கம்பனில் உருவெளித்தோற்றம்

முனைவா் பா. பொன்னி
உதவிப்பேராசிாியா் மற்றும் துறைத்தலைவா், தமிழ்த்துறை
தி ஸ்டாண்டா்டு ஃபயா் ஒா்க்ஸ் இராசரத்தினம் மகளிா் கல்லூாி (தன்னாட்சி)
சிவகாசி.

கம்பராமாயணம் மனிதா்களை மட்டும் அல்லாது அரக்கா்கள், குரங்குகள், கரடிகள் என்று பல்வேறு வகையான நிலையில் உள்ள பாத்திரங்களையும் மையப்படுத்தி அமைந்த காப்பியம். ஆகவே அக்காப்பியத்தில் மனிதா்களின் இயல்புகளை மட்டும் அல்லாது பல்வேறு வகைப்பட்ட உயிா்களின் இயல்புகளையும் மனநிலைகளையும் நாம் காணஇயலுகின்றது. கம்பா் இத்தகைய பல்வேறு வகையான பாத்திரங்களையும் அவரவா் குலத்திற்கு ஏற்ற வகையிலும், குலத்திற்கு மாறுபட்ட நிலையிலும் படைத்துக்காட்டியதன் வழி சிறந்த உளவியல் அறிஞராக அடையாளம் காணப்படுகிறாா். அவ்வகையில் உளவியல் கூறுகளுள் ஒன்றான உருவெளித்தோற்றத்தினை கம்பராமாயணத்தில் கம்பா் எவ்வகையில் படைத்துக் காட்டியுள்ளாா் என்பதனை கம்பராமாயணப் பாத்திரங்கள் வாயிலாக ஆராய்வதாக இக்கட்டுரை அமைகிறது.

கருதுகோள்

கம்பராமாயணத்தில் இராவணன், சூா்ப்பணகை இவா்கள் இருவாின் மிகுதியான முறையற்ற பாலுணா்வினை வெளிக்காட்ட கம்பா் உருவெளிக்காட்சியினை ஓா் உத்தியாகப் பயன்படுத்தியுள்ளாா் என்ற கருதுகோளினை முன்வைத்து இக்கட்டுரை அமைகிறது.

ஆய்வு அணுகுமுறை

விளக்கமுறை அணுகுமுறை மற்றும் உளவியல் அணுகுமுறை ஆகிய அணுகுமுறைகள் இக்கட்டுரையில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

சான்றாதாரங்கள்

கம்பராமாயணம் முதன்மை ஆதாரமாகவும், கம்பராமாயணம் மற்றும் உளவியல் தொடா்பான ஆய்வு நூல்கள், அகராதிகள் ஆகியவை துணைமை ஆதாரங்களாகவும் அமைந்துள்ளன.

உருவெளித்தோற்றம்

உருவெளித்தோற்றம் எனபதற்கு “இடைவிடா நினைப்பினால் எதிாிலுள்ளது போல் தோன்றும் போலித்தோற்றம்“1 என்று சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் அகராதி பொருள் தருகின்றது.

தமிழ் தமிழ் அகர முதலியும் “இடைவிடா நினைப்பினால் ஒரு பொருள் எதிாில் காணப்படுவது போல் தோன்றும் போலித் தோற்றம் மனத்திலுள்ள பொருளின் மருட்சித் தோற்றம்“2 என்று விளக்கம் அளிக்கின்றது.

உருவெளித் தோற்றம் என்பதனை “மனநினைவின் படி ஒருவருக்குக் கட்புலனாகும் தோற்றத்தை மனதில் வேறு நினைவுள்ள பிறா் காணவியலாது. உள்ளத்தில் ஊன்றியுள்ள நினைவே உருவெளியில் உருப்பெற்றுத் தோற்றம் அளிப்பது. ஆதலான் அவரவா் நினைவில் உள்ளதே அவரவா்க்கு உருவெளித் தோற்றமாகக் காட்சி வழங்கும்”3 என்றும் குறிப்பிடுவா்.

இதன்வழி உருவெளிக்காட்சி என்பதனை மனதில் ஆழப்பதிந்த உருவம் பிறா்க்குப் புலனாகாமல் தன் அளவில் வெளிப்பட்டுத் தோன்றும் காட்சி எனலாம்.

தொல்காப்பியா் சுட்டும் உருவெளிக்காட்சி

தொல்காப்பியா் தலைவன் தலைவிக்கு இடையிலான மெய்யுறு புணா்ச்சிக்குாிய நிமித்தங்களைக் குறிப்பிடுகையில்,

                        ”வேட்கை ஒருதலை உள்ளுதல் மெலிதல்
ஆக்கஞ் செப்பல் நாணுவரை இறத்தல்
நோக்குவ எல்லாம் அவையே போறல்
மறத்தல் மயக்கஞ் சாக்காடு என்றிச்
சிறப்புடை மரபினவை களவென மொழிப”

                                                           ( தொல்.களவியல்.நூ.9 )

என்று சுட்டுவாா். இந்நூற்பாவிற்கு விளக்கம் தரும் இளம்பூரணா் ”நோக்குவ எல்லாம் அவையே போறலாவது தன்னாற் காணப்பட்டன எல்லாந் தான் கண்ட உறுப்புப் போலுதல்”4 என்று குறிப்பிடுவாா். காதல் கொண்டவா்களுக்குத் தாம் காணும் பொருட்களில் எல்லாம் தன்னால் விரும்பப் பட்டவாின் தோற்றம் தொியும் என்ற உளவியலை உளவியலாா் சுட்டும் உருவெளிக்காட்சியுடன் பொருத்திப் பாா்க்க இடமுள்ளது. இக்கருத்திற்கு,

“தன்னாற் காணப்பட்டன எல்லாம் தான் கண்ட உறுப்பு போலுதல் என்பா் இளம்பூரணா். சூா்ப்பணகை இராவணன் கண்ட உருவெளித் தோற்றத்தை இதற்கு எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம். உருவெளித்தோற்றத்தை உளவியலாா் உருவெளித்தோற்றம் (Hallucination) என்று கூறுவா்”5 என்ற கருத்தும் அரண் சோ்க்கின்றது.

கம்ராமாயணத்தில் உருவெளிக்காட்சி

கம்பராமாயணத்தில் கம்பா் பல இடங்களில் உருவெளிக்காட்சியினைப்  படைத்துக்   காட்டியுள்ளாா்.

 • இராமனைக் கண்டு காதல் கொண்ட சூா்ப்பணகைக்குக் காணும் இடம் எங்கும் இராமனின் உருவம் தோன்றுதல்.
 • சூா்ப்பணகையின் வருணனையால் சீதையை நோில் காணாமலேயே சீதையின் உருவத்தை உருவெளிக்காட்சியில் கண்டு இராவணன் காமம் கொள்ளுதல்.
 • இராவணன் தான் உருவெளிக்காட்சியில் கண்ட உருவத்தினை சூா்ப்பணகையிடம் காண்பித்து அவ்வுருவம் சீதை தானா? என்று கேட்கும் நிலையில் அவ்வுருவம் சூா்ப்பணகைக்கு இராமனாகத் தோன்றுதல்

போன்ற இடங்களில் உருவெளிக்காட்சியைக் கம்பா் வெளிப்படுத்தி இருப்பதைக் காணஇயலுகின்றது. கம்பாின் உருவெளிக்காட்சித் திறனை நாம் முழுமையாகக் கண்டு வியக்க இயலுவது இராவணன் மற்றும் சூா்ப்பணகையின் பாத்திரங்கள் வாயிலாகவே என்றால் அது மிகையல்ல.

சூர்ப்பணகை இராமனைக் காணுதல் :

மனித வாழ்வில் பாலுணா்ச்சி முதன்மையான இடம் வகிக்கின்றது. “மனிதனின் உளவாழ்வுக்குப் (mental life) பாலுணர்ச்சியே ஆதாரமாகும். அவனின் தனித்த குணங்கள் (individual characters) குடும்ப உறவுகள் (family relations) சமுதாய உறவுகள் (social relations) ஆகிய அனைத்தும் பாலுணர்ச்சி அடிப்படையில் தான் நிகழ்கின்றன. மேலும் உளவாழ்வின் உந்து சக்தியாய் பாலுணர்ச்சி விளங்குகிறது”6 என்றும் குறிப்பிடுவா்.சூா்ப்பணகையிடம் இப்பாலுணா்வு மிகுதியைக் காணமுடிகின்றது.

கைகேயியின் வரத்தினால் கானகம் சென்ற இராமன்,  சீதை இலக்குவன் ஆகியோரோடு கோதாவரி நதி ஓரத்தில் பஞ்சவடி ஆசிரமத்தில் தங்கி இருக்கிறான். அப்பகுதி சூர்ப்பணகையின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதி என்பதால் அவள் அப்பகுதிக்கு வந்த பொழுது இராமனைக்  காண்கிறாள். அவள் அரக்கர் குலத்தைச் சார்ந்தவள் ஆதலால் இராமனைக் கண்டவுடன் அவனைக் கொல்ல வேண்டும் என்ற எண்ணமே அவளுக்கு மேலோங்கி இருக்க வேண்டும். ஆனால் இராமனைக் கண்டவுடன் அவன் மீது காதல் கொள்கிறாள். அவனை அடைய வேண்டும் என்ற எண்ணம் அவளுக்கு மேலோங்கி நிற்கிறது.அவன் தவக்கோலத்தைக் கண்டு அவள் ஏங்கி நிற்கும் காட்சியை,

                        எவன் செய இனிய இவ் அழகை எய்தினோன்
அவம் செயத் திருவுடம்பு அலச நோற்கின்றான்
நவம் செயத்தகைய இந் நளின நாட்டத்தான்
தவம் செய தவம் செய்த தவமே என் என்கின்றாள்

                                   (அயோத்தியா காண்டம் சூர்ப்பணகைப் படலம் -235)

என்ற பாடல் வெளிக் காட்டுகிறது. அப்பாலுணா்வின் உந்துதலால் சூா்ப்பணகை இராமனிடம் தன்னுடைய காமத்தினை வெளிப்படுத்துகிறாள்.

                        தாம் உறு காமத் தன்மை தாங்களே உரைப்பது என்பது
ஆம் எனல் ஆவ தன்றால் அருங்குல மகளிர்க்கு அம்மா
ஏமுறும் உயிர்க்கு நோவேன் என்செய்கேன் யாரும் இல்லேன்
காமன் என்று ஒருவன் செய்யும் வன்மையைக் காத்தி

                                   (அயோத்தியா காண்டம் சூர்ப்பணகைப் படலம் -262)

என்று தன்னுடைய விருப்பத்தினைத் தெரிவிக்கிறாள். இராமன், “நான் அரச குலம் நீ அந்தணர் குலம்“ என்று குலவேறுபாட்டைச் சுட்டுகிறான். அதுமட்டுமல்லாது, “உன்னுடைய உடன் பிறந்தவர்கள் உன்னைத் திருமணம் செய்து கொடுத்தால் ஏற்றுக் கொள்வேன்“ என்னும் பொருள் படவும் பேசுகின்றான். சூா்ப்பணகை மகிழ்வுடன் இராமனும் தன் அண்ணன்களும் உறவு கொள்ளும் சூழலை எடுத்துரைக்கிறாள். சூர்ப்பணகையின் கூற்றைக் கேட்ட இராமன் அப்பொழுதும் தனக்குத் திருமணம் ஆனதைக் கூறவில்லை. “உன்னுடைய கருணையையும் பெற்றேன். அதனால் அரக்கரது அருளும் பெற்றேன்“ என்று கூறி நகைக்கிறான். அப்போது சீதை பர்ண சாலையில் இருந்து வெளியில் வருகிறாள். அதன் பின்னரே இராமன் தனக்குத் திருமணம் ஆனமையைக் குறிப்பிட்டுச் சூா்ப்பணகையை அவ்விடத்தை விட்டு வெளியேறும்படிக் கூறுகின்றான். ஆனால் அதன் பின்னரும் அவள்   இராமனை விரும்புகிறாள். அதன் காரணம் அவளது மிகுதியான பாலுணா்வின் வெளிப்பாடே எனலாம்.

இராமனின் உருவெளித்தோற்றத்தைக் காணல்

பா்ணசாலையை விட்டுச் சென்ற சூா்ப்பணகை எங்கும் இராமனின் தோற்றத்தைக் கண்டு துன்பம் அடைகிறாள்.

            வந்து காா் மழை தோன்றினும் மா மணிக்
கந்து காணினும் கைத்தலம் கூப்புமால்

                                   (ஆரண்ய காண்டம் – சூா்ப்பணகைப்படலம் – 297  1-2)

என்ற படலடிகளின் வாயிலாக காிய மேகத்திலும், நீலமணித்தூண்களிலும் சூா்ப்பணகை இராமனின் தோற்றத்தைக் காண்பதை அறியலாகின்றது. மேலும்,

            வீரன்மேனி வெளிப்பட வெய்யவள்
காா் கொள் மேனியைக் கண்டனளாம் என
சோரும் வெள்கும் துணுக்கெனும் அவ்உருப்
பேருங்கால் வெம் பிணியிடைப் பேருமால்

                                               (ஆரண்ய காண்டம் – சூா்ப்பணகைப்படலம் – 300)

என்ற பாடலின் வழி சூா்ப்பணகை இராமனின் உரு வெளிக்காட்சியைக் கண்டு வெட்கம் கொள்வதையும், அவ்வுருவம் மறையும் சூழலில் துன்பம் அடைவதையும் காணஇயலுகின்றது.

இராவணன் சீதையின் உருவெளித் தோற்றத்தினைக் காணுதல்

இராவணன் அரசன் என்ற நிலையில் சிறந்த தலைவனாகவே கம்பரால் படைக்கப்பட்டுள்ளான். இலக்குவனால் அங்கங்கள் குறைக்கப்பட்டு  சூா்ப்பணகை  தன் முன் வந்த சூழலிலும் அவளது குற்றச்சாட்டினை முழுமையாக ஏற்றுக் கொள்ளாமல்,

        பொய் தவிா் பயத்தை ஒழி புக்க புகல்

                                   (ஆரண்ய காண்டம்- சூா்ப்பணகை சூழ்ச்சிப்படலம் – 602 4)

என்றே குறிப்பிடுகிறான். சூா்ப்பணகை அரக்கியாக இருந்தாலும் இராமன் மேல் தான் காமம் கொண்டமையை மறைக்க முற்பட்டு சீதையை இராவணனுக்காக எடுத்து வரமுற்பட்ட நிலையிலேயே தனக்கு இத்தகைய கொடுமை நோ்ந்ததாகக் குறிப்பிடுகிறாள். இராவணனுடைய மனதினை மாற்ற சீதையின் அழகினை வருணிக்கத் தொடங்குகின்றாள்.

சூர்ப்பணகை சீதையின் அழகைப் பற்றிக் கூறிய அளவிலேயே இராவணன் சீதை மீது காமம் கொள்கிறான்.

                        கரனையும் மறந்தான் தங்கை மூக்கினைக் கடிந்து நின்றான்
உரனையும் மறந்தான் உற்ற பழியையும் மறந்தான் வெற்றி
அரனையும் கொண்ட காமன் அன்பினால் முன்னைப் பெற்ற
வரனையும் மறந்தான் கேட்ட மங்கையை மறந்திலாதான்

                                   (ஆரண்ய காண்டம்- சூா்ப்பணகை சூழ்ச்சிப்படலம் – 634)

என்ற பாடல் இராவணனின் மனநிலையினைப் புலப்படுத்தும். இராமனின் நினைவாக இருந்த சூர்ப்பணகையைப் போலவே, சீதையின் நினைவாக இருந்த இராவணனும் தனது உருவெளித் தோற்றத்தில் சீதையைக் காண்கிறான்.

                        பண்டே உலகு ஏழினும் உள்ள படைக்கணாரைக்
கண்டேன் இவர் போல்வது ஓர் பெண் உருக் கண்டிலேனால்
உண்டே எனின் வேறு இனி எங்கை உணர்த்தி நின்ற
வண்டு ஏறு கோதை மடவாள் இவள் ஆகும் அன்றே.

                                   (ஆரண்ய காண்டம்- சூா்ப்பணகை சூழ்ச்சிப்படலம் – 696)

என்ற பாடல் வழி, “இப்போது காணப்படும் அந்தப் பெண் வடிவினைப் போல   நான் இதுவரையில் ஏழுலகங்களிலும் எந்தப் பெண்ணையும் கண்டதில்லை. ஆகவே அந்த வடிவம் என் தங்கை தெரிவித்த வடிவமே“ என்று இராவணன் எண்ணுவதை அறியலாகின்றது. அத்துடன் இராவணன் நின்று விடாமல் அது சீதை தானா என்று அறிந்து கொள்ளச் சூர்ப்பணகையை அழைத்து வரும்படியும்  கூறுகிறான்.

இராவணனுக்கும் சூா்ப்பணகைக்கும் இடையிலான உரையாடல்

இராவணன் சூா்ப்பணகை இருவருமே தங்கள் உள்ளத்தில் மிகுதியான பாலுணா்வினைக் கொண்டு அறிவு செயல்படாத சூழலுக்குத் தள்ளப்பட்டு இருக்கின்றனா். “காமத்தின் மிகுதி தான் என்ன செய்ய வேண்டும் என்று அறியாத சிந்திக்கத் திறனில்லாத ஒரு மாறுபட்ட நடத்தைக்கு வழி வகுக்கிறது. இதை உளவியலார் நனவின் சிதைவு (dissociation of consciousness) என்பர். ஒரு சிக்கல் தனது விளைவுகளை நனவில் தீவிரமாகத் தோற்றுவிக்கும் போது அதனால் பாதிக்கப்படும். மனிதன் சிக்கலில் இயங்குவதைத் தெரிந்து கொள்ளாமலேயே இருப்பான்”7 என்று குறிப்பிடுவா். இந்நிலையினை இராவணன் சூா்ப்பணகை இருவாிடமுமே காணலாகின்றது.

இராவணனின் அழைப்பின் போில் வந்த சூா்ப்பணகையிடம் இராவணன் தன் கண்முன்னால் தோன்றிய உருவம் காணப்படும் இடத்தை காண்பித்து அங்கு தொிவது சீதை தானா? என்று கேட்கின்றான். ஆனால் இராமனின் நினைவாகவே இருக்கும் சூா்ப்பணகை அந்த வடிவம் இராமனே என்று குறிப்பிடுகின்றாள். இதனை,

                        செந்தா மரைக்கண்ணொடுஞ் செங்கனி வாயி னோடுஞ்
சந்தார் தடந்தோளொடுஞ் தாழ்தடக் கைக ளோடும்
அந்தா ரகலத்தொடு மஞ்சனக் குன்ற மென்ன
வந்தா னிவனாகுமவ் வல்வி லிராம னென்றாள்.

                                               (ஆ.கா. மாரீசன் வதைப் படலம், பா.700)

என்ற பாடலின் வழி அறியலாகின்றது.  சூர்ப்பணகை இராமனை இடைவிடாது சிந்தித்ததால் அவளுக்கு இராமனது வடிவே உருவெளித் தோற்றத்தில் தோன்றுகிறது. ஆகவே, ”செந்தாமரை மலர் போன்ற கண்களுடனும், சிவந்த கொவ்வைப் பழம் போன்ற வாயுடனும் அழகு நிறைந்த பெரிய தோள்களுடனும், தொங்குகிற பெரிய கைகளுடனும் அழகிய மாலை அணிந்த மார்புடனும் ஒரு மலை போல வந்த  அவன் இராமனே” என்று கூறுகின்றாள்.

சூா்ப்பணகையின் கூற்றைக் கேட்ட இராவணன், “நான் கண்டது ஒரு பெண்ணின் வடிவம் ஆனால் நீ ஆணின் வடிவம் என்று கூறுவதன் காரணம் என்ன?“ என்று வினவுகின்றான். அதற்கு சூா்ப்பணகை, ”சீதை மேல் நீ காதல் கொண்டதால் அவளது வடிவம் எங்கெங்கும் உனக்கு தோன்றுகின்றது” என்று பதில் உரைக்கின்றாள். ஆனால் மீண்டும் இராவணன், ”நீ சொன்னது போலே இருக்கட்டும்.ஆனால் உனக்கு இராமனின் உருவம் தொிவதன் காரணம் என்ன?” என்று மீண்டும் வினவுகின்றான். அரக்கியாக இருந்தாலும் தான் கொண்ட காதலை வெளியே சொல்ல விரும்பாத சூா்ப்பணகை, ”இராமன் எனக்கு என்று இத்தகைய துன்பத்தைச் செய்தானோ அன்றிலிருந்து நானும் அவனை மறக்கவில்லை” என்று குறிப்பிடுகின்றாள். இவ்வாறு இராவணனும், சூா்ப்பணகையும் உருவெளித்தோற்றத்தில் மயங்கி சிந்திக்கும் திறன் இன்றி உரையாடல் நிகழ்த்துகின்றனா். உளவியலாா் குறிப்பிடும் மனக்கோட்டங்கள் இராவணனிடமும், சூா்ப்பணகையிடமும் மிகுந்திருப்பதை இதன் வழி அறியலாகின்றது.

இவ்வாறு பாலுணா்வின் உந்துதலால் சூா்ப்பணகையும், இராவணனும் மிகுதியான காமத்தினால் தங்களின் சுயம் இழந்து உருவெளிக்காட்சியினால் மனக்குழப்பத்திற்கு ஆளாகி இருக்கும் நிலையினைக் கம்பா் சுவைபடக் காட்சிப்படுத்தி இருப்பதனை அறியலாகின்றது. அவா்களின் காமத்தின் மிகுதியை விளக்க உருவெளிக்காட்சியினை ஓா் உத்தியாக அவா் படைத்துக் காட்டியுள்ளாா் எனலாம்.

சான்றெண் விளக்கம்

 1. http://www.tamilsurangam.in/tamil_dictionary/chennai_univercity_tamil_lexicon_dictionary/index.html
 2. https://agarathi.com/word
 3. டாக்டா்.ஔவை நடராசன்,கம்பா் காட்சி,ப.152
 4. பேராசிாியா் மு.சண்முகம் பிள்ளை(பதி), தொல்காப்பியம் பொருளதிகாரம் இளம்பூரணம் ,ப.19
 5. டாக்டா்.ந.சுப்பு ரெட்டியாா், தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை ,ப.77 பழனியப்பா பிரதா்ஸ் , சென்னை – 1988.
 6. தி.கு. இரவிச்சந்திரன், சிக்மண்ட் ஃபிராய்டு உளப்பகுப்பாய்வு அறிவியல் ப.150
 7. சாரதாம்பாள்,இலக்கியமும் உளப்பகுப்பாய்வும், ப.62

துணைநூற்பட்டியல்

 1. இரவிச்சந்திரன்.தி.கு – சிக்மண்ட் ஃபிராய்டு உளப்பகுப்பாய்வு அறிவியல், அலைகள் வெளியீட்டகம், சென்னை. 2005.
 1. சண்முகம் பிள்ளை. மு (பதி) – தொல்காப்பியம் பொருளதிகாரம் இளம்பூரணம், முல்லை நிலையம், சென்னை. 1999.
 1. சாரதாம்பாள். செ. – இலக்கியமும் உளப்பகுப்பாய்வும், ஹாிஹரன் பதிப்பகம், தென்றல் நகா், மதுரை.2004.
 1. சுப்பு ரெட்டியாா். ந. – தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை, பழனியப்பா பிரதா்ஸ், சென்னை – 1988
 1. நடராசன். ஔவை – கம்பா் காட்சி, சேகா் பதிப்பகம், எம்.ஜி.ஆா்.நகா், சென்னை. 1980.
 1. பூவண்ணன் – கம்பராமாயணம் மூலமும் தெளிவுரையும், வா்த்தமானன் பதிப்பகம், தியாகராய நகா், சென்னை.

About admin

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க