கதை வடிவில் பழமொழி நானூறு – 4
நாங்குநேரி வாசஸ்ரீ
பாடல் 9
எந்நெறி யானும் இறைவன்தன் மக்களைச்
செந்நெறிமேல் நிற்பச் செயல்வேண்டும் – அந்நெறி
மான்சேர்ந்த நோக்கினாய்! – ஆங்க ‘அணங்காகும்
தான்செய்த பாவை தனக்கு‘.
பழமொழி – ‘அணங்காகும் தான் செய்த பாவை தனக்கு
என்னப்பா உன் ரிடையர்மெண்ட் வாழ்க்கை எப்படிப் போகுது. கேட்டுக் கொண்டே வருகிறான் என் நண்பன் பாலன்.
உனக்கென்ன. வீடு வாசல் எல்லாம் வாங்கியாச்சு. துபாய்ல வேல பாத்ததால அடுத்த தலைமுறைக்கும் சேத்து சொத்து சேத்திருப்ப. எங்கள மாதிரியா. நானும் மெய்யப்பனும் அடிக்கடி உன்னயப் பத்தி பேசறதுண்டு. நானும் இந்த மாசமே ஓய்வு எடுத்துறலாம்னு இருக்கேன். பொண்ணுக்கு வரன் பாத்து நல்ல எடத்துல கல்யாணம் பண்ணிக்குடுக்கணும். அவ்வளவுதான் அப்பறம் என் கடமை முடிஞ்சிடும். உங்க ரெண்டு பேருக்கும்தான் பசங்க. அவங்க நல்லா செட்டில் ஆனா தான் கல்யாணம் பண்ணமுடியும். ஆமா. உம் பையன் எங்க. உள்ளூர்லதான் வேலயா. இல்ல அவனயும் உன்னய மாதிரி வெளிநாட்டுக்கு வேலைக்கு அனுப்பிச்சிட்டியா.
அவனின் அடுக்கடுக்கான கேள்விகளை என்னால் சமாளிக்க முடியவில்லை. நல்ல வேளை என் மனைவி காபியுடன் வந்துவிட்டாள். பேச்சு கொஞ்சம் திசைமாறும்.
அவளின் பரஸ்பர விசாரிப்புகளுக்குப் பின் மீண்டும் தொடர்கிறான்.
உன் மனைவிக்கு உடம்பு சரியில்லயா. ஏன் ரொம்ப சோகமா இருக்காங்க.
இனிமேல் முடியாது. சொல்லிவிட வேண்டியதுதான்.
கொஞ்சம் நீ அமைதியா இருந்தா நான் சொல்றேன். ஆரம்பித்தேன். நான் துபாய்ல போய் நல்லா சம்பாதிச்சது என்னவோ உண்மைதான். என் பையன் சின்னவயசில என்ன கேட்டாலும் வாங்கி அனுப்புவேன். என் மனைவியும் வேலைக்குப் போய்க்கிட்டிருந்ததால அவன் நினைச்சதெல்லாம் நடந்தது. கல்லூரிக்குப் போக ஆரம்பிச்சவொடனே நண்பர்களோட சேந்து ஊதாரித்தனமா செலவழிச்சு ஊர்சுற்ற ஆரம்பித்தான். வீட்ல நாங்க சரியா கண்காணிக்க முடியாததால எங்ககிட்ட பல பொய்களச் சொல்லிச் சமாளிச்சான். கடைசியில போதைப்பழக்கத்துக்கு அடிமையாகிட்ட அவனக் கல்லூரிய விட்டு நீக்கிட்டாங்க. அப்போதான் எங்களுக்கு உறைத்தது. அதோட விளைவு இப்போ நானும் எம் மனைவியும் சம்பாதிச்சது போதும்னு முடிவுக்கு வந்து வேலைய விட்டுட்டு அவனுடைய மறுவாழ்வுக்காக போராடிட்டு இருக்கோம். உள்ளதான் படுத்துட்டு இருக்கான். போய்ப் பாரு.
அவனைப் பார்த்துவிட்டு வந்தஎன் நண்பனின் கண்களில் கண்ணீர்.
நேத்தைக்குத் தான் நான் மெய்யப்பன் வீட்டுக்குப் போயிருந்தேன். அவனுடைய மகனப்பாத்த பிறகு நான் சொன்ன அதே பழமொழிய இப்பவும் சொல்றேன்.
‘அணங்காகும் தான் செய்த பாவை தனக்கு’ என்பதுதான் அந்தப் பழமொழி. ஒரு சிற்பிக்குஅவன் தன் கையால செஞ்ச சிலையே ஒருநாள் அவனுக்கு முன்ன வணங்குற தெய்வமா நிக்குமாம். அணங்குங்கறதோட இன்னொரு பொருள் பேய் அப்டின்னும் கேள்விப்பட்டிருக்கேன். எதுக்குச் சொல்றேன்னா நாம நம்ம பிள்ளைகள எப்படி வளக்கறோமோ அப்படித்தான் அவங்க வளருவாங்க. ஏதோ எம் மனசுல பட்டதச் சொன்னேன். தப்பா எடுத்துக்காத.
நேத்தைக்கு மெய்யப்பன் எம்பிள்ளை எனக்கு தெய்வம் மாதிரி. எம் மனைவிக்கு திடீர்னு நோய் வந்தப்போ கூட கவலைப்படாதீங்க அப்பா நான் இருக்கேன்னு ஆறுதலா இருந்தான். இப்போ என்னையும் மனைவியையும் ஒருகுறைவுமில்லாம உக்காத்தி வச்சு சோறு போடறான்னு பெருமையாச் சொன்னான். குறைந்த வருமானம்னாலும் மெய்யப்பன் கூடவே இருந்து கண்காணிச்சு தம் பிள்ளைய நல்லா வளத்ததினால அவன் சமூகத்திலஇருக்கற நல்லது கெட்டத எளிதா தெரிஞ்சிக்க முடிஞ்சது. பாவம் உன் பையனால அதத் தெரிஞ்சுக்க முடியாம கெட்டநண்பர்கள நம்பி ஏமாந்துட்டான். இனியாவது அவன நல்ல முறையில பாத்துக்கோ. என நண்பன் அறிவுரை கூறி எழுந்துசென்றபின் அவன் கூறியபழமொழியை அசைபோடத் தொடங்கினேன்.
எவ்வளவு உண்மை. நல்லவேளை இந்தமட்டும் என் மகன்தப்பித்தானே. இனிமேல் கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். முடிவெடுத்தேன்.
பாடல் 10
தமரேயும் தம்மைப் புகழ்ந்துரைக்கும் போழ்தில்
அமரா(து) அதனை அகற்றலே வேண்டும்
அமையாகும் வெற்ப! ‘அணியாரே தம்மைத்
தமவேனும் கொள்ளாக் கலம்‘.
பழமொழி – ‘அணியாரே, தம்மைத் தமவேனும் கொள்ளாக் கலம்‘
உங்கப்பா எங்கடா. கேட்டுக்கொண்டே உள்ளே நுழைகிறார் என் சித்தப்பா.
வாங்க வாங்க. நானும் அவரத்தான் எதிர்பாத்துட்டு இருக்கேன். போஸ்ட் ஆபிஸ்ல கொஞ்சம் வேலை இருக்கு இதோ வந்துடறேன்னு போனவரு. மூணு மணிநேரம் ஆச்சு இன்னும் வரக்காணல. வண்டியிலதான் போயிருக்கார். நானே மணிகிட்ட சொல்லிவிடணும்னு நெனச்சேன். அவன் வேற நாளைக்கு தமிழ் பரீட்சைனு படிச்சிட்டு இருக்கான். உங்கண்ணனுக்கு போனா போன இடம். வந்தாவந்த இடம். நேரங்காலமே கெடையாது. கொஞ்சம் ஒரு எட்டு சைக்கிள் எடுத்துட்டுப்போயி பாத்துட்டு வந்திருங்களேன்.
அம்மா கேட்டுக்கொண்டதிற்கிணங்க சித்தப்பா எழுந்துபோய் விட்டார். நான் படிக்க ஆரம்பிச்சேன். முதல்ல பழமொழிகளப் படிச்சிருவோம். தீர்மானித்துப் படிக்க ஆரம்பித்த பத்தாவது நிமிடத்தில் அப்பாவும் சித்தப்பாவும் வந்து விட்டார்கள். இனி படிச்சாமாதிரிதான். அம்மாவோட பஞ்சாயத்து தொடங்கிடும். கொஞ்சநேரம் வாயப்பாத்துட்டுதான் படிக்கத் தொடங்கணும்.
என்னவாம் உங்கண்ணனுக்கு. அம்மா ஆரம்பித்தாள்
முதல்ல கொஞ்சம் தண்ணி குடுங்க. அண்ணன் பாவம் அரை கிலோமீட்டர் நடந்தே வந்துட்டாரு. அப்பறம்தான் நான் சைக்கிள்ல கூட்டிக்கிட்டு வந்தேன்.
ஒரு சொம்பு தண்ணியக் குடித்தவுடன் அப்பா பேச ஆரம்பித்தார்.
வேலையெல்லாம் அப்பவே முடிஞ்சிபோச்சு. திரும்பலாம்னு நெனைக்கும்போது நம்ம சந்தானத்தப் பாத்தேன். பஸ் பிரேக்டவுண் போல. குடும்பத்தோட வெயில்ல நின்னுட்டு இருந்தான். என்ன ஏதுன்னு கேக்கலாம்னு நிப்பாட்டினேன்.
அண்ணே உங்கள மாதிரி நல்லவங்களப் பாக்கறது கஷ்டம். அப்டி இப்டினு புகழ ஆரம்பிச்சிட்டான். கேக்க பெருமயா இருந்திச்சு. அவன் மனைவியும் நின்னுக்கிட்டு இருந்ததால வற்புறுத்தி என் வண்டியக் குடுத்து எடுத்துட்டுப்போ நான் பஸ் புடிச்சு வந்துப்பேன்னு சொல்லிட்டேன். அப்புறந்தான் ஞாபகம் வந்துச்சு. போஸ்ட் ஆபீஸ் பியூன்
ஐயா கடனா ஒரு நூறு ரூபாய் இருந்தா கொடுங்க. நான் எல்லார்கிட்டயும் கேக்க மாட்டேன். உங்களப் பாத்தவொடனே கேக்கணும்னு தோணிச்சுன்னான். சரி வண்டியிலதானே வந்திருக்கோம்னு இருந்தநூறு ரூபாயையும் அவன்கிட்ட குடுத்துட்டேன். அதான் நடந்து வந்திட்டு இருந்தேன். ரெண்டுகிலோமீட்டர் தூரங்கறதால நேரமாகிப்போச்சு.
கேட்டுக்கொண்டே இருந்த அம்மா புலம்ப ஆரம்பித்தாள்.
கேக்கணுமா உங்கண்ணனுக்கு. யாரும் முகத்துக்கு நேரா புகழ்ந்தாப் போதுமே. கட்டியிருக்குற வேட்டியக்கூட அவுத்துக்குடுக்கத் தயங்க மாட்டாரு. அவ்ளோ தாராளம்.
இவருக்கு எப்டித்தான் புத்தி சொல்றதோ தெரியல.
அம்மா அது வேற ஒண்ணுமில்லம்மா. அணியாரே, தம்மைத் தமவேனும் கொள்ளாக் கலம்‘ங்கற பழமொழிமாதிரி.
அட போடா. நீ வேற படிச்சத ஒப்பிச்சிக்கிட்டு அம்மா அங்கலாய்க்கிறாள்.
நான் படிச்சத ஒப்பிக்கலம்மா. அந்தப் பழமொழியோட பொருள் தன்னோடதுதான்னாலும் பொருத்தமில்லாத நகைய யாராவது அணிவாங்களா.. அப்டித்தான் நாம நல்லவங்களா இருந்தாலும் அடுத்தவங்க முகத்துக்கு நேராப் புகழ்ந்தாங்கன்னா அதுக்காக சந்தோசப்படக்கூடாது. அத மனசுலேந்து நீக்கிட்டு என்னசெய்யணும்னு யோசிக்கணும். இல்லையினா பிரச்சினை தான் வரும்.
அம்மாவும் அப்பாவும் என்னை ஆச்சரியத்துடன் பார்க்கின்றனர்.
பலே பலே. நாளைக்குப் பரீட்சைக்கு நல்லா படிச்சிருக்க போல சித்தப்பா பேச்சை திசைதிருப்புகிறார்.