யோகக் க​லை​யை வளர்த்​தெடுத்த பதஞ்சலிமுனிவர்

0

மு​னைவர் சி.​ சேதுராமன்.

Patanjaliயோகக் க​லை​​யை வளர்த்​தெடுத்தவர்களுள் பதஞ்சலி முனிவர் குறிப்பிடத்தக்கவராக விளங்குகிறார். மக்களி​டை​யே அவர் குறித்து பல்​வேறு புராணக் கதைகள் வழங்கப்பட்டு வருகின்றன. பதஞ்சலி முனிவரின் காலம் தொன்மையானது. இவர் வேத காலத்தில் இருந்தே இருந்து வந்ததாகவும் கூறுவர். இவ​ரைப் பற்றிய புராணக் க​தை​யொன்று மக்களி​டை​யே வழக்கில் வழங்கப்பட்டு வருகின்றது.

பதஞ்சலி முனிவ​ரைப் புராணங்கள் திருமாலின் படுக்​கையாக விளங்கும் ஆதி ​சேஷனின் அவதாரம் என்று குறிப்பிடுகின்றன. திருமால் மண்ணுலகில் அவதாரங்கள் செய்ய வந்தபோது இவர் முனிவராக அவதாரம் செய்வதாகவும் கூறுகின்றனர்.

பதஞ்சலி முனிவரின் வரலாறு:
பாற்கடலில் பரந்தாமன் பள்ளி​கொண்டிருந்த​போது அவர் சிவ​பெருமானின் நடனத்தைத் தன் மனக் கண்களால் கண்டு மகிழ்ந்து ​கொண்டிருந்தார். திருமாலின் மகிழ்ச்சியால் அவரின் உடல் எ​டை திடீ​ரென்று அதிகரித்தது. இத​னை உணர்ந்து வியந்த ஆதி​சேடன் இதற்கான காரணம் என்ன என்று திருமாலிடம் ​கேட்டார்.

ஆதி​சேடனின் வினாவி​னைக் ​கேட்ட திருமால் அ​னைத்திற்கும் மூலாதாரமாக விளங்கக் கூடிய சிவ​பெருமானின் ஆனந்தமயமான நடனக் காட்சி​யை உள்ளத்தில் கண்ட​தையும் அதன் அரு​மை ​பெரு​மை​யையும் விளக்கமாக எடுத்துக் கூறி அதனால்தான் தான் மகிழ்ந்ததாகவும் அதன் காரணமாத் தன் உடல் எ​டை அதிகரித்ததாகவும் கூறியருளினார்.

திருமாலின் கூற்​றைக் ​கேட்ட ஆதி​சேடன் மனக்கண்ணில் கண்டு மகிழ்ந்த​தே ​பெருங்களிப்​பைத் தருமானால் இ​றைவனின் திருநடனத்​தை ​நேரில் கண்டு வணங்கினால் எத்த​கைய பரவச நி​லை ஏற்படும் என்று உணர்ந்து தானும் இ​றைவனின் ஆனந்த நடனத்​தைக் கண்டு வணங்க ​வேண்டும் என்று தனது விருப்பத்​தைத் திருமாலிடம் எடுத்து​ரைத்தார்.

திருமாலும் தாம் கண்டு அனுபவித்து மகிழ்ந்த காட்சி​யை ஆதி​சேடனும் கண்டு மகிழ ​வேண்டும் என்று எண்ணி அவ​ரைச் சிதம்பரத்திற்குச் ​சென்று இறைவ​னைக் கண்டு வணங்கி வருமாறு கூறுகின்றார்.

இ​றைவ​னது ஆனந்த நடனத்​தைக் கண்டு வணங்க விருப்பமுற்ற ஆதிசேஷன் தான் ஒரு முனிவரின் மகனாகப் பிறப்பதற்குத் திருவுளம் ​கொண்டார். அதன்படி ஆதி​சேடன் பிரம்மாவின் கண்ணிலிருந்து ​தோன்றியவரும் சப்தரிஷி மண்டலத்தில் முதலாவதாகத் திகழ்பவருமாகிய அத்திரி முனிவருக்கும் மும்மூர்த்திகளையும் குழந்​தைகளாக்கிய அனுசூயா​தேவிக்கும் மகனாகப் பிறந்தார். அதிலும் இவர் மனிதத் த​லையும் பாம்பின் உடலும் ​கொண்டவராகப் பிறந்தார் என்றும் புராணங்கள் குறிப்பிடுகின்றன.

பதஞ்சலி – ​பெயர்க்காரணம்:
தானும் நடன தரிசனம் காண எண்ணித் தவம் புரிந்தார் ஆதிசேஷன்.அவரைச் சோதிக்கத் திருவுள்ளம் கொண்டார் சிவபிரான். பிரம்மதேவனின் வடிவம் கொண்டு ஆதிசேஷன் முன் தோன்றி என்ன வரம் வேண்டும் ? எனக் கேட்டார். அவரைப் பிரம்மதேவன் என எண்ணிய ஆதிசேஷன் உம்மால் ஆக வேண்டியது ஒன்றும் இல்லை எனக்கூறித் தவத்தில் கருத்தைச் செலுத்தினார். மகிழ்வடைந்த சிவபிரான் பின் தரிசனம் தந்தார். அவ​ரைக் கண்டு வணங்கிய ஆதி​சேடன் தான் தங்களது ஆனந்தத் தாண்டவ நடனத்​தைக் காண ​வேண்டும். இது​வே யான் ​வேண்டும் வரம் என்றார். அத​னைக் ​கேட்ட சிவ​பெருமான், “ஆதி​சேட​னே! நீ அத்திரி முனிவருக்கும் அனுசூயைக்கும் குழந்தையாய்ப் பிறந்து வளர்ந்து, சிதம்பரம் அடைவாயாக. அங்கே என் நடனக் காட்சி​யைக் காண்பதற்குத் தவம் ​செய்து ​கொண்டிருக்கும் வியாக்கிரபாத முனிவருடன் சேர்ந்து இருந்தால் அங்கே யாம் எம் நடன தரிசனம் தருகின்றோம்“ என்று இறைவன் அருள் செய்து மறைந்தார்.

அதன்படி ஆதி​சேடன் அத்திரி, அனுசுயா​தேவி இருவருக்கும் மகனாகப் பிறந்தார். இவரது பிறப்பு பற்றி ​வே​றொரு க​தையும் வழங்கப்படுவது சிந்த​னைக்குரியது. சிவ​பெருமானின் வரம் காரணமாக ஆதிசேடன் ஒரு நாள் சிவ​பெருமா​னைத் தியானித்துக் ​கொண்டு இ​றைவனிடம் கையேந்திக் ​கொண்டிருந்த அனுசூயையின் கைகளில் விழுந்தார். அத​னைக் கண்ட அனுசுயா​தேவி ஆதி​சேட​னைச் சாதராணப் பாம்​பென்று எண்ணித் தனது கையை உதறிவிட ஆதி​சேடன் அனுசுயா​தேவியின் பாதத்தில் விழுந்தார். இங்ஙனம் பாதத்தில் விழுந்ததாலும், இ​றைவ​னை வணங்கிக்(அஞ்சலித்த) ​கொண்டிருந்த ​கைகளில் விழுந்ததாலும் பதஞ்சலி எனக் காரணப் பெயர் பெற்றார் என்ற க​தையும் வழங்கப்பட்டு வருகிறது.

அவ்வாறு விழுந்த ஆதி​சேட​​னைப் பின்னர் அனுசுயா​தேவி தமது குழந்​தையாக வளர்த்து வந்தார். பதஞ்சலி முனிவர் வளர்ந்தவுடன் இ​றைவனின் திருநடனத்தைக் காண்பதற்காகச் சிதம்பரம் ​நோக்கிச் ​சென்றார். அங்கு வியாக்கிரபாதருடன் ​சேர்ந்து சிவ​பெருமானின் திருநடனத்​தைக் கண்டு மகிழ்ந்தார்.

இப்பதஞ்சலி முனிவர், திருமூலர் உள்ளிட்ட எண்மருக்கு ​யோகக் க​லையி​னை நந்தி​தேவர் அருளிச் ​செய்ததாகவும் அவர்களிருவரும் நந்தியிடம் இருந்து கற்ற க​லை​யை மற்றவர்களுக்குக் கற்றுக் ​கொடுத்ததாகவும் கூறுகின்றனர். திருமூலர் இத​னை,

“நந்தி அருள் பெற்ற நாதரை நாடினோம்
நந்திகள் நால்வர் சிவயோக மாமுனி
மறு தொழுத பதஞ்சலி, வ்யாக்ரபர்
என்றிவர் என்னோடு எண்மருமாம்!”
என்று திருமந்திரத்தில் குறிப்பிடுகின்றார்.

நாட்டிய சாஸ்திரம் எழுதிய பதஞ்சலியும், யோகக் கலை எழுதிய பதஞ்சலியும், மஹா பாஷ்யம் எழுதிய பதஞ்சலியும் வேறு வேறு என்றும் சிலர் குறிப்பிடுகின்றனர். ஆனாலும் இவற்​றை எல்லாம் எழுதியது ஒருவரே என்பது அறிஞர் பலரின் முடிந்த முடிவாகும்.

பதஞ்சலி முனிவர் ஆதி​சேடன் அவதாரமாகத் தோன்றியவர். அதனால் பதஞ்சலி முனிவரின் விஷமூச்சுக்காற்றுப் பட்ட அனைத்தும் சாம்பலாகிவிடும். எனவே இவர் தம் மாணவர்களுக்கு ​நேரி​டையாக அல்லாது அசரீரியாகவே க​லைக​ளைக் கற்றுக் ​கொடுத்து வந்தார். மாணவர்களால் அவ​ரைப் பார்க்க முடியாது.

இந்நி​லையில் பதஞ்சலி முனிவருக்குத் திடீ​ரென்று ஓரா​சை மனதினுள் எழுந்தது. தில்லையம்பல பஞ்சசபைகளில் ஒன்றாகிய ராஜசபை என்னும் ஆயிரங்கால் மண்டபத்தில் அமர்ந்து தாம் இயற்றிய வியாகரண சூத்திரம் என்னும் நூலைத் தம்முடைய மாணவர்களுக்குத் தாமே நேரி​டையாக இருந்து கற்றுக் ​கொடுக்க வேண்டும் என்ப​தே அவ்வா​சையாகும்.

அவரது எண்ணப்படி ​பெரிய தி​ரை​யொன்​றைத் தமக்கும் மாணவர்களுக்கும் இ​டையில் ​தொங்கவிடுமாறு கூறினார். தி​ரை​யைத் தூக்கி யாரும் தன்​னைப் பார்க்கக் கூடாது என்று மாணவர்களுக்குக் கட்ட​ளையிட்டார். அவரது ஏற்பாட்டின்படி பாடம் ​வெகு சு​வையாகச் ​சென்று ​கொண்டிருந்தது. பலநாள்கள் மாணவர்கள் பாடங்​கேட்டனர்.

இவ்வாறு இருக்​கும்​போது ஒருநாள் அம்மாணவர்களுள் ​கெளடபாதர் என்பவ​ரை மட்டும் பணி காரணமாக ​வெளியில் அனுப்பிய பதஞ்சலி முனிவர் மற்ற மாணவர்களுக்குப் பாடஞ் ​சொல்லலானார். மாணவர்கள் தம்​மை மறந்து பாடங்​கேட்டனர். அப்​போது அவர்கள் இத்த​கைய ஆசிரிய​ரைத் தாம் ​நேரி​டையாகக் காணாது இருக்கின்​றோ​மே மனத்தில் வருத்தம் எழத் தி​ரை​யை விலக்கி அ​னைவரும் அவ​ரைப் பார்க்க முடிவு ​செய்து அங்ஙன​மே தி​ரை விலக்கிப் பார்த்தனர்.

அப்​போது பதஞ்சலி முனிவரின் பார்​வையும் கடும் விஷமும் பட்டு அவர்கள் அ​னைவரும் எரிந்து சாம்பலாகிவிட்டனர். ஆசிரியர் கூறிய அ​னைத்துப் பணிகளையும் முடித்து அங்கு வந்த கௌடபாதர் அங்கு நிகழ்ந்த​தை எண்ணி வருந்தினார். பின்னர் பதஞ்சலி அவ​ரைத் ​தேற்றி அவருக்குத் தாம் கற்ற க​லைகள் அ​னைத்​தையும் கற்றுக் ​கொடுத்தார்.

கௌடபாதரும் தனது ஆசிரியரிடமிருந்து அனைத்துக் க​லைக​ளையும் கற்றுத் ​தேர்ந்தார். பதஞ்சலி முனிவர் அதன் பின்னர் யோக சூத்திரத்தில் ஆழ்ந்து மூலாதாரத்தில் கனலை எழுப்பி யோகம்புரிந்தார். அப்​போது அவரது ஆழ்மனதில் தனது ஆதி​சேட அவதாரத்தின் மகிழ்ச்சியான காட்சி​யைக் கண்டு ​மெய்விதிர்விதிர்த்தார். சிவ​பெருமா​னைத் தியானித்து தில்​லைச் சிதம்பரத்தி​லே​யே இ​றைவனுடன் இரண்டறக் கலந்து சமாதிநி​லை அ​டைந்தார். இவர் பாணினி சூத்திரத்திற்கு விளக்கவுரை (பாஷ்யம்) எழுதினார். பதஞ்சலி யோக சூத்திரம் என்னும் நூல் இவர் பெயரால் விளங்குகின்றது.

புஷ்ய மித்திரர் இவருடைய சம காலத்தவராகக் கருதப்படுகின்றார். புஷ்ய மித்திரரின் காலம் கி.மு.3-ம் நூற்றாண்டு என்று அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். அதனால் பதஞ்சலி முனிவரின் காலமும் கி.மு.3-ஆம் நூற்றாண்டு என்று கூறுவர். பதினெட்டு சித்தர்களில் ஒருவரான திருமூலரும் இவரும் ஒரே காலத்தில் வாழ்ந்ததாயும், பதஞ்சலி முனிவர் சமஸ்கிருதத்தில் எழுதிய மஹா பாஷ்யத்தின் தமிழாக்கம் தான் திருமூலரின் “திருமந்திரம்” என்று சொல்வோரும் உண்டு. ஆனால் இதற்கு அடிப்ப​டையான சான்றுகள் ஏதும் இல்​லை என்பது ​நோக்கத்தக்கது. இ​வை எல்லாமே யூகங்களின் அடிப்ப​டையில் அ​மைந்த​வை என்பது ஆய்வாளர்களின் முடிவாகும்.

திருமூலர் திருமந்திரம் என்பது ​யோக​நெறிக​ளைக் குறிப்பிடுகின்றது. திருமூலர் திருமந்திரம் தனித்த​தொரு ​யோக நூலாகத் திகழ்கின்றது. பதஞ்சலி முனிவரின் ​யோகசூத்திரம் ​யோகத்​தை விளக்கும் ​யோகநூலாக விளங்குகின்றது. இருவரும் தனித்தனி​யே நூல்க​ளை இயற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது. பதஞ்சலி முனிவரின் ​யோகசூத்திரத்​தைப் பார்த்​தே திருமந்திரத்​தை திருமூலர் எழுதினார் என்பது சற்றும் ​பொருந்தாத் தன்​மையு​டைய கூற்றாகும்.

பதஞ்சலி முனிவரும், திருமூலரும் கூறிய ​யோக ​நெறிகள் அவரவர் ​பெயர்களி​லே​யே கூறப்பட்டு வருகின்றன. ​எது எவ்வாறிருப்பினும் பதஞ்சலி முனிவரும் திருமூலரும் உலகிற்கு ​யோக​நெறிக​ளை வழங்கிய பிதாமகர்களாக மூலவர்களாக விளங்குகின்றனர். இவர்களது ​யோக​நெறிகள் உலக மக்க​ளை உய்விக்க வந்த வாழ்க்​கை ​நெறிகளாக விளங்குகின்றன.

____________________________________________________________________________________

மு​னைவர் சி.​ சேதுராமன்
தமிழாய்வுத் து​றைத்த​லைவர்
மாட்சி​மை தங்கிய மன்னர் கல்லூரி, புதுக்​கோட்​டை
Malar.sethu@gmail.com

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.