Author: பி.தமிழ்முகில்

  • இயற்கை

     

     

    பி.தமிழ்முகில் நீலமேகம்

     

    இறைவனின் திறமையில் உருவான

    கற்பனை  ஓவியம் …….. உலகம்….

    இறைவன் தன் எண்ணற்ற திறமைகளை

    தனது உலக ஓவியத்தில்

    தீட்டி வைத்துள்ளான்……….

    நீரோடையென……..கடலென ……

    மலையென…… நிலமென ……..

    நீரென…..காற்றென…..

    அந்த வண்ண ஓவியத்தில்

    நாமும் நடமாடும்

    கதாபாத்திரங்கள்……

    நாம் இருக்கும் அழகான ஓவியத்தை/ புகைப்படத்தை

    பொக்கிஷமாய் காப்போம் அன்றோ???

    காத்திடுவோம் – இறைவன்

    நமக்களித்த இயற்கையை…….

    நம் பொக்கிஷமென……

    விட்டுச் செல்வோம் – நம்

    சந்ததிக்கு   வளமான இயற்கையை வரமாய்……..

    படத்திற்கு நன்றி:

    http://www.prelovac.com/vladimir/beautiful-nature-pictures

    Share
  • முரண்

     

     

    பி.தமிழ்முகில் நீலமேகம்

     

    ஆதவன் கூட தூக்கக் கலக்கத்தினின்று

    விடுபடாத இந்த கருக்கலில்

    எங்கோ அவசரமாய்

    எதையோ தேடி ஓடுகிறீர்களே…..

    எனதருமை மானிடர்களே…

    சற்று நில்லுங்கள்!!!

    எங்கே செல்கிறீர்கள்?

    உங்களது இல்லத்திற்கா? அல்லது…

    அலுவலகத்திற்கா??

    இரவெல்லாம் கண்விழித்து

    பகலெல்லாம் கண்ணயரும் அதிசயம்

    உங்களிடம் மட்டும் தான் காண்கிறேன்…

    அதுவும்…. சில காலமாய்த்தான்…

    சுறுசுறுப்பாய் செயல்பட  பகலையும்….

    இளைப்பாறித் துயிலுற இரவையும்

    இறைவன் காரணமின்றிப் படைத்திருக்க மாட்டான்!!!

    ஆனால் …..  இன்றோ…..

    அனைத்தும் தலைகீழாய்….

    ஏனிந்த முரணான மாற்றம்????

    படத்திற்கு நன்றி:

    http://www.prelovac.com/vladimir/beautiful-nature-pictures

    Share
  • மின்வெட்டு !!!

     

    பி.தமிழ்முகில் நீலமேகம்

     

    ஏர் கண்டிஷனும்  ஃபேனும்  தான்

    உதவாமல் போய்விட

    கைகொடுப்பது பனையும்

    தென்னையும்  தான் – விசிறிகளாய் !!!

     

    கிரைண்டரும் மிக்சியும்

    ஓரமாய் படுத்துறங்க -மீண்டும்

    துள்ளியோடி வந்து வாசலை

    அலங்கரிக்குது – அம்மியும் ஆட்டுரலும் !!!

     

    குளிர்ந்த நீருக்காக ஃப்ரிட்ஜ் அருகே

    காத்திருந்த காலம் மாறி

    கண்ணுக்கு அழகாய் கைக்கடக்கமாய்

    ஆரோக்கியத்துடன் – மண்பானைகள் !!!

     

    டிவியில் லயித்து – உலகை மறந்திருந்தோர்

    இப்போது சுற்றியிருப்போரின்

    முகங்களில் சிரிப்பினைப்

    பார்க்கவும் பழகியிருக்கிறார்கள் !!!!

     

    கம்ப்யூட்டரால் கட்டுண்டிருந்த குழந்தைகளுக்கு

    இப்போது  மனப்பயிற்சியும் உடற்பயிற்சியும் ….

    தாயமும் பரமபதமும் – கண்ணாமூச்சியும்

    தொட்டு விளையாட்டும் கூட விளையாடுகிறார்கள் !!!

     

    செயற்கையோடு செயற்கையாகவே

    வாழப் பழகிவிட்ட நமக்கு- இயற்கையோடு

    இயைந்த வாழ்வினை அதன் சிறப்பினை

    நமக்கு கற்றுத் தருகிறது – மின்வெட்டு !!!

    Share
  • தொலைதூரக் காதல்

     

     

    பி.தமிழ் முகில் நீலமேகம்

     

    உன் நினைவுகளில் நானும்

    என் நினைவுகளில் நீயும்

    நீங்காது நிலைத்திருக்க

    தூரமும் தொலைவும் தான்

    காதலை பிரித்திடுமா என்ன ???

     

    அருகாமையும் அரவணைப்பும்

    உணர்த்தாத காதலை

    பிரிவும் தொலைவும்

    தெள்ளத் தெளிவாய்

    படம் பிடித்துக் காட்டிடாதோ ???

     

    அனுதினமும் வளர்ந்திடுமே

    அளவிலா   காதலும் ….

    பிரிவதுவும் ஏற்படுத்துமே

    ஆழமான வலுவான

    அன்பின்  அஸ்திவாரம் !!!

     

    உந்தன் அன்பின் அருமையை

    எனக்கும் ……எந்தன் –

    காதலின் வலிமையை

    உனக்கும் ……உணர்த்திடாதோ ???

    இந்த தொலைதூரக் காதல் !!!

    Share
  • இனி ஒரு பிறவி வேண்டாம்…!

     

     

    பி.தமிழ் முகில் நீலமேகம்

     

    செய்நன்றி தனை மறந்து

    முகத்துக்கு முன் துதியும்

    முதுகுக்குப் பின் மிதியடியும்

    மலிந்து விட்ட சமூகத்தில் –

    இனியும் வேண்டாம் ஒரு பிறவி !!!

     

    பெயரளவில் பெண்ணுரிமை

    என்றுரைத்து விட்டு

    வழக்கமான கடிவாளங்களை

    பொன்னால் பூட்டும் உலகில்

    இனியும் ஒரு பிறவி – வேண்டவே வேண்டாம் !!!

     

    உழைப்பவன் செவ்வனே உழைக்க

    எவனோ ஒருவன் – அட்டையென

    உழைப்பை உறியும் கேடு கெட்டோர் மத்தியில்

    இனியும் வேண்டாம் –

    ஐம்புலன் மூடி வாழும் ஓர் பிறவி !!!

     

    யாமின்றி அணுவும் அசையாது

    என்னால் ஆகிடாதது ஏதுமுண்டோ ? – என்று

    எக்காளச் சிரிப்புதிர்க்கும் இலஞ்சக்

    காட்டேரிகளின் மயான உலகில்

    புல்லாய்க் கூட – வேண்டாம் ஓர் பிறவி !!!

     

    படத்துக்கு நன்றி: http://www.mea.org/advertising/enoughads.html

    Share
  • ப்ரைவசி

    பி.தமிழ்முகில் நீலமேகம்

                  ஶ்ரீலஷ்மி, அந்த அப்பார்ட்மென்ட்ற்கு புதிதாய் தன் பிள்ளை மற்றும் கணவர் சுகந்தனுடன் வந்து குடியேறியிருந்தாள். அவளது கணவரது பணி மாற்றல் காரணமாய் மிச்சிகன் மாநிலம் டெட்ராய்ட் நகரத்திலிருந்து, பென்சில்வேனியாவிலிருந்த ஃபோர்ட் வாஷிங்டன் நகரத்திற்கு புதிதாய் வந்திருந்தார்கள். சில நாட்கள் ஹோட்டலில் தங்கி இருந்து அருகிலிருக்கும் அடுக்கு மாடிக் குடியிருப்புகளில் ஏதேனும் காலி மனைகள் இருக்கிறதா என்று பார்த்துக் கொண்டிருந்தார்கள். சுகந்தனின் அலுவலகம் இருக்கும் சாலையிலேயே அவர்களுக்கு அப்பார்ட்மென்ட் கிடைத்தது. அந்த வார இறுதியில் குடியேற முடிவு செய்து அப்பார்ட்மென்டில் ஏதேனும் செப்பனிடும் வேலைகள் இருக்கின்றனவா என்று பார்க்கச் சென்று இருந்தார்கள். அப்போது, அங்கு வசித்து வந்த ஓர் தமிழ்க் குடும்பத்தினரைக் கண்டனர். அவர்கள் தாங்களாகவே வந்து தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டனர். அருகில் ஓர் தமிழ்க் குடும்பம் வசிப்பதை அறிந்த ஶ்ரீலஷ்மிக்கு மிகுந்த மகிழ்ச்சி. நம் தாய்மொழியில் பேசி உறவாடி மகிழ நம் தேசத்தைச் சேர்ந்தவர் அருகில் உள்ளனர் என்று எண்ணி மகிழ்ந்தாள்.

    ஒரு வாரத்திற்குப் பின், அவர்கள் அங்கு குடியேறினர். அவ்வப்போது சந்திக்கும் வேளைகளில், அந்தப் பக்கத்து வீட்டுத் தமிழ்ப் பெண் ஶ்ரீலஷ்மியுடன் நன்றாகவே பேசினாள். அதன் பின் வந்த பண்டிகை நாளொன்றில் இருவருமாய் சேர்ந்து பலகாரம் செய்து பரிமாறிக் கொண்டார்கள். சில நாட்களில், அவர்கட்கு சில நல்ல நண்பர்கள் கிடைத்தனர். அனைவரும் வாரத்திற்கு ஒருமுறை தங்கள் பிள்ளைகளுடன் ஒன்று கூடி பேசி, பிள்ளைகட்கு நண்பர்கள் வட்டத்தினை ஏற்படுத்திக் கொடுத்தனர். அவர்களும், அருகிலிருக்கும் இந்தியக் கடைகள், அங்கு விற்கும் பொருட்களின் தரம், மலிவான விலையில் தரமான பொருட்கள் கிடைக்கும் இடங்கள், அவர்கள் வசிக்கும் இடத்திற்கு அருகில் இருக்கும் கோயில்கள், குடும்பச் சுற்றுலா செல்ல ஏதுவான இடங்கள் போன்றவற்றை எல்லாம் விவாதித்தனர். ஶ்ரீலஷ்மிக்கு ஓர் நல்ல நட்பு வட்டம் பக்கத்து வீட்டுப் பெண்ணின் மூலம் கிட்டியதில் மிக்க மகிழ்ச்சி.

    ஓர் ஊரிலிருந்து வேறு ஊருக்கு மாற்றலாகிப் போகும் போது, அவர்கள் போகும் ஊரில் இருக்கும் நல்ல அப்பார்ட்மெண்ட்கள், அருகில் அத்தியாவசியத் தேவைகட்கான கடைகள், போக்குவரத்து வசதிகள் போன்றவற்றை இணையத்தில் செயல்படும் மன்றங்கள் (forums) வாயிலாக அறிந்து கொள்வது ஶ்ரீலஷ்மியின் வழக்கம். அப்படித்தான் அவள் இம்முறையும், ஃபோர்ட் வாஷிங்டன் நகரத்தினை பற்றி அறிந்து கொள்வதற்காக ஓர் மன்றத்தில், தனது சந்தேகங்களை ஓர் பதிவாகப் போட்டிருந்தாள். அந்த மன்றத்தின் இணைய பக்கத்தில் அவளது பதிவிற்கு வந்திருந்த பதில்களைப் அவ்வப்போது பார்த்துக் கொள்வாள். அவ்வாறு ஒரு சமயம் பார்த்துக் கொண்டிருந்தவள், அந்தப் பக்கத்து வீட்டுப் பெண் அவளது பதிவுகட்கு, பதிலளித்திருப்பதைக் கண்டாள். பக்கத்து வீட்டுப் பெண் அவளுடன் தனது மின்னஞ்சல் முகவரியை பகிர்ந்து கொண்டதினால், ஶ்ரீலஷ்மியால் அவளை அந்த மன்றத்தில் எளிதில் அடையாளம் கண்டு கொள்ள முடிந்தது. அடுத்த முறை சந்தித்த போது, அப்பெண்ணிடம், “எனது கேள்விகட்கு நீங்கள் இணைய மன்றத்தில் பதிலளித்திருந்தீர்கள். மிக்க நன்றி” என்றாள். அதன் பின், ஶ்ரீலஷ்மி அதை மறந்து விட்டாள்.

    சில நாட்கள் சென்றன. ஶ்ரீலஷ்மிக்கு பக்கத்து வீட்டுப் பெண்ணின் போக்கில் மாற்றம் தெரிந்தது. அவள் முன் போல் தன்னிடம் பேசுவதில்லை என்பதை உணர்ந்தாள். அவளது பாராமுகம் ஶ்ரீலஷ்மிக்கு வருத்தமாய் இருந்தது. அவளுக்கு ஏனோ மனதே சரியில்லை. நாம் யாரையும் எந்த விதத்திலும் துன்புறுத்தியதோ, தொந்தரவு செய்ததோ கிடையாதே….நம்மையும் அறியாது அவரை கஷ்டப்படுத்தி விட்டோமோ?? நம்மை அவர்களுக்கு பிடிக்கவில்லையோ?? என்றெல்லாம் மனதைப் போட்டுக் குழப்பிக் கொண்டிருந்தாள் . நேரில் போய்க் கேட்டுவிடலாமா என்று சிந்தித்துக் கொண்டிருந்தாள். அலுவலகத்திலிருக்கும் தன் கணவனைத் தொலைபேசியில் அழைத்து, தன் மனக் குமுறலைக் கொட்டித் தீர்த்தாள்.

    அன்று மாலை, அவர்களது தோழிகளில் ஒருவரை சந்தித்தாள். வழக்கமான விசாரிப்புகள், பேச்சுகளின் போது அவர், “ உங்களது பக்கத்து வீட்டுப் பெண், நீங்கள் அவரது ப்ரைவசியில் தலையிடுவதாக குறைபட்டுக் கொள்கிறாரே. நீங்கள் இணைய மன்றத்தில் அவரது பதிவுகளை எல்லாம் தேடித் தேடி படிப்பதாகவும் குறை கூறுகிறாரே. என்ன நடந்தது? “ என்றார். அப்போது தான் ஶ்ரீலஷ்மிக்கு என்ன  நடந்திருக்கும் என்பது புரிந்தது. சிரித்துக் கொண்டாள். அவரிடம், “ அவர் இணைய மன்றமொன்றில் இங்கு இருக்கும் இந்தியக் கடை பற்றியும், அங்கு பொருட்களின் தரம் பற்றியும் பதிவிட்டிருந்தார். அதை பார்த்ததாக அவரிடம் கூறினேன்.அதைத் தான் அவர், அவரது ப்ரைவசியில் நான் தலையிடுவதாக உங்களிடம் கூறியிருக்கிறார்.சாதாரண விஷயத்தை பெரிது படுத்துகிறார்” என்றாள் ஶ்ரீலஷ்மி. “ஓ…இதுதானா விஷயம்.இதிலென்ன இருக்கிறது?” என்று சிரித்தார் அந்த தோழி. பக்கத்து வீட்டுப் பெண்ணின் பாராமுகத்திற்கான காரணத்தை உணர்ந்து கொண்ட ஶ்ரீலஷ்மி மனதினுள் சிரித்துக் கொண்டாள். இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டாள்.

    Share
  • சில மலர்கள் இரவில் மலர்வது ஏன்?

     

    பி. தமிழ்முகில் நீலமேகம்

    சில மலர்களில் மகரந்தச் சேர்க்கை பூச்சிகளால் ஏற்படுகின்றது.அத்தகைய மலர்கள் இரவில் மட்டுமே மலர்கின்றன. அம்மலர்களின் வாசனை அபாரமாக இருக்கும்.மேலும், இரவில் மலரும் மலர்கள் வெண்மை நிறத்திலேயே இருக்கின்றன.இது அவற்றின் மரபணு தனிப்பண்பு ஆகும்.பகலில் மலரும் மலர்கள் பல்வேறு வண்ணங்களில் இருக்கின்றன.அதனால், வண்டுகள்,தேனீக்கள் போன்றவை அவைகளால் எளிதில் கவரப்படுகின்றன.வெண்ணிற மலர்கட்கு பகலில் வண்டுகள்,வண்ணத்துப் பூச்சிகளைக் கவரும் தன்மை குறைவு. எனவே, அவை இரவில் மலரும் தழுவலைப் (adaption) பெற்றுள்ளன. வெண்மை நிற மலர்கள் இருளில் நன்கு தெரிவதால், அவை பூச்சிகள்,வௌவால்கள் ஆகியவற்றை எளிதில் கவர்கின்றன.மேலும், இவற்றின் அபார வாசனை பூச்சிகளை தன்வசம் இழுக்கின்றன.மகரந்தச் சேர்க்கை நிகழ்கிறது.

    இரவில் மலரும் மலர்கள் சில: மல்லிகை, செம்பகம்,சம்பங்கி, மனோரஞ்சிதம்,வெண்தாமரை,நிஷாகந்தி.

    Share
  • Why does the Touch-Me-Not plant (Mimosa pudica) closes its leaves when touched?

     

    Thamizhmukil

     

                

     

                                          It is thought that the Touch-Me-Not (Mimosa pudica) plant closes its leaves when touched as a defense mechanism to prevent it selves from the insects or other herbivores. Nyctonastic movements, which are reactions that happen in absence of light, cause the Mimosa to close its leaves. The opening and closing of the leaves is controlled by a fluid-filled sac like structures found at the base of the leaves and each leaflet. The swollen base of the leaf is called as pulvinus. When the plant is touched, electrical signals are produced by the cells. The cells in the `pulvinus’ respond to this signal by flushing out potassium and water to the adjacent cell. With the massive loss of water, the leaves become flaccid and the pulvinus bends over and the leaflets fold. This causes the leaves of the plant to close. If the leaves are left undisturbed for few seconds, they open again.

     

    Share
  • குப்பை

     

    தமிழ்முகில்

     

                                         அதிகாலையில் எழுந்து, கடிகாரத்தைப் பார்த்துவிட்டு, அவசர அவசரமாய் குளித்து விட்டு வந்த ராமாயி, அடுப்பு மேட்டில் இருந்த முந்தின நாள் சாதத்தில், சிறிது மோர் கலந்து அவசர அவசரமாய் குடித்து விட்டு, ஒரு  கலயத்தில், தன் மகனுக்கும் எடுத்து வைத்தாள். சுவற்றோரமாய், குளிருக்கு இதமாய், போர்வையை இழுத்துப் போர்த்திக் கொண்டு சுருண்டு படுத்திருந்தான், அவளது பத்து வயது மகன், மணிமாறன். அவனிடம்,                   “ அப்பா, மணிமாறா, நான் வேலைக்கு கிளம்பறேன். உனக்கு கலையத்துல பழையது எடுத்து வெச்சிருக்கேன், சாப்டுட்டு, பள்ளிக்கோடத்துக்கு கிளம்பு.” என்றாள். அவள் குரலைக் கேட்டதும், கண் திறந்து பார்த்த மணிமாறன், “அம்மா, எனக்கு புது நோட்டும், பென்சிலும் வேணும்மா. நான் பேப்பர்ல எழுதி, நோட்ல ஒட்டி வெச்சிருந்தத டீச்சர் பாத்துட்டாங்க, திங்கட்கிழமை வரும் போது, புது நோட்டோட வரணும், இல்லைன்னா கிளாஸ்க்குள்ள விடமாட்டேன்னு சொல்லிட்டாங்கம்மா” என்றான். “சரிப்பா, வாங்கித் தர்ரேன்.” என்று சொல்லிவிட்டு கிளம்பினாள். இன்று முதலாளி அம்மாவிடம், சிறிது பணம் கேட்டு வாங்க வேண்டும் என்றெண்ணியவாறு வேகமாக நடந்தாள்.  

                         அந்த பங்களாவின் கேட்டினைத் திறந்து கொண்டு, வீட்டின் பின்கட்டு வழியாக சமையற்கட்டினை அடைந்தவளை, கோபத்துடன் எதிர்கொண்டாள் எஜமானி அம்மாள் சுகன்யா. “ வங்கம்மா, வாங்க. இப்பத்தான் வர்றீங்களா? காபி குடிங்க” என்று நக்கலாய், அவள் வேலைக்குத் தாமதமாய் வந்ததை இடித்துரைத்தாள். “இல்லீங்கம்மா……..” என்று ஆரம்பித்த ராமாயியை,              “ வேலைக்கு   வர்ற நேரத்தைப் பாரு. ஆறு மணிக்கு வரணும்னு சொல்லி இருக்கேண்ல, இப்ப மணி ஆறரை ஆகப் போகுது. இனிமேல் வேலையை ஆரம்பிச்சு, எப்ப முடிக்கறது??? சீக்கிரம் ஆரம்பி “ என்று சிடுசிடுத்து விட்டுச் சென்றாள்.

                                                 பரபரவென்று அங்கு குவிந்திருந்த வேலைகள் அனைத்தையும் ஒவ்வொன்றாய் செய்ய ஆரம்பித்தாள் ராமாயி. பாத்திரங்கள் துலக்கி, வீடு முழுவதும் பெருக்கி துடைத்து விட்டு, கொல்லைப் புறத்தில் மலையென குவித்து வைக்கப் பட்டிருந்த துணிகளை எல்லாம் துவைத்து காயப் போட்டுவிட்டு நிமிர்ந்தாள். நான்கு மணிநேர ஓய்வில்லா வேலைகட்குப் பின், அப்பாடா என்று அயர்ந்து ஓரமாய் அமர்ந்தவளை, சுகன்யாவின் அதட்டும் குரல் விரட்டியது. ”வேலை எல்லாம் முடிஞ்சதா?? மாடியில சின்னையா ரூம் ரொம்ப தூசியா இருக்கு, அதைப் பார்த்து பெருக்கி சுத்தம் பண்ணி வை. வேண்டாதது எல்லாம் ரூம் வாசல் கிட்ட இருக்கற ஷெல்ஃப்ல இருக்கு. ரூமை கூட்டி பெருக்கி சுத்தம் பண்ணிட்டு, தேவை இல்லாததுன்னு ஷெல்ஃப்ல இருக்கறதெல்லாம் கொண்டு போய் தெருவோர குப்பைத் தொட்டில போட்டுடு” என்று கட்டளையிட்டாள்.

                                    எஜமானி அம்மாள் ஏவலிட்ட பணிகளை செய்ய எத்தனித்தாள். அவளால் செய்ய இயலவில்லை. ஓய்வின்றி வேலை செய்தவளுக்கு, பசி வயிற்றைக் கிள்ளியது. ”அம்மா, பசியாயிருக்குங்க. பழையது இருந்தா சாப்டுட்டு செய்யட்டுங்களா ??” என்றாள் ராமாயி. “சரி…சரி.. அந்த அடுப்பு மேடைக்கு கீழ இருக்கற பழைய சாதத்த சாப்டுட்டு வேலைய பாரு” என்று கூறி விட்டுச் சென்றாள். சாதத்தினை எடுத்து வந்து, ஓர் ஓரமாய் அமர்ந்து உண்டு விட்டு, பாத்திரங்களை துலக்கி வைத்துவிட்டு, அடுத்த வேலையை பார்க்கக் கிளம்பினாள்.

                                  மாடிப்படி ஏறி, அந்த அறையைத் திறந்தவளுக்கு மலைப்பாக இருந்தது. ஆம்….. அறை முழுவதும், புத்தகங்களும், பேப்பரும், பேனாக்களுமாய் இறைந்து கிடந்தன. சாப்பிட்ட தட்டுகளும்,காபி தம்ளர்களும் டேபிளின் மீது அப்படியே கிடந்தன. ஒவ்வொன்றாக எடுத்து சீர்படுத்திவிட்டு, அறையினை சுத்தம் செய்தாள். பின், இறுதியாக, எஜமானி அம்மாள் சொன்ன வேண்டாதவற்றை எடுத்துப் பார்த்தாள். அது முழுவதும், சில பக்கங்களே எழுதிய நோட்டுக்களும், எழுதாத முழு நீள தாட்களும், பேனாக்களும், பென்சில்களுமாய் நிறைந்திருந்தது. “ இவ்வளவு இருக்கு. இது எல்லாமே  வேண்டாததா என்ன?“ என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டவள், அவற்றை எடுத்து, குப்பைக் கூடையில்  போட எத்தனித்தாள். அப்போது தான் அவள் அதை கவனித்தாள், அதில் நிறைய நோட்டுகள் சில பக்கங்கள் மட்டுமே பயன் படுத்தப்பட்டு இருந்தன. மற்ற பக்கங்கள் எல்லாம் ஏதும் எழுதா வெள்ளைத் தாட்களாகவே இருந்தன. “ இவ்வளவு பக்கங்கள் இருக்கே, இதைப் போயி குப்பைல போடச் சொல்றாங்களே. நம்ம பிள்ளைக்கு வேணும்னா கேட்டு எடுத்துட்டு போகலாமா “ என்றெண்ணியவள், அவற்றை அள்ளிக் கொண்டு கீழே வந்தாள்.

                                “அம்மா, இதிலே எழுதாத நோட்டுகள், கொஞ்ச பக்கம் மட்டும் எழுதுன நோட்டுகள் எல்லாம் நிறைய இருக்கும்மா” என்றவளை ஓர் அலட்சியப் பார்வை பார்த்தாள் சுகன்யா. “ அதான், எல்லாம் வேண்டாம்னு தான எடுத்து வெச்சிருக்கு. குப்பைல எடுத்து போட வேண்டியது தானே, அதை விட்டுட்டு என்ன பேசிட்டு இருக்க?? ” என்றதட்டினாள் சுகன்யா. “சரிங்கம்மா” என்று கூறிவிட்டு, ஏதோ கேட்க எத்தனித்தவள், ஏதாவது கேட்டால், மீண்டும் திட்ட ஆரம்பித்து விடுவாளோ என்றெண்ணி மவுனம் ஆனாள்.

                                       குப்பைகள் என்று அவர்கள் ஒதுக்கியவற்றை எடுத்துக் கொண்டு வந்தவள், “ அவங்க தான் வேண்டாம்னு சொல்லிட்டாங்கள்ல, நாம இதுல இருக்கற நல்ல நோட்டுப் புத்தகங்கள நம்ம பிள்ளைக்கு எடுத்துகிட்டா என்ன….இவங்களும் நான் நோட்டு வாங்க பணம் கேட்டா, இன்னைக்கு குடுக்கப் போறதில்ல” என்றெண்ணியவள் கேட்டின் அருகில் அமர்ந்து, தன் மகனுக்கு பயன்படும் என்று தோணிய நோட்டுகளை எடுத்துக் கொண்டிருந்தாள். இதனை தற்செயலாக கவனித்துவிட்ட சுகன்யா, விறுவிறுவென்று ராமாயியிடம் வந்தாள். “என்ன பண்ற இங்க?” என்று கேட்டுவிட்டு, ராமாயியின் பதிலுக்குக்கூட காத்திராமல்,                          “ வீட்டிலிருந்து  என்ன திருடிட்டு போகப் பாக்கற? ” என்று காரசாரமாய் கத்தத் துவங்கி விட்டாள். அவ்வளவு நேரம் அவளிட்ட ஏவல்கட்கும், அதட்டல்கள் எதற்கும் பேசாது, வேலைகளை கவனித்து வந்த ராமாயி, “அம்மா, கொஞ்சம் பொறுமையா பேசுங்க. நீங்க சுத்தப் படுத்த சொன்னீங்க, நான் செஞ்சேன். அங்க, உபயோகமான பொருட்கள் நிறைய குப்பைல கிடந்தது. உங்க கிட்ட சொன்னதுக்கு, அதெல்லாம் குப்பைல போடச் சொல்லீட்டிங்க. நான், அதில என் பிள்ளைக்கு பயன்படலாமேனு தோணுன பொருட்கள குப்பைல இருந்து எடுத்தேன். எதையும் சந்தேகத்தோடயும், அதிகாரச் செருக்கோடயும் பாக்கற நீங்க, முதல்ல உங்க மனச சுத்தப் படுத்திக்கோங்க. உங்க கிட்ட இனி நான் வேலை பாக்கறதா இல்ல. நான் வரேன்” என்று கூறி விடுவிடுவென்று வெளியேறினாள் ராமாயி.

     

    Share
  • கரைசேரா ஓடங்கள்

     

    தமிழ்முகில்

     

     

     

     

     

     

     

     

     

     

    கண்ணின் இமையென
    பாதுகாத்து நின்ற
    தாயும் நினைவிற்கு
    வரவில்லை !!!
    உந்தன் உயர்வே
    எந்தன் மனக்கனவு
    என்றிருந்த தந்தையும்
    மனக்கண் முன்
    தோன்றவில்லை !!!
    உனக்கு விட்டுக் கொடுக்கவே
    எனது இந்த  அவதாரம்
    என்றுரைத்த உடன் பிறப்பும்
    மறந்து போய்விட்டது !!!
    ஏனோ ??  
    காதல் – கண்ணை
    மறைத்து விட்டது !!!
    வாழ்க்கை சமுத்திரம் கடக்க
    காதல் ஓடம்  ஒன்றே
    போதுமென்றெண்ணி விட….
    ஓடமும் தான் சென்றது –
    நீரின் மேல்
    மெல்லிறகாய் சிலகாலம் !!!
    தென்றலில் மட்டுமே
    அசைந்தாடிப் பழகியிருந்தபடியால்
    புயலைக் கண்டதும்
    நிலை தடுமாறிட …..
    தத்தளித்து நின்று
    கரை சேர நினைத்த போது தான்
    தெரிந்தது – தான் நிற்பது
    நடுச் சமுத்திரத்தில் என்று !!!
    சமுத்திரத்தில் மூழ்கி
    முத்தெடுக்கவும் முடியவில்லை …..
    கரை தேடி ஒதுங்கவும்
    இயலவில்லை ……
    வாழ்வும் இங்கு
    தள்ளாடுது – கரை சேரா ஓடமாய் !!!

    Share
  • துளிர்!

     

    தமிழ்முகில் பிரகாசம்

     

    கையிலிருக்கும் அட்சயப்  பாத்திரத்தின்

    பெருமை உணராது – அலட்சியமாய் 

    ஒடித்தெறிந்து விட

    இன்றோ – பிச்சைப் பாத்திரம்

    ஏந்தி நிற்கிறோம் !!!

    மரங்களை வெட்டி

    எறிந்தோம் – தூய்மையான

    சுவாசக் காற்றைத் தேடி

    யாசகர்களாய் அலைகிறோம் !!!

    பாவிகளை இரட்சிக்கும்

    தேவ தூதன் என –

    நமக்காய் மீண்டும் மண்ணில்  –

    புத்தம் புது துளிராய் !!!

    புது நம்பிக்கையுடன் …………

    புது உற்சாகத்துடன் ……..

    தன்னலமில்லா மனத்துடன் 

    ஓர் புத்துயிரின் ஜனனம் !!!!

     

    Share
  • பாசம்

     

    தமிழ்முகில் நீலமேகம்..

    வழக்கமாக விளையாட  வரும்போதெல்லாம், தன் நண்பர்கள்  பட்டாளத்துடனே அந்த மைதானத்திற்கு  வரும் இராசேந்திரன், அன்று  சற்று முன்னதாகவே வந்து  விட்டான். அந்த பசுஞ்சோலை கிராமத்தில், சிறுவர்கள் விடுமுறை நாட்களில் பொழுதைக் கழிக்கும் விளையாட்டு மைதானமாகத் திகழ்ந்தது, ஊருக்கு எல்லையாக இருந்த அந்த பொட்டல் காடு தான். இராசேந்திரன், வீட்டிலிருந்து சந்தோஷமாய் குதித்து விளையாடியபடி அந்த பொட்டல் காடு நோக்கி வந்து கொண்டிருந்தான். வழியில், அவனைக் கண்ட பக்கத்து வீட்டு சிவகாமி பாட்டி “என்னப்பா, விளையாட கிளம்பிட்டியா ? பாத்து பத்திரமா போய்ட்டு வா“ என்றவரிடம் “சரி பாட்டி“ என்று பதிலளித்துவிட்டு துள்ளி ஓடினான்.

    வழிநெடுக தான் வீட்டிலிருந்து கொண்டு வந்திருந்த கடலையை கொறித்துக் கொண்டே வந்தவனது கவனத்தை, ஓர் சிறு முனகல் சத்தம் ஈர்த்தது. அவன் சட்டென்று நின்று சுற்றும் முற்றும் பார்த்தான். எங்கிருந்து சத்தம் வந்ததென்று அவனால் கண்டுபிடிக்க முடியவில்லை. மெதுவாக திரும்பி நடக்கத் தொடங்கியவனுக்கு, மீண்டும் அக்குரல் கேட்டது. குரல் வந்த திசையை நோக்கி நடந்தான். சத்தம் அங்கு அருகிலிருந்த தண்ணீர்ப் பந்தலில் இருந்து வருவதை உணர்ந்து, அருகில் சென்று பார்த்தான். அங்கோர் மேசையின் அடியில், சில மண் பானைகள் அடுக்கி வைக்கப் பட்டிருந்தன.பானைகள் மெல்ல ஆடுவதைக் கண்ட அவன், மெல்ல ஒவ்வோர் பானையாக எடுத்துப் பார்த்தான். பார்த்தவனுக்கு ஆச்சர்யம் கலந்த சந்தோஷம்.

         வெளி உலகே அறியாது, சுற்றிலும் என்ன நடக்கிறதென்பதை உணராது, அளவிலா ஆனந்தத்துடன் நான்கு நாய்க்குட்டிகள் ஒன்றன் மேல் ஒன்றாய் ஏறி விளையாடிக் கொண்டிருப்பதைக் கண்டான். அவனது கண்களில் ஆர்வமும், மனதில் மகிழ்ச்சியும் நிரம்பியது. சில நிமிடங்கள் தனைமறந்து அவற்றைப் பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு, அவற்றை தம்முடன் எடுத்துச் செல்ல வேண்டுமென்ற ஆர்வம் மேலிட்டது. சுற்றிலும் பார்த்தவனுக்கு, அங்கோர் கோணிப்பை கிடப்பது தெரிந்தது. அதை எடுத்து வந்தவன், ஒவ்வோர் நாய்க்குட்டியாய் எடுத்து பையினுள் போட்டான். அவன் தூக்கியதும், ஒவ்வொரு குட்டியும் மெல்லிய முனகலுடன் அவனது கரங்களில் தஞ்சமடைந்தன. பின், அலுங்காமல் குலுங்காமல் அந்தக் கோணிப் பையை தூக்கிக் கொண்டு வீடு நோக்கி நடந்தான் இராசேந்திரன்.

    வீட்டிற்குள் நுழையும் போதே “அம்மா!!!” என்றழைத்தவாறு வந்தவனை, எதிர்கொண்டார் அவனது தந்தை. “ அம்மா கிராமத்து எல்லையில் இருக்கிற எல்லையம்மன் கோவிலுக்கு போயிருக்கிறார் அப்பா, வருவதற்கு கொஞ்சம் நேரம் ஆகும்” என்றார். எப்போதும் வீட்டிற்குள் நுழையும் போதே, அவனது வருகைக்காக காத்திருந்து, வந்ததும் மலர்ந்த முகத்துடன் வரவேற்று, உண்ண வழங்கும் தாய் அன்று வீட்டில் இல்லாதது, அவனுக்கு சற்று வருத்தமாகவே இருந்தது.  இராசேந்திரனின் கையில் இருந்த கோணிப்பையை கவனித்த அவனது தந்தை, “ என்னப்பா அது கோணிப்பையில?” என்றார். “நாய்க்குட்டிகள் பா. அந்த பொட்டல் பக்கத்துல இருக்கிற தண்ணீர்ப் பந்தல்ல இருந்தது. பார்க்க ஆசையா இருந்தது. எடுதுட்டு வந்தேன் பா “ என்றான். “சரி, முகம் கழுவிட்டு வா. பால்  ஊற்றித் தருகிறேன். நீ குடித்துவிட்டு, நாய்க் குட்டிகளுக்கும் கொஞ்சம் எடுத்து வை” என்றார் தந்தை. தந்தை கொடுத்த பாலைக் குடித்து விட்டு, குட்டிகளுக்கும் பால் எடுத்து வைத்தான். அவை குடிக்கும் அழகினை அருகில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தான். ஆனால் அவன் மனம் அதில் ஏனோ லயிக்கவில்லை.

    வாசற்படியில் வந்தமர்ந்த இராசேந்திரன், கன்னத்திற்கு தன் கைகளால் முட்டுக் கொடுத்து அமர்ந்து, தன் தாய் வருகிறாளா  என்று வீதியையே பார்த்துக் கொண்டிருந்தான். அவ்வப்போது, கடிகாரத்தையும்

    பார்த்துக் கொண்டான். மணி ஏழரை அடித்தது. வீட்டினுள் வந்து, சிறிது தண்ணீர் அருந்தி விட்டு, மீண்டும் வாசலுக்கு சென்றான். அப்போது, தெரு முனையில் யாரோ வருவது போல தோன்றியது. ஆவலாய் எட்டிப் பார்த்தான்.அவனது தாய் வருவது தெரிந்தது. அவள் வீட்டினுள் நுழைந்தது தான் தாமதம், “ எனக்கு என்ன அம்மா வாங்கிட்டு வந்தீங்க? “ என்றான். “ உனக்கு வேணுங்கறதெல்லாம் வாங்கிட்டு வந்திருக்கேன். அந்த பையில இருக்கு, எடுத்துக்கோ “ என்றாள் அவனது தாய். “ ஏன் அம்மா எங்கிட்ட சொல்லாம போய்ட்டிங்க?? நான் உங்களை எவ்வளவு தேடினேன் தெரியுமா?? “ என்றான். “ இன்னைக்கு எல்லையம்மன் கோவில்ல விசேஷம். மாசா மாசம் இரண்டாம் சனிக்கிழமை நடக்கும். நானும், ரெண்டு மூனு மாசமா போகனும்னு நினைச்சிட்டு இருந்தேன், ஆனா போக முடியல. இன்னிக்கு தெருவுல எல்லாரும் போவதா, பக்கத்து வீட்டு சிவகாமி அம்மா சொன்னாங்க. அதான் டா ராஜா போய்ட்டு வந்தேன்.” என்றாள்.

    தாயும் மகனும் பேசிக் கொண்டிருந்ததை கேட்ட தந்தை அங்கு வந்தார். இராசேந்திரனைப் பார்த்து, “ உன் தாய் நீ வீட்டிற்கு வரும் போது இல்லைன்னதும், உன் மனம் எவ்வளவு தேடுது, அதே போல் தானே தன் குட்டிகளைக் காணாது, இவைகளின் தாய் இவற்றைத் தேடும்” என்றார். அப்போது தான், இராசேந்திரனுக்கு தான் செய்த தவறு புரிந்தது. மனதில் தெளிவு பிறந்தது. மறுநாள் காலை, தந்தையுடன், குட்டிகளை எடுத்துக் கொண்டு தண்ணீர்ப் பந்தலுக்கு சென்று குட்டிகளை எடுத்த இடத்தில் விட்டான். குட்டிகள் மெல்லிய குரலில் முனகின. பந்தலை விட்டு ஓரமாய் ஒதுங்கினார்கள் தந்தையும் மகனும். அப்போது, எங்கிருந்தோ தாய் நாய் ஓடி வந்தது. தன் குட்டிகளைக் கண்டதும், பாசத்துடன் அவற்றை தம் நாவால் வருடிக் கொடுத்தது. தாயைக் கண்ட குட்டிகள் வாலை ஆட்டி தங்கள் மகிழ்வை வெளிப்படுத்தின. மன நிம்மதியுடனும், மகிழ்வுடனும் தந்தையுடன் வீடு வந்து சேர்ந்தான் இராசேந்திரன்.

     

    Share