Blog

  • பழகத் தெரிய வேணும் – 63

    பழகத் தெரிய வேணும் – 63

    நிர்மலா ராகவன்

    முதிர்ச்சியும் குழந்தைத்தனமும்

    “இது என்னோட இடம்!”

    பாலர் பள்ளியில் பயிலும் குழந்தைகளுக்குப் பிறருடன் ஒத்துப்போகத் தெரியாத வயது. எல்லாவற்றிற்கும் போட்டியிட்டு, சண்டை பிடிப்பார்கள். நான்கு வயதுக்குள் பிறருடன் இணைந்து பழகும் திறன் வருவதில்லை.

    ஆனால், வயது ஏறியபின்னும், இப்படியே நடப்பவர்களை என்னவென்று கூறுவது?

    கதை

    எங்கள் பள்ளியில் நடந்த ஒரு விழாவின்போது, காலியாக இருந்த ஓர் இருக்கையில் அமர்ந்துகொண்டேன்.

    அங்கு வந்த என் சக ஆசிரியையான சாரதா, “இது என்னோட இடம்!” என்று சற்று எரிச்சலுடன் கூறியபோது, முதலில் ஆச்சரியமாக இருந்தது.

    அவள் சொன்னதையே திரும்பத் திரும்பச் சொன்னபோது, எனக்குப் பொறுக்கவில்லை. “குழந்தைபோல் பேசாதே,” என்றேன் கண்டிப்பான குரலில்.

    அதை எதிர்பார்க்காத சாரதாவின் முகத்தில் அதிர்ச்சி. “நான்தான் இங்கே உட்கார்ந்து கொண்டிருந்தேன்,” என்றாள் விடாப்பிடியாக. அவளால் தோல்வியை ஏற்க முடியவில்லை.

    வயதிற்கும், முதிர்ச்சிக்கும் சம்பந்தம் கிடையாது.

    எத்தனை வயதாகியும் குழந்தைத்தனமாக நடப்பவர்களுக்கு மனமுதிர்ச்சி குறைவு. இத்தகையவர்கள் ஒன்றுமில்லாத சமாசாரங்களைக் குறித்து விவாதம் செய்வார்கள். அவர்களுக்குச் சம்பந்தமே இல்லாத விஷயங்களிலும் மூக்கை நுழைப்பார்கள்.

    எல்லாவற்றிலும் குறை கண்டுபிடித்துக்கொண்டிருப்பதும் முதிர்ச்சி குறைவு என்பதைத்தான் காட்டுகிறது.  (விமர்சகர்கள் இந்த விதிக்கு விலக்கு).

    கதை

    பள்ளிக்கூட வருடாந்திர விளையாட்டுத் தினத்தன்று நடந்து முடிந்த குறைகளை அதற்கு மறுநாள் முழுவதும், பல ஆசிரியைகள் அதற்கு பொறுப்பு ஏற்றிருந்த மிஸஸ் சூவிடம் (Mrs. Choo) சொல்லிக்கொண்டே இருந்தார்கள். எல்லாவற்றிற்கும் அவள்தான் காரணம் என்பதுபோல் அவளைத் தாக்கிக்கொண்டே இருந்தார்கள்.

    அவளைப் பார்த்தால் எனக்குப் பரிதாபமாக இருந்தது.

    வேலை முடிந்து, வீட்டுக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தபோது, என் தோளில் கைபோட்டாள் மிஸஸ் சூ.

    நான் விழித்தேன். அவளுடன் அவ்வளவாகப் பேசியதில்லை. எதற்குத் தோழமை?

    “தாங்க்ஸ். நீ ஒருத்திதான் புகார் செய்யவில்லை,” என்று விளக்கினாள், நன்றியுடன்.

    நான் லேசாகச் சிரித்து, “வருடத்தில் ஒரு நாள். அதுவும் முடிந்துவிட்டது. அதைப் பற்றிப் பேசி இனி என்ன ஆகப்போகிறது!” என்றேன்.

    மருந்து மாத்திரைகளால் மட்டும்தான் பக்கவிளைவுகள் ஏற்படும் என்பதில்லை. எல்லாத் தொழிலிலும் உண்டு.

    வயதில் இளையவர்களுடன் ஒரு நாளின் நீண்ட பகுதியைக் கழிப்பதால், சில வருடங்களிலேயே ஆசிரியர்களும் அவர்களைப்போலவே நடக்கும் அபாயம் இருக்கிறது.

    ஒருவருக்கு முதிர்ச்சி ஏற்பட்டுவிட்டது என்று எப்படி அறிவது? (முதலில் அமையாவிட்டாலும், பழகிக்கொள்ளலாம்).

    1  ஒரு காரியத்தில் இறங்குமுன், அதனால் விளையக்கூடும் வேண்டாத விளைவுகளைப்பற்றி நன்கு யோசிப்பார்கள்.

    இதற்கு விலக்கு குழந்தைகள்.

    மின்சார மின்தூக்கியில் உற்சாகமாகக் குதித்து ஏறுவார்கள், உடன் இருக்கும் தாய் வருகிறாளா என்றுகூடப் பார்க்கத் தோன்றாது. மேலை போனதும் தனியாக இருக்கிறோமே என்ற அச்சம் எழும்.

    அதை அன்றுடன் மறந்து, மறுபடியும் அந்தத் தவற்றையே செய்வார்கள்!

    ஒரு சிறுவன் அப்படிச் செய்ததற்காக, பயந்துபோன அவன் அன்னை அவனை அடிக்க ஆரம்பித்தாள்.

    நான், “விடுங்கள். என் பேரனும் இப்படித்தான் பண்ணுவான். நானும் அவன் அம்மாவும் இரண்டு கைகளையும் இறுக்கிப் பிடித்துக்கொள்வோம், ஒவ்வொரு முறையும்!” என்று சிரித்தேன்.

    அவளுடைய மகன் கூடுதலாக அடி வாங்காமல் பிழைத்தான்.

    2   தம் பிழைகளுக்குப் பொறுப்பு ஏற்பார்கள்.

    தாம் வாழ்வில் முன்னேறாததற்குக் காரணம் பெற்றோர் அல்லது ஆசிரியர்கள் என்று பழியைப் பிறர்மீது போடுவோர் பலர்.

    `என் தந்தை குடிகாரர். குடும்பத்தில் அக்கறையே செலுத்தவில்லை. அவர் தக்க வழி காட்டியிருந்தால், எங்கேயோ போயிருப்பேன்!’

    `என் தாய் எனக்கு ரொம்பச் செல்லம் கொடுத்து வளர்த்துவிட்டாள். நான் செய்யவேண்டிய ஒவ்வொரு காரியத்தையும் தானே முன்னின்று செய்வாள். நான் அவ்வளவு அருமையாம்! இப்போது சுய சிந்தனையே இல்லாது, பிறரை எதிர்பார்க்க வேண்டியிருக்கிறது!’

    ஏன் இப்படி ஆகிவிட்டோம் என்று புரிந்தபின், தம் போக்கை மாற்றி அமைத்துக்கொள்வது தம் கையில்தான் இருக்கிறது என்ற முதிர்ச்சி இவர்களிடம் கிடையாது.

    3 உள்ளுக்குள் அச்சம், துக்கம் போன்ற தவிர்க்கமுடியாத உணர்ச்சிகள் கொந்தளித்தாலும் அவைகளை அடக்கிவிடுவார்கள். வெளியில் கொட்டிவிடாது, அமைதியாகவே காணப்படுவார்கள்.

    சின்னஞ்சிறு குழந்தைப் பருவத்திலேயே இக்குணம் வெளிப்படும். சில குழந்தைகள் பசி வந்தால், பாலுக்காக அலறுவார்கள். (வளர்ந்தபின், அடக்கம் ஏற்படலாம்). சிலர் முனகலோடு நிறுத்திக்கொள்வார்கள்.

    பெரியவர்களானதும், பணக்காரரோ, ஏழையோ, வாழ்வில் சுகம் மட்டுமே அனுபவிப்பவர்கள் எவருமில்லை.

    ஆனால், எதிர்ப்படும் இடர்களைச் சமாளிக்க முடியாது, குரலை உயர்த்தியோ, பிறரைத் தாக்கியோ பேசுவது முதிர்ச்சியா?

    4 தமக்கு மட்டுமே முக்கியத்துவம் அளித்துக் கொண்டிராது, பிறருடைய நலனிலும் அக்கறை செலுத்துவார்கள்.

    இளவயதிலேயே இந்தக் குணத்தைப் பழக்கவேண்டும்.

    கதை

    ஆறு வயதான அச்சிறுமி, “எனக்கு அந்த முழு சாக்லேட்டையும் குடுத்தாத்தான் வாங்கிப்பேன்,” என்று அடம் பிடித்தாள். தானே முக்கியமாகக் கருதப்பட வேண்டும் என்ற சுயநலம் மிகுந்திருந்தது அவள் கோரிக்கையில்.

    அவளைவிட சற்றே பெரியவளான அக்காள் கூசிப்போனாள்.

    கண்டிப்பான குரலில், “அதெல்லாம் முடியாது. பிறருடன் பங்கு போட்டுக்கொள்ள வேண்டும்,” என்று தாய் கூறியபோது, “அப்படியானால் எனக்கு வேண்டாம்!” என்றாள் சிறுமி, வீம்புடன்.

    “உனக்கு வேண்டுமா?” என்று அக்காளிடம் கேட்க, அவள் குரலடைக்க, “வேண்டாம்!” என்று மறுத்தாள். தனக்கும் பகிர்ந்தளிக்க தங்கைக்கு மனம் வரவில்லையே என்ற வருத்தம் அவளுக்கு.

    “ஒருத்தருக்கும் வேண்டாமா? சரி,” என்று தாயே சாக்லேட்டைச் சாப்பிட்டாள்.

    இந்த நாடகத்தைப் பார்த்துக்கொண்டிருந்த தந்தை, “அறுபது காசு பெறாத அற்பப் பொருள்! இதைச் சின்னவளிடமே கொடுத்திருக்கலாமே!” என்றார்.

    “இதன் விலை முக்கியமில்லை. பிறருக்கும் பகிர்ந்து கொடுக்கவேண்டும் என்று அவளுக்குப் புரியவேண்டாமா?” என்று விளக்கினாள் தாய்.

    5 புகழ், இகழ் இரண்டுமே தம்மை அதிகமாகப் பாதிக்க விடமாட்டார்கள்.

    சிறு குழந்தைகளைப் புகழ்ந்தால் அவர்கள் அதை ஏற்று, நம்புவார்கள். தன்னம்பிக்கை வளர்வது இப்படித்தான். ஆனால், அளவுக்கு அதிகமாகப் புகழ்ந்தாலோ, கர்வம்தான் ஏற்படும்.

    பாராட்டுதற்குரிய தன்மைகள் பல இருந்தாலும், அதனால் கர்வப்பட்டு, சறுக்காமலிருக்க ஒரு வழி: “பிறர் புகழ்ந்தால், `நன்றி’ என்று சொல்லிவிட்டுப் போய்க்கொண்டே இரு. இல்லாவிட்டால், கர்வம் தலைக்கேறிவிடும்!” என்று சிறு வயதிலேயே ஒருவரை எச்சரிப்பதால் பலன் கிடைக்கும்.

    இகழ்ச்சியை எப்படிச் சமாளிப்பது?

    நம்மை இகழ்பவர் தவறே புரியாது, குறைகளே இல்லாதவரா என்று யோசித்தாலே போதுமே!

    6 தங்களுக்குச் சம்பந்தம் இல்லாத சமாசாரங்களுக்காக அதிகம் அலட்டிக்கொள்ளாதிருப்பார்கள். உலகை மாற்ற முடியாது. ஆனால், நம்மை மாற்றிக்கொள்ளலாம் என்று புரிந்தவர்கள்.

    இப்போக்கு கூட்டுக் குடும்பங்களில் முக்கியமாகக் கடைப்பிடிக்க வேண்டிய ஒன்றாகும்.

    `இப்படிச் செய்யாதே!’

    `உன் வயதில் நான்..,’ என்றெல்லாம் மறைமுகமாகக் கண்டனம் செய்தால், பிறர் கேட்கிறார்களோ, இல்லையோ, சொல்பவர்களைப் பிடிக்காமல் போகும்.

    ஒரு குழுவில் இணைந்து வேலை செய்யும்போதும், தான் செய்ய வேண்டியதில் கவனம் செலுத்தினால் போதாதா? பிறர் கேட்டால் மட்டுமே உதவி செய்வதைவிட்டு, ஓயாமல் `அறிவுரை’ என்ற பெயரில் வீண் அதிகாரம் எதற்கு?

    7 செய்யும் தொழிலைக் கவனமாகச் செய்வார்கள். எவ்வளவு அதிருப்தி ஏற்பட்டாலும், பாதியில் விட்டுச் செல்வது இவர்கள் குணமல்ல.

    கதை

    சிபாரிசுடன் தன் மகனை அந்தத் தனியார் அலுவலகத்தில் சேர்த்திருந்தாள் பானு.

    ஒரு வருடத்திற்குள், அவனுக்குக் கொடுக்கப்பட்ட போனஸ் தொகையானது மேலதிகாரிகளுக்கு அளிக்கப்பட்டதைவிட மிகக் குறைவாக இருக்கிறது என்று ஆத்திரப்பட்டு, சண்டை பிடித்தாள். தனக்குச் சரியெனப் படாத எந்த ஒன்றையும் அவளால் பொறுத்துப்போக முடியவில்லை.

    “என் மகன் இனி இங்கு வேலை பார்க்கவேண்டாம்,” என்று அவனுடைய எதிர்காலத்தையும் பாழடித்தாள், நல்ல வேலை கிடைப்பது துர்லபம் என்று உணராது.

    தாயின் போக்கு புரியும்போது, மகன் அவளைக் குறை கூறுவான்.

    முதிர்ச்சி உடையவர்களோ என்றாவது பாராட்டு பெறுவார்கள் — பெயர், புகழுக்காகச் சுயமாகப் பெருமுயற்சி எடுக்காவிட்டாலும்.

    Share
  • ராம நாமமே துதி மனமே!

    ராம நாமமே துதி மனமே!

    தஞ்சாவூர் சங்கர ஐயர் இயற்றிய ராம நாமமே துதி மனமே என்ற புகழ்பெற்ற பாடலை, கான பிரம்மம் கிருஷ்ணகுமார் குரலில் கேளுங்கள். ராம நாமத்தை ஜபியுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • இராமருக்குத் தாடி, மீசை ஏன்? – ஓவியர் ஸ்யாம் – 12

    இராமருக்குத் தாடி, மீசை ஏன்? – ஓவியர் ஸ்யாம் – 12

    சந்திப்பு: அண்ணாகண்ணன்

    இராமரைத் தாடி, மீசையுடன் வரைந்தது ஏன்? இராமர் 30 அடி உயரமும் சீதை 25 அடி உயரமும் இருந்தார்களா? ஓவியத்தில் இராமரையும் கிருஷ்ணரையும் எப்படி வேறுபடுத்தி வரைகிறீர்கள்? அவதார் படத்தின் பாத்திரத்துக்கு இராமர் தூண்டுதலாக இருந்தாரா? சில ஓவியங்களை அல்லது சிற்பங்களை எங்கிருந்து பார்த்தாலும் நம்மையே பார்ப்பது போல் இருப்பது எப்படி? இத்தகைய கேள்விகள் பலவற்றுக்கும் ஓவியர் ஸ்யாம், ஸ்ரீ ராம நவமி அன்று பதில் அளித்தார். அவருடைய சுவையான பதில்களைப் பாருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • வால்மீகியின் இராம காதை – எளிய பாடலாக

    வால்மீகியின் இராம காதை – எளிய பாடலாக

    மூல வடிவமான வால்மீகி இராமாயணத்தை எளிய தமிழ்ப் பாடலாக நமக்கு வழங்குகிறார், கான பிரம்மம் கிருஷ்ணகுமார். கேட்டு மகிழுங்கள். இந்த இராம நவமியில் அண்ணல் இராமபிரான் அருள் பெறுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • சீர்காழிச் சீராம விண்ணகரம் – ஸ்ரீ கோதண்டராமர் திருக்கல்யாணம்

    சீர்காழிச் சீராம விண்ணகரம் – ஸ்ரீ கோதண்டராமர் திருக்கல்யாணம்

    இந்த ஸ்ரீ ராம நவமியில், சீர்காழிச் சீராம விண்ணகரம் – ஸ்ரீ கோதண்டராமர் திருக்கல்யாண வைபவத்தைக் கண்டு களியுங்கள்.

    நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
    தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
    சென்மமும் மரணமும் இன்றித் தீருமே
    இம்மையே இ‘ராம’ என்று இரண்டு எழுத்தினால்

    எனக் கம்பநாடன் கூற்றுக்கு அமைய, உங்களுக்கு எல்லா நலன்களும் பெருகட்டும். உங்கள் இல்லத்தில் மங்கலமும் மகிழ்ச்சியும் திகழட்டும்.

    அர்ச்சகர் – சாரங்கன் பட்டாச்சாரியார்
    ஒருங்கிணைப்பு – ராம்குமார்

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • சேக்கிழார் பாடல் நயம் – 125 (நள்ளார்களும்)

    சேக்கிழார் பாடல் நயம் – 125 (நள்ளார்களும்)

    திருச்சி புலவர் இராமமூர்த்தி

    நள்ளார் களும்போற்றும்  நன்மைத் துறையின்கண்
    எள்ளாத செய்கை இயல்பின் ஒழுகுநாள்
    தள்ளாத தங்கள்  தொழிலுரிமைத் தாயத்தின்
    உள்ளான்  அதிசூரன்  என்பான்  உளன் ஆனான்.    5

    பொருள்

    பகைவர்களும் பாராட்டும் படியான நன்மைத் துறையிலே எவ்வகையானும் இகழப்படாத செய்கையில் இயல்பிலே இவர் ஒழுகுகின்ற காலத்தில் விடுபடாதபடி பிணைந்துள்ள தமது தொழில் உரிமைத் தாயத்தில் உள்ளானாய் அதிசூரன் எனப்படுவான்  ஒருவன்  இருந்தான்.

    விளக்கம்

    ‘நள்ளார்களும் போற்றும் நன்மைத்துறை’   இத்தொடர் நன்மைத் துறை யாதலின் பகைவர்களும் போற்றினார்கள். பகைவராலும் பாராட்டப்படத் தக்கவாறு இவரது நன்மைநிலை யொழுக்கம் சென்றது என்பதாம்.  நள்ளார் – இவர்பால் வாள்விஞ்சை பயின்ற அரசரால் வெல்லப்பட்டோரும் வெல்லப்பட நின்றோரும் ஆகிய பகைவர். போற்றும் பாராட்டும் வகையால்  பகைத்திறம் ஒழிந்து உய்யும். இவர் அன்பர் ஆதலின் இவர் எவரையும் நள்ளாராகக் கொண்டவர்  அல்லர். . இவர் பாற் படைபயின்ற அரசர்க்கே அரசகாரியத்தில் நள்ளார் உளராவர் என்க. அங்ஙனமாயினும் ஒருவன் தாயபாகப் பொறாமை கருதி இவர்பால் ஏற்கத்தகாத  இகல்புரிவானாயினான் எனச் சரிதந் தொடங்கிச் செல்லுமுகத்தால் இப்பாட்டில் இவரது இயல்பு ஒழுக்கங்கூறி அவ்விகல் கொண்டோனையும் உடன் கூறிய உள்ளுறை காண்க.

    “புல்லாதார் முரண்  அடக்கிப் பொருள் கவர்வார் என்பதெவன்?,
    செல்லாத பல்வேறு தீபத்துச் செங்கோன்மை,
    வல்லாரும்  தம் தமது ஏத்த  அரிய பொருள் வரவிடுத்து,
    நல்லாராய்  ஒப்புரவு நட்படைய நடக்கின்றார்” (திருவாதவூரடிகளுக்கு உபதேசித்த படலம்) என்ற திருவிளையாடற் புராணக்கருத்தை இங்கு வைத்துக் காண்க.

    நள்ளார்களும் போற்றுதல் பகைமை பற்றி யிகழாது, நெறிவழுவாது நிற்கும் தன்மை நோக்கிப் புகழ்தல். நன்மைத்துறை – நல்லொழுக்கம்   திருநீற்றினன்பு.  எள்ளாதசெய்கை இயல்பு – என்றும் கைவிடா தொழுகும் தன்மை. இயல்பு – அவர் நினைந்து மேற்கொள்ள வேண்டுவதொன்று  அன்று – இஃது   அவர்   இயற்கையேயாம் என்னும்படி.

    விபூதியைப் பாதுகாக்கு நன்னெறியில் நூல்களால் புகழப் படாத திருத்தொண்டினை நூலாராய்ச்சியின்றி இயற்கையாகவே கொண்டு ஒழுகுகின்ற

    – என்பது இராமநாத செட்டியார் உரைக் குறிப்பு.

    தள்ளாத தங்கள் தொழில் உரிமைத் தாயம் – விலக்க முடியாத வண்ணம் தமது தொழிலின் உரிமை பெற்ற தாயபாகம்  உடையவன். தாயத்தின் உள்ளான் – தாயாதி. தாயத்தால் மட்டும் உள்ளானேயன்றி வேறு எவ்வகையானும் உள்ளானல்லன் என்பது குறிப்பு.

    அதிசூரன் என்பான் – என்பான் – எனப்படுவான். தன்னையே தான் சாலமதித்துத் தன்னை அதிசூரன் என்று சொல்லிக்கொள்வான் என்று  உரைத்தலு மொன்று. உளன் ஆனான் – அவ்வகையிலே உள்ளவனாயினன்.

    அரிசூரன் – என்பது பாடம்.

    திருநீறு  அணிந்து  போரின்கண் நின்ற சிறப்பே அவனுக்குப் பெருமை தந்தது  என்பதை இப்பாடல்  குறிப்பாகப்  புலப்படுத்துகிறது.

    Share
  • கம்பனில் உருவெளித்தோற்றம்

    கம்பனில் உருவெளித்தோற்றம்

    முனைவா் பா. பொன்னி
    உதவிப்பேராசிாியா் மற்றும் துறைத்தலைவா், தமிழ்த்துறை
    தி ஸ்டாண்டா்டு ஃபயா் ஒா்க்ஸ் இராசரத்தினம் மகளிா் கல்லூாி (தன்னாட்சி)
    சிவகாசி.

    கம்பராமாயணம் மனிதா்களை மட்டும் அல்லாது அரக்கா்கள், குரங்குகள், கரடிகள் என்று பல்வேறு வகையான நிலையில் உள்ள பாத்திரங்களையும் மையப்படுத்தி அமைந்த காப்பியம். ஆகவே அக்காப்பியத்தில் மனிதா்களின் இயல்புகளை மட்டும் அல்லாது பல்வேறு வகைப்பட்ட உயிா்களின் இயல்புகளையும் மனநிலைகளையும் நாம் காணஇயலுகின்றது. கம்பா் இத்தகைய பல்வேறு வகையான பாத்திரங்களையும் அவரவா் குலத்திற்கு ஏற்ற வகையிலும், குலத்திற்கு மாறுபட்ட நிலையிலும் படைத்துக்காட்டியதன் வழி சிறந்த உளவியல் அறிஞராக அடையாளம் காணப்படுகிறாா். அவ்வகையில் உளவியல் கூறுகளுள் ஒன்றான உருவெளித்தோற்றத்தினை கம்பராமாயணத்தில் கம்பா் எவ்வகையில் படைத்துக் காட்டியுள்ளாா் என்பதனை கம்பராமாயணப் பாத்திரங்கள் வாயிலாக ஆராய்வதாக இக்கட்டுரை அமைகிறது.

    கருதுகோள்

    கம்பராமாயணத்தில் இராவணன், சூா்ப்பணகை இவா்கள் இருவாின் மிகுதியான முறையற்ற பாலுணா்வினை வெளிக்காட்ட கம்பா் உருவெளிக்காட்சியினை ஓா் உத்தியாகப் பயன்படுத்தியுள்ளாா் என்ற கருதுகோளினை முன்வைத்து இக்கட்டுரை அமைகிறது.

    ஆய்வு அணுகுமுறை

    விளக்கமுறை அணுகுமுறை மற்றும் உளவியல் அணுகுமுறை ஆகிய அணுகுமுறைகள் இக்கட்டுரையில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

    சான்றாதாரங்கள்

    கம்பராமாயணம் முதன்மை ஆதாரமாகவும், கம்பராமாயணம் மற்றும் உளவியல் தொடா்பான ஆய்வு நூல்கள், அகராதிகள் ஆகியவை துணைமை ஆதாரங்களாகவும் அமைந்துள்ளன.

    உருவெளித்தோற்றம்

    உருவெளித்தோற்றம் எனபதற்கு “இடைவிடா நினைப்பினால் எதிாிலுள்ளது போல் தோன்றும் போலித்தோற்றம்“1 என்று சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் அகராதி பொருள் தருகின்றது.

    தமிழ் தமிழ் அகர முதலியும் “இடைவிடா நினைப்பினால் ஒரு பொருள் எதிாில் காணப்படுவது போல் தோன்றும் போலித் தோற்றம் மனத்திலுள்ள பொருளின் மருட்சித் தோற்றம்“2 என்று விளக்கம் அளிக்கின்றது.

    உருவெளித் தோற்றம் என்பதனை “மனநினைவின் படி ஒருவருக்குக் கட்புலனாகும் தோற்றத்தை மனதில் வேறு நினைவுள்ள பிறா் காணவியலாது. உள்ளத்தில் ஊன்றியுள்ள நினைவே உருவெளியில் உருப்பெற்றுத் தோற்றம் அளிப்பது. ஆதலான் அவரவா் நினைவில் உள்ளதே அவரவா்க்கு உருவெளித் தோற்றமாகக் காட்சி வழங்கும்”3 என்றும் குறிப்பிடுவா்.

    இதன்வழி உருவெளிக்காட்சி என்பதனை மனதில் ஆழப்பதிந்த உருவம் பிறா்க்குப் புலனாகாமல் தன் அளவில் வெளிப்பட்டுத் தோன்றும் காட்சி எனலாம்.

    தொல்காப்பியா் சுட்டும் உருவெளிக்காட்சி

    தொல்காப்பியா் தலைவன் தலைவிக்கு இடையிலான மெய்யுறு புணா்ச்சிக்குாிய நிமித்தங்களைக் குறிப்பிடுகையில்,

                            ”வேட்கை ஒருதலை உள்ளுதல் மெலிதல்
    ஆக்கஞ் செப்பல் நாணுவரை இறத்தல்
    நோக்குவ எல்லாம் அவையே போறல்
    மறத்தல் மயக்கஞ் சாக்காடு என்றிச்
    சிறப்புடை மரபினவை களவென மொழிப”

                                                               ( தொல்.களவியல்.நூ.9 )

    என்று சுட்டுவாா். இந்நூற்பாவிற்கு விளக்கம் தரும் இளம்பூரணா் ”நோக்குவ எல்லாம் அவையே போறலாவது தன்னாற் காணப்பட்டன எல்லாந் தான் கண்ட உறுப்புப் போலுதல்”4 என்று குறிப்பிடுவாா். காதல் கொண்டவா்களுக்குத் தாம் காணும் பொருட்களில் எல்லாம் தன்னால் விரும்பப் பட்டவாின் தோற்றம் தொியும் என்ற உளவியலை உளவியலாா் சுட்டும் உருவெளிக்காட்சியுடன் பொருத்திப் பாா்க்க இடமுள்ளது. இக்கருத்திற்கு,

    “தன்னாற் காணப்பட்டன எல்லாம் தான் கண்ட உறுப்பு போலுதல் என்பா் இளம்பூரணா். சூா்ப்பணகை இராவணன் கண்ட உருவெளித் தோற்றத்தை இதற்கு எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம். உருவெளித்தோற்றத்தை உளவியலாா் உருவெளித்தோற்றம் (Hallucination) என்று கூறுவா்”5 என்ற கருத்தும் அரண் சோ்க்கின்றது.

    கம்ராமாயணத்தில் உருவெளிக்காட்சி

    கம்பராமாயணத்தில் கம்பா் பல இடங்களில் உருவெளிக்காட்சியினைப்  படைத்துக்   காட்டியுள்ளாா்.

    • இராமனைக் கண்டு காதல் கொண்ட சூா்ப்பணகைக்குக் காணும் இடம் எங்கும் இராமனின் உருவம் தோன்றுதல்.
    • சூா்ப்பணகையின் வருணனையால் சீதையை நோில் காணாமலேயே சீதையின் உருவத்தை உருவெளிக்காட்சியில் கண்டு இராவணன் காமம் கொள்ளுதல்.
    • இராவணன் தான் உருவெளிக்காட்சியில் கண்ட உருவத்தினை சூா்ப்பணகையிடம் காண்பித்து அவ்வுருவம் சீதை தானா? என்று கேட்கும் நிலையில் அவ்வுருவம் சூா்ப்பணகைக்கு இராமனாகத் தோன்றுதல்

    போன்ற இடங்களில் உருவெளிக்காட்சியைக் கம்பா் வெளிப்படுத்தி இருப்பதைக் காணஇயலுகின்றது. கம்பாின் உருவெளிக்காட்சித் திறனை நாம் முழுமையாகக் கண்டு வியக்க இயலுவது இராவணன் மற்றும் சூா்ப்பணகையின் பாத்திரங்கள் வாயிலாகவே என்றால் அது மிகையல்ல.

    சூர்ப்பணகை இராமனைக் காணுதல் :

    மனித வாழ்வில் பாலுணா்ச்சி முதன்மையான இடம் வகிக்கின்றது. “மனிதனின் உளவாழ்வுக்குப் (mental life) பாலுணர்ச்சியே ஆதாரமாகும். அவனின் தனித்த குணங்கள் (individual characters) குடும்ப உறவுகள் (family relations) சமுதாய உறவுகள் (social relations) ஆகிய அனைத்தும் பாலுணர்ச்சி அடிப்படையில் தான் நிகழ்கின்றன. மேலும் உளவாழ்வின் உந்து சக்தியாய் பாலுணர்ச்சி விளங்குகிறது”6 என்றும் குறிப்பிடுவா்.சூா்ப்பணகையிடம் இப்பாலுணா்வு மிகுதியைக் காணமுடிகின்றது.

    கைகேயியின் வரத்தினால் கானகம் சென்ற இராமன்,  சீதை இலக்குவன் ஆகியோரோடு கோதாவரி நதி ஓரத்தில் பஞ்சவடி ஆசிரமத்தில் தங்கி இருக்கிறான். அப்பகுதி சூர்ப்பணகையின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதி என்பதால் அவள் அப்பகுதிக்கு வந்த பொழுது இராமனைக்  காண்கிறாள். அவள் அரக்கர் குலத்தைச் சார்ந்தவள் ஆதலால் இராமனைக் கண்டவுடன் அவனைக் கொல்ல வேண்டும் என்ற எண்ணமே அவளுக்கு மேலோங்கி இருக்க வேண்டும். ஆனால் இராமனைக் கண்டவுடன் அவன் மீது காதல் கொள்கிறாள். அவனை அடைய வேண்டும் என்ற எண்ணம் அவளுக்கு மேலோங்கி நிற்கிறது.அவன் தவக்கோலத்தைக் கண்டு அவள் ஏங்கி நிற்கும் காட்சியை,

                            எவன் செய இனிய இவ் அழகை எய்தினோன்
    அவம் செயத் திருவுடம்பு அலச நோற்கின்றான்
    நவம் செயத்தகைய இந் நளின நாட்டத்தான்
    தவம் செய தவம் செய்த தவமே என் என்கின்றாள்

                                       (அயோத்தியா காண்டம் சூர்ப்பணகைப் படலம் -235)

    என்ற பாடல் வெளிக் காட்டுகிறது. அப்பாலுணா்வின் உந்துதலால் சூா்ப்பணகை இராமனிடம் தன்னுடைய காமத்தினை வெளிப்படுத்துகிறாள்.

                            தாம் உறு காமத் தன்மை தாங்களே உரைப்பது என்பது
    ஆம் எனல் ஆவ தன்றால் அருங்குல மகளிர்க்கு அம்மா
    ஏமுறும் உயிர்க்கு நோவேன் என்செய்கேன் யாரும் இல்லேன்
    காமன் என்று ஒருவன் செய்யும் வன்மையைக் காத்தி

                                       (அயோத்தியா காண்டம் சூர்ப்பணகைப் படலம் -262)

    என்று தன்னுடைய விருப்பத்தினைத் தெரிவிக்கிறாள். இராமன், “நான் அரச குலம் நீ அந்தணர் குலம்“ என்று குலவேறுபாட்டைச் சுட்டுகிறான். அதுமட்டுமல்லாது, “உன்னுடைய உடன் பிறந்தவர்கள் உன்னைத் திருமணம் செய்து கொடுத்தால் ஏற்றுக் கொள்வேன்“ என்னும் பொருள் படவும் பேசுகின்றான். சூா்ப்பணகை மகிழ்வுடன் இராமனும் தன் அண்ணன்களும் உறவு கொள்ளும் சூழலை எடுத்துரைக்கிறாள். சூர்ப்பணகையின் கூற்றைக் கேட்ட இராமன் அப்பொழுதும் தனக்குத் திருமணம் ஆனதைக் கூறவில்லை. “உன்னுடைய கருணையையும் பெற்றேன். அதனால் அரக்கரது அருளும் பெற்றேன்“ என்று கூறி நகைக்கிறான். அப்போது சீதை பர்ண சாலையில் இருந்து வெளியில் வருகிறாள். அதன் பின்னரே இராமன் தனக்குத் திருமணம் ஆனமையைக் குறிப்பிட்டுச் சூா்ப்பணகையை அவ்விடத்தை விட்டு வெளியேறும்படிக் கூறுகின்றான். ஆனால் அதன் பின்னரும் அவள்   இராமனை விரும்புகிறாள். அதன் காரணம் அவளது மிகுதியான பாலுணா்வின் வெளிப்பாடே எனலாம்.

    இராமனின் உருவெளித்தோற்றத்தைக் காணல்

    பா்ணசாலையை விட்டுச் சென்ற சூா்ப்பணகை எங்கும் இராமனின் தோற்றத்தைக் கண்டு துன்பம் அடைகிறாள்.

                வந்து காா் மழை தோன்றினும் மா மணிக்
    கந்து காணினும் கைத்தலம் கூப்புமால்

                                       (ஆரண்ய காண்டம் – சூா்ப்பணகைப்படலம் – 297  1-2)

    என்ற படலடிகளின் வாயிலாக காிய மேகத்திலும், நீலமணித்தூண்களிலும் சூா்ப்பணகை இராமனின் தோற்றத்தைக் காண்பதை அறியலாகின்றது. மேலும்,

                வீரன்மேனி வெளிப்பட வெய்யவள்
    காா் கொள் மேனியைக் கண்டனளாம் என
    சோரும் வெள்கும் துணுக்கெனும் அவ்உருப்
    பேருங்கால் வெம் பிணியிடைப் பேருமால்

                                                   (ஆரண்ய காண்டம் – சூா்ப்பணகைப்படலம் – 300)

    என்ற பாடலின் வழி சூா்ப்பணகை இராமனின் உரு வெளிக்காட்சியைக் கண்டு வெட்கம் கொள்வதையும், அவ்வுருவம் மறையும் சூழலில் துன்பம் அடைவதையும் காணஇயலுகின்றது.

    இராவணன் சீதையின் உருவெளித் தோற்றத்தினைக் காணுதல்

    இராவணன் அரசன் என்ற நிலையில் சிறந்த தலைவனாகவே கம்பரால் படைக்கப்பட்டுள்ளான். இலக்குவனால் அங்கங்கள் குறைக்கப்பட்டு  சூா்ப்பணகை  தன் முன் வந்த சூழலிலும் அவளது குற்றச்சாட்டினை முழுமையாக ஏற்றுக் கொள்ளாமல்,

            பொய் தவிா் பயத்தை ஒழி புக்க புகல்

                                       (ஆரண்ய காண்டம்- சூா்ப்பணகை சூழ்ச்சிப்படலம் – 602 4)

    என்றே குறிப்பிடுகிறான். சூா்ப்பணகை அரக்கியாக இருந்தாலும் இராமன் மேல் தான் காமம் கொண்டமையை மறைக்க முற்பட்டு சீதையை இராவணனுக்காக எடுத்து வரமுற்பட்ட நிலையிலேயே தனக்கு இத்தகைய கொடுமை நோ்ந்ததாகக் குறிப்பிடுகிறாள். இராவணனுடைய மனதினை மாற்ற சீதையின் அழகினை வருணிக்கத் தொடங்குகின்றாள்.

    சூர்ப்பணகை சீதையின் அழகைப் பற்றிக் கூறிய அளவிலேயே இராவணன் சீதை மீது காமம் கொள்கிறான்.

                            கரனையும் மறந்தான் தங்கை மூக்கினைக் கடிந்து நின்றான்
    உரனையும் மறந்தான் உற்ற பழியையும் மறந்தான் வெற்றி
    அரனையும் கொண்ட காமன் அன்பினால் முன்னைப் பெற்ற
    வரனையும் மறந்தான் கேட்ட மங்கையை மறந்திலாதான்

                                       (ஆரண்ய காண்டம்- சூா்ப்பணகை சூழ்ச்சிப்படலம் – 634)

    என்ற பாடல் இராவணனின் மனநிலையினைப் புலப்படுத்தும். இராமனின் நினைவாக இருந்த சூர்ப்பணகையைப் போலவே, சீதையின் நினைவாக இருந்த இராவணனும் தனது உருவெளித் தோற்றத்தில் சீதையைக் காண்கிறான்.

                            பண்டே உலகு ஏழினும் உள்ள படைக்கணாரைக்
    கண்டேன் இவர் போல்வது ஓர் பெண் உருக் கண்டிலேனால்
    உண்டே எனின் வேறு இனி எங்கை உணர்த்தி நின்ற
    வண்டு ஏறு கோதை மடவாள் இவள் ஆகும் அன்றே.

                                       (ஆரண்ய காண்டம்- சூா்ப்பணகை சூழ்ச்சிப்படலம் – 696)

    என்ற பாடல் வழி, “இப்போது காணப்படும் அந்தப் பெண் வடிவினைப் போல   நான் இதுவரையில் ஏழுலகங்களிலும் எந்தப் பெண்ணையும் கண்டதில்லை. ஆகவே அந்த வடிவம் என் தங்கை தெரிவித்த வடிவமே“ என்று இராவணன் எண்ணுவதை அறியலாகின்றது. அத்துடன் இராவணன் நின்று விடாமல் அது சீதை தானா என்று அறிந்து கொள்ளச் சூர்ப்பணகையை அழைத்து வரும்படியும்  கூறுகிறான்.

    இராவணனுக்கும் சூா்ப்பணகைக்கும் இடையிலான உரையாடல்

    இராவணன் சூா்ப்பணகை இருவருமே தங்கள் உள்ளத்தில் மிகுதியான பாலுணா்வினைக் கொண்டு அறிவு செயல்படாத சூழலுக்குத் தள்ளப்பட்டு இருக்கின்றனா். “காமத்தின் மிகுதி தான் என்ன செய்ய வேண்டும் என்று அறியாத சிந்திக்கத் திறனில்லாத ஒரு மாறுபட்ட நடத்தைக்கு வழி வகுக்கிறது. இதை உளவியலார் நனவின் சிதைவு (dissociation of consciousness) என்பர். ஒரு சிக்கல் தனது விளைவுகளை நனவில் தீவிரமாகத் தோற்றுவிக்கும் போது அதனால் பாதிக்கப்படும். மனிதன் சிக்கலில் இயங்குவதைத் தெரிந்து கொள்ளாமலேயே இருப்பான்”7 என்று குறிப்பிடுவா். இந்நிலையினை இராவணன் சூா்ப்பணகை இருவாிடமுமே காணலாகின்றது.

    இராவணனின் அழைப்பின் போில் வந்த சூா்ப்பணகையிடம் இராவணன் தன் கண்முன்னால் தோன்றிய உருவம் காணப்படும் இடத்தை காண்பித்து அங்கு தொிவது சீதை தானா? என்று கேட்கின்றான். ஆனால் இராமனின் நினைவாகவே இருக்கும் சூா்ப்பணகை அந்த வடிவம் இராமனே என்று குறிப்பிடுகின்றாள். இதனை,

                            செந்தா மரைக்கண்ணொடுஞ் செங்கனி வாயி னோடுஞ்
    சந்தார் தடந்தோளொடுஞ் தாழ்தடக் கைக ளோடும்
    அந்தா ரகலத்தொடு மஞ்சனக் குன்ற மென்ன
    வந்தா னிவனாகுமவ் வல்வி லிராம னென்றாள்.

                                                   (ஆ.கா. மாரீசன் வதைப் படலம், பா.700)

    என்ற பாடலின் வழி அறியலாகின்றது.  சூர்ப்பணகை இராமனை இடைவிடாது சிந்தித்ததால் அவளுக்கு இராமனது வடிவே உருவெளித் தோற்றத்தில் தோன்றுகிறது. ஆகவே, ”செந்தாமரை மலர் போன்ற கண்களுடனும், சிவந்த கொவ்வைப் பழம் போன்ற வாயுடனும் அழகு நிறைந்த பெரிய தோள்களுடனும், தொங்குகிற பெரிய கைகளுடனும் அழகிய மாலை அணிந்த மார்புடனும் ஒரு மலை போல வந்த  அவன் இராமனே” என்று கூறுகின்றாள்.

    சூா்ப்பணகையின் கூற்றைக் கேட்ட இராவணன், “நான் கண்டது ஒரு பெண்ணின் வடிவம் ஆனால் நீ ஆணின் வடிவம் என்று கூறுவதன் காரணம் என்ன?“ என்று வினவுகின்றான். அதற்கு சூா்ப்பணகை, ”சீதை மேல் நீ காதல் கொண்டதால் அவளது வடிவம் எங்கெங்கும் உனக்கு தோன்றுகின்றது” என்று பதில் உரைக்கின்றாள். ஆனால் மீண்டும் இராவணன், ”நீ சொன்னது போலே இருக்கட்டும்.ஆனால் உனக்கு இராமனின் உருவம் தொிவதன் காரணம் என்ன?” என்று மீண்டும் வினவுகின்றான். அரக்கியாக இருந்தாலும் தான் கொண்ட காதலை வெளியே சொல்ல விரும்பாத சூா்ப்பணகை, ”இராமன் எனக்கு என்று இத்தகைய துன்பத்தைச் செய்தானோ அன்றிலிருந்து நானும் அவனை மறக்கவில்லை” என்று குறிப்பிடுகின்றாள். இவ்வாறு இராவணனும், சூா்ப்பணகையும் உருவெளித்தோற்றத்தில் மயங்கி சிந்திக்கும் திறன் இன்றி உரையாடல் நிகழ்த்துகின்றனா். உளவியலாா் குறிப்பிடும் மனக்கோட்டங்கள் இராவணனிடமும், சூா்ப்பணகையிடமும் மிகுந்திருப்பதை இதன் வழி அறியலாகின்றது.

    இவ்வாறு பாலுணா்வின் உந்துதலால் சூா்ப்பணகையும், இராவணனும் மிகுதியான காமத்தினால் தங்களின் சுயம் இழந்து உருவெளிக்காட்சியினால் மனக்குழப்பத்திற்கு ஆளாகி இருக்கும் நிலையினைக் கம்பா் சுவைபடக் காட்சிப்படுத்தி இருப்பதனை அறியலாகின்றது. அவா்களின் காமத்தின் மிகுதியை விளக்க உருவெளிக்காட்சியினை ஓா் உத்தியாக அவா் படைத்துக் காட்டியுள்ளாா் எனலாம்.

    சான்றெண் விளக்கம்

    1. http://www.tamilsurangam.in/tamil_dictionary/chennai_univercity_tamil_lexicon_dictionary/index.html
    2. https://agarathi.com/word
    3. டாக்டா்.ஔவை நடராசன்,கம்பா் காட்சி,ப.152
    4. பேராசிாியா் மு.சண்முகம் பிள்ளை(பதி), தொல்காப்பியம் பொருளதிகாரம் இளம்பூரணம் ,ப.19
    5. டாக்டா்.ந.சுப்பு ரெட்டியாா், தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை ,ப.77 பழனியப்பா பிரதா்ஸ் , சென்னை – 1988.
    6. தி.கு. இரவிச்சந்திரன், சிக்மண்ட் ஃபிராய்டு உளப்பகுப்பாய்வு அறிவியல் ப.150
    7. சாரதாம்பாள்,இலக்கியமும் உளப்பகுப்பாய்வும், ப.62

    துணைநூற்பட்டியல்

    1. இரவிச்சந்திரன்.தி.கு – சிக்மண்ட் ஃபிராய்டு உளப்பகுப்பாய்வு அறிவியல், அலைகள் வெளியீட்டகம், சென்னை. 2005.
    1. சண்முகம் பிள்ளை. மு (பதி) – தொல்காப்பியம் பொருளதிகாரம் இளம்பூரணம், முல்லை நிலையம், சென்னை. 1999.
    1. சாரதாம்பாள். செ. – இலக்கியமும் உளப்பகுப்பாய்வும், ஹாிஹரன் பதிப்பகம், தென்றல் நகா், மதுரை.2004.
    1. சுப்பு ரெட்டியாா். ந. – தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை, பழனியப்பா பிரதா்ஸ், சென்னை – 1988
    1. நடராசன். ஔவை – கம்பா் காட்சி, சேகா் பதிப்பகம், எம்.ஜி.ஆா்.நகா், சென்னை. 1980.
    1. பூவண்ணன் – கம்பராமாயணம் மூலமும் தெளிவுரையும், வா்த்தமானன் பதிப்பகம், தியாகராய நகா், சென்னை.

    Share
  • சீதம்மா மாயம்மா | தியாகராஜர் கிருதி | கிருஷ்ணகுமார் குரலில்

    சீதம்மா மாயம்மா | தியாகராஜர் கிருதி | கிருஷ்ணகுமார் குரலில்

    இராம நவமியை முன்னிட்டு, தியாகராஜர் கிருதியான ‘சீதம்மா மாயம்மா’ என்ற புகழ்பெற்ற பாடலை, கான பிரம்மம் கிருஷ்ணகுமார் குரலில் கேளுங்கள். இராமபிரான் அருள் பெறுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • சிங்கப்பூர் கிருஷ்ணன் கோவிலும் சீனக் கோவிலும்

    சிங்கப்பூர் கிருஷ்ணன் கோவிலும் சீனக் கோவிலும்

    சிங்கப்பூரின் வாட்டர்லூ தெருவில் கிருஷ்ணன் கோவிலும் சீனக் கோவிலும் அடுத்தடுத்து அமைந்துள்ளன. இதில் ஒரு கோவிலுக்கு வரும் பக்தர்கள், அடுத்த கோவிலுக்கும் சென்று வழிபடுகின்றனர். பல்லின மக்கள் வாழும் சிங்கப்பூரில், மத நல்லிணக்கத்திற்கு அடையாளமாக இவை திகழ்கின்றன. இந்தக் கிருஷ்ணன் கோவில், 1870இல் கட்டப்பட்டுள்ளது. சிங்கப்பூரின் மிகப் பழைமையான கோவில்களுள் ஒன்றான இது, அந்நாட்டின் தேசிய நினைவுச் சின்னமாகவும் அறிவிக்கப்பெற்றுள்ளது. இராம நவமியை முன்னிட்டு, இந்தக் கோவில்களைக் கண்டு மகிழுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • எவெர் கிவன் – ஜப்பானிய கப்பலுக்கு $900 மில்லியன் அபராதம்

    எவெர் கிவன் – ஜப்பானிய கப்பலுக்கு $900 மில்லியன் அபராதம்

    சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா

    சூயஸ் கால்வாய் வர்த்தகப் போக்கை அடைத்த எவெர் கிவன் கப்பல் சிறைப்பட்டது.

    எவர் கிவன் கப்பல் ஜப்பான் உரிமையாளிக்கு எகிப்து சூயஸ் கால்வாய் ஆணையகம் 900 மில்லியன் டாலர் நட்ட ஈட்டு நிதி தர வேண்டும் என்று தண்டனை விதித்துள்ளது.. தற்போது எவர் கிவன் கப்பல் கிரேட் பிட்டெர் ஏரியில் [Great Bitter Lake] நிறுத்தமாகி நங்கூரம் இடப்பட்டுள்ளது. கப்பல் 400 மீடர் [1312 அடி] நீளம் உள்ளது. 220,000 டன் பளு சுமக்கும் தகுதி உடையது. 2021 மார்ச் 23 இல் பெரும் புயல் அடித்து, கப்பல் முனை திசைமாறி, கால்வாய் கரையை உடைத்து, சிக்கிக் கொண்டது. கப்பலை விடுவிக்க 1.1 மில்லிய குயூபிக் அடி [30,000 கியூபிக் மீடர்] மண் வெட்ட வேண்டியதாயிற்று. 14 படகுகள் எவர் கவன் கப்பலை இழுக்கவோ, தள்ளவோ பயன்படுத்த வேண்டியதாயிற்று. காற்று அடித்த வேகம் : 40 நாட்ஸ் [40 knots] [1 nautical mile = 6080 ft ]. சூயஸ் கால்வாய் ஆணையகம், கப்பல் திசை மாற்றத்துக்குப் புயல் காற்று மட்டுமல்ல காரணம், கப்பலோட்டி நிபுணர் கைத் தவறுகளும் சேர்ந்துள்ளது என்று கருதுகிறது.

    120 மைல் நீளக் குறுகிய கால்வாய்ப் பகுதியைக் கடக்க முடியாது, 400க்கும் மேற்பட்ட உலக நாட்டுக் கப்பல்கள், நகர முடியாது போயின. ஆறு நாட்களில், டுவீட்டரில் 145,200 புகார்கள் எழுந்தன. 133,000 பங்கு வாணிபர் பாதிப்புகள் ஏற்பட்டன. 450 உலகக் கப்பல்கள் போக்கு அனுமதி பெறாமல் காத்துக் கிடந்தன. உலக வர்த்தகம் 12% பாதிப்பு, ஒரு மில்லியன் பாரல் குரூடாயில் முடக்கம், 8% திரவ இயற்கை வாயு [Liquified Natural Gas] இழப்பு ஒவ்வொரு நாளும் ஏற்பட்டது. லாயிடு நிரல்படி [LLyod List] நாள் ஒன்றுக்கு 9.6 பில்லியன் டாலர் வாணிப நிதி இழப்பு கணிப்பானது. [நிமிடத்துக்கு 6.7 மில்லியன் இழப்பு] . வால் வீதி வெளியீடு பதிவில் [Wall Street Journal] கப்பல் போக்குப் பளு சாதன வாடகை 47% மடங்கு ஏறியதாக அறியப் பட்டது. பொதுவாக உலக வணிக சாதனங்கள் தேங்காய்ப் பால், மேப்பில் சிரப், மோட்டார் உப சாதங்கள், ஃபோர்க் லிஃப்டுகள், அமேசான் சாமான்கள் முடக்கம் ஆயின.

    Google Sneaks In Suez Canal Easter Egg After Ship Finally Gets Unblocked - DesignTAXI.com

    View Post

    2021 மார்ச்சு 23 ஆம் தேதி சூயஸ் கடல் மார்க்கக் கால்வாயின் குறுகிய அகற்சிப் பகுதியில் ஊர்ந்து செல்லும் போது, பேய்க் காற்று அடித்து 400 மீடர் [1300 அடி] நீளக் கப்பல் திசை மாறி, கப்பல் முனை கரை மண்ணைக் குத்திச் சிக்கிக்கொண்டது. தைவானைச் சேர்ந்த அந்த பூதக் கப்பல் பெயர் : “எவர் கிவன்” 200,000 டன் வர்த்தகச் சுமை தூக்கி, கால்வாய்க் குறுக்கே மாட்டி, இருபுறக் கப்பல் போக்குவரத்தை, சுமார் 7 நாட்கள் தடை செய்தது. அது சிக்கிக்கொண்டதோடு, 37 கப்பல்கள், வாய்க்கால் மத்தியிலும், 70 கப்பல்கள், கால்வாய் முழு தூரத்திலும் முடக்கம் ஆயின. அத்துடன் நான்கு நாட்களில் கடக்கப் போகும் 306 கப்பல்களுக்கு நுழைவு எச்சரிக்கை விடுத்து, நிறுத்தம் அடைய எதிர்பார்த்தன. எவர் கிவன் பூதக் கப்பல் கரைக்குள் புகுந்த மண் கட்டி 30,000 குபிக் மீட்டர் [1,059,000 குபிக் அடி] எடுக்க, பல்வேறு கிரேன்களும், மண் தோண்டிப் படகுகளும் இராப் பகலாய் வேலை செய்தன. மேலும் முழுநிலவுக் காலமானதால், கடல் நீர்மட்டம் உயர்ந்து, மார்ச்சு 29 ஆம் தேதி பூதக் கப்பல் நேர்படச் செல்ல விடுதலை ஆனது. இப்போது [மார்ச் 29] 45 கப்பல்கள் இரு புறத்திலும் நகர்ந்து வருகின்றன. ஒரு நீள் கப்பல் 200 கி.மீடர் [120 மைல்] தூரக் கால்வாய் கடக்க சுமார் 12 மணி நேரம் ஆகிறது.

    ஒருவாரம் சூயஸ் கடல் மார்க்கப் போக்கு தடைப்பட்டதால், உலக நாடுகளின் வாணிப இழப்பு நிதி நாள் ஒன்றுக்கு சுமார் 9.6 பில்லியன் டாலர் என்று கணிக்கப்படுகிறது. அத்துடன் உலக நாடுகளில் பெட்ரோல் விலை ஏறும். மற்றும் சாதனங்கள், பொருட்கள் விலை ஏறும்.

    https://www.bbc.com/news/av-embeds/56743556/vpid/p09c5m7t

    The Suez Canal: A Critical Waterway Comes to a Halt

    சூயஸ் கால்வாய் அடைப்பால் வாணிப வருவாய்ப் பேரிழப்பு

    Suez Canal Map | Suez, Map, Egypt map

    சூயஸ் கால்வாய் குறுகிய அகற்சி [120 மைல்]

    The Routes around Africa

    நாலாயிரம் ஆண்டுகளுக்கு முந்தித் தோன்றிய கால்வாய்!

    கி.மு.1920 ஆண்டில் எகிப்து பெரோஸ் மன்னர்கள் [Pharaos] காலத்திலே மத்தியதரைக் கடலையும், செங்கடலையும் கால்வாய் மூலம் இணைக்கும் முன்னோடிப் பணிகள் முதலில் ஆரம்பிக்கப் பட்டன என்று எகிப்து சூயஸ் கால்வாய்ப் பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் டாக்டர் மம்தோவ் ஹம்ஸா [Dr.Mamdouh Hamza] அறிவிக்கிறார். டாக்டர் ஹம்ஸா நிலவியல் யந்திரப் பொறியியல் நிபுணர் [Civil Engineer, Soil Mechanics]. நீள நைல் நதியின் கடல் சங்கமப் பகுதியில் ஒரு கால்வாயை வெட்டி, இரண்டு கடல்களையும் சேர்த்ததாக வரலாறுகளில் அறியப்படுகிறது. முற்காலத்தில் ஈரோப்பிலிருந்து இந்தியாவுக்கு வர நைல் நதியின் வழியாகக் கப்பல்கள் முதலில் பயணம் செய்து, கால்வாய் மூலமாகக் கடலை அடைந்ததாகத் தெரிகிறது. அதன் பின்பு கால்வாய் கவனிப்பாரற்று அடுத்து கிரேக்க, ரோமாபுரி வேந்தர்களால் பல தடவை தோண்டப்பட்டு மீண்டும் புறக்கணிக்கப்பட்டது! எகிப்து நாடு அரேபியர் கைவசம் ஆன பிறகு, மறுபடியும் கால்வாய் தோண்டப்பட்டு, நிரப்பப்படாமல் பல்லாண்டுகள் கிடந்தது! பின்னால் கால்வாயில் நீர் நிரப்பப்பட்டது.

    Countries along the Suez

    கடல் மார்க்க சூயஸ் கால்வாய் அமைப்பு வரைபடம்

    இந்தியாவுக்கும் ஐரோப்பாவுக்கும் எகிப்து கால்வாய் வழியாக சுருக்குப் பாதை அமைக்க முதன்முதல் ஆலோசனை கூறியவர் பிரெஞ்சு அதிபதி நெப்போலியன்! நூறு மைல் நீளம், 200 அடி அகலமுள்ள சூயஸ் கால்வாய், ஐரோப்பாவில் ஏற்பட்ட தொழிற்புரட்சியின் விளைவாகப் பத்தொன்பதாம் நூற்றாண்டில், மனிதரால் படைக்கப்பட்ட மகத்தான ஒரு பொறியியல் பூதக் கால்வாயாகக் கருதப்படுகிறது! அந்த நூறு மைல்களைக் கடக்க ஒரு கப்பலுக்குச் சுமார் 15 மணி நேரம் எடுக்கிறது. பத்தாண்டுகளாக 2.4 மில்லியன் பணியாளிகள் அல்லும் பகலும் பணி செய்து, கட்டிய கடற்பாதை அது! கால்வாய் பூரணமாக 125,000 நபர்கள் உயிரைப் பலி கொடுத்துள்ளதாக அறியப் படுகிறது! டோக்கியோ, ராட்டர்டாம் [ஹாலந்து] கடற் பயண தூரத்தை 23% சதவீதம் சூயஸ் கால்வாய் குறைக்கிறது! செளதி அரேபியா துறைமுகம் ஜெட்டாவி லிருந்து [Jeddah], கருங்கடல் துறைமுகம் கான்ஸ்டென்ஸா வுக்குச் [Constanza] செல்லும் கப்பல், சூயல் மூலமாகச் சென்றால் 86% தூரத்தைத் தவிர்க்கிறது! அதுபோல் ஆஃபிரிக்கா முனை வழியாகக் கப்பல் லண்டனிலிருந்து பம்பாயிக்குச் சென்றால் 12,400 மைல்! ஆனால் சூயஸ் கால்வாய் வழியாகச் சென்றால் லண்டன், பம்பாய் கடல் தூரம்: 7270 மைலாகச் சுருங்குகிறது.

    Map showing Suez Canal and location of Ever Given in the Great Bitter Lake (30 March 2021)The Ever Given shown stuck then released in the Suez CanalGraphic showing how tugs could be used to refloat the Ever Given by pulling the ship away from the banks of the Suez canal.Graphic showing how dredgers could be used by salvage teams will attempt to refloat the Ever Given, using suction to remove sand and silt from below the vessel.A digger attempts to remove earth around the bow of the Ever Given, which is blocking the Suez Canal, Egypt (25 March 2021)Picture taken from a nearby tugboat after it's been moved

    தகவல்:

    1. https://www.bbc.com/news/world-middle-east-56574334?xtor=AL-72-%5Bpartner%5D-%5Bgnl.newsletters%5D-%5Bheadline%5D-%5Bnews%5D-%5Bbizdev%5D-%5Bisapi%5D&xtor=ES-213-%5BBBC%20News%20Newsletter%5D-2021March30-%5Btop+news+stories%5D

    2. https://www.bbc.com/news/56523659

    3. https://www.bbc.com/news/av-embeds/56743556/vpid/p09c5m7t

    4. https://www.bloomberg.com/news/articles/2021-04-13/egypt-seizes-ever-given-pending-900m-compensation

    5. https://www.foxbusiness.com/markets/egypt-seizes-ever-given-ship-in-suez-canal-demands-compensation

    Share
  • தபோவனம் ஸ்ரீ ஞானானந்த கிரி சுவாமிகள்

    தபோவனம் ஸ்ரீ ஞானானந்த கிரி சுவாமிகள்

    ஞானானந்தகிரி சுவாமிகள், ஓர் அத்வைத வேதாந்தி. ஆதிசங்கரர் இந்தியாவில் உருவாக்கிய நான்கு அத்வைத மடங்களுள் ஒன்றான ஜோதிர்மடத்தின் பீடாதிபதியாக விளங்கியவர். இமயமலையில் தவமியற்றி, கங்கோத்ரியில் பல ஆண்டுகளைக் கழித்த ஞானானந்தர், இந்தியாவின் பல பகுதிகளுக்கும் சென்றதோடு, திபெத், நேபாளம், இலங்கை, மலேசியா முதலிய இடங்களுக்கும் சென்று வந்தார்.

    திருக்கோவிலூருக்கு அருகில் தபோவனம் ஒன்றை ஏற்படுத்தி, பக்தர்களுக்கு வழிகாட்டினார். நாம சங்கீர்த்தனத்தில் பெரிதும் ஆர்வமுடைய ஞானானந்தரைப் பின்பற்றி இன்றளவும் இவர்தம் சீடர்கள் பஜனைக்கு முக்கியத்துவம் அளிக்கின்றனர். இவரைப் பற்றிய ‘அன்பே ஆரமுதே அருட்கடலே’ என்ற பாடலை, கான பிரம்மம் கிருஷ்ணகுமார் குரலில் கேளுங்கள். குருவருளும் திருவருளும் பெறுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 29

    கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 29

    -மேகலா இராமமூர்த்தி

    துந்துபிக்கும் வாலிக்கும் நடந்த கடும்போரில் அரக்கன் துந்துபியின் இரு மருப்புகளையும் பிடுங்கிய வாலி அவற்றாலேயே அவனை அடிக்க, வலிதாளாது அலறினான் துந்துபி. அத்தோடு விட்டானா வாலி? மலையின்மேல் இடி விழுந்தாற்போல் அவ் அரக்கனின் தலைமீது குத்தினான். அடுத்து, துந்துபியைத் தூக்கிய வாலி அவனைத் தன் கையால் சுழற்றி உயர வீச, அவ் அரக்கனின் உயிர் விண்ணுலகம் சென்றது; உடலோ மண்ணுலகில் உருசியமுக மலையில் மதங்க முனிவர் தவஞ்செய்யும் ஆசிரமத்தில் வீழ்ந்தது. குருதித் துளிகள் அங்குமிங்கும் தெறித்தன. அப்புனித இடத்தின் தூய்மையை அவ்வுடல் கெடுத்தது கண்ட முனிவர் சினந்து, ”இந்த அடாத செயலைச் செய்தவன் இம் மலைப்பக்கம் வந்தால் தலைவெடித்து இறப்பான்” என்று சாபமளித்துவிட்டார். அதனையறிந்த வாலி உருசியமுக மலைப்பக்கம் வருவதில்லை; ஆதலால்தான் நாங்கள் இங்கே அவன் தொல்லையின்றிப் பாதுகாப்பாய் இருக்கமுடிகின்றது என்றான் சுக்கிரீவன் இராமனிடம்.

    முட்டி வான் முகடு சென்று
         அளவி இம் முடை உடற்
    கட்டி மால் வரையை
         வந்து உறுதலும் கருணையான்
    இட்ட சாபமும் எனக்கு
         உதவும் என்று இயல்பினின்
    பட்டவா முழுவதும்
         பரிவினால் உரைசெய்தான். (கம்ப: துந்துபிப் படலம் – 4002)

    வாலியின் வலிமையைப் பறைசாற்றுகின்ற விதமாக அவன் துந்துபியை வதம்செய்த விதத்தைச் சுக்கிரீவன் விளக்கியதைக் கேட்ட இராமன், தன் இளவல் இலக்குவனின் ஆற்றலைக் கதிர்ச்செல்வன் மகனான சுக்கிரீவனுக்குக் காட்டவிரும்பி, ”இலக்குவா! துந்துபியின் உடலை இங்கிருந்து அப்புறப்படுத்து!” என்றதும்,  இலக்குவன் அதனைத் தன் கால் விரலால் எற்றினான்; அது மீண்டும் விண்ணுலகு சென்று மீண்டது.

    வாலியின் வலிக்குத் தங்கள் வலி சற்றும் குறைந்ததில்லை என்பதை இராமன் மராமரங்கள் ஏழைத் துளைத்துக் காட்டியும், இலக்குவன் மலைபோல் கிடந்த துந்துபியின் உடலை எற்றிக் காட்டியும் நிரூபித்தனர் வானரர்களுக்கு.

    இராம இலக்குவரின் வலிகண்ட வானரர் மகிழ்ச்சிக் களியோடு ஒரு சோலை புக்கனர். அப்போது, ”நாயகனே! உன்னிடம் நான் உரைக்க வேண்டியது ஒன்றுளது” என்றான் சுக்கிரீவன் இராமனிடம்.

    ”அதனைச் செப்புவாய் இப்போது” என்று இராமன் கூற, முன்னொரு நாள் நாங்கள் இங்கிருந்தபோது இராவணன் ஒரு பெண்ணைத் தூக்கிச் செல்வதைக் கண்டோம்; கதறியபடியே சென்ற அப்பெண் நின் தேவியாக இருக்கலாமென ஊகிக்கிறேன்; தன்னிலையை எங்களுக்கு அறிவிக்கக் கருதியோ என்னவோ அப்பெண் தன் அணிகலன்களையெல்லாம் துணியில் முடிந்து கீழேபோட்டாள்; நாங்கள் அவற்றை ஏந்திக்கொண்டோம்” என்று நிகழ்ந்தவற்றை உரைத்துச் சீதையின் அணிகலன்களை இராமனுக்குக் காட்டினான் சுக்கிரீவன்.

    அவற்றைக் கண்ட இராமனின் சிவந்த கண்களிலிருந்து புறப்பட்ட கண்ணீர் வெள்ளமானது அங்குள்ள பொருட்கள் யாவற்றையும் இழுத்துச் சென்றது. உடல் புளகித்ததால் எழுந்த மயிர்த்தொகுதி, உடல் முழுவதையும் மூடியது. பூரித்த அவன் தோள்கள் வேர்த்தன என்பேனா? வெப்பத்தில் வெதும்பின என்பேனா? என்கிறார் கம்பநாடர்.

    ஈர்த்தன செங்கண்
        நீர் வெள்ளம் யாவையும்
    போர்த்தன மயிர்ப் புறம்
        புளகம் பொங்கு தோள்
    வேர்த்தன என்கெனோ
        வெதும்பினான் என்கோ
    தீர்த்தனை அவ் வழி
        யாது செப்புகேன். (கம்ப: கலன்காண் படலம் – 4012)

    உடல் புளகிப்பதும் தோள் பூரிப்பதும் மகிழ்ச்சியின் வெளிப்பாடுகள். தோள் வியர்ப்பதும் வெதும்புவதும் துயரத்தின் வெளிப்பாடுகள். கண்ணீர் சிந்துவது உவகையாலும் நிகழும்; வருத்தத்தாலும் நிகழும். இவ்வாறு இராமனின் மெய்ப்பாடுகள் இன்பமும் துன்பமும் கலந்தவையாக இருந்தமையால் அவற்றை எவ்வாறு செப்புவேன்? என்கிறார் புவிபோற்றும் கவிச் சக்கரவர்த்தி.

    சீதை தன் அணிகலன்களைக் கீழே எறிய அவற்றைக் குரக்கினங்கள் எடுத்து அணிந்துகொண்ட செய்தியை நகைச்சுவையோடு புறநானூறு எனும் சங்கநூலும் பதிவுசெய்திருக்கின்றது.

    ஊன்பொதி பசுங்குடையார் எனும் புலவர் செருப்பாழி எறிந்த இளஞ்சேட்சென்னியின் கொடை வண்மையைப் பாடுமிடத்து, அவனுடைய அரண்மனை முன்றிலில் நின்று தடாரிப் பறையிசைத்த பொருநனின் வறுமைபோக, அணிகலன்களையும் பிற பொருட்களையும் வாரிக்கொடுத்தான் சென்னி. அவனோடு வந்திருந்த பெருஞ் சுற்றத்தினரோ விதவிதமான அணிகள் அணிந்து பழக்கப்படாதவர்களாதலால் அவ் அணிகளைப் பெற்றவுடன் செவியில் அணிய வேண்டிய தோடுகளை விரலிலும், விரலில் அணியவேண்டிய மோதிரங்களைச் செவியிலும், இடையில் அணியவேண்டியவற்றைக் கழுத்திலும், கழுத்தணிகளை இடையிலும் அணிந்து தடுமாறி நின்ற காட்சி இராவணனால் கவர்ந்து செல்லப்பட்ட சீதை கீழேயெறிந்த அணிகளைக் கண்டெடுத்த குரக்கினங்கள் அவற்றைத் தாறுமாறாக அணிந்துநின்ற காட்சிபோல் நகையை விளைவித்தது என ஒப்பீடு செய்கின்றார்.

    …மேம்படு சிறப்பின் அருங்கல வெறுக்கை
    தாங்காது பொழிதந் தோனே அதுகண்டு
    இலம்பாடு உழந்தவென் இரும்பேர் ஒக்கல்
    விரற்செறி மரபின செவித்தொடக் குநரும்
    செவித்தொடர் மரபின விரற்செறிக் குநரும்
    அரைக்கமை மரபின மிடற்றியாக் குநரும்
    மிடற்றமை மரபின அரைக்கியாக் குநரும்
    கடுந்தெறல் இராமன் உடன்புணர் சீதையை
    வலித்தகை அரக்கன் வௌவிய ஞான்றை
    நிலஞ்சேர் மதரணி கண்ட குரங்கின்
    செம்முகப் பெருங்கிளை இழைப்பொலிந் தாஅங்கு
    கறாஅ வருநகை இனிதுபெற் றிகுமே
    (புறம்: 378)
     

    சீதையின் அணிகளைக் கண்டு உணர்ச்சிக் கொந்தளிப்பிற்கு ஆட்பட்ட இராமன் உணர்விழந்த நிலையை அடையவே அவனைத் தாங்கிப் பிடித்த சுக்கிரீவன், “ஐய! இந்த அண்டத்திற்கு அப்பால் உன் தேவியை இராவணன் ஒளித்து வைத்திருந்தாலும் நான் தேடிக் கண்டுபிடித்துத் தருகின்றேன்; தளர்வடைய வேண்டா” என்று தேற்றினான்; ஆறுதல் மொழி சாற்றினான்.

    அதைக் கேட்ட இராமன், நினைவு தெளிந்தவனாய்ச் சுக்கிரீவனை அன்பொடு நோக்கி, உன்னுடைய குறையை முதலில் தீர்த்தலே என் கடன் என்றுரைக்க, அருகிருந்த அனுமனும் அதனை ஆமோதித்து, கொடிய வலிமையுடைய வாலியைக் கொன்று, சூரியன் மகனாகிய சுக்கிரீவனைக் கோமகனாய் அரியணை அமர்த்தி, செயல்திறன்மிகு பெரும்படையைச் சேர்த்தாலன்றி அரக்கர்கள் வாழும் இடத்தை நாம் கண்டுபிடித்தல் அரிதாகும் என்றான்.

    கொடுந் தொழில் வாலியைக்
          கொன்று கோமகன்
    கடுங் கதிரோன் மகன்
          ஆக்கி கை வளர்
    நெடும் படை கூட்டினால்
          அன்றி நேட அரிது
    அடும் படை அரக்கர்தம்
          இருக்கை ஆணையாய். (கம்ப: கலன்காண் படலம் – 4032)

    அஞ்சனை மைந்தன் கூற்றை அண்ணல் இராமனும் ஏற்று, நாம் இப்போது வாலிபாற் செல்லுவோம் என்று உரைத்திட, அனைவரும் உருசியமுக மலையிலிருந்து இறங்கி வாலியின் இருப்பிடமிருந்த கிட்கிந்தை நோக்கி நடக்கலாயினர்.

    வாலியின் இருப்பிடத்தருகே வந்ததும் இராமன் ஒரு தீர்மானத்திற்கு வந்தவனாய்ச் சுக்கிரீவனை நோக்கி, ”போருக்கு அழை அந்த வாலியை! அவனோடு நீ போர்செயும் வேளையில் விடமன்ன அவ் வாலிமீது வேறிடத்திலிருந்து நான் அம்பு தொடுப்பேன்” என்றான். சுக்கிரீவனும், “நல்ல யோசனை இது” என்று அதனை ஏற்றுக்கொண்டான்.

    அவ் இடத்து இராமன் நீ
          அழைத்து வாலி ஆனது ஓர்
    வெவ் விடத்தின் வந்து போர்
          விளைக்கும் ஏல்வை வேறு நின்று
    எவ்விடத் துணிந்து அமைந்தது என்
          கருத்து இது என்றனன்
    தெவ் அடக்கும் வென்றியானும்
         நன்றுஇது என்று சிந்தியா. (கம்ப: வாலி வதைப் படலம் – 4047)

    இராமனால் துணிவுற்ற சுக்கிரீவன் தன் தோள்களைத் தட்டிக்கொண்டு பெருங்குரலில் வாலியைப் போருக்கழைத்தான். படுக்கையில் நித்திரையிலிருந்த வாலியின் செவிகளைத் துளைத்தது அவ் ஆரவாரச் சத்தம்.

    [தொடரும்]

    *****

    கட்டுரைக்குத் துணைசெய்தவை:

    1. கம்பராமாயணம் – கோவை கம்பன் அறநிலை விளக்க உரைக்குழு.
    2. கம்பரும் வால்மீகியும் – பேரா. அ. பாண்டுரங்கன், எம்.ஏ., பிஎச்.டி., டிப் (மொழி), தமிழரங்கம் பதிப்பு, புதுவை – 605 008.
    3. கம்பர் கருவூலம் – தொகுப்பாசிரியர், பேரா. மு. சாயபு மரைக்காயர், கங்கை புத்தக நிலையம், சென்னை – 600 017.
    4. கம்பனில் மக்கள் குரல் – பேரா. ந. சுப்புரெட்டியார், வானதி பதிப்பகம், சென்னை – 17.

     

    Share
  • தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 11

    தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 11

    புலவர் முனைவர் கோ.சுந்தராம்பாள் 
    உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை 
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
    விளார் புறவழிச்சாலை, 
    தஞ்சை மாவட்டம் – 613006.
    மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

    நன்னூலில் உவமங்கள் – 1

    முன்னுரை

    தொல்காப்பியப் பொருளதிகாரத்தில் பயின்று வரும் உவமங்கள் சிலவற்றின் பயன்பாட்டுச் சிறப்பை அறிந்த நிலையில் அதன் வழிநூலான நன்னூலில் பயின்று வரும் சில உவமங்களை இக்கட்டுரை ஆராய்கிறது. எழுத்து, சொல் என்னும் இரு கூறுகளை மட்டுமே ஆராய்ந்திருக்கும் இந்த நூலிலும் இலக்கணக் கருத்துக்களை விளக்குதற்கு அவ்வளவாக உவமங்கள் பயன்பட்டிருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் பொதுப்பாயிரத்துள் நூலின் தன்மை, நல்லாசிரியர், அல்லாசிரியர், நன்மாணாக்கன், அல்மாணக்கான் என்னும் சிலரது சிறப்பையும் இயல்பையும் உவமம் கூறி விளக்கிச் செல்லுகிறார் பவணந்தி. ஒருசில பொருளுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட உவமங்களை அவர் கூறிச்செல்வதையும் காண முடிகிறது. அவைபற்றிய ஒரு சுருக்கமான ஆய்வை இக்கட்டுரை முன்னெடுக்கிறது.

    கோட்டம் நீக்குவது நூல்

    கவிதையைச் சொற்களின் ‘குவியலாக்கி’ உள்ளத்தின் கொதிநிலையை அதிகப்படுத்துகிறவர் நிரம்பிய உலகம் இது. இந்த உலகில் கணிதம் போன்ற இலக்கணத்தைக் கவிதைப்பதத்தோடு அதாவது உவமச் செழிப்போடு பரிமாறுகின்ற வல்லாளர்களில் பவணந்தியும் ஒருவர் என்பதை அவருடைய நூலால் அறிய முடிகிறது

    “பஞ்சிதன் சொல்லாப் பனுவல் இழையாகச்
    செஞ்சொல் புலவரின் சேயிழையா – எஞ்சாத
    கையே வாயாக கதிரே மதியாக
    மையிலா நூல்முடியும் ஆறு”

    தன்சொற்களே பஞ்சாகவும் செய்யுளே இழையாகவும் நூற்கின்ற புலவனே பெண்ணாகவும் குறையில்லா வாயே கையாகவும் அறிவே நூற்கும் கதிராகவும்  முடிவதே குற்றமில்லாத நூலாகும் என்னும் பொருளமையப் பாடியிருக்கும் மேற்கண்ட நூற்பாவில் அடுக்கிவரும் உவமங்களைக் காணலாம். பஞ்சு நூற்று ஆடை நெய்வது பெண்களுக்கான தொழில் என்னும் வரலாற்றுக் குறிப்பையும் பவணந்தி தருகிறார். தொடர்ந்து இத்தகைய சிறப்புடைய நூலுக்கு நு{ல் என்று பெயர்வந்த காரணத்தை ஆராய்கிறார்.

    “உரத்தின் வளம்பெருக்கி உள்ளிய தீமைப்
    புரத்தின் வளமுருக்கிப் பொல்லா – மரத்தின்
    கனக்கோட்டம் தீரக்குநூல் அஃதேபோல் மாந்தர்
    மனக்கோட்டம் தீர்க்கும்நூல் மாண்பு”

    என்னும் நூற்பாவில் அதனை உவமத்தால் விளக்குகிறார். மரம் முதலியவற்றின் கோணலைத் தீர்த்துச் செப்பம் செய்யும் நூல்போல் மனக்கோணலைத் தீர்த்துச் செப்பம் செய்வது நூலாம் என விளக்குகிறார். இந்த இரண்டு நூற்பாக்களிலும் அவர் காட்டியுள்ள உவமங்கள் நெசவு மற்றும் தச்சுத் தொழிலைச் சார்ந்திருப்பதை அறியலாம்.

    அதிகாரம் – இயல் – சூத்திரம்

    தொல்காப்பியத்தில் எழுத்து, சொல், பொருள் என்பன அதிகாரப் பெயர்கள். எழுத்ததிகாரத்தில் நூன்மரபு, தொகைமரபு முதலியன இயல் தலைப்புக்கள். அவற்றுள் இருக்கின்ற நூற்பாக்கள் சூத்திரங்கள். அதிகாரத்தைப் படலமென்றும் இயலை ஓத்து என்றும் சூத்திரத்தை நூற்பா என்றும் அழைப்பதும் உண்டு. இந்த அமைப்பு பெரும்பாலும் எல்லா இலக்கண நூல்களுக்கும் பொருந்தும். சில இலக்கிய நூல்களும் இவற்றைப் பெறுவதுண்டு. இவற்றுள் இயலாகிய ஓத்து என்பதற்கும், நூற்பாவாகிய சூத்திரம் என்பதற்கும் நன்னூலாசிரியர் உவமங்களைக் கொண்டு விளக்கமளிப்பதைக் காணமுடிகிறது. இயல் என்பதற்கு,

    “நேரின மணியை நிரல்பட வைத்தாங்கு
    ஓரினப் பொருளை ஒருவழி வைப்பது
    ஓத்தென மொழிப உயர்மொழிப் புலவர்!”

    என்னும் தொல்காப்பிய நூற்பாவை ஆசிரிய வசனமாக எடுத்தாளுகிறாரர் பவணந்தியார். இந்த நூற்பாவில் மணி என்பது பெயர்ச்சொல். அதற்கு அடையாக வந்திருப்பவை ‘நேர்’ ‘இனம்’ என்னும் இரண்டு சொற்கள். இது உவமத்தின் சிறப்பு. அதாவது ஒரே இனமாயுள்ள இரத்தினங்களை நிரல்பட வைப்பதுபோல என்பது உவமம். ‘ஒரே தன்மையான பொருள்களை நிரல்பட வைப்பது இயல்’ என்பது பொருள். ஒரே இனமாயினும் ஒத்த மணிகள் என்பது போல ஒரே தன்மையாக இருப்பினும் ஒத்த பொருள்களை நிரல்பட வைப்பதுதான் இயல் என்பது நோக்குதற்குரியது. இனிச் சூத்திரம் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை எளிய உவமத்தால் விளக்கிக் காட்டுகிறார். அளவில் சிறிய ஆடி அளவில் பெரிய உருவத்தைத் தன்னுள் அடக்கிக் காட்டுவதுபோல் சில எழுத்துக்களால் ஆன நூற்பாவாகிய சூத்திரம் பல இலக்கண உண்மைகளை அல்லது விதிகளை அடக்கியதாக அமைதல் வேண்டும் எனப் பொருள் விளக்கம் செய்கிறார். உவமமாகிய ஆடிக்கு அடைபுணர்க்காத பவணந்தியார், பொருளாகிய சூத்திரத்திற்குச் செம்மை, செறிவு, இனிமை, திட்பம், நுட்பம், சிறப்பு எனப் பல அடைச்சொற்களைப் புணர்த்தியிருக்கிறார்.

    “சில்வகை எழுத்திற் பல்வகைப் பொருளைச்
    செவ்வன் ஆடியில் செறித்தினிது விளக்கித்
    திட்பம் நுட்பம் சிறந்தன சூத்திரம்”

    உவமப் பயன்பாட்டில் இது ஒரு கோட்பாடு. ‘இனிய உளவாக இன்னாத கூறல்’ எனப் பொருளுக்கு அடைகூறிக் ‘கனியிருப்பக் காய்கவர்ந்தற்று’ என உவமத்திற்கு அடைபுணர்க்காது, பொருளுக்கு மட்டும் அடைபுணர்த்திருப்பது காண்க. இந்த நூற்பாவில் சூத்திரமாகிய பொருளின் இந்தப் பண்புகளையெல்லாம் மணியாகிய இரத்தினத்திற்குப் பொருத்திப் பொருள் காண்பது கற்பார் கடன்.

    இலக்கணத்திற்கு உவமங்களான இயற்கை

    மக்களாட்சி காலத்தில் வாழ்ந்தாலும் நம்மவர் பலர் பட்டங்கள் மற்றும் விருதுகளை மன்னராட்சிக் காலத்திலிருந்தே இறக்குமதி செய்து கொள்வார்கள். கவிக்கோ, கவிப்பேரரசு, கவிமுரசு, அரிமாப் பாவலர், இயக்குநர் சிகரம், மெல்லிசை மன்னர் என்னும் வழக்கை நோக்குக. இதுபோலவே இலக்கணம் மற்றும் இலக்கியங்களில் பொருள் விளக்கத்திற்காகப் பயன்படும் உவமங்கள் இயற்கை தழுவியனவாகவே அமைந்திருப்பது சிந்தனைக்குரியது.

    “ஆற்றொழுக்கு அரிமா நோக்கம் தவளைப்
    பாய்த்து பருந்தின் வீழ்வன்ன சூத்திர நிலையே!”

    என்னும் நூற்பா, இயலுள் அமைந்துள்ள சூத்திரம் எவ்வாறு அமையலாம் என்பதை விளக்குவதாக உள்ளது. ஆற்றுநீர் போலச் சீராக அமையலாம்.  சிங்கத்தின் பார்வை போல இடவலமாக, முன் பின்னாக நோக்கி அமையலாம். அடுத்ததை நோக்கிப், பின்னுள்ள ஒன்றினை நோக்கி அமையலாம். இயல்பான கண்களுக்குத் தெரியாமல் நுண்ணோக்கு உடையார்க்கே இலக்கண உண்மை புலப்படுமாறு அமையலாம். இந்த நான்கு வகையினை வரையறுக்கும் நன்னூலார் அவற்றுக்கு ஆறு, சிங்கம், தவளை, பருந்து என இயற்கைப் பொருள்களையே உவவமாக்குவதை அறியலாம்.

    நால்வகைச் சூத்திர நிலைகள்

    ‘உயிரும் உடம்புமாம் முப்பது முதலே’ என முதலெழுத்தை முன்னெடுத்த ஆசிரியர் நிரலாக (ஆற்றொழுக்காக) ‘உயிர் மெய் ஆய்தம் உயிரளபு ஒற்றளபு அஃகிய இஉஐஔ மஃகான் தனிநிலை பத்தும் சார்பெழுத்தாகும்’ எனச் சார்பெழுத்துக்களைத் தொடர்ந்து ஓதியது ஆற்றொழுக்கு என்னும் சூத்திர நிலையின்பாற்பட்டதாகும். ‘நின்ற நெறியே உயிர்மெய் முதலீறே’ என்னும் நூற்பாவிற்கு உரையெழுதிய சங்கர நமசிவாயர், “மொழிக்கு முதலும் ஈறும் கூறுதலன்றி எழுத்திற்கு முதலும் ஈறும் கூறினார் என்று உணர்க. இச்சூத்திரம் சிங்க நோக்கம்” என்ற விளக்கம் காண்க. ‘ணன முன்னும் வஃகான் மிசையும் மக்குறுகும்’ என்னும் மகரக் குறுக்கம் பற்றிய விளக்கத்தைச் செய்யும் என எச்சத்து’ எனத் தொடங்கும் நூற்பாவோடும், பல்லோர் படர்க்கை எனத் தொடங்கும் நூற்பாவோடும் நோக்கியன்றிப் புரிந்து கொள்ள இயலாது என்பதால்  அதனைப் பருந்துப் பார்வையாக்கி அமைத்துக் கொள்வதாகச் சங்கர நமசிவாயர் கூறுகிறார்.

    உவமத்தால் வெளிப்படும் உள்ளடக்கச் சுருக்கம்

    இலக்கியத்தின் அழகியல் கூறான உவமத்தை இலக்கண விளக்கங்களுக்குப் பயன்படுத்துகிறபோது பொருளின் அதாவது உவமேயமாகிய  உள்ளடக்கத்தின் அத்தனைப் பரிமாணங்களையும் வெளிக்கொணரும் கருவியாக அது பயன்படுகிறது என்பதை அறியலாம்.

    “மேற்கிளந் தெடுத்த யாப்பினுள், பொருளொடு
    சில்வகை எழுத்தின் செய்யுளுக் காகிச்
    சொல்லும் காலை உரையகத் தடக்கி
    நுண்மையொடு புணர்ந்த ஒண்மைத்தாகித்
    துளக்க லாகாத் துணைமையெய்தி
    அளக்க லாகா அரும்பொருட் டாகிப்
    பல்வகை யானும் பயன்தெரி புடையது
    சூத்திரம்’

    என்னும் பொருளின் அனைத்துப் பரிமாணங்களையும் (சூத்திரப் பண்புகள் அத்தனையையும்) ‘ஆடி நிழலின் அறியத்தோன்றி’ என்னும் இரு சொற்களால் அடக்கியது காண்க. ‘கார்கூந்தல்’ என்றவழிக் ‘கார்’ என்னும் சொல்லுக்கான பயன்பாட்டின் நோக்கமும் ‘ஆடிநிழலின் அறியத் தோன்றி’ என்னும் சொல்லுக்கான பயன்பாட்டின் நோக்கமும் வேறு வேறானது என்பதை நன்கு உணர்ந்து கொள்ள முடியும்.

    நிறைவுரை

    இலக்கியத்தின் அழகியல் கூறான உவமம் இலக்கண நூல்களுள் செய்திருக்கும் பணி வியப்புக்குரியது. ‘இப்படியெல்லாம் இருந்தால் அது சூத்திரம்’ என்பதை விட ‘அது இதுபோல் இருக்க வேண்டும்’ என்னும் உவமச் சுருக்கம்  பெரிதும் ஆழமானது. இலக்கியப் பயன்பாடு போலல்லாது இலக்கணத்தில் உவமப் பயன்பாடு பட்டுக் கத்தரித்தாற்போலத் தனது பணியைச் செய்திருக்கிறது. விரிவான சிந்தனைக்கும் ரசிப்புக்கும் இட்டுச் செல்ல வேண்டிய உவமத்தைப் பொருள் வரையறைக்குப் பயன்படுத்தியிருக்கும் இலக்கண ஆசிரியர்களின் சதுரப்பாடு தொடர்ந்துவரும் கட்டுரைகளிலும் ஆராயப்படும்.

    (தொடரும்…)

    Share
  • புகழின் விலை (சிறுகதை)

    புகழின் விலை (சிறுகதை)

    நிர்மலா ராகவன்

    “குழந்தையின் முகம் பௌர்ணமி சந்திரன்மாதிரி எவ்வளவு அழகா, உருண்டையா இருக்கு!” என்று பார்த்தவர்களெல்லாரும் பிரமிக்க, அந்தப் பெயரை எனக்கு வைத்தார்கள்.

    இப்போது நினைத்துப் பார்க்கையில், பிறந்ததிலிருந்தே பிறரது பாராட்டுக்காகவே நான் வளர்க்கப்பட்டேன் என்றுதான் தோன்றுகிறது.

    நான்கு வயதிலேயே கேட்ட பாடல்களை அப்படியே பாடிக் காட்டுவேனாம். குரல் வேறு இனிமையாக இருந்து தொலைத்ததா, முறையாக இசை பயில அனுப்பினார் என் தந்தை. எல்லாம் அம்மாவின் நச்சரிப்பு தாங்காமல்தான்.

    “இப்போ எதுக்கு பாட்டும் கூத்தும்? படிச்சு, ஒரு டிகிரி வாங்கறமாதிரி ஆகுமா?” என்று அப்பா சொல்லிப் பார்த்தாராம். அவரே என்னிடம் ஒருமுறை கூறியிருக்கிறார்.

    “டி.வியில இப்போல்லாம் பாட்டுப் போட்டி வெக்கறாங்க, சின்னக் குழந்தைகளுக்குக்கூட. இவளுக்கு இருக்கிற குரலுக்கும் சங்கீத ஞானத்துக்கும்! பரிசு என்ன தெரியுமா?” என்று சவால் விட்டாள் அம்மா.

    அப்போதே, தங்கள் பெண் அப்படி ஒரு போட்டியில் வெற்றி பெற்று, பல லட்சம் பெறுமான வீடு தங்களுக்குச் சொந்தமாகப்போகிறது என்ற கனவில் ஆழ்ந்தார்கள் இருவரும்.

    பத்து வயதில் எனக்கு இதெல்லாம் புரியவில்லை. வித விதமான ஆடைகள் அணிய முடிகிறதே, போட்டிக்கு முன்னாலும், முடிந்த பிறகும் எல்லாரும் கொஞ்சுகிறார்களே என்று கர்வமாக இருந்தது. பள்ளிக்கூடத்திலும் நான் போட்டியின் இறுதிச்சுற்றை அடைந்துவிட்டதைப் பெருமையுடன் பொதுக்கூட்டத்தில் அறிவித்தார்கள். எல்லா ஆசிரியைகளும் மாணவிகளும் கைதட்டினதை மறக்க முடியுமா!

    “பூர்ணிமாவைப் பாட்டுக் கிளாசிலே சேர்க்கணும்னு நான் சொன்னப்போ என்னமோ யோசிச்சீங்களே! இப்போ பாத்தீங்களா?” எனக்குப் பரிசாகக் கிடைத்த அபார்ட்மெண்டுக்குள் நுழையும்போது அம்மா அப்பாவை இடித்துக் கேட்டாள்.

    அப்பா அசட்டுச்சிரிப்புச் சிரித்தார், தன் தோல்வியை ஒப்புக்கொள்வதுபோல். அதற்குப்பின், எல்லாமே அம்மாவின் விருப்பப்படிதான் நடந்தது.

    இசைத்துறையில் முன்னணியில் இருந்த ஜகதாம்பாளிடம் என்னை அனுப்பினார்கள். மேடைக் கச்சேரி செய்யும்போதெல்லாம் நானும் என் குருவிற்குச் சற்றுப் பின்னால் அமர்ந்து, முகத்தில் எந்தவித உணர்ச்சியும் காட்டாமல், உடலும் அசையாமல் தாளம் போடுவேன்.

    அது பாவாடை- சட்டை மட்டும் அணிந்திருந்த பருவம். உடன் பாடும் அளவுக்கு நான் வளர்ந்திருக்கவில்லை. பள்ளி விடுமுறை நாட்களில், அவர்கள் வீட்டிலேயே தங்குவேன்.

    பாடும்போது, டீச்சருக்கு அடிக்கடி இருமல் வரும்.

    “ஜகதா மாமி! தண்ணி கொண்டு வரட்டுமா?”

    என்னைப் பார்த்து ஆதுரத்துடன் சிரித்தாள் மாமி. தானே எழுந்து உள்ளே போய், ஒரு கிளாஸ் நிறைய ஏதோ மருந்தை ஊற்றிக் கொண்டுவந்தார்கள்.

    சிறிது குடித்ததும், குரலில் மீண்டும் இனிமை.

    வீடு திரும்பியதும், அப்பாவிடம் சொன்னேன், “ஜகதா மாமிக்கு உடம்பு சரியில்லேப்பா. ரொம்ப இருமறாங்க. அடிக்கடி மருந்து குடிக்கறாங்க. கிளாஸிலே!”

    அப்பாவின் முகத்தில் கவலையின் ரேகை.

    `அப்பா, நல்ல அப்பா! டீச்சர் நல்லா இருக்கணும்னு எவ்வளவு அக்கறை!’ என்று நான் நினைத்துக்கொண்டேன்.

    “நான் கச்சேரிக்காக ஒரு மாசம் வெளியூருக்குப் போறேன், பூர்ணிமா. பாட்டு கிளாஸ் கிடையாது. நீ தினமும் பிராக்டீஸ் பண்ணணும். என்ன?”

    `பாடு! பாடு! இல்லாட்டி, சாரீரம் பேசாது!’ என்று காலை நான்கு மணிக்கே என்னை எழுப்பி, ஓயாமல் விரட்டும் அம்மாவைவிட எனக்கு மாமியைத்தான் பிடிக்கும்.

    ஒரு மாதம் மாமியைப் பார்க்க முடியாதா! அழுகை வந்தது.

    “அதெல்லாம் அவ பாடுவா. நான் பாத்துக்கறேன்,” என்று அம்மா அதிகாரமாகக் கூறியபோது என் அழுகை பலத்தது. இந்த அழுகை எனக்காக.

    சாயங்கால வேளைகளில் மற்ற குழந்தைகள் எல்லாரும் சிரித்து விளையாட, நான் மட்டும் மணிக்கணக்கில் பாடியாக வேண்டும். கைதிகளுக்குக் காவல் இருப்பதுபோல் அம்மா அருகிலேயே உட்கார்ந்திருப்பாள்.

    எப்போதாவது, அம்மா கடைகண்ணிகளுக்குப் போயிருக்கும்போது, `தப்பித்தோம்’ என்று நானும் விளையாட ஓடுவேன்.

    ஒரு முறை, என்னைக் கையும் களவுமாகப் பிடித்ததோடு நிற்கவில்லை அம்மா. என்னுடன் விளையாடிய மற்ற சிறுமிகளை மிரட்டினாள், “இனிமே நீங்க அவளோட விளையாடினா, தெரியும் சேதி!” என்று.

    ஒரு நீண்ட பிரசங்கம் தொடர்ந்தது. “இன்னும் கொஞ்ச வருஷத்திலே பூர்ணிமா பெரிய, பெரிய சபாக்களில கச்சேரி செய்யப்போறா, அவ டீச்சர்மாதிரி. அகல ஜரிகைபோட்ட பெரிய பட்டுப்புடைவை கட்டிக்கிட்டு, தலை நிறைய பூவோட! ஒவ்வொரு கச்சேரிக்கும் புதுசு புதுசா புடவை கட்டுவா. ஒங்களைப்போல விளையாட்டிலே நேரத்தை வீணடிச்சா, அதெல்லாம் கிடைக்குமா?”

    எனக்கும் அந்தக் கனவு பிடித்துத்தான் இருந்தது.

    அதையும் மீறி, எப்போதாவது விளையாடப் போனால், “எங்ககூட நீ விளையாடினா, ஒங்கம்மா எங்களைத்தான் திட்டுவாங்க. வேணாம்பா,” என்று என்னை ஒதுக்கிவிடுவார்கள்.

    அப்போதெல்லாம் எனக்கு அம்மாவின்மேல் ஆத்திரமாக இருக்கும். ஆனால், அது நிலைக்காது.

    அம்மாவின் முயற்சி இல்லாவிட்டால், பன்னிரண்டு வயதுக்குள் சினிமாவில் பின்னணி பாடச் சந்தர்ப்பம் கிடைத்திருக்குமா?

    ஆரம்பத்தில் சற்று கஷ்டமாகத்தான் இருந்தது.

    “என்னம்மா, இப்படி அழுத்தி, அழுத்திப் பாடறே? இது மேடைக் கச்சேரி இல்லே. பாட்டுன்னா என்னான்னே தெரியாதவங்களும் ரசிக்க வேணாமா? மேலாகப் பாடு,” என்று நான் கற்ற பாணியை மாற்றினார்கள் இசை அமைப்பாளர்கள்.

    ஜகதா மாமிக்கு இசையைப்பற்றித் தெரிந்த அளவு இவர்களுக்குத் தெரிந்திருக்குமா?

    அம்மாவிடம் என் சந்தேகத்தைத் தெரிவித்தேன்.

    “அவங்க சொல்றபடிதான் பாடிட்டுப் போயேன்!” என்று வழிகாட்டினாள். “யாருக்கு நிறைய பணம் கிடைச்சிருக்கு? யோசிச்சுப்பாரு!”

    ஒரு நாளைக்கு நான்கு இடங்களில் என் குரலைப் பதிவு செய்தபோது, அம்மாவுக்கு நன்றி சொல்லத் தோன்றியது.

    இப்போதெல்லாம் நான் ஜகதா மாமியிடம் பாட்டு கற்கப் போவதில்லை. தெரிந்தவரை போதும். மாமியின் வழியில் பாடினால், சினிமா வாய்ப்புப் போய்விடும் என்ற பயம் வேறு உள்ளூர இருந்தது.

    மாமிக்கே இப்போது கச்சேரிகள் குறைந்துவிட்டன. ரொம்ப இருமலாம்.

    சில வருடங்களுக்குப்பின், மாமியின் உடல்நிலை மோசமாகிவிட்டது என்று கேள்விப்பட்டு, மரியாதைக்காகப் பார்க்கப் போனேன்.

    “வாடி!” என்று வாயார வரவேற்றாள் மாமி. “ரொம்ப பெரிய மனுஷியாகிட்டேபோல! ரேடியோவிலும், டிவியிலும் எப்பவும் ஒன் குரல்தான்!”

    குரலில் பொறாமை இல்லை – என் சக பின்னணிப் பாடகர்களைப்போல. உண்மையான மகிழ்ச்சியும் பெருமையும் தொனித்தன.

    நான் சூள் கொட்டினேன்.

    “ஒங்கப்பா அம்மாவுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குமே?”

    “துபாய், மலேசியா, சிங்கப்பூர்னு மேடையில பாட கூட்டிட்டுப் போறாங்க, மாமி. எனக்குத் துணை போகணும்னு அப்பா வேலையை விட்டுட்டார். ஆனா..,” நிறுத்தினேன்.

    “ஒங்கம்மாவுக்குத்தான் நீ பிரபலமான பாடகியாகணும்னு ரொம்ப ஆசை”.

    மெள்ளக் கூறினேன். “அம்மா போய் அஞ்சு வருஷமாயிடுச்சு, மாமி”.

    “அடடா! சின்ன வயசுதானே அவங்களுக்கு! என்ன ஆச்சு?”

    “போயிட்டாங்க. அவ்வளவுதான். எப்படிச் செத்தா என்ன?” கடுமையாக வந்த என் குரல் மாமிக்கு மட்டுமல்ல, எனக்கும் அதிர்ச்சியாகத்தான் இருந்தது.

    தினமும் நான் குற்ற உணர்வால் வெந்துபோவது என்னுடன் இருக்கட்டும்.

    எனக்காகத்தானே அம்மா தன்னைத்தானே மாய்த்துக்கொண்டாள்!

    நான் பள்ளிப்படிப்பை முடிக்கும் வயது அப்போது.

    எனக்கு அடிக்கடி வாய்ப்பு கிடைக்க வழிசெய்வதாக அம்மாவிடம் ஆசைகாட்டிய ஒரு பாடலாசிரியர் முதலில் மரியாதையாகத்தான் நடந்துகொண்டானாம்.

    தனிமையில் அவனைப்பற்றி விளக்கிவிட்டு, “அவன் பக்கமே தலைவெச்சுக்கூடப் படுக்காதே, பூர்ணிமா!” என்று அழுதபடி, ஆணித்தரமாக அறிவு புகட்டிய அம்மா மறுநாள் காலை எழுந்திருக்கவில்லை. கட்டிலின் கீழ் காலியான தூக்க மாத்திரைப் புட்டி.

    வெளியில் விஷயம் பரவுவதற்குள் அம்மாவின் இறுதிக்கடனை முடித்தார் அப்பா.

    அம்மா அழுததன் காரணம் பிறகுதான் புரிந்தது எனக்கு.

    அம்மா அவனுக்கு இணங்கி நடந்திருக்க வேண்டும். இறுதியில், கணவருக்குத் துரோகம் செய்துவிட்டோமே என்று குமைந்து, சாவை நாடியிருக்கிறாள்.

    ஒரு விம்மல் வெளிப்பட்டது என்னிடமிருந்து.

    “என்ன, பூர்ணிமா? நீ இப்படி வருத்தப்பட்டுக்கிட்டே இருந்தா எப்படி?  இன்னிக்கு நீ பேரும் புகழுமா இருக்கிறதைப் பாத்து அம்மா எங்கேயிருந்தாலும் சந்தோஷமாத்தான் இருக்கப்போறாங்க!”

    மாமியின் பேச்சு எனக்கு ஆறுதல் அளிக்கவில்லை.

    ஒவ்வொரு முறையும் அப்பாவுடன் என்னை வீட்டுக்கு அனுப்பிவிட்டு, அம்மா பின்தங்கியதன் ரகசியம் புரிந்தது.

    `ஏம்பா அம்மாவும் நம்பகூட வீட்டுக்கு வரதில்ல?’ என்று அப்பாவைக் கேட்டபோதெல்லாம், `யாராவது கொண்டு விட்டுடுவாங்க,’ என்பார் அப்பா, அலட்சியமாக. அவர் என்று அம்மாவை மீறியிருக்கிறார்!

    பேச்சை மாற்ற, “மாமி. எனக்கும் ஒங்கமாதிரி அடிக்கடி இருமல் வருது,” என்று ஏதோ சொன்னேன்.

    “நான்தான் குடிச்சுச் சீரழிஞ்சு போனேன். நீயாவது ஒடம்பைப் பாத்துக்க, பூர்ணிமா. ஒங்கிட்ட இருக்கிறது அபூர்வமான வித்தை. சாமி குடுத்த வரம்,” என்று ஏதேதோ சொன்னார்கள் ஜகதா மாமி.

    எனக்கு ஒன்றுதான் புரிந்தது. அம்மாவை அழித்த இந்தப் பாட்டு எனக்கு வேண்டாம். இனி கோயில்களில்தான் பாடப்போகிறேன். இறைவன் கொடுத்ததை அவனுக்கே அர்ப்பணம் செய்யப்போகிறேன்.

    அதற்கு முன்னால், நான் செய்யவேண்டிய முக்கியமான வேலை ஒன்று பாக்கி இருக்கிறது.

    அம்மாவுக்கு அவன் செய்த கொடுமையை எனக்கே செய்ததாகக் கூறி, “மீ டூ” என்று, நாடறிய அவன் பெயரை நாறடிக்கப்போகிறேன்.

    Share
  • சார் போஸ்ட்

    சார் போஸ்ட்

    பாஸ்கர்

    அம்ருதாஞ்சன் கட்டடம், அந்தக் காலத்து வடிவமைப்பு. எப்போதும் லேசாக அந்தத் தைல வாசம் வரும். அதை நுகராதவர்கள் யாரும் இல்லை. விஷயம் வாசம் அல்ல. அந்த இடம். அது பலரது கனவுகளைத் தாங்கி கொண்டு நிற்கும் வாசல்.

    எழுபதுகளில் மஞ்சள் தெருவிளக்குகள்தான். ஒவ்வொரு நாள் இரவும் சுமார் ஏழரை மணியளைவில் சுமார் அங்கு முப்பது பேர் கூடி நிற்பார்கள். பொதுக்கூட்டம் ஏதும் இல்லை. ஆர் எம் எஸ் தபால் வண்டிக்காக அங்கு நிற்கும் மக்கள் – யுவதிகளும் உண்டு.

    வேலை தேடும் என்னைப் போன்ற ஆட்களும் உண்டு. இதில் பிரசித்தம் என்னவெனில் அந்த வண்டியில் தபால் சேர்த்தால் அடுத்த நாள் சேர்ந்து விடும் என்ற நம்பிக்கை.

    அங்கேயே தபால் தலை உண்டு. பதிவு தபால் உண்டு. ஒரு குட்டி தபால் அலுவலகம். சுமார் பத்து நிமிடம் தான் நிற்கும்.

    நான், மௌலி மற்றும் நண்பர்கள் சிலர் அங்குச் செல்வது பத்திரிகைகளுக்குத் தபால் அனுப்ப.. வேலை எல்லாம் அப்புறம். என்னைப் போல, மெயிலுக்கும் இந்துவுக்கும் எழுதும் முதியவர் குழு ஒன்றும் உண்டு.

    நான் கத்துக்குட்டி. அவர்கள் விரல் நுனியில் உலகை வைத்து இருப்பார்கள். கிட்டத்தட்ட நாங்கள் அரை நிஜார்.

    அது அஜந்தா தாண்டி லஸ் பக்கம் வரும் அழகே தனி. ரௌண்ட்டானாவில் அது திரும்பும்போது எங்கள் குதூகலம் சொல்லி மாளாது.

    இப்படி தினம் தினம் எதாவது எழுதி அது பிரசுரம் ஆக வேண்டும் என்ற வெறி உச்சத்தை அடைய, அங்குச் செல்வது என்பது ஒரு தவிர்க்க முடியாத பழக்கம் ஆகிவிட்டது.

    பழக்கம் சட்டென உடையாது. ஆனால் வண்டி அங்கு வரும் வசதியை தபால் துறை ஒரு நாள் விலக்கிக்கொண்டது. எல்லோருக்கும் அது பெரும் துக்கம். அந்த விஷயத்தைக் கூட, சிலர் எழுதினார்கள். ஆனால் எதுவும் அரசின் முன் எடுபடவில்லை.

    நேற்று அதே இடத்தில ஒரு தபாலைப் பெட்டியில் போடும் போது ஏற்பட்ட சப்தம் சட்டென என்னை முப்பது வருடங்கள் பின்தள்ளிப் போட்டது. இந்தச் சப்தம், என்னை அந்நாட்களில் வெகுவாய் தாக்கிய ஒன்று. தபாலைப் பெட்டி முழுங்கினால் வரும் ஒரு நிறைவை பின்னாளில் எந்த மின்னஞ்சலும் தரவில்லை.

    Share