தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 11

புலவர் முனைவர் கோ.சுந்தராம்பாள் 
உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை 
பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
விளார் புறவழிச்சாலை, 
தஞ்சை மாவட்டம் – 613006.
மின்னஞ்சல் முகவரி –  [email protected]

நன்னூலில் உவமங்கள் – 1

முன்னுரை

தொல்காப்பியப் பொருளதிகாரத்தில் பயின்று வரும் உவமங்கள் சிலவற்றின் பயன்பாட்டுச் சிறப்பை அறிந்த நிலையில் அதன் வழிநூலான நன்னூலில் பயின்று வரும் சில உவமங்களை இக்கட்டுரை ஆராய்கிறது. எழுத்து, சொல் என்னும் இரு கூறுகளை மட்டுமே ஆராய்ந்திருக்கும் இந்த நூலிலும் இலக்கணக் கருத்துக்களை விளக்குதற்கு அவ்வளவாக உவமங்கள் பயன்பட்டிருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் பொதுப்பாயிரத்துள் நூலின் தன்மை, நல்லாசிரியர், அல்லாசிரியர், நன்மாணாக்கன், அல்மாணக்கான் என்னும் சிலரது சிறப்பையும் இயல்பையும் உவமம் கூறி விளக்கிச் செல்லுகிறார் பவணந்தி. ஒருசில பொருளுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட உவமங்களை அவர் கூறிச்செல்வதையும் காண முடிகிறது. அவைபற்றிய ஒரு சுருக்கமான ஆய்வை இக்கட்டுரை முன்னெடுக்கிறது.

கோட்டம் நீக்குவது நூல்

கவிதையைச் சொற்களின் ‘குவியலாக்கி’ உள்ளத்தின் கொதிநிலையை அதிகப்படுத்துகிறவர் நிரம்பிய உலகம் இது. இந்த உலகில் கணிதம் போன்ற இலக்கணத்தைக் கவிதைப்பதத்தோடு அதாவது உவமச் செழிப்போடு பரிமாறுகின்ற வல்லாளர்களில் பவணந்தியும் ஒருவர் என்பதை அவருடைய நூலால் அறிய முடிகிறது

“பஞ்சிதன் சொல்லாப் பனுவல் இழையாகச்
செஞ்சொல் புலவரின் சேயிழையா – எஞ்சாத
கையே வாயாக கதிரே மதியாக
மையிலா நூல்முடியும் ஆறு”

தன்சொற்களே பஞ்சாகவும் செய்யுளே இழையாகவும் நூற்கின்ற புலவனே பெண்ணாகவும் குறையில்லா வாயே கையாகவும் அறிவே நூற்கும் கதிராகவும்  முடிவதே குற்றமில்லாத நூலாகும் என்னும் பொருளமையப் பாடியிருக்கும் மேற்கண்ட நூற்பாவில் அடுக்கிவரும் உவமங்களைக் காணலாம். பஞ்சு நூற்று ஆடை நெய்வது பெண்களுக்கான தொழில் என்னும் வரலாற்றுக் குறிப்பையும் பவணந்தி தருகிறார். தொடர்ந்து இத்தகைய சிறப்புடைய நூலுக்கு நு{ல் என்று பெயர்வந்த காரணத்தை ஆராய்கிறார்.

“உரத்தின் வளம்பெருக்கி உள்ளிய தீமைப்
புரத்தின் வளமுருக்கிப் பொல்லா – மரத்தின்
கனக்கோட்டம் தீரக்குநூல் அஃதேபோல் மாந்தர்
மனக்கோட்டம் தீர்க்கும்நூல் மாண்பு”

என்னும் நூற்பாவில் அதனை உவமத்தால் விளக்குகிறார். மரம் முதலியவற்றின் கோணலைத் தீர்த்துச் செப்பம் செய்யும் நூல்போல் மனக்கோணலைத் தீர்த்துச் செப்பம் செய்வது நூலாம் என விளக்குகிறார். இந்த இரண்டு நூற்பாக்களிலும் அவர் காட்டியுள்ள உவமங்கள் நெசவு மற்றும் தச்சுத் தொழிலைச் சார்ந்திருப்பதை அறியலாம்.

அதிகாரம் – இயல் – சூத்திரம்

தொல்காப்பியத்தில் எழுத்து, சொல், பொருள் என்பன அதிகாரப் பெயர்கள். எழுத்ததிகாரத்தில் நூன்மரபு, தொகைமரபு முதலியன இயல் தலைப்புக்கள். அவற்றுள் இருக்கின்ற நூற்பாக்கள் சூத்திரங்கள். அதிகாரத்தைப் படலமென்றும் இயலை ஓத்து என்றும் சூத்திரத்தை நூற்பா என்றும் அழைப்பதும் உண்டு. இந்த அமைப்பு பெரும்பாலும் எல்லா இலக்கண நூல்களுக்கும் பொருந்தும். சில இலக்கிய நூல்களும் இவற்றைப் பெறுவதுண்டு. இவற்றுள் இயலாகிய ஓத்து என்பதற்கும், நூற்பாவாகிய சூத்திரம் என்பதற்கும் நன்னூலாசிரியர் உவமங்களைக் கொண்டு விளக்கமளிப்பதைக் காணமுடிகிறது. இயல் என்பதற்கு,

“நேரின மணியை நிரல்பட வைத்தாங்கு
ஓரினப் பொருளை ஒருவழி வைப்பது
ஓத்தென மொழிப உயர்மொழிப் புலவர்!”

என்னும் தொல்காப்பிய நூற்பாவை ஆசிரிய வசனமாக எடுத்தாளுகிறாரர் பவணந்தியார். இந்த நூற்பாவில் மணி என்பது பெயர்ச்சொல். அதற்கு அடையாக வந்திருப்பவை ‘நேர்’ ‘இனம்’ என்னும் இரண்டு சொற்கள். இது உவமத்தின் சிறப்பு. அதாவது ஒரே இனமாயுள்ள இரத்தினங்களை நிரல்பட வைப்பதுபோல என்பது உவமம். ‘ஒரே தன்மையான பொருள்களை நிரல்பட வைப்பது இயல்’ என்பது பொருள். ஒரே இனமாயினும் ஒத்த மணிகள் என்பது போல ஒரே தன்மையாக இருப்பினும் ஒத்த பொருள்களை நிரல்பட வைப்பதுதான் இயல் என்பது நோக்குதற்குரியது. இனிச் சூத்திரம் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை எளிய உவமத்தால் விளக்கிக் காட்டுகிறார். அளவில் சிறிய ஆடி அளவில் பெரிய உருவத்தைத் தன்னுள் அடக்கிக் காட்டுவதுபோல் சில எழுத்துக்களால் ஆன நூற்பாவாகிய சூத்திரம் பல இலக்கண உண்மைகளை அல்லது விதிகளை அடக்கியதாக அமைதல் வேண்டும் எனப் பொருள் விளக்கம் செய்கிறார். உவமமாகிய ஆடிக்கு அடைபுணர்க்காத பவணந்தியார், பொருளாகிய சூத்திரத்திற்குச் செம்மை, செறிவு, இனிமை, திட்பம், நுட்பம், சிறப்பு எனப் பல அடைச்சொற்களைப் புணர்த்தியிருக்கிறார்.

“சில்வகை எழுத்திற் பல்வகைப் பொருளைச்
செவ்வன் ஆடியில் செறித்தினிது விளக்கித்
திட்பம் நுட்பம் சிறந்தன சூத்திரம்”

உவமப் பயன்பாட்டில் இது ஒரு கோட்பாடு. ‘இனிய உளவாக இன்னாத கூறல்’ எனப் பொருளுக்கு அடைகூறிக் ‘கனியிருப்பக் காய்கவர்ந்தற்று’ என உவமத்திற்கு அடைபுணர்க்காது, பொருளுக்கு மட்டும் அடைபுணர்த்திருப்பது காண்க. இந்த நூற்பாவில் சூத்திரமாகிய பொருளின் இந்தப் பண்புகளையெல்லாம் மணியாகிய இரத்தினத்திற்குப் பொருத்திப் பொருள் காண்பது கற்பார் கடன்.

இலக்கணத்திற்கு உவமங்களான இயற்கை

மக்களாட்சி காலத்தில் வாழ்ந்தாலும் நம்மவர் பலர் பட்டங்கள் மற்றும் விருதுகளை மன்னராட்சிக் காலத்திலிருந்தே இறக்குமதி செய்து கொள்வார்கள். கவிக்கோ, கவிப்பேரரசு, கவிமுரசு, அரிமாப் பாவலர், இயக்குநர் சிகரம், மெல்லிசை மன்னர் என்னும் வழக்கை நோக்குக. இதுபோலவே இலக்கணம் மற்றும் இலக்கியங்களில் பொருள் விளக்கத்திற்காகப் பயன்படும் உவமங்கள் இயற்கை தழுவியனவாகவே அமைந்திருப்பது சிந்தனைக்குரியது.

“ஆற்றொழுக்கு அரிமா நோக்கம் தவளைப்
பாய்த்து பருந்தின் வீழ்வன்ன சூத்திர நிலையே!”

என்னும் நூற்பா, இயலுள் அமைந்துள்ள சூத்திரம் எவ்வாறு அமையலாம் என்பதை விளக்குவதாக உள்ளது. ஆற்றுநீர் போலச் சீராக அமையலாம்.  சிங்கத்தின் பார்வை போல இடவலமாக, முன் பின்னாக நோக்கி அமையலாம். அடுத்ததை நோக்கிப், பின்னுள்ள ஒன்றினை நோக்கி அமையலாம். இயல்பான கண்களுக்குத் தெரியாமல் நுண்ணோக்கு உடையார்க்கே இலக்கண உண்மை புலப்படுமாறு அமையலாம். இந்த நான்கு வகையினை வரையறுக்கும் நன்னூலார் அவற்றுக்கு ஆறு, சிங்கம், தவளை, பருந்து என இயற்கைப் பொருள்களையே உவவமாக்குவதை அறியலாம்.

நால்வகைச் சூத்திர நிலைகள்

‘உயிரும் உடம்புமாம் முப்பது முதலே’ என முதலெழுத்தை முன்னெடுத்த ஆசிரியர் நிரலாக (ஆற்றொழுக்காக) ‘உயிர் மெய் ஆய்தம் உயிரளபு ஒற்றளபு அஃகிய இஉஐஔ மஃகான் தனிநிலை பத்தும் சார்பெழுத்தாகும்’ எனச் சார்பெழுத்துக்களைத் தொடர்ந்து ஓதியது ஆற்றொழுக்கு என்னும் சூத்திர நிலையின்பாற்பட்டதாகும். ‘நின்ற நெறியே உயிர்மெய் முதலீறே’ என்னும் நூற்பாவிற்கு உரையெழுதிய சங்கர நமசிவாயர், “மொழிக்கு முதலும் ஈறும் கூறுதலன்றி எழுத்திற்கு முதலும் ஈறும் கூறினார் என்று உணர்க. இச்சூத்திரம் சிங்க நோக்கம்” என்ற விளக்கம் காண்க. ‘ணன முன்னும் வஃகான் மிசையும் மக்குறுகும்’ என்னும் மகரக் குறுக்கம் பற்றிய விளக்கத்தைச் செய்யும் என எச்சத்து’ எனத் தொடங்கும் நூற்பாவோடும், பல்லோர் படர்க்கை எனத் தொடங்கும் நூற்பாவோடும் நோக்கியன்றிப் புரிந்து கொள்ள இயலாது என்பதால்  அதனைப் பருந்துப் பார்வையாக்கி அமைத்துக் கொள்வதாகச் சங்கர நமசிவாயர் கூறுகிறார்.

உவமத்தால் வெளிப்படும் உள்ளடக்கச் சுருக்கம்

இலக்கியத்தின் அழகியல் கூறான உவமத்தை இலக்கண விளக்கங்களுக்குப் பயன்படுத்துகிறபோது பொருளின் அதாவது உவமேயமாகிய  உள்ளடக்கத்தின் அத்தனைப் பரிமாணங்களையும் வெளிக்கொணரும் கருவியாக அது பயன்படுகிறது என்பதை அறியலாம்.

“மேற்கிளந் தெடுத்த யாப்பினுள், பொருளொடு
சில்வகை எழுத்தின் செய்யுளுக் காகிச்
சொல்லும் காலை உரையகத் தடக்கி
நுண்மையொடு புணர்ந்த ஒண்மைத்தாகித்
துளக்க லாகாத் துணைமையெய்தி
அளக்க லாகா அரும்பொருட் டாகிப்
பல்வகை யானும் பயன்தெரி புடையது
சூத்திரம்’

என்னும் பொருளின் அனைத்துப் பரிமாணங்களையும் (சூத்திரப் பண்புகள் அத்தனையையும்) ‘ஆடி நிழலின் அறியத்தோன்றி’ என்னும் இரு சொற்களால் அடக்கியது காண்க. ‘கார்கூந்தல்’ என்றவழிக் ‘கார்’ என்னும் சொல்லுக்கான பயன்பாட்டின் நோக்கமும் ‘ஆடிநிழலின் அறியத் தோன்றி’ என்னும் சொல்லுக்கான பயன்பாட்டின் நோக்கமும் வேறு வேறானது என்பதை நன்கு உணர்ந்து கொள்ள முடியும்.

நிறைவுரை

இலக்கியத்தின் அழகியல் கூறான உவமம் இலக்கண நூல்களுள் செய்திருக்கும் பணி வியப்புக்குரியது. ‘இப்படியெல்லாம் இருந்தால் அது சூத்திரம்’ என்பதை விட ‘அது இதுபோல் இருக்க வேண்டும்’ என்னும் உவமச் சுருக்கம்  பெரிதும் ஆழமானது. இலக்கியப் பயன்பாடு போலல்லாது இலக்கணத்தில் உவமப் பயன்பாடு பட்டுக் கத்தரித்தாற்போலத் தனது பணியைச் செய்திருக்கிறது. விரிவான சிந்தனைக்கும் ரசிப்புக்கும் இட்டுச் செல்ல வேண்டிய உவமத்தைப் பொருள் வரையறைக்குப் பயன்படுத்தியிருக்கும் இலக்கண ஆசிரியர்களின் சதுரப்பாடு தொடர்ந்துவரும் கட்டுரைகளிலும் ஆராயப்படும்.

(தொடரும்…)

About admin

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க