பாகம்பிரியாள்

இதில் ஏறி வெற்றிக் கொள்வது
எப்படி என்பது இன்று வரை புதிர்தான்!
எதிர்பாராமல் திறக்கும் முத்தப்பொந்தும்,
இடை தழுவும் கொடியும் உன்மத்தம் ஏற்றும்.
கால் வைத்து ஏற ஆங்காங்கே கவிதைப்படிகளும்,
கண்ணீர் உப்பால் கெட்டித்துப்போன பாறையும் உண்டு.
அமைதியாய் இருப்பதாய் எண்ணுகையில்
அதை முறிப்பதற்கே  விழுந்து தெறிக்கும்
கூரான கோபச் சில்லுகள் எங்கும்.
கண்ணில் பட்டவரும், காவியங்களும்
சொன்ன கதையில் மயங்கி ஓர் ஆர்வம்
கொழுந்து விட்டது மெல்லவே. இதோ
யவனக் கயிறை பலமாய் பிடித்தபடி
யுவனும், யுவதியும் தங்கள் பயணத்தை
ஆரம்பிக்கிறார்கள், காதல் என்னும்
வழுக்குப் பாறையின் மீது!

படத்திற்கு நன்றி

http://www.bigbasin.org/trailssequoia.html

6 thoughts on “பயணம் !

  1. ஒரு காதல் எப்படி தோன்றுகிறது என்பதை அழகாக சொல்லி காதல் ஒரு வழுக்கு பாறை அதில் ஏறுவதும் ஏறி முடிப்பதும் கை கோர்த்தலில் தான் உள்ளது என்பதை தாங்கி வந்த கவிதை அருமை.

  2. கவிதைக்கு சிறப்பான பாராட்டு தந்த தனுசு அவர்களுக்கு நன்றி

  3. வழுக்குப் பாறையிலும்
    வழுக்காத கவிதைப்பயணம் நன்று…!

                             -செண்பக ஜெகதீசன்…

  4. காதலிப்பது எவ்வளவு கடினம் என்பதை எளிமையாக சொல்லியிருக்கிறீர்கள். அருமை.

  5. வழுக்காத கவிதைப் பயணத்திற்கு அப்பழுக்கில்லாத பாராட்டைத் தந்த திரு. செண்பக ஜெகதீசன் அவர்களுக்கு நன்றி

  6. திரு. மனோகரன் அவர்களுக்கு நன்றி . தாங்கள் சொல்வது உண்மைதான். எளிமையும், கடினமும் சேர்ந்ததால்தான் காதல் புரியாத புதிராய் விளங்குகிறது.

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க