மணமகளே உன் மணவறைக்கோலம் – 2

1

வாராயென் தோழி வாராயோ…

— வைதேகி ரமணன்.

சரண்யாவின் திருமணம், அவளே தேடிக்கொண்ட பையன்தான். அவருக்கு வேறுமொழி என்றாலும் அவரும் இந்து மதம்தான். அவரது தோற்றமும் வெகு சுமார்தான். வேலையில்லாத பட்டதாரி; பார்க்கச் சிறிய உருவம். என்ன காதலோ!!! சரண்யாவிற்குத் தந்தையில்லை, அவளது தாய்க்கும் வேறு வழியில்லை, அவளது தம்பிகளுக்கோ முடிவெடுக்கும் வயதுமில்லை. எனக்கும் இந்தத் திருமணத்தில் உடன்பாடில்லை, ஆனால் வேறு வழியில்லை. இவளின் பிஹெச்டி படிப்பும் முடிந்தபாடில்லை. இதைப் பேசி முடித்தவர்கள் யார் தெரியுமா? வியக்காதீர்கள்… நான்தான்.

எனது வலது பக்கத்தில் என்னைவிட ஏழு வயது குறைந்த வேதியியலில் ஆராய்ச்சி செய்யும் மாணவன் மாதவன், இடதுபக்கம் சரண்யாவின் இரண்டு தம்பிகள். தோழியோ மாடிப்படியில், அறைக்கு வெளியே அவளின் அம்மா! கணவர் இல்லாததால் அவர் உள்ளே உட்கார அனுமதிக்கப்படவில்லை. அதைவிட நகைச்சுவை என்னவென்றால், என் முன்னே ஜோடி ஜோடியாக இருபது பெரியவர்கள். ஒரே விவாதம்தான்.

முதல் கேள்வியே எனக்குப் பிடிக்கவில்லை. எங்க பையனுக்கு உங்கள் பெண்ணைத் தர சம்மதமா என்பதுதான் அது. நான் சொன்னேன் சம்மதிக்காமலா உங்களின் வருகைக்கு நாங்கள் ஒத்துக் கொண்டோம். அதெல்லாம் பேச்சில்லை. சம்மதம் என்றால்தான் அடுத்த கட்டம் என்றார்கள். நான் முரண்பட்டேன். பிறகு சரண்யாவின் அம்மா சொல்லும்மா என்றதால் சம்மதம் என்ற சொல் என் சம்மதம் இல்லாமலே வந்தது.

அதன் பிறகு, என்ன செய்வீர்கள்? என்ற சம்பிரதாயமான கேள்வி. இதிலும் எனக்கு உடன்பாடில்லை. இருவரும் ஒருமனமாகி நடக்கப் போகும் திருமணத்தில் ஏன் இந்த வேண்டாத பேச்சு. பிறகு ஒரு முடிவுக்கு வந்தோம். அதன் பிறகுதான் பிரச்சனையே!!! திருமணச் செலவில் பாதி ஒப்புக் கொள்ள வேண்டும் என்று நான் எகிறிவிட்டேன் … முடியவே முடியாதென்றும் … எங்களிடம் பைசா இல்லை … வேலையும் இல்லை… கடன் தருவாரும் இல்லை… பின் எப்படி நடத்துவது??? என விவாதம் தொடர்ந்தது. பேச்சு ஒரு முடிவுக்கே வரவில்லை.

பிறகு ஆளுக்குப் பாதி என ஒப்புக்கொண்டு செலவைப் பற்றிய திட்டம் போடப்பட்டது. எனக்கோ எரிச்சல். சரண்யாவின் தம்பிகளோ விவரம் புரியாமல் மற்றவர்கள் மூக்கில் விரல் வைக்கும்படி அக்காவின் திருமணம் நடக்க வேண்டும் என்று விரும்பினார்கள். என்ன செய்ய? சரண்யாவிடம் தேவையான நகைகள் இருந்தன, ஆனால் கல்யாணச் செலவை யார் செய்வார்கள்?

தோழிகளில் ஒருவரின் நகைகளை அடகு வைத்து பணம் கிடைத்தது. அவர் வங்கியில் பணி புரியவே நகை பத்திரமாகவும் இருந்தது; எங்கள் செலவுக்குத் தேவையான பணமும் கிடைத்தது. ஒரு வழியாகத் தோழிகளின் தலைமையில் திருமணம் இனிதே முடிந்தது. திருமண நிகழ்ச்சிகள் படம் எடுக்கப்பட்ட போது நான் ஒரு படத்திலும் நிற்க மறுத்துவிட்டேன். எவ்வளவு கட்டாயப் படுத்தியும் மறுத்துவிட்டேன். இரவு பெண் வீட்டில்தான் மணமக்கள் தங்கினார்கள். நண்பர்கள், உறவினர்கள் என எல்லோரும் மொட்டை மாடியில் அரட்டைக் கச்சேரி செய்து விட்டுத் தூங்க ஏற்பாடு செய்யப்பட்டு, வீட்டின் கீழே இருந்த ஒரே அறை மணமக்களுக்குத் தரப்பட்டது.

அவர்களின் குடும்ப வாழ்க்கை கொல்கத்தாவில் துவங்கியது. ஊர் போய் சேர்ந்ததும் பெரிய கடிதம்… ஆளுக்கு ஒன்று என, இருவரும் தனித்தனியே எனக்குத்தான் முதலில் எழுதினார்கள். எனக்கு பெரிய மகிழ்ச்சி ஏதும் அதனால் இருக்கவில்லை.

அந்தத் திருமணத்தால் எனக்கு வருத்தம் உண்டு. சரண்யாவின் பி ஹெச் டி ஆராய்ச்சி இன்றுவரை முடியவில்லை. அவளின் குடும்பம் அவளை ராணி போல வளர்த்தது. அதற்குக் கைமாறாக அவள் எதுவுமே அவர்களுக்குச் செய்யவில்லை. தந்தை இல்லாத குடும்பத்திற்கு அவள் தலைமை ஏற்க வேண்டும் என நான் விரும்பினேன். அவளும் அதைச் செய்யவில்லை, அவளது கணவரும் அந்தப் பொறுப்பை ஏற்க முன்வரவில்லை. மேலும், அந்த மனிதரும் குடித்து குடித்தே ஐந்து வருடங்களுக்கு முன்னர் போய்ச் சேர்ந்தார்.

அதற்கு முன்னர் சிலமுறை அவர் என்னைப் பார்த்தபோதுதான் அவர் மேலிருந்த என் கோபம் தணிந்திருந்தது. எனக்கும் வயதானதாலோ அல்லது இனிமேல் என்னதான் செய்ய முடியும் என்பதாலோ, ஆணொன்று பெண்ணொன்று என அவர்களின் இரண்டு நல்ல பிள்ளைகளைப் பார்த்ததாலோ என்னவோ … அவரை மனம் ஏற்கத் தொடங்கியது. இப்பொழுது அவரை என்மனம் ஒப்புக்கொள்ளத் துவங்கிய நேரத்தில் போய்ச் சேர்ந்துவிட்டாரே என்ற வருத்தமும் உண்டு.

சரண்யாவைப் போன்ற தோழி இதுவரை எனக்கு அமையவில்லை. இனியும் அமைய மாட்டார்கள். அவளுடைய இந்தப் பிரச்சனைக்கெல்லாம் காரணம் எனது மற்றொரு தோழியான விசாலிதான். சரண்யாவின் ஆங்கிலத்தில் அவர்கள் மயங்கி, அவளுக்குப் பிடிக்காத ஒரு ஆய்வில் அவளை ஈடுபட வைத்ததுதான் பெரிய தவறு என்பது எனது கருத்து. அவர்கள், அழகாக ஆங்கிலத்தில் உரையாடும் சரண்யாவின் திறமையை வைத்து, அவள் ஒரு பெரிய அறிவாளி என்றும், உடனே வெளிநாடு சென்று கைநிறைய சம்பாதிக்கப் போகிறாள் என்றும் மனமார நம்பினார்கள். நம் மக்களுக்குத்தான் மொழிக்கும் அறிவிற்கும் உள்ள இடைவெளி பற்றிய ஞானம் கொஞ்சமும் இருப்பதில்லையே.

ஆனால் இதையெல்லாம் நான் செய்தேன். வெளிநாடு சென்றேன். வாழ்க்கையை வளமாக்கினேன். உடன் பிறந்தவர்களுக்கும், என் நண்பர்களுக்கும், படிக்க உதவி கேட்டவர்களுக்கும், திருமண உதவி கேட்டவர்களுக்கும் இன்றளவில் கை நிறைய, மனம் நிறையச் செய்கிறேன். இதை யாரிடமும் இதுவரை நான் சொன்னதில்லை. முதன்முறையாக இப்பொழுதுதான் பதிவு செய்கிறேன். இதே மாதிரி சரண்யாவும் அவளின் குடும்பத்திற்குச் செய்ய வேண்டும் என நான் எதிர்பார்த்தேன். அது தவறான கருத்தாக பிறருக்குத் தெரியலாம். ஆனால், என் எதிர்பார்ப்பில் தவறில்லை என்பது எனது உறுதியான எண்ணம்.

________________________

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “மணமகளே உன் மணவறைக்கோலம் – 2

  1. சரளமான எழுத்து, மிக நல்ல பதிவு. திருமணச் செலவுகளைக் குறைத்தால், எளிமையாக நடத்தினால், பலருக்கும் பயன் உண்டாகும். ஆனால், விமரிசையாக நடத்த வேண்டும் என்றே பலரும் விரும்புகிறார்கள். திருமணம் எப்படி நடக்கிறது என்பதை விட, மணமக்கள் எப்படி வாழ்கிறார்கள் என்பதே முக்கியம். ஊராருக்கு உதவும், தங்கள் நல்ல மனம் வாழ்க.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *