அமருலகு சென்றுவிட்டார் அவரிசையை அளிப்பதற்கு!

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண், ஆஸ்திரேலியா

வாடாத மல்லிகையாய் ஜானகி வந்தார்
வரமாக வந்தாரே தமிழிசைக்கு அம்மா
தேனான குரலாலே பாடினார் அம்மா
தித்திக்கப் பாடினார் ஜானகி அம்மா

ஊனுருக்க பலபாடல் அவரெமக்குந் தந்தார்
உளம் இனிக்க உணர்வாக அவரீந்துநின்றார்
வாழ்வதனை இசையாக்கி வாழ்ந்தாரே அம்மா
வானவர்க்குப் பாடுதற்குச் சென்றுவிட்டார் அம்மா

கலைவாணி குயிலாய் இருந்தாரே அம்மா
கான சரஸ்வதியாய் ஆகிநின்றார்  அம்மா
பலவிருதை பாராட்டைப் பெற்றாரே அம்மா
பண்பாடி மனமெல்லாம் அமர்ந்தாரே அம்மா

சிங்கார வேலனைத் தொட்டாரே அம்மா
திரையுலகில் சிறகடித்துப் பறந்தாரே அம்மா
அன்னக்கிளி சின்னகண்ணன் அமுதமாய் தந்தார்
செந்தூரப் பூவாகத் திகழுகிறார் இசையில்

பன் மொழியில் பாடினார் ஜானகியம்மா
மென் மொழியில் பாடினார் மேதினியேவியக்க
புன் முறுவல் முகத்தைக் காணமுடியாமல்
இன்னிசையும் இப்போ ஏங்கி அழுகிறதே

ஆயிரக் கணக்கில் அவர்பாடி நின்றார்
அத்தனையும் இசையுலகின் சொத்தாகி இருக்கு
இசையெனும் மொழியை ஏந்திநின்றார் அம்மா
அவரிசையைக் கேட்பதற்கு அழைத்துவிட்டான் இறைவன்

இசையுலகம் அழுகிறது இசைப்பிரியர் அழுகின்றார்
எங்களம்மா ஜானகி இசையாகக் கரைந்துவிட்டார்
அசையாத மனங்களையும் அசைத்திடுவார் இசையாலே
அமருலகு சென்றுவிட்டார் அவரிசையை அளிப்பதற்கு!

Share

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *