தேடுவார் தேடினால் தெரிவான் இறைவன் !

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ் மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண், ஆஸ்திரேலியா

ஆதியு மில்லா அந்தமு மில்லா
சோதியாய் சுடராய் இருப்பது இறையே
வாதிட முடியா வண்ணமா யிருப்பது
ஆதியா யிருக்கும் அரும் பொருளாகும்

ஆணவ மிருப்பார் காணவு மாட்டா
அஞ்ஞான மில்லா மெஞ்ஞானப் பொருளே
வாய்மையும் தூய்மையும் வாய்த்த நற்பொருளே
விண்ணாய் மண்ணாய் வியாபிக்கும் பொருளே

அப்பொருள் சிவனே அதுவே முதலே
எப்பொரு ளுள்ளும் இருப்பது மதுவே
நிற்பதும் நடப்பதும் நினைத்திடு மனைத்தும்
நிறைந்திடு பொருளாய் இருப்பது சிவமே

சிவனை நினைவார் சிந்தை சிறக்கும்
சிந்தை சிறந்தால் சிவனே தெரிவார்
சிவனை நினைக்கச் சிவ ராத்திரியே
சிறப்புடை நாளாய் அமைந்துமே இருக்கு

புராணக் கதைகளைத் புறந்தள்ள வேண்டாம்
புத்தியைப் புகட்டும் அத்தனை கருக்கள்
விளங்கா உண்மையை விளக்கிட வந்த
விளக்கே அவையென விளங்கினால் நலனே

அறிவியல் அனைத்தும் அமைந்தது சமயம்
அஞ்ஞான நிலையில் விளங்குதல் அரிது
இறையின் தத்துவம் இயற்பியல் தத்துவம்
எல்லாம் சிவ ராத்திரி மகத்துவம்

மனத்தை ஒடுக்கினால் மர்மம் விலகும்
மர்மம் விலக வைப்பதே நோன்பு
பரம் பொருளாகிய சிவனைப் பரவி
பக்தியால் நோற்றால் பக்குவம் கிடைக்கும்

மாலொடு அயனும் அடிமுடி தேடிய
கதையைக் கருத்தில் இருத்திட வேண்டும்
அடிமுடி காணா அலைந்ததன் காரணம்
அகத்தை என்பதே அடிப்படை அன்றோ

தேடுவார் தேடினால் தெரிவான் இறைவன்
தெளிவுடன் இருந்தால் தரிசனம் தருவான்
இதுவே  சிவனின் ராத்திரி தத்துவம்
தனித்து விழித்து பசியுடன் இருப்போம்

நம்பிக் கைவைத்தால் நல்லதே கிடைக்கும்
நம்பிக்கை யென்பதே நல்லதோர் மந்திரம்
நமச்சிவாய நமைக் காக்கும் மந்திரம்
சொல்லுவோம் மந்திரம் வெல்லுவோம் பகையினை !

Share

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *