பண்டைய தமிழர்களின் வாழ்வியலின் எச்சமாக வாழும் சாட்சியாக, தமிழகத்தில் இருக்கும் கொலைக்கருவியான கழுமரங்களில் காளிங்கராயன் கால்வாய் அருகில் அமைந்துள்ள காத்தவராயன்  கோவிலில் உள்ள கழுமரமும் ஒன்று. மிகக் கொடிய பாதகச் செயலைச் செய்தவர்களை “கழுவில் ஏற்றுதல்” என்னும் கொடிய வழக்கம் பண்டைய காலத்தில் பல இனங்களில் இருந்தது. மரத்தால் செய்யப்பட்டிருப்பதனால்தான் அதனைக் ‘கழுமரம்’ என்று குறிப்பிட்டனர். இரும்பால் ஆன கழுவும் பழக்கத்தில் இருந்துள்ளது. அதனை ‘வெங்கழு’ என்று குறிப்பிட்டுள்ளனர்.

கழுமரம் குறித்து, வரலாற்றில் நெடிய செய்திகளும் கோவில் சிற்பங்களிலும், ஓவியங்களிலும் உள்ளன.  கொங்குநாட்டில் ஈரோடு நகர்  காளிங்கராயன் கால்வாய்க்கு அருகில் வளையல்கார தெருவில் உள்ள அய்யனாரப்பன் கோவிலில் பனை மரத்தால் ஆன “கழுமரம்” உள்ளது . இக்கழுமரத்தை இங்குள்ள மக்கள்  “காத்தவராயன்” என்ற பெயரில் வழிபட்டுவருகின்றனர். ஒரு பீடத்தில் உள்ள அந்த கழுமரம் பனைமரத்தால் ஆனது. ஆறடிக்கும் குறைவான உயரம். பனஞ்செதில்கள் தேய்ந்து போயிருக்கின்றன. சிலுவை போன்ற வடிவில் குறுக்கு சட்டம் போடப்பட்ட அந்த கழுமரத்தில் இரண்டு இரும்பு சங்கிலிகள் இணைக்கபட்டிருக்கின்றன. கழுமரத்தை இப்போது காத்தவராயன் என்று வணங்குகிறார்கள். சுமார் 800 வருடங்களுக்கு முன்பாக உள்ள கழுமரம் அது என்கிறார்கள். கொலைக்கருவிகள் கடவுளாவது உலகெங்கும் நடைபெற்று வரும் தொடர் நிகழ்வு. கழுமரமும் அப்படித்தான் கடவுளாகியிருக்கிறது. இரும்புக் கழுமரத்தை வெங்கழு என்று குறிப்பிட்டனர். இந்த வெங்கழு தமிழகத்தில் ஈரோடு காளிங்கராயன் கால்வாய்க்கு அருகில் உள்ள ‘அய்யனாரப்பன் கோவிலில்’ உள்ளது. இதற்குப் பொட்டு வைத்து காத்தவராயன் என்று மக்கள் வழிபட்டுக் கொண்டிருக்கின்றனர். இந்த வெங்கழுவை காக்க வேண்டி இவ்வாறு செய்திருக்கலாம். தமிழகத்தில் இருக்கும் வெங்கழு இது ஒன்றுதான் எனக் கருதப்படுகிறது.

கழுமரம் என்பது ஒரு கொலைக்கருவி. கூர்மையாக செதுக்கபட்ட மரம் ஒன்றினில் குற்றாவளியின் ஆசனவாயை சொருகி விடுவார்கள்; கொஞ்சம் கொஞ்சமாக மரம் உடலினுள்ளேறி இறந்து போவான். வலி தாங்காமல் அவன் இரவெல்லாம் கூப்பாடு போடுவதும் செத்த உடலை பறவைகள் கிழித்து உண்பதையும் பற்றி பல கதைகள் உள்ளன.

கழுவேற்றம் குறித்த வரலாற்றில் மிகவும் குறிப்பிடத்தக்கவர் 15-ஆம் நூற்றாண்டை சேர்ந்த ‘மூன்றாம் வ்லாட் ட்ராகுலா’ என்னும் ருமேனியாவின் வல்லாஹியா பகுதியின் இளவரசர் ஆவார். இவருக்கு ‘கழுவேற்றும் வ்லாட்’ (Vlad the Impaler) என்று மற்றொரு பெயரும் உண்டு. இது போன்ற தண்டனை முறை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாக இருந்திருக்கிறது. இதை Impalement  என்று சொல்வார்கள். கவுண்ட் விளாட் நிறைய ஆட்களை கழுவேற்றியதால் அவர் விளாட் தி இம்பேளர் (Vlad the Impaler ) என்று அழைக்கபட்டார். அவர் தான் பின்னாளில் டிராகுலாவாக உருமாறினார் என்ற கதைகளும் உள்ளன.

திருஞான சம்பந்தர் அறையணிநல்லூர் ஈசவசுனை வந்த போது, சமணர்கள் கருவறைக்கு முன்னே பாறங்கல்லை வைத்து வழியடைத்தார்கள். வாயிலையும் மூடி அடைத்தார்கள். திருஞான சம்பந்தர் சிவன நினைந்து பாடிய பின், வாயில் திறந்தது. பாறாங்கல் விலகி வழிவிட்டது. அறையணிநாதரை வழங்கி வழிபட்டார். இந்த விவரம் அறிந்த அரசர் சமணர்களை கழுவேற்றச் செய்தார் என்பார்கள். கழுமரம் மணலூர் பேட்டை சாலையில் திருக்கோவிலூரில் இருந்து 8.கி.மீ தூரத்தில் உள்ளது. கழுவன் குளம் கிராமத்திலும், விழுப்புரம் சாலை 1கி.,மீ தொலைவில் உள்ள அங்குதான் இந்நிகழ்ச்சி நடந்ததாகச் சொல்கிறார்கள்.

கழுவேற்றம் நடந்ததா என்பது பற்றி பல விவாதங்கள் நடந்தாலும் இது தொடர்பான ஓவியங்கள் சில கோவில்களில் காணப்படுகின்றன. சாதாரணமாக இறந்தவர்களுக்கு இறுதிச் சடங்குகள் செய்து புதைப்பார்கள். அல்லது எரியூட்டுவார்கள். ஆனால் கழுவிலேற்றப்பட்ட உடல் பறவைகளுக்கும், நாய்களுக்கும், நரிகளுக்குமே இரையாகுமாம்.

தமிழகத்திலுள்ள பல கோயில்களில் கழுவேற்றம் குறித்தான ஓவியங்களும், சிற்பங்களும் காணப்படுகின்றன. கழுவேற்றம் அரசை எதிப்பவர்களுக்கும், கள்ளர்களுக்கும் வழங்கப்படும் தண்டனையாக இருந்து வந்துள்ளது. இராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி அருகே பள்ளபச்சேரி கிராமக் கோயிலில் உள்ள ஐந்து கழுமரங்களில் கழுவேற்றிக் கொல்லப்பட்ட வீரர்களின் நினைவாக இன்றும் வழிபாட்டில் உள்ளது என்கிறார்கள் .

நாட்டார் தெய்வமாக வழிபடப்படும் காத்தவராயன் தொன்மக் கதையில் கழுவேற்றம் குறித்து வருகிறது. இந்நிகழ்வினை குறிக்க ஆண்டுதோறும் காத்தவராயன் கழுவேற்ற விழா நடக்கிறது. மக்களுக்காக போராடிய வீரர்கள் கழுவேற்றப்பட்டால், அவர்களின் உயிர், அந்தக் கழுமரங்களில் உறைந்து, தெய்வத்தன்மை அடைந்து விடும் என, மக்கள் நம்பினர். அதனால், வீரர்களின் கழுமரங்களை, காலங்காலமாக வழிபட்டு வருகின்றனர்.

பொங்கலுடன் ஆட்டுக் குறுதியை கலந்து, உருண்டையாக உருட்டி, புது மண்சட்டியில் இட்டு, அதிகாலையில் கருடனுக்குப் படைக்கின்றனர். இது கழுவேற்றப்பட்டோர், கழுகுக்கு இரையாக்கப்பட்டதன் நினைவேந்தலாக உள்ளது. கழுமரங்கள், மரம் மற்றும் இரும்பால் செய்யப்பட்டிருக்கலாம். அவை காலத்தால் அழிந்த பின், கல்லால் ஆன கழுமரங்கள் செய்யப்பட்டிருக்கலாம். அவ்வாறு செய்த கழுமரங்களில், உயிர்விட்டவரின் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது.

களவு புரியும் போலித் துறவிகளைக் கழுவேற்றுவதை,

“கத்தித் திரிவர் கழுவடி நாய்போல்

கொத்தித் திரிவர் குரக்களி ஞானிகள்”

என்கிறார்  திருமூலர்.

(திருமந்திரம் பாடல் எண் : 1655)

தமிழகத்தில் மட்டுமின்றி, தொன்மையான கிரேக்க, உரோமானிய  நாகரிகங்களிலும் தொன்று தொட்டு இவ்வழமைகள் இருந்திருக்கலாம்.

‘வாதனையின் கழுமரம்’ என்ற சொற்றொடர், இயேசுவுக்குத் தண்டனை அளிக்கப்பட்ட பதிவில் பயன்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.கிரேக்க இலக்கியங்களில், இசுடவரசு என்ற வார்த்தையின் பயன்பாடு குறித்து அறிய முற்பட்டால், அது, குறுக்குச் சட்டம் ஏதும் இல்லாததொரு செங்குத்தான  கம்பம் என்ற பொருளில் வருவதை அறியலாம். இயேசுவை ஆணியால் அறைவதற்குப் பயன்படுத்தப்பட்ட கருவியைக் குறிப்பதற்கு அப்போசுதலர்களான பேதுருவும் பவுலும் சீலோன் என்ற வார்த்தையைப் பயன்படுத்தினார்கள்; இது, எவ்விதக் குறுக்குச் சட்டமும் இல்லாத ஒரே செங்குத்தான கம்பம் என்பதைக் காட்டுகிறது.(அப்போசுதலர் 5:30; 10:39; 13:29; கலாத்தியர் 3:13; 1 பேதுரு 2:24) இலத்தீனத்தில் -கிருக்சு, கிரேக்கத்தில் இசுடவரசு  (மத்தேயு  27:40 – பைபிள்) .

லூயிசு மற்றும் சார்ட் என்பவர்களுடைய இலத்தீன் அகராதி கிருக்சு என்ற வார்த்தைக்கு குற்றவாளிகள் அறையப்படுவதற்கோ தொங்கவிடப்படுவதற்கோ பயன்படுத்தப்படும் ஒரு மரத்தைக் குறிக்கிறது.

நின்றசீர் நெடுமாறன் என்னும் பாண்டிய மன்னன் தனது வெப்புநோய் தீர்த்த திருஞான சம்பந்தரின் சைவ சமயம் தழுவிட, 8000 சமணர்களைக் கழுவேற்றியதாகப் பெரியபுராணம் கூறுகிறது.

“மன்னவன் மாறன் கண்டு மந்திரியாரை நோக்கி

துன்னிய வாதில் ஒட்டி தோற்ற இச்சமணர் தாங்கள்

முன்னமே பிள்ளையார் பால் அனுசி தம்முற்றச் செய்தார்

கொல்நுனைக் கழுவில் ஏற்ற முறை செய்க என்றுகூற”

 

“வேத வேள்வியை நிந்தனை செய்து உழல்

ஆதம் இல்லி அமணொடு தேரரை

வாதில் வென்று அழிக்கத் திரு உள்ளமே?”

என்று சம்பந்தர் தனது மதுரைப் பாடல்களில் கூறுகிறார்.

சைவம், சமணம், வைணவம்,கிறித்துவம், இசுலாமியம், புத்தம் என  அனைத்து மதங்கள் கடந்து வந்த பாதையிலும் இது போன்ற கொடுந்தண்டனைகள் அதன் வழிநெடுக உள்ள இரத்தக் கரைகளே சாட்சிகளாய்ப் படிந்திருக்கின்றன என்பதே நிதர்சனம்.. ஆம்.குற்றங்களுக்கான இதுபோன்ற கொடுமையான தண்டனைகள் அனைத்துலகிலும் வரலாற்றுச் சான்றுகளாக நிற்கின்றன !

முன் காலத்தில் பெருங்குற்றம் புரிந்தவர்களுக்கு,  கழுவில் ஏற்றுதல், கல்லால் எறிந்து கொல்லுதல், வாளினால் தலையைத் துண்டித்தல், கல்லில் கட்டிக் கடலில் எறிதல், யானையால் மிதிக்கவிட்டுக் கொல்லுதல், வெட்டவெளியில் தூக்கில் இட்டு உடலை விலங்குகளுக்கு இரையாக்குதல், அல்லது  உயிருடன் விலங்கிற்கு இறையாக்குதல், உயிருடன் மண்ணிற்குள் புதைத்தல், நஞ்சிட்டுக் கொல்லுதல்,  தீயிட்டுக் கொளுத்துதல் என்று பல வகையில் கொடூரமான தண்டனைகள் வழங்கப்பட்டன.

மனித உரிமைகளைக் காக்கும்பொருட்டு உலக நாடுகள் அனைத்தும், குற்றத்தை இழைத்தவர் என்ற சந்தேகத்தின் பெயரிலோ அல்லது குற்றத்திற்கான தண்டனை விதிக்கப்பட்டவர் என்பதற்காகவோ, “எவரொருவரும் சித்தரவதைக்கோ அல்லது கொடூரமான, மனிதாபிமானமற்ற, கீழ்த்தரமான, சிறுமைப்படுத்தக்கூடிய நடவடிக்கைகளுக்கோ அல்லது தண்டனைகளுக்கோ உட்படுத்தப்படக் கூடாது” என்று  உலக மனித உரிமைப் பிரகடனம் (1948) 5ஆம் விதியாகக் கையெழுத்திட்டுள்ளன. இது பெரும்பாலும் நடைமுறையில் இருந்தாலும், எங்கோ ஒரு சில நாடுகளில் அவரவர்களின் வழமைக்கேற்ப தனிப்பட்ட சட்டங்கள்  அடிப்படையில் பல நூற்றாண்டுகளுக்கு  முற்பட்ட இதுபோன்ற தண்டனை முறைகளையும் இன்றைக்கும்  நடைமுறைப்படுத்தி வருவது வருந்தத்தக்கது..

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.