Advertisements
Featuredஇலக்கியம்பத்திகள்

இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்!……(50)

 சக்தி சக்திதாசன்

அன்பினிய நெஞ்சங்களே !

 

இனியதோர் மடலினிலே மீண்டும் உங்களுடன் இணைவதில் மகிழ்கிறேன், .
குழந்தைகளாக இருப்போர் எப்போது வாலிபர்களாக மாறுகிறார்கள் ? இவ்வாலிபர்கள் எனும் அந்தஸ்தையடைந்தவர்களுக்கு கொடுக்கப்படும் உரிமைக தானென்ன ? தாமாகவே வாழ்வில் பல தீர்மானங்களை எடுக்கக்கூடிய வயதை அடைந்து விட்டார்கள் எனும் முடிவுக்கு வருபவர்கள் தமது முடிவில் எத்தனை வீதம் நம்பிக்கை கொண்டுள்ளார்கள் ?

என்ன இது கேள்விக்கு மேல் கேள்வியாக வருகிறதே ! எதை நோக்கி இவனது இந்த மடல் நகர்கிறது என்று எண்ணுகிறீர்களா ?

ஸ்கொட்லாந்து நாட்டிலே தேர்தலில் வாக்களிக்கும் உரிமையை 16 வயது அடைந்தவர்களுக்கும் விஸ்தரிப்பது எனும் சட்டமூலம் அமூலாக்கப்படும் நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது.

என்ன ? எதற்கிந்த அவசரம் ? 16 வயதே நிரம்பியவர்களுக்கு தமது நாட்டை வழி நடத்திச் செல்லக்கூடியவர்கள் யார்? என்று நிர்ணயிக்கக்கூடிய அளவிற்கு வாழ்க்கை அனுபவமும் அதனுடன் கூடிய அரசியல் ஆய்வுத் திறனும் உண்டா ?

சிந்திக்க வேண்டிய கேள்விதான் !

இதற்கான விடைக்காக நம் சிறிது ஸ்கொட்லாந்து நாட்டின் அரசியல் நிலைப்பாடுகளைச் சிறிது உள்நோக்கிப் பார்க்க வேண்டும். ஸ்கொட்லாந்து , ஜக்கிய இராச்சியத்தில் ஒரு பகுதி அது ஒரு தனிநாடாக இல்லை. ஆனால் ஸ்கொட்லாந்திலே அந்நாட்டின் ஒரு பெரிய அரசியல் கட்சி தாம் ஜக்கிய இராச்சியத்திலிருந்து பிரிந்து செல்ல வேண்டும் என்று அரசியல் போராட்டம் நடத்தி வருகிறது.

இதன் காரணமாக சில வருடங்களுக்கு முன்னால் இங்கிலாந்து அரசாங்கம் ஸ்கொட்லாந்து, வேல்ஸ் வட அயர்லாந்து ஆகிய பிராந்தியங்களுக்கு மாநில சுயாட்ச்சி வழங்கியது. அதன்படி அவர்களுக்கு என்று தனியான பாராளுமன்றமும் முதன் மந்திரியும் , மாநில அளவிலான மந்திரி சபையும் உண்டு. ஓரளவு இந்தியாவிலுள்ள அமைப்பு போல் என்று வைத்துக் கொள்ளலாம்.

ஆனால் அது போதாது தமக்கு தனிநாடு தேவை எனக் கோஷமெழுப்புகிறார்கள் தற்போது அங்கு மாநில ஆட்சி நடத்தும் கட்சியினர். அவர்களின் கோரிக்கையை திருப்திப்படுத்துவதற்காக அவர்களுக்கு தனிநாடு வேண்டுமா ?இல்லையா ? என்பது குறித்து ஸ்கொட்லாந்து மக்களைக் கேட்கும் பொது வாக்கெடுப்பு நடத்தும் அதிகாரத்தை இங்கிலாந்து அரசாங்கம் அளித்துள்ளது.

இவ்வாக்கெடுப்பு அடுத்த வருடம் 2014ம் ஆண்டு நடுப்பகுதியில் நடைபெறவுள்ளது . இந்த வாக்கெடுப்பில் பெரும்பான்மையான மக்கள் ஜக்கிய இராச்சியத்திற்குள் இருப்பதையே விரும்புவார்கள் என்பதுவே எதிர்பார்க்கப்படுகிறது . இந்நிலையில் மிகவும் இளைய வயதினர் தனிநாட்டுக்கு சார்பாக இருப்பார்கள் அத்தோடு அவர்களைத் பிரச்சாரத்தின் மூலம் இலகுவாக தம் வயப்படுத்தி விடலாம் என நம்பும் மாநில அரசே இவ்வாறு 16வயதானவர்களும் தேர்தலில் வாக்களிக்கலாம் எனும் சட்டத்தை அமுலாக்க முயல்கிறது என்பது அரசியல் அவதானிகளின் கணிப்பு .

இந்தப் பதினாறு எனும் பருவம் இருக்கிறதே ! அது மிகவும் சர்ச்சைக்குரிய ஒரு பருவம் . அவர்களின் நிலை திரிசங்ட்கு சொர்க்கம்தான் !

இங்கிலாந்தைப் பொறுத்த வரையில் 18 வயது வந்த ஒருவரைத்தான் வயதுக்கு வந்த ஒரு இளைஞனாகவோ அன்றி யுவதியாகவோ சட்டமூலம் கணிக்கிறார்கள்.

பதினாறு வயது கொண்டவர்கள் சிறுவர்களே ! அவர்களின் கைகளில் இத்தகைய பொறுப்புகளைச் சுமத்துவது ஏற்கக்கூடியதா ? எனும் வாதம் பலமாகக் கிளம்புகிறது.

16 வயது உடைய ஒருவர் திருமணம் புரியலாம் , இராணுவத்தில் சேரலாம் தனியாக வாழலாம் என்றெல்லாம் அனுமதிக்கிறோம் வாக்களிக்க மட்டும் முடியாதா என்ன ? என்கிறார்கள் ஒரு சாரார்.

உன்னிப்பாக பார்த்தால் உண்மை அதுவல்ல.

16 வயது உடைய ஒருவர் இங்கிலாந்தி திருமணம் செய்வதற்கு பெற்றோரின் அனுமதி தேவை , அது தவிர இராணுவத்தில் சேர்வதற்கும் பெற்றோரின் அனுமதி தேவை. அது மட்டுமின்றி 18 வயதுக்குக் குறைந்த இராணுவத்தினர் எவரும் யுத்தமுனைக்கு அனுப்பப்படுவதில்லை. இதுவே இங்கிலாந்து அரசின் சட்டம் . சமீபத்தில் இங்கிலாந்து இராணுவம் ஈடுபட்ட யுத்தங்கள் எவற்ரிலும் 18 வயதிற்குட்பட்ட எவரும் இறக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் ஸ்கொட்லாந்து மாநில அரசின் சட்டப்படி 16 வயது உடைய ஒருவர் பெற்றோரின் அனுமதி இன்றித் திருமணம் செய்து கொள்ளலாம் .

ஆனால் இங்கிலாந்திலோ தற்போதைய அரசு 18 வயது வரை ஒருவர் கல்லூரியிலோ அன்றி வேலைக்கான பயிற்சியிலோ ஈடுபட்டு இருக்க வேண்டும் என்பதைச் சட்டமாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

கடந்த காலங்களை விட தற்போதைய குழந்தைகளின் வளர்ச்சி வேகமாக இருக்கிறது. அதனால் முந்தைய 16வயதுடைய ஒருவரின் பொது அறிவிற்கும் , தற்போதைய 16 வயதுடைய ஒருவரின் பொதுஅறிவிற்கும் இடைவெளி அதிகம் அதனால் வாக்களிப்பு எனும் ஜனநாயக உரிமையை 16 வயதுடையவர்களுக்கு கொடுப்பதில் எதுவிதத் தவறுமில்லை என்று வாதாடுகிறார்கள் ஒரு சாரார்.

பாலியல் சம்மந்தமான குற்றங்களில் 18 வயதுடையவர்களுக்கு கீழுள்ளவர்களை ஈடுபடுத்தினால் அது கிரிமினல் குற்றமாக்கப்பட்டிருக்கிறது. அப்புறம் எப்படி 16 வயதுடையவர்கள் வாக்களிக்கலாம் ? இது மறு சாரார்

அதேபோல் வாணவேடிக்கைகளில் பயன்படுத்தப்படும் வாணங்களை வாங்குவதற்கு 18 வயது ஆக இருக்க வேண்டும் என்பதும் சட்டமாக உள்ளது. அப்புறம் எப்படி ? . . . வாதம் வலுக்கிறது.

ஆமாம் 16 வயதுக்கும், 18 வயதுக்குமிடைப்பட்டவர்கள் ஒரு கலங்கிய நிலையில் உள்ள காலத்துக்குள்ளே சிக்கப்பட்டிருப்பது போலத் தோன்றுகிறது. .

சரி 18 வயதுக்குக் குறைந்த ஒருவரால் பட்டாசு வெடிகளை வாங்க முடியாது ? அப்புறம் எப்படி அவர்களுக்கு வாக்குரிமை அளிப்பது கேள்வி எழுகிறது ?

வெடி கையில் வெடித்து விடக்கூடும் ! ஜனநாயக முறையிலான வாக்குரிமை அதுவும் கையில் வெடித்து விடுமோ ?

மீண்டும் அடுத்த மடலில்
அன்புடன்
சக்தி சக்திதாசன்
14.03.2013

http://www.thamilpoonga.com
http://www.facebook.com/sakthi.sakthithasan

Print Friendly, PDF & Email
Download PDF
Advertisements
Share

Comment here