Take the time to smell the rose!

மாதவன் இளங்கோ

 

எந்திரன் திரைப்படத்தில் ROBOT-ஐ மனிதனாக மாற்ற முயலுவார்கள். எந்திரன் என்றவுடன் உங்கள் புருவங்கள் சுருங்குவது தெரிகிறது. கவலைப்படாதீர்கள்! இந்தக் கட்டுரையில் எந்திரன் திரைப்படத்தைப் பற்றியெல்லாம் நான் பேசப்போவதில்லை. ஆனால், எந்திரன் திரைப்படத்தின் கரு இன்று நான் எடுத்துக்கொண்ட தலைப்பிற்குப் பொருத்தமானது – ‘எந்திரனுக்கு மனித உணர்வுகளை ஊட்டி, ஒரு பெண்ணை நேசிக்கச் செய்வது’.

சில நாட்களுக்கு முன்புகூட இது தொடர்புடைய செய்தி ஒன்றை வாசித்தேன். இத்தாலி நாட்டிலுள்ள பைசா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், ‘FACE’ என்கிற மனித உணர்வுகளைப் வெளிப்படுத்தக்கூடிய ஒரு ரோபோவை உருவாக்கியுள்ளார்களாம். FACE ரோபோவில் பயன்படுத்தப்பட்டுள்ள ‘HEFES’ என்கிற மென்பொருளைக் கடந்த முப்பது வருடங்களாக படிப்படியாக உருவாக்கி வந்துள்ளார்கள் என்பது ஒரு ஆச்சர்யமான விஷயம்.

ஒரு இயந்திரத்தை சிரிக்கவைக்கவும், கோபப்படவைக்கவும் கிட்டத்தட்ட ஒரு மனிதனின் அரை ஆயுள் தேவைப்பட்டுள்ளது. ஆனால் இன்று FACE பற்றியோ, HEFES பற்றியோ நான் எழுதப்போவதில்லை. இதற்கு நேர்மாறாக, ‘ஆராய்ச்சியாளர்களின் உதவியின்றி’ தன்னிச்சையாக நடந்துகொண்டிருக்கும் ஒரு மாற்றத்தைப் பற்றித்தான் பார்க்கப் போகிறோம்.

இயந்திரங்கள் எல்லாம் மனிதர்களைப் போலச் சிரிக்க ஆரம்பிக்கும் அதே வேளையில், மனிதர்கள் எல்லாம் இயந்திரர்களாக மாறிக்கொண்டு வரும் ஒரு வேதனையான விஷயத்தைப் பற்றிய என் உணர்வுகளை உங்களோடு பகிர்ந்து கொள்ள இருக்கிறேன்.

ஒருமுறை பெல்கியத்தில் ரயிலில் பயணித்துக்கொண்டு இருந்தபோது ஒரு சிறுகுழந்தை அழகாக RHYMES பாடிக்கொண்டிருந்தது. எனக்கு டச்சு மொழி சிறிதளவே தெரியுமென்றாலும், அது உரக்கப் பாடிய விதத்தையும், அதன் அழகிய முகபாவங்களையும் பார்த்து ரசித்துக்கொண்டிருந்தேன்.

திடீரெனெ ஏதோ தோன்றி, தலையைச் சற்று உயர்த்தி சுற்றி இருந்தவர்களை நோட்டம் விட்டேன். ஒரே ஒரு மனிதர் மட்டும் என்னைப் போலவே புன்னகைத்துக்கொண்டு இருந்தார். மற்ற அனைவருமே, ஏதோ ‘அவர்களுடைய உணவை வேறு யாரோ தெரியாத நபர் பிடுங்கித் தின்றுவிட்டதைப் போன்று’ அந்தக் குழந்தையை முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். வெறுப்பை  உமிழ்ந்துகொண்டும், அருவருப்பு உணர்வுகளை ஏந்திக்கொண்டும் இருந்த அவர்களின் பார்வை, அந்தப் பிரயாணமே ஒரு மழலை உரக்கப் பாடியதால் வீணடிக்கப்பட்டுவிட்டது போன்றதொரு தோற்றத்தை ஏற்படுத்தியது.

“மழலைச் சொல் கேளாதவர்” என்று கூறிய வள்ளுவன் நினைவுக்கு வந்தான். கூடவே, FACE ரோபோவும் நினைவிற்கு வந்தது. “ஒருவேளை, இந்தக் குழந்தை செய்துகொண்டிருப்பதை ஒரு ரோபோ அந்தக்கணம் செய்து காட்டியிருந்தால் என்ன செய்திருப்பார்கள்? நிச்சயம் சிரித்திருப்பார்கள்! கைதட்டிப் பாராட்டியிருப்பார்கள்!” என்று யோசித்த அடுத்தகணம் என்னையும் வெறுப்பு வந்து தொற்றிக் கொண்டது.

இவர்களிடம் ரசிப்புத்தன்மையைப் பற்றிப் பேசுவது வீண். ரசிப்புத்தன்மையை விடுங்கள்! சகிப்புத்தன்மை வேண்டாமா? சகிப்புத்தன்மை அறவேயின்றி  வாழும் (இயங்கும்) இவர்கள் ஒரு வகையான இயந்திரர்களே!

நான் முதன்முதலில் பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரீஸ் நகரத்திற்கு 2005-ல் சென்றேன். அதற்குப் பிறகு, இதுவரை நான்கு முறை சென்று விட்டேன். ஆனால் இன்னமும் முழுமையாக பார்த்ததில்லை. அந்நகரில் பார்ப்பதற்கும், ரசிப்பதற்கும், ருசிப்பதற்கும் அவ்வளவு விஷயங்கள் இருக்கின்றன. இதைப்பற்றி ஒரு பயணக் கட்டுரையே வரையலாம்.

குறிப்பாக ஐபில் டவரை பார்க்கும்போதெல்லாம் அவ்வளவு பிரமிப்பாக இருக்கும். இப்படியொரு பிரம்மாண்டத்தை அந்த காலகட்டத்திலேயே எப்படி உருவாக்கியிருப்பார்கள் என்று நினைக்கும்போதெல்லாம் ஆச்சரியமாக இருக்கும். ‘குஸ்தவ் ஐபில்’ மீது ஒரு பெரும் மரியாதையே வந்துவிட்டது. இதை எப்படி வடிவமைத்திருப்பார்? கட்டுமானப் பணி ஆரம்பிக்கப்பட்ட நேரத்தில் எழுந்த கடும் எதிர்ப்புகளையும், விமர்சனங்களையும் மீறி, ஆயிரக்கணக்கான பணியாளர்களைக் கொண்டு எப்படிக் கட்டிமுடித்திருப்பார் என்பதை என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை.

ஆனால், ஐபிலுக்கு அத்தனை அருகே சென்றாலும், அதன் கம்பீரத்தை கண்விரியப் பார்த்து, மலைத்துப்போய் ரசிப்பவர்களைவிட கேமரா லென்சினூடே பார்த்து ‘க்ளிக்குபவர்களே’ அதிகம். அந்த நேரத்தில் புகைப்படங்களை மட்டும் எடுத்து விட்டு, பிறகு எப்போதாவது நேரம் கிடைக்கும் போது அவற்றையெல்லாம் மெதுவாக ரசிக்கலாம் என்கிற இயந்திர மனநிலையை என்னவென்று சொல்வது. இதற்கு அடிப்படைக் காரணம் – ‘நாம் எப்போதுமே எதிர்காலக் கனவுகளிலோ அல்லது கடந்தகால நினைவுகளிலோ இருப்பதைத்தான் விரும்புகிறோம்’.

இன்னும் சிலபேர் வேகவேகமாய் கோபுரத்தின் மேலே சென்று, சில மணித்துளிகள் மட்டும் இருந்துவிட்டு (க்ளிக்கிவிட்டு) உடனே கீழே இறங்கி அவர்களின் பட்டியலில் இருக்கும் அடுத்த இடத்துக்கு சென்று விடுவார்கள். மேலே சென்று எனக்கு மிகவும் பிடித்த எழிலிய ‘செய்னே’ நதியையும், அந்த காலகட்டத்திலேயே திட்டமிட்டு உருவாக்கப்பட்ட, பரந்து விரிந்த சாலைகளுடன் கூடிய அந்த பாரிஸ் நகரின் அழகை சிறிது நேரம் நின்று ரசிக்கக்கூட அவர்களுக்கு நேரம் கிடையாது.

அலுவலகத்தில் நாம் சில செயல்களை ‘OPEN’ நிலையிலிருந்து ‘CLOSED’ நிலைக்கு நகர்த்த வேண்டுமென்பதற்காகவே, வேண்டாவெறுப்போடு, ஈடுபாடின்றி, ரசனை உணர்வு சிறிதுமின்றி செய்து முடிப்போம். அதுபோலத்தான் இவர்களின் பாரிஸ் சுற்றுலாவும். நம்மில் பலருக்கு ஒரு செயலை ‘முடிப்பதில்’ இருக்கும் ஆர்வம் அதைச் செய்வதில் இருப்பதில்லை.

உங்களுக்கு யாரேனும் ஓவிய நண்பர் இருந்தால், அவர் ஓவியத்தை வரையும்போது அருகே இருந்து கவனித்துப் பாருங்கள்.  நான் என்ன சொல்ல வருகிறேன் என்பது உங்களுக்குப் புரியும். அவர்கள் ஓவியம் வரையும் போது ஒருவித யோகநிலையில் இருப்பதாகவே எனக்குத் தோன்றும். அவர்களின் எண்ண ஓட்டங்களுக்கு ஏற்ப ஓடும் வண்ண வண்ணத் தூரிகைகளின் ஓட்டத்தில் லயித்துப்போய் ஒருவகையான லயயோக நிலையில் இருப்பார்கள். வரைந்து முடித்துவிட்டு, “அடடா முடிந்துவிட்டதே?” என்று அவர்கள் வருத்தப்பட்டாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை; அப்படி ஒரு ஓவிய நண்பர் வருத்தப்பட்டும் பார்த்திருக்கிறேன். அவர்களுக்கு OPEN அல்லது CLOSED போன்ற சமாச்சாரங்கள் எல்லாம் தெரியாது. அதற்கு இடைப்பட்ட நிலையில் லயித்து, ரசித்து யோகம் செய்யும் யோகிகள் அவர்கள்.

ஓவியம் என்றவுடனே ‘மோனலிசா’ ஓவியம் நினைவுக்கு வருகிறது. லியோனார்டோ டாவின்சி வரைந்த அசல் மோனலிசா ஓவியம் தற்போது பாரிஸ் நகரிலுள்ள உலகப் புகழ்பெற்ற லூவர் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. லூவரை முற்றிலுமாகச் சுற்றிப் பார்க்க குறைந்தது ஒருவாரமாவது தேவைப்படும். ஆனால் அதைக்கூட இரண்டு மணிநேரங்களில் சுற்றிப்பார்த்த அன்பர்களும் உண்டு. I am also not a big fan of museums. லூவர் மட்டும் இதற்கு விதிவிலக்கு.

லூவரின் கலைக்கூடத்தில் (ART GALLERY) டாவின்சி மட்டுமன்றி மைக்கேல் ஏஞ்செலோ, ரபேல் போன்ற இன்னும் எத்தனையோ தலைசிறந்த ஓவியர்கள் வரைந்த ஆயிரக்கணக்கான ஓவியங்கள் அங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. ஆயினும், அத்தனை அழகான, பிரம்மாண்டமான, வெவ்வேறுவிதமான ஓவியங்களை ரசிப்பதை விட்டுவிட்டு, எல்லோருமே அந்த அருங்காட்சியகத்தின் வரைபடத்தைப் பார்த்துக்கொண்டே எதை நோக்கியோ ஒடிக்கொண்டு இருப்பார்கள்.

அவர்களைத் தொடர்ந்து நாமும் ஓடினோமென்றால், கலைக்கூடத்தின் ஒரு பகுதியில் முட்டி மோதிக் கொண்டும், எட்டி எட்டிப் பார்த்துக் கொண்டும், புகைப்படம் எடுத்துக்கொண்டிருக்கும் ஒரு பெருங்கூட்டத்தில் சென்று கலப்பார்கள். அங்கே பலவகையான காமிராக்களின் பளிச்சொளி தொடர்மின்னல் போல் வெட்டிகொண்டிருக்கும். இந்த லூவர் கலைக்கூடத்தில் ஓவியங்களுக்கா பஞ்சம், அது என்ன இங்கு மட்டும் இவ்வளவு கூட்டம் என்று அவர்களை விலக்கிகொண்டே உள்ளே நுழைந்து பார்த்தால், அங்கு மோனலிசா தனக்கே உரித்தான மர்மப் புன்னகையை வீசிக்கொண்டிருந்தார்.

மோனலிசா ஓவியத்திற்கு மிக அருகிலேயே இருக்கும் இன்னொரு ஓவியம் தான் எனக்கு மிகவும் பிடித்தமான ஓவியம்.  சிலுவையைத் தாங்கிக்கொண்டிருக்கும் முற்கிரீடம் அணிந்த ஏசு கிறித்துவின் கண்களில் இருந்து வழியும் கண்ணீர்த் திவலைகள் அவ்வளவு தத்ரூபமாக அந்த ஓவியத்தில் வரையப்பட்டிருக்கும். கிறித்துவின் முகத்தில் தெரியும் அந்த வலி உணர்வு நம்மை என்னவோ செய்யும்.

ஆனால் அந்த ஓவியத்தின் அருகே யாரும் சென்றதாகக் கூடத் தெரியவில்லை. அப்போதுதான் எனக்குப் புரிந்தது. எல்லோரும் ஓட்டமும் நடையுமாகச் சென்றது கலையின் மேல் இருந்த காதலினால் அல்ல. உலகப் புகழ்பெற்ற மோனலிசா ஓவியத்திற்கு அருகே நானும் நின்றவன் என்கிற ஆதாரத்திற்காக.

‘I-TOO-WENT-TO-PARIS’ என்கிற பெருமித உணர்வே அவர்களை ஓடவைத்திருக்கிறது. இந்த ஓட்டத்தின் வேகத்தில் மோனலிசாவை விடப் பலமடங்கு பெரிய, பலமடங்கு அழகான எத்தனை ஓவியங்களை இவர்கள் கண்ணாரக் காணும் வாய்ப்பை இழந்துவிட்டார்கள்.

இவர்களிடமும் ரசிப்புத்தன்மையை எதிர்பார்க்கமுடியாது.

எப்போதுமே ஒருவித பரபரப்பு நிலையில் இருக்கும் (இயங்கும்) இவர்கள் இன்னொரு வகையான இயந்திரர்கள்!

நாள்தோறும் அலுவலகத்திற்குச் செல்வதிலிருந்து சுற்றுலா வரை ‘அதே வேகம்’ – ‘அதே இயந்திரத்தனம்’.

சென்னையில் எனக்குத் தெரிந்த அன்பர் ஒருவர் எப்போதாவது தான் என்னை தொலைபேசியில் அழைப்பார். ஆனால் “நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? குழந்தை எப்படி இருக்கிறான்?” என்று நம்மைப் பற்றியெல்லாம் விசாரிக்கவே அவருக்கு நேரம் இருக்காது, தோன்றவும் தோன்றாது. அவருக்கு வேண்டிய விஷயங்களை மட்டும் அவசர அவசரமாகக் கேட்டுத் தெரிந்துகொண்டு, உடனே அழைப்பைத் துண்டித்துவிடுவார். நான் ஏதாவது கேட்க ஆரம்பித்தால், அதைக் காதில்கூட வாங்கிக்கொள்ளமாட்டார். ஒவ்வொரு முறை அவருடன் தொலைபேசியில் பேசும்போதும் அவர் இயந்திரத்தனமாகக்  கேட்பதை ரசித்துக்கொண்டே நானும் ஒரு கணிப்பொறியைப் போல் பதிலளிப்பது வழக்கமாகி விட்டது. இவரும் ஒரு ‘OPEN-TO-CLOSE’ ஆசாமிதான்.

மேற்கூறிய அனைத்து விஷயங்களையும் எதிர்கொள்ளும் போதெல்லாம் சார்லி சாப்ளினின் ‘MODERN TIMES’ திரைப்படத்தின் ஆரம்பத்தில் வரும் ‘Section 5 More Speed…’ காட்சியில், தலைசொறியக்கூட நேரமில்லாமல் தொகுப்புவரிசையின் (Assembly Line) வேகத்திற்கு ஈடுகொடுத்து அவர் வேலை செய்யும் விதம்தான் என் நினைவுக்கு வருகிறது. அந்தக் காட்சியை நினைத்துச் சிரிப்பு வந்தாலும், அதுவே இன்றைய நிதர்சனமாகிப் போனதை பார்க்கும்போது கவலையாகவும் இருக்கிறது.

நாம் செய்யும் செயலிலோ, தொழிலிலோ அல்லது ஏதாவதொரு கலையிலோ  MASTERY அடைய விரும்பினால், முதலில் அதை ரசிப்பதும், அதில் லயிப்பதும் மிகவும் அவசியம்.

ஓவியம் பற்றிக் கூறினேன். ஆனால் நாட்டிய சாஸ்திரமும் கிட்டத்தட்ட இதையே தான் கூறுகிறது.

“யதோ ஹஸ்த ததோ திருஷ்டி

யதோ  திருஷ்டி  ததோ  மனா

யதோ மனஸ் ததோ பாவா

யதோ பாவா ததோ ரசா” 

சுருங்கச் சொன்னால், ‘கைகள், கண்கள், மனம், பாவம் இவை அனைத்தும் செய்யும் கலையில் கலந்திருக்கும் நிலையில்தான் ரசசித்தி கிட்டும்’. இது நாட்டியக் கலைக்கு மட்டும் அல்ல, கிட்டத்தட்ட எல்லா செயல்களுக்கும் பொருந்தும்.

நாம் செய்யும் செயலில் சித்தி உண்டாக, இந்த விழிப்புணர்வும், ரசனையும், லயிப்பும் அவ்வளவு முக்கியம். இயந்திரத்தனம் இதற்குச் சற்றும் உதவாது. மாறாக மன உளைச்சல் போன்ற மனப் பிறழ்வு நோய்கள்தான் உண்டாகும். இந்த பாழாய்ப்போன இயந்திரத்தனமே பெரும்பாலானோரின் மன உளைச்சலுக்கு ஒரு மூலகாரணம்.

எனவே,

மன உளைச்சலைத் தூக்கி எரிய..

நாம் அறியாமலேயே நமக்குள் INSTALL செய்யப்பட்டுவிட்ட ‘இயந்திரத்தனம்’ என்னும் மென்பொருளை UNINSTALL செய்ய…

நாம் செய்யும் தொழிலில், கலையில் சித்தி உண்டாக…

OPEN மற்றும் CLOSE இவற்றிற்கு இடைப்பட்ட நிலையை ரசிப்போம்.

பிறப்பு மற்றும் இறப்பு இவற்றிற்கு இடையில் இருக்கும் வாழ்க்கை என்னும் ஒரு உன்னதமான நிலை – அதை, ரசிப்போம், ருசிப்போம்!

Let us be a fan of our own life! நம் வாழ்க்கையின் ரசிகனாக – நாமே!

படத்திற்கு நன்றி: http://fc04.deviantart.net/fs30/i/2009/240/8/2/Stop_and_Smell_Blue_Roses_by_MidgetMe.jpg

பதிவாசிரியரைப் பற்றி

4 thoughts on “இயந்திரர்கள்

  1. குயில்கூவும் வேளையிலே குயிலாகிப் போவோம்,
    மயிலாடக் காண்கையிலே மயிலாகிப் போவோம்,
    மனமொன்றப் பணிபாற்றிப் புலனொன்றிப் போவோம்,
    இதுவொன்றே மானுடத்தின் மகத்துவமென் றறிவோம்!
    இரயில் பயணத்தை இரசித்து இரசித்து மகிழும் குழந்தைகள் போல வாழ்க்கையை இரசித்து இரசித்துப் பயணிக்க வேண்டியதின் அவசியத்தை வலியுறுத்தும் அழகான கட்டுரை நண்பா! வாழ்த்துக்கள்.

  2. உங்களது கட்டுரை மிகவும் பிடித்திருக்கிறது! சரியான சமயத்தில் தேவையான தெளிவான சிந்தனையைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள் பல!

    காமெரா பற்றிச் சொன்னதை ஆமோதிக்கிறேன்… காட்சிகளைக் கருவிகளில் சிறைப்பிடிக்கும் வேகத்தில், மனசுக்குள் பிடிக்கவும் ரசிக்கவும் தவறி விடுகிறோம்…

    //சுருங்கச் சொன்னால், ‘கைகள், கண்கள், மனம், பாவம் இவை அனைத்தும் செய்யும் கலையில் கலந்திருக்கும் நிலையில்தான் ரசசித்தி கிட்டும்’. இது நாட்டியக் கலைக்கு மட்டும் அல்ல, கிட்டத்தட்ட எல்லா செயல்களுக்கும் பொருந்தும்.//

    இதுவும் பிடித்திருந்தது! மிகவும் உண்மை. உண்மையில் நாட்டியம் ஆடும் போது அதில் ஒன்றி விடுவது போல, மற்ற செயல்களிலும் ஒன்றி விட முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று நினைப்பேன்; ஆனால் பல சமயங்களில் distracted -ஆகத்தான் இருக்கிறேன் என்று நன்கு உணர முடிகிறது. ஒரு செயலைச் செய்யும் போது முழுக் கவனமும் அதிலேயே இருக்கும் பட்சத்தில், அந்தச் செயலைச் சிறப்பாகவும் விரைவாகவும் செய்ய முடிவது மட்டுமின்றி, அதுவே சிறந்த தியானமாகவும் ஆகும். அரவிந்த அன்னையும் இதையே வலியுறுத்துகிறார்.

    சிறந்த கட்டுரைக்கு மிக்க நன்றி.

  3. மிகச் சிறந்த கட்டுரை.  பல முறை படித்தேன். எந்திரத்தன்மை இயல்பில் ஒன்றாகி விட்ட வாழ்க்கை முறையில், நிஜமாகவே மறந்து கொண்டிருக்கும் விஷ‌யத்தை நினைவுபடுத்துவது போலவே இருந்தது.

    தாங்கள் கூறியதைப் போல, தொலைபேசியில் பேசும் நபர்கள் அதிகமானது வேதனையான விஷயம் என்றால், அதை விட வேதனையான விஷயம், ‘போன்ல பேசினா, டக்குனு சொல்ல வந்தத சொல்லிட்டு கட் பண்றதே இல்ல, இவங்க எப்படி இருக்காங்க, அவங்க எப்படி இருக்காங்கன்னு நீட்டி முழக்கி, ஹூம், யாருக்கு இருக்கு நேரம் இவங்க கூட பேச’ என்று அங்கலாய்த்து விட்டு, அவ்வாறு விசாரிக்கும் நபர்களிடம் பேசக்கூட மனமில்லாமல் கட் செய்து விடும் நபர்கள் அதிகமானது தான். பெற்ற குழந்தைகளிடம் பேசி கொஞ்சி விளையாடக் கூட நேரம் இல்லாமல், கார்ட்டூன் சிடி போட்டு அமர வைத்து விட்டு ஓடும் பெற்றோர்கள் அதிகரித்து வருகின்றனர்.  இவையெல்லாம் மாற வேண்டும். போனால் வராதது காலமும் உயிரும் தானே!!!.  இரசித்து வாழாத ஒவ்வொரு கணமும் வீண் தான். கட்டுரையில், வாழ்வை இரசித்து வாழ்வதன் முக்கியத்துவம் அழகாக உணர்த்தப்பட்டிருக்கிறது. அன்பு நிறைந்த நன்றிகள், திரு. இளங்கோ அவர்களே!!!  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.