Featuredஇலக்கியம்பத்திகள்

இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் – (36)

சக்தி சக்திதாசன்

அன்பினியவர்களே !

மீண்டுமொருமுறை ஊடகத்துறையின் நடவடிக்கை இங்கிலாந்தில் ஒரு அதிர்வை உண்டாக்கியிருக்கிறது. எது மக்களுக்கு தேவையான செய்தி, எது மக்களின் அன்றாட வாழ்க்கையில் அறிந்து கொள்ள வேண்டிய அவசியமான விடயங்கள் என்பன இப்போது பலவிதமான சர்ச்சைகளுக்குள்ளாக்கப்பட்டிருக்கின்றன.

கடந்தவாரம்  லார்ட் லெவிசன் (Lord Leveson) என்பவரால் பிரித்தானிய பிரதம மந்திரி அவர்களின் வேண்டுகோளுக்கிணங்கி ஆரம்பிக்கப்பட்ட ஊடகத்துறை மீதான விசாரணைக் கமிஷனின் அறிக்கை வெளியிடப்பட்டது.

இவ்வறிக்கையில் ஊடகத்துறை குறிப்பாக பத்திரிக்கைத்துறை எழுத்து, கருத்துச் சுதந்திரங்களின் பெயரால் அவர்களது தார்மீகக் கடமைகளின் எல்லையைக் கடந்து விட்டது எனவும், பத்திரிக்கைத் துறையை மீண்டும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு பத்திரிக்கைத் துறையையோ அன்றி அரசியலையோ சாராத சுதந்திரமான நபர்களைக் கொண்ட  பத்திரிக்கைக் கட்டுப்பாட்டுக்குழு ஒன்றை பத்திரிகையாளர்களே நியமித்து அவர்களது பத்திரிக்கை தர்மத்தை நிலைநிறுத்தும் நடவடிக்கையை எடுக்க வேண்டும் எனவும், அக்குழுவின் நியமனத்தை அரசியல் சட்டத்தின் மூலம் உறுதிப்படுத்த வேண்டும் எனவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இப்பரிந்துரையை எதுவித மாற்றமுமின்றி நடைமுறைப்படுத்த வேண்டும் என எதிர்க் கட்ச்சியான லேபர் கட்சியும், கூட்டரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் விபரல் டெமகிரட்ஸ் கட்சியும், அதே கூட்டரசாங்கத்தின் பெரும்பான்மையான கன்சர்வேடிவ் கட்சியில் பல முன்னனி உறுப்பினர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.

இங்கிலாந்தின் பத்திரிக்கைத் துறையினரோ இப்பரிந்துரையின்படி ஒரு தனியான கட்டுப்பாட்டுக் குழுவினரை நியமித்து அதை நடைமுறைப்படுத்துவதில் தமக்கு எதுவித ஆட்சேபணையும் இல்லை ஆனால் அதற்காக எதுவித அரசியல் சட்டங்களும் இயற்றப்படுவதை தமது சுதந்திரத்தைப் பறிக்கும் செயலாகத் தாம் கருதுவதாகக் கூறி எதிர்க்கிறார்கள்.

இவ்வறிக்கைக்கு ஆணையிட்ட இங்கிலாந்துப் பிரதமரோ இருதலைக் கொள்ளிபோல அல்லாடுகிறார். ஒருபுறம் பத்திரிக்கைத் துறையினரின் அத்து மீறிய நடவடிக்கைக்களினால் பாதிக்கப்பட்ட மக்களும் பெரும்பான்மையான பொது அபிப்பிராயமும் இவ்வறிக்கையின் முழு பிரயோகத்திற்கு சார்பானதாக இருந்தாலும், பத்திரிக்கையினரின் கோபத்திற்கு தானும் தனது கட்சியும் ஆளாகிவிடக்கூடாது என்பதாலோ என்னவோ பத்திரிக்கைத் துறையினரின் சார்பாக கூறப்படும் வாதத்தையே ஆதரிப்பது  போலத்தென்படுகிறது.

இது இவ்வாறிருக்க சில நாட்களுக்கு முன்னால் நடைபெற்ற ஒரு நிகழ்வின் தாக்கம் ஊடகத்துறையின் மீது மேலும் சேற்றை வாரி இறைத்திருக்கிறது.

அது என்ன அப்படிப்பட்ட நிகழ்வு என்பதுதானே உங்கள் கேள்வி ?

சென்றவாரம், ஆரம்ப கர்ப்ப காலத்தில் ஏற்படும் அதீத நிலையான “தொடர் வாந்தி”யினால் பாதிக்கப்பட்ட இபங்கிலாந்து இளவரசர் வில்லியத்தின் மனைவி கேட்டி அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்ததைப் பற்றி முந்தைய கட்டுரையில் குறிப்பிட்டிருந்தேன்.

அவுஸ்திரேலிய வானொலியைச் சேர்ந்த இருவர் இளவரசி தங்கியிருந்த வைத்தியசாலையைத் தொடர்பு கொண்டு தாம் இங்கிலாந்து மகாராணியரும், இளவர்சர் சார்லஸ் போலும் பேசி இளவரசி கேட்டின் அப்போதைய நிலையைப் பற்றி அறிந்து அதை அவுஸ்திரேலிய வானொலியில் ஒலிபரப்பிவிட்டார்கள்.

வந்ததுடா பிரச்சனை !

அந்தத் தொலைபேசி அழைப்பை ஏற்று அதைக் குறிப்பிட்ட இளவரசி தங்கியிருந்த  தாதியிடம் இணைப்பு கொடுத்த தாதிக்கு நேர்ந்த பரிதாபத்தையே குறிப்பிடுகிறேன்.

ஜசிந்த சல்டான்ஹா என்பவர் இந்தியாவில் மங்களூரில் பிறந்தவர் கணவருடன் மஸ்கட்டில் மருத்துவத் தாதியாகப் பணிபுரிந்து கொண்டிருந்த இவர் குடும்பத்துடன் 9 ஆண்டுகளுக்கு முன்னால் இங்கிலாந்துக்கு புலம் பெயர்ந்தார்.

இவருக்கு இப்போது பதின்ம வயதுகளில் இரண்டு புத்திரர்கள் உண்டு. கணவர் இங்கிலாந்து தேசிய மருத்துவ சேவையில் கணக்காளராகப் பணியாற்றி வருகிறார்.

இங்கிலாந்தில் பிரிஸ்டல் எனும் நகரில் வசிக்கிறார்கள். ஜசிந்தா லண்டனில் “கிங் 7வது எட்வார்டு” வைத்தியசாலையில் மருத்துவ தாதியாகப் பணிபுரிந்து கொண்டு இருந்தார்.

அப்போதுதான் அவரது உயிர்போகும் சம்பவம் நடந்தது. ஆமாம் நான் ஏற்கனவே மேலே குறிப்பிடிருந்தது போல இளவரசி கேட்டி அவர்கள் இந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது அவுஸ்திரேலிய வானொலிகளில் ஒன்றான “2 டேஎப்.எம்” எனும் வானொலியின் அறிவிப்பாளர்களான “மைக்கல் கிறிஸ்டியன்” எனும் ஆண் அறிவிப்பாளரும், “மெல் கிரெக்” எனும் பெண் அறிவிப்பாளரும் இணைந்து தம்மை இங்கிலாந்து மகாராணியார் போலவும், இளவரசர் சார்லஸ் போலவும் பாவனை பண்ணி தொலைபேசி மூலம் இளவரசி கேட்டின் அப்போதைய உடல்நிலை  குறித்த தகவல்களைத் திரட்டுவதற்காக அவ்வைத்தியசாலையைத் தொடர்பு கொண்டபோது அத்தொலைபேசி அழைப்பை ஏற்றவர் இந்த ஜசிந்தா எனும் மருத்துவ தாதி.

இவ்வறிவிப்பாளர்களின் ஏமாற்றத்தை உண்மையென நம்பி அவர் இந்த இணைப்பை இளவரசி தங்கியிருந்த அறையில் இருக்கும் தாதிக்கு மாற்றியிருக்கிறார் இதை அப்படியே அவுஸ்திரேலிய வானொலியில் மறு ஒலிபரப்புச் செய்திருக்கிறார்கள்.

விளைவு ……..

தனது பணியை உயிரினும் மேலாக மதிக்கும் அந்த உன்னத மருத்துவதாதி தான் இங்கிலாந்து அரசகுடும்பத்தின் பாதுகாப்பிற்கே குந்தகம் விளைவித்து விட்டதாக வருந்தி தனது உயிரைப் பறித்துக் கொள்ளும் பரிதாப சம்பவம் நிகழ்ந்துள்ளது.

அவரது கணவரும் , குழந்தைகளும் அதிர்ச்சியால் நிலைகுலைந்துள்ளார்கள். அவரது நண்பர்கள், அவருடன் பணிபுரிந்தவர்கள் சொல்லொணா துயரத்தில் ஆழ்ந்துள்ளார்கள். அந்த வைத்தியசாலை நிர்வாகிகள் இவரைப் போல ஒரு உன்னதமான தாதி தமக்கு இனி கிடைப்பார்களா என்று கவலைப்படுகிறார்கள். இவர் வழிபடும் தேவாலய மதகுருவோ அதீத தெய்வநம்பிக்கை கொண்டவரான இக்கத்தோலிக்கப் பெண்மணியின் துர்பாக்கிய மரண சமபவத்தை எண்ணி கலங்கியுள்ளார்.

இந்நிகழ்விற்குக் காரணமான இரண்டு அறிவிப்பாளர்களும் கண்ணீருடன் தொலைக்காட்சியில் இப்படியான ஒரு முடிவிற்குத் தாம் காரணமாக அமைந்து விட்டோம் என்பதைத் தம்மால் ஜீரணிக்க முடியாமல் இருக்கிறது என்று கூறியிருக்கிறார்கள்.

இவ்வானொலி நிலையத்தின் உரிமையாளர்கள் தம்முடைய நடவடிக்கையின் பிரதிபலனாக உயிரிழந்த இப்பெண்ணின் நினைவாஞ்சலியாக சுமார் $500000 அவுஸ்திரேலிய டாலர்களை இக்குடும்பத்தினரின் நல்வாழ்விற்காக நன்கொடையாகக் கொடுத்துள்ளார்கள்.

சமூகவலைத்தளங்களில் இவ்வானொலி நிலையத்தினர் மீதும் அவறிவிப்பாளர்கள் மீதும் பலவிதமான தாக்குதல்கள் தொடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் மிகப்பெரிய முக்கியமான ஒரு கேள்விக்கு விடைகாண வேண்டிய நிலைக்கு உலகளாவிய ரீதியில் அனைவரும் தள்ளப்பட்டிருக்கிறோம்.

எதற்காக இப்படிப்பட்ட நடவடிக்கைகளை தமது நிகழ்ச்சிகளில் அறிவிப்பாளர்கள் புகுத்துகிறார்கள் ? அதை எவ்வாறு அவ்வானொலி நிகழ்ச்சிகளின் கட்டுப்பாட்டாளர்கள் நியாயப்படுத்துகிறார்கள் ?

பொதுவாக கண்முன்னே தெரியும் விடை தமது வானொலியைப் பிரபல்ய வானொலி ஆக்குவதன் மூலமே அவர்களுக்குக் கிடைக்கும் விளம்பரங்களைக் கூட்டி அதிக பொருளீட்டலாம். பிரபல்யமாவதற்காக தமது நிகழ்வுகளைச் செவிமடுக்கும் நேயர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டி இத்தகைய நிகழ்ச்சி நடவடிக்கைகளை ஆதரித்து முடுக்கி விடுகிறார்கள் .

கூட்டிக் கழித்துப் பெருக்கி வகுத்துப் பார்த்தால் இவையனைத்தும் நேயர்களாகிய எம்மிடையே தமது வானொலியைப் பிரபல்யப்படுத்தும் நடவடிக்கைதானே !

அப்படியானல் எமது ரசனை ஏன் இத்தகைய நிகழ்வுகளை நோக்கி ஓடிப்போகிறது ?

இன்றைய வானொலி ஆகட்டும், தொலைக்காட்சிகளாகட்டும், பத்திரிக்கைச் செய்திகளாகட்டும் அனைத்தும் investigative journalism அதாவது துப்பறியும் நிருபர்களால் வெளிப்படுத்தப்படும் வாழ்க்கை ரகசியங்கள் என்னும் கணிப்பிலேயே தம்மை நியாயப்படுத்திக் கொள்கின்றன.

இதற்குக் காரணம் என்ன ? காலமாற்றமா? மாரும் காலத்தின் கோலத்தினால் சமுதாய அங்கத்தினர்களாகிய எமது ரசிப்புத் தன்மையில் விழுந்த கீறல்களா?

இன்றைய சமுதாயத்தில் 24 மணிநேர ஊடகத்தன்மை இரண்டற‌க் கலந்து விட்டது. ஒரு தொலைக்காட்சி சானலையோ அன்றி ஒரு வானொலி அலைவரிசையையோ 24 மணிநேரம் நடத்துவற்கு அவர்களுக்கு நிகழ்ச்சிகள் தேவைப்படுகின்றன அதைத் தொடராக வழங்குவதற்கு அவர்கள் தம்மைப் புதுவிதமான நடவடிக்கைகளுக்குள் புகுத்தி விடுகிறார்கள்.

ஒரு சமூகத்தை நல்லவழியில் மாற்றியமைப்பதற்கு, ஊழல்கள் களையப்பட்டு நேர்மையான வழியிலான அரசியல், சமூகக் கோட்பாடுகள் நிலைநிறுத்தப்படுவதற்கு இத்தகைய ஆராய்ச்சி ஊடகச் செய்திகள் அவசியமென்பதை மறுக்க முடியாது. ஊடகங்கள் அரசியல் தலையீடு இல்லாமல் சுதந்திரமாக உண்மையான விமர்சனங்களையும் முன்வைக்க வேண்டிய சுதந்திரத்தை உடையதாக அமைய வேண்டும் என்பதும் உண்மையே.

ஆனால் அதற்கும் ஒரு எல்லை உண்டுதானே ! அந்த எல்லை என்ன என்பதை யார் தீர்மானிப்பது ?

ஊடகங்களின் சுதந்திரம் எனும் போர்வையில் தனிமனிதர்களின் சுதந்திரத்தைப் பறிக்கும் வகையில் பத்திரிக்கை ஊடகங்கள் நடந்து கொள்வது ஏற்றுக்கொள்ளக்கூடியதா ?

பத்திரிக்கையின் எழுத்துக் கருத்துச் சுதந்திரங்களுக்கும், தனிமனிதர்களின் சுதந்திரத்திற்கும் உள்ள வேறுபாடே அவற்றிற்கிடையிலான மோதலுக்குக் காரணமாகின்றதா?

ஆழமான கேள்விகள் . ஆனால் இவையொன்றும் மறைந்த ஜசிந்தாவை எமக்கு மீட்டுத்தரப் போவதில்லை

மீண்டும் அடுத்த மடலில்
அன்புடன்
சக்தி சக்திதாசன்

http://www.thamilpoonga.com
http://www.facebook.com/sakthi.sakthithasan

Print Friendly, PDF & Email
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க