Author: நிர்மலா ராகவன்

  • பழகத் தெரிய வேணும் – 26

    பழகத் தெரிய வேணும் – 26

    நிர்மலா ராகவன்

    (வாய் எதற்கு?)

    “அம்மா! ஆத்திலே நீ பேசக்கூடாதுங்கறே. ஸ்கூல்லே பேசினா டீச்சர் திட்டறா. வாய் எதுக்கு வேஸ்ட்?” வாய்கிழியக் கேட்டது என் நான்கு வயது மகள்.

    அவள் ஒன்றரை வயதிலிருந்தே ஏதேதோ பேசுவாள். கேட்பவருக்கு ஒன்றும் புரியாது. அது நிராசையில் கொண்டுவிட, சுவற்றில் முட்டிக்கொள்வாள்.

    அவளை எப்படி அடக்குவது என்றே புரியாமல், ஒரு புத்தகத்தைப் படித்துக் காட்டினேன்.

    ‘இன்னொரு தடவை, இன்னொரு தடவை,’ என்று அவள் கெஞ்ச, ஒரே கதையை பதினான்கு முறை இடைவிடாது படித்தேன். அதனால் அவளுடைய ஞாபகசக்தி அதிகரிக்கிறது என்பது பிறகுதான் புரிந்தது.

    அதிகமாக எழுதவோ படிக்கவோ தெரியாத வயதில் மொழிவளத்தைப் பெருக்கிக்கொள்ள ஒரே வழி பேசுவதுதான்.

    எட்டு வயதுப் பெண்குழந்தைகள் வாய் ஓயாமல் பேசுவார்கள். அந்தப் பிராயத்தில் சற்று கண்டிக்காவிட்டால், `மௌனத்தின் எதிரி நான்!’ என்பதுபோல் ஆகிவிடுவார்கள்.

    பதினைந்து வயதில், நான் வகுப்பில் நிறைய பேசியதற்காக, நான் மட்டுமின்றி, எங்கள் வகுப்பு மாணவிகள் அனைவரும் ஒரு மணி நேரம் திறந்தவெளியில் நிற்கவேண்டும் என்ற தண்டனை அனுபவித்தோம். என்னை ஊக்குவித்து, என் பேச்சை ரசித்துக் கேட்டதற்காக அவர்களுக்கும் சேர்த்துத் தண்டனை.

    படிப்பதில் எனது ஆர்வம் பெருகப் பெருக, எதையும் கூர்ந்து கவனிக்கும் பழக்கம் வந்தது., பேச்சு குறைந்துபோயிற்று.

    எப்போது பேசலாம்?

    ஒருவர் நமக்குத் தீமை இழைக்கிறார். அதைப் பொறுத்துப்போகலாமா? அவரை எதிர்க்க வேண்டும்.

    எவ்வளவு வதையை அனுபவித்தாலும், தமக்கே உதவி செய்துகொள்ள இயலாதவர்களும் இருக்கிறார்கள். அவர்களுக்கு நம்மால் முடிந்தவரை பரிந்து பேசலாம்.

    உதாரணமாக, ஒரு மாணவியிடம் ஆசிரியர் முறைதவறி நடந்துகொள்வதைப் பார்த்தபின்னரும், ‘நமக்கேன் வம்பு?’ என்று ஒதுங்காது, அவரைப்பற்றி மேலிடத்தில் புகார் செய்வது.

    கணவனிடம் பல ஆண்டுகள் உடல் ரீதியிலும், மன ரீதியிலும் வதைபட்டு, சாகும்வரை பொறுத்துப்போக வேண்டிய நிலையில் இருக்கிறார்கள் சில பெண்கள். அவர்களிடமிருந்து மாறுபட்டிருக்கும் பெண்கள்தாம் அவர்களுக்காக குரலெழுப்ப முடியும்.

    இப்படிப்பட்ட செய்கைகளால் பல துன்பங்கள் வரலாம். ஆனால், ஒவ்வொருவரும் சுயநலத்தையே பெரிதாகக் கருதி ஒதுங்கினால், இவ்வுலகில் தவறுகள் மலிந்துவிடாதா!

    மௌனத்தைக் கடைப்பிடி

    நமக்குச் சம்பந்தம் இல்லாத ஒருவரைப்பற்றியோ, அல்லது தெரியாத ஒரு சமாசாரத்தைப்பற்றியோ பேசாது இருப்பது நல்லது. நாமே நம் முட்டாள்தனத்தை வெளிக்காட்டிக்கொள்வானேன்!

    ஒரு முட்டாள் தலைவராக இருந்தால், அவரை எதிர்த்துப் பேசாமல் இருப்பது நமக்கே நாம் செய்துகொள்ளும் நன்மை.

    சில சமயங்களில், நேர்மையைவிட மௌனமே சிறந்தது.

    கதை

    ஒருவன், ‘என்னைக் காட்டிக்கொடுத்துவிடாதீர்கள்,’ என்று ஒரு முனிவரிடம் கெஞ்சிவிட்டு ஒளிந்துகொள்கிறான். அவனுடைய எதிரிகள், ‘இப்படி ஒருவனைப் பார்த்தீர்களா?’ என்றபோது மௌனம் சாதிக்கிறார்.

    அவர் பொய்யுரைக்கவில்லை. உண்மையை மறைக்கவே வாய்பேசாது இருந்துவிடுகிறார்.

    நாம் பேசுவதால் பிறரை நோகடிப்போம் என்றால், எதற்காகப் பேசுவது?

    பிறர் சொல்வதைக் கேட்பவர்களில் பெரும்பாலோர் புரிந்துகொள்வதைவிட தாம் அதையடுத்து என்ன கூறலாம் என்றே யோசிப்பார்கள். பிறர் பேசுவதைக் கேட்கப் பொறுமை இராது.

    உரத்த குரலில் ஏதாவது பேசிக்கொண்டே இருந்தால்தான் அறிவாளியா?

    அறிவாளிகள் தம் அறிவைப் பறைசாற்றிக் கொள்வதில்லை.

    ‘நீங்கள் பேசுவதேயில்லையே!’ என்று குற்றம் சாட்டுவார்கள் பலர்.

    மௌனமாக இருப்பவர்களுக்குப் பழகத் தெரியாது, அல்லது கர்வம் கொண்டவர்கள் என்பதில்லை. இவர்கள் சாதிப்பவர்கள். அவசியம் வந்தால் பேசலாம் என்ற கொள்கையைக் கடைப்பிடிப்பவர்கள். அதனாலேயே அமைதியாக இருப்பார்கள்.

    பிறருக்கும் அவரிடம் தம் துன்பங்களைப் பகிர்ந்துகொள்ளத் தோன்றும்.

    கவுன்சிலர்களுக்கு இருக்கவேண்டிய முக்கியமான குணம்: ஒருவர் தம் அந்தரங்கத்தைப் பகிர்ந்துகொள்கையில், குறுக்கே பேசாது, மௌனமாக கேட்டுக்கொள்வது. அவசியம் என்றால், தெளிவு ஏற்பட சில கேள்விகளைக் கேட்கலாம்.

    நாம் மௌனமாக இருந்தாலும் நம்மைப் புரிந்துகொள்கிறவரே உற்ற துணை.

    ஏன் தனிமை?

    தனிமையில்தான் நம்மைப்பற்றி நிறைய யோசிக்கமுடிகிறது – நாம் செய்த தவறுகளை, பொறுத்த அவமதிப்புகளை, நம் எதிர்காலத்தை எப்படி அமைத்துக்கொள்வது போன்ற பல விஷயங்களை. அப்போதுதான் நம்மை நாமே புரிந்துகொள்ள இயலும்.

    “ஒரு முட்டாளை அவன் பேசுவதிலிருந்து அறியலாம். புத்திசாலியை அவனுடைய மௌனத்திலிருந்து அறியலாம்” (ஒரு தத்துவ ஞானி).

    புரிதலால் அமைதி

    நமக்குப் புரியாதது ஆத்திரத்தை உண்டாக்கும். புரிந்துவிட்டாலோ அமைதியாக இருக்க முடிகிறது.

    கதை

    வீடுகள் நிறைந்த தெருவில் முன்னாலிருக்கும் கார் மிக மெதுவாகப் போய்க்கொண்டிருந்தது. பின்னால் இருக்கும் காரோட்டிக்கு ஆத்திரம் எழ, திட்ட ஆரம்பித்தார்.

    முன்னால் இருப்பவருக்குக் காது கேட்கப்போவதில்லை என்றாலும், தனக்கே அமைதி ஏற்படுத்திக்கொள்ள அவருக்குத் தெரிந்த வழி இதுதான்.

    (பெண்கள் இப்படி ஆத்திரப்படுவதில்லை).

    “ஏன் இப்படி கெட்ட வார்த்தைகளைக் கொட்டுகிறீர்கள்?” என்று நான் அவரைக் கேட்க, “எனக்கு நிம்மதி கிடைக்கிறது,” என்றார்.

    பிறரது மனநிலை புரியும்போது ஆத்திரம் எழாது.

    இப்படியும் யோசிக்கலாமே! காரோட்டி அந்த இடத்திற்குப் புதிது. யார் வீட்டையோ தேடுகிறார்.

    தனிமையும் கற்பனையும்

    கற்பனைத்திறனை வளர்த்துக்கொள்ள தனிமையைப்போல் வேறில்லை.

    “நான் 99 தடவை யோசித்தேன். எதுவும் பிடிபடவில்லை. யோசிப்பதை விடுத்து, அமைதியாக இருந்தபோது, உண்மை தானே என்னிடம் வந்தது” (ஐன்ஸ்டீன்).

    அமெரிக்க விஞ்ஞானி தாமஸ் ஆல்வா எடிசனைப்பற்றி அறிவோம். பன்னிரண்டு வயதிலேயே அவர் காது செவிடாகிவிட்டதாம். தனிமைதான் துணை என்ற நிதரிசனத்தில், நிறைய பரிசோதனைகளை மேற்கொள்ள முடிந்தது. பல ஆராய்ச்சிகளில் வெற்றிபெற்றார்.

    எழுதுவதும் ஒரு தனிமையான செயல்தான். தனிமையை ரசிக்கத் தெரியாதவர்களுக்கோ அது ஒரு தண்டனை.

    கோயிலுக்குப் போய் கடவுளை வேண்டினால் அமைதி கிடைக்கும் என்பார்கள். அங்கும் வீண்வம்பு பேசுகிறவர்கள் இல்லாமலில்லை. அதனாலேயே, சில கோயில்களில் `இங்கு அநாவசியமாகப் பேசக்கூடாது’ என்ற எச்சரிக்கையை விடுத்திருக்கிறார்களோ!

    பிரார்த்தனை, தியானம் – இதெல்லாம் மனதை அமைதிப்படுத்துவது. பூஜை அறையில் கண்ணை மூடி அமர்ந்துகொண்டு, வெளியில் என்ன நடக்கிறது என்று காதைத் தீட்டியபடி இருந்தால், அவ்வப்போது குரலை எழுப்பி, வெளியில் உள்ளவர்களுக்கு `ஆலோசனை’ கூறத்தான் தோன்றும். அப்புறம் மௌனமாவது, அமைதியாவது!

    மௌனமாக இருந்தால்தான் பிறரை மட்டுமின்றி, நம்மையும் நாமே புரிந்துகொள்ள முடியும்.

    வாழ்வில் வெற்றிபெற்றவர்களிடம் எப்போதும் இருப்பது: புன்னகை, மௌனம். பேசாமலிருப்பதும் ஒரு மொழிதான் என்று புரிந்தவர்கள் அவர்கள்.

    “மௌனம் என்கின்ற மரத்தின் பழம்தான் அமைதி” என்று சரியாகத்தான் சொல்லிவைத்திருக்கிறார்கள்.

    Share
  • பழகத் தெரிய வேணும் – 25

    பழகத் தெரிய வேணும் – 25

    நிர்மலா ராகவன்

    (நல்லதையே நினைக்கலாமே!)

    ‘நான் சரியாகவே படிக்கவில்லை. பரீட்சையில் பாஸாகப் போவதில்லை,’ என்று சொன்னால், தேவதைகள் ‘ததாஸ்து!’ என்று வாழ்த்தி, அது பலிக்கும்படிச் செய்துவிடுமாம். அதனால் என்ன பேசுவது என்பதில் கவனமாக இருக்கவேண்டும்.

    நம் எண்ணம்போல் எதுவும் நடக்கும் என்றால், நல்லதையே நினைப்போமே! மனமும் அமைதியாக இருக்கும்.

    ஆனால், எப்போதுமே மகிழ்ச்சியாகவோ அமைதியாகவோ காணப்பட வேண்டும் என்பதும் நடக்கிற காரியமல்ல. அவ்வப்போது கோபம், வருத்தம், ஏமாற்றம் எல்லாம் எழத்தான் செய்யும். ஆனால், இந்த உணர்ச்சிகள் ஒருவரை எப்போதுமே அலைக்கழித்துக் கொண்டிருப்பதுதான் தவறு.

    கதை

    ஓய்வுபெற்ற ஒருவர், “போன மாதம் விளக்குக்காசுக்கான ரசீது முதலிலேயே வந்துவிட்டதே! இந்த மாதம் இன்னும் வரவில்லையே! மின்சாரத்தை வெட்டி விடப்போகிறான்!” என்று வீட்டிலுள்ளவர்களை நச்சரிப்பார். அதனால் உடன் இருப்பவர்களையெல்லாம் தொல்லைப்படுத்துகிறார்.

    ஓரிரு நாட்கள் தாமதமாகும் என்று அவருக்குத் தெரியாதா, என்ன!

    விளக்கிச்சொன்னாலும் புரிந்துகொள்ள மறுப்பார். பொழுது போயாக வேண்டுமே! தனது அதிகாரத்தை வேறு எப்படித்தான் காட்டிக்கொள்வது!

    அவரைப் போன்றவர்களுக்கு எதிர்மறை எண்ணங்களால்தான் பலம்.

    யோசித்துச் செயல்படுவது

    நாம் எதையாவது பேசுமுன்னரோ, எழுதுமுன்னரோ, நம் கருத்தால் பிறருக்கு ஏதாவது பயன் இருக்கிறதா, யாரையாவது நோகடிக்கிறோமா, அவசியமானதா என்றெல்லாம் சற்றே யோசிக்க வேண்டுவது அவசியம்.

    கதை

    ஓர் ஆங்கில தினசரியில் இந்தியப் பாரம்பரியக் கலைகளின் விமரிசகராக நான் பணிபுரிந்தேன்.

    நான் அப்பொறுப்பை ஏற்கத் தயங்கியபோது, “நீங்கள் நேர்மையானவர்!” என்று, அப்பகுதியின் ஆசிரியை நான் எவ்வளவு கடுமையாக எழுதினாலும் அதை அப்படியே பிரசுரிப்பாள்.

    ஒரு முறை, புகழ்பெற்ற ஒரு நடனக் கலைஞர் நாட்டியம் ஆடிக்கொண்டிருந்தபோதே, மேடையில் மல்லாக்க விழுந்துவிட்டார். சமாளித்து எழுந்தபோது, அவர் முகம் வெளிறியிருந்தது.

    உண்மையாகவே இருந்தாலும், இதைப்பற்றி நான் எழுதியிருந்தால் ஆயிரக்கணக்கானோர் அதைப் படித்துவிட்டு, அவரைப் பற்றி ஏளனமாகப் பேசிச் சிரிக்க வழி வகுத்தவளாவேன். பரதக்கலை நாட்டில் பரவ எவ்வளவோ முயற்சிகள் எடுத்திருந்தவரின் மனம் நோகும்.

    விமரிசனம் தினசரியில் வெளியாகும் நாள்வரை அவர் மனம் என்ன பாடுபட்டிருக்கும்!

    அவருடைய நிலை குலைந்ததைப்பற்றி நான் மூச்சு விடவில்லை. அவர் நிம்மதிப் பெருமூச்சு விட்டிருப்பார்.

    குறை கூறினால் கோபம்

    முன்னுக்கு வருபவர்கள் மாறத் தயாராக இருப்பவர்கள். தம் குறைகளைப் பிறர் எடுத்துச்சொல்லும்போது, அதிலிருக்கும் உண்மையை ஆராய்ந்து பார்த்துவிட்டுத் தம்மைத் திருத்திக்கொள்வார்கள். ஆனால், இத்தகையவர்களை அபூர்வமாகத்தான் காணமுடிகிறது.

    நாம் யார்மீதாவது குற்றம் கண்டுபிடித்தால், அது சரியானதாகவே இருந்தாலும், விரோதம் பாராட்டுகிறவர்கள்தாம் அதிகம்.

    கதை

    சமீபத்தில் ஒரு தொகுப்பிலுள்ள கதைகளுக்கு விமரிசனம் எழுதவேண்டிய பொறுப்பு எனக்கு ஏற்பட்டது.

    “உங்களிடமிருந்து நிறைய எதிர்பார்த்தேன். இப்படிப் பட்டும்படாததுமாக எழுதுகிறீர்களே!” என்று தொகுப்பாசிரியை என்னிடம் குறைப்பட்டார்.

    சிறுவர்களைக் கண்டித்தால் மாறலாம். ஆனால், நாற்பது வயதுக்குமேல் ஆனவர்களை மாற்றுவது கடினம்.

    அவரவர் வாழ்க்கைப் பின்னணி, அனுபவம் இவற்றைக்கொண்டுதான் எழுதுகிறார்கள். அவர்கள் கதை, தற்காலத்திற்கு ஒவ்வாத கருவைக் கொண்டிருக்கலாம். அதை லேசாகச் சுட்டிவிட்டுப் போகவேண்டியதுதான்.

    இல்லாவிட்டால், ‘தாறுமாறாக எழுதியிருக்கிறாளே! தான் ரொம்ப நன்றாக எழுதுவதாக எண்ணமோ?’ என்று குமைவார்கள்.

    சிந்தனையை மாற்று

    ‘உன்னால் முடியாது!’ என்று பிறர் சொல்வது நம் காதில் ஒலித்துக்கொண்டே இருக்க, செய்ய ஆரம்பித்த காரியத்தில் கவனம் குறைந்துவிடும்.

    பிறகு என்ன! தோல்விதான்.

    எதிர்மறைச் சிந்தனைகள் எழுகையில், அவற்றை நேர்மறையாக மாற்றுவது ஒரு நல்ல உத்தி.

    பிறரது பயமுறுத்தலை நம்பி, ‘என்னால் முடியாது!’ என்று பயந்து விலகுவதைவிட, அவர்கள் சொல்வதை அலட்சியப்படுத்தலாமே! நம் திறமை நம்மைவிடப் பிறருக்கு அதிகம் தெரியுமா?

    ‘என்னால் முடியும். எங்கு ஆரம்பிக்கலாம்?’ என்று கேட்டுக்கொண்டால், அச்சத்தை விளைவிக்கும் காரியத்தை ஆரம்பிக்கும் துணிவு பிறக்கிறது.

    எதிர்மறையான ஆசிரியர்கள்

    பல சிறுவர்கள் தம் முன் உட்கார்ந்து, தாம் சொல்வதைக் கேட்கும் நிலையில் இருப்பதால் ஆசிரியர்களுக்குப் பெருமிதம் ஏற்படும்.

    கதை

    கடந்த ஜூன் மாதம் சீனாவில் நடந்த சம்பவம் இது.

    பள்ளி முடிந்ததும் ‘விசேட வகுப்பு’ என்று நடத்தி, அதற்காகப் பணமும் வசூலித்திருக்கிறாள் ஓர் ஆசிரியை.

    அப்போது, பத்து வயதுச்சிறுமி ஒருத்தி எழுதிய கட்டுரையில் பல பகுதிகளை அடித்துவிட்டு, கண்டபடி திட்டியிருக்கிறாள்.

    எப்படி எழுதவேண்டும், திருத்த வேண்டும் என்றெல்லாம் சொல்லிக் கொடுக்கவில்லை.

    மனமுடைந்த அம்மாணவி பள்ளிக்கூடத்தின் நான்காவது மாடியிலிருந்து குதித்துத் தற்கொலை செய்துகொண்டாள்.

    ‘ஒரே குழந்தை’ என்று அருமையாக வளர்த்திருப்பார்கள். ஆசிரியையின் கடுமையான வார்த்தைகளை அச்சிறுமியால் ஏற்கமுடியாமல் போய்விட்டது.

    அறிவுக்கூர்மை இல்லாதவர்களை மட்டம் தட்டி, அதனால் தாம் உயர்ந்துவிட்டதாக எண்ணுகிறவர்கள் இத்தொழிலுக்கு வரலாமா?

    ஆசிரியர்களை விடுங்கள். பெற்றோர் சிலரே குழந்தைகளை இப்படித்தானே நடத்துகிறார்கள்!

    கதை

    முன்கோபியான சந்தானம் ஐம்பது வயதுக்குள் அலுவலகத்தில் மேலதிகாரியுடன் சண்டை போட்டுவிட்டு, பதவியிலிருந்து விலகினார்.

    ஓரிரு வருடங்கள் கழிந்தது. `நான் எதற்கும் லாயக்கில்லாதவன்!’ என்று தோன்றிப்போக, அச்சிறுமை உணர்ச்சி பதின்ம வயதான முரளியிடம் திரும்பியது.

    “நீயும் என்னை மாதிரி உருப்படாதவனாக ஆகப்போகிறாய்!” என்று மந்திரம்போல் தினமும் சொல்ல ஆரம்பித்தார்.

    ‘என்னைப்போல் ஆகிவிடாதே!’ என்று கூறியிருந்தாலும் பிரயோசனமில்லை. எதிர்மறையான அறிவுரைகளால் பயனிருக்காது.

    அத்தந்தை தன்னைப் பற்றியே நினைத்து மருகாது, மகனுடைய படிப்பில் அக்கறை காட்டி இருக்கலாம்.

    மகன் நல்ல நண்பர்களுடன் பழகுகிறானா, விளையாட்டுகளில் ஈடுபட்டு, உடலை ஆரோக்கியமாகவும், மனத்தைத் தெளிவாகவும் வைத்திருக்கிறானா என்று கண்காணித்திருக்கலாம்.

    தன் முன்மாதிரியான தந்தை சொல்வதை அப்படியே நம்பினான் முரளி. சுயநம்பிக்கையை இழந்ததால், பிறருடன் சரிசமமாகப் பழகவே முடியாது போயிற்று.  அவன் எல்லாவற்றிலும் தோல்வியே அடைந்தபோது, “நான்தான் அப்போதே சொன்னேனே!” என்று பெருமைப்பட்டுக்கொண்டார் சந்தானம்.

    முரளிக்கு நேர் எதிர் என் மாணவன் அமீர். “போன வருடம் எங்கள் வகுப்பிற்கு எல்லா இன ஆசிரியைகளும் வந்தார்கள். இப்போது நீங்கள் மட்டும்தான்!” என்று குறையுடன் சொல்வான்.

    அமீர் மட்டும் பிற மலாய் மாணவர்களிடமிருந்து வித்தியாசமாக — அறிவுடன் பணிவுமாக — இருந்தான்.

    அதிசயப்பட்டு விசாரித்தபோது, “என் தந்தை தினமும் கேட்பார், பள்ளிக்கூடம் எப்படி இருந்தது, மகிழ்ச்சியாக இருந்தாயா என்று. எல்லாரையும் மதித்து நடந்துகொள் என்று கூறுவார்,” என்றான்.

    அமீரின் தந்தைக்கு வாழ்க்கையில் இடர்களே இருந்திருக்காதா?

    அவற்றையே எண்ணி, தன்னுடையது மட்டுமின்றி தன்னை நம்பியவர்களின் வாழ்க்கையையும் பாழடிக்காத நல்ல மனிதர் அவர்.

    Share
  • ஹைட்ரஜனும் முட்டாள்தனமும்

    ஹைட்ரஜனும் முட்டாள்தனமும்

    நிர்மலா ராகவன்

    பழகத் தெரிய வேணும் – 24

    “முட்டாள்தனமாக நடப்பவர்களுக்கு மரண தண்டனை என்று ஒரு சட்டம் கொண்டுவந்தால், உலகத்தில் மக்கள்தொகை வெகுவாகக் குறைந்துவிடும்,” என்று அபிப்ராயப்படுகிறார் ஒரு புத்திசாலி.

    ஒரு துணுக்கு

    மாணவன்: நான் அரசியல்வாதியாகப் போகிறேன்.

    ஆசிரியர்: பின்னே ஏண்டா பள்ளிக்கூடத்துக்கு வருகிறாய்?

    ஓயாமல் பேசும் ஒரு பெண்ணைக் கேட்டேன், “ஏன் இப்படிப் பேசிண்டே இருக்கே?”

    “அப்போதான் மூளை வளரும்!”

    அறிவார்த்தமாகப் பேசுவதும், முப்பது வயதாகியும், தன் குரலைக் கேட்பதே ஆனந்தம் என்பதுபோல் அர்த்தமில்லாமல் பேசுவதும் ஒன்றாகிவிடுமா?

    பலர் கூடியிருக்கும் இடத்தில் நிறையபேர் இப்படித்தான் பேசுகிறார்கள். பிறர் சொல்வதைச் சரியாகக்கூடக் காதில் வாங்காவிட்டாலும், ஒன்று சேர்வதாலேயே பலம் கிடைக்கிறது என்பதைப் புரிந்துகொண்ட புத்திசாலிகள் இவர்கள்.

    “உலகில் அதிகமாகக் காணப்படுவது ஹைட்ரஜனும் முட்டாள்களும்தான்,” என்று சொல்லி வைத்திருப்பது இதற்காகத்தானோ?

    தம்மைப்போல் இல்லாதவர்கள் முட்டாள் என்று நம்புகிறவர்கள் ஆபத்தானவர்கள்.

    எங்கள் பள்ளிக்கூடத்திற்குப் புதிதாக வந்த ஆசிரியை நோரய்னியின் கதையைக் கேட்போமா?

    தினம் தவறாது, ஏதோ ஒருவித மலாய் கேக் வாங்கிவந்து, பிற ஆசிரியைகளுக்கு விநியோகம் செய்வாள்.

    ‘இவளுக்கு எதற்காக நன்றிக்கடன் படவேண்டும்!’ என்று நான்மட்டும் வாங்க மறுத்துவிடுவேன்.

    தன் தாராள சிந்தனையையும், பிறரிடம் தனக்கு எவ்வளவு அன்பு என்றும் காட்டிக்கொள்ள வேண்டுமாம்!

    அவள் திட்டம் பலித்தது. மற்றவர்கள் எல்லாரும் அவளை உயர்ந்த இடத்தில் வைத்து, அவளுக்குக் கட்டுப்பட்டார்கள்.

    போகப் போக, அவள் குணம் புரிந்தது.

    யாராவது அவள் கூறிய கருத்தை ஏற்காவிட்டால் அவர்களுடன் பேச மறுத்து, முறுக்கிக்கொள்வாள். தான் சொல்வது தவறு என்று தெரிந்தும், அதை ஏற்க மறுப்பாள்.

    வீண்விவாதம் செய்வது இவளைப் போன்றவர்களுக்குப் பிடித்த வேலை. (உண்மையைவிட அதிகமாகத் தன்னை நேசிப்பதாலோ?)

    என்னிடம் முறையிட்டாள் ஒருத்தி.

    “நீங்கள்தான் அவளைப் புரிந்துகொள்ளாது, ஒரேயடியாகக் அவளைக் கொண்டாடினீர்கள்!” என்று சுட்டிக்காட்டினேன்.

    நோரய்னியின் பெயருக்குப்பின் தந்தையின் பெயர் ‘வெள்ளை’ என்று மலாயில் குறிப்பிடப்பட்டிருக்கும். அவளுடைய தந்தை ஜப்பானியர் என்று என்னிடம் கூறியிருந்தாள்.

    ஆச்சரியப்பட்டு, “இந்நாட்டில் மலாய்ப்பெண்கள் ஜப்பானியரை மணந்தார்களா?” என்று மூத்த சரித்திர ஆசிரியை ஒருத்தியிடம் ரகசியமாகக் கேட்டேன்.

    “இல்லை. ஆசைநாயகியாகத்தான் இருந்தார்கள்!” என்ற பதில் கிடைத்தது.

    முறை தவறிப் பிறந்திருக்கிறோமே என்ற வருத்தமோ என்னவோ நோரய்னிக்கு.

    ‘சக ஆசிரியைகளின் மகிழ்ச்சியை எப்படிக் குலைப்பது?’ என்று யோசனை போக, அதற்கும் ஒரு வழி கண்டுபிடித்தாள்.

    பள்ளியில் அடிக்கடி மாறும் ஒவ்வொரு தலைமை ஆசிரியையும் வலியப்போய் நட்புகொள்வாள். அப்போதுதானே பிறரைப்பற்றிய வம்பு மேலதிகாரிக்குப் போகும்?

    ஒரு முறை, நான் ஏதோ பேசும்போது, அவள் பக்கம் கண்ணைக் காட்டினார்கள், ‘பத்திரம்!’ என்று எச்சரிக்கை செய்வதுபோல்.

    நான் உரக்கவே, “கிடக்கிறாள்! பயந்தாங்கொள்ளி!” என்று அலட்சியமாகக் கூற, பக்கத்தில் உட்கார்ந்திருந்த நோரய்னி குறுகிப்போனாள்.

    அவளுக்கு ஐம்பது வயதிருக்கும். வயதானால் அழகு குறையலாம், ஆனால் முட்டாள்தனம் என்னவோ மாறுவதில்லை.

    நோரய்னி முட்டாளா, தீயகுணம் படைத்தவளா, பரிதாபத்துக்கு உரியவளா?

    எல்லாரும், எப்போதும் தான் சொன்னபடியே நடக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பில், உண்மையான அன்பைத் தேடத் தெரியாத முட்டாள்.

    தன்னை ஏன் எல்லாரும் ஒதுக்குகிறார்கள் என்று புரிந்துகொள்ளும் அறிவற்றவள்.

    புறம் பேசி, பிறரைப் பிரச்னையில் மாட்டிவிட்டபோதோ..!

    முட்டாள்தனமும் மூடநம்பிக்கைகளும்

    ‘ராகு காலத்தில் விமானம் புறப்படுகிறது. கண்டிப்பாக, ஏதாவது அசம்பாவிதம் நடக்கும்!’ என்று எண்ணிக் கலங்கியபடியே பயணிக்கிறார் ஒருவர்.

    அவர் போகுமிடத்தில் பத்திரமாகக் கொண்டு சேர்த்துவிடுகிறது விமானம். கெட்டது நடக்கும் என்று எதிர்பார்த்து, அவர் கொண்ட கலக்கம்தான் அவர் எதிர்பார்த்த விளைவு.

    கருமை நிறம்

    கருமை நிறம்கொண்டு பிறந்துவிட்ட மனிதர்கள் மட்டும் ஒதுக்கப்படுவதில்லை. கறுப்புப் பூனைகளும்தான்.

    கடந்த பதின்மூன்று வருடங்களில், ஆறு கறுப்புப் பூனைக்குட்டிகளை யார் யாரோ கொண்டு வந்து எங்கள் வீட்டருகே விட்டிருக்கிறார்கள். நாங்கள் அவைகளை அன்புடன் பராமரிக்க, எங்கள் குடும்பத்தில் ஓர் அங்கத்தினராக வளையவரும்.

    சின்னா என்ற பெண்பூனை என் மடியில் உட்காரும், நான் சொன்னதைக் கேட்கும். நான் பேசுவதிலிருந்து தானும் கொஞ்சம் பேசக் கற்றுவிட்டது.

    சற்றுப் பெரிதாகி, சறுக்கி விழுந்துவிட்டதால், “மடியில ஒக்கார்றியா?” என்று நான் கேட்டபோது, “ஏனாம் (வேண்டாம்)” என்று முனகியது.

    அன்பும் கட்டுப்பாடும்

    கதை

    ராகினி படிப்பில் சோடையில்லை. அது போதாதா? பதினாறு வயதான தன்னை ஏன் இன்னும் கட்டுப்படுத்துகிறாள் தாய் என்ற ஆத்திரம் எழுந்தது அவளுக்குள்.

    பள்ளித்தோழிகளுடன் சேர்ந்துகொண்டு, ‘சுதந்திரம்’ என்ற பெயரில் மனம்போன போக்கில் நடந்தாள்.

    இருபது வயதானபோது, டிஸ்கோவிற்குப் போவது, மது அருந்துவது, ஆண்களுடன் தகாத முறையில் பழகுவது என்று அவளுடைய சுதந்திரப்போக்கு விரிந்தது. இதையெல்லாம் விதவைத் தாய் கடுமையாகக் கண்டிக்க, வீட்டைவிட்டு வெளியேறினாள்.

    அவளுடைய பள்ளித்தோழி, ஈ லெங், வேலை நிமித்தம் தனியாக கோலாலம்பூரிலேயே தங்க நேரிட்டது. (அவளுடைய பெற்றோர் வேறு ஊரில் இருந்தார்கள்).

    இத்தோழியுடன் தங்கி, இருவருக்கும் சேர்த்துச் சமைக்கையில், சுதந்திரமாக உணர்ந்தாள் ராகினி.

    பல வருடங்களுக்குப்பின், அவளுடைய மகளுக்கும் பதின்ம வயதானபோதுதான் அவளுக்குத் தன் தாய் காட்டிய கண்டிப்பின் காரணம் தெளிவாகியது. தான் இப்போது மகளின் பாதுகாப்புக்காக கவலைப்படுவதுபோல்தானே அன்று அம்மாவும் கவலைப்பட்டிருப்பாள்!

    ‘முட்டாள்தனமாக, வயதான அம்மாவைத் தனியாகத் தவிக்க விட்டுவிட்டு, எங்கோ போய் சமைத்துப் போட்டுக் கொண்டிருந்துவிட்டேனே!’ என்று மிகவும் வருந்தினாள்.

    ஆனால், அவளது மன்னிப்பை ஏற்க அம்மா உயிருடன் இல்லை. கடைசிவரை, மகளுடன் வந்து தங்க விரும்பாது, தனியாகவே வாழ்ந்தாள்.

    பலருக்கு வாழ்க்கையில் எது முக்கியம் என்று புரிவதில்லை.

    கதை

    படிப்பில் அக்கறையே காட்டாது இருந்த ஒரு மாணவனிடம், “நீ படிக்காவிட்டால் நல்ல வேலை கிடைக்காதே! பணத்துக்கு என்ன செய்வாய்?” என்று நான் கேட்டபோது, “அப்பா கொடுப்பார்!” என்றான்.

    “உனக்குக் கல்யாணமாகி, குடும்பம் பெருகிவிட்டால்?”

    “அப்போதும் அப்பா கொடுப்பார்”.

    இந்த இருவரில் யார் முட்டாள்? அப்பாவா, மகனா?

    மகன் எந்தக் காலத்திலாவது தன் சொந்தக்காலில் நின்றாகவேண்டும் என்று புரிந்துகொள்ள விரும்பாது, அவன் தன்னையே சார்ந்திருக்கும்படி செய்யும் அப்பாதான்.

    சுயநலமான சுதந்திரம்

    ஃப்ளூ காய்ச்சல் பரவாதிருக்க எல்லாரும் முகமூடி அணியவேண்டும் என்ற அதிகாரபூர்வமான ஆணை பிறந்தது. இன்றல்ல. 1918-ல்! ஸான் ஃபிரான்சிஸ்கோவில்.

    ‘எங்களுடைய தனிப்பட்ட உரிமையைப் பறிக்கிறீர்கள்!’ என்று 4,500 பேர் ஒன்றுகூடி எதிர்ப்பு தெரிவித்தார்களாம்.

    தங்களுடன் பிறரையும் ஆபத்துக்கு ஆளாக்குகிறோம் என்று புரிந்து நடக்காதவர்களை என்னவென்று சொல்ல!

    தற்போது, இப்படிப்பட்ட ரகளையெல்லாம் இல்லை. மனிதர்கள் புத்திசாலியாகிவிட்டார்களோ?

    Share
  • பழகத் தெரிய வேணும் – 23

    பழகத் தெரிய வேணும் – 23

    நிர்மலா ராகவன்

    (அழகு எதில்?)

    ‘நான் பார்த்ததிலேயே அவள்தான் பேரழகி!’

    தாய்லாந்துக்கு வந்தபோது அந்நாட்டுப் பெண் ஒருத்தியைக் கண்டபோது, ஓர் அயல்நாட்டுக்காரருக்கு இப்படித் தோன்றியதாம். பெருமுயற்சியுடன் அவளை மணந்துகொண்டார்.

    இதைப் படித்த நான் பேராவலுடன் பக்கங்களைப் புரட்டினேன், அவள் புகைப்படம் இருக்கிறதா என்று பார்க்க.

    ‘இவளையா அழகி என்றார்!’ என்ற வியப்புதான் எழுந்தது.

    நான் அவளது தோற்றத்தை வைத்து எடைபோட்டேன். அவரோ, அழகு என்பது வெளித்தோற்றத்தில் இல்லை என்பதைப் புரிந்துகொண்டவர்.

    உடலழகு எத்தனை காலம் நீடிக்கும்?

    முன்பெல்லாம் யாராவது ஒரு கல்யாணத்திற்குப் போய்வந்தால், பிற பெண்கள் அக்கறையாக விசாரிப்பார்கள்: ‘பொண்ணு அழகா இருக்காளா?’

    (அழகாக இல்லாவிட்டால் கல்யாணம் பண்ணிக்கொள்ளக்கூடாதா?)

    ஒரு பிள்ளை பெற்றதுமே சிலர் பருமனாகி விடுகிறார்கள். ‘அழகு!’ என்று அவளை மணந்தவன் ஏமாற்றத்துக்கு ஆளாகலாம். ஒரு சிலர், அவள் எல்லா உயிர்களிடத்தும் அன்பும் பரிவும் காட்டுவதைக் கண்டு சமாதானம் அடைவதும் உண்டு.

    கதை

    மிஸ். ஹோ தன் வாயிலிருந்து உதிரும் ஒவ்வொரு வார்த்தையையும் பிறரது கவனத்தை ஈர்க்கும் வண்ணம் உச்சரிப்பாள். அதிநாகரீகமாக வெட்டப்பட்ட தலைமுடி, முக ஒப்பனை, உடற்கட்டு ஆகியவைகளிலும் அவள் எடுத்துக்கொள்ளும் பிரயாசை பிற இளம்பெண்கள் பொறாமையுடன் வெறிப்பதிலிருந்து புரியும். அதனால் அவளுடைய கர்வம் ஓங்க, தோற்றத்தில் இன்னும் அதிக கவனம் செலுத்துவாள்.

    தன் புற அழகில் மிகுந்த அக்கறை செலுத்தியவளுக்கு தன்னைவிடச் சிறந்த யாரையாவது பார்க்க நேர்ந்தால் பொறாமை கிளர்ந்துவிடும்.

    அந்தப் பெண் வேறு ஏதாவது துறையில் இருப்பாள். ஆனாலும், அழகில் தன்னைவிட மிகச் சுமார் என்று மதிப்பிட்டுவிட்டு, `அவளுக்கு இவ்வளவு கௌரவம் கிடைக்கிறதே!’ என்று மாய்ந்துபோவாள்.

    பொறாமை அழகைக் கெடுக்கும்.

    ‘சின்ன வயசில பன்னிக்குட்டிகூட அழகாத்தான் இருக்கும்!’ என்று கூறக் கேட்டிருப்பீர்கள். அந்த வயதில் மனதில் களங்கமிருக்காது. அதுவே அழகாகத் தோன்றும்.

    வயது ஏற ஏற, எதற்கெடுத்தாலும் போட்டி, பொறாமை என்று பல குணங்கள் எழுந்துவிடுகின்றனவே! அவைகளை அடக்காதவர்களின் கண்களில் அழகு குறைந்து காணப்படும்.

    அழகிற்கும் வயதிற்கும் சம்பந்தமில்லை.

    சில முதியவர்களைக் கண்டு, ‘இந்த வயதிலும் இவ்வளவு அழகாக இருக்கிறார்களே!’ என்று ஆச்சரியப்படுகிறோம்.

    அவர்களுடைய அழகின் ரகசியம் என்ன?

    அன்பும் நேர்மையும் கொண்டவர்கள் என்றும் அழகாகத் தோற்றமளிப்பார்கள். அவர்கள் பல தோல்விகளை, துயரங்களைத் தாண்டி வந்திருப்பார்கள். அவைகளால் ஒரேயடியாக இடிந்துபோகாது, `பிறரும் நம்மைப்போல் இதையெல்லாம் அனுபவிக்கவில்லையே!’ என்று எண்ணி வருத்தமோ, ஆத்திரமோ கொள்ளாது எல்லோரிடமும் கருணை காட்டுவார்கள்.

    இயற்கையை ரசிப்பதற்கும் இத்தகைய நுண்ணிய உணர்வு வேண்டும். பரபரப்பான உலகில் வாழ்கிறவர்களின் எண்ணப்போக்கு இப்படி இருக்கும்: ‘சூரியன் தினமும்தான் உதிக்கிறது, மறைகிறது. சூரியோதயத்திலும், அஸ்தமனத்திலும் அப்படி ரசித்துப் பார்க்க என்ன இருக்கிறது?’

    கோலாலம்பூர் ஜனசந்தடியில் வாழ்ந்து பழக்கப்பட்ட இரு இளம்பெண்கள் அண்டைநாடான தாய்லாந்திலுள்ள ஒரு தீவிற்குப் போனார்கள்.

    ‘இங்கு கார் சத்தமே கேட்கவில்லையே! எதையோ இழந்தது போலிருக்கிறது,’ என்று ஒருத்தி அங்கலாய்க்க, அவள் தோழியும் ஒத்துக்கொண்டாள்.

    கடலும், அதைச் சுற்றியிருந்த அழகும் இவர்கள் கண்களில் தென்படவில்லை.

    பிறர் பார்த்து ரசிக்காததால் இயற்கைக் காட்சிகள் அழகற்றவை என்றாகிவிடுமா?

    நம்மைப் பிறர் ‘அழகு’ என்று புகழ்ந்தால்தான் அழகானவர்களா?

    தன் குஞ்சு பொன்குஞ்சு என்று காக்கை நினைக்குமாம். மனிதத் தாய்மார்கள் அனைவரும் அப்படி இருப்பதில்லை.

    கதை

    என் சக ஆசிரியை மிஸஸ் சாங் நீண்ட விடுமுறை நாட்களிலும் வேலையை இழுத்துப் போட்டுக்கொள்வாள் – பிற பள்ளிகளில் நடக்கும் தேர்வுக்கூட கண்காணிப்பு என்ற பெயரில்.

    மற்ற ஆசிரியைகளோ, அத்தொல்லையிலிருந்து எப்படித் தப்பலாம் என்று வழிகளைத் தேடுவார்கள்.

    அதனால் நான் ஆச்சரியப்பட்டு கேட்டபோது, “என் தந்தை தன்னைப் பார்க்க வரும்படி அழைப்பார். அதைத் தவிர்க்கத்தான்!” என்றாள் மிஸஸ் சாங்.

    அவளுடைய பெற்றோர் வேறு ஒரு ஊரில் வசித்தார்கள்.

    “என் அம்மாவுக்கு என்னைப் பிடிக்காது. சிறுவயதிலிருந்தே என்னை, `அவலட்சணமாக இருக்கிறாய்!’  என்று கரித்துக்கொட்டுவாள். என் தங்கை அழகு என்று அவளைத்தான் பிடிக்கும்,” என்று உணர்ச்சியற்ற குரலில் தொடர்ந்தவளுக்கு நாற்பது வயதுக்கு மேலிருக்கும்.

    “இன்றும், என் மகளைவிட தங்கையின் மகளைத்தான் பிடிக்கும். என்னைத் திட்டுவதையும், ‘அழகில்லை’ என்று பழிப்பதையும் நிறுத்தவில்லை. அதனால் எனக்கு அங்கு போகப் பிடிப்பதில்லை. இதையெல்லாம் அப்பாவிடம் சொல்ல முடியுமா? ‘வேலை வந்துவிட்டது’ என்று சொல்லி தப்பித்துக்கொள்வேன்”.

    சராசரி சீனாக்காரிகளைப்போல் மூக்கு சப்பையாக, சிறிய கண்களுடன் இருப்பாள் மிஸஸ் சாங். ஆனால், தாயின் பழிப்பு மனதில் தேங்கிவிட, ‘இவள் விகாரமாக இருக்கிறாள்’ என்று ஒரே பார்வையில் பிறர் எடைபோடுவதைக் கேட்டிருக்கிறேன்.

    தாய் ஏற்காததால் அவளுக்குத் தன்னைத்தானே ஏற்க முடியவில்லை. தன்னம்பிக்கை குறைய, பார்ப்பவர்கள் அனைவரைப்பற்றியும் இளக்காரமாக எண்ணிப் பேசுவாள்.

    இதற்கு நேர் எதிரானவள் குழந்தை சமந்தா.

    அவளுக்கு நான்கு வயதானபோது, `நீ ரொம்ப அழகு!’ என்று எல்லாரும் புகழ, ‘நான் ரொம்ப அழகு. இல்லே?’ என்று திரும்பத் திரும்பச் சொல்ல ஆரம்பித்தாள்.

    இது கர்வமில்லை. நல்லதோ, கெட்டதோ, தன்னைப்பற்றி பிறர் என்ன சொல்கிறார்களோ அதை அப்படியே ஏற்பது குழந்தைகளின் வழக்கம்.

    அழகிற்கு அவ்வளவாக முக்கியத்துவம் அளிக்காது, புத்திசாலி! சமத்து!’ என்று நற்குணங்களைப் பாராட்டிப் பாருங்கள், அப்படியே நடப்பார்கள்.

    புற அழகைப் பாராட்டிக்கொண்டே இருந்தால், அதற்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கத் தோன்றும்.

    ‘அழகு’ என்று பலரிடமிருந்தும் பாராட்டு கிடைத்துவிட்டால், அதிலேயே திருப்தி ஏற்பட்டுவிடுகிறது. ‘கஷ்டப்பட்டு அறிவை வளர்த்துக்கொள்வானேன்!’ என்று தோன்றிவிட, இப்படிப்பட்ட மாணவிகள் படிப்பில் சோடையாக இருப்பதைக் கண்டிருக்கிறேன்.

    ஒரு துணுக்கு

    அவள் அழகு அவளுடைய தந்தையிடமிருந்து வந்தது.

    அடேயப்பா! அவ்வளவு அழகா அவர்?

    இல்லை, பிளாஸ்டிக் சர்ஜரி செய்பவர்.

    வயதாகிவிட்டதால் காணாமல் போய்விட்ட புறஅழகை அறுவைச்சிகிச்சைமூலம் திரும்பக் கொண்டுவர முயற்சி செய்கிறார்கள் நடிகையர்.

    “பணக்காரராகப் பிறந்து, ஏழையாகப் போவதுபோல்தான் அழகும்!” என்று அழகின் நிலையாமையை அலசுகிறார் அமெரிக்க நடிகை ஜோன் காலின்ஸ்.

    அறிவுதான் எந்த வயதிலும் அழியாதது.

    இது புரிந்து, ‘மூக்கும் கண்ணும் இயற்கையில் அமைந்தது. இதில் நான் பெருமைப்பட என்ன இருக்கிறது!’ என்ற மனப்பாங்கை வளர்த்துக்கொண்டால் அகமும் அழகாகும்.

    Share
  • பழகத் தெரிய வேணும் – 22

    பழகத் தெரிய வேணும் – 22

    நிர்மலா ராகவன்

    (நீங்கள் ஆமையா, முயலா?)

    ஒரு சிறுவன் தன் பொம்மைக்காரில் பேட்டரியைப் பொருத்தப் படாத பாடுபட்டான். முதலில் முடியவில்லை. அழுதபடியே மீண்டும் முயன்றான்.

    இப்போது நீங்கள் என்ன செய்வீர்கள்?

    ‘பாவம், குழந்தை! அழுகிறானே!’ என்று அவன் கையிலிருப்பதைப் பிடுங்கி, நீங்களே உதவ நினைக்கிறீர்களா?

    அது அன்பான செயல் என்று நீங்கள் நினைக்கலாம்.

    ஆனால், அவனுடைய அழுகை பலக்கிறது. ஏனெனில் அவன் கையாலாகாதவன் என்று பிறர் நினைக்கிறார்கள். அது அவனுடைய தன்னம்பிக்கைக்குச் சவால்.

    நாம் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கும்போதே அவன் எடுத்த காரியத்தில் வெற்றி அடைகிறான். பேட்டரி சரியான இடத்தில் அமர, கார் ஓட ஆரம்பிக்கிறது.

    ‘நான் கெட்டிக்காரன்!’ என்ற பெருமிதம் எழுகிறது. அப்போது சிறுவன் முகத்தில் தோன்றும் களிப்பே தனிதான்.

    “தவறுகள் நிகழ்வது தவிர்க்க முடியாத ஒன்று. அதனால் பயந்து, பாதியில் நிறுத்திவிடுவதுதான் தவறு” (உளவியலாளர் ஸ்கின்னர்).

    பொதுவாகவே, குழந்தைகள் பாடும்போதோ, வாய்ப்பாடு ஒப்பிக்கும்போதோ கடைசி ஓரிரு வார்த்தைகளை அல்லது எண்களை அதிவேகமாகச் சொல்லி முடிப்பார்கள். அவர்களுக்கு எப்படியாவது முடிவை அடையவேண்டும் என்ற வெறி.

    வாழ்க்கையில் வெற்றி பெற அப்படி அவசரப்படுவது தகாது. பொறுமையும் நிதானமும் அவசியம். குறுகிய காலத்தில் சாதிக்க நினைத்தால் எந்தக் காரியமும் அரைகுறையாகத்தான் முடியும்.

    மேரி க்யூரி (MARIE CURIE) தனக்கு அளிக்கப்பட்ட சிறந்த அறிவுரையாகக் கருதுவது: “முன்னேறுவது என்பது எளிதானதோ, விரைவாகக் கிடைப்பதோ அல்ல”.

    இந்த உண்மை புரிந்துதான் இருமுறை நோபல் பரிசு வாங்கியிருக்கிறார் — பௌதிகத்திலும், ரசாயனத்திலும்.

    இதைத்தான் ‘ஆமையும் முயலும்’ கதைவழி சிறுவர்களுக்குப் போதிக்கிறோம்.

    எந்தக் காரியமும் செய்வதற்குமுன் கடினமாக, நம்மை அயர்ச்சி அடையவைப்பதாகத்தான் இருக்கும். அதற்காக, கனவுடனேயே திருப்தி அடைந்துவிடலாமா?

    கதை

    ராஷ்டிரகூட அரசனாகிய முதலாம் கிருஷ்ணனுக்கு ஒரு கனவு இருந்தது. ஔரங்காபாத் அருகிலிருக்கும் எல்லோராவில் ஒரே கல்லில் கைலாசநாதர் கோயில் கட்டவேண்டும் என்பதுதான் அது. அதனைக் கட்டி முடிக்க இருபத்தாறு ஆண்டுகள் ஆயிற்று.

    ‘நல்ல வேளை, ஆரம்பித்தபின்னர் மனம் தளர்ந்து, இது நடக்கிற காரியமா!’ என்று அரசன் யோசித்து, எடுத்த முயற்சியைக் கைவிடவில்லை.

    ‘ஒரே கல்லைக் குடைந்து, இவ்வளவு பிரம்மாண்டமாகக் கட்டுவது மனிதனால் முடிகிற காரியமே இல்லை. வேற்று கிரகவாசிகள் செய்ததாக இருக்கும்,’ என்று அயல்நாட்டவர்கள் ஆற்றாமையுடன் ஒரு வதந்தியைக் கிளப்பிவிட்டிருக்கிற அளவுக்கு அசாதாரணமான சின்னமாக எல்லோரா குகைக்கோயில் ஆகியிருக்காது.

    கஜினி முகமது

    ஒரு காரியத்தில் நாம் வெற்றி பெறாவிட்டால் என்ன! அதிலும் ஒரு சௌகரியம். மீண்டும் செய்யும்போது முதலிலிருந்து ஆரம்பிக்க வேண்டியதில்லை.

    ஒரு மாணவன் பல முறை பரீட்சையில் தோல்வியுற்று, மீண்டும் மீண்டும் முயற்சி செய்தால் அவனை கஜினி முகமது என்று கேலியாகக் குறிப்பிடுவார்கள்.

    உண்மையில், அவன் பாராட்டுக்கு உரியவன். மனம் தளராது எடுத்த காரியத்தை முடிப்பது என்று உறுதியாக இருக்கிறான், அல்லவா?

    ‘இது என்ன பிடிவாதம்? முடியவில்லை என்றால் விட்டுவிடேன்!’ என்று பிறர் அவநம்பிக்கை அளிக்க முயலலாம்.

    அவனுக்கென ஓர் இலக்கு இருக்கிறது. அதை நோக்கிப் போகும்போது எவ்வகையான தடங்கல் வந்தாலும் அதைப் பொருட்படுத்துவதில்லை.

    புகழ் பெற்ற விளையாட்டு வீரர்களும் இத்தகையவர்கள்தாம்.

    கால் வலிக்கிறதே, உடல் களைத்துப்போகிறதே, வேறு எதற்குமே நேரம் கிடைப்பதில்லையே என்றெல்லாம் யோசித்துப் பின்வாங்கியிருந்தால், முதல்தர விளையாட்டு வீரர்களாக ஆகியிருக்க முடியுமா?

    ‘இறுதிச்சுற்றின்போது, கண்டிப்பாக வெற்றி நமக்குத்தான்!’ என்று சற்றே அயரவும் மாட்டார்கள் இவர்கள்.

    அறிவும் பலமும் இருந்தால் மட்டும் போதாது, வெல்லவேண்டும் என்ற உறுதியுடன் விடாமுயற்சியும் அவசியம் என்று இவர்களுக்குத் தெரியும்.

    உடலும் மனமும் களைத்தபின்னரும் தொடர்ந்து செய்வதுதான் விடாமுயற்சி.

    இதைத் தவறாகப் புரிந்துகொண்டு, என் மாணவி ஒருத்தி இரவு பகலாக, தகுந்த ஆகாரமுமின்றி படித்ததில், பரீட்சைக்கு ஒரு மாதம் முன்னர் ‘மண்டை வலி’ என்று மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாள். கோமா நிலைக்குப்போய், பரீட்சை எழுத முடியாமல் போயிற்று.

    பாடங்களைப் படிப்பதானாலும் அவ்வப்போது ஓய்வும், உணவும் அவசியம்தானே?

    நான் முன்பெல்லாம், ஒரு ஆப்பிள், குடிநீர், பால் எல்லாவற்றையும் எனக்கு முன்னால் வைத்துக்கொண்டு, சாப்பாட்டு மேசைமுன் அமர்ந்து கதை எழுத ஆரம்பிப்பேன். ‘பசிக்கிறதே!’ என்று பாதியில் எழுந்துபோனால் கற்பனை தடைப்பட்டுவிடும்.

    இப்போதும், எங்கள் வீட்டுக் குழந்தைகள் நாள்முழுவதும் படிக்கும்போது பழம், பிஸ்கோத்து என்று ஏதாவது சாப்பிடக் கொடுத்துக்கொண்டே இருப்பேன். முனைந்து படிக்கையில், பசி தெரியாது. ஆனால் களைப்பு அதிகரிக்க, வேகம் குறைந்துவிடும். காலை, மாலை இருவேளையும் காற்றாட நடக்கவும் வேண்டும். இல்லையேல், ரத்த சோகை, மங்கலான கண் பார்வை என்று ஏதேதோ அவதிகள் வந்துவிடும்.

    கேள்வியும் பதிலும்

    பதின்ம வயது மாணவர்களுக்கான புத்தகத்தில் ஒரு கேள்வி: ‘பெரியவன் ஆனதும் என்ன தொழில் செய்ய ஆசைப்படுகிறீர்கள்?’

    படிப்பில் அக்கறையில்லாத மாணவர்கள் எழுதியது: டாக்டர், வக்கீல், துப்புறவுத் தொழிலாளி.

    பெரிய இலக்கு. ஆனால் அதை அடைவதற்காக எந்த முயற்சியும் கிடையாது.

    என் மாணவிகள் விஞ்ஞானம் சம்பந்தப்பட்ட கணக்கைப் போடத் திணறினால், நான் அதை கரும்பலகையில் போட்டுக்காட்டுவேன்.

    ‘எத்தனை சுலபம்!’ என்று ஒரு குரல் எப்போதும் எழும்.

    ‘அதை நீங்களே போடுவதுதானே!’ என்று நினைத்துக்கொள்வேன்.

    எதுவானாலும், செய்து முடித்தபின்தான், ‘இதற்கா இவ்வளவு தயங்கினோம்!’ என்ற ஆச்சரியம் எழும்.

    மேடும் பள்ளமும்

    கடுமையாக உழைத்து, உச்சத்திற்குப் போனபின் பலர் அங்கேயே நிலைப்பதில்லை. கர்வம் கொண்டால் விழுவது நிச்சயம்.

    உச்சத்திலிருந்தபோது கொண்டாடியவர்கள் அப்போது காணாமல் போய்விடுவார்கள். தம் தவறு என்னவென்று கீழே விழுந்தவர்களுக்குப் புரிவதில்லை. ‘நன்றிகெட்ட மனிதர்கள்!’ என்று பிறரைப் பழிப்பார்கள்!

    எல்லை கடந்தது

    இசை, நாட்டியம் போன்ற நுண்கலைகளுக்கு எல்லையே கிடையாது. சில வருடங்கள் கற்றபின் மலைப்பாக இருக்கும். மெள்ள மெள்ளச் சென்றாலே போதும். கரையைக் காண முடியாவிட்டாலும் அறிவு சிறந்திருக்கும்.

    ‘நீயும்தான் இத்தனை வருடங்களாக ஒரே காரியத்தைச் செய்கிறாய்! என்ன கிழித்தாய்!’ –- இப்படிப் பலவாறாகச் சிலர் ஏன் நம்மை அவநம்பிக்கைக்கு ஆளாக்க முயல்கிறார்கள்?

    அவர்களைப் பொறாமை ஆட்டிவைக்கிறது. இதைப் புரிந்துகொண்டால், அவர்கள் சொல்வதை அலட்சியம் செய்ய முடியும். நம் மன உறுதியும் தளராது. விடாமுயற்சியுடன் செயல்படுகிறவர்களை வீழ்த்துவது கடினம்.

    எல்லோரையும் எப்போதும் மகிழ்விக்க நினைத்தால் நம் மகிழ்ச்சிதான் கெடும்.

    Share
  • பழகத் தெரிய வேணும் – 21

    பழகத் தெரிய வேணும் – 21

    நிர்மலா ராகவன்

    (அச்சம் என்பது மடமையா?)

    ‘உனக்கு எவ்வளவு தைரியம்!’ என்று சிலரைப் பாராட்டுகிறோம். ‘இவர்களுக்கெல்லாம் பயம் என்பதே கிடையாதா!’ என்ற பிரமிப்பு எழுகிறது.

    ஏன் இல்லாமல்?

    பயம் என்பதும் ஓர் உணர்வுதான். எந்த மனிதருக்கும் இயற்கையாகவே அமைந்திருப்பது.

    “அச்சமும் தைரியமும் சகோதரர்கள்” (பழமொழி).

    சாதாரணமாக, பழக்கமில்லாத ஒரு காரியத்தில் இறங்க நேரிட்டால் எவருக்கும் அச்சம் எழத்தான் செய்யும். அதற்காக எதுவும் செய்யத் துணிவில்லாமல் சும்மா இருக்கமாட்டார்கள் இவர்கள். அந்த பயத்தை எதிர்த்து நிற்பார்கள்.

    எதற்கெல்லாம் பயப்படக்கூடாது என்று புரிந்துவிட்டால், அநாவசியமாக எல்லாவற்றிற்கும் பயப்பட வேண்டியதில்லை. தானே துணிச்சல் பெருகும்.

    ‘சிலருக்குத்தான் வாழ்க்கை நன்றாக அமைகிறது!’ என்று ஏக்கப் பெருமூச்சு விடுவார்கள் பலர்.

    சிறப்பான வாழ்க்கை தற்செயலாக அமைவதில்லை. அது நம் கனவுகளை நனவாக்க நாமே மாறுவதைப் பொறுத்தது. வீண் பயம் கனவுகளைத் தகர்த்துவிடும்.

    அச்சத்தை எதிர்கொள்ளும் ஒவ்வொரு முறையும் தைரியமும், அதன் விளைவாக தன்னம்பிக்கையும் அதிகரிக்கிறது. பயந்துகொண்டே இருந்தால், மகிழ்ச்சி ஏது! அனுதினமும் செத்துச் செத்துப் பிழைக்கவேண்டுமா?

    எதற்குப் பயப்படலாம்?

    பயமே கூடாது என்பதல்ல. ‘தீய பழக்கங்களில் ஈடுபட பயம்’ என்பது சரி.

    சட்டத்திற்கு விரோதமான காரியங்களைச் செய்யத் துணிவதும் முட்டாள்தனம்.

    உலகமே ஒரு சின்ன நோய்க்கிருமியால் ஆடிப்போயிருக்கிற தற்போதைய நிலையில், ‘வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடப்பதாவது!’ என்று பலர் கோலாலம்பூரில் உள்ள ஒரு குளத்தில் மீன்பிடிக்கப் போயிருக்கிறார்கள். பதினைந்து கார்கள் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனவாம். ஆக, `உணவுப்பொருட்கள் வாங்க காசில்லை’ என்ற ரகமில்லை.

    இவர்களது இந்த ‘துணிச்சலான’ செய்கையால் பலருக்கும் நோய் பரவக்கூடும். அதற்கான தண்டனை: தலா 1,000 ரிங்கிட் (20,000 ரூபாய்) அபராதம்.

    பயமுறுத்தி காரியத்தைச் சாதிப்பவர்கள்

    கதை

    எங்கள் பள்ளியில், ஈராண்டுகள் தலைமை ஆசிரியை இருக்கவில்லை. அந்த இடம் மூத்த உதவியாளராக இருந்த நபீசாவின் கையில். அதிகாரத் திமிருடன் எல்லாரையும் ஆட்டிவைத்தாள், உணர்வு ரீதியாக வதைத்தாள்.

    தனக்கு மேலே வேறு ஒருவர் வரப்போகிறார் என்ற செய்தி கேட்டு, பயம் எழுந்தது நபீசாவுக்கு.

    “இப்போது வரவிருக்கும் தலைமை ஆசிரியை புலிமாதிரி!” என்று அச்சுறுத்திவிட்டு, “எனக்கும்தான் உத்தியோக உயர்வு தள்ளிப்போய்க்கொண்டே இருக்கிறது,” என்று நம்பத்தகுந்த சில அப்பாவிகளிடம் நைச்சியமாகக் கூறினாள்.

    அவர்களும் பரிதாபப்பட்டு, எல்லா ஆசிரியர்களையும் அழைத்து, “நபீசா இங்கேயே தலைமை ஆசிரியையாக நியமிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை விடுத்திருக்கிறோம். `எஸ்’ என்று எழுதுங்கள்,” என்றுவிட்டு, ஒரு காகிதத்தைக் கொடுத்தார்கள்.

    எல்லாரும் பயந்து, அதன்படி எழுதிக்கொடுத்தார்கள்.

    ஒருத்தி மட்டும் ‘நோ’ என்று பெரிதாக எழுதினாள்.

    எரிச்சலுடன், “அவள்தான் நம்மைப் படாதபாடு படுத்துகிறாளே! எதற்காக ஒத்துக்கொண்டீர்கள்?” என்று சிலரைக் கேட்டாள் அவள். (யார் என்று புரிகிறதா?)

    “நாளைக்கே அவள் உயர்பதவி ஏற்று, இங்கு வந்துவிட்டால் என்ன செய்வது என்ற பயம்தான்!” என்ற பதில் கிடைத்தது.

    “அச்சம் ஒரு கரடியை அது இருப்பதைவிடப் பெரிதாகக் காட்டும்” என்று சரியாகத்தான் சொல்லி வைத்திருக்கிறார்கள்.

    நல்லவேளையாக, நபீசாவின் திட்டம் பலிக்கவில்லை. அவளை வேறு பள்ளிக்கு அனுப்பினார்கள்.

    அங்கிருந்த ஆசிரியர்கள் ஆரம்பத்திலேயே, “உன்னைப்பற்றி நிறையக் கேட்டிருக்கிறோம். உன் அதிகாரத்தை எங்களிடம் காட்டலாம் என்று நினைக்காதே,” என்று மிரட்ட, அவள் அடங்கிப்போனாளாம்.

    நம்மை அச்சுறுத்த நினைப்பவர்களின் எண்ணம் பலிக்காவிட்டால் அந்த பயம் அவர்களையே போய்ச்சேரும்.

    எங்கள் பள்ளியில் பயத்தால் எல்லாரும் பணிந்துபோனார்கள் – என்னைத்தவிர. அதனால் மேலும் குறுகிப்போனார்கள்.

    குழந்தைமாதிரி

    ‘சிறுவர்களுடனேயே பழக நேர்வதால் பெரும்பாலான ஆசிரியைகள் குழந்தைத்தன்மையுடன் நடக்கிறார்கள்!’ என்று ஒரு தோழி என்னிடம் கூறிச் சிரித்தாள்.

    வயதில் பெரியவர்களைக் கண்டு குழந்தைகள் பயப்பட்டு, அவர்கள் சொன்னபடி நடக்கலாம். எத்தனை வயதானாலும், உயர் அதிகாரிகளைக் கண்டு பயந்து நடந்தால் என்ன ஆகும்?

    கதை

    அரசாங்கத்தின் ஓராண்டு கால மேற்பயிற்சி அது – விடுமுறைக்காலங்களுடன்.

    முழுமையாகக் கலந்துகொண்டவர்களுக்கு மாத வருமானத்தைத் தவிர கூடுதலான பணமும் உண்டு, ஆனால் விடுமுறையின்போது அவர்களுக்கு அளிக்கப்படும் வீட்டுப்பாடங்களை முதலிலேயே முடித்துக் கொடுத்துவிட வேண்டும்.

    நான் பாடத்தை முடித்து சமர்ப்பித்துவிட்டு, ‘வெளிநாடு போகப்போகிறேன்,’ என்று எழுதியும் கொடுத்தேன்.

    `வெளிநாடு போனவர்களுக்குப் பணம் கிடைக்காது,’ என்று பயிற்சி ஒருங்கிணைப்பாளர் நவாவி முரட்டுத்தனமாக அறிவித்தார்.

    நான் தனிமையில் அவரைச் சந்தித்து, “விதிப்படி நான் எல்லாம் சரியாகச் செய்திருக்கிறேனே!” என்று விவாதித்தேன்.

    உடலை இறுக்கிக்கொண்டு, “நான் இந்த விதிகளை எழுதவில்லை,” என்றார் நவாவி.

    பயிற்சி முடிவடையும் தறுவாயில், மேலிடத்திலிருந்து ஒருவர் வந்து அதில் கலந்துகொண்ட 450 பேருக்கு உரை நிகழ்த்தினார்.

    “உங்களுக்கு எதிலாவது சந்தேகம் இருந்தால் கேளுங்கள்,” என்றார்.

    நான் சும்மா இருப்பேனா? என் வழக்கைச் சொன்னேன்.

    “இதுபற்றி பிறகு பேசலாம்,” என்று சமாளிக்கப் பார்த்தார்.

    “இல்லை. எனக்கு இப்போதே தெரியவேண்டும்,” என்றேன், பிடிவாதமாக. “நான் எல்லாம் முறைப்படி செய்திருக்கிறேன். பணத்துக்காகக் கேட்கவில்லை. என்னைத் தண்டிப்பதுபோல் பணம் கொடுக்க மறுப்பது என்ன நியாயம்?”

    அவர் பயந்தார். “நீங்கள் சொல்வது சரிதான். எங்கள் தவற்றுக்கு மன்னியுங்கள்,” என்று பின்வாங்கினார். “நீங்கள் என்னிடம் சொன்னதை ஒரு கடிதத்தில் எழுதிக்கொடுங்கள்,” என்று சமரசத்துக்கு வந்தார்.

    ஒரு கேலிப் புன்னகையுடன், நான் மேடையைவிட்டு இறங்குமுன், நவாவி அடைத்த குரலில், “எனக்கு முதலிலேயே தெரியாது,” என்றார்.

    அவரது மன்னிப்பை ஏற்கும் வண்ணமாக, நான் தலையை ஒருமுறை லேசாக மேலும் கீழும் ஆட்டிவிட்டு நடந்தேன்.

    அன்று நான் கதாநாயகியாக உயர்ந்துவிட்டது பிறகுதான் புரிந்தது.

    நான் பழகியிராத சில பெண்கள், “உங்கள் விலாசத்தைக் கொடுங்கள்,” என்று உறவாடினர்!

    என் நிலையிலிருந்த சிலர், “என்ன எழுதவேண்டும்? சொல்லிக்கொடுங்கள்,” என்று என்னைப் பிடித்துக்கொள்ள, அலுப்பாக இருந்தது.

    நான் ஒரு பள்ளியிலிருந்து மாற்றல் கேட்டுப்போகையில், “ஐயோ! எங்களுக்காக சண்டை போடுகிறவர் நீங்கள் மட்டும்தான். நீங்களும் போய்விட்டால் நாங்கள் என்ன செய்வது!” என்று ஆசிரியை ஒருத்தி அரற்ற, “Fight your own battles (நீங்களே போடுங்கள்),” என்றேன் எரிச்சலுடன்.

    சண்டை போடுவதால் நிறைய சக்தி விரயமாகிறது. சில சமயம் பலனளிக்கும். விரோதிகள் பெருகுவர். ஆனால், உரிய காலத்தில் தகுந்த நடவடிக்கை எடுத்தோம் என்ற திருப்தி நிலைக்கும்.

    Share
  • பழகத் தெரிய வேணும் – 20

    பழகத் தெரிய வேணும் – 20

    நிர்மலா ராகவன்

    (நீடிக்கும் உறவுகள்)

    ஐம்பது வருடங்களுக்குமேல் தாம்பத்தியத்தில் இணைந்திருப்பவர்களைப் பார்த்தால், அவர்களுக்குள் சண்டையே வந்திருக்காதா, எப்படி மனம் ஒத்துப்போயிற்று என்றெல்லாம் அதிசயமாக இருக்கும்.

    நெருக்கமான உறவில் மட்டும் அடுத்தவருக்குப் பிடிக்காத குணங்கள் இருக்காதா, என்ன! வருத்தமும் ஆத்திரமும் ஏற்படுத்திய சம்பவங்களும் நடந்திருக்கலாம். இருப்பினும், அவற்றைக் கடந்தால்தான் உறவு நீடிக்கும் என்று புரிந்தவர்கள் அவர்கள்.

    துணுக்கு

    ஓர் இளைஞன் தன் தாயிடம் பெருமையாகச் சொன்னான்: என் காதலி நான் வேடிக்கையாகப் பேசுபவன், ஆணழகன், புத்திசாலி என்று சொல்கிறாள்.

    தாய் கேட்டாள்: உனக்கு அவளிடம் என்ன பிடிக்கும்?

    பதில்: அவள் என்னை வேடிக்கையாகப் பேசுபவன், ஆணழகன், புத்திசாலி என்று புகழ்வது.

    தம்மிடமிருந்து, தாம் நம்புவதிலிருந்து, மாறுபட்டவர்களைக் கண்டால் பலருக்கும் ஏதோ பயம். அது கோபமாக மாறுகிறது.

    கதை

    என்னுடன் ஒரே மாதம் வேலைபார்த்த கணபதி, “நீங்கள் வெஜிடேரியனா?” என்று கேட்டபோது, “ஆமாம்,” என்றேன்.

    உடனே கோபமாக, “எத்தனை பிராமணர்கள் ‘எல்லாவற்றையும்’ சாப்பிடுகிறார்கள், தெரியுமா?” என்று கத்தினார்.

    நான் அமைதியாக, “நீங்கள் என்னைப் பற்றிக் கேட்டீர்கள். அதற்கு நான் பதில் சொன்னேன். ‘எல்லாப் பிராமணர்களும்’ என்று கேட்டிருந்தால், வேறு விதமாகப் பதில் அளித்திருப்பேன்,” என்றேன்.

    அவருடைய முகம் சுருங்கிப்போயிற்று.

    மனைவி என்றால் தனது அதிகாரத்தை ஏற்கவிருப்பவள் என்று எண்ணுவதுபோல் நடப்பவர் கணபதி. பேசும் சுதந்திரத்தைக்கூடத் தன் மனைவிக்கு அளித்திருக்கமாட்டார். பிறர் பேசும்போது அவள் எதுவும் பேசாது, சிரித்துக்கொண்டே இருப்பாள்.

    ஏன் தன் மனைவி கலகலப்பாக இல்லை என்ற குழப்பம் எழ, “என் மனைவி படித்தவள். (இதை இருமுறை அழுத்தமாகக் கூறினார்). ஆனால், உங்களைப்போல் இல்லையே!” என்று என்னிடம் குறைப்பட்டார்.

    என் பதில்: “நீங்கள் நினைப்பதை, சொல்வதை, பிறர் அப்படியே ஏற்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள். அப்படி இல்லாவிட்டால் கோபம் வருகிறது. உங்களுக்கு என்னைப் போன்ற மனைவி சரிப்படமாட்டாள்”.

    அன்பு என்பது ஒருவரை அவர் உள்ளபடியே ஏற்பது. மற்றவரிடம் எதை எதையோ எதிர்பார்த்தால் ஏமாற்றம்தான் உண்டாகும்.

    கதை

    புதுமணத் தம்பதிகளான பிரபாவும் பார்த்திபனும் ஈராண்டுகள் மகிழ்ச்சியாகக் கழித்தனர். அப்போது மனைவியின் முகம் சிறிது கோணினாலும், உடனே மன்னிப்பு கேட்டுவிடுவான் பார்த்திபன். தான் தவறு செய்திருக்கலாமோ என்ற சந்தேகத்தால் அல்ல.

    (புரியவில்லையா? உடல் நெருக்கம் மட்டுமே முக்கியமாக இருந்த காலம் அது).

    பிரபாவின் கை ஓங்கியது. அதன்பின், அறிவு முதிர்ச்சி இன்றி, எந்த வாய்ச்சண்டையிலும் தான்தான் வெல்லவேண்டும் என்று நினைப்பவளாக ஆனாள்.

    ‘என்ன பேச ஆரம்பித்தாலும், ஏனோ வாக்குவாதத்தில் முடிகிறதே!’ என்று பார்த்திபன் அவளிடமிருந்து லேசாக விலகலானான்.

    பொதுவாக, எல்லாத் தம்பதிகளையும்போல் பிரபாவின் பெற்றோரும் அவ்வப்போது வாக்குவாதம் செய்வதுண்டு. மௌனமாக இருப்பதற்கு அது மேல் என்று புரிந்தவர்கள்.

    பிரபா தாயிடம் கலந்து ஆலோசித்தாள். “அது எப்படி, நீயும் அப்பாவும் இத்தனை வருடங்களாக ஒருவரையொருவர் பொறுத்துப் போனீர்கள்?”

    “யாரிடம்தான் குறையில்லை? அடி, உதையில் இறங்காதவரை, பொறுத்துப் போக வேண்டியதுதான்,” என்று வாழ்க்கைத் தத்துவத்தை விளக்கினாள் தாய். “அப்பா சிறு தவற்றைச் செய்யும்போது, அதைக் கவனிக்காததுபோல் இருந்துவிடுவேன். அவரைப் பற்றிப் பிறரிடம் புகார் செய்வதும் கிடையாது”.

    ஒருவர் கூறுவதை ஏற்க முடியாததால் சண்டை பிடிக்கத் தோன்றுகிறதா?

    அமைதியாகப் பேசினால் பயன் கிடைக்கும். மௌனம் சாதித்தால், ஒருவர் மனத்தில் இருப்பதை மற்றவர் எப்படிப் புரிந்துகொள்ள இயலும்?

    மற்றவர் செய்த பிழைகளைப் பெரிதுபடுத்தாது இருப்பது உறவைப் பலப்படுத்தும் என்றெல்லாம் மணவாழ்க்கை அவளுக்குக் கற்றுக் கொடுத்திருந்தது.

    “குறையே இல்லாதவராக இருக்கவேண்டும் என்று எதிர்பார்த்தால் நடக்கிற காரியமா? நான் மட்டும் என்ன, தப்பே செய்யமாட்டேனா? விட்டுப்பிடி”.

    ஒரு துணுக்கு

    எல்லா நாடுகளிலும் பெண்கள் தலைவர்களாக இருந்தால் என்ன ஆகும்?

    ஒருவரோடு ஒருவர் பேசாத நாடுகள் உருவாகும்!

    பெண்ணின் எதிர்பார்ப்பு

    நாம் விரும்பிய ஒருவர் இப்படித்தான் இருக்கவேண்டும் என்று நினைக்கிறோம். ஆனால், அவர் அப்படி இல்லாவிட்டால் ஏமாற்றம்தான் உண்டாகும்.

    மனைவி தன்னை எப்போதும் சாடுகிறாளே என்று வருந்திய ஒருவனின் குமுறல்: “நான் அவளுக்குப் பூரண சுதந்திரம் கொடுத்திருக்கிறேன். அவள் பணக்கார குடும்பத்திலிருந்து வந்தவள், வீட்டு வேலை செய்யப் பிடிக்காது என்று வீட்டில் சமையலுக்குக்கூட ஆள் போட்டிருக்கிறேன். அவளுடைய சொந்த உபயோகத்திற்கு கார். இன்னும் என்ன வேண்டும்?”

    கணவனுக்குப் பெரிய வேலை, அதனால் பொறுப்புகள் நிறைய இருக்கும் என்பதெல்லாம் அவளுக்கும் புரியாமலில்லை.

    வேலை நிமித்தம் வெளிநாட்டுக்குப் போய்வரும்போதெல்லாம் பரிசுப் பொருட்கள் வாங்கி வருகிறான். இருந்தாலும், தனக்காக அவ்வளவு நேரத்தைச் செலவழிப்பதில்லை என்ற வருத்தம் கோபமாக மாறிவிட்டது.

    காதலனாக இருந்தபோது இப்படியா இருந்தான்! எவ்வளவு எதிர்பார்ப்புடன், குடும்பத்தை எதிர்த்து அவனை மணந்தாள்!

    இப்போது அவளுக்கு வேண்டியது அவனுடைய அன்பான கவனிப்பு. வேறு எதுவும் அதற்கு ஈடாகாது.

    வெளிப்படையாகக் குறைகூறாது அனுசரித்து நடந்தால், இருவரில் ஒருவர் தானாக மாறலாம். இல்லை, மாற்ற முடியாததை ஏற்க வேண்டும்.

    கதை

    அமெரிக்கப் பெண்மணி லூயிஸ் கலகலப்பானவள். அவளுடைய கணவரோ நேர்எதிர். அழுமூஞ்சி என்று சொல்லத்தக்கவர்.

    சற்று பழகியதும், நான் அவளிடம் கேட்டேன்: “உனக்கும் உன் கணவருக்கும் பொருத்தமே இல்லையே! எப்படி அவருடன் இருக்கிறாய்?”

    (அவர்களுடைய பிரச்சினையில் நான் மூக்கை நுழைப்பதை அவள் தப்பாக எடுத்துக்கொள்ளமாட்டாள் என்று தெரியும்).

    உடனே, “அப்படிப் பார்த்துக்கொண்டே இருந்தால், முடிவே கிடையாது,” என்று பதிலளித்தாள். சற்றுப் பொறுத்து, “என் கணவர் விவாகரத்து ஆனவர். அவருடைய முதல் மனைவியை ஒருமுறை சந்தித்தேன். என்னைப் போலவே இருந்தாள்,’ என்று தெரிவித்தாள்.

    வெளிப்படையாகக் கட்டுப்படுத்தாது, அவருடைய குறைகளைப் புரிந்து, அவற்றுடன் அவரை ஏற்கும் விவேகம் நிறைந்தவள் லூயிஸ். அதனால் அவர்களுடைய தாம்பத்தியம் குறுகிய காலத்தில் முடிந்துவிடவில்லை. தன் குறைகளை உணர்ந்த கணவரும் அவளிடம் நன்றி செலுத்தும் விதமாக மிக்க அன்புடன் நடந்துகொண்டார்.

    காதல் எதுவரை?

    காதலர்களாக இருக்கும்போது, உல்லாசமாக ஊர்சுற்றி, செலவைப் பார்க்காமல் ஒருவர் மற்றவருக்கு ஏதாவது வாங்கிக் கொடுத்து, சிரிப்பும் களிப்புமாக இருப்பதோடு காதல் முடிந்து விடுவதில்லை. வாழ்க்கை நம்மைப் புரட்டிப் போடும்போது ஒருவருக்கொருவர் ஆதரவாக நடக்க வேண்டியதும் அவசியம்.

    Share
  • பழகத் தெரிய வேணும் – 19

    பழகத் தெரிய வேணும் – 19

    நிர்மலா ராகவன்

    (எனக்கு எல்லாம் தெரியுமே!)

    எல்லாம் அறிந்தவன் இறைவன் மட்டும்தான் எனில், நமக்குத் தெரியாததை எண்ணி விசனம் கொள்வானேன்! இந்த விவேகம் நம்மில் எத்தனை பேருக்கு இருக்கிறது?

    கதை

    ‘எனக்கு எல்லாம் தெரியும்!’ என்று இறுமாப்புடன் கூறுவான் விட்டல்.

    நிறைய விஷயங்கள் அவனுக்குப் புரியாமல் இருக்கும். ஆனால், அதை ஒத்துக்கொள்ளும் தைரியம் அவனுக்குக் கிடையாது.

    எப்படியோ சுமாரான பதவி ஒன்றில் அமர்ந்தபின், தன்னைவிட வித்தியாசமானவர்கள் எல்லாரையும் குறை கூறி, அதில் பெருமிதம் அடைவான்.

    பிறர் சொல்வதைக் கேட்பது விட்டலைப் போன்றவர்களுக்குப் பிடிக்காத சமாசாரம்.

    தன் அறிவை வெளிக்காட்டும்வண்ணம் தானே அதிகம் பேசுவார்கள்.

    ஒருவர் கேட்கும் கேள்வியிலிருந்து அவரது ஆற்றலைப் புரிந்துகொள்ளலாம்.

    கதை

    என்னுடன் பணிபுரிந்த பத்மா இருபது ஆண்டுகளுக்குப்பின் என்னைச் சந்தித்தாள்.

    “இப்போதெல்லாம், நீ உன் தலைமயிரைக் கடையில் perm செய்து, சுருட்டையாக்கிக்கொள்கிறாயா?!” என்று கேட்டாள்.

    “இல்லையே!”

    “இல்லை. நீ அப்படித்தான் செய்துகொள்கிறாய்!”  என்று பிடிவாதம் பிடித்தாள்.

    “இயற்கைதான்,” என்று நான் மறுத்தேன்.

    மீண்டும் சொன்னதையே சொன்னாள்.

    அவர்கள் சொல்வதுதான் சரியென்று வீண்விவாதம் புரியும் குணத்தை SPLITTING THE HAIR என்கிறார்கள்.

    ‘நான் சொல்வதுதான் சரி. எல்லாரும் அப்படித்தானே சொல்கிறார்கள்!’ என்பவர்கள், ‘நாம் சுயமாகச் சிந்தித்து, இருக்கிற சொற்ப மூளைக்கும் வேலை கொடுப்பானேன்!’ என்பதுபோல் நடப்பவர்கள்.

    பொறுமையிழந்து, “சரி. அப்படியே வைத்துக்கொள்!” என்று முடித்தேன்.

    விவேகமானவர்கள் யார்?

    1. பிறர் கூறுவதைக் கூர்ந்து கவனிப்பவர்கள். பிறரது கருத்து சரியென்றுபட்டால் ஏற்பார்கள். இல்லாவிட்டால், எங்கே தவறு, அதை எப்படி நிவர்த்தி செய்யலாம் என்று அவர்கள் யோசனை போகும்.

    “நான் பெரிய அறிவாளி அல்ல. எனக்குள் எழும் கேள்விகளுக்கு விடை காணும்வரை விலகுவதில்லை” (ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்).

    2. பிறரை மதிப்பவன்

    தன்னைவிட உயர்ந்த நிலையில் இருப்பவரிடம் ஒரேயடியாகப் பணிந்து, கீழான நிலைகளில் உள்ளவர்களை அலட்சியமாக நடத்துவதும் கிடையாது. இதற்கு தன்னைத்தானே மதிக்கும் குணம் அவசியம். இப்படிப்பட்டவர்களை அபூர்வமாகத்தான் காணமுடிகிறது.

    எவ்வாறு கற்கலாம்?

    பிறருடைய தவறுகளிலிருந்து கற்பதைவிட, சொந்த வாழ்க்கையிலிருந்தே நிறைய கற்க முடிகிறது.

    வாழ்க்கைப் பாதையில் சிலர் தகாத முறையில் நம்மை நடத்தியிருப்பர். எவ்வளவோ இழிசொற்களையும் அவமரியாதையையும் தாங்க நேர்ந்திருக்கும். கடந்ததைப் பற்றியே நினைத்து, நினைத்து, வருத்தமும் ஆத்திரமும் கொண்டிருந்தாற்போல் அவை மாறிவிடுமா? அவற்றிலிருந்து கற்கலாம்.

    கதை

    ஆரம்பக்கால ஆசிரியப் பயிற்சியின்போது எனக்கு அறிமுகமானவள் ராதா. ஒருமுறை, அவள் கூறிய ஏதோ கருத்தை நான் ஏற்கவில்லை.

    அவளுக்கு வந்ததே கோபம்! கண்டபடி கத்தினாள். நான் பயந்து, விலகினேன்.

    பல வருடங்களுக்குப்பின், இன்னொரு பயிற்சியின்போது அவளும் நானும் ஒரே வகுப்பில் இருக்க நேர்ந்தது. அவளுடைய சுபாவம் புரிந்து, நான் ஒதுங்கிப் போனேன்.

    வகுப்பு நடக்கும்போது, நான் விரிவுரையாளரை ஏதாவது கேட்டால், அதைத் தடுக்க நினைப்பவளாக, `நிர்மலா!’ என்று அவளிடமிருந்து கண்டனக் குரல் எழும்.

    பல முறை பொறுத்துப் போனேன். இறுதியில், அவள் பக்கம் திரும்பி, “Shut up!” என்றேன், மெதுவாக.

    அது போதாதா அவளுக்கு! வகுப்பு முடிந்ததும், என்னுடன் சண்டைக்கு வந்தாள்.

    “என்னை Shut up என்றாய்,” என்றாள் குற்றம் சாட்டுவதுபோல்.

    “ஆமாம். சொன்னேன்,” என்றேன் அமைதியாக.

    “நான் உன்னை அப்படிச் சொன்னால்?” என்றாள்.

    “சொல்லிவிட்டுப்போ!” என்றேன் அலட்சியமாக.

    “நான் அப்படியெல்லாம் கீழ்த்தரமாகப் பேசமாட்டேன்”.

    “சரி. பேசாதே!”.

    மீண்டும் ஆரம்பத்திலிருந்து, அதே வார்த்தைகள்.

    “நீ என்னை ஷட் அப் என்று சொன்னாய்!” என்றுவிட்டு, “நீ என்னை விலக்குகிறாய்!” என்று கத்தினாள்.

    நம்மை இழிவுபடுத்தியவர்களை மீண்டும் சந்திக்க நேரும்போது, எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்று தோன்றிவிடும்.

    “இப்படியெல்லாம் வரும் என்று எனக்குத் தெரியும்,” என்றேன்.

    அவள் தன் குரலை எவ்வளவு உயர்த்தியபோதும், நான் நிதானத்தை இழக்காமல் பேசினேன்.

    இன்னும் என்ன பேசுவது என்று புரியாது, என்னைத் தாக்கிவிடுபவள்போல் மிக அருகில் வந்தாள். எங்களிருவருக்கும் இடையே இருந்த இடைவெளியைத் தன் கரத்தால் வெட்டி, அவளைத் தடுத்து நிறுத்தினார் ஒரு சீனர்.

    பிறகு, “இவள் ஏன் இப்படி தரக்குறைவாக நடந்துகொள்கிறாள்!?” என்று திரும்பத் திரும்பக் கேட்டார்.

    நான் எதுவும் சொல்லவில்லை.

    அவள் தன்னைப் பற்றி ஒரேயடியாக அளக்க, அடிமைகளாக இருவர் அவள் பின்னால் நடந்தனர். சம்பவம் நடந்த முதல் நாள் அவர்கள் என்னுடன் ஊரைச் சுற்றிப் பார்க்க (நான் அழைக்காமலேயே) வந்துவிட்டதில் அவளுக்கு ஆத்திரம் – தன் தலைமைக்குப் பங்கம் வந்துவிடுமோ என்று.

    அதன்பின், நான் என்ன செய்தாலும் அதையே பின்பற்றினாள்!

    தூண்டப்பட்ட அறிவு

    கல்லூரிப் பயிற்சியின்போது, எப்படியெல்லாம் ஒரு நல்ல, திறமையான ஆசிரியர் இருக்கவேண்டும் என்று தினமும் சொல்லிக் கொடுத்தார்கள்.

    ஓர் இளைஞன் பொறுமையை இழந்தான். “புத்தகத்தில் படிக்கும்போது நன்றாகத்தான் இருக்கும். ஆனால், நீங்கள் சொல்லிக் கொடுக்கிறபடி எல்லாம் நடக்க முடியுமா? நேரம் கிடைக்குமா?” என்று விவாதம் செய்தான்.

    விரிவுரையாளர் பொறுமையாக, “ஒருவருக்கு நல்லவராக இருப்பது எப்படி என்று கற்பித்தால், அவர் எளிதில் கெட்டுப் போகமாட்டார் என்ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு,” என்று பதிலளித்தார்.

    என்னிடம் அவர் கேட்டார்: “உங்களிடம் ஒரு மாணவன் ஏதோ ஒரு கேள்வி கேட்கிறான். அதற்குப் பதில் தெரியாவிட்டால், என்ன செய்வீர்கள்?”

    “தெரியாது என்று சொல்வேன்”.

    “முட்டாள் என்று உங்களை நினைத்துக்கொள்ளமாட்டானா?”

    “எப்போதுமே அப்படிச் சொல்லமாட்டேனே! பதிலைத் தேடிக் கண்டுபிடித்து, பிறகு சொல்வேன்”.

    பிரமிப்புடன், “நீங்கள் மிக நல்ல பள்ளிக்கூடத்தில் படித்திருக்க வேண்டும்!” என்றார்.

    பெருமையாக உணர்ந்தேன். என்னைத் திட்டித் திட்டி வழிநடத்திய ஆசிரியைகளை நன்றியுடன் நினைத்துக்கொண்டேன்.

    புதிய இடங்களில், நமக்குத் தெரியாத விஷயங்களைப் பற்றிச் சிலர் பேசிக்கொண்டிருந்தால், மௌனமாக இருந்துவிட்டால் தப்பித்தோம். இல்லாவிட்டால், நம் முட்டாள்தனத்தை வெளிக்காட்டும் வகையில் ஏதாவது உளற நேரிடும்.

    சிறக்க வேண்டுமானால், சில சமயம் சறுக்கவும் செய்வோம். அப்போது குன்றிப்போய்விடலாமா?

    (மேலும் தெரிந்துகொள்வோம்

    Share
  • பழகத் தெரிய வேணும் – 18

    பழகத் தெரிய வேணும் – 18

    நிர்மலா ராகவன்

    (தாயும் மகளும்)

    வீட்டுடன் இருக்கும் பெண், ‘நான் எந்த வேலைக்கும் போவதில்லை,’ என்று சற்றுக் கூசியபடி கூறுகிறாள்.

    நாள் முழுவதும் ஓடியாடி உழைத்தாலும், வீட்டுக்குள் இலவசமாக வேலை செய்வதால் அதன் மதிப்பு வெளியில் தெரிவதில்லை.

    தாயான எந்தப் பெண்ணாவது எப்போதும் ஓய்வாக இருந்துவிட முடியுமா என்ற கேள்வி எழுகிறது.

    தடுக்கி விழுந்து அடிபட்டுக் கொள்ளும்போதும், தந்தை காரணமில்லாமல் கோபிக்கும்போதும், பள்ளியில் உடன்படிப்பவர்கள் நட்புடன் பழகாதிருக்கும்போதும் குழந்தைகள் நாடுவது யாரை?

    குழந்தையுடன் பேசுங்கள்

    முதன்முறையாக அம்மா ஆனவர்களுக்கு குழந்தைகளை எப்படி வளர்ப்பது என்பது புரிவதில்லை. மடியில் வைத்துக்கொண்டு கொஞ்சினால் போதும் என்று நினைக்கிறார்கள்.

    என் மூத்த மகளுக்கு ஒரு வயதானபோது, அவள் தன்பாட்டில் பொம்மையை வைத்துக்கொண்டு விளையாடிக்கொண்டிருப்பாள். நான் ஏதாவது செய்துகொண்டிருப்பேன்.

    நாம் பார்ப்பது, கேட்பது எல்லாவற்றையும் விளக்கிக்கொண்டிருந்தால்தான் குழந்தையின் அறிவு விசாலமடைகிறது என்று அனுபவத்தில் கண்டிருந்த என் அன்னை, “குழந்தையிடம் பேசினால்தானே அதற்கு மூளை வளரும்?” என்று புத்தி புகட்டினாள்.

    அன்று பேச ஆரம்பித்தவள்தான் நான்.

    பேசாமல் நம் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தோமானால் குழந்தையும் பேசாது உட்கார்ந்திருக்கும். அதற்குப் பேசத் தெரியவில்லையே என்று காத்திருக்கலாமா? மிருகங்களுக்குக்கூட நாம் பேசுவது புரிகிறதே!

    அக்கம்பக்கத்தில் தமிழர்கள் யாருமில்லை என்ற நிலையில், சாயந்திர வேளைகளில் உலவப் போகும்போது, ‘இது புல். இது மரம்,’ என்று பார்ப்பதையெல்லாம் குழந்தைகளுக்குச் சொல்லிக்கொடுப்பேன். கூடவே அதன் ஆங்கில மொழிபெயர்ப்பு. இரண்டு வயதிலிருந்து, புத்தகங்கள் கைகொடுத்தன.

    அவளது இருமொழி ‘பாண்டித்தியம்’ இப்படி வெளிவந்தது: `ஒக்காச்சி, சித்தம்’ (Sit down)!

    ஏதாவது காரியமாக நான் வெளியே போனால், வீடுதிரும்பியதும் அதைப்பற்றி குழந்தைகளிடம் விவரமாகச் சொல்வது வழக்கம். அவர்கள் பெரியவர்களானதும், தம்மையும் அறியாது அதே வழக்கத்தைப் பின்பற்றினார்கள். அதனால், ‘நமக்குத் தெரியாமல் என்ன செய்கிறார்களோ!’ என்ற கவலை எழுந்ததில்லை.

    தாயின் திட்டு

    ஒரு பெண் தானே தாய்மை அடைந்தபின்னர், ‘நம்மை வளர்க்க அம்மா எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பாள்!’ என்ற ஞானோதயம் ஏற்படுகிறது. அதன் விளைவாக, அம்மாவிடம் வாங்கிய வசவு, அதன் பாதிப்பு, கணிசமாகக் குறையும்.

    ‘பெண்’ என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும் என்று மகளைச் சிறுவயதிலேயே நம்ப வைத்துவிடுவாள் பெற்றவள். தாயானபின்னர், அவளும் அதையே தம் மகளுக்குப் போதிப்பாள்.

    என் தலைமுறையிலிருந்த பிற பெண்களைப்போல் நான் இல்லை என்ற கவலை என் அம்மாவுக்கு. ஓயாமல் கண்டிப்பாள். அதனால் தந்தையிடம் நெருங்கிப்போனேன். தாய்க்கும் மகளுக்கும் ஏற்பட்ட போட்டியில் இன்னும் நிறைய வசவு கிடைக்க, ‘திட்டு வாங்கறதுக்குன்னே பிறந்த ஜன்மம்!’ என்ற கேலிக்கு ஆளானேன்.

    இப்போது பெண்கள் என்னைக் கேட்கிறார்கள், “ஒங்களைமாதிரி எப்படி ஆகிறது?” என்று.

    அதற்கு நான் நேரிடையாகப் பதிலளிக்காது, “உங்களை, ‘என்ன இருந்தாலும் நீ ஒரு பொண்ணு!’ என்று சொல்லி வளர்த்திருப்பார்கள்,” என்றேன்.

    அதிர்ச்சியுடன், “ஆமாம். இல்லே?” என்று ஒருவரையொருவர் கேட்டுக்கொள்கிறார்கள்.

    இணக்கமான உறவு

    கதை 1

    எட்டு வயதிலேயே, “யார் உன்னுடன் இவ்வளவு பேசுவது?” என்று ஆசிரியை கேட்க, என் இளைய மகள் சித்ரா பூரிப்புடன், “எங்கம்மா!” என்றிருக்கிறாள்.

    அவளுக்குப் பன்னிரண்டு வயதானபோது, வகுப்பில் எல்லோர் முன்னிலும் ஆங்கிலத்தில் ஒரு வாக்கியம் கூறவேண்டும் என்ற வீட்டுப்பாடம் அளிக்கப்பட்டிருந்தது.

    மகள் என் உதவியை நாடினாள். “பிறர் ஏதாவது சொல்லும்போது, எல்லாரும், ‘ஆமாம், ஆமாம்,’ என்றுவிடுகிறார்கள். நீ மட்டும் அப்படிச் செய்வதில்லை. ஏம்மா?”

    நான் மெல்லச் சிரித்து, “என்னைப்போல் இருப்பவர்களை NON-CONFORMIST என்பார்கள். தவறு என்று எனக்குத் தோன்றினால், பிறர் கூறுவதையோ, செய்வதையோ நான் ஏற்பதில்லை”.

    மறுநாள், “I want to be a non-conformist like my mother,” என்றவள் கூற, ஆசிரியை அயர்ந்துபோனாள்.

    கதை 2

    சித்ரா பன்னிரண்டாவது படிக்கும்போது, ஆண்களும் பெண்களும் ஒன்றாகப் படித்தார்கள்.

    ஒருமுறை, வகுப்பில் நுழைந்த இளம் ஆசிரியையிடம், “பாடம் நடத்தவேண்டாம். இன்று உங்களுக்கு களைப்பாக இருக்குமே!” என்று ஒரு பையன் கிண்டல் செய்ய, “உங்களுக்கென்ன அதைப்பற்றி?” என்று அவள் கோபிக்க, எல்லாரும் சிரித்தார்கள்.

    என் மகளுக்கு ஒன்றும் புரியவில்லை.

    “நீ சின்னப்பெண். இதெல்லாம் உனக்குப் புரியாது,” என்று நமட்டுச்சிரிப்புடன் அவர்கள் விளக்க மறுத்துவிட்டார்கள்.

    “சொல்லாவிட்டால் போங்கள். என் அம்மாவைக் கேட்டுக்கொள்கிறேன். நான் எது கேட்டாலும் பதில் சொல்வாள்,” என்று வீறாப்பாகச் சொல்லிவிட்டு, என்னிடம் கேட்டாள்.

    இம்மாதிரி பரஸ்பர நம்பிக்கை தாய்க்கும் மகளுக்கும் இருந்தால், எத்தனை வயதானாலும் நெருங்கிய தோழிகளாகவே இருப்பார்கள்.

    எப்படிப்பட்ட கேள்வியானாலும், அதைக் கேட்கும் சிறுவர்கள் அதன் பதிலுக்குத் தயாராகிவிடுகிறார்கள். ‘இது என்ன வயதுக்குமீறிய கேள்வி!’ என்று கோபிக்காவிட்டால், அவர்களுடைய அறிவு விசாலமடையும்.

    ‘வியாழக்கிழமை மனைவியுடன் உடலுறவு கொண்டால் ஏதோ நன்மை விளையும் என்ற நம்பிக்கை சில இனத்தவர்களுக்கு,’ என்று என் சக ஆசிரியர் கூறியிருக்கிறார். அந்த வழக்கம் தெரிந்துதான் மறுநாள் மாணவர்கள் கேலி செய்திருக்கிறார்கள்.

    கதை 3

    இருபது வயதானபோது, அவளைவிட மூத்த பெண்கள் கூறிய அறிவுரை: “உன் அம்மா, ‘சீக்கிரமே கல்யாணம் பண்ணிக்கொள்,’ என்று வற்புறுத்தி இருப்பார்கள். ஆனால், முப்பது வயதுக்குமேல் பண்ணிக்கொள்”.

    அவள் உடனே, “எங்கம்மா அப்படிச் சொன்னதே கிடையாது,” என்று எதிர்த்தாளாம்.

    தன்னைத்தானே புரிந்துகொள்ளாத ஒரு பெண் இளம் வயதில் கல்யாணமானால், கணவனுக்குப் பயந்து நடக்கிறாள். கணவன் அருகில் இருக்கும்போது, பிறரிடம் பேசக்கூடத் தயங்குகிறாள் –- அவளுக்கென ஒரு தனிப்பட்ட கருத்து இருப்பதை அவன் விரும்பமாட்டான் என்ற அச்சத்தில்.

    கதை

    தாய்க்கும் மகளுக்கும் இடையே போட்டி, பொறாமை விளைவதும் உண்டு.

    பள்ளிப்படிப்பு முடிந்ததுமே தெரிந்தவர்கள்மூலம் மாதுரி நல்ல வேலையில் அமர்ந்தாள். கணிசமான சம்பளம்.

    அதிகப் படிப்போ, சுயசம்பாத்தியமோ இல்லாத அவளுடைய தாய், ‘நாளை மகள் தன்னை மதிப்பாளா?’ என்று கலக்கமடைந்தாள்.

    “வேலைக்குப் போய்விட்டு வந்தால் ஓய்ந்துவிடுகிறாய். வேலையை விட்டுவிடு.  நீ மேலே படி,” என்று ஆசைகாட்டினாள், போலிப்பரிவுடன்.

    மேற்படிப்புக்குப் பணமில்லை என்பதை இருவருமே அப்போது யோசிக்கவில்லை.

    உடன் வேலை செய்தவர்கள் எவ்வளவோ எடுத்துச்சொல்லியும் கேளாது, மாதுரி வேலையை விட்டாள்.

    தன் தவறு புரிந்தபின், திரும்பவும் போய் வேலை கேட்க வெட்கம். தாயின்மேல் ஏற்பட்ட வருத்தத்தை வெளியில் காட்டிக்கொள்ளவும் முடியவில்லை.

    தான் பெற்ற மகள் அல்லது தன்னிடம் பயின்ற மாணவி தன்னைவிட சிறந்தால் பெருமைப்படாத தாயோ, ஆசிரியையோ எதில் சேர்த்தி?

    Share
  • பழகத் தெரிய வேணும் – 17

    பழகத் தெரிய வேணும் – 17

    நிர்மலா ராகவன்

    (எனக்கு என்னைப் பிடிக்கும்)

    ‘என்னை யாருக்குமே பிடிக்கவில்லை,’ என்று அழுதான் அச்சிறுவன்.

    பாட்டி அளித்த அபரிமிதமான செல்லத்தில் வளர்ந்து, மனத்திற்குத் தோன்றியபடி நடந்து, ஒருவரையும் மதிக்காது நடந்துகொண்டதன் விளைவு அது. ஆனால் அதெல்லாம் புரியும் வயதாகவில்லை அப்போது.

    சிறு வயதில், ‘புத்திசாலி, சமர்த்து’ என்றெல்லாம் பிறர் பாராட்டுவதைக் கேட்டு, ‘நாம் அப்படித்தான்’ என்று நம்பிவிடுகிறோம். யாரும் புகழாது, பழிப்பிற்கு ஆளானால் அச்சிறுவனைப்போல்தான் வருந்த நேரிடுகிறது.

    இருப்பினும், அறியாப் பருவத்தில் தவறு செய்துவிட்டு, அதையே எண்ணி வருந்துவது வீண். பெரியவர்களானதும், கடந்த காலக் கசப்புகளிலிருந்து மீண்டால்தான் நிம்மதி கிடைக்கும்.

    பிறருக்குப் பிடிக்காவிட்டால் என்ன?

    ‘எனக்கு என்னைப் பிடிக்கும்!’ என்ற மனப்பான்மையை ஒருவர் வளர்த்துக்கொள்வது நல்லது.

    சுயநலமா?

    தன் நலனை ஒருவர் கவனித்துக்கொள்வது சுயநலம் அல்ல. பிறரை ஒதுக்கிவிட்டு, தன்னையே எப்போதும் கவனித்துக் கொண்டிருந்தால்தான் சுயநலம்.

    மூன்று வயதான வினு கடைக்குட்டியானதால் குடும்பத்தில் எல்லாருக்கும் செல்லம்.

    “எனக்கு வினுவைப் பிடிக்கும்,” என்று தன்னைக் கண்டிப்பும் அன்புமாக வளர்த்த தாயிடம் அடிக்கடி சொல்வான். அக்குணத்தினால் அவனுக்குப் பார்த்தவர்கள் எல்லாரையும் பிடித்துப் போயிற்று. அவர்களும் அவனது அன்பைத் திரும்ப அளித்தார்கள்.

    அனுசரித்துப் போய்விடு!

    பிறருக்கு ஏற்றபடியெல்லாம் தன்னை மாற்றிக்கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பெண்களுக்குப் போதிக்கப்படுகிறது. அப்போதுதான் அவள் எவ்விதக் கண்டனத்துக்கும் ஆளாகமாட்டாள்.

    ‘ஒரு பெண்ணானவள் தந்தைக்கு அன்பான மகள், கணவனுக்கு..,’ என்றெல்லாம் எழுதி வைத்திருக்கிறார்கள். அவளுக்கு அவள் யார் என்பது முக்கியமென்று எவருக்கும் தோன்றவில்லை.

    கதை

    ‘பிறருடைய சந்தோஷம்தான் உன் சந்தோஷம்,’ என்று கூறியே வளர்த்திருந்தார்கள் விசாலியை.

    பத்து வயதிலிருந்தே பிறருக்காக ஓயாது உழைத்தாள். அவர்கள் செய்ய ஆரம்பித்த வேலையைப் பிடுங்கிச் செய்வாள். தன் நலனையும் கவனிக்காது விட்டுவிட்டால் எவருக்கும் வாழ்க்கையில் மகிழ்ச்சி கிடைக்காது. 

    ‘என்ன குணம்!’ என்ற பிறரின் பாராட்டு கிடைத்தது.

    அவளுடைய பதின்ம வயதில், தன்னலம் பாராத அக்குணத்தை தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டார்கள் கயமையான சில உறவினர்கள்.

    விவரம் புரியாத அந்த வயதில், “எல்லாருக்கும் என்னைப் பிடிக்கிறது!’ என்ற பூரிப்பு ஏற்பட்டது. இருபது வயதில்தான் தன் இழப்பு என்னவென்று அவளுக்குப் புரிந்தது.

    திருமணமானபின், கணவன் இன்னொரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருக்கிறான் என்று புரிந்தபோதும், அவனை எதிர்க்கத் தோன்றவில்லை.

    வழக்கம்போல், ‘என்னுடைய மகிழ்ச்சியா பெரிது!’ என்று விட்டுக் கொடுத்தாள். ஆனால், வருத்தம் ஏற்படாமல் இருக்குமா?

    உடற்பயிற்சி, ஆகாரம், ஓய்வு எல்லாம் நமக்கு நாமே செய்துகொள்ளும் நன்மை. அத்தேவைகளைக் கவனிக்காது விட்டால் உடலும் மனமும் ஒருங்கே கெடும் அபாயம் இருக்கிறது.

    ‘நல்ல பெண்’ என்று பெயரெடுக்க எந்தப் பெண்ணும் விசாலியைப்போல் தன்னையே கரைத்துக்கொள்ள வேண்டியதில்லை.

    தனக்குப் பிடித்த காரியத்திற்காக நேரத்தைச் செலவிடுவது சுயநலம் என்று பெண்களை நம்பவைத்திருக்கிறார்கள். நம் நலனில் நம்மைவிட வேறு யாருக்கு அதிக அக்கறை இருக்கமுடியும்?

    தொலைக்காட்சியில் ஒரு பாடம்

    அண்மையில், தொலைக்காட்சியில் “கோடீஸ்வரி” நிகழ்ச்சியைப் பார்த்திருப்பீர்கள். பெண்கள் மட்டுமே கலந்துகொண்ட நிகழ்ச்சி அது.

    சொல்லிவைத்தாற்போல், அனேகமாக எல்லாப் பெண்களும், ‘வெல்லும் பணம் கணவருக்கு, குழந்தைகளுக்கு,’ என்றுதான் கூறினார்கள்.

    அவர்களுக்கென்று தனிப்பட்ட ஆசை எதுவுமே கிடையாதா?

    இருக்கலாம். ஆனால், பிறருக்காக வாழ்ந்தால்தான் நல்ல பெண் என்று சமூகம் எதிர்பார்த்து, அதன்படி நடந்து பழகியவர்கள் ஆயிற்றே!

    நிகழ்ச்சியைச் செம்மையாக வழிநடத்திய நடிகை ராதிகா சரத்குமார் இப்பெண்களைப் பலமுறை தூண்டி, அவர்களுக்கும் மனம் என்று ஒன்று இருக்கிறது, அதில் இருக்கும் ஆசைகளை நிறைவேற்றிக்கொள்வதில் தப்பில்லை என்று உணரவைத்தார்.

    ஒரு கிராமப்புறத்திலிருந்த – படித்த – பெண்ணுக்கு ஜீன்ஸ் அணிய ஆசை. ஆனால், தாய் மறுத்துவிட்டாள் – பிறர் பழிப்பார்கள் என்று அஞ்சி. அவளுடைய ஆசை அந்நிகழ்ச்சிமூலம் நிறைவேற, பல பெண்கள் அவளைப் பின்பற்றினார்கள்.

    ‘நான் இப்படி இருந்தால்தான் பிறருக்குப் பிடிக்கும்!’ என்று வளைந்துகொடுப்பவர்களுக்கு நிறைய நண்பர்கள் கிடைக்கலாம். பிறரது புகழ்ச்சியும் கிடைக்கும். ஆனால், நிறைவேறாத ஆசையை அடக்குவதால் ஏற்படும் ஏக்கத்தைத் தவிர்க்க முடியாது.

    பெண்கள் தம் ஆசைகளை, அனுபவிக்கும் துயரங்களை, வெளிக்காட்டாது இருப்பதால் பிறருக்கு அவர்களது மனம் புரிவதில்லை. ‘பெண்களின் மனம் கடலைவிட ஆழமானது!’ என்று சொல்லிவிடுகிறார்கள்.

    ‘உனக்கென்று ஏதாவது ஆசை இருக்கிறதா?’ என்று கேட்டுப்பாருங்கள்.

    அவர்களுக்கே தெரியாது, ஏதாவது ஆசை ஒட்டிக்கொண்டிருக்கும்.

    கதை

    ஆறு வயதான மாது, சுறுசுறுப்பும் தன்னம்பிக்கையும் நிறைந்தவன்.

    “உனக்கு என்ன வேண்டும்?” என்று கேட்டபோது, “எனக்கு ஒரு குதிரை வேணும்,” என்றான்.

    “பொம்மைக் குதிரையா?”

    “இல்லை, நிஜக்குதிரை! என் கல்யாணத்திலே நான் அதுமேலே ஒக்காந்து வருவேன்!”

    இவனுக்குத் தனக்கு என்ன வேண்டும் என்று தெரிந்திருக்கிறது.

    குழந்தைத்தனமாக ஏதோ பிதற்றுகிறான் என்று அலட்சியம் செய்யாமல், அவனையும் மதித்து, பேச்சுக் கொடுத்ததால் தன்னைப் பற்றி யோசிப்பது தவறில்லை என்று அவனுக்குப் புரிகிறது.

    ஒப்பீடு வேண்டாமே!

    பிறருடன் நம்மை ஒப்பிட்டுக்கொண்டாலோ, ‘வித்தியாசமாக இருக்கிறோமே!’ என்று மனம் நொந்தாலோ நிம்மதி பறிபோய்விடும்.

    ‘நான் ஆதர்ச மனைவியாக இருப்பேன்!’

    ‘பிறருடைய மகிழ்ச்சிக்காக உயிரையே கொடுப்பேன்!’

    இம்மாதிரியான உறுதிமொழிகள் ஏன்? பிறர் நம்மைவிட உயர்ந்தவர்கள் என்று ஒத்துக்கொள்வதுபோல் ஆகிவிடுகிறதே!

    கதை

    சிறுவயதிலிருந்தே, தனது ஒவ்வொரு சொல்லாலும் செயலாலும் பிறரது ஆமோதிப்பை எதிர்பார்த்தாள் பூமா. பாராட்டு பெறாதவர் கண்டனத்துக்குரியவர் என்று நம்பினாள்.

    இப்போக்கால், தன்னம்பிக்கை குறைந்துவிடும் என்பதை அவள் உணரவில்லை. சற்றுப் பெரியவளானதும், அதிகாரத்தால் தன் பலவீனத்தை மறைத்துக்கொண்டாள்.

    நம்மைப்பற்றி நாமே நல்லவிதமாக எண்ணும்போது, நம்மையே மதிக்கிறோம். தன்னம்பிக்கை வளர, நாம் செய்யும் சிறு பிழைகளுக்காக மனம் உடைந்துபோய்விடுவதில்லை.

    நாமேதான் நம் வாழ்க்கையை நிர்ணயிக்கவோ மாற்றிக்கொள்ளவோ முடியும்.

    மிக அழகாக இருந்த ஒரு நடனமணியைக் கேட்டார்கள், “நீங்கள் எப்படி உலகளாவிய எல்லா போட்டிகளிலும் வெற்றி பெறுகிறீர்கள்? இவ்வளவு அழகாக இருக்கிறீர்கள்?”

    அவள் அளித்த பதில்: “தினமும் காலை கண்ணாடிமுன் நின்று, `YOU, HANDSOME DEVIL!’ என்று என்னை நானே மெச்சிக்கொள்வேன்!”

    Share
  • பழகத் தெரிய வேணும் – 16

    பழகத் தெரிய வேணும் – 16

    நிர்மலா ராகவன்

    (பேரவா இருந்தால் சாதிக்கலாம்)

    தொலைகாட்சியில் இரவு முழுவதும் திரைப்படங்கள் காட்டுகிறார்கள். காப்பி குடித்தாவது கண்விழித்து விடிய விடிய அவைகளைப் பார்க்கிறார்களே பலரும், எப்படி?

    வெளிநாட்டில் நடக்கும் விளையாட்டு நிகழ்ச்சிகளை இரவு நேரங்களில் பார்ப்பவர்களும் இதே ரகம்தான்.

    ஒருவருக்கு ஆர்வம் இருக்கும் காரியத்தைப் பார்க்கும்போதோ, செய்யும்போதோ சலிப்பு ஏற்படுவதில்லை. உற்சாகமாக இருக்கிறது. பொறுமையும் அதிகரிக்கும்.

    ‘புத்தகத்தைக் கையில் எடுத்தாலே கொட்டாவி வருகிறது’ என்னும் மாணவமணிகளுக்கு ஏன் படித்துத் தொலைக்க வேண்டும் என்ற எரிச்சல்.

    ஒருவர் தனக்குள்ளிருக்கும் திறமைகளைப் பூரணமாகப் பயன்படுத்தாது போனால் எதையோ இழந்துவிட்டதுபோன்ற வெறுமை, எதிலும் சலிப்பு.

    எந்தக் காரியமாக இருந்தாலும், அதில் ஆர்வம் இல்லாதபோது அதைச் சரியாக செய்து முடிக்க முடியாது.

    சாதனையாளர்கள் வெற்றிமேல் வெற்றி அடைகிறார்கள். பணமோ, புகழோ மட்டும் அவர்களின் உந்துசக்தியாக இருப்பதில்லை.

    முதலில், ‘இந்தக் காரியத்தைச் செய்யவேண்டும்,’ என்று தீர்மானிக்கிறார்கள். பிறகு, அதை எப்படிச் செய்வது என்று யோசித்து, கவனம் கலையாது, அதை நோக்கிச் செல்கிறார்கள். உற்றாரின் பக்கபலமும் இருந்தால் சிறப்பு. அப்படி இல்லாவிட்டாலும், இவர்கள் மனம் தளர்ந்துவிடுவதில்லை.

    IRVING WALLACE என்பவர் பிரபலமான அமெரிக்க எழுத்தாளர். அவரைப் பார்க்கும்போதெல்லாம், அவருடைய உறவினர்கள், `இப்போதாவது உருப்படியாக ஏதாவது வேலை செய்கிறாயா?’ என்று கேட்பதாகச் சொல்லிச் சிரித்தார்.

    பிரச்னைகளை எப்படி எதிர்கொள்வது என்று அவருக்குப் புரிந்திருந்தது. பிறருக்காக தான் விரும்பிச் செய்ததை நிறுத்தவில்லை. தம் புத்தகங்களின்வழி நிறையப் புகழும் பணமும் சேர்த்தாலும், தொடர்ந்து எழுதினார்.

    கமல், ரஜனி போன்ற நடிகர்கள் வெற்றிப்பாதையில் நீடித்திருப்பதின் ரகசியம் என்ன?

    ‘எங்களுக்குப் பட்டம், பதவி இதிலெல்லாம் அக்கறை கிடையாது. நடிப்பது நடிப்பின்மேல் இருக்கும் வேட்கையால்’. இப்படி ஒரு நிகழ்ச்சியில் கமலஹாசன் கூற, மற்றவர் தலையசைத்து, ஒப்புக்கொண்டார்.

    ‘எனக்கும் ஆசைதான்..,’ என்று தயங்கியே காலம் தள்ளுவானேன்? துணிந்து இறங்க வேண்டியதுதான். நாம் ஈடுபடப்போகும் காரியத்தால் வேண்டாத விளைவுகள் ஏற்படக்கூடும். அப்போது ஏற்படும் அச்சத்தால் எடுத்த முயற்சியைக் கைவிடலாமா?

    கதை

    1987-ல், Rick E.Hunts என்ற தச்சர் தன் தலைமயிரைத் தானே வெட்டிக்கொள்ளும் கருவி ஒன்றைக் கண்டுபிடிக்க முடிவெடுத்தார்.

    அவருக்கு எப்படி இந்த எண்ணம் பிறந்தது?

    ஒரு தொலைகாட்சி நிகழ்ச்சியில், தலைமயிர் வெட்டிக்கொள்ள வருகிறவர்களைத் தலைகீழாகத் தொங்கவிட்டதைப் பார்த்ததும், அதற்குப் பதிலாக, புதிய முறை VACUUM CLEANER பயன்படுத்தி, மயிர் மேலே பறக்கச் செய்யலாமே என்று பொறி தட்டியதாம்.

    தொடர்ந்து ஏழு வருடங்கள் நான்கு விதங்களைத் தயாரித்துச் சோதனை செய்திருக்கிறார். ஐம்பது மாற்றங்கள்!

    மொத்த செலவு: இன்றைய ஐந்து லட்ச அமெரிக்க டாலருக்குமேல். (அதற்காகத் தன் கடையையும் விற்றிருக்கிறார்).

    தச்சராக இருந்தவர் விஞ்ஞானியாக மாறியதில் பலமுறை தோல்வியுற்றாலும், மனம் தளரவில்லை. செய்யும் காரியத்தில் பேரவா இருந்ததால், சலிப்பு ஏற்படவில்லை. எங்கே தவறு என்று ஆராய்ந்து, அதிலிருந்து புதியவற்றைக் கற்றிருக்கிறார்.

    இன்று பலருக்கும் அக்கருவி தேவைப்படுகிறது. ஒரு பெரிய கம்பெனி செய்து வைத்திருந்த அனைத்துக் கருவிகளும் விற்றுப்போய்விட்டனவாம்!

    ‘இப்போது வாழ்க்கை குழப்பமில்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறது. புதிதாக எதையாவது ஆரம்பித்து மாட்டிக்கொள்வானேன்!’ என்று எண்ணமிட்டு, ஏதோ ஒரு நியதியை எப்போதும் பின்பற்றிக்கொண்டிருந்தால் அமைதி கிடைக்கலாம். ஆனால், பெருமகிழ்ச்சி?

    விளம்பரங்களைப் பாருங்கள். வித்தியாசமாக எதையாவது செய்பவர்களே நம் கவனத்தைக் கவர்கிறார்கள்.

    கதை

    பல வருடங்களுக்குமுன், குமுதம் பத்திரிகையைக் கையில் எடுத்தாலே மரிக்கொழுந்து வாசனை ஆளைத் தூக்கும். ஒரு செண்ட் தயாரிப்பாளர்களின் விளம்பர உத்தி அது.

    விழாவென்றில், கையில் கிடைத்த புதிய பத்திரிகையை நான் ஆவலுடன் மூக்கருகே கொண்டுபோனேன்.

    அருகிலிருந்த சிறு பெண்கள், “யார்?” என்று ஆவலுடன் விசாரித்தார்கள், நான் அட்டைப்படத்திலிருந்த ஏதோ நடிகரைக் கொஞ்சுவதாக எண்ணி!

    மனிதர்களும் வித்தியாசமாகச் செயல்பட்டால்தான் கவனிக்கப்படுகிறார்கள்.

    தன்னைப் பிறர் கவனிக்க வேண்டும் என்று அசட்டுத்தனமாக ஏதாவது செய்வதைவிட பிறருக்குத் தம் சக்தியைமீறி சேவை செய்பவர்களே பாராட்டுக்கு உரியவர்களாக ஆகிறார்கள்.

    கதை (மலேசியாவில் நடந்தது)

    அண்மையில், தொற்றுநோய் பரவாதிருக்க யாரும் வீட்டுக்கு வெளியே வரக்கூடாது என்ற நிலையில், பள்ளிகள் மூடப்பட்டன. கணினிமூலம் ஆசிரியர்கள் போதித்தனர்.

    மலேசிய கிராமம் ஒன்றில் கணினி வசதி கிடையாது. ஏன், அங்கு செல்ல சரியான பாதைகூட கிடையாது.

    ஏற்கெனவே வசதி குறைந்த குடும்பங்களிலிருந்து வந்திருக்கும் குழந்தைகள் மேலும் பின்தங்கிவிடுவார்களே என்று ஓர் ஆசிரியர் யோசித்தார்.

    அதன் விளைவு: பிற ஆசிரியர்களை அவர்களது பாடத்திட்டத்தைத் தமக்கு அனுப்பும்படி கேட்டுக்கொண்டார். அவைகளைப் பிரதி எடுத்து, மிகுந்த சிரமத்துடன் அக்கிராமத்திற்குச் சென்று, மாணவர்களிடம் விநியோகித்தார்.

    ‘வீட்டுப்பாடத்தை உடனே முடித்துவிட்டேன்! அடுத்து எப்போது வருவீர்கள்?’ என்று ஒரு மாணவன் உற்சாகமாகத் தெரிவித்தது அவருக்குப் பெருமகிழ்ச்சி அளித்தது.

    அதிகமான யோசனை ஆர்வத்துக்கு முட்டுக்கட்டை. ஒரு காரியத்தை ஆரம்பிக்குமுன் திட்டமிடுதல் அவசியம்தான். ஆனால், ‘வெற்றி பெறுவோமோ? யார் என்ன சொல்வார்களோ!’ என்றெல்லாம் ஐயம் எழுந்தால் ஓரடிகூட எடுத்து வைக்க முடியாது.

    என்னுடன் வேலை பார்த்த ஆங்கில ஆசிரியை சொன்னாள்: “எனக்குக் கதை எழுத ஆசை. ஆனால், ஒரு வரி எழுதியதும், `இப்படி இருக்கலாமோ?’ என்ற சந்தேகம் வந்துவிடும். அதை மாற்றினால், இன்னொரு விதமாக எழுதத் தோன்றும். இப்படியே, செய்ததில், ஒரு வரிக்குமேல் செல்லவே முடியவில்லை!”

    நல்லவேளை, எனக்கு அந்தக் குழப்பமெல்லாம் கிடையாது. மனதில் தோன்றுவதை ஆங்கில எழுத்துக்களில் வடித்தாலே பெரிய காரியம் என்று நினைத்து எழுதுவேன்.

    “அது எப்படி, கணக்கு ஆசிரியை, பௌதிக ஆசிரியை என்று நீங்களெல்லாம் போட்டிகளில் பரிசு பெறுகிறீர்கள்!” என்று இன்னொரு ஆங்கில ஆசிரியை அதிசயப்பட்டாள்.

    போட்டிகளில் பரிசுபெற்ற கதைகளைப் படித்தால் நீதிபதிகள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பது புரிந்துவிடும். கணக்கிலும் விஞ்ஞானத்திலும் இருப்பதுபோல் இதுவும் ஒருவித ஃபார்முலாதான்.

    செய்யும் தொழிலே தெய்வம் என்கிறோம். ஆனால், பிடித்துச் செய்யும் காரியத்திற்குத்தான் அது பொருந்தும். அந்நிலையில், ‘இதனால் எவ்வளவு பணம் கிடைக்கும்?’ என்ற யோசனை எழாது.

    பிடிக்காவிட்டாலும், செய்ய நேர்கிறதா?

    WHAT IS WORTH DOING IS WORTH DOING WELL.

    எதைச் செய்ய நேரிட்டாலும், முழுமையான கவனத்துடன், ஈடுபாட்டுடன் செய்யவேண்டும். பிறர் மெச்சுகிறார்களோ, இல்லையோ, திருப்தியாவது கிடைக்குமே!

    Share
  • பழகத் தெரிய வேணும் – 15

    பழகத் தெரிய வேணும் – 15

    நிர்மலா ராகவன்

    (சுயமரியாதையுடைய பெண்கள்)

    கணவனாலோ, பிறராலோ சிறுமைப்படுத்தப்பட்டால், ‘மரியாதை’ என்று அடங்கிப்போய், அதை ஏற்கமாட்டார்கள் சில பெண்கள். இவர்களுக்கு சுயமரியாதை முக்கியம்.

    இவர்களுக்கு புத்திசாலித்தனத்துடன் துணிச்சலும் உண்டு.

    கதை

    ‘பெண்களை அதிகம் படிக்க வைத்துவிட்டால், ஆண்களை மதிக்கமாட்டாள். அடங்கவேமாட்டாள்!’ என்று அச்சுறுத்தியவர்களை அலட்சியம் செய்யும் விவேகம் காயத்ரியின் பெற்றோருக்கு இருந்தது.

    சிறுவயதிலிருந்தே, ‘நீ தைரியசாலி. புத்திசாலி!’ என்று ஊக்கமளித்து அவளை வளர்த்தார்கள்.

    ‘எந்தக் காரியமாக இருந்தாலும், அதில் முழுக்கவனத்தையும் செலுத்து. அப்போதுதான் சிறப்பாகச் செய்து வெற்றி பெறமுடியும்,’ என்று தினமும் போதித்தார் தந்தை.

    பெற்றோர் தனக்கு நல்லதுதான் சொல்வார்கள் என்று நம்பி, அவர்கள் சொற்படி நடந்தாள். சிறு வெற்றிகள் கிடைக்க, தன்னம்பிக்கை வளர்ந்தது.

    வாழ்க்கையில் எத்தனை மாறுதல்கள் நிகழ்ந்தபோதும், யாருக்காகவும் காயத்ரி தன் ஆற்றலை விட்டுக்கொடுக்கவில்லை.

    அவளைப் பார்த்துப் பயந்த ஆண்கள் புகழ்ச்சியால் அவளைக் கவர முயற்சித்தார்கள் — அப்படியாவது அவளைத் தம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரலாம் என்ற எண்ணத்துடன்.

    இப்படி வளர்க்கப்பட்ட ஒரு பெண்ணை எந்த ஆணும் வசப்படுத்தவோ, பலகீனப்படுத்தவோ முடியாது என்று அவர்களுக்குப் புரியாது நடந்ததால் அவமானத்திற்கு ஆளானார்கள்.

    பல ஆண்களுக்கு இன்றும் இது புரியாததால்தான் விவாகரத்து அதிகரிக்கிறது.

    அழகும் மகிழ்ச்சியும்

    ஒருசில பெண்கள் கவனமாக அலங்காரம் செய்துகொள்வார்கள். ‘மூக்கும் முழியுமாக இருக்கிறாள்!’ என்று பெண்களே பாராட்டும்வகையில் இருப்பார்கள். ஆனால், ‘அழகு’ என்று பிரமிக்கவைக்கும்படி இருக்கமாட்டார்கள்.

    இன்னொரு வகையினர் எளிமையான தோற்றத்துடன் இருந்தாலும், அவர்களை நாடத் தோன்றும். ஏனெனில், பிரச்னைகள் நிறைந்ததுதான் வாழ்க்கை என்று புரிந்து, தம் மகிழ்ச்சியை அறவே இழக்காமல் இருப்பவர்கள் அவர்கள்.

    இந்த உண்மையை உறுதி செய்கிறார் நடிகை AUDREY HEPBURN: “மகிழ்ச்சியாக இருக்கும் பெண்கள்தாம் அழகானவர்கள்”.

    பெற்றோரும், ஆசிரியரும், ‘இதுதான் நீ போகவேண்டிய பாதை’ என்று வற்புறுத்தினால், அதில் ஆர்வமே இல்லாதபோது எப்படி மகிழ்ச்சி ஏற்படும்?

    ‘காதல் திருமணம்கூட இரு வருடங்களுக்குப்பின் அலுப்பைத்தான் தருகிறது,’ என்று சலிப்புடன் ஒத்துக்கொண்டாள் ஆங்கிலேயப்பெண்ணான அலெக்ஸாண்டரா.

    கதை

    நன்கு படித்து, உத்தியோகத்திலும் அமர்ந்த ஜெயமலரை மணக்க அவள் அலுவலகத்திலிருந்த பலர் போட்டியிட்டனர்.

    அவள் தேர்ந்தெடுத்தது வேணுவை. ஏனெனில், அவன்தானே அவளை நிறையப் புகழ்ந்து, பரிசுப்பொருட்கள் வாங்கிக் கொடுத்து, அவளைத்தவிர தனக்கு வேறு எந்த சிந்தனையும் இல்லை என்பதுபோல் நடந்துகொண்டான்!

    அவள் கிடைத்ததும், ‘இனியும் அவளை மயக்க முயற்சிகள் செய்வானேன்!’ என்று எண்ணியதுபோல், நண்பர்களுடனேயே காலத்தைக் கழிக்க ஆரம்பித்தான் வேணு.

    புதிதாகக் கல்யாணமான பெண் கணவன் தன்னை தினந்தோறும் வெளியில் எங்காவது அழைத்துப் போகவேண்டும் என்று எதிர்பார்க்கிறாள். காதலித்தபோது அப்படித்தானே நடந்துகொண்டான்?

    ஆணுடைய எண்ணப்போக்கே வேறு. காதலியுடன் கொண்ட நெருக்கம் முன்பு அவனுக்குக் கிளர்ச்சியைக் கொடுத்திருக்கலாம். சற்று பழகியபின், அதிலுள்ள கவர்ச்சி, எதிர்பார்ப்பு, அலுத்துவிடுகிறது.

    இந்தக் குணம் பெண்களுக்குப் புரிவதில்லை.

    மனைவியின் ‘தொணதொணப்பு’ தாங்காது, முன்போல் நண்பர்களை நாடுகிறான். அவர்கள்தாம் தன்னைப் புரிந்துகொள்வார்கள் என்ற நம்பிக்கை பிறக்கிறது.

    பொதுவாக, வீட்டு வேலை, குழந்தைகள் இதெல்லாம் பெண்கள் வேலை என்று ஆண்கள் ஒதுங்கிவிடுகிறார்கள். மாற்றமில்லாமல் காலம் கழிக்க நேரிட்டால் எவருக்கும் அலுப்பு ஏற்பட, ஆத்திரம் எழாமல் என்ன செய்யும்!

    ‘எதற்கு வீண் சண்டை!’ என்று யோசித்து, வேறு உபாயங்களைக் கடைப்பிடிக்கலாமே!

    கதை

    ஒரு பெண் வேறொரு உபாயத்தைக் கைப்பிடித்தாள்.

    “இரண்டு நாட்கள் நான் செய்யும் வேலைகளையெல்லாம் நீங்கள் செய்யுங்கள். என் நிலை புரியும்,” என கணவரும் ஒப்புக்கொண்டார்.

    அந்த காலக்கெடு முடிந்ததும், “ஓயாத வீட்டு வேலை இவ்வளவு சலிப்பானதா! எனக்குத் தெரியாமல் போயிற்று!” என்று அயர்ந்தார்.

    அதன்பின், அவளுடைய வேலைகளில் பங்குகொண்டார். நிறையப் பேசும் தருணங்கள் வாய்த்தன.

    ஓயாத சண்டையா?

    “நான் அடிக்கடி எங்க வீட்டுத் தோட்டத்திலே புதிய பூஞ்செடிகள் வாங்கிவைப்பேன். எங்கம்மா, ‘தண்ணீர் விடாம எல்லாத்தையும் வாடவெச்சு, திரும்பவும் வேற வாங்குவே!’ன்னு கேலி செய்வாங்க,” என்று சிரித்தபடி ஒத்துக்கொண்டாள் என் தோழி ஒருத்தி.

    தகுந்த பராமரிப்பு இல்லாவிட்டால் இல்லற வாழ்க்கையும் இப்படித்தான் துவண்டுபோகிறது.

    தொற்றுநோய் பரவாதிருக்க வீட்டுக்குள்ளேயேதான் ‘அடைந்து கிடக்க’வேண்டும் என்ற தற்கால நிலையில், குடும்பச் சண்டைகள் அதிகரித்துவிட்டனவாம்.

    அதையொட்டி ஒரு துணுக்கு: எப்படி ஒரே வீட்டில் பேசாமல் இருப்பது என்று கற்றுக்கொடுக்க பதினேழு ஆண்டுகளுக்குமேல் ஒன்றாக இருக்கும் தம்பதிகள் தேவை!

    திருமணம் செய்துகொண்ட பின்னர் வாழ்க்கை முடிந்துவிடுவதில்லை. ஒரு செடிக்குத் தினமும் நீர் பாய்ச்சி கவனித்துக்கொள்வதுபோல், ஒவ்வொரு நாளும் இல்லற வாழ்க்கை தழைக்க ஏதாவது செய்யவேண்டும்.

    ஏன் கோபம் எப்போதும்?

    ‘எனக்குப் பொறுமையே கிடையாது!’ என்பாள் ஒரு தாய், தான் பெற்ற குழந்தைகளை திட்டுவதையும் அடிப்பதையும் நியாயப்படுத்துவதுபோல்.

    அவளுக்கு என்னென்னமோ ஆசைகள். ஆனால், அவைகளை நிறைவேற்றிக்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கவில்லை. பொய்த்துப்போன கனவுகள் எரிச்சலில் கொண்டுவிட்டன.

    ஒன்றை இழந்தால் வேறொன்று கிடைக்கலாம். கடந்ததையே எண்ணி வருந்தி, அந்த வருத்தத்தை ஆத்திரமாக மாற்றிக்கொள்வதால் யாருக்கு நிம்மதி?

    திருமணத்திற்குப்பின்

    பல பெண்கள் தாம் ரசித்து ஈடுபட்ட பொழுதுபோக்குகளை விட்டுவிடுகிறார்கள். ஆர்வக்குறைவால் அல்ல.

    ‘பாடுவதாக இருந்தால் தினமும் சாதகம் செய்ய வேண்டுமே!’

    ‘குழந்தைகள், வீட்டுவேலை! மற்றதற்கெல்லாம் எங்கே நேரம் கிடைக்கிறது!’

    ‘முன்பெல்லாம் நிறைய எழுதினேன். இப்போது கற்பனையே வரண்டுவிட்டது!’

    இப்படி ஏதேதோ காரணங்களைக் காட்டி சமாளித்தாலும், கணவரைவிட கூடுதலான வெற்றி பெற்றால் குடும்ப ஒற்றுமை குலைந்துவிடுமோ என்ற பயம் ஒரு முக்கிய காரணம்.

    ‘எடுத்த காரியத்தை எப்படி நல்லபடியாக செய்து முடிப்பது?’ என்ற தயக்கமும் எழக்கூடும்.

    தன் தவறு எங்கே என்று புரிந்தாலும் அதை மாற்றிக்கொள்ளத் துணிவு அவசியம். பயத்தையும், தயக்கத்தையும் மீறிச் செய்தால் வெற்றி கிடைக்கும்.

    பெரிதாக எதையும் சாதிக்க வேண்டும் என்பதில்லை. செய்வதைக் கருத்துடன் செய்தாலே மகிழ்ச்சி கிடைக்குமே!

    ஏதோ கொஞ்சம் சாதித்துவிட்டு, அதையே எண்ணிப் பெருமைப்பட்டுக் கொண்டிருப்பது எப்போதும் மகிழ்ச்சியைத் தருமா?

    துணிவிற்கும் தசைநார்களுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு என்கிறார்கள்.

    நம்பிக்கையை இழக்காது, துணிச்சலைப் பயன்படுத்திக்கொண்டே இருந்தால்தான் அது விருத்தியடையும்.

    அலட்சியமாக விட்டுவிட்டால், தசைநார்கள்போல் துணிச்சலும் வலுவிழந்துவிடும்.

    Share
  • பழகத் தெரிய வேணும் – 14

    பழகத் தெரிய வேணும் – 14

    நிர்மலா ராகவன்

     (பெண்ணுக்கு மரியாதை) 

    “பல ஆண்கள் பெண்களை மட்டமாக நடத்துகிறார்கள் என்று நீங்கள் எழுதுவதைப் பார்த்து எனக்கு ஆத்திரமாக இருக்கும். நீங்க எழுதறது உண்மைதான்னு இப்போ புரியுது. என் மகளை அவளுடைய கணவர் அப்படித்தான் நடத்துகிறார். வருத்தமா இருக்கு!” என்னைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு தெரிவித்தார் ஒரு பத்திரிகை ஆசிரியர்.

    ‘ஆண்தான் மேலானவன்’ என்பதுபோல், அவரே தன் மனைவியை அப்படி நடத்தியிருக்கக்கூடும். ஆனால், ‘மகள்’ என்று வரும்போது, ஆண்களின் பக்கம் சாயத் தோன்றவில்லை. மருமகன் மீதுதான் கோபம் எழுந்தது.

    தன்னை அவமரியாதையாக நடத்தும் கணவனை மகள் ஏன் எதிர்ப்பதில்லை என்ற குழப்பம் அவருக்கு. தாயைப் பார்த்தே வளர்ந்திருந்தால் மகள் வேறு எப்படி இருப்பாள்?

    மகனும் தந்தையைப்போலவே தன் மனைவியிடம் அலட்சியம் காட்டுவான். அந்த நடத்தை அவருக்குத் தப்பாகத் தோன்றாது.

    ஒரு முதியவர் கடிதம்வழி, மகிழ்ச்சியுடன் என்னிடம் தெரிவித்தார், ‘என் மனைவி என் மனம் கோணாது நடப்பவள். மிகவும் பொறுமைசாலி,’ என்று.

    பதிலுக்கு, ‘உங்கள் மனைவியின் மனதில் உண்மையான மகிழ்ச்சி இருக்கிறதா?’ என்று கேட்டிருந்தேன்.

    கணவனின் மகிழ்ச்சிக்காக பலவற்றை விட்டுக்கொடுக்கவேண்டும் என்று பழமையிலேயே ஊறிப்போன பெண்கள் எண்ணுகிறார்கள்.

    கதை

    அடிக்கடி, ‘நான் அம்மன் பக்தன்’ என்று பெருமையுடன் சொல்லிக்கொள்வார் சீலன். எல்லா பக்திப்பாடல்களும் அவருக்கு மனப்பாடம்.

    ஆனால், அவர் மனைவி விமலாவை நடத்துவதைப் பார்த்தால், அவளுக்கு எதுவுமே தெரியாது, அடிமுட்டாள் என்பதுபோல் இருக்கும்.

    சீலனுடைய மனதில் ஒரு வக்கிரம். மனைவியைப்போல் இல்லாத பெண்களைக் கண்டால் அலாதி மோகம். அவர்கள் நட்பைப் பெற பல முயற்சிகள் எடுப்பார்.

    “அறிவாளிகளான பெண்களுடன் நட்பு வைத்துக்கொள்ள எனக்குப் பிடிக்கிறது. சும்மா பேச மட்டும்தான்னு சொல்வார்,” என்று அப்பாவித்தனமாக விமலா கூறும்போது, கேட்பவர்களுக்கு அவள்மேல் பரிதாபம்தான் எழும்.

    சீலனுக்குப் புரியாதது: அவர் எதிர்பார்த்தபடி, நடத்தியபடிதான் மனைவி ஆகியிருக்கிறாள். அவளை அவர் தோழமையுடன் நடத்தி, அவளுக்குத் தெரியாததைப் பொறுமையாகச் சொல்லிக்கொடுத்திருந்தால் அவளுக்கு அவர்மேல் அன்பு ஏற்பட்டிருக்கும். அவர் எப்படி நடத்தினாலும், ‘தலைவிதி’ என்று விரக்தியுடன் அதைப் பொறுத்துப் போயிருக்கமாட்டாள்.

    புதிய விஷயங்களைக் கற்பதில் அவள் ஆர்வம் காட்டாவிட்டாலும், வேறு எதிலாவது சிறந்திருக்கமாட்டாளா! அதைப் பாராட்டியிருக்கலாமே!

    ஏன் இந்த அதிகாரம்?

    மனைவி ஒரு போகப்பொருள் மட்டும்தான் என்று நம்புகிறவன் அவளிடம் அதிகாரம் செலுத்துகிறான். அதனாலேயே அவளுடைய நட்பை இழக்கிறான். அதை வெளியே, நண்பர்களிடமோ, பிற பெண்களிடமோ தேடுகிறான்.

    பெண்ணுக்கான கட்டுப்பாடுகள்

    அவள் உணர்ச்சிப்பெருக்கில்லாது, ஆணைப்போல் யோசிக்கவேண்டும்.

    ஓயாது உழைக்கவேண்டும். ஆனால், இளமையும் மாறாது இருக்கவேண்டும்.

    மொத்தத்தில், கணவன் பிற ஆண்களிடம் பெருமையாகப் பேசிக்கொள்ள ஏற்ற வகையில் இருக்கவேண்டும்.

    நடக்கிற காரியமா?

    ஒரு பெண்ணை அவளது கணவன் ஏதோ செல்லப்பிராணி என்பதுபோல் நடத்தி, அதற்கு அவள் பணிந்தும் போனால், அது அவனுக்குக் காட்டும் மரியாதையாலோ, அன்பினாலோ இல்லை. அவள் வளர்க்கப்பட்ட விதத்தில் எங்கோ கோளாறு நேர்ந்திருக்கிறது என்றே தோன்றுகிறது.

    கதை

    சீதாபதி மெத்தப் படித்தவன். பத்து வயதுக்குட்பட்ட மூன்று குழந்தைகளின் தந்தை. பெண்பித்தன்.

    திருமணமாகாத இளம்பெண்களைப் பார்த்தால், உரிமையுடன் அவர்கள் தோளில் கைபோட்டு, “என் மனைவி இங்கிதம் தெரிந்தவள்,” என்று ஆரம்பிப்பான்.

    அவனில்லாதபோது, அவளும், ‘ஆம்படையானுடைய சந்தோஷத்தைவிட நமக்கு வேற என்னடி வேணும்?” என்பாள்.

    ‘எனக்கு நிறையப் பெண்கள் கிடைப்பார்கள்!’ என்று பெருமை பேசுகிறவன் தனக்கு ஆண்மை அதிகம் என்று எண்ணுகிறான். உண்மையில், அவனிடம் ஏதோ குறை இருப்பதால்தான் பெண்களை மயக்க முயற்சிக்கிறான். கலாசாரமும் துணை புரிகிறது.

    அண்மையில் படித்தது

    மெடகாஸ்கர் (MADAGASCAR) ஆப்பிரிகாவின் கிழக்குப் பகுதியில் இருக்கும் ஒரு தீவு. மிக ஏழ்மையான நாடு.

    ஆண்கள் பெண்களை வதை செய்வது சர்வசாதாரணம். தமக்கு இழைக்கப்படும் அநீதிகளை ஏற்றே பழக்கப்பட்டதால், கணவன் அடித்து, உதைக்காவிட்டால் அவனுக்குத் தன்மீதுள்ள அன்பு குறைந்துவிட்டது என்று அத்தீவிலுள்ள பெண்கள் நினைக்கிறார்கள்!

    பெண்களை எவ்விதமாவது வதை செய்வது சட்ட விரோதம் என்று இப்போது விதிக்கப்பட்டிருந்தாலும், அந்நாட்டில் எந்தப் பெண்ணும் வலிய வந்து புகார் கொடுப்பதில்லை. ஒரு பெண்ணுக்கு லஞ்சம் கொடுத்துத்தான் அவளைப் புகார் அளிக்கச் செய்ய முடியுமாம்!

    ஏழ்மை, அதனால் எழும் வருத்தம் அல்லது அசௌகரியம், கலாசாரம் எல்லாம் ஆண்கள் தான்தோன்றித்தனமாக நடக்க வைக்கிறது. பெண்களையும் இவ்வாறு அடிமை வாழ்க்கையை ஏற்கச் செய்திருக்கிறது.

    கதை

    நாற்பது வயதுவரை, ‘எனக்கும் கல்யாணம் என்று ஒன்று ஆகுமா!’ என்று ஏங்கிய மலேசியப் பெண் கலாவதி.

    ஒருவழியாக, திருமணம் ஆனதும், ஒவ்வொரு இரவிலும் கணவன் தன்னை நாடுவது அவளுக்குப் பெருமையைக் கொடுத்தது. அதற்குப்பின், அவளைக் கட்டிலிலிருந்து கீழே தள்ளி, அடித்து உதைப்பான். அதனால் என்ன மோசம்!

    வதை அதிகரித்து, சமூகநல அதிகாரிகளின் கவனத்திற்கு கலாவதி கொண்டுவரப்பட்டாள்.

    பரிதாபத்துக்குரிய இப்பெண்ணுக்குப் புத்தி சொல்வதாக எண்ணி, “ஐயோ! இந்தமாதிரி மனிதனுடன் ஏன் சேர்ந்து இருக்கிறாய்?” என்று நான் அலறினேன்.

    “அவருக்கு இல்லாத உரிமையா!”என்று கேட்டவளின் குரலில் கோபம்.

    ஏன் இந்த அவல நிலை?

    பல இந்தியக் குடும்பங்களில், ‘என்ன இருந்தாலும், நீ ஒரு பெண்!’ என்று சொல்லியே பெண்குழந்தைகளை வளர்க்கிறார்கள். அவர்களுக்குள் ஏதோ ஏமாற்றம், வெறுமை. அந்தக் குழப்பம் எதனால் என்று புரிவதுமில்லை.

    ‘ஆண்’ என்றால் உயர்ந்த மனிதன் என்ற எண்ணம் பதிந்துவிடுவதால் அவனை அண்டி வாழ்ந்தால்தான் தனக்கு மதிப்பு என்று தோன்றிவிடுகிறது.

    தம்மைப்போல் இல்லாத பிற பெண்களைக் கண்டால் அவர்களுக்கு கோபம். பொறாமையும் எழலாம். ஆனால் மாறவும் பயம். அப்போது யார் பக்கபலமாக இருப்பார்கள்?

    (தொடரும்)

    Share
  • பழகத் தெரிய வேணும் – 13

    பழகத் தெரிய வேணும் – 13

    நிர்மலா ராகவன்

     (குடும்பத்தினருடன் நெருக்கமா!)

    நூறு வருடங்களுக்கு ஒருமுறை வரும் பேரிடர்கள் நாம் மறந்துவிட்ட முக்கியமான ஒன்றை உணர்த்துகின்றன.

    சொத்து, சுகம், தொழில் என்று எவ்வளவுதான் இருந்தாலும், ஆபத்து சமயத்தில் உதவவோ, அனுசரணையாக இருக்கவோ குடும்பத்தினர், நெருக்கமான உறவினர்கள்போல் எவரும் கிடையாது.

    தற்போது, உலகிலுள்ள பல நாடுகளிலும் தொற்றுநோய் பரவாமலிருக்க மனிதர்கள் வீட்டுக்குள்ளேயே இருக்கவேண்டிய நிலை.

    ‘எப்போதும் நம்முடன் இருப்பவர்களேதாமே!’ என்ற அலட்சியத்துடன் பலர் தம் குடும்பத்தினரைக் கவனிப்பதோ, அவர்களுடன் அதிகம் பேசுவதோ குறைந்துவிட்டது. இந்த நிலையில் அவர்களுடன் மட்டுமே நாள் முழுவதும் புழங்கவேண்டும் என்ற கட்டுப்பாடு பலருக்குத் தண்டனை போலத்தான்.

    ‘என் வீட்டில் நிம்மதியே கிடையாது!’ என்பவர்கள் அன்பு, மகிழ்ச்சி இவற்றால் கிடைக்கக்கூடிய நிம்மதி நாம் பிறருக்கு அளிப்பதைப் பொருத்திருக்கிறது என்பதை உணர்வதில்லை.

    குடும்பத்தில் சிறு சிறு சச்சரவுகள் ஏற்படுவது இயற்கை. குடும்பத் தலைவரோ, தலைவியோ தான் சொல்வதையே எல்லாரும் கடைப்பிடிக்கவேண்டும் என்று எதிர்பார்த்தால் யாருக்குத்தான் நிம்மதி கிடைக்கும்?

    ஹிட்லரைப் போன்றவர்களைப் பற்றிப் படித்திருக்கிறோம். குடும்பத்திலும் இப்படிப்பட்ட சர்வாதிகாரிகள் இருக்கிறார்கள். எல்லா நாடுகளிலும், இனங்களிலும்.

    ஒரு சூழ்நிலையிலிருந்து வித்தியாசமான ஒன்றிற்கு மாறுகையில், ‘என் பழக்க வழக்கங்கள்தாம் சிறந்தவை!’ என்று வலுக்கட்டாயமாக அவற்றைத் தம் சந்ததியினரிடம் புகுத்துவது பலரது வழக்கம். இதனால் பாதிப்பு என்னவோ இளைய தலைமுறையினருக்குத்தான்.

    கதை

    எங்கள் குடும்ப நண்பர் சண்முகம் தன் தங்கைக்கு மனநிலை சரியாக இல்லை என்று வருத்தத்துடன் தெரிவித்தார். அதில் அலுப்பும் தென்பட்டது. செலவாகிறதே என்று இல்லை.

    “உண்மையைச் சொல்கிறேன். எங்கப்பாதான் இதற்குக் காரணம். அவர் தோட்டப்புறத்திலிருந்து நகரத்துக்கு வந்தவர். ஆனால், இன்றும், அவர் சிறுவயதில் கடைப்பிடித்த பழக்கவழக்கங்களை நாங்களும் பின்பற்ற வேண்டும் என்று எதிர்பார்த்தால் எப்படி!” என்று புலம்பினார் என்னிடம்.

    உத்தியோகம் புருஷ லட்சணம் என்று சொல்லி வைத்திருக்கிறார்கள்.

    அன்றாடம் செய்வதற்கு உருப்படியாக எந்த வேலையும் இல்லாவிட்டால் மனம் எந்த நிலைக்கு ஆளாகும்? இதோ ஒரு கதை.

    தந்தைதான் பெரும்பொருள் சேர்த்து வைத்திருக்கிறாரே, உத்தியோகத்திற்கு வேறு போய்ச் சம்பாதிக்க வேண்டுமா என்று வீட்டிலேயே இருந்து காலத்தைக் கழிக்க எண்ணினார் வெங்கட்ராமன்.

    நண்பர்களிடம் இனிமையாகப் பேசுவார். வீட்டுக்கு வெளியில் பலருக்கும் இவரைப் பிடித்திருந்தது.

    வீட்டிலோ!

    ‘தனக்குத்தான் எல்லாம் தெரியும்,’ என்ற மிதப்புடன், மகன் சங்கர் செய்யவேண்டிய ஒவ்வொரு காரியத்தையும் விளக்குவார். தந்தையே செய்து காட்டியிருந்தால், தானே அதைப்போல் செய்திருப்பான்.

    அவன் குடும்பத்துக்கு மூத்த மகன் ஆதலால் இயற்கையிலேயே பொறுப்புணர்வு மிக்கவன்.

    மகனுக்குச் சுயபுத்தியே கிடையாது என்று நிச்சயித்தவர்போல் அவர் நடந்து கொண்டது,  சங்கரைத் தன் திறமையையே சந்தேகிக்க வைத்தது.

    அவன் அடைந்த பலவீனத்தால் அவருடைய அதிகாரம் அதிகரித்தது. எப்படியெல்லாம் கையாண்டால் அவனை அதிகமாகத் துன்புறுத்தலாம், அவனுடைய பயம் அதிகரிக்கும் என்று யோசித்தவர்போல், வார்த்தைகளை வீசுவார். ‘நீ செய்து கிழித்தாய்!’ என்ற கேலி, ‘நான்தான் சொன்னேனே, உன்னால் முடியாதென்று!’ என்ற ஏளனம்.

    அவரையே தன் முன்மாதிரி என்று எண்ணியதால், அவர் சொல்வதில் உண்மை இருக்கும் என்று நம்பும் நிலைக்குத் தள்ளப்பட்டான் சங்கர். தந்தையை எதிர்த்து நிற்க முடியாத நிலை.

    இருபத்தைந்து வயதானபோதும், அவனைச் சிறுபிள்ளைபோலவே நடத்தினார். வேலை முடிந்து, அவன் நேராக வீடு திரும்பவேண்டும். சற்றுத் தாமதமானால், நெடுநேரம் வசவு தொடரும்.

    வெங்கட்ராமனைப்போன்ற சர்வாதிகாரிகள் மாற மாட்டார்கள். தாம் செய்வதுதான் சரியென்று வாதாடுவார்கள்.

    ‘என்மேல் எந்தத் தவறும் இல்லை,’ என்று புரிந்து, அவர்கள் கையில் சிக்கிக்கொண்ட அபாக்கியவான்கள் தாமே விலகினால்தான் உண்டு. ஆனாலும் அது எளிதன்று. துணிச்சல் அறவே பறிக்கப்பட்ட நிலையில், வாழ்நாள் முழுவதும் பிறருடன் பழகுவதில் கலக்கம்தான் விளையும்.

    சரித்திர சர்வாதிகாரிகளின் பரம்பரை

    ஹிட்லருக்குக் குழந்தைகள் கிடையாது. அவருடைய தந்தையின் முதல் மனைவிமூலம் பிறந்த ஐந்து சகோதர சகோதரிகளும் தமது பரம்பரை தொடரக்கூடாது, ஹிட்லரின் மரபு அவர்களிடம் இருந்துவிடக்கூடும் என்ற பயத்தில் அதை ஒழிக்க எண்ணி, குழந்தைகளே வேண்டாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டார்களாம்.

    கம்போடியாவின் KILLING FIELDS பற்றிக் கேள்விப்படிருப்பீர்கள். 20,000 பேர் சித்ரவதை செய்யப்பட்டு, தூக்கிலிடப்பட்டனர். சுற்றுலாப்பயணிகளின் பார்வைக்காக அவர்களுடைய மண்டையோடுகளைக் குவித்து வைத்திருப்பதை நேரில் பார்த்தபோது, எனக்கு அளவில்லாக் கலக்கம் ஏற்பட்டது. நாற்பத்து ஐந்து ஆண்டுகளுக்குமுன் நடந்த படுகொலையாக இருந்தால் என்ன! ஒரு மனிதனின் ஈவிரக்கமற்ற செயலால் விளைந்த பாதிப்பு இன்றும் அதிர வைக்கிறது.

    இந்த வதைக்குக் காரணமாக இருந்தவர் POL POT. இப்போது, இவருடைய மகள் நெல் பயிரிடும் விவசாயி.

    ருஷ்யாவின் ஸ்டாலின், இத்தாலியின் முஸ்ஸோலினி ஆகிய கொடுமைக்கார சர்வாதிகாரிகளின் வழித்தோன்றல்கள் கலைத்துறையில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

    நாடுகளை விடுங்கள்! குடும்பத்தில் ஏன் ஒருவர் சர்வாதிகாரியாகச் செயல்படுகிறார்?

    கதை1

    ஒருவரோடு இணைந்து தொழிலில் இறங்கியவர் முருகேசன். அந்த ‘நண்பர்’ பணத்தைச் சுருட்டிக்கொண்டு போனதால், முருகேசனுக்குப் பெரும் நஷ்டம். பணப்பிரச்னை மட்டுமின்றி, குடும்பத்தினர்முன் ஏமாளியாக நிற்க வேண்டியிருக்கிறதே என்ற அவமானம்.

    அதை மறைக்க, அவர்களை முந்திக்கொண்டார். உத்தியோகத்தில் வெற்றிநடை போட்ட மனைவியை ‘முட்டாள்’ என்று பழித்தார். அப்படியும் மனம் ஆறாது, தன் மகளையும் ஓயாது அதிகாரம் செய்தார்.

    அவரது மனநிலை புரிந்து மனைவி அடங்கிப்போனாள். மகளுக்கோ தந்தைமேல் வெறுப்புத்தான் ஏற்பட்டது. பலர் முன்னிலையில் மரியாதை இல்லாது அவரிடம் பேச முற்பட்டாள்.

    பேச்சுச் சுதந்திரம், கருத்துச் சுதந்திரம் எதுவுமின்றி அடிமைபோல் வாழ நேரிட்டால், தம்மை அவ்வாறு நடத்தும் குடும்பத் தலைவர்மீது ஆத்திரம் வராமல் என்ன செய்யும்?

    தன் பொறுப்பில் இருப்பவர்களைப் பாதுகாப்பதும், அவர்களுக்காக உழைப்பதும் ஒரு குடும்பத் தலைவரின் கடமை. அது புரியாது, ‘என்னை யாரால் எதிர்க்க முடியும்!’ என்ற திமிருடன் நடந்தால், பாதிக்கப்பட்டவர் மட்டுமின்றி, அக்குடும்பத்திலுள்ள அனைவருமே பாதிக்கப்படுவார்கள்.

    கதை 2

    ஒரு தெருவிபத்தில் மாட்டிக்கொண்ட கந்தசாமிக்குக் கைவசம் இருந்த தொழில் போயிற்று. சுயவருமானமின்றி, மனைவியின் உழைப்பில் காலம் தள்ளவேண்டிய நிலை. மனம் நொந்து, தன் குடும்பத்தினரிடம் அதிகாரம் செலுத்த ஆரம்பித்தார். தன் மனம் நொந்ததுபோல், பிறரும் அவதிப்படவேண்டும் என்ற சிறுபிள்ளைத்தனமான வீம்பின் விளைவு அது.

    தனக்கு ஒப்பாத காரியத்தை யாரும் செய்துவிடக்கூடாது என்று உறுதியாக இருந்தார் கந்தசாமி. எல்லாருக்கும் நிம்மதி பறிபோயிற்று.

    முருகேசன், கந்தசாமி இருவருமே தம்மைப் பலவீனர்களாக உணர்ந்தவர்கள். அதை மறைக்க, அதிகாரத்தை நாடினார்கள்.

    வாழ்க்கையில் சறுக்குவது எவருக்கும் நடக்கக்கூடியதுதான். எப்படி மீண்டும் தலை நிமிரலாம் என்று யோசித்தால் நிலைமையை ஓரளவு சமாளிக்கத் தெம்பு வரும்.

    கதை

    மைமூனாவுக்கு ஐம்பது வயது இருக்கும். பிரசவமான பெண்களுக்கும், பிறருக்கும் உடம்பு பிடித்துவிட்டு, அதில் கிடைக்கும் சொற்ப சம்பாத்தியத்தில் உடலை வளர்ப்பவள்.

    “என் மகனுக்கு ஆண்குறி வளைந்திருக்கும். மருத்துவர் அறுவைச் சிகிச்சையால் அதை நேராக்கிவிட முடியும் என்றார். நான், ‘வேண்டாம்’ என்றுவிட்டேன். இவனும் எங்காவது போய்விட்டால், கடைசிக் காலத்தில் என்னை யார் வைத்துக் காப்பாற்றுவார்கள்?” என்று அவள் சொல்லிக்கொண்டே போனபோது, எனக்கு அதிர்ச்சிதான் ஏற்பட்டது. கணவன் தன்னை நிராதரவாக விட்டுப்போனதற்கு, தன்னையும் அறியாது மகனைத் தண்டிக்கிறாள்!

    தான் எவ்வளவு கஷ்டப்பட்டாலும், பிள்ளைகளுக்காவது நல்ல வாழ்க்கை அமையவேண்டும் என்று பொறுமை காத்து, அன்புடன் அவர்களை வளர்த்தால், அந்த அன்பைத் திருப்பிக் கொடுக்க மாட்டார்களா!

    ‘பலர் அப்படி நடப்பதில்லையே!’ என்கிறீர்களா?

    எது முக்கியம் என்பதை உணர்த்தவே சக குடும்பத்தினருடன் வீட்டைவிட்டு நகராது இருக்க மகுடத் தொற்றி வந்திருக்கிறதோ?

    அதிகாரப்போக்கு, அல்லது எதற்கெடுத்தாலும் சண்டை பிடிப்பது என்று இருந்தால், வாழ்க்கை நரகம்தான்.

    எல்லாரும் ஒரேமாதிரி சிந்திக்க வேண்டியதோ, நடக்க வேண்டியதோ இல்லை என்று உணர்ந்து நடந்தால் எவரது சுதந்திரமும் பறிக்கப்படுவதில்லை. ஒருவருடைய ஆற்றலும் முழுமையாக வெளிப்படும்.

    சில குடும்பங்களில் ஒவ்வொருவருமே சிறந்து விளங்குவதன் ரகசியம் இதுதான்.

    Share
  • பழகத் தெரிய வேணும் – 12

    பழகத் தெரிய வேணும் – 12

    நிர்மலா ராகவன்

     (குடும்பச் சுற்றுலா)

    “அடுத்தமுறை, உலகத்தைச் சுற்றிப் பார்க்கப் போகும்போது, என்னையும் அழைத்துப் போகிறாயா?” கேட்டது என் எட்டு வயதாகியிருந்த பேரன். நான் எங்காவது அயல்நாடு போய்விட்டு, கதைகதையாகச் சொல்வதைக் கேட்டு, அவனுக்கும் ஆர்வம் பிறந்திருந்தது.

    அப்படி என்ன கதை?

    தற்போது கிழக்கு மலேசியா என்று அழைக்கப்படும் போர்னியோ காட்டுக்கு என் மகளுடன் சென்றிருந்தேன்.

    காட்டில் ஆங்காங்கு சிறு குடில்கள். ஜன்னலோரமாக வைத்திருக்கும் வாழைப்பழத்தை வெளியிலிருந்து உரிமையுடன் எடுத்துச் சாப்பிடும் குரங்குகள். குடிலுக்கு வெளியே இருந்த மரத்தில் பின்னிப் பிணைந்த நாகம். இவையெல்லாம் நகர்ப்புறத்தில் காணக் கிடைக்காத அனுபவங்கள்.

    ‘இங்கு குழாய்த்தண்ணீர் சிவப்பாக இருக்கும். மரங்களின் வேரால் அப்படி ஆகிறது. ஆனால், சுத்தமான நீர்தான்,’ என்று முதலிலேயே எச்சரிக்கை விடுத்திருந்தார்கள்.

    குளியலறைக்குப் போனவள், அங்கு ஒரு தவளை இருப்பதைக் கண்டு, வெளியே ஓடி வந்தேன்.

    ‘வேண்டுமென்றுதான் ஒவ்வொரு குளியலறையிலும் ஒன்றை விட்டிருக்கிறோம். அப்போதுதான் கொசுத்தொல்லை இருக்காது!’ என்ற விளக்கம் கிடைத்தது.

    ‘தவளையை மிதித்துத் தொலைக்கப் போகிறோமே!’ என்று பயந்தபடி குளிக்க வேண்டியிருந்தது.

    JUNGLE TREKKING என்று காட்டு வழியில் நடப்பதற்குப் புறப்பட்டேன். அதுதான் முதன்முறை. என்ன எதிர்பார்ப்பது என்று புரியாததால் உற்சாகமாக இருந்தது.

    என்னைப்போன்ற அனுபவமற்றவர்களுக்கு என்று ஒன்று, இரண்டு என்று பாதைகளின் எண்களைக் குறித்திருந்தார்கள். முதல் பாதையில் ஆரம்பித்தேன். பாதி வழிக்குள் எப்படியோ, நான்காவது பாதைக்கு மாற்றி அழைத்துப் போய்விட்டாள் மகள். மொத்தமே ஐந்துதான்.

    இந்தக் கடினமான பாதையில் ஒரு மரக்கிளையிலிருந்து அடுத்த நிலைக்குக் குதிக்க வேண்டும். இடையே ஒரு மீட்டர்!

    எனக்கோ, அறுபது வயது. அப்படியே மலைத்துப்போய் உட்கார்ந்திருந்தேன்.

    “’யோசிச்சுப் பாரும்மா. இந்த நிமிடம் போர்னியோ காட்டில் மரங்களின் மீதும், மலைப்பாதைகளின்மேலும் ஏறி, இறங்கும் இந்தியப்பாட்டி நீ ஒருத்தியாகத்தான் இருப்பாய்!”

    “பயமாக இருந்தாலும், அக்காரியத்தைச் செய்துவிட்டால், பயம் போய்விடும்,” என்றெல்லாம் பலவாறாக மகள் சமாதானப்படுத்த, நீண்ட மூச்சை இழுத்துப் பிடித்துக்கொண்டு குதித்தேன்.

    என்னைத் தனியாகத் திரும்பிப்போகச் சொல்லிவிட்டு, என் மகள் மீண்டும் ஏறினாள்.

    நான் போகும் வழியில் ஒரு PROBOSCIS குரங்கு உட்கார்ந்திருந்தது. பெரிய உருவம். தும்பிக்கைபோல் ஒன்று. நட்டநடுவிலா இப்படி உட்கார்ந்திருக்கும்!

    இம்மாதிரி தருணங்களில்தான் பக்தி அதிகரித்துவிடுகிறது.

    நான் அதற்கு மிக அருகில் நடந்துபோனேன். அது கவனிக்கவேயில்லை. சில சமயங்களில் நாம் அடையும் அச்சம் அனாவசியம் என்று புரிந்தது.

    அடுத்த சில மணி நேரம், நாற்காலியில் உட்கார்ந்திருந்த நிலையிலும் என் கால்கள் தாமாக ஆடியபடி இருந்தன.

    ‘நமக்கு ரொம்பத்தான் வயதாகிவிட்டது போலிருக்கிறதே!’ என்று எழுந்த கவலை அதேபோல் பக்கவாட்டில் கால்கள் ஆட நடந்த இரு இளம்பெண்களைப் பார்த்ததும் சிரிப்பாக மாறியது.

    முன்பின் பழக்கமில்லாமல் ஒரு காரியத்தில் இறங்கினால் எதை எதையோ சந்திக்க வேண்டியிருக்கும்.

    நேபாளத்தில்

    காட்மாண்டுவின் தென்மேற்குப் பகுதியில் இருந்த சிட்வான் (CHITWAN) என்ற இடத்திற்குப் போனோம். அக்காட்டில் யானைகளை வளர்க்கிறார்கள்.

    ஒரு யானைமேல் கால்களை இரு பக்கங்களிலும் தொங்கவிட்டு அமர்ந்தபடி காட்டினூடே பயணம் செய்தது மறக்க முடியாத அனுபவம்.

    அவ்வப்போது, ‘எல்லாரும் முன்னால் நகருங்கள்,’ என்று அதன்மேல் அமர்ந்திருந்த நால்வரிடம் உத்தரவு பிறப்பிப்பார் யானைப்பாகன். அடுத்து, யானை ஒரு மேட்டிலிருந்து குதித்து, ஆற்றுக்குள் நடக்கும். பயமும் மகிழ்ச்சியும் போட்டி போட்டுக்கொண்டு எழுந்தன.

    அங்கு விதவிதமான பறவைகள், அசையாது, இறந்ததுபோல் கிடந்த முதலைகள்.

    வழியில் ஒரு குட்டி யானை அம்மாவின் அடியிலிருந்த நிழலில் படுத்து சுகமாகத் தூங்கிக்கொண்டிருந்தது. சற்று வளர்ந்தபின்னர், அதையும் பழக்குவார்கள் என்று கேட்டபோது வருத்தமாக இருந்தது.

    இன்னொரு குட்டி அதன் ஆகாரமான தழைகளை மணலில் புரட்டி, அதைத் தன் தலைமேல் தட்டிக்கொண்டது. தன் தாய் செய்வதைப் பார்த்துக் கற்றுக்கொண்டிருக்கும்.

    அடுத்து, வாயில் போட்டுக்கொள்ள வேண்டும் என்பது புரியாது, மீண்டும் மணலில் புரட்டி எடுத்து, தலையில் தட்டி, என்று திரும்பத் திரும்ப அதே காரியத்தைச் செய்தது எங்களை பரிதாபப்படவும், சிரிக்கவும் வைத்தது.

    நீண்ட யானைச் சவாரிக்குப்பின் இறங்கவே சிரமப்பட்டேன். காலில் தசைநார் கிழிந்துபோக, ஆறுமாத காலம் நொண்டியபடிதான் நடக்க முடிந்தது.

    ‘செலவு, நோய்நொடி எல்லாவற்றையும் தவிர்க்க இருக்கும் இடத்திலேயே சௌக்கியமாக இருக்கலாமே!’ என்று பார்த்தால் முடியுமா? வீட்டில் செய்த காரியத்தையே செய்துகொண்டிருப்பது சலிப்பைத்தான் தரும்.

    முன்னேற்பாடாக, தேவைப்படும் ஆடைகளையோ, மருந்துகளையோ எடுத்துக்கொண்டு போகவேண்டியதுதான்.

    (நீண்ட பயணத்திற்கு உலர்ந்த திராட்சையை அவ்வப்போது மென்றால், சோர்வு ஏற்படுவதில்லை. சிசுக்களை விமானத்தில் அழைத்துச் செல்லும்போது அவர்கள் காதில் பஞ்சை அடைத்தால், ஓயாமல் கதறி அழமாட்டார்கள்).

    உணவு, உறக்கம்

    என் ‘சாதனை’களைக் கேட்ட பின்னர், தானும் இம்மாதிரியான சாகசங்களை எதிர்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது என் பேரனுக்கு.

    எனக்குத் தயக்கமாக இருந்தது.

    “நீ சாப்பிடப் படுத்துவாயே! வெளியில் என்ன கிடைக்கிறதோ, அதைத்தான் சாப்பிட வேண்டியிருக்கும்”.

    மறுநாளிலிருந்து வீட்டில் என்ன சமைக்கிறோமோ, அவைகளையெல்லாம் ‘பிடிக்காது, பழக்கமில்லை,’ என்றெல்லாம் வழக்கம்போல் ஒதுக்காது, மிளகாய் வற்றல், கறிவேப்பிலையைக்கூடச் சாப்பிட ஆரம்பித்தான்!

    நீண்ட பயணத்தின்போது தூங்கினால்தான் இறங்கியபின்னர் உற்சாகத்துடன் சுற்றிப்பார்க்க முடியும். ஓயாமல் பேசிக்கொண்டோ, விளையாடிக்கொண்டோ சென்றால், ஊரைச் சுற்றிப் பார்க்கும்போது உடல் களைத்து, எதையும் சரியாகப் புரிந்துகொள்ள இயலாது.

    குழந்தைகளுக்கு லஞ்சம்

    பல மணி நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து பயணம் செய்ய நேரிட்டால், சிறுவர்களுக்குப் பொறுமை மீற, நமக்கு அவர்களை சகிக்க முடியாது போய்விடும்.

    “பேசாம இருந்தா, அடுத்த தடவை கார் நிக்கறபோது, ஒனக்கு ரெண்டு ஐஸ்க்ரீம் வாங்கித் தரேன்,” என்று ஆசை காட்டுவேன்.

    சொன்ன சொல்லைக் காப்பாற்ற வேண்டும். உண்மை பேசும் குணமும் தானே வரும்.

    “ஒனக்கு மட்டும்தான் ரெண்டு!” என்று, அவன் என்னவோ மிக நல்ல குழந்தை என்பதுபோல் சொல்லிக்காட்ட, அவனுக்குப் பெருமையாகிவிடும். பயணம் தொடரும்போது, முடிந்தவரை தொந்தரவு கொடுக்காது இருப்பான்.

    குழந்தைகளுடன் சுற்றுலா போவதால் நன்மை அவர்களுக்கு மட்டுமல்ல.

    ‘வெளியூருக்குப் போனா, மத்தியானம் தூங்க வேண்டாம்னு அம்மா சொல்லிட்டா!’ என்று நான்கு வயதில் என் மகள் குதூகலித்தது எனக்கு இன்னும் நினைவிருக்கிறது.

    அறிவு முதிர்ச்சி

    புதிய இடங்களில் பழக்கமில்லாத மொழி, கலாசாரத்தைப்பற்றி அறிவது அறிவு முதிர்ச்சியை அளிக்கிறது. அதிகாரம் செய்வதைவிட மரியாதையாகப் பிறரை நடத்துவது நல்ல பலனை அளிக்கும் என்று புரிந்துபோகிறது. நம்மிடமிருந்து மாறுபட்ட எவரையும் ஏற்கும் குணம் வருகிறது.

    வீடு திரும்பியபின், எந்த வயதினரும் எப்போதும் செய்துவந்த காரியங்களைச் செய்ய உற்சாகம் காட்டுவார்கள்.

    காலப்போக்கில், பெற்றோரைவிட்டு வெகுதொலைவு சென்றாலும், சிறுவயதில் குடும்பத்துடன் கழித்த சில தருணங்கள் நினைவில் நிலைத்து, மகிழ்ச்சியைத் தரும்.

    அவை வாழ்க்கையில் ஏற்படும் இடர்களால் ஒரேயடியாக இடிந்து போய்விடாது நம்மைக் காக்கும்.

    Share