Blog

  • ஊர் நூலகம்

    முனைவென்றி நா. சுரேஷ்குமார்,

    வழக்கம்போல் சோம்பல் முறித்து தூக்கத்திலிருந்து எழுந்தான் சுப்பையா. அவனுடைய அப்பா கருப்பன், அம்மா இராக்கு. இவர்கள் இருவருக்கும் ஒரே மகன் சுப்பையா. வீடென்று எதுவுமே இல்லை. குடிசையில் தான் வாழ்க்கை. விவசாயம் தான் இவர்களுக்கு ஒரு வேளையாவது சோறு போடுகிறது. மணியைப் பார்த்தான். மணி ஒன்பதை நெருங்கிக் கொண்டிருந்தது.

    கருப்பன் வெளியிலிருந்து கத்திக்கொண்டிருப்பது அப்போது தான் இவனுக்குக் கேட்டது. ‘பெரிய்ய்ய பள்ளிக்கூடத்துக்கு நேரமாச்சு. இவ்ளோ நேரமா காட்டுக்கத்தாக் கத்திக்கிட்டு இருக்கேன். துரை இப்பதான் எழுந்திருக்கிகளோ” என்றபடி…
    “இதோ கெளம்பிட்டேன் ப்பா” என்றபடி பல்லைத் துலக்கியும் துலக்காமலும் தலை வாரியும் வாராமலும் சட்டையையும் கால்சட்டையையும் மாட்டியும் மாட்டாமலும் விழுந்தடித்துக் கொண்டு குடிசையை விட்டு வெளியே வந்து மிதிவண்டியை மிதிக்க எத்தனித்தான்.

    “சாப்டாமப் போனா வயித்துக்கு என்னத்துக்கு ஆகுறது ராசா” என்றபடி பழைய சாதத்தைக் கட்டியெடுத்து கையிலேந்தியபடி வெளியே வந்தாள் இராக்கு. மகனின் தலையைக் கோதியபடி நெற்றியில் வாஞ்சையோடு முத்தமிட்டாள். சாதத்தைத் தந்துவிட்டு “பள்ளிக்கூடத்துக்கு ஒழுங்கா நேரத்துக்கு கெளம்பணும் ராசா. ஒழுங்காப் படிக்கணும் ராசா” என்றாள்.

    “சரிம்மா” என்றபடி தன்தாய்க்கு ஒரு முத்தத்தைக் கொடுத்துவிட்டு மிதிவண்டியை அழுத்தியபடி சிட்டாய்ப் பறந்தான்.

    மனைவியைப் பார்த்து “இப்டியே உன் மவனைக் கொஞ்சிக்கிட்டே இருந்தன்னா பிள்ளை சோம்பேறியா மாறிருவாண்டி புள்ள” என்றான் கருப்பன்.

    “கண்ணுக்கு இலட்சணமா ஒரே ஒரு புள்ளைய பெத்து வளர்க்குறோம். புள்ள அம்பூட்டுத் தூரத்துல உள்ள பள்ளிக்கூடத்துல போய் படிக்கப் போவுது. சாயுங்காலம் வரும்வரை புள்ளையப் பிரிஞ்சு நான் எப்டி இருக்கப் போறேனோ?” என்றபடி குடிசைக்குள் போனாள் இராக்கு.

    “நல்ல ஆத்தா, நல்ல புள்ள” என்று மனதிற்குள் மகிழ்ந்தவாறு முனகியபடி வயக்காட்டுக்குச் சென்றான்.

    சுப்பையா சற்று காலதாமதமாகவே கல்லூரிக்குள் நுழைந்தான். மிதிவண்டியை நிறுத்திவிட்டு வேகமாக வகுப்பறையை நோக்கி ஓடினான். நல்லவேளை வகுப்பிற்கு ஆசிரியர் இன்னும் வரவில்லை. அவன் இருக்கையில் அமர்ந்தான்.

    சுப்பையா பொதுவாகவே அமைதியான குணம் கொண்டவன். தன் குடும்பச் சூழலையும் தன் தாய்தந்தையர் படும் இன்னல்களையும் அவர்கள் தன்மீது வைத்திருக்கும் பாசத்தையும் நன்கு உணர்ந்தவன். படிப்பில் நல்ல மாணவனாகவும் ஒழுக்கத்தில் சிறந்தவனாகவும் விளங்கினான்.

    பேராசிரியர் உள்ளே நுழைந்தார். அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்தினர். பாடம் நடத்தத் துவங்கினார்.

    அவனும் பாடத்தைக் கவனிக்கத் துவங்கினான்.

    இவனுடைய அமைதியான சுவாபமும் படிப்பில் காட்டும் அக்கறையும் அந்த வகுப்பில் படிக்கும் வசந்தி என்ற பெண்ணுக்கு இவனோடு நட்போடு பழக வேண்டும் என்ற எண்ணத்தைத் தூண்டியது.

    தனக்கு வேண்டிய சந்தேகங்களையெல்லாம் சுப்பையாவிடமே கேட்டுத் தெளிந்தாள் வசந்தி.

    அவனுடைய மென்மையான குணம் அவளுக்கு காதல் உணர்வைத் தூண்டியது. தன்னுடைய காதலைக் காலங்கடத்தாமல் உடனே அவனிடம் தெரியப்படுத்தினாள்.

    சுப்பையா அவளின் காதலைப் புரிந்துகொண்டாலும் தன் குடும்பச்சூழல் கருதி அவளிடம் எதுவும் சொல்லாமல் நகர்ந்தான்.

    கல்லூரி ஓய்வுநேரம் முழுவதையும் அவன் நூலகத்திலேயே செலவழித்தான். பல நல்ல நூல்களையும் எடுத்துப் படித்தான். நூல்கள் படிக்கும் ஆர்வம இவனைத் தொற்றிக் கொண்டது.

    அவன் வசிப்பது ஒரு சிற்றூரில். நூலகம், மருத்துவம் தொடங்கி அனைத்திற்குமே பல மைல் கடந்து நடந்தே வரவேண்டிய சூழல். பேருந்தும் எப்போதாவதுதான்.

    வசந்தி இவனைச் சுற்றிச் சுற்றி வருவதையும் இவன் கவனித்து மிகுந்த வேதனையடைந்தான். அவளை அழைத்துத் தன்னுடைய நிலையை உணர்த்தினான். “உன் காதலை ஏற்றுக்கொண்டேன். ஆனால் காதலிக்கும் சூழலில் நான் இல்லை” என்று சொல்லிவிட்டு அவள் முகம்பார்த்தான். அவளின் முகம் மெல்ல மலரத் துவங்கியது.

    மேலும் அவனே தொடர்ந்தான் “இங்க பாரு வசந்தி. எனக்குன்னு சில முக்கியமான கடமைகள் இருக்கு. நம்ம கல்லூரி நூலகத்துல இருக்கும் பல நூல்கள படிச்சபிறகு தான் என்னுடைய ஊரைப் பத்தியும் ஊர் மக்களைப் பத்தியும் கவனம் செலுத்தத் துவங்கியுருக்கேன். எங்க ஊருக்குத் தேவையான அடிப்படை வசதிகளைச் செய்து தரணும். அதுக்கு முன்னாடி அறிவை வளர்க்கும் ஒரு நூலகத்தை என் ஊரில் நான் கட்டவேண்டும்.” என்று தன் பேச்சை நிறுத்தியபடி அவள் முகம் பார்த்தான். “உன்னைப் போன்றவனைக் காதலித்தது எனக்கு ரொம்பப் பெருமையா இருக்குடா” என்றபடி அவன் தோள்மீது சாய்ந்தாள். “எங்கே வசந்தி தன்னைப் புரிந்துகொள்ளாமல்ப் போய்விடுவாளோ” என்று மனதிற்குள் பதறியபடி இருந்தவனை அவளின் வார்த்தைகள் அவனுக்குள் குதூகலிப்பை ஏற்படுத்தியது. அவனும் அவளை தன்மார்போடு சேர்த்து அணைத்துக் கொண்டான்.

    கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு நல்ல வேலைக்குச் சேர்ந்து சம்பாதிக்க ஆரம்பித்தனர் சுப்பையாவும் வசந்தியும். இருந்தாலும் தன்னுடைய ஊரில் ஒரு நூலகம் கட்டவேண்டும் இன்னும் மருத்துவமனை, பேருந்துகள் என ஊரின், மக்களின் வளர்ச்சிக்குத் தேவையானவற்றைப் பற்றிய சிந்தனை அவனை ஆட்டிப்படைத்தது.

    தன்னுடைய மனநிலையை உடனே மனைவி வசந்தியிடம் பக்குவமாய் எடுத்துச் சொன்னான். அவளும் “உடனே ஊருக்குக் கிளம்புவோம்” என்றபடி இருவரும் அவனின் சிற்றூருக்குப் பயணமானர்.

    நூலகம் கட்டுவதற்கான ஏற்பாடுகளை ஊர்ப்பெரியவர்களிடம் சொல்லி அவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி அரசாங்கத்தின் மூலமாகவும் தன்னுடைய சொந்தச் செலவின்மூலமாகவும் நூலகம் கட்டி முடிக்கப்பட்டது.

    அன்று திறப்பு விழா…

    மாவட்ட ஆட்சியர் உட்பட மற்ற ஊர்ப்பெரியவர்கள் அனைவரின் வேண்டுகோளை ஏற்று சுப்பையாவும் வசந்தியும் நூலகத்தைத் திறந்து வைத்தனர்.

    நூலகம் கம்பீரமாய் அவர்கள் அனைவரையும் வரவேற்றது.

    அந்தக் கூட்டத்தினர் முன்னிலையில் பேச ஆரம்பித்தான் சுப்பையா “நம்முடைய ஊருக்குத் தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தையும் அரசாங்க உதவியோடு முழுவீச்சோடும் செய்யவேண்டும். அதற்காக நான் என் வேலையை விட்டு விட்டு இங்கே வந்து விவசாயம் பார்த்துக் கொண்டு நம்மூர் மக்களுக்கான உதவிகளைச் செய்யப் போகிறேன்” என்றபோது கருப்பனும் இராக்கும் ஊர் மக்களும் ஊரின் மேல் இவ்வளவு மரியாதையையும் பற்றியும் வைத்திருக்கும் அவனை ஆச்சர்யமாகவும் பெருமையாகவும் பார்த்தது.

    அவனும் அவனுடைய மனைவி வசந்தியும் வேலையை இராஜினாமா செய்யக் கிளம்பினர்.

    இவர்கள் நால்வரையும் எதிர்பார்த்து வழிமேல் விழிவைத்துக் காத்துக் கொண்டிருந்தது அவனின் குடிசை.

    Share
  • கருத்தரங்க அழைப்பிதழ்!

     

    மு.பழனியப்பன்

    சிவகங்கை மன்னர் துரைசிங்கம் தமிழாய்வுத்துறையும், சென்னை செம்மொழித்தமிழாய்வு நிறுவனமும் இணைந்து நடத்தும் திருக்குறளில் செவ்வியல் இலக்கிய இலக்கணக் கூறுகள் என்ற தலைப்பிலான கருத்தரங்கம் எதிர்வரும் 19, 20, 21 ஆகிய நாள்களில் நடைபெற உள்ளது. அக்கருத்தரங்கின் நிகழ்வுகள் அழைப்பிதழாகப் பின்வருகிறது. அனைவரும் வருக.

    Share
  • பயணம் !

    பாகம்பிரியாள்

    இதில் ஏறி வெற்றிக் கொள்வது
    எப்படி என்பது இன்று வரை புதிர்தான்!
    எதிர்பாராமல் திறக்கும் முத்தப்பொந்தும்,
    இடை தழுவும் கொடியும் உன்மத்தம் ஏற்றும்.
    கால் வைத்து ஏற ஆங்காங்கே கவிதைப்படிகளும்,
    கண்ணீர் உப்பால் கெட்டித்துப்போன பாறையும் உண்டு.
    அமைதியாய் இருப்பதாய் எண்ணுகையில்
    அதை முறிப்பதற்கே  விழுந்து தெறிக்கும்
    கூரான கோபச் சில்லுகள் எங்கும்.
    கண்ணில் பட்டவரும், காவியங்களும்
    சொன்ன கதையில் மயங்கி ஓர் ஆர்வம்
    கொழுந்து விட்டது மெல்லவே. இதோ
    யவனக் கயிறை பலமாய் பிடித்தபடி
    யுவனும், யுவதியும் தங்கள் பயணத்தை
    ஆரம்பிக்கிறார்கள், காதல் என்னும்
    வழுக்குப் பாறையின் மீது!

    படத்திற்கு நன்றி

    http://www.bigbasin.org/trailssequoia.html

    Share
  • இனி ஒரு பிறவி வேண்டாம்…!

     

     

    பி.தமிழ் முகில் நீலமேகம்

     

    செய்நன்றி தனை மறந்து

    முகத்துக்கு முன் துதியும்

    முதுகுக்குப் பின் மிதியடியும்

    மலிந்து விட்ட சமூகத்தில் –

    இனியும் வேண்டாம் ஒரு பிறவி !!!

     

    பெயரளவில் பெண்ணுரிமை

    என்றுரைத்து விட்டு

    வழக்கமான கடிவாளங்களை

    பொன்னால் பூட்டும் உலகில்

    இனியும் ஒரு பிறவி – வேண்டவே வேண்டாம் !!!

     

    உழைப்பவன் செவ்வனே உழைக்க

    எவனோ ஒருவன் – அட்டையென

    உழைப்பை உறியும் கேடு கெட்டோர் மத்தியில்

    இனியும் வேண்டாம் –

    ஐம்புலன் மூடி வாழும் ஓர் பிறவி !!!

     

    யாமின்றி அணுவும் அசையாது

    என்னால் ஆகிடாதது ஏதுமுண்டோ ? – என்று

    எக்காளச் சிரிப்புதிர்க்கும் இலஞ்சக்

    காட்டேரிகளின் மயான உலகில்

    புல்லாய்க் கூட – வேண்டாம் ஓர் பிறவி !!!

     

    படத்துக்கு நன்றி: http://www.mea.org/advertising/enoughads.html

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் – (36)

    சக்தி சக்திதாசன்

    அன்பினியவர்களே !

    மீண்டுமொருமுறை ஊடகத்துறையின் நடவடிக்கை இங்கிலாந்தில் ஒரு அதிர்வை உண்டாக்கியிருக்கிறது. எது மக்களுக்கு தேவையான செய்தி, எது மக்களின் அன்றாட வாழ்க்கையில் அறிந்து கொள்ள வேண்டிய அவசியமான விடயங்கள் என்பன இப்போது பலவிதமான சர்ச்சைகளுக்குள்ளாக்கப்பட்டிருக்கின்றன.

    கடந்தவாரம்  லார்ட் லெவிசன் (Lord Leveson) என்பவரால் பிரித்தானிய பிரதம மந்திரி அவர்களின் வேண்டுகோளுக்கிணங்கி ஆரம்பிக்கப்பட்ட ஊடகத்துறை மீதான விசாரணைக் கமிஷனின் அறிக்கை வெளியிடப்பட்டது.

    இவ்வறிக்கையில் ஊடகத்துறை குறிப்பாக பத்திரிக்கைத்துறை எழுத்து, கருத்துச் சுதந்திரங்களின் பெயரால் அவர்களது தார்மீகக் கடமைகளின் எல்லையைக் கடந்து விட்டது எனவும், பத்திரிக்கைத் துறையை மீண்டும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு பத்திரிக்கைத் துறையையோ அன்றி அரசியலையோ சாராத சுதந்திரமான நபர்களைக் கொண்ட  பத்திரிக்கைக் கட்டுப்பாட்டுக்குழு ஒன்றை பத்திரிகையாளர்களே நியமித்து அவர்களது பத்திரிக்கை தர்மத்தை நிலைநிறுத்தும் நடவடிக்கையை எடுக்க வேண்டும் எனவும், அக்குழுவின் நியமனத்தை அரசியல் சட்டத்தின் மூலம் உறுதிப்படுத்த வேண்டும் எனவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

    இப்பரிந்துரையை எதுவித மாற்றமுமின்றி நடைமுறைப்படுத்த வேண்டும் என எதிர்க் கட்ச்சியான லேபர் கட்சியும், கூட்டரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் விபரல் டெமகிரட்ஸ் கட்சியும், அதே கூட்டரசாங்கத்தின் பெரும்பான்மையான கன்சர்வேடிவ் கட்சியில் பல முன்னனி உறுப்பினர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.

    இங்கிலாந்தின் பத்திரிக்கைத் துறையினரோ இப்பரிந்துரையின்படி ஒரு தனியான கட்டுப்பாட்டுக் குழுவினரை நியமித்து அதை நடைமுறைப்படுத்துவதில் தமக்கு எதுவித ஆட்சேபணையும் இல்லை ஆனால் அதற்காக எதுவித அரசியல் சட்டங்களும் இயற்றப்படுவதை தமது சுதந்திரத்தைப் பறிக்கும் செயலாகத் தாம் கருதுவதாகக் கூறி எதிர்க்கிறார்கள்.

    இவ்வறிக்கைக்கு ஆணையிட்ட இங்கிலாந்துப் பிரதமரோ இருதலைக் கொள்ளிபோல அல்லாடுகிறார். ஒருபுறம் பத்திரிக்கைத் துறையினரின் அத்து மீறிய நடவடிக்கைக்களினால் பாதிக்கப்பட்ட மக்களும் பெரும்பான்மையான பொது அபிப்பிராயமும் இவ்வறிக்கையின் முழு பிரயோகத்திற்கு சார்பானதாக இருந்தாலும், பத்திரிக்கையினரின் கோபத்திற்கு தானும் தனது கட்சியும் ஆளாகிவிடக்கூடாது என்பதாலோ என்னவோ பத்திரிக்கைத் துறையினரின் சார்பாக கூறப்படும் வாதத்தையே ஆதரிப்பது  போலத்தென்படுகிறது.

    இது இவ்வாறிருக்க சில நாட்களுக்கு முன்னால் நடைபெற்ற ஒரு நிகழ்வின் தாக்கம் ஊடகத்துறையின் மீது மேலும் சேற்றை வாரி இறைத்திருக்கிறது.

    அது என்ன அப்படிப்பட்ட நிகழ்வு என்பதுதானே உங்கள் கேள்வி ?

    சென்றவாரம், ஆரம்ப கர்ப்ப காலத்தில் ஏற்படும் அதீத நிலையான “தொடர் வாந்தி”யினால் பாதிக்கப்பட்ட இபங்கிலாந்து இளவரசர் வில்லியத்தின் மனைவி கேட்டி அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்ததைப் பற்றி முந்தைய கட்டுரையில் குறிப்பிட்டிருந்தேன்.

    அவுஸ்திரேலிய வானொலியைச் சேர்ந்த இருவர் இளவரசி தங்கியிருந்த வைத்தியசாலையைத் தொடர்பு கொண்டு தாம் இங்கிலாந்து மகாராணியரும், இளவர்சர் சார்லஸ் போலும் பேசி இளவரசி கேட்டின் அப்போதைய நிலையைப் பற்றி அறிந்து அதை அவுஸ்திரேலிய வானொலியில் ஒலிபரப்பிவிட்டார்கள்.

    வந்ததுடா பிரச்சனை !

    அந்தத் தொலைபேசி அழைப்பை ஏற்று அதைக் குறிப்பிட்ட இளவரசி தங்கியிருந்த  தாதியிடம் இணைப்பு கொடுத்த தாதிக்கு நேர்ந்த பரிதாபத்தையே குறிப்பிடுகிறேன்.

    ஜசிந்த சல்டான்ஹா என்பவர் இந்தியாவில் மங்களூரில் பிறந்தவர் கணவருடன் மஸ்கட்டில் மருத்துவத் தாதியாகப் பணிபுரிந்து கொண்டிருந்த இவர் குடும்பத்துடன் 9 ஆண்டுகளுக்கு முன்னால் இங்கிலாந்துக்கு புலம் பெயர்ந்தார்.

    இவருக்கு இப்போது பதின்ம வயதுகளில் இரண்டு புத்திரர்கள் உண்டு. கணவர் இங்கிலாந்து தேசிய மருத்துவ சேவையில் கணக்காளராகப் பணியாற்றி வருகிறார்.

    இங்கிலாந்தில் பிரிஸ்டல் எனும் நகரில் வசிக்கிறார்கள். ஜசிந்தா லண்டனில் “கிங் 7வது எட்வார்டு” வைத்தியசாலையில் மருத்துவ தாதியாகப் பணிபுரிந்து கொண்டு இருந்தார்.

    அப்போதுதான் அவரது உயிர்போகும் சம்பவம் நடந்தது. ஆமாம் நான் ஏற்கனவே மேலே குறிப்பிடிருந்தது போல இளவரசி கேட்டி அவர்கள் இந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது அவுஸ்திரேலிய வானொலிகளில் ஒன்றான “2 டேஎப்.எம்” எனும் வானொலியின் அறிவிப்பாளர்களான “மைக்கல் கிறிஸ்டியன்” எனும் ஆண் அறிவிப்பாளரும், “மெல் கிரெக்” எனும் பெண் அறிவிப்பாளரும் இணைந்து தம்மை இங்கிலாந்து மகாராணியார் போலவும், இளவரசர் சார்லஸ் போலவும் பாவனை பண்ணி தொலைபேசி மூலம் இளவரசி கேட்டின் அப்போதைய உடல்நிலை  குறித்த தகவல்களைத் திரட்டுவதற்காக அவ்வைத்தியசாலையைத் தொடர்பு கொண்டபோது அத்தொலைபேசி அழைப்பை ஏற்றவர் இந்த ஜசிந்தா எனும் மருத்துவ தாதி.

    இவ்வறிவிப்பாளர்களின் ஏமாற்றத்தை உண்மையென நம்பி அவர் இந்த இணைப்பை இளவரசி தங்கியிருந்த அறையில் இருக்கும் தாதிக்கு மாற்றியிருக்கிறார் இதை அப்படியே அவுஸ்திரேலிய வானொலியில் மறு ஒலிபரப்புச் செய்திருக்கிறார்கள்.

    விளைவு ……..

    தனது பணியை உயிரினும் மேலாக மதிக்கும் அந்த உன்னத மருத்துவதாதி தான் இங்கிலாந்து அரசகுடும்பத்தின் பாதுகாப்பிற்கே குந்தகம் விளைவித்து விட்டதாக வருந்தி தனது உயிரைப் பறித்துக் கொள்ளும் பரிதாப சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    அவரது கணவரும் , குழந்தைகளும் அதிர்ச்சியால் நிலைகுலைந்துள்ளார்கள். அவரது நண்பர்கள், அவருடன் பணிபுரிந்தவர்கள் சொல்லொணா துயரத்தில் ஆழ்ந்துள்ளார்கள். அந்த வைத்தியசாலை நிர்வாகிகள் இவரைப் போல ஒரு உன்னதமான தாதி தமக்கு இனி கிடைப்பார்களா என்று கவலைப்படுகிறார்கள். இவர் வழிபடும் தேவாலய மதகுருவோ அதீத தெய்வநம்பிக்கை கொண்டவரான இக்கத்தோலிக்கப் பெண்மணியின் துர்பாக்கிய மரண சமபவத்தை எண்ணி கலங்கியுள்ளார்.

    இந்நிகழ்விற்குக் காரணமான இரண்டு அறிவிப்பாளர்களும் கண்ணீருடன் தொலைக்காட்சியில் இப்படியான ஒரு முடிவிற்குத் தாம் காரணமாக அமைந்து விட்டோம் என்பதைத் தம்மால் ஜீரணிக்க முடியாமல் இருக்கிறது என்று கூறியிருக்கிறார்கள்.

    இவ்வானொலி நிலையத்தின் உரிமையாளர்கள் தம்முடைய நடவடிக்கையின் பிரதிபலனாக உயிரிழந்த இப்பெண்ணின் நினைவாஞ்சலியாக சுமார் $500000 அவுஸ்திரேலிய டாலர்களை இக்குடும்பத்தினரின் நல்வாழ்விற்காக நன்கொடையாகக் கொடுத்துள்ளார்கள்.

    சமூகவலைத்தளங்களில் இவ்வானொலி நிலையத்தினர் மீதும் அவறிவிப்பாளர்கள் மீதும் பலவிதமான தாக்குதல்கள் தொடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

    இந்நிலையில் மிகப்பெரிய முக்கியமான ஒரு கேள்விக்கு விடைகாண வேண்டிய நிலைக்கு உலகளாவிய ரீதியில் அனைவரும் தள்ளப்பட்டிருக்கிறோம்.

    எதற்காக இப்படிப்பட்ட நடவடிக்கைகளை தமது நிகழ்ச்சிகளில் அறிவிப்பாளர்கள் புகுத்துகிறார்கள் ? அதை எவ்வாறு அவ்வானொலி நிகழ்ச்சிகளின் கட்டுப்பாட்டாளர்கள் நியாயப்படுத்துகிறார்கள் ?

    பொதுவாக கண்முன்னே தெரியும் விடை தமது வானொலியைப் பிரபல்ய வானொலி ஆக்குவதன் மூலமே அவர்களுக்குக் கிடைக்கும் விளம்பரங்களைக் கூட்டி அதிக பொருளீட்டலாம். பிரபல்யமாவதற்காக தமது நிகழ்வுகளைச் செவிமடுக்கும் நேயர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டி இத்தகைய நிகழ்ச்சி நடவடிக்கைகளை ஆதரித்து முடுக்கி விடுகிறார்கள் .

    கூட்டிக் கழித்துப் பெருக்கி வகுத்துப் பார்த்தால் இவையனைத்தும் நேயர்களாகிய எம்மிடையே தமது வானொலியைப் பிரபல்யப்படுத்தும் நடவடிக்கைதானே !

    அப்படியானல் எமது ரசனை ஏன் இத்தகைய நிகழ்வுகளை நோக்கி ஓடிப்போகிறது ?

    இன்றைய வானொலி ஆகட்டும், தொலைக்காட்சிகளாகட்டும், பத்திரிக்கைச் செய்திகளாகட்டும் அனைத்தும் investigative journalism அதாவது துப்பறியும் நிருபர்களால் வெளிப்படுத்தப்படும் வாழ்க்கை ரகசியங்கள் என்னும் கணிப்பிலேயே தம்மை நியாயப்படுத்திக் கொள்கின்றன.

    இதற்குக் காரணம் என்ன ? காலமாற்றமா? மாரும் காலத்தின் கோலத்தினால் சமுதாய அங்கத்தினர்களாகிய எமது ரசிப்புத் தன்மையில் விழுந்த கீறல்களா?

    இன்றைய சமுதாயத்தில் 24 மணிநேர ஊடகத்தன்மை இரண்டற‌க் கலந்து விட்டது. ஒரு தொலைக்காட்சி சானலையோ அன்றி ஒரு வானொலி அலைவரிசையையோ 24 மணிநேரம் நடத்துவற்கு அவர்களுக்கு நிகழ்ச்சிகள் தேவைப்படுகின்றன அதைத் தொடராக வழங்குவதற்கு அவர்கள் தம்மைப் புதுவிதமான நடவடிக்கைகளுக்குள் புகுத்தி விடுகிறார்கள்.

    ஒரு சமூகத்தை நல்லவழியில் மாற்றியமைப்பதற்கு, ஊழல்கள் களையப்பட்டு நேர்மையான வழியிலான அரசியல், சமூகக் கோட்பாடுகள் நிலைநிறுத்தப்படுவதற்கு இத்தகைய ஆராய்ச்சி ஊடகச் செய்திகள் அவசியமென்பதை மறுக்க முடியாது. ஊடகங்கள் அரசியல் தலையீடு இல்லாமல் சுதந்திரமாக உண்மையான விமர்சனங்களையும் முன்வைக்க வேண்டிய சுதந்திரத்தை உடையதாக அமைய வேண்டும் என்பதும் உண்மையே.

    ஆனால் அதற்கும் ஒரு எல்லை உண்டுதானே ! அந்த எல்லை என்ன என்பதை யார் தீர்மானிப்பது ?

    ஊடகங்களின் சுதந்திரம் எனும் போர்வையில் தனிமனிதர்களின் சுதந்திரத்தைப் பறிக்கும் வகையில் பத்திரிக்கை ஊடகங்கள் நடந்து கொள்வது ஏற்றுக்கொள்ளக்கூடியதா ?

    பத்திரிக்கையின் எழுத்துக் கருத்துச் சுதந்திரங்களுக்கும், தனிமனிதர்களின் சுதந்திரத்திற்கும் உள்ள வேறுபாடே அவற்றிற்கிடையிலான மோதலுக்குக் காரணமாகின்றதா?

    ஆழமான கேள்விகள் . ஆனால் இவையொன்றும் மறைந்த ஜசிந்தாவை எமக்கு மீட்டுத்தரப் போவதில்லை

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

    Share
  • ப்ரைவசி

    பி.தமிழ்முகில் நீலமேகம்

                  ஶ்ரீலஷ்மி, அந்த அப்பார்ட்மென்ட்ற்கு புதிதாய் தன் பிள்ளை மற்றும் கணவர் சுகந்தனுடன் வந்து குடியேறியிருந்தாள். அவளது கணவரது பணி மாற்றல் காரணமாய் மிச்சிகன் மாநிலம் டெட்ராய்ட் நகரத்திலிருந்து, பென்சில்வேனியாவிலிருந்த ஃபோர்ட் வாஷிங்டன் நகரத்திற்கு புதிதாய் வந்திருந்தார்கள். சில நாட்கள் ஹோட்டலில் தங்கி இருந்து அருகிலிருக்கும் அடுக்கு மாடிக் குடியிருப்புகளில் ஏதேனும் காலி மனைகள் இருக்கிறதா என்று பார்த்துக் கொண்டிருந்தார்கள். சுகந்தனின் அலுவலகம் இருக்கும் சாலையிலேயே அவர்களுக்கு அப்பார்ட்மென்ட் கிடைத்தது. அந்த வார இறுதியில் குடியேற முடிவு செய்து அப்பார்ட்மென்டில் ஏதேனும் செப்பனிடும் வேலைகள் இருக்கின்றனவா என்று பார்க்கச் சென்று இருந்தார்கள். அப்போது, அங்கு வசித்து வந்த ஓர் தமிழ்க் குடும்பத்தினரைக் கண்டனர். அவர்கள் தாங்களாகவே வந்து தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டனர். அருகில் ஓர் தமிழ்க் குடும்பம் வசிப்பதை அறிந்த ஶ்ரீலஷ்மிக்கு மிகுந்த மகிழ்ச்சி. நம் தாய்மொழியில் பேசி உறவாடி மகிழ நம் தேசத்தைச் சேர்ந்தவர் அருகில் உள்ளனர் என்று எண்ணி மகிழ்ந்தாள்.

    ஒரு வாரத்திற்குப் பின், அவர்கள் அங்கு குடியேறினர். அவ்வப்போது சந்திக்கும் வேளைகளில், அந்தப் பக்கத்து வீட்டுத் தமிழ்ப் பெண் ஶ்ரீலஷ்மியுடன் நன்றாகவே பேசினாள். அதன் பின் வந்த பண்டிகை நாளொன்றில் இருவருமாய் சேர்ந்து பலகாரம் செய்து பரிமாறிக் கொண்டார்கள். சில நாட்களில், அவர்கட்கு சில நல்ல நண்பர்கள் கிடைத்தனர். அனைவரும் வாரத்திற்கு ஒருமுறை தங்கள் பிள்ளைகளுடன் ஒன்று கூடி பேசி, பிள்ளைகட்கு நண்பர்கள் வட்டத்தினை ஏற்படுத்திக் கொடுத்தனர். அவர்களும், அருகிலிருக்கும் இந்தியக் கடைகள், அங்கு விற்கும் பொருட்களின் தரம், மலிவான விலையில் தரமான பொருட்கள் கிடைக்கும் இடங்கள், அவர்கள் வசிக்கும் இடத்திற்கு அருகில் இருக்கும் கோயில்கள், குடும்பச் சுற்றுலா செல்ல ஏதுவான இடங்கள் போன்றவற்றை எல்லாம் விவாதித்தனர். ஶ்ரீலஷ்மிக்கு ஓர் நல்ல நட்பு வட்டம் பக்கத்து வீட்டுப் பெண்ணின் மூலம் கிட்டியதில் மிக்க மகிழ்ச்சி.

    ஓர் ஊரிலிருந்து வேறு ஊருக்கு மாற்றலாகிப் போகும் போது, அவர்கள் போகும் ஊரில் இருக்கும் நல்ல அப்பார்ட்மெண்ட்கள், அருகில் அத்தியாவசியத் தேவைகட்கான கடைகள், போக்குவரத்து வசதிகள் போன்றவற்றை இணையத்தில் செயல்படும் மன்றங்கள் (forums) வாயிலாக அறிந்து கொள்வது ஶ்ரீலஷ்மியின் வழக்கம். அப்படித்தான் அவள் இம்முறையும், ஃபோர்ட் வாஷிங்டன் நகரத்தினை பற்றி அறிந்து கொள்வதற்காக ஓர் மன்றத்தில், தனது சந்தேகங்களை ஓர் பதிவாகப் போட்டிருந்தாள். அந்த மன்றத்தின் இணைய பக்கத்தில் அவளது பதிவிற்கு வந்திருந்த பதில்களைப் அவ்வப்போது பார்த்துக் கொள்வாள். அவ்வாறு ஒரு சமயம் பார்த்துக் கொண்டிருந்தவள், அந்தப் பக்கத்து வீட்டுப் பெண் அவளது பதிவுகட்கு, பதிலளித்திருப்பதைக் கண்டாள். பக்கத்து வீட்டுப் பெண் அவளுடன் தனது மின்னஞ்சல் முகவரியை பகிர்ந்து கொண்டதினால், ஶ்ரீலஷ்மியால் அவளை அந்த மன்றத்தில் எளிதில் அடையாளம் கண்டு கொள்ள முடிந்தது. அடுத்த முறை சந்தித்த போது, அப்பெண்ணிடம், “எனது கேள்விகட்கு நீங்கள் இணைய மன்றத்தில் பதிலளித்திருந்தீர்கள். மிக்க நன்றி” என்றாள். அதன் பின், ஶ்ரீலஷ்மி அதை மறந்து விட்டாள்.

    சில நாட்கள் சென்றன. ஶ்ரீலஷ்மிக்கு பக்கத்து வீட்டுப் பெண்ணின் போக்கில் மாற்றம் தெரிந்தது. அவள் முன் போல் தன்னிடம் பேசுவதில்லை என்பதை உணர்ந்தாள். அவளது பாராமுகம் ஶ்ரீலஷ்மிக்கு வருத்தமாய் இருந்தது. அவளுக்கு ஏனோ மனதே சரியில்லை. நாம் யாரையும் எந்த விதத்திலும் துன்புறுத்தியதோ, தொந்தரவு செய்ததோ கிடையாதே….நம்மையும் அறியாது அவரை கஷ்டப்படுத்தி விட்டோமோ?? நம்மை அவர்களுக்கு பிடிக்கவில்லையோ?? என்றெல்லாம் மனதைப் போட்டுக் குழப்பிக் கொண்டிருந்தாள் . நேரில் போய்க் கேட்டுவிடலாமா என்று சிந்தித்துக் கொண்டிருந்தாள். அலுவலகத்திலிருக்கும் தன் கணவனைத் தொலைபேசியில் அழைத்து, தன் மனக் குமுறலைக் கொட்டித் தீர்த்தாள்.

    அன்று மாலை, அவர்களது தோழிகளில் ஒருவரை சந்தித்தாள். வழக்கமான விசாரிப்புகள், பேச்சுகளின் போது அவர், “ உங்களது பக்கத்து வீட்டுப் பெண், நீங்கள் அவரது ப்ரைவசியில் தலையிடுவதாக குறைபட்டுக் கொள்கிறாரே. நீங்கள் இணைய மன்றத்தில் அவரது பதிவுகளை எல்லாம் தேடித் தேடி படிப்பதாகவும் குறை கூறுகிறாரே. என்ன நடந்தது? “ என்றார். அப்போது தான் ஶ்ரீலஷ்மிக்கு என்ன  நடந்திருக்கும் என்பது புரிந்தது. சிரித்துக் கொண்டாள். அவரிடம், “ அவர் இணைய மன்றமொன்றில் இங்கு இருக்கும் இந்தியக் கடை பற்றியும், அங்கு பொருட்களின் தரம் பற்றியும் பதிவிட்டிருந்தார். அதை பார்த்ததாக அவரிடம் கூறினேன்.அதைத் தான் அவர், அவரது ப்ரைவசியில் நான் தலையிடுவதாக உங்களிடம் கூறியிருக்கிறார்.சாதாரண விஷயத்தை பெரிது படுத்துகிறார்” என்றாள் ஶ்ரீலஷ்மி. “ஓ…இதுதானா விஷயம்.இதிலென்ன இருக்கிறது?” என்று சிரித்தார் அந்த தோழி. பக்கத்து வீட்டுப் பெண்ணின் பாராமுகத்திற்கான காரணத்தை உணர்ந்து கொண்ட ஶ்ரீலஷ்மி மனதினுள் சிரித்துக் கொண்டாள். இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டாள்.

    Share
  • வால்ட் விட்மன் வசன கவிதை -2 மௌனத்தில் ஆழ்ந்த சிந்தனை

                                                                                                                        (1819-1892)

                                                                                                              (புல்லின் இலைகள் -1)

                                                                                              மௌனத்தில் ஆழ்ந்த  சிந்தனை

                                                                                                       மூலம் : வால்ட் விட்மன்

                                                                                 தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா

    வால்ட் விட்மன் வாழ்க்கை வரலாறு:

    அமெரிக்காவின் உன்னதக் கவிஞருள் ஒருவரான வால்டயர் விட்மன்1819 ஆம் ஆண்டில் வெஸ்ட் ஹில்ஸ், லாங் ஐலண்டு, நியூயார்க்கில் பிறந்தார். தனது 12 வயது வரை புரூக்லினில் வசித்து வந்தார். அவர் 11 வயதினராய் உள்ளபோது வீட்டில் வருவாயின்றி வேலை செய்து பணம் சம்பாதிக்கப் பள்ளி யிலிருந்து தந்தையால் நிறுத்தப் பட்டார். ஆகவே அவர் சிறு வயதிலேயே ஓர் அச்சகத்தில் பணிசெய்ய வேண்டிதாயிற்று. பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு நாளிதழ்களுக்கு எழுதியும், அவற்றுக்குப் பிறகு தொகுக்கும் ஆசிரியராகவும் பணியாற்றினார். அவரது 17 வயதில் பள்ளி ஆசிரியராகச் சில காலம் வேலை செய்தார். 27 ஆவது வயதில் புரூக்லின் தின இதழின் ஆசிரியரானார். புரட்சிகரமான அவரது கவிதைப் படைப்புகள் மிகவும் தனித்துவ முறையில் பாலுறவு உட்பட ஆவேச உணர்ச்சியில் எழுதப் பட்டவை. அவர் அமெரிக்கக் குடியாட்சியை பேரளவு மதிப்புடன் கொண்டாடியவர். படைப்புகளில் குறிப்பாக அவர் முதலில் வெளியிட்ட சிறிய கவிதைத் தொகுப்பு “புல்லின் இலைகள்” [Leaves of Grass] அவராலே பன்முறைத் திருத்தமாகிப் பின்னால் விரிவு செய்யப் பட்டது.

    வால்ட் விட்மன் தனது கவிதைகளில் ஒளிமறைவின்றி எதையும் வெளிப்படையாக வெளியிட்டதால், அவரது படைப்புகள் ஆபாசமானவை, வெறுக்கத் தக்கவை என்று முதலில் பலரால் ஒதுக்கப் பட்டன ! அவரது கவிதைகள் அனைத்தும் எதுகை, மோனைத் தளை அசையின்றி இலக்கண விதிக்கு அப்பாற்பட்ட வசன நடைக் கவிதைகளாய்[Free Verse] எழுதப் பட்டவை. அவரது கவிதைகளை உயர்வாகப் பாராட்டி யவருள் ஒருவர் கவிஞர் எமர்ஸன் [Ralph Waldo Emerson]. 1855 இல் 12 பாடல்களுடன் முதற்பதிப்பு “புல்லின் இலைகள்” புத்தகத்தை வெளியிட்டார். பின்னால் அது 300 கவிதைகளுடன் விரிவானது. அதற்கு ஆரம்பத்தில் அமெரிக்கர் ஆதரவு கிடைக்க வில்லை.

    1848 இல் வால்ட் விட்மன் நியூயார்க்கிலிருந்து நியூ ஆர்லியன்ஸ் சென்றார். அவர் அங்கேதான் முதன் முதலில் அடிமைகள் நடுத்தெருவில் ஏலம் விடப்படும் அருவருப்பு வாணிபத்தையும்,அடிமைக் கறுப்பர் படும் கொடுமைகளையும் கண்டு மனவேதனை அடைந்தார். ஆர்வமாய்ப் படிக்கும் வேட்கை மிகுந்த வால்ட் விட்மன் 1848 இல் தனது சொந்தச் செய்தித்தாள் “உரிமைப் பூமி“ [Free Soil] என்பதை வெளியிட்டு அதற்கு அதிபதி ஆனார். மின்சார உடல் பற்றி என் பாடல் [I Sing the Body Electric] & என்னைப் பற்றிய எனது பாடல்[Song of Myself] ஆகிய இரண்டு நூல்களும் மனித உடம்பைப் பற்றியும், உடல் நலம், பாலுறவு பற்றியும் எழுதப் பட்டவை.

    தென்னக மாநிலங்களில் கொடுமைப் படுத்தப்படும் அடிமைகளை விடுவிக்க ஆப்ரஹான் லிங்கன் கடுமை யான போர் நடவடிக்கை எடுக்க வேண்டியதாயிற்று. அதுவே சகிக்க முடியாத “சிவில் போர்” [Civil War] எனப்படும் உள்நாட்டுப் போரானது. அரசாங்க ஐக்கியப் படைக்கும், “கூட்டு மாநிலங்கள்” என்னும் கன்ஃபெடரேஷன் படைக்கும் யுத்தம் உண்டானது. இறுதியில் இருபுறமும் சமப்போர் புரிந்து, உயிரிழந்தோர் எண்ணிக்கை 6 30,000 மேற்பட்டது. அப்போது ஐக்கியப் படைகளுடன் போர் புரிந்த வால்ட் விட்மன் சகோதரன் ஜார்ஜ் விட்மன் காய முற்றதால் அவரைக் குணப்படுத்த வால்டயர் வாஷிங்டன். D.C.. வர வேண்டியதாயிற்று. அவர் சுயப்பணி யாளராய்ச் சேர்ந்து காயமுற்ற சுமார் 100,000 நபர்களுக்கு உதவும் வாய்ப்பு கிடைத்தது. வாஷிங்டன் D.C., மருத்துவ மனைக்கு பணிபுரிய வால்ட் விட்மன் 600 தடவை வந்ததாக அறியப் படுகிறது.

    சிவில் போர் வெற்றியில் முடிந்து, ஆப்ரஹாம் லிங்கன் இரண்டாம் முறையாக நின்று, ஜனாதிபதி தேர்வு வெற்றி பெற்ற விழாவில் வால்ட் விட்மன் கலந்து கொண்டவர் என்று அறியப் படுகிறது. போர் முடிந்து சட்ட மூலமாக அடிமை வைப்பு முறை அமெரிக்காவில் நீக்கப் பட்டது. போர் நின்ற ஐந்தாம் நாள், அதற்கு ஆப்ரஹாம் லிங்கன் பலியானார். லிங்கன் சுடப்பட்டு மரித்ததைப் பற்றி வால்டர் விட்மன் எழுதிய இரங்கற்பா “ஓ காப்டன், என் காப்டன்” படிப்போரை உணர்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்துவது. 19 ஆம் நூற்றாண்டில் கவிதைப் படைப்புகள் எழுதிய வால்ட் விட்மனுக்கு 20 ஆம் நூற்றாண்டில்தான் அவரது படைப்புகளின் உன்னதம் வெளியாகிப் பரவியது. அவருடைய படைப்புகளின் செல்வாக்கு,மேன்மை புகழ்பெற்ற கவிஞர்கள் பாப்லோ நெரூடா, அல்லன் கின்ஸ்பெர்க், [அமெரிக்கா] ஃபெர்னான்டோ பெஸ்ஸோவா [போர்ச்சுகல்] ஆகியோர் ஆக்கங்களில் தெரிகிறது. வால்ட் விட்மன் கவிதைப் படைப்புகள் சில : அடிமை ஒழிப்புப் போர் பற்றி “டிரம் டாப்ஸ்”, “பீட் பீட் டிரம்ஸ்”, “இரங்கற்பா ஆப்ரஹாம் லிங்கனுக்கு”, குடியாட்சித் திறப்புகள்,” “இந்தியா நோக்கிப் பாதை.” [Drum-Taps, Beat ! Beat ! Drums !” “When Lilacs Last in the Dooryard Boom’d”, Democratic Vistas,” “A Passage to India.”].

    1873 இல் மூளை அடிப்பில் [Stroke] அவர் பாதிக்கப் பட்டு ஒரு பகுதி உடலுறுப்புகள் பயன்படுத்த இயலாது போயின. அதோடு ஒன்பது ஆண்டுகள் காலந் தள்ளி 1892இல் அமெரிக்கக் கவிதை மேதை வால்ட் விட்மன் தனது 73 ஆம் வயதில் காலமானார்.

    +++++++++++++++++++++++++++++

    மௌனத்தில் ஆழ்ந்த  சிந்தனை

    [வால்ட் விட்மன்]

    ஆழ்ந்த மௌன சிந்தனையில்
    மூழ்கித் தீரமாய் நீண்ட கற்பனை
    மீண்டது என் கவிதைகள் மீது !
    மதிப்பில்லா முறையில்
    அகோர வனப்பில்,
    வயதில், வல்லமையில் மாய
    வடிவம் ஒன்று தோன்றும் என்முன் !
    பூர்வ மண்ணின்
    மேன்மைக் கவிஞர்கள்
    விழிகளில் தீப்பொறி போல் எனக்கு
    வழிகாட்டுவார்,
    உன்னதப் பாடல்களை அவரது விரல்
    சுட்டிக் காட்டும் !
    அச்ச மூட்டும் குரல் கேட்கும் :
    என்ன பாடுகிறாய் நீ ?
    உனக்குத் தெரியாதா
    பொறுமை மிக்க பாடகருக்கு
    குறிக்கோள் ஒன்றைத் தவிர
    பிறிதொன் றில்லை என்று ?
    அச்சொல்லே போருக்கு அடிப்படை !
    உருவாக்கும் அதுவே
    உன்னதப் படை வீரர்களை !

    அப்படியே இருக்கட்டும் பிறகு அதைச்
    செப்புவேன்.
    போரைப் பற்றியும் கடிந்து நான்
    நீண்டதாய் பாடுவேன்
    அனைத்தையும் விடப் பெரிதாய் !
    என் நூலில் பதித்திருக்கும்
    போரின் பற்பல வெகுமதி விளைவுகள்
    புற முதுகு காட்டி ஓடல்,
    பின்வாங்கல், முன்னேறல்
    வெற்றித் தளர்ச்சி, வீழ்ச்சி, போரில்
    விட்டுக் கொடுத்தல்,
    [அவற்றில் உறுதியாய் உள்ளேன்]
    உலகப் போர்த் தளங்களில்
    உயிர்காப்பு, உயிரிழப்பு இரண்டும்
    உடலுக்கு நேரும்
    அழிவில்லா ஆத்மா வுக்கு !
    நடை அணியில் வருகிறேன்
    போர்ச் சுலோகம் சொல்லிக் கொண்டு,
    பாராட்டுவேன் மேலாக நான்
    படைவீரரை !

    +++++++++++++

    தகவல்:

    1. The Complete Poems of Walt Whitman , Notes By : Stephen Matterson [2006]

    2. Penguin Classics : Walt Whitman Leaves of Grass Edited By : Malcolm Cowley [First 1855 Edition] [ 1986]

    3. Britannica Concise Encyclopedia [2003]

    4. Encyclopedia Britannica [1978]
    5. http://en.wikipedia.org/wiki/Walt_Whitman[November 19, 2012]

    6. http://jayabarathan.wordpress.com/abraham-lincoln/

    [ஆப்ரஹாம் லிங்கன் நாடகம்]

    ********************

    jayabarat@tnt21.com [S. Jayabarathan (December 12, 2012)

    http://jayabarathan.wordpress.com/

    Share
  • ஊழிற் பெருவலி யாவுள ?

                                                                                                                சி. ஜெயபாரதன், கனடா


    வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
    தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது.

    ஊழிற் பெருவலி யாவுள ? மற்றொன்று
    சூழினும் தான்முந் துறும்.

    இருவேறு உலகத்து இயற்கை; திருவேறு
    தெள்ளியர் ஆதலும் வேறு.

    திருவள்ளுவர்

    “ஓர் ஆப்பத்தைச் சுட்டுத் தின்ன முதலில் ஒரு பிரபஞ்சம் படைக்கப்பட வேண்டும்.”

    கார்ல் சேகன் (விண்வெளி உயிரியல் விஞ்ஞானி)

     

     

    இக்கட்டுரை மதிப்புக்குரிய நண்பர் மலர்மன்னன் சென்ற வாரம் (மார்ச் 6, 2011) திண்ணையில் எழுதிய “விதியை அறிதல்” என்னும் கட்டுரைக்கு மறுப்புரை இல்லை. ஊழ் விதியைப் பற்றி நான் விஞ்ஞான ரீதியாக அறிந்துள்ள சிந்தனையின் பிரதிபலிப்பே இக்கட்டுரையின் சாரம் ! இங்கு நான் ஊழ் என்று குறிப்பிடுவது மனிதனால் கட்டுப்படுத்த முடியாத ஓர் இயற்கைச் சக்தியைக் குறிப்பிடுகிறேன். நமது பிரபஞ்சத்தைப் படைத்துக் கட்டுப் படுத்தும் படைப்பாளியே மனித இயக்கத்தையும், போக்கையும் வழி நடத்தி வருகிறது என்பதுதான் என் கோட்பாடு. அதைக் கடவுள் என்றாலும் ஒன்றுதான். இயற்கை என்றாலும் ஒன்றுதான். பிரபஞ்சப் படைப்பாளி என்றாலும் ஒன்றுதான். ஊழ் விதி என்பது விளைவை மட்டும் காட்டி மனிதர் காணாமல் மறைந்திருக்கும் ஓர் இயற்கை நியதி.

    ஓர் ஆப்பத்தைச் சுட்டுத் தின்ன முதலில் ஒரு பிரபஞ்சம் படைக்கப் பட வேண்டும் என்று விண்வெளி உயிரியல் விஞ்ஞானி கார்ல் சேகன் கூறுகிறார். இந்தப் பிரபஞ்சமும், பேரண்டங்களும், அவற்றில் உதித்த பயிரினமும், உயிரினமும் மந்திர சக்தியால் ஒரு சில நாட்களில் தோன்றியவை அல்ல. பிரபஞ்சப் படைப்பாளி பல யுகங்களாய்த் திட்டமிட்டுச் செய்து தோற்றங்களை மாற்றி மாற்றிச் செம்மைப் படுத்தி உருவாக்கியதுதான் நாம் வாழும் உலகம். பிரபஞ்சம் தோன்றி சுமார் 13.7 பில்லியன் ஆண்டுகள் கடந்து விட்டன வென்று கணிக்கப் பட்டுள்ளது. பூர்வீகத் தாதுக்களின் கதிரியக்க தேய்வின் அரை ஆயுளை வைத்துத்தான் அந்த எண்ணிக்கையைக் கணக்கிட்டி ருக்கிறார். மெய்யாக அது துல்லிய காலக் கணிப்பாகப் பலர் ஏற்றுக் கொண்டாலும், அந்தக் கணக்குக்கு மூல காரணமான தாது உண்டானது எப்போது ? எவற்றிலிருந்து எப்படிச் சேர்ந்து அந்தத் தாது விளைந்தது ? அதன் மூலப் பொருட்கள் தோன்ற எத்தனை யுகங்கள் ஆயின போன்ற கேள்விகள் மேலும் எழுகின்றன. நமது கருத்தாடலுக்குப் பிரபஞ்சத்தின் வயது 13.7 பில்லியன் ஆண்டுகள் என்று வைத்துக் கொள்வோம். அதாவது படிப்படியாக, ஒன்றிலிருந்து இன்னொன்று பிறந்து, சிறிது சிறிதாய்ச் செம்மையாக்கிக் கடவுளே நமது காலவெளிப் பிரபஞ்சத்தைப் படைக்க 13.7 பில்லிய ஆண்டுகள் எடுத்திருக்கிறது. ஆயினும் பூரணம் அடையாத பூமியும் அதில் பூரணம் அடையாத மனிதப் பிறவிகள்தான் இதுவரைத் தோன்றியுள்ளன.

    பிரபஞ்சத்தை ஒரு பிரம்மாண்டமான நூலகமாக ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் நோக்குகிறார். அதன் விண்வெளியில் உள்ள கரும்பிண்டம், கருஞ்சக்தி, கருந்துளைகள், கோடான கோடி காலக்ஸி ஒளிமந்தைகள், பில்லியன் கணக்கான பரிதி மண்டலங்கள், அண்டக் கோள்கள், துணைக் கோள்கள், அவற்றைப் பிணைத்துள்ள ஈர்ப்பு விசைகள், விலக்கு விசைகள் அத்தனையும் நூலகத்தில் முன்னமே எழுதப் பட்டு வரிகையாக அடுக்கப்பட்டுள்ளன ! அந்த நூல்களை யார் எழுதி வைத்தார், எப்போது எழுதி வைத்தார், ஏன் வைத்தார், எப்படி எழுதி வைத்தார் என்பதை அறிந்து கொள்ளவே நான் முனைகிறேன்.

    பிரபஞ்சம் ஓர் உன்னத சக்தியான கடவுளால் படைக்கப் படவில்லை. அது தானாக உருவானது என்று விஞ்ஞானி ஸ்டீஃபன் ஹாக்கிங் கூறுவது முதலில் ஒரு விஞ்ஞான முடிவில்லை. அப்படி மேலாகச் சொல்லித் தப்பிக் கொள்வது ஒரு விஞ்ஞான மேதையின் இயலாமையைத்தான் குறிக்கிறது.

    பிரபஞ்சப் படைப்பாளி ஒரு மந்திரவாதியோ, மாஜிஸியனோ இல்லை. இரசாயனக் கதிர் ஏகமூலங்களின் (Radio Isotopes) அரை ஆயுள் தேய்வு நியதிப்படிப் பிரபஞ்சம் 13.7 பில்லியன் ஆண்டுக்கு முன்னே தோன்றியிருக்க வேண்டும் என்று பல்வேறு விஞ்ஞானிகள் ஏற்றுக் கொண்டுள்ளார். அதாவது படைப்பாளியே இந்தப் பிரபஞ்சத்தின் ஒரு பகுதியை உண்டாக்க 13.7 பில்லியன் ஆண்டுகள் எடுத்திருக்கிறது. இதுவரை விஞ்ஞானிகள் ஒப்புக் கொண்டுள்ள பெரு வெடிப்பு நியதியின் (The Big Bang Theory) ஆரம்பமே ஓர் அனுமான ஊகிப்புதான். மெய்யாக இந்தப் பிரபஞ்சம் எப்படித் தோன்றியது என்று இதுவரை எந்த விஞ்ஞானியாலும் தர்க்கரீதியாக விளக்க முடியவில்லை. எல்லாம் மாறி, மாறிப்போகும் விஞ்ஞானத்தின் வெறும் அனுமான ஊகிப்புகள்தான். விஞ்ஞானம் பிரபஞ்ச ஆதி அந்தங்களை ஆராய முடியாது இடைப்பட்ட நிகழ்ச்சிகளுக்கு மட்டும் விளக்கம் அளிக்கிறது.

    காரண-விளைவு நியதியைத் (Cause & Effect Theory) தர்க்க ரீதியாக ஒப்புக் கொள்ளும் உலக விஞ்ஞானிகள், பிரபஞ்சம் தானாக உருவானது, தானாக இயங்குவது, தானாக மாறுவது என்று ஆதாரமின்றிக் கூறுவதை நாம் ஏற்றுக் கொள்ள முடியாது.

    விஞ்ஞானிகள் இதுவரை உயிர் என்றால் என்ன என்று விஞ்ஞான விளக்கம் தர முடிய வில்லை. எந்த இரசாயன மூலகங்களோ, மூலக்கூறுகளோ உயிரை உண்டாக்குவதில்லை. ஆங்கிலத்தில் உயிர் என்பதற்கு ஒரு தனிச்சொல் கூடக் கிடையாது. உயிர், ஆத்மா இரண்டு மட்டுமே மனிதனுக்கும் படைப்பாளிக்கும் உள்ள இணைப்பைக் காட்டுபவை.

    இந்தப் பிரபஞ்சத்தின் உள்ளே இயங்கிவரும் காலக்ஸி ஒளிமந்தைகள், அவற்றில் உள்ள விண்மீண்கள், அண்டக் கோள்கள், கருந்துளைகள், கருஞ்சக்தி, கரும் பிண்டம், பூமியில் உள்ள பயிரினங்கள், உயிரினங்கள் அனைத்தும் ஒன்றிலிருந்து ஒன்றாய், அடுத்தடுத்துச் சங்கிலித் தொடர்பில் பிறந்தவை. அதாவது அவை யாவும் இயற்கை விதியான “காரண-விளைவு நியதியைப்” (Cause & Effect Theory) பின்பற்றித் தோன்றியவை. தற்போதைய நவீனக் கணினி மேற் பார்க்கும் மோட்டார் வாகனம் விருத்தியாகச் சுமார் 100 ஆண்டுகள் எடுத்துள்ளன. எலும்புக் கூடு போன்று ஹென்றி ஃபோர்டு செய்த முதல் கார் எத்தனை முறை மாற்றம் அடைந்து செம்மையாகி மாறி யுள்ளது ? ரைட் சகோதரர் முதன்முதல் செய்த சைக்கிள் உறுப்புகளில் உருவான வான ஊர்தி 100 ஆண்டுகளில் சந்திரனுக்குச் செல்லும் ராக்கெட்டாய், சூரிய மண்டலத்தைத் தாண்டிய முதல் வாயேஜர் விண்கப்பலாய் முன்னேறியுள்ளது. கணினி மின்கருவி எத்தனை ஆண்டுகள், எத்தனை முறைகள் சீராகி நவீன வல்லமை மிக்க கணினியாக உருவாகி உள்ளது ? சார்லஸ் டார்வின் அறிவித்த மனித உயிரின விருத்திக் கோட்பாடு இயற்கை முறையில் எத்தனை தரம் உருமாறிச் செயல் மாறிச் சீராகித் தற்போதைய ஆறறிவு படைத்த மனிதனாய் உலவி வருகிறது ?

    உலகில் நிகழும் வினைகள் அனைத்தும் இரண்டு முறைப்பாட்டில் நேர்கின்றன. ஒன்று இயற்கை நிகழ்ச்சி : இரவு பகல் சுழற்சி. பருவக் காலச் சுழற்சி, இடி மழை வெள்ளம், புயல், சுனாமி, பூகம்பம், எரிமலை போன்றவை யுகயுகமாய் நேரும் இயற்கையின் திருவிளை யாடல்கள் ! அதே சமயம் முதல் உலகப் போர், இரண்டாம் உலகப் போர், ஜப்பான் அணுகுண்டு வீச்சுகள், ஆறு மில்லியன் யூதரைக் கொன்ற கோலோஹாஸ்ட் கொடூரம், ஈராக் படை யெடுப்பு, சமீபத்தில் நிகழ்ந்த ஈழப் போர் ஆகிய அனைத்தும் ஆக்கிரமிப்பு மனிதரால் உண்டாக்கப் பட்டவை. அதாவது இயற்கை செய்வதை மனிதர் செய்ய முடியாது. மனிதர் செய்வதில் இயற்கை ஈடுபடாது, தலையிடாது, தடுக்கவும் செய்யாது ! ஒரு சிலர் ஹிட்லராய் உருவா கிறார். ஒரு சிலர் அன்னை தெரேஸாவாகவும், ஆல்பர்ட் சுவைட்ஸராகவும் உருவாகிறார். அவற்றுக்குக் காரணம் என்ன ? சில மோட்டர் வாகனங்கள் மெதுவாகத்தான் ஓடுகின்றன ! சில வாகனஙள் வேகமாகச் செல்கின்றன. சில வாகனங்கள் அதி வேகத்தில் பந்தயக் கார்களாய்ப் போட்டி இடுகின்றன ! காரணம் அந்த மாதிரி வாகனங்கள் அத்தகைய பணிக்காகத் தயாரிக்கப் படுகின்றன. அதே காரணம் தான் பல்வேறு மனிதப் படைப்புக்கும் ஒத்து வருகிறது.

    படைப்புக்கு ஓர் உதாரண மாடல் : கருப்பையில் உருவாகும் சிசுவுக்குத் தாய் காரணமாகிறாள். பிறந்த பிறகே சிசு தானாக விருத்தி அடைகிறது. அதுபோல் தானாக உருவாகும் பிரபஞ்சம் முதலில் ஒரு படைப்பாளியின் கைத்திறனால் தோன்றி உதயமானது.

    மனித இயக்கத்தை ஓரளவு Y = MX + C (M என்பது மனிதனின் தனித்துவம்) (C என்பது மனிதனின் நிலைத்துவம்) (Y & X கால/வயது மாறுபாடுகள்) என்னும் ஓர் எளியச் சமன்பாட்டில் காட்டலாம். ஒரு சந்தர்ப்பத்தில் மனிதனின் இயக்கம் அவனது அப்போதுள்ள தனித்துவ & மனித நிலைப் பாடுகளால் நிர்ணயம் ஆகிறது. ஒரு மனிதன் 707 ஜெட் விமானத்தில் பயணம் செய்யும் போது அவன் விதி விமானியின் கையிலும், விமானத்தின் இயக்கத்திலும் சார்ந்துள்ளது. விமானத்தில் பழுது ஏற்பட்டாலோ அல்லது விமானி தவறு செய்தாலோ விமானப் போக்கு மாறிப் பயணிகள் பூமியின் ஈர்ப்பாற்றலுக்குப் பலியாவார். கடலருகில் மனிதன் உலாவச் செல்லும் போது அவன் விதி சுனாமி போன்ற எதிர்பாராத இயற்கைத் தாக்குதலில் சிக்கிக் கொள்ள ஏதுவாகிறது, இடி மின்னலில் நடக்கும் போது மின்னலின் தாக்குதலில் மனிதன் அடிபட்டு விதி மாறி உடனே உயிர் போகலாம். அதாவது பூமியில் வாழும் மனிதன் சதா காலமும் பூகோள விதியின் கைப் பொம்மையே தவிர பூரண விடுதலைப் பிறவி இல்லை.

    மனிதன் குறிப்பிட்ட ஊழ்விதி வேலிக்குள் தனித்தியங்கும் ஓர் உயிரியல் சுய யந்திரம் ! ஒவ்வொரு மனிதனுக்கும் இடப்பட்டுள்ள தனித்துவத்துக்கு அவனது ஊழ்விதியே காரணம் ! தாய் தந்தையரின் வெறும் டியென்ஏ (DNA) மட்டும் சேயின் தனித்துவத்துக்குக் காரணம் கூற இயலாது. ஒரு தாயிக்குப் பிறக்கும் இரட்டைக் குழந்தைகளின் டியென்ஏ 100% ஒருமையில் இருப்பதில்லை. அவையும் ஓரளவு வெவ்வேறாகத் தனித்துவம் கொண்டுள்ளன. ஒரு சில கணினிகளை இன்னும் இயக்கி வருவது விண்டோஸ் 98 இயக்க ஏற்பாடு (Operating System), அல்லது விண்டோஸ் 2000, அல்லது விண்டோஸ் NT, தற்போது விண்டோஸ் XP, விண்டோஸ் Vista, விண்டோஸ் 7 இயக்கு ஏற்பாடுகளாகக் கணினியில் இடப்பட்டுள்ளன. மனிதனின் அனுதினப் பழக்கமும், தனித்துவ இயக்கமும் அவனது மூளை நினைவுக் களஞ்சியத்தில் (Brain Memory Units) ஆரம்பத்திலோ அல்லது அதற்குப் பிறகோ நிரப்பப்பட்டுள்ள நிகழ்ச்சிகளைப் பொருத்தவை. கணினி தினம் எழுப்பப் படுவது போல் காலையில் மனிதன் விழிக்கும் போது அவனை மீண்டும் சுய இயக்க மனிதனாய் ஆக்குவது அவனது நினைவுக் களஞ்சிய நிரப்புகளே ! நினைவுக் களஞ்சியத்தில் நினைவுகள் அழிந்து போனால் மனிதன் தான் யார் என்பதே மறந்து போய் மயக்க நிலைக்கு (Coma) வந்து விடுகிறது.

    மனிதன் பிறக்கும் போதே அவனது தலையில் “கணினித் தாய்மைப் பீடம் (Computer Mother Board), மூளை இயக்கி (CPU -Central Processing Unit) நினைவுத் தகுதி (Memory Capacity), இயக்க ஏற்பாடு (Operating System Like Windows XP, Vista or Window : 7) என்ன வென்று இயற்கை அல்லது ஊழ் விதி தேர்ந்தெடுத்துப் பதிவாக்கி விடுகிறது என்பது என் கருத்து. பிறந்த பிறகு மனிதன் அவற்றை ஓரளவு மேம்பாடு (Upgrade) செய்து கொள்ள அவனுக்குத் திறமை அளிக்கப் பட்டிருக்கிறது. ஆனால் மனிதனால் தனக்குப் பிறவியிலேயே இடப்பட்டுள்ள தாய்மைப் பீடம், மூளை இயக்கி, நினைவுக் களஞ்சியத்தைப் (Mother Board, CPU, Memory Units) பின்னால் அவனாலோ அல்லது எவனாலோ மாற்ற இயலாது ! இயக்க ஏற்பாடு (Operating System) மாறலாம் ! ஆதலால் மனிதன் ஊழ் விதியின் கைப்பிள்ளைதான் ! ஊழ்விதியின் தீராத ஒரு விளையாட்டுப் பிள்ளைதான்.

    கடவுளை அதன் படைப்புகளில் ஒன்றான புவி மனிதன் கண்ணால் காண முடியாது.

    எப்படி அதை விளக்குவது ?

    வயிற்றில் தொப்புள் கொடியுடன் பின்னி வளரும் குட்டி யானை தன் தாயைக் காண முடியாது. வயிற்றிலிருந்து வெளிவந்த பின்னே குட்டி தாய் யானையைக் காண்கிறது. ஆதலால் பிரபஞ்சத்தில் அடைபட்டுப் போன மனிதன் இயற்கையின் தொப்புள் கொடி இணைப்பில் வாழ்கிறான்; மாள்கிறான்.

    அதுபோல் மனிதன் பிரபஞ்சப் படைப்பாளியைக் காண வேண்டு மென்றால் இயற்கையின் தொப்புள் கொடி அறுத்து பிரபஞ்சத்தை விட்டு வெளியேற வேண்டும்.

    கடவுளைப் பற்றிச் சொல்லவேண்டுமானால் அதன் படைப்புகள் மூலந்தான் நாம் விளக்க முடியும்.

    1. தெரிந்தவற்றை வைத்து தெரியாதவற்றை விளக்குவோம்.

    2. தெரியாவற்றை யூகித்து தெரிந்தவற்றை மேம்படுத்து வோம்.

    இருவேறு உலகத்து இயற்கை; திருவேறு
    தெள்ளியர் ஆதலும் வேறு.

    இருவேறு உலகம் என்பவை ஆன்மீக உலகம், உலோகாயுத உலகம். சித்தாந்த ஞான உலகத்தின் இயற்கை விதிகள் வேறு. பௌதீக-ரசாயன உலகத்தின் இயற்கை நியதிகள் வேறு. திரு என்பது உலோகாயுதச் சொத்துக்கள். தெள்ளியர் என்பது ஆன்மீக ஞானிகள்.

    உயிர் என்பது என்ன, உயிரினத்தை இயக்கும் ஆத்மா என்பது என்ன வென்று விஞ்ஞானம் இதுவரை விளக்க முடிய வில்லை. உயிர் என்பது எவ்வித இரசாயன மூலக்கூறுகளாலும் ஆக்கப்பட்ட தில்லை என்பது என் கருத்து. ஆத்மா ஓர் இயக்க சக்தி. ஆத்மா எந்த வாகனத்தில் (Car, Rail, Ship, Plane, Rocket or Man, Woman or Animals) நுழைகிறதோ அந்த வாகனத்தின் சாதனங்கள் ஆத்மாவின் இயக்க முறைக்கு வரையறையும், எல்லையும் வகுக்கிறது. ஊர்ந்து செல்லும் இலைப்புழு ஏன், எப்படிப் பறந்து செல்லும் பட்டாம்பூச்சியாய் மாறிச் செல்கிறது ? வகுத்தான் வகுத்த விதி முறைப்படி நிகழும் ஒரு காட்சி இது. இப்படி செய்வது எது ? இது ஏன் நேர்கிறது ? இதுபோல் முட்டைக்குள் உருவாகும் குஞ்சுக்கு உயிர் எப்படி நுழைகிறது ? சிசு பிறக்கும் போது தாய்க் கருவில் உயிர் அதற்கு எப்படி நுழைகிறது ? மனிதன் இறந்த பிறகு போது உயிர் எங்கே போகிறது ?

    300 பேர் அமர்ந்து பறக்கும் ஆயிரக் கணக்கான ஜெட் விமானங்களைப் படைத்த மனிதனால் ஒரு பட்டுப் பூச்சியை, மினிமினியை உண்டாக்க முடியுமா ?

    மனிதனால் பூமியின் ஈர்ப்புச் சக்தியைக் காணமுடியுமா ?

    குரங்கிலிருந்து மனிதன் பிறந்தான் என்பது மெய்யானால், ஏனிப்போது அப்படிப் பிறப்ப தில்லை ? நிகழ்வதில்லை ? மனிதக் குரங்கு எப்படி ஆறறிவு படைத்த மனிதப் பிறவியாய் மாறியது ?

    நம் கண்முன் ஊர்ந்திடும் இலைப்புழு பறந்திடும் பட்டாம் பூச்சியாய் ஏன், எப்படி மாறுகிறது ?

    இந்த வினாக்களுக்கு விடை எவருக்கும் தெரியாமல் இவை இன்னும் மர்மமாகவும் புதிராகவும் இருந்து வருகின்றன.

     

    +++++++++++++

    தகவல்:

    1. http://ogcwebb.hubpages.com/hub/WHAT-IS-DESTINY-SHOULD-WE-BELIEVE-IN-FATE-ARE-OUR-DOINGS-LEADING-US-TO-OUR-DESTINY-OR-WHAT-WE-DO-IS-AS-PER-OUR_1

    +++++++++++++

    S. Jayabarathan (jayabarat@tnt21.com) மே 21, 2012 [R-3]

    Share
  • விஷ்ணுபுரம் விருது 2012

    அன்புடையீர்!


    வணக்கம்; தமிழின் மூத்த படைப்பாளுமைகளைக் கவுரவிக்கும் பொருட்டு ‘விஷ்ணுபுரம் விருதுகள்’ கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தின் சார்பில் வழங்கப்படும் இந்த விருது பாராட்டு கேடயமும், ரூ.50,000/- ரொக்கப் பணமும் உள்ளடக்கியது.

    2010-ஆம் ஆண்டு இவ்விருது எழுத்தாளர் ஆ. மாதவன் அவர்களுக்கும், 2011-ஆம் ஆண்டிற்கான விருது எழுத்தாளர் பூமணி அவர்களுக்கும் வழங்கப்பட்டது.

    2012-ஆம் ஆண்டிற்கான விருது கவிஞர் தேவதேவனுக்கு வழங்கப்பட இருக்கிறது. டிசம்பர் 22-ஆம் தேதி கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கத்தில் இசைஞானி இளையராஜா அவர்களின் முன்னிலையில் விழா நடைபெற இருக்கிறது.

    விழாவில் நாஞ்சில் நாடன், கல்பற்றா நாராயணன், ஜெயமோகன், விமர்சகர் மோகனரங்கன், இயக்குனர் சுகா, ராஜகோபாலன் உள்ளிட்ட பிரபல எழுத்தாளர்கள் கலந்துகொண்டு தேவதேவனை வாழ்த்த இருக்கிறார்கள்.

    விழா அழைப்பிதழை இத்துடன் இணைத்துள்ளோம். தாங்கள் வருகை தந்து விழாவினைச் சிறப்பிப்பதோடு, விழா குறித்த செய்தியினை தங்களது வலைதளம் / முகநூல் – ஆகியவற்றில் வெளியிடச் செய்து உதவுமாறு தங்களைக் கேட்டுக்கொள்கிறோம்.

    நன்றி.

    மிக்க அன்புடன்,

    செல்வேந்திரன்
    விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்
    900 393 1234

    Share
  • உயர்திரு மறவன்புலவு க. சச்சிதானந்தன் அவர்களுக்கு மதிப்புறு முனைவர் பட்டம்!

    1. மறவன்புலவு க. சச்சிதானந்தன்
    2. இந்தியன் ஓவர்சீஸ் வங்கித் தலைவர்

    ஆகிய  இருவருக்கும் 23. 12. 12 இல்  கோயம்புத்தூர் கற்பகம் பல்கலைக்கழகம் பட்டமளிப்பு விழாவில் 2000 மாணவர் பட்டம் பெறும் நாளில் மதிப்புறு முனைவர் பட்டத்தை வழங்குகிறது

    Share
  • அவசரப் புத்தி

    முகில் தினகரன்

    நரசிம்மன் சொன்ன அந்த தகவல் திவாகரனை லேசாக அதிரச் செய்தாலும், அதை வெளிக் காட்டி கொள்ளாமல் வெகு இயல்பாக பேசி விட்டுக் கிளம்பினான்.

    பஸ்சில் வரும் போது கூட நரசிம்மன் பேசிய வார்த்தைகளே திரும்ப திரும்ப ஞாபகத்தில் வந்து போயின. “ஹல்லோ மிஸ்டர் திவாகரன்…எப்படி இருக்கீங்க?…ம்…உங்களுக்கென்ன?…மனைவி பெரிய கம்பெனில மேனேஜர் ஆயிட்டாங்க!…பதினஞ்சாயிரம் சம்பளம் வரும்!…நாங்களும் அந்தக் கம்பெனிலதான் வேலை பார்க்கறோம்…என்ன பிரயொஜனம்?…நானூறு ரூபா இன்கிரிமெண்ட் வாங்கறதுக்குள்ள நாக்குத் தள்ளிடுது…உங்க மனைவிக்கு..ஒரே ஹைக்குலே ஏழாயிரத்துக்கும் மேல இன்கிரீஸ்…ஹும் நீங்க பெரிய அதிர்ஷ்டசாலி சார்!…பின்னெ..சும்மாவா சொன்னாங்க..மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்னு!”

    “என்னது…சுமதி மேனேஜராயிட்டாளா?…சம்பளம் பதினைஞ்சாயிரமா?…என்கிட்ட சொல்லவேயில்லையே அவள்!” வாய் வரை வந்து விட்ட வார்த்தைகளை தொண்டைக் குழியிலேயே அழுத்திப் புதைத்து விட்டு, சிறிது நேரம் வேறு எதேதோ விஷயங்களை பேசி விட்டு, இறுதியாக கிளம்பும் போது நாசூக்காக கேட்டுத் தெரிந்து கொண்டான், சுமதி மேனேஜராகி ஆறு மாதங்களாகி விட்டதென்று.

     

    “சம்பளம் பதினைந்தாயிரம்னு இந்த நரசிம்மன் சொல்றான் ஆனா ஆறு மாசமா சுமதி என்கிட்டே வெறும் எட்டாயிரம் மட்டும்தானே கொடுக்கறா..மீதி ஏழாயிரம் என்னாச்சு?…எங்க போச்சு?” மண்டைக்குள் சிந்தனைச் சிலந்தி தாறுமாறாக எண்ணக்கூடு கட்ட, குழப்பமானான்.

    அந்தக் குழப்பம் சிறிது நேரத்தில் சந்தேகமாக நிறம் மாற, “ஒரு வேளை..அவ அம்மா வீட்டுக்கு அனுப்பிடறாளா?…இல்லை ஏதாவது கள்ளக் காதல்…கீதல்…! சேச்சே!…சுமதி அப்படிப் பட்டவளல்ல!” மனதில் ஆழத்திலிருந்து ஒரு குரல் சுமதிக்கு ஆதரவாக பேசியது.

    “அப்படின்னா…புரமொஷன் கிடைச்சதையும்….சம்பளம் உயர்ந்ததையும் ஆறு மாசமா ஏன் மறைக்கணும்?..” மனதின் வேறொரு மூலையிலிருந்து இன்னொரு குரல் சுமதிக்கு எதிராக கூவியது.

    “அய்யோ என்னை இப்படி குழப்பத்தில் ஆழ்த்திட்டாளே…ஒவ்வொரு மாசமும்…சம்பள தினத்தன்னிக்கு ரெண்டு பேரும் ஒண்ணா உக்காந்து அவ சம்பளத்தையும் என் சம்பளத்தையும் ஒண்ணா சேர்த்து கூட்டி அந்த மாசத்துக்கான் செலவு பட்ஜெட் போட்டு, அதன்படி செலவு பண்ணிட்டு, வெளிப்படையாத்தானே இருந்திருக்கோம் இத்தனை நாளா?…இப்ப மட்டும் ஏன் சுமதிக்கு புத்தி இப்படிப் போச்சு?”

    வழி முழுவதும் யோசனை செய்தபடியே வீட்டையடைந்த திவாகரனை வரவேற்றது கதவில் தொங்கிய பூட்டு.  “மணி ஏழாகப் போவுது..இன்னுமா இவ வரலை ஆபீஸிலிருந்து?”

    தன்னிடமிருந்த மாற்றுச்சாவி கொண்டு வீட்டைத் திறந்து உள்ளெ சென்ற திவாகரன் ஹால் ஷோபாவில் சாய்ந்தமர்ந்து கண்களை மூடிக் கொண்டான்.

    “என்னங்க…என்னாச்சு…தலை வலியா?” கேட்டபடியே சுமதி அவள் நெற்றியைத் தொட, கண் விழித்தவன் அவளையே ஊடுருவிப் பார்த்து விட்டு, சுவர்க்கடிகாரத்தைப் பார்த்தான். அதன் அர்த்தத்தைப் புரிந்து கொண்ட சுமதி, “ஏன் லேட்டுன்னு கேட்க வ்ர்றீங்க?..அதானே?…இருங்க…இருங்க சொல்றேன்…அதுக்கு முந்தி ஒரு கப் காபி போட்டுக் கொண்டாரேன்” என்றபடி சமையலறையை நோக்கி நடந்தாள்.

    சுமதி கொண்டு வந்து நீட்டிய காபியை கையால் வாங்காமல் டீப்பாயின் மேல் வைக்கச் சொல்லி ஜாடை காட்டினான்.  அவன் முக பாவத்தை கொண்டே அவன் ஏதோ கோபத்திலிருக்கிறான் என்பதைப் புரிந்து கொண்ட சுமதி. “மகாராஜா ஏதோ கோபத்திலிருக்கிறார் போல் தெரிகிறதே!..என்ன காரணமோ?…யார் மேல் கோபமோ?…இந்த அபலையிடம் சொல்லலாமே!” அவனை சமாதானப் படுத்தும் விதமாய் தமாஷ் பேசினாள்.

    “அபலையா?…யார்  நீயா…?” வாய் விட்டு சிரித்து விட்டு “நானும் அப்படித்தான் இத்தனை நாளும் நினைச்சிட்டு இருந்தேன்”

    “என்னங்க…என்னாச்சு உங்களுக்கு?..ஏன் ஒரு மாதிரியாப் பேசறிங்க?”

    ஒரு நிமிடம் அவளையே கூர்ந்து பார்த்தவன், “நீ..மேனேஜராயிட்டியாமே!..சம்பளம் கூட பதினஞ்சாயிரமாமே!…கேள்விப் பட்டேன்”

    “அது வந்து…ஆமாங்க!..நானே உங்க கிட்டே சொல்லலாம்னு இருந்தேன்…அதுக்குள்ளார நீங்களே கேட்டுட்டீங்க!” சமாளித்தாள்.

    “என்னது…என்கிட்ட சொல்லலாம்னு இருந்தியா?…ஓ…ஆறு மாசமா அதுக்கு நேரமே கிடைக்கலை அப்படித்தானே?”

    முழு உண்மையும் அவனுக்குத் தெரிந்து விட்டதென்பதைப் புரிந்து கொண்ட சுமதி, “ஆமாங்க..நீங்க கேள்விப்பட்டதெல்லாம்…உண்மைதான்…எனக்கு மேனேஜராப் புரமோஷனும்…கூட இன்கிரிமெண்ட்டும் கிடைச்சு..ஆறு மாசமாச்சு…அனாலும் அந்த விஷயத்தை உங்க கிட்ட சொல்லாம மறைச்சேன்”

    “பரவாயில்லை…நல்லாவே சமாளிக்கறே”

    சடாரென்று தலையைத் தூக்கி அவனுக்கு பதில் சொல்ல முனைந்தவளைக் கையமர்த்திய திவாகரன், “ஆறு மாசமா பதினஞ்சாயிரம் சம்பளம் வாங்கிட்டு என்கிட்டே  வெறும் எட்டாயிரத்தை மட்டும் குடுத்துட்டு மீதி ஏழாயிரத்தை எங்க…எவனுக்கு அனுப்பிச்சே?..இப்ப இந்த நிமிஷம் எனக்கு உண்மை தெரிஞ்சாகணும்!” தாவி வந்து அவள் தோள்களைப் பற்றி உலுக்கியவனை நாசூக்காக விலக்கிய சுமதி, கண்களைத் துடைத்துக் கொண்டு பேச ஆரம்பித்தாள்.

    “ஆறு மாசத்துக்கு முன்பு கிடைச்ச புரமொஷனும்…சம்பள உயர்வும் என்னைப் பொருத்தவரையில் ஒரு மகிழ்ச்சியான விஷயமே அல்ல!…உண்மையில் அதைக் கேட்டதும் எனக்கு முதல்ல சந்தொஷத்துக்கு பதிலா அதிர்ச்சியாகத்தான் இருந்தது.  ஏன்னா…என்னொட சம்பளம் ஒன்பதாயிரமாகவும் உங்களோட சம்பளம் பனிரெண்டாயிரமாகவும் இருந்தாத்தான் இந்த குடும்பம் ஒரு இனிமையான குடும்பமாக இருக்கும்!…என்னொட சம்பளம் உங்களொடதை விட அதிகம்னு ஆயிட்டா…என்னதான் நீங்க பக்குவப்பட்ட ஆணாயிருந்தாலும் நிச்சயம் ஒரு கட்டத்துல உங்க மனசுல சின்ன வருத்தம் வரும்….முடியாதுங்க…என்னால நீங்க சின்ன வருத்தப்படறதைக் கூட தாங்க முடியாதுங்க!…”

    திவாகர் அவளை விழியிமைக்காமல் பார்த்தபடியே நிற்க.

    “அது மட்டுமில்லைங்க…உங்களுக்குள்ளார ஒரு தாழ்வு மனப்பான்மை வந்து…அது உங்க உடல் நிலையைப் பாதிச்சிடுமோன்னு நான் ரொம்ப பயந்துட்டேங்க!…அந்த அக்கறைலதான் நான் உங்க கிட்ட எல்லாத்தையும் மறைச்சேன்!”

    சொல்லிக் கொண்டேயிருந்தவள் திடீரென்று உள் அறையை நோக்கி நடந்தாள். அடுத்த நிமிடமே திரும்பி வந்தவள் கையில் தபால் ஆபீஸ் சேமிப்புக் கணக்கு புத்தகம்.

    “கேட்டீங்கல்ல?…அந்த ஏழாயிரம் ரூபா மாசமாசம் எங்க போச்சுன்னு?…இந்தாங்க உங்க பேர்ல தபால் ஆபீஸ்ல பத்திரமா இருக்கு”

    அவள் நீட்டிய அந்த பாஸ் புத்தகங்களை வாங்கிப் பார்த்த திவாகரன் நெகிழ்ந்து போனான்.  “ச்சே!..என்னோட மனசு நோகக் கூடாதுன்னு தன்னோட சந்தோஷத்தைக் கூட மூடி வெச்சுக்கிட்டு ஆறு மாசமா அமைதியா நடமாடிய இந்தப் பொன்னான மனசை புண்ணாக்கிட்டேனே! எனக்கு ஏன் இப்படியொரு அவசரப் புத்தி”

    “போதுமா…சந்தேகம் தீர்ந்ததா?…அடுத்தது இன்னிக்கு லேட்டா வந்ததுக்கான காரணத்தையும் சொல்லிடறேன் கேட்டுக்கங்க!…வர்ற வழில லேடி டாக்டர்கிட்ட போய்ட்டுத்தான் வந்தேன்…உறுதிப் படுத்திட்டாங்க…நான் உண்டாயிருக்கேன்!”

    “அய்யோ ஸாரி சுமதி…என்னை மன்னிச்சிடு…இந்த நேரத்துல உன்னைய…”

    தன் கைகளைப் பற்றிக் கொண்டு கெஞ்சலாய்க் கேட்ட கணவனின் மார்பில் அழுகையுடன் புதைந்தாள்.

    அவன் மார்பில் பட்டுத் தெறித்த கண்ணீர்த்துளிகள் அவன் மனதில் இருந்த சந்தேகக் கறையை சுத்தமாக அழித்து விட்டுத்தான் காய்ந்தன.

     

     

     

     

    Share
  • ஞானோதயம்

    விசாகை மனோகரன்

    தமிழாசிரியர் சுந்தர வாத்தியாருக்கு அன்று  மனதே சரியில்லை. பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து விடலாமா என்று யோசித்தார். வேண்டாம், அங்கு சென்று குழந்தைகளின் பிஞ்சு முகங்களைப் பார்த்தாவது மனது சற்று  சாந்தமாகும். புறப்பட்டார். வழியில் பார்த்தவர்கள் எல்லோரும் வணங்கினார்கள். அதை ஏற்கும் மனநிலை இல்லை இன்று அவருக்கு. மனம் அன்று நடந்தவைகளை நினைத்துப் பார்த்தது.

    காலையில் அவர் தன் அண்ணன் வீட்டிற்கு சென்றிருந்தார். அவர் ஒரு சாதாரண தனியார் நிறுவனத்தில் குமாஸ்தா. இரண்டு பெண்கள், ஒரு பையன் அவருக்கு. பையன் வெகு காலம் கழித்து, யாசித்து, தவமிருந்து பிறந்தவன். அவர் முதல் பெண் திருமணத்திற்கே தடுமாறிவிட்டார். சுந்தர வாத்தியார்  உதவியிருக்கா  விட் டால் இரண்டாவது பெண் கரையேறிருக்கவே மாட்டாள். பெரியவரும் தன் தம்பியை நினைத்துப் பார்க்காத நாளேயில்லை. பையனுக்கு ஒரு நல்ல இடத்தில் வேலையும் வாங்க உதவினார் தம்பி.

    இன்று காலை அண்ணன் வீட்டில் ஏதோ பேசுகையில், பையன் ஏதோ சொல்ல, சுந்தர வாத்தியாருக்கு கோபம் வந்து விட்டது. பேச்சு முற்றியது. கேட்டுக்கொண்டிருந்த அண்ணன், தன் பையனை ஏன் என்று  கேட்காமல், அவனைத் திட்ட வாத்தியாருக்கு எவ்வித உரிமையும் கிடையாது என்று கூறி வெளியே போகச்சொல்லி விட்டார்.

    தான் பார்க்க வளர்ந்த, வளர்த்த  பையன். அவனை சொல்ல உரிமையில்லையா? எவ்வளவு செய்திருக்கிறேன் அண்ணன் குடும்பத்திற்கு? வள்ளுவன் சொன்ன குறள் நினைவிற்கு வந்தது.

    “எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
    செய்ந்நன்றி கொன்ற மகற்கு”  எவ்வளவு அழகாக, கருத்தாழத்துடன் கூறியிருக்கிறான்.

    யோசித்துக் கொண்டே பள்ளிக்கு வந்து, வகுப்பறைக்குச் சென்றார். அன்று பாடம்  திருக்குறள் பற்றியது. முதல் மாணவனைப் பார்த்து ஒரு குறள் சொல்லச் சொன்னார். அந்த பையன் உடனே சொன்னான்.

    “நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
    அன்றே மறப்பது நன்று.”

    நெற்றியில் அடித்தது போலிருந்தது வாத்தியாருக்கு. தான் அண்ணனுக்குச் செய்தது பண உதவி தான். ஆனால் அண்ணன்! பிறந்த உடனேயே தாய், சில நாட்களிலேயே தந்தை, இருவரையும் இழந்த நிலையில் தான் படிக்காமல், தன்னை படிக்க வைத்தவர். தான் அவருக்கு உதவும் நிலையை தந்தவரே அவர்தானே. அப்படியிருக்க அவர் சொன்ன வார்த்தைகளை நான் உடனே மறந்திருக்க வேண்டாமா?

    அரை நாள் விடுப்பு எடுத்துக் கொண்டு புறப்பட்டார் சுந்தர வாத்தியார் தன் அண்ணனைப் பார்க்க!!!!!!!!!!!

    படத்திற்கு நன்றி : கூகுள்

    Share
  • வள்ளுவர் வழியில் இளங்கோ!!

    மேகலா இராமமூர்த்தி

    ”யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல்

     வள்ளுவர்போல், இளங்கோ வைப்போல்

     பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை” என வாயூறிப் பேசுகின்றான் மகாகவி பாரதி. இந்த வரிசையிலே காலத்தால் மூத்தவர் வள்ளுவப் பேராசான். அவரை அடுத்து வருபவர் சேரமன்னனின் இளவலான இளங்கோ. இவ்விருவரின் அறக்கருத்துக்களில் சிலவற்றை ஒப்பு நோக்குவதே இக்கட்டுரையின் நோக்கம்.

    “சான்றோர் சான்றோர் பாலராவர்”(great minds think alike) என்பது பெரியோர் வாக்கு. இக்கருத்தை மெய்ப்பிப்பது போலவே குறளின் கருத்துக்களைப் பலவிடங்களில் எடுத்தியம்புகின்றார் சிலப்பதிகார ஆசிரியர். உதாரணங்கள் சிலவற்றை இங்குக் காண்போம்.

    சிலம்பின், மதுரைக் காண்டம் விறுவிறுப்பிற்குப் பஞ்சமில்லாப் பகுதியாகும். அதில் வருகின்ற அடைக்கலக் காதையில் சமணத் துறவியான, கவுந்தியடிகள் பத்தினிப் பெண்டிரின் சிறப்பைப் பற்றி இடைக்குல முதுமகள், மாதரியிடம் கூறும்போது,

    ”வானம் பொய்யாது; வளம் பிழைப் பறியாது

    நீணீல வேந்தர் கொற்றம் சிதையாது

    பத்தினிப் பெண்டிர் இருந்த நாடெனும்

    அத்தகு நல்லுரை அறியாயோ நீ?” என வினவுகின்றார், இஃது,

    ”தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்

    பெய்யெனப் பெய்யும் மழை” (குறள்: 55) என்னும் திருக்குறளை நினைவுக்குக் கொண்டுவருகின்றதல்லவா?

    அதுபோலவே, சிலம்பில் மற்றுமோர் காட்சி, வழக்குரை காதையில்….

    ஆவேசத்தோடு தன் கணவன் கோவலன் கொலையுண்டதைப் பற்றித் தன்முன்னே சொல்லிக்கொண்டிருந்த கண்ணகியைப் பார்த்துப் பாண்டிய மன்னன் புன்சிரிப்பைச் சிந்திவிட்டு, பெண்ணே…!

    “கள்வனைக் கோறல் கடுங்கோ லன்று!

    வெள்வேற் கொற்றம்- காண்!” என்றல்லவா கூறுகின்றான். இவ்வரிகள்,

    ”குடிப்புறங் காத்தோம்பிக் குற்றம் கடிதல்

    வடுவன்று வேந்தன் தொழில்”(குறள்: 549)  என்னும் குறட்கருத்தின் பிரதிபலிப்பாகவே தோன்றுகின்றது.

    அடுத்து, சிலப்பதிகாரத்தின், ’வஞ்சின மாலை’யில் மாபத்தினி கண்ணகி, பாண்டியன் தேவியைப் பார்த்துக் கூறும் வரிகள் இவை:

    “முற்பகல் செய்தான் பிறன்கேடு தன்கேடு

    பிற்பகல் காண்குறூம் பெற்றியகாண்!”

    என்ன விந்தை!! தெய்வப் புலவரின் தமிழ்மறையும் இதேகருத்தை “இன்னா செய்யாமை” என்னும் அதிகாரத்தில் பறைசாற்றியுள்ளது. இதோ அக்குறள் வரிகள்..

    “பிறர்க் கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா

    பிற்பகல் தாமே வரும்.” (குறள்: 319)

    சிலம்பின் ”வஞ்சிக் காண்டம்” சேரன் செங்குட்டுவன் கண்ணகித் தெய்வத்திற்குச் சிலை எடுத்த வரலாற்றை விரித்துரைக்கின்றது. அதில், மாடல மறையோன் ’யாக்கை நிலையாமையைப் பற்றியும், ’அறக்கள வேள்வி’ செய்யவேண்டியதன் அவசியத்தையும் செங்குட்டுவனுக்கு எடுத்துரைக்கும்போது…..

    “நாளைச் செய்குவம் அறமெனின் இன்றே

    கேள்வி நல்லுயிர் நீங்கினும் நீங்கும்” என்று செப்புகின்றான்.

    இதே பொருளில் பல குறட்பாக்களை நாம் “நிலையாமை” எனும் அதிகாரத்தில் காண்கிறோமே…

    அவற்றுள் ஒன்று, நம் பார்வைக்கு…..

    “நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை

    மேற்சென்று செய்யப் படும்.” (குறள்: 335)

    இவை அனைத்திற்கும் சிகரம் வைத்தது போல் அமைந்துள்ளது சிலப்பதிகாரத்தின் இறுதிப் பகுதியான ”வரந்தரு காதை”. குறளும், சிலம்பும் கைகோர்த்துக்கொண்டு ஒத்த அறக்கருத்துக்களை ஓங்கி ஒலிக்கின்ற அழகை என்னவென்பது..? தமிழன்பர்கள் அனைவரும் படித்து மகிழவேண்டிய பகுதியிது!

     “தெய்வம் தெளிமின்: தெளிந்தோர்ப் பேணுமின்!

    ஊனூண் துறமின்; உயிர்க்கொலை நீங்குமின்;

    தானம் செய்ம்மின்; தவம் பல தாங்குமின்;

    செய்ந்நன்றி கொல்லன்மின்; தீநட்பு இகழ்மின்;

    ———————————————————————————

    கள்ளும் களவும் காமமும் பொய்யும்

    வெள்ளைக் கோட்டியும் விரகினில் ஒழிமின்

    இளமையும் செல்வமும் யாக்கையும் நிலையா இவை வரந்தரு காதையின் வைர வரிகள்…!

    இவ்வரிகளுக்கு இணையான குறட் கருத்துக்களை இனிக் காண்போம்.

    வள்ளுவத்தின், “கடவுள் வாழ்த்து” தெய்வம் தெளிவதற்கு நமக்குப் பேருதவி செய்கின்றது. “நீத்தார் பெருமை” என்ற அதிகாரம், பற்றற்ற உயர்ந்தோரின்-தெளிந்தோரின் சிறப்பை வகைப்படுத்துகின்றது.

    அதுபோன்று,

    “கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி

    எல்லா வுயிரும் தொழும்” (குறள்: 260) என ஊனூண் துறப்பதின் அவசியத்தை குறள் கூறுகின்றது. உயிர்க்கொலை அதைவிடக் கொடியது என்பதனை,

    ”அறவினை யாதெனில் கொல்லாமை கோறல்

    பிறவினை எல்லாம் தரும்” (குறள்: 321) என்ற குறளமுதம் “உயிர்க் கொலை நீங்குமின்” என்பதன் விளக்கம் தானே?

    தானம் செய்வதின் சிறப்பை “ஈகை”யும், தவத்தின் பெருமையை “தவம்” என்ற அதிகாரமும் தெளிவாய்ச் சொல்லவில்லையா?

    ”செய்ந்நன்றி அறிதலை”யும், ”தீநட்பின்” தன்மையையும் அறிதற்குத் திருக்குறளினும் விஞ்சிய

    வழிகாட்டி உண்டோ?

    ”உண்ணற்க கள்ளை” எனவும், ”கள்ளாமை காக்க” எனவும் வள்ளுவப் பேராசான் நமக்கு அறிவுறுத்த வில்லையா?

    “காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றன்

    நாமம் கெடக்கெடும் நோய்” (குறள்: 360) என்பதும்,

    “பொய்யாமை பொய்யாமை யாற்றின் அறம்பிற

    செய்யாமை செய்யாமை நன்று” (குறள்: 297) என்பதும் வள்ளுவரின் வாய்மொழிகளே!

    ”பயனில்சொல் பாராட்டு வானை மகன்எனல்

    மக்கட் பதடி யெனல்”(குறள்: 196) என்று பயனில சொல்லும் “வெள்ளைக்கோட்டி”யைக் கடுமையாய்ச் சாடுகின்றார் வள்ளுவர்.

    அதுபோல்,

    ”நெருநல் உளனொருவன் இன்றில்லை யென்னும்

    பெருமை யுடைத்திவ் வுலகு” (குறள்: 336) என்று ”நிலையாமை” குறித்த உண்மைகளையும் நெகிழ்ச்சியாய் வெளியிடுகின்றார்.

    இவ்வொப்பீடுகள் வாயிலாய் நாம் அறிவது என்ன? சிலம்பில் எங்கு நோக்கினும் குறட் கருத்துக்கள் குவிந்து கிடக்கின்றன என்பது தானே!

    இவ்வுயரிய கருத்துக்கள் படிப்போருள்ளங்களைப் பரவசப்படுத்துவதோடல்லாமல், வள்ளுவரின் வழித்தோன்றலாகவே இளங்கோவடிகளை எண்ணி மகிழச்செய்கின்றது!!

    சான்றோரின் சிந்தனைகள் ஒத்திருப்பது உண்மையே அல்லவா!

     படங்களுக்கு நன்றி:

     http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D:Puhar-ILango.jpg

    Share
  • உயிர் வெளி

    பா.க. சுப்பிரமணியம்

     

    மின்னலை வரைய முடியாமல்
    தோற்றுப் போன தூரிகை
    உதிர்ந்து… உதிர்ந்து…
    உன்
    இமைகளானது

    வான வில்லில் உறங்கும்
    என் கனவுகளை
    உன் புன்னகையிலிருந்து
    கண்டெடுத்தேன்

    நீ
    வல்லினமா? மெல்லினமா?
    ஒட்டியாணமாய் என்னை
    உன் இடையில் சூட்டினாய்

    உருவமில்லாதது காதல்
    அதை நீ
    உன் கன்னத்தில்
    வெட்கத்தில்
    வரைந்துகாட்டுகிறாய்

     

    படத்துக்கு நன்றி: http://bestbeautitips.blogspot.com/2012/03/how-to-get-beautiful-eyes.html

     

    Share
  • நூல் மதிப்புரை – சீதாயணம் (நாடகம்)

    முனைவர். தேமொழி
    எழுத்தாளர், முன்னாள் சமூக திட்ட ஆய்வாளர்
    கலிஃபோர்னியா, அமெரிக்கா

    திரு. வையவன் நடத்தும் சென்னை “தாரிணி பதிப்பகம்” திரு. சி. ஜெயபாரதன் அவர்களின் “சீதாயணம் நாடகத்தை” ஒரு நூலாக வெளியிட்டுள்ளது. ஜெயபாரதன் அவர்கள் இணைய தமிழ் வாசகர்களுக்கு மிகவும் அறிமுகமானவர். விண்வெளி ஆய்வுகள், இயற்பியல் விளக்கங்கள் போன்றவற்றைத் தவறாமல் தாங்கி வருபவை அவரது அறிவியல் கட்டுரைகள். சீதாயணம் நாடகமும் முன்பு திண்ணை இணைய இதழில் தொடர்ந்து வெளியானதுதான்.

    “சீதாயணம்” என்னும் ஓரங்க நாடகத்தில் வரும் இராமன், இராவணன், அனுமான், சுக்ரீவன் போன்ற மாந்தர் அனைவரும் மனிதராகக் காட்டப் படுகிறார்கள். இராமபிரானைத் தேவ அவதாரமாகக் கருதாமல் சராசரி நிறைகுறைகளுடன் கூடிய ஒரு மனித குலப் பிரதிநிதியாக அறிமுகப் படுத்துகிறார் நூலாசிரியர் ஜெயபாரதன் அவர்கள். கானக ஆசிரமத்தில் வால்மீகியின் அடைக்கலத்தில் வாழ்ந்த கோசல அரசி சீதை, வால்மீகி முனிவருக்கு தன் துன்பக் கதையைச் சொல்லி, கணவனால் புறக்கணிக்கப்பட்டு இறுதியில் தன் உயிரைப் போக்கிக் கொண்டது சீதாவின் பரிதாப வரலாறாக சித்தரிக்கப் பட்டுள்ளது இந்த நூலில்.

    நூலாசிரியரின் அறிவியல் பின்புலம் சொல்லப்படுவதை அப்படியே கேள்வி கேட்காமல் ஏற்றுக் கொள்வதை விடுத்து, ஆராய்ந்து உண்மையை அறியும் ஆர்வத்தை அவருக்கு வழங்கி இருக்கிறது. அது நம் இலக்கிய உலகத்திற்கு கிடைத்த ஒரு அரிய வரமாகிவிட்டது.

    நம் மூதாதையர், வாழ்வில் யாராக இருந்தாலும் துன்பத்தை தவிர்க்க முடியாது, அதனை ஏற்று வாழ வேண்டும் என்ற அடிப்படைக் கருத்தை; தந்தை சொல் தட்டாத ஒரு தனயனை, ஒருவனுக்கு ஒருத்தி என வாழ்ந்த கணவனை வைத்து மக்களுக்கு அறிவுரை சொல்ல கதை புனைந்திருக்கலாம். அதற்கு அக்காலத்தில் வாழ்ந்த அரசனின், அவன் மனைவியின் வாழ்வையும் உதாரணமாகக் காட்ட உத்தேசித்திருக்கலாம். இளங்கோவடிகளின் சிலப்பதிகாரம் போல ஒரு உண்மை நிகழ்ச்சியை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட இலக்கியமே இராமாயணம்.

    கடவுள் சொன்னார் என்று சொன்னால்தான் மக்களைக் கவர முடியும் என்று நினைத்து நாளடைவில் கதாநாயகன் கடவுளாகிப் போனது நிகழ்ந்திருக்கிறது. இந்தக் காலத்தில் நாம் பேட்டை போக்கிரிகளை எதிரிகள் என சித்தரிப்பது போல, தீய செயல் செய்தவனை அரக்கனாக சித்தரிப்பதையும் அக்கால மக்கள் செய்து உண்மைக் கதையை உருமாற்றிக் கொண்டே வந்து விட்டார்கள். அதை நூலாசிரியர் அழகாக விளக்கி, இயற்கையில், வரலாற்றில் எது சாத்தியம், எது நிகழ்ந்திருக்கக் கூடும் என்று கொடுத்த விளக்கம் மிக அருமையானது. குரங்குச் சேட்டைகள் நீக்கப்பட்டு, அரக்க உருவங்கள் வேடம் களையப்பட்டு எளிதில் நம்பும் ஒரு நிகழ்ச்சி நூலாசிரியர் ஜெயபாரதன் அவர்களால் முன்னிறுத்தப் பட்டுள்ளது. இம்முயற்சி மகிழ்ச்சியைத் தருகிறது.

    இக்காலம் வரை படைக்கப்படும் இலக்கியங்கள் பெரும்பாலும் ஆண்களினால் இருந்ததால் நிகழ்வுகள் அவர்கள் கண்ணோட்டத்தில் கூறப்பட்டது இதுவரை. எல்லாவற்றிலும் மேலானது, அதனை நீக்கி நூலாசிரியர் புரட்சி செய்து பாதிக்கப் பட்ட பெண்ணின் கண்ணோட்டத்தில் இருந்து கூறும் பொழுது சீதையின் வாழ்க்கையின் வேதனை நிறைந்த வரலாறு மனதை வருத்துகிறது. ஒரு அரசகுமாரிக்கு வாழ்வில் என்ன ஒரு சோதனை. அத்துன்பத்திலும் தன்மானத்தையும் சுயமரியாதையையும் இழக்கவில்லை அவள். தன் தாய்வீடு செல்வதைத் தவிர்த்தும், விரும்பாத கணவனை வெறுத்து ஒதுக்கி குழந்தைகளுக்காக வாழ்வதும் சீதையின் மேல் மதிப்பை பன்மன்டங்கு உயர்த்துகிறது. அந்த சாதனையைப் பார்க்கும் பொழுது தந்தை சொல்மிக்க மந்திரமில்லை என்று வாழ்ந்த இராமனிடம் பரிவு சிறிதும் வரவில்லை. இராமன் ஒரே மனைவியுடன் வாழ்ந்ததும் பெரிய சாதனையாகத் தோன்றவில்லை. மனைவிக்காக இராமன் முடி துறந்திருக்க வேண்டும் என்றுதான் தோன்றுகிறது. அக்காலப் பெண்களின் வாழ்க்கை ஆதரவற்று, அவர்கள் கட்டுப்பாட்டில் இல்லாமல் இருந்ததை அனைவரும் அறிந்திருந்தாலும், இக்காலத்திலும் பெண்களின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் ஒன்றுமில்லை என்பதே கசப்பான உண்மை.

    நூலாசிரியர் துணிச்சலுடன் இராமன் கடவுளின் அவதாரம் எனக் கருத என்ன ஆதாரம் என்று குறிப்பிடுவது மகிழ்ச்சியை அளிக்கிறது. அத்துடன் இராமன் மதத்திற்கு செய்த தொண்டு என்ன என்பதைக் கேள்வியாகக் கேட்பது மேலும் சிந்திக்க வைக்கிறது. அந்தக் கேள்வியின் அடிப்படையில் சிறிதும் யோசனைன்றி கலவரங்களை மதங்களின் பெயரினால் நிகழ்த்திக் குளிர்காயும் சுயநலம் மிகுந்த மதவாதிகளை அடையாளம் காட்டுகிறார். இதுபோன்ற மதத் தீவிரவாதிகளினால் மதசார்பற்ற கொள்கையுடைய இந்தியாவிற்கு ஏற்படும் ஆபத்தை உணர்த்துகிறார். ஜெயபாரதன் அவர்களது இந்த தேசத் தொண்டு போற்றுதலுக்கு உரியது.

    சீதாயணத்தை ‘பெண்ணியக் கல்வி’ (Women’s studies) பாடப் பிரிவின் பாடத் திட்டத்தில் தமிழகம் இணைக்க முற்பட வேண்டும். அரசு கல்லூரிகளின் மாணவியர் கலைநிகழ்சிகளில் இந்த நாடகத்தை நடத்திக் காட்ட வேண்டும் (மதச் சார்புள்ள கல்லூரிகளில் நிகழ்த்தினால் அது வன்முறைக்கு வழி வகுக்கும் என்ற அச்சம்தான் அரசு கல்லூரிகள் எனக் குறிப்பிடச் செய்தது). கலைஞர்களில் துணிச்சலுள்ளவர்கள் (மிகவும் குறைவு என்பது வருந்தத் தக்கது) சீதாயணத்தை தங்கள் கலைநிகழ்சிகளில் மேடையேற்றலாம்.

    “ஆடவர் மேல் வகுப்பு! பெண்டிர் கீழ் வகுப்பு! குடிமக்களில் பாதித் தொகையான பெண்டிருக்கு வாக்குரிமை யில்லை! நாக்குரிமையும் இல்லை! முதலில் தந்தை சொல்படிந்து என்னைக் கலந்து பேசாமல், அவரே ஒப்புக்கொண்டு வாக்கைக் காப்பாற்றப் பதினாங்கு வருடம் வனவாசத்தில் இன்னல் பட்டோம். நான் காட்டில் தூக்கிச் செல்லப்பட்டு சிறையில் பட்ட துயருக்கும், என் பெயர் கறை பட்டதற்கும் அவரே மூல காரணம். இப்போது குடிமக்கள் சொல்படிந்து என்னைக் கலந்து உரையாடாமல், காட்டுக்குத் துரத்தியதற்கும் அவரே காரண கர்த்தா. தனது பட்டத்து அரசியை இதுவரை அவர் மனிதப் பிறவியாகக் கருதி மதித்தே இல்லை!”

    நூலில் வரும் சீதையின் கூற்று இது. இதுபோல சீதையின் மனநிலையில் இருந்து நூலாசிரியர் ஜெயபாரதன் சிந்தித்ததைப் போல எத்தனை பேரால் சிந்திக்க முடியும்?
    பெண்களின் சார்பில் ஜெயபாரதன் அவர்களது சீதாயணம் படைப்பினைப் பாராட்டி, விழிப்புணர்வு கொண்டு வரும் அவரது இலக்கிய முயற்சிக்கு தலைவணங்கி நன்றி நவில்கிறேன்.

    http://jayabarathan.wordpress.com/seethayanam/ (சீதாயணம் நாடகம்)

    சீதாயணம் (நாடகம்): விலை ரூ: 70, பக்கங்கள் : 76
    கிடைக்குமிடம்:
    Mr. S. P. Murugesan (Vaiyavan)
    vaiyavan.mspm@google.com
    Editor Innaiyaveli
    Dharini Pathippagam
    1. First Street, Chandra Bagh Avenue,
    Mylapore, Chennai : 600004
    Phone: 99401-20341

    Share