாம் முடிஞ்சிடுச்சு.

    ரெண்டு பேருக்கும் ஒத்துவரலை. சண்டை போட்டு பிரிஞ்சாச்சு.

    எப்போ?

    இப்போ தான் ஒரு வாரம் ஆகுது.

    ஏன் சொல்லலை?

    நாங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ண போறோம்னு உங்ககிட்ட சந்தோசமா சொன்னேன். இப்போ இதை எப்படி சொல்றதுன்னு தான்…

    அவளை எப்படி தேற்றுவது என்று புரியவில்லை. அவள் மேல் ஆசை வைத்து சிறிது நாளிலேயே அவள்  இல்லையென்றதும் என்னாலேயே அது  தாங்கமுடியவில்லை. . இரண்டு வருடம் லவ் பண்ணி கல்யாணம் வரைக்கும் போய்விட்ட அவள் காதல் உண்மையிலேயே பெரிய ரணம் தான்.  அவள் மேல் இன்னும் எனக்கு காதல் இருந்திருக்கிறது.  இல்லையென்றால் அவளிடம் திரும்ப பேசி இருக்கவே மாட்டேன். என் காதலை அவளுக்கு தெரியப்படுத்தவும் இது சந்தர்ப்பம் இல்லை. காயப்பட்ட மனதிற்கு ஆறுதலாகவே இருக்க விரும்பினேன் தவிர அவளுடைய இந்த வீக்னசை பயன் படுத்திக்கொள்ள எனக்கு மனமில்லை. அதன் பிறகு கொஞ்சம் போனில் பேசிக்கொண்டு தான் இருந்தோம். அதுவும் சிறிது நாட்களே. அவள் காயம் ஆறி அவளிடம் தன்னம்பிக்கை வார்த்தைகளை கேட்க்கஆரம்பித்ததும் நானாக மெல்ல விலகிக்கொண்டேன். ஆனால் கடைசி வரை அவளுடைய கடந்த காலத்தை பற்றி நான் கிளறவில்லை.

    நாட்கள் நகர்ந்தது. அனிதாவின் அம்மா காரணமில்லாமல் எங்கள் வீட்டிற்கு அடிக்கடி வந்துகொண்டுதான் இருப்பதாய் என் அம்மா சொன்னார்கள். அந்த கதை எனக்கு இன்னும் புரியவில்லை. இருந்தும் அனிதாவிடம் கேட்டதில்லை. அவளையும் மறக்க முடியவில்லை. ஒரு முறை வேலை நிமித்தமாய் சென்னை செல்ல வேண்டி இருந்தது. பெங்களூரில் இருந்து என்னுடய காரில் செல்கிறேன். அவளும்  இப்போது சென்னையில் தான் வேலையில் இருக்கிறாள். சனி ஞாயிறு விடுமுறை என்பதால் வாராவாரம் வெள்ளிக்கிழமை இரவு ரயிலில் கோவை சென்றுவிடுவதாக ஏற்கனவே என்னிடம் சொல்லி இருக்கிறாள். அன்று வெள்ளிக்கிழமை தான்.

    மெசேஜ் தட்டினேன்…. “ஐயம் கம்மிங் டூ சென்னை.. உன்கிட்ட கொஞ்சம் பேசணும்.  கேன் வீ மீட் பார் காபி இன் ஈவனிங்?”.  பதில் வராது என நினைத்தேன். இரவு  ரயிலில் கோவை புறப்படுவதாகவும். எட்டு மணிக்குள்  வந்தால் கிண்டியில்  நிச்சயம் மீட் பண்ணலாம் என்றும் அவளிடம் இருந்து எஸ்.எம்.எஸ் வந்தது. அவள் வேலை செய்யும் அலுவலகமும், தங்கியிருக்கும் ஹாஸ்டலும் கிண்டி தான். நான் புறப்பட்ட நேரத்திற்கு எட்டு மணிக்குள் கிண்டி போய்விட முடியும் என்று எனக்கு நம்பிக்கை இல்லை. முடிந்தவரை வேகமாக ஓட்டினேன். எட்டு மணி இருக்கும் சென்னைக்கு மிக அருகில் இருந்தேன். கிண்டி பேருந்து நிலையத்தில் இருப்பதாகவும் சீக்கிரம் வருமாறு மெசேஜ் வந்தது. அடித்து பிடித்து சென்னைக்குள் நான் நுழைந்தபோது இரவு ஒன்பது மணி. எப்படியும் ஊருக்கு கிளம்பி இருப்பாள் என போன் செய்தேன். பஸ் நிலையம் அருகே நாதன் கபே  ஹோட்டல் வாசலில் காத்திருப்பதாய் சொன்னாள். கிட்ட தட்ட ஒருமணி நேரம் எனக்காக பஸ்நிலையத்தில் காத்திருந்தாள் என்பது கஷ்டமாக இருந்தாலும் “எனக்காக நின்றிருந்தாள்” என்பது சந்தோசமாகத்தான் இருந்தது. என்னை அவள் முக்கியமாக நினைத்திருக்கிறாள் என்று புரிந்தது.

    இன்னும் பத்து நிமிஷத்துல வந்துடுவேன். காபி சாப்பிடலாமா?

    இதை தான் ஒரு மணி நேரமா சொல்றீங்க பாஸ்… பட்… நான் டின்னரே சாப்பிட்டு விட்டேன்.

    என்னை விட்டுட்டா?

    சாரிங்க.. நீங்க ரொம்ப லேட். வேணும்னா  நீங்க சாப்பிடுங்க நான் உங்களுக்கு கம்பனி கொடுக்கிறேன். ஆனா மறுபடியும் அதே ஹோட்டல் போக வேணாம்.. என்னை சாப்பட்டு ராணினு முடிவு பண்ணிடுவாங்க.

    வேற வழி இல்லாமல் அவள் மொக்கை ஜோக்கிற்கு சிரித்து வைத்தேன். அழகான பெண்கள் பல சமயங்களில் அப்படித்தான் போலும்.

    சரி உங்களை நான் சென்ட்ரலில் ட்ராப் செய்து விடுகிறேன் போதுமா?

    ஹலோ பாஸ்.. ட்ரெயின் இந்நேரம் கெளம்பி இருக்கும். சோ இந்த வாரம் நான் கோவை போகவில்லை. வீட்டுல போன் பண்ணி வேலை இருக்குன்னு சொல்லிட்டேன். மொதல்ல நீங்க வந்து சேருங்க… உங்களுக்கு தான் வெயிட்டிங்

    மொதல்ல பாசுனு சொல்றத நிப்பாட்டுங்க. அருண்னு கூப்பிடுங்க.

    எனக்காக அவள் இந்த வாரம் ஊருக்கே போகவில்லை. மனம் சந்தோசத்தில் துள்ளியது. அவளுக்கு நான் ஸ்பெஷல் தான் என்று கன்பார்ம் ஆனது. அவள் சொன்ன இடத்திற்கு சென்று அவளை காரில் ஏற்றிக்கொண்டேன். கட் பண்ணினால் இ.சி. ஆர் ரோடு.

    மறக்க முடியாத இரவு அது. இ.சி. ஆர் ரோட்டில்  காரை நான் ஓட்டிக்கொண்டு செல்கிறேன். “சாய்ந்து சாய்ந்து… நீ பார்க்கும் போது” பாடல் மெல்லிய சப்தத்தில் இதயத்தை வருடிக்கொண்டு இருந்தது. உள்ளே நானும் அனிதாவும் மட்டும். முதல் முதலாய் அவளை பார்க்கிறேன்.  அவளுக்கு இவ்வளவு அருகில் நான் இருப்பேன் என்ற நினைத்துக்கூட பார்த்தது இல்லை.  வெள்ளை சுடிதாரில் தேவதை போல் இருந்தாள் அவள். அழகாய் இருக்கும் பெண்கள் எல்லாருமே தேவதை தான் என்றாலும். அவள் கொஞ்சம் ஸ்பெஷல் எனக்கு. அவ்வளவு பக்கத்தில் அவள் கண்களை  பார்க்கும் நேரிடும் போதெல்லாம் அது என்னை ஏதோ செய்தன. இந்த தருணத்திற்கு தான் இத்தனை நாளாக ஏங்கி இருக்கிறேன் என்று அந்த நொடி தான் எனக்கே தெரிந்தது. அவள் அழகை பார்த்து நான் பிரம்மித்ததை நான் அவளிடம் காட்டிக்கொள்ளவில்லை. நானே ஆரம்பித்தேன்.

    “அனிதா. உன்கிட்ட கொஞ்சம் பேசணும்னு போனில் சொன்னேன். நீ இதுவரைக்கும் என்னனு கூட கேட்கவே  இல்லை”

    “நீங்களே சொல்லுங்க” என்றாள் மெல்லிய புன்னகையுடன்.

    “எனக்கு எப்படி ஆரம்பிக்கிறது னு தெரியல. நேரடியா விஷயத்துக்கு வரேன்.  நான் உன்னை கல்யாணம் பண்ணிக்கணும்னு ஆசைப்படறேன்.

    “…!!!!”

    அதுவரை மொபைலில் “ஆங்க்ரி பர்ட்ஸ்” கேமில் பிசியாக இருந்த அவள் சடாரென என்னை திரும்பி பார்த்தாள். அவள் பார்வையின் வீச்சை எதிர்நோக்க சக்தி இல்லாமல் ரோட்டை பார்த்தே காரை ஓட்டிக்கொண்டு இருந்தேன்.

    “நீங்க.. சீரியஸா தான் சொல்றீங்களா? உங்களுக்கு நடந்த விஷயம் எல்லாம் தெரியும் தானே அருண்”

    “சோ வாட்.. எல்லாம் தெரியும் அனிதா..  பட் ஐ கான்ட் மிஸ் யூ பார் தட் ரீசன். இட் ஆல் ஹாபன்ஸ்”

    “அப்புறம் எப்புடி?”

    நீ அதுக்காக கல்யாணம் பண்ணிகாமலா இருக்க போற? நீயும் யாரையோ கல்யாணம் பண்ணிக்க போற., நானும் யாரையோ கல்யாணம் பண்ணிக்கபோறேன். அதுக்கு நாம ரெண்டு பேரும் பண்ணிகிட்டா என்னா? அட் லீஸ்ட் என் லவ் ஆவது சக்சஸ் ஆகட்டும் அனிதா  ப்ளீஸ். ஐ லவ் யூ சோ மச்”  நங்கூரம் மாதிரி பிட் போட்டேன்.

    “நல்லா லாஜிக்கா பேசறீங்க அருண். பட் யோசிச்சு சொல்கிறேன்.”

    “ஏன் என்னை புடிக்கலையா?”

    “அப்டி எல்லாம் ஒன்னும் இல்லை. புடிக்காம உங்க கூட கார்ல வருவனா? எனக்கு கொஞ்சம் டயம் வேணும்” என்னை பிடித்திருந்தாலும்  உடனே பதில் சொல்ல பெண்மை அவளை தடுத்தது. கிண்டியில் உள்ள அவளது ஹாஸ்டலில் டிராப் செய்தேன்.

    இரவு நான் அன்று உண்ணவில்லை. மனது நிறைந்து இருந்தது. அடுத்த இரண்டு நாட்கள் அவளை ஸ்பென்சர், எக்ஸ்பிரஸ் அவன்யூ கூட்டிப்போனேன். சுடிதார், கிரீட்டிங் கார்டு  வாங்ககிக்கொடுத்தேன். ப்ளாக் கரண்ட் கேக் வேண்டும் என கேட்டாள். அவள் சாப்பட்டு ராணியே தான். எனக்கும் அவளுக்கும் கல்யாணம் ஆனால்  என் சம்பளத்துல பாதி அவளுக்கு திங்க வாங்கி கொடுக்கவே சரியாய் போய்விடும் ரூமில் இருக்கும் அவள் தோழிக்கும் சேர்த்தே ப்ளாக் கரண்ட் கேக் வாங்கி கொடுத்தேன். இரண்டு நாட்களும் அவளுக்காகவே இருந்தேன். அவளுக்காகவே வாழ்ந்தேன்.

    “ஒரு வேலை நமக்கு கல்யாணம் ஆனா நீங்களும் சென்னை வந்துடுவீங்களா? எனக்கு பெங்களூர் பிடிக்காது”

    “ம்ம்.. நிச்சயமா” என்னுடைய கனவு நிறுவனமான கூகிளில்  வேலையை உதறிவிட்டு அவளுக்காக சென்னை வருவதற்கும் நான் தயாராய் இருந்தேன்.

    “எனக்கே கொஞ்சம் உறுத்தலா இருக்கு. நான் ஏற்கனவே ஒருத்தரை லவ் பண்ணிட்டு உங்களை கல்யாணம் பண்றத  நினைத்தால்…”

    “ப்ளீஸ் அனிதா.  அது பாசிங் க்ளவுட்ஸ். மறந்துடு. அதை பத்தி எனக்கு கவலை இல்லை. இட் ஆல் ஹாபன்ஸ் இன் லைப். உன்னால பழசை மறந்துட்டு என்கூட சந்தோசமா இருக்க முடியும்னா. என்னை சந்தோஷமா பார்த்துக்க முடியும்னா மட்டும் சொல்லு. “

    அவளின் கண்கள் ஈரமாயின “நிச்சயமா அருண்.. என் வாழ்கையில் திரும்ப அவனுக்கு இடமில்லை . ரெண்டு வாட்டி நடுவுல என் கிட்ட பேச ட்ரை பண்ணினான். பட் நான் பேசலை.  ஆனா உங்ககிட்ட ஒன்னு கேட்கணும். உங்களை உங்க அம்மா நல்லா தான் வளர்த்து இருப்பாங்க. இருந்தாலும் கேட்கிறேன். என்னை கடைசி வரை நீங்க நல்லபடியா பார்த்துகுவீன்களா?” குழந்தை போல பேசினாள். அவளின் முந்தைய காயம் இப்படி அவளை பேச வைத்தது என எனக்கு புரிந்தது. தோளில் அப்படியே சாய்த்து தட்டி கொடுத்தேன்.

    பெங்களூர் கிளம்பும்போது எதையோ விட்டு செல்வது போல் ஒரு உணர்வு. காதலை ஏற்ப்பாளா? இல்லை நிராகரிப்பாளா?  என் வாழ்க்கைகாண விடை விரைவில் கிடைக்கும் என நம்பினேன். மறுநாள் அவளிடம் இருந்து ஒரு மெசேஜ். ஆவலுடன் பிரித்தேன். “ஐ டூ லவ் யூ அருண்.”  கடவுள் இருக்கான் குமாரு. ஆகாயத்தில் பறந்தேன். தலைகீழாய் நடந்தேன். அம்மாவிடம் விஷயத்தை சொன்னேன். அனிதாவும் அம்மாவிடம் பேசினாள். அம்மாவுக்கு இதில் விருப்பமோ இல்லையோ எனக்காக அவர்களுக்கும் இதில் விருப்பம். இருவீட்டாரும் பேசி நிச்சயம் நடந்தது. அவள் தான் என் மனைவி என முழுதாய் நம்பினேன். ஆசை பட்ட பொண்ணை மனைவியாக பார்க்கும் பாக்கியத்தை விட உலகில் வேறு என்ன சந்தோசம் இருந்துவிட முடியும். திருமண வைபோகம் நெருங்கிய நெருங்கியது. அதுவரை நல்லாத்தான் போய்க்கொண்டு இருந்தது. திடீரென கொஞ்சம் கொஞ்சமாக என்னுடைய போனை எடுப்பதை தவிர்த்தாள். எப்போதாவது பேசினாலும் அவள் வார்த்தைகளில் காதல் இல்லை. அவள் பேச்சில் குழப்பம் வழிந்தோடியது.

    “உண்மையாவே நான் உங்களுக்கு தகுதியானவள்னு நினைக்கறீங்களா? “

    வாட் நான்சென்ஸ் அனிதா?  எனக்கு சத்தியமா உன்கிட்ட என்ன நடக்குதுன்னு புரியலை.. என்னை தயவு செஞ்சி கஷ்டபடுத்தாத உன் மேல உயிரையே வச்சி இருக்கேன்.

    இல்லை கஷ்டபடுத்த மாட்டேன் அருண். கல்யாணத்தை இன்னும் ஆறு மாதம் தள்ளி போடலாமா என்றாள். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.

    ஏன் என்று கேட்டால் அவளிடம் தெளிவான பதிலில்லை.  ஏதோ குழப்பத்தில் இருக்கிறாள் என்று மட்டும் புரிந்தது.

    அன்று கோவையில் நண்பர்களுக்கு பத்திரிக்கை கொடுக்க வீட்டில் இருந்து கிளம்பிக்கொண்டு இருந்தேன். கல்யாணத்திற்கு இன்னும் பத்து நாட்கள் தான் இருந்தது.  அனிதா வீட்டில் இருந்து அவள் அப்பாவும், அம்மாவும் வந்தார்கள். மிகவும்  தயங்கியபடி. அவர்கள்  ஒரு பெரிய குண்டை தூக்கி போட்டார்கள். இந்த கல்யாணம் வேண்டாம் என்றார்கள். மீறி நடந்தால் என் உயிருக்கு ஆபத்து என்று  ஒரு ஜோசியன் சொல்லுகிறான்  என்றார்கள். கல்யாணம் நடக்க போற நேரத்துல இப்படி அவர்கள் பேசியதால் என் அப்பா கோவத்தில் அவர்களிடம் சண்டை போட்டார்.

    “எந்த ஜோசியகாரன்னு சொல்லுயா நான் போய் பாக்குறேன்.”

    அவர்களிடம் மழுப்பலாய் பதில்வந்தது. சொன்னதையே திரும்பச்சொன்னார்கள்.  எவ்வளவோ எடுத்து சொல்லியும் பிடிவாதமாய் இருந்தார்கள். அவர்களின் பிள்ளை வாழ்க்கை முக்கியம் என்று சொல்லி விட்டு கிளம்பி விட்டார்கள். கல்யாணம் நிற்பது உறுதியானது.

    ஊர்ல இல்லாத பொண்ண பெத்துட்டானுங்க. பொண்ணு ஸ்ட்ராங்கா இருந்தா சொல்லு மாப்புள்ள நாம தூக்கிடலாம் என்று நண்பர்கள் வரிந்து கட்டினார்கள்.

    அந்த ஜோசியாகர பயபுள்ள யாருன்னு சொல்லு மச்சான் அவன ரெண்டு தட்டு தட்னா சரியாபோயிடும்.

    அம்மா அவர்கள் வீட்டிற்கு போய் எவ்வளவோ மன்றாடி பார்த்தார்கள். எனக்காக அம்மாவிற்கு ரொம்ப கஷ்டம். கோவில் கோவிலாய் போய் வேண்டிக்கொண்டார்கள். எனக்காக அம்மா அவர்களிடம் இறங்கிப்போவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. என் அம்மாவின் முகத்தையும் பார்க்க முடியவில்லை.  உடனே பெங்களூர் சென்று விட்டேன். ஆனால் வேலைக்கு போகவில்லை. என்னுடைய ரூமிலேயே முடங்கி இருந்தேன். நினைவெல்லாம் என்னுடைய அனிதா மட்டும் தான். இப்போ தான் புரிந்தது அனிதா என்னிடம் ஏன் சரியாக பேசாமல் போனால் என்று. அவளுக்கு இந்த விஷயம் தெரிந்து இருக்கிறது. நான் இறந்துவிடுவேன் என்று சொன்னதும் அவள் பயந்து இருக்கிறாள். என்னிடம் எப்படி சொல்லுவது என்று தவித்து இருக்கிறாள்.  அவளிடம் நான் பேசியே ஆக வேண்டும். அந்த பாழாய் போன ஜோசியத்தை நம்பவேண்டாம். எனக்கு ஒன்றும் ஆகாது என்று அந்த குழந்தைக்கு புரிய வைக்க வேண்டும்.

    இன்று… மாலை… சென்னை….

    இருட்டுவதற்க்குள் கிண்டி வந்தடைந்திருந்தேன். இன்று வெள்ளிக்கிழமை. எப்படியும் வழக்கம் போல் இரவு ரயிலில் சென்னை சென்ட்ரலில் இருந்து அனிதா கோயமுத்தூர் செல்வாள் என்று எனக்கு  யூகம். எப்படியாவது அவளை அதற்குள் சந்திக்க வேண்டும்.  என்னுடன் காரிலேயே அவளை கோவை அழைத்து செல்லவேண்டும். அப்போ எனக்கு அவளிடம் பேசுவதற்கு நிறைய நேரம் கிடைக்கும். மெல்லெ மெல்ல அவளுக்கு புரியவைத்து இந்த கல்யாணம் நிற்காமல் பார்க்கவேண்டும். இந்த சந்தர்ப்பத்தை விட்டால் அவளை இழக்க வேண்டியது தான். என்னுடைய எஸ்.எம்.எதற்கும் பதில் இல்லை. போன் செய்தால் எடுக்க மாட்டேன்கிறாள். அவள் மனதில் என்ன ஓடுகிறது என்றே எனக்கு தெரியவில்லை. அவள் ஹாஸ்டல் வாசலில் காரை நிப்பாட்டினேன். நீண்ட நேரம் காத்திருந்தேன். எப்படியும் அவள் இங்கிருந்து தான் புறப்படுவாள். மீண்டும் போன் செய்தேன். கால் வெயிட்டிங் போனது. ஹாஸ்டல் வாசலில் கும்பலின் நடுவே என் அனிதாவின் முகம் தென்பட்டது. பரவசமானேன்.  நான் கஷ்டப்பட்டது வீண் போகவில்லை அவளிடம் பேசலாம் என்று காரை விட்டு இறங்க நினைத்தேன். யாரிடமோ சிரித்து போனை பேசிக்கொண்டு  அவளே என் காரை நோக்கி வந்தாள். என் காரை அடையாளம் கண்டு கொண்டிருக்கிறாள் என நினைத்தேன். என் கார் அருகே வந்தவள் என்ன நினைத்தாளோ சட்டென விலகி எனக்கு முன்னால் நின்றுக்கொண்டிருந்த காருக்கு சென்றாள். என்னை அவள் பார்த்திருக்கவில்லை. அந்த காரின் முன்னிருக்கையில் கதவை திறந்து உள்ளே நுழைந்தாள். எனக்கு என்ன நடக்கிறதுயென்று சுத்தமாய் புரியவில்லை . அந்த காரை பின் தொடர்ந்தேன். எங்கு போய்கொண்டிருக்கிறேன் என்று எனக்கு தெரியவில்லை. அந்த காரை பின் தொடர்வதிலேயே என் கவனம் இருந்தது.

    அவர்களது கார் ஒரு ஷாபிங் மாலிற்குள் நுழைந்தது. அது எக்ஸ்பிரஸ் அவென்யு. . நான் சென்னை வரும்போதெல்லாம் அடிக்கடி அவளை இங்கு தான் அழைத்து வருவேன். இவள் யாருடன், எதற்கு இங்கு வருகிறாள்? குழப்பம் அதிகமானது.  அவர்களது காரில் இருந்து அவள் முதலில் இறங்கினாள். டிரைவர் சீட்டில் இருந்து ஒருவன் இறங்கினான். அவனை இதுவரை நான் பார்த்தது இல்லை? இருவரும் கைகோர்த்தபடி மாலிற்குள் நுழைந்தார்கள். அவர்களுடைய நெருக்கம் எனக்கு அதிர்ச்சி அளித்தது. என்னுடைய காரை நிறுத்திவிட்டு அவர்களது பின்னால் நடந்தேன் . கே.ஏப்.சி சிக்கனில் உணவு உணவருந்திவிட்டு அங்கிருந்த சத்யம் தியேட்டரில் “நீ தானே என் பொன்வசந்தம்” படத்திற்கு நுழைந்தார்கள்.  என் கண்களில் குளம் போல் கண்ணீர் பெருக்கெடுத்தது ஓடியது.  தொண்டை வறண்டு குரல் கம்மியது. கண்கள் இருட்டியது. முதல் முறை அழுகிறேன். விம்மி விம்மி அழுகிறேன். அருகில் இருந்தவர்கள் என்னை பைத்தியக்காரனை போல் பார்த்தார்கள்.  நான் முட்டாள் ஆகிவிட்டேனா? அல்லது முட்டாள் ஆக்கப்பட்டு விட்டேனா?அனிதாவுடன் இருந்த அவன் யார்? இவள் எதற்கு அவனுடன் வருகிறாள்?  கல்யாணம் நின்று போன அறிகுறி எதுவுமே அவள் முகத்தில் இல்லையே?  நான் இங்கே தவித்துக்கொண்டு இருக்கிறேன் என்று தெரிந்தும் எப்படி அவளால் சந்தோசமாக இருக்க முடிந்தது ? இப்படி பல கேள்விகளை மின்னல் வேகத்தில் என் மூளை அடுக்கிக்கொண்டே போனது..

    திடிரென எஸ்.எம்.எஸ் சப்தம். ஒருவேளை அனிதாவாக இருக்குமா? இருந்தால் நிச்சயம் நாக்கை பிடுங்கற மாதிரி நாலு வார்த்தை கேட்டிடலாம் என்று மொபைலை எடுத்தேன். ஆனால்  சுதாகரிடம் இருந்து வந்திருந்தது அந்த எஸ்.எம்.எஸ். பிரித்தது பார்த்தேன்.  “நாம் விரும்பும் பெண்ணைவிட நம்மை விரும்பும் ஒரு நாயை கூட கல்யாணம் பண்ணிக்கலாம். இப்படிக்கு உளுந்தூர் பேட்டை உலகானந்தா” என்று இருந்தது. அழுது கொண்டே சிரித்தேன். கண்ணீர் சொட்டு மொபைல் ஸ்க்ரீனில் விழுந்து தெறித்தது.  கண்களை துடைத்துக்கொண்டு வேகமாய் என் காரை நோக்கி நடந்தேன். என் பைத்தியம் தெளிந்திருந்தது.

    Share
  • குறிப்பறிந்து பொருளுணர்க

     

    வருணன்

     
    பொங்கி நுரைத்தபடி
    பெருங்கடல் அலை சீற்றம்
    அடையத் துடிக்கிறது கரையை

    எல்லைகள் கடந்து வேலிகள் உடைத்து
    புலம் பெயர்கின்றன
    பெயரறியா பறவைகள்

    முடிந்து விட்டதாய் மறந்து போன
    நிலம் முட்டி முளைக்கின்றதொரு
    சிறு தளிர்

    உடைமைகள் சிதைத்து
    உடையவர் உயிர் குடித்தடங்கும்
    புயலுக்குப் பின் வருகிறதோர் அமைதி

    இயற்கை தரும்
    வாழ்க்கை பாடங்கள்
    குறிப்பறிந்து பொருளுணர்க.

    படத்துக்கு நன்றி: http://beautifulcoolwallpapers.wordpress.com/category/beautiful-natural-scene/
    Share
  • ஜன்னல் முகங்கள்

    -விசாகை மனோகரன்

     

    வீட்டில், தெருவைப் பார்த்த ஒரு ஜன்னல்

    அதில் ரசித்துப் பார்த்த பல முகங்கள்

    ஆண்,  பெண், கருப்பு, வெளுப்பு,

    சிறுவயது, வயதிற்கு வந்தது, வயது போனது

    இப்படி எத்தனையோ!!

     

    எத்தனை முகங்கள் எத்தனை பாவங்கள்

    அதில்  மனதுள் பதிந்தன சிலமுகங்கள்

    கற்பனைக்கு மேனி தந்து

    மனதின் வேலி உடைத்து

    இரவு தூக்கத்தை கெடுத்து

    கனவுகளில் வந்தன சில முகங்கள்.

     

    ஜன்னல் வழியே பார்த்து

    மனக் கதவை உடைத்து

    உள்ளே வந்து குடியேற

    அனுமதி கேட்கும் சில முகங்கள்

    அனுமதி இல்லாமலே வந்தமர்ந்த சில முகங்கள்.

     

    குழாயடிச்சண்டை,

    தெரு நாய்களின் கூட்டம்

    நரிக் குறவர்களின் கூச்சல்,

    பிச்சைக்காரர்களில் கூவல்

    அனைத்துமே அந்த ஜன்னல் வழி பார்த்தவையே

    ஆனால் இவை எதுவும் பாதிக்காத என் மனதை

    அந்த சில முகங்கள் மட்டும் ஏன் பாதித்தன?

     

    நேரிலே பலமுகங்களைப்  பார்த்தாலும்

    அந்த ஜன்னல் முகங்கள் மட்டும் ஏன் வேறுபடுகின்றன

    அந்தப் பார்வையின் நோக்கில் மட்டும் ஏன் நெருடல்கள்

     

    புரியவில்லை, புரிந்தால் சொல்லுங்களேன் !!

     

    Share