பாஸ்கர்

அம்ருதாஞ்சன் கட்டடம், அந்தக் காலத்து வடிவமைப்பு. எப்போதும் லேசாக அந்தத் தைல வாசம் வரும். அதை நுகராதவர்கள் யாரும் இல்லை. விஷயம் வாசம் அல்ல. அந்த இடம். அது பலரது கனவுகளைத் தாங்கி கொண்டு நிற்கும் வாசல்.

எழுபதுகளில் மஞ்சள் தெருவிளக்குகள்தான். ஒவ்வொரு நாள் இரவும் சுமார் ஏழரை மணியளைவில் சுமார் அங்கு முப்பது பேர் கூடி நிற்பார்கள். பொதுக்கூட்டம் ஏதும் இல்லை. ஆர் எம் எஸ் தபால் வண்டிக்காக அங்கு நிற்கும் மக்கள் – யுவதிகளும் உண்டு.

வேலை தேடும் என்னைப் போன்ற ஆட்களும் உண்டு. இதில் பிரசித்தம் என்னவெனில் அந்த வண்டியில் தபால் சேர்த்தால் அடுத்த நாள் சேர்ந்து விடும் என்ற நம்பிக்கை.

அங்கேயே தபால் தலை உண்டு. பதிவு தபால் உண்டு. ஒரு குட்டி தபால் அலுவலகம். சுமார் பத்து நிமிடம் தான் நிற்கும்.

நான், மௌலி மற்றும் நண்பர்கள் சிலர் அங்குச் செல்வது பத்திரிகைகளுக்குத் தபால் அனுப்ப.. வேலை எல்லாம் அப்புறம். என்னைப் போல, மெயிலுக்கும் இந்துவுக்கும் எழுதும் முதியவர் குழு ஒன்றும் உண்டு.

நான் கத்துக்குட்டி. அவர்கள் விரல் நுனியில் உலகை வைத்து இருப்பார்கள். கிட்டத்தட்ட நாங்கள் அரை நிஜார்.

அது அஜந்தா தாண்டி லஸ் பக்கம் வரும் அழகே தனி. ரௌண்ட்டானாவில் அது திரும்பும்போது எங்கள் குதூகலம் சொல்லி மாளாது.

இப்படி தினம் தினம் எதாவது எழுதி அது பிரசுரம் ஆக வேண்டும் என்ற வெறி உச்சத்தை அடைய, அங்குச் செல்வது என்பது ஒரு தவிர்க்க முடியாத பழக்கம் ஆகிவிட்டது.

பழக்கம் சட்டென உடையாது. ஆனால் வண்டி அங்கு வரும் வசதியை தபால் துறை ஒரு நாள் விலக்கிக்கொண்டது. எல்லோருக்கும் அது பெரும் துக்கம். அந்த விஷயத்தைக் கூட, சிலர் எழுதினார்கள். ஆனால் எதுவும் அரசின் முன் எடுபடவில்லை.

நேற்று அதே இடத்தில ஒரு தபாலைப் பெட்டியில் போடும் போது ஏற்பட்ட சப்தம் சட்டென என்னை முப்பது வருடங்கள் பின்தள்ளிப் போட்டது. இந்தச் சப்தம், என்னை அந்நாட்களில் வெகுவாய் தாக்கிய ஒன்று. தபாலைப் பெட்டி முழுங்கினால் வரும் ஒரு நிறைவை பின்னாளில் எந்த மின்னஞ்சலும் தரவில்லை.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *