நிர்மலா ராகவன்

(நல்லதையே நினைக்கலாமே!)

‘நான் சரியாகவே படிக்கவில்லை. பரீட்சையில் பாஸாகப் போவதில்லை,’ என்று சொன்னால், தேவதைகள் ‘ததாஸ்து!’ என்று வாழ்த்தி, அது பலிக்கும்படிச் செய்துவிடுமாம். அதனால் என்ன பேசுவது என்பதில் கவனமாக இருக்கவேண்டும்.

நம் எண்ணம்போல் எதுவும் நடக்கும் என்றால், நல்லதையே நினைப்போமே! மனமும் அமைதியாக இருக்கும்.

ஆனால், எப்போதுமே மகிழ்ச்சியாகவோ அமைதியாகவோ காணப்பட வேண்டும் என்பதும் நடக்கிற காரியமல்ல. அவ்வப்போது கோபம், வருத்தம், ஏமாற்றம் எல்லாம் எழத்தான் செய்யும். ஆனால், இந்த உணர்ச்சிகள் ஒருவரை எப்போதுமே அலைக்கழித்துக் கொண்டிருப்பதுதான் தவறு.

கதை

ஓய்வுபெற்ற ஒருவர், “போன மாதம் விளக்குக்காசுக்கான ரசீது முதலிலேயே வந்துவிட்டதே! இந்த மாதம் இன்னும் வரவில்லையே! மின்சாரத்தை வெட்டி விடப்போகிறான்!” என்று வீட்டிலுள்ளவர்களை நச்சரிப்பார். அதனால் உடன் இருப்பவர்களையெல்லாம் தொல்லைப்படுத்துகிறார்.

ஓரிரு நாட்கள் தாமதமாகும் என்று அவருக்குத் தெரியாதா, என்ன!

விளக்கிச்சொன்னாலும் புரிந்துகொள்ள மறுப்பார். பொழுது போயாக வேண்டுமே! தனது அதிகாரத்தை வேறு எப்படித்தான் காட்டிக்கொள்வது!

அவரைப் போன்றவர்களுக்கு எதிர்மறை எண்ணங்களால்தான் பலம்.

யோசித்துச் செயல்படுவது

நாம் எதையாவது பேசுமுன்னரோ, எழுதுமுன்னரோ, நம் கருத்தால் பிறருக்கு ஏதாவது பயன் இருக்கிறதா, யாரையாவது நோகடிக்கிறோமா, அவசியமானதா என்றெல்லாம் சற்றே யோசிக்க வேண்டுவது அவசியம்.

கதை

ஓர் ஆங்கில தினசரியில் இந்தியப் பாரம்பரியக் கலைகளின் விமரிசகராக நான் பணிபுரிந்தேன்.

நான் அப்பொறுப்பை ஏற்கத் தயங்கியபோது, “நீங்கள் நேர்மையானவர்!” என்று, அப்பகுதியின் ஆசிரியை நான் எவ்வளவு கடுமையாக எழுதினாலும் அதை அப்படியே பிரசுரிப்பாள்.

ஒரு முறை, புகழ்பெற்ற ஒரு நடனக் கலைஞர் நாட்டியம் ஆடிக்கொண்டிருந்தபோதே, மேடையில் மல்லாக்க விழுந்துவிட்டார். சமாளித்து எழுந்தபோது, அவர் முகம் வெளிறியிருந்தது.

உண்மையாகவே இருந்தாலும், இதைப்பற்றி நான் எழுதியிருந்தால் ஆயிரக்கணக்கானோர் அதைப் படித்துவிட்டு, அவரைப் பற்றி ஏளனமாகப் பேசிச் சிரிக்க வழி வகுத்தவளாவேன். பரதக்கலை நாட்டில் பரவ எவ்வளவோ முயற்சிகள் எடுத்திருந்தவரின் மனம் நோகும்.

விமரிசனம் தினசரியில் வெளியாகும் நாள்வரை அவர் மனம் என்ன பாடுபட்டிருக்கும்!

அவருடைய நிலை குலைந்ததைப்பற்றி நான் மூச்சு விடவில்லை. அவர் நிம்மதிப் பெருமூச்சு விட்டிருப்பார்.

குறை கூறினால் கோபம்

முன்னுக்கு வருபவர்கள் மாறத் தயாராக இருப்பவர்கள். தம் குறைகளைப் பிறர் எடுத்துச்சொல்லும்போது, அதிலிருக்கும் உண்மையை ஆராய்ந்து பார்த்துவிட்டுத் தம்மைத் திருத்திக்கொள்வார்கள். ஆனால், இத்தகையவர்களை அபூர்வமாகத்தான் காணமுடிகிறது.

நாம் யார்மீதாவது குற்றம் கண்டுபிடித்தால், அது சரியானதாகவே இருந்தாலும், விரோதம் பாராட்டுகிறவர்கள்தாம் அதிகம்.

கதை

சமீபத்தில் ஒரு தொகுப்பிலுள்ள கதைகளுக்கு விமரிசனம் எழுதவேண்டிய பொறுப்பு எனக்கு ஏற்பட்டது.

“உங்களிடமிருந்து நிறைய எதிர்பார்த்தேன். இப்படிப் பட்டும்படாததுமாக எழுதுகிறீர்களே!” என்று தொகுப்பாசிரியை என்னிடம் குறைப்பட்டார்.

சிறுவர்களைக் கண்டித்தால் மாறலாம். ஆனால், நாற்பது வயதுக்குமேல் ஆனவர்களை மாற்றுவது கடினம்.

அவரவர் வாழ்க்கைப் பின்னணி, அனுபவம் இவற்றைக்கொண்டுதான் எழுதுகிறார்கள். அவர்கள் கதை, தற்காலத்திற்கு ஒவ்வாத கருவைக் கொண்டிருக்கலாம். அதை லேசாகச் சுட்டிவிட்டுப் போகவேண்டியதுதான்.

இல்லாவிட்டால், ‘தாறுமாறாக எழுதியிருக்கிறாளே! தான் ரொம்ப நன்றாக எழுதுவதாக எண்ணமோ?’ என்று குமைவார்கள்.

சிந்தனையை மாற்று

‘உன்னால் முடியாது!’ என்று பிறர் சொல்வது நம் காதில் ஒலித்துக்கொண்டே இருக்க, செய்ய ஆரம்பித்த காரியத்தில் கவனம் குறைந்துவிடும்.

பிறகு என்ன! தோல்விதான்.

எதிர்மறைச் சிந்தனைகள் எழுகையில், அவற்றை நேர்மறையாக மாற்றுவது ஒரு நல்ல உத்தி.

பிறரது பயமுறுத்தலை நம்பி, ‘என்னால் முடியாது!’ என்று பயந்து விலகுவதைவிட, அவர்கள் சொல்வதை அலட்சியப்படுத்தலாமே! நம் திறமை நம்மைவிடப் பிறருக்கு அதிகம் தெரியுமா?

‘என்னால் முடியும். எங்கு ஆரம்பிக்கலாம்?’ என்று கேட்டுக்கொண்டால், அச்சத்தை விளைவிக்கும் காரியத்தை ஆரம்பிக்கும் துணிவு பிறக்கிறது.

எதிர்மறையான ஆசிரியர்கள்

பல சிறுவர்கள் தம் முன் உட்கார்ந்து, தாம் சொல்வதைக் கேட்கும் நிலையில் இருப்பதால் ஆசிரியர்களுக்குப் பெருமிதம் ஏற்படும்.

கதை

கடந்த ஜூன் மாதம் சீனாவில் நடந்த சம்பவம் இது.

பள்ளி முடிந்ததும் ‘விசேட வகுப்பு’ என்று நடத்தி, அதற்காகப் பணமும் வசூலித்திருக்கிறாள் ஓர் ஆசிரியை.

அப்போது, பத்து வயதுச்சிறுமி ஒருத்தி எழுதிய கட்டுரையில் பல பகுதிகளை அடித்துவிட்டு, கண்டபடி திட்டியிருக்கிறாள்.

எப்படி எழுதவேண்டும், திருத்த வேண்டும் என்றெல்லாம் சொல்லிக் கொடுக்கவில்லை.

மனமுடைந்த அம்மாணவி பள்ளிக்கூடத்தின் நான்காவது மாடியிலிருந்து குதித்துத் தற்கொலை செய்துகொண்டாள்.

‘ஒரே குழந்தை’ என்று அருமையாக வளர்த்திருப்பார்கள். ஆசிரியையின் கடுமையான வார்த்தைகளை அச்சிறுமியால் ஏற்கமுடியாமல் போய்விட்டது.

அறிவுக்கூர்மை இல்லாதவர்களை மட்டம் தட்டி, அதனால் தாம் உயர்ந்துவிட்டதாக எண்ணுகிறவர்கள் இத்தொழிலுக்கு வரலாமா?

ஆசிரியர்களை விடுங்கள். பெற்றோர் சிலரே குழந்தைகளை இப்படித்தானே நடத்துகிறார்கள்!

கதை

முன்கோபியான சந்தானம் ஐம்பது வயதுக்குள் அலுவலகத்தில் மேலதிகாரியுடன் சண்டை போட்டுவிட்டு, பதவியிலிருந்து விலகினார்.

ஓரிரு வருடங்கள் கழிந்தது. `நான் எதற்கும் லாயக்கில்லாதவன்!’ என்று தோன்றிப்போக, அச்சிறுமை உணர்ச்சி பதின்ம வயதான முரளியிடம் திரும்பியது.

“நீயும் என்னை மாதிரி உருப்படாதவனாக ஆகப்போகிறாய்!” என்று மந்திரம்போல் தினமும் சொல்ல ஆரம்பித்தார்.

‘என்னைப்போல் ஆகிவிடாதே!’ என்று கூறியிருந்தாலும் பிரயோசனமில்லை. எதிர்மறையான அறிவுரைகளால் பயனிருக்காது.

அத்தந்தை தன்னைப் பற்றியே நினைத்து மருகாது, மகனுடைய படிப்பில் அக்கறை காட்டி இருக்கலாம்.

மகன் நல்ல நண்பர்களுடன் பழகுகிறானா, விளையாட்டுகளில் ஈடுபட்டு, உடலை ஆரோக்கியமாகவும், மனத்தைத் தெளிவாகவும் வைத்திருக்கிறானா என்று கண்காணித்திருக்கலாம்.

தன் முன்மாதிரியான தந்தை சொல்வதை அப்படியே நம்பினான் முரளி. சுயநம்பிக்கையை இழந்ததால், பிறருடன் சரிசமமாகப் பழகவே முடியாது போயிற்று.  அவன் எல்லாவற்றிலும் தோல்வியே அடைந்தபோது, “நான்தான் அப்போதே சொன்னேனே!” என்று பெருமைப்பட்டுக்கொண்டார் சந்தானம்.

முரளிக்கு நேர் எதிர் என் மாணவன் அமீர். “போன வருடம் எங்கள் வகுப்பிற்கு எல்லா இன ஆசிரியைகளும் வந்தார்கள். இப்போது நீங்கள் மட்டும்தான்!” என்று குறையுடன் சொல்வான்.

அமீர் மட்டும் பிற மலாய் மாணவர்களிடமிருந்து வித்தியாசமாக — அறிவுடன் பணிவுமாக — இருந்தான்.

அதிசயப்பட்டு விசாரித்தபோது, “என் தந்தை தினமும் கேட்பார், பள்ளிக்கூடம் எப்படி இருந்தது, மகிழ்ச்சியாக இருந்தாயா என்று. எல்லாரையும் மதித்து நடந்துகொள் என்று கூறுவார்,” என்றான்.

அமீரின் தந்தைக்கு வாழ்க்கையில் இடர்களே இருந்திருக்காதா?

அவற்றையே எண்ணி, தன்னுடையது மட்டுமின்றி தன்னை நம்பியவர்களின் வாழ்க்கையையும் பாழடிக்காத நல்ல மனிதர் அவர்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *