அன்பிற்கினிய நண்பர்களே!

கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

ராமலக்ஷ்மி எடுத்த இந்தப் படத்தை, வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து  தேர்ந்தெடுத்து வழங்கியுள்ளோம். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் ஞாயிற்றுக்கிழமை (19.07.2020) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கெனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

பதிவாசிரியரைப் பற்றி

5 thoughts on “படக்கவிதைப் போட்டி – 267

 1. மனித விளையாட்டு…

  பாடு பட்டு விவசாயி
  பயிராய் வளர்த்த வாழையிலே
  கேடு கெட்டக் குரங்கேநீ
  கெடுதல் செய்து விட்டாயே,
  காடு சென்று தேடாமல்
  களவு செய்து தின்றாலே
  வாடுமே உழவன் குடும்பமதே,
  வேண்டாம் மனித விளையாட்டே…!

  செண்பக ஜெகதீசன்…

 2. பழப் பரிகாரம்

  பசிக்கு உணவாகப்
  பழத்தினை தந்து
  புசிக்கையில்
  புகைப்படம் எடுத்தப்
  புண்ணியவானை
  விசித்திரமாகப் பார்ப்பதென்ன
  வானரமே!

  ஐந்தறிவு உயிர்களைக்
  கூண்டில் அடைத்து
  வேடிக்கை பார்க்கும்
  ஆறறிவு மனிதர்கள்,
  மற்றவர் துயர் கண்டு
  மனமிரங்கும் மனிதராய்
  மாறிவிட்டதெப்படி என்று
  மயங்குகின்றாயோ
  மாருதியே!

  அன்று எங்களவர்
  செய்த பாவம்
  இன்று வீடென்னும்
  கூண்டிலில்
  அடைபட்டுக் கிடக்க
  தொற்று நோய்
  கொரோனாக்
  கற்று தந்த பாடம்!

  பழத்தினைக்
  கொடுத்துப்
  பரிகாரம் செய்கின்றோம்!
  பகைவர்கள்
  பறித்துச் செல்லும் முன்
  புசித்து பசியாறு.

  கோ சிவகுமார்
  மண்ணிவாக்கம்
  சென்னை.

 3. படக்கவிதைப் போட்டி எண் 267

  எளிதில் கிடைக்கும் கனியென்பதால்
  உங்களுக்கும் மிகவும் பிடிக்குமா ராமா?
  அன்பால் கொடுத்தால் பெறுவீர்
  பறித்துப் பெறாதீர்
  இது மனிதர்க்கும் பொருந்தும்
  ஏனெனில் உங்களிடமிருந்து பிறந்தவர்கள் நாங்கள்
  இக்குணம் இருக்கத்தானே செய்யும்
  நீங்கள் திருந்தி விடுவீர்கள்
  நாங்கள் சற்றே கடினம்தான்

  ஆலயங்களில் மரங்களில் நீங்கள்
  தர்மம் செய்யாதவரிடம் தட்டிப் பறியுங்கள்
  தர்மம் செய்பவரைக் கட்டிப்பிடியுங்கள்
  அனுமனின் ஆசியென நினைத்துக் கொள்வோம்
  ஏனெனில் நீங்கள் ராமாயணத்தில் ஒரு நாயகனல்லவோ.

  சுதா மாதவன்

 4. குரங்கின் கேள்வி
  மானிடா இதென்ன வாழைப் பழமா
  இயற்கையில் பழுத்த தா
  செயற்கையில் மாறியதா
  கனிவதற்குமுன் பொறுமை இல்லையோ

  முன்பெலாம் கனி கனியாக இருக்கும்
  நிறம் கண்டு ஏமாறி விட்டேனடா
  சுவையில்லை
  வாய்க்குள் போக மறுக்கிறது
  ஒதுக்கி வைத்து இருக்கிறேன் ஓரத்தில்

  இயற்கை விவசாயம் நீ துறந்த தால்
  பாதிப்பை சுவையில் காண்கிறேன்
  எதை வைத்து பளபள மஞ்சள் நிறம்
  காம்பு கூட மஞ்சள் நிறமா
  நீ உண்ணுவது பழமா விசமா

  பழ வகைகள் உற்பத்தியில் பாரதம்
  உல அளவில் இரண்டாம் இடமாமே
  தர அளவில் இருக்கனும் முதலிடம்
  முன்பெலாம் பருவத்திற்கு
  பருவமே காணலாம் பழங்களை
  இப்போதோ எல்லா பருவத்திலும்

  இயற்கை உரத்தில் பழங்கள் ஆரோக்கியம்
  செயற்கை முறையில் பழங்கள் துர்பாக்கியம்

  சீ.காந்திமதிநாதன்
  கோவில்பட்டி

 5. கழு மேலமர்ந்த குரங்கு

  ஜாதிமத அபிமானதாலும்
  கையூட்டுப் பணத்திற்கும்
  மதுப்போதை மோகத்திற்கும்
  வெற்று விளம்பரத்திற்கும்
  சிற்றின்பக் கவர்ச்சிக்கும்
  கற்றகல்வித் தனைமறந்து
  பட்டறிவும் தானிழந்து
  மக்களாட்சித் தந்துவைத்த
  வாக்குரிமையை விற்றுவிட்டு
  பாடுப்பட்டுக் கிட்டிய கனியமுதை
  எட்டி தூரம் எறிந்துவிட்டு
  தோலைமட்டும் வைத்துக்கொண்டு
  செய்வதறியாதுத் திகைத்து நின்று
  கூழ்முனைக் கழுமரம்
  மேலமர்ந்த குரங்கெனக்
  கலங்கிநின்று உழலுகின்றோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *