-மேகலா இராமமூர்த்தி

நேரிய பார்வையும் கூரிய சிந்தனையும் கொண்டிருக்கும் இந்த முதுமகளைப் படம்பிடித்து வந்திருப்பவர் திருமிகு. நித்தி ஆனந்த். படக்கவிதைப் போட்டிக்கு இப்படத்தைத் தெரிவுசெய்து தந்திருப்பவர் திருமிகு. ராமலக்ஷ்மி. இவ்விரு நங்கையர்க்கும் என் நன்றிகள்!

நரை திரை மூப்பு கண்டுவிட்டாலும் உள்ள உறுதிக்குக் குறைவில்லை என்பதை எடுத்துக்காட்டுகின்றன இவ் அம்மையாரின் விழிகள்.

”…கடிது இவள் துணிவே
மூதின் மகளிர் ஆதல் தகுமே”
(புறம்: 279) என்று அன்றைய மறக்குடி மகளிருக்கு ஒக்கூர் மாசாத்தியார் கூறிய மொழிகள் இப்பெண்மணிக்கும் பொருந்துவனவாகவே எனக்குத் தோன்றுகின்றன.

இனி கவிஞர்களின் முறை. வருக கவிஞர்களே! உம் கவிப்பெட்டகத்தைத் திறந்து அரிய கருத்துக்களை அள்ளித் தருக!

*****

சென்னையிலிருந்து(ம்) அன்னையைப் பார்க்க வரமுடியாத சூழலிலிருக்கும் தனயர்களுக்காக வருந்தி அவர்கள் வரவை எதிர்பார்த்திருக்கும் தாயைக் காண்கின்றோம் திரு. செண்பக ஜெகதீசனின் கவிதையில்.

எப்போது…

வேலை பார்க்கப்
பிள்ளைகள்
வெளிநாடு செல்லவில்லை,
சென்னையிலிருந்து இங்கே
அன்னையைப்
பார்க்க வர
பாஸ் கிடைக்கவில்லையாம்…

என்ன கொடுமையிது,
எல்லாம் அந்த
இறக்குமதி உயிர்க்கொல்லியால்
வந்த இடர்ப்பாடு…

உறவுச் சங்கிலிகள் அறுந்து
ஒட்டமுடியாமல்
தேங்கிக் கிடக்கின்றன
ஆங்காங்கே,
தாங்கிக்கொண்டே காத்திருக்கிறாள்
தாய் இவளும்…

எப்போது மாறுமிந்த
இயலா நிலை…!

*****

”வாழ்ந்த காலத்தின் வசந்த நினைவுகளை மீட்டிப் பார்க்கும் வயோதிகமே! வருங்காலச் சந்ததியரின் நிலையெண்ணிக் கலங்காதே! காலம் மாறும்” என்று நம்பிக்கையூட்டுகின்றார் மண்ணிவாக்கம் திரு. கோ. சிவகுமார்.  

வயோதிகக் கனவு

வாரிசுகளின் வருகைக்காய்
வாசலில் அமர்ந்து
வழி மேல் விழி வைத்துக்
காத்திருக்கும் வயோதிகமே!
வாழ்ந்த காலத்தின்
வசந்தகால நினைவுகளை
எண்ணிப் பார்க்கின்றாயோ!?
வருங்காலச் சந்ததிகள்
வந்திருக்கும் நோயால்
வாழ்வாதாரமின்றி
வீழ்ந்திடுவார்களோயென்று
வேதனைப்படுகின்றாயோ!
காலங்கள் மாறும்போது
காட்சிகளும் மாறும்!
நாட்டு நடப்புடன்
நாமும் இணைந்து
நல்லது நடக்கும்
நாளை என்னும்
நம்பிக்கை வனர்ப்போம்!

*****

யாரை எதிர்பார்த்து இந்தக்கூரிய பார்வை என்று வினாத்தொடுக்கும் திருமிகு. சுதா மாதவன், பட்டாளத்து மகன் வருவானென்றா? பள்ளி சென்ற பேரக்குழந்தைகள் வருமென்றா? என்றொரு பட்டியலையும் தம் பாட்டில் தந்திருக்கின்றார்.

யாரை எதிர்ப்பார்த்து
இந்தக் கூரிய பார்வை?

பட்டாளத்து மகன் வருவானென்றா?
பள்ளி சென்ற பேரக்குழந்தைகள் வருமென்றா?
பாசமிகு மகள் மருமகள் வருவாளென்றா?
மலர்மிகு பாசத்தோடே உன் சுற்றம் வருமென்றா?

வயல்வெளியில் வேலையில்லையா?
பொருள் வாங்கிவர கடைகளில்லையா?
தாக்கி வரும் நோய் எப்போ ஓயுமென்றா?
எதை எதிர்பார்த்து இந்தக் கூரிய பார்வை?

பழைய நினைவுகள் மனதில் பயணமா?
புதுக்கனவுகளை வரவேற்கும் எண்ணமா?
பொக்கை வாயின் சிரிப்பு
உன் உதட்டில் நிரந்தரம்
கறுப்பு வைரமாய்
காலம் கோடி வாழத்தான் போகிறாய்
கார் நிறத்தழகியே
அதே பார்வை கூரிய பார்வையோடே

*****

”சீனாக்காரனை ஒரு கை பார்க்கும் வரையில் என் ஏக்கம் குறையப் போவதில்லை; தேசத்திற்கான குடும்பம் என்பதில் இருக்கிற பெருமை எதிலும் இல்லை” என வீரமுழக்கமிட்டு இந்திய இராணுவத்தில் சேரத்துடிக்கும் மறக்குல முதுமகளை நம் கண்முன் நிறுத்துகின்றார் திரு. சீ.காந்திமதிநாதன்.

தேசியத் தாய்

இந்தியா விடுதலை பெற்ற நாள்
இந்திய மண்ணில் பிறந்த நாள்
சுதந்திரப் போராட்ட வீர்ர் தந்தை
சுதந்திரம் எனப் பெயரிட்டார்

அண்ணன் இருவர் சேர்த்தார்
இந்திய இராணுத்தில் பூரிப்பில்
அத்துடன் நிறுத்தினாரா பற்றை
இராணுவ மாப்பிள்ளையை நிறுத்தி
நீட்டு கழுத்தை என்றார்
தந்தை சொல்மிக்க மந்திரமுண்டோ

என் மகன்கள் இருவர் இராணுவத்தில்
பேரன் இருவர் விமானப் படையில்

சீனாக்காரனை
ஒரு கை பார்க்கும் வரையில்
என் ஏக்கம் குறையப் போவதில்லை
தேசத்திற்கான குடும்பம் என்பதில்
இருக்கிற பெருமை எதிலும் இல்லை

முதலில் இந்தியன்
அடுத்து நான் ஓர் தமிழச்சி
அதுவும் ஓர் வீர தமிழச்சி

வயதாகிப் போய் விட்டதாம் எனக்கு
இராணுவத்தில் எடுக்க மாட்டார்களாம்
ஏ,கே 47 என்ன அவ்வளவு எடையா
எனது லட்சிய வேட்கைமுன்

இந்திய எல்லை நமது எல்லை
எவனாவது தந்தால் தொல்லை
உடைப்போம் அவனது பல்லை
முறிப்போம் அவனது இராணுவ வில்லை!

*****

”வாழ்வின் சுவடுகள் முகம் முழுதும் எழுதிய கவிதை வரியால் நிறைந்த
அனுபவப் புத்தகம்” என்று முதுமையைப் புதுமையான வரிகளால் வருணிக்கின்றார் திரு. வேங்கட ஸ்ரீநிவாசன்.

முதுமை

தட்டில் சோறு வைத்திட்டு – வீதியை
எட்டிப் பார்த்துச் சொந்தங்கள் தேடும்
வீட்டுப் படிகளே நாற்காலியென
வாட்டம் காட்டிடும் பருவம்…

வாழ்வின் சுவடுகள்
முகம் முழுதும் எழுதிய
கவிதை வரியால் நிறைந்த
அனுபவப் புத்தகம்…

காலமெல்லாம் கடந்தும்
பட்ட கட்ட நட்டங்கள்
அட்ச தீர்க்க ரேகைகளாய்
அலைமோதும் ஜீவகோளம்…

கடந்ததை எண்ணித் தேங்கிடாமல்
வருவதை எதிர்பார்த்துக் காத்திராமல்
இருப்பதை வைத்து இயல்பாய்
நாட்களைக் கடத்துவதே முதுமை…

*****

”தனிமை, யாரிடமும் பேச்சுவாங்காமல் இருப்பதால் அழகானதாகவும், யாருமில்லை என்ற உணர்வால் கொடுமையானதாகவும் இருக்கின்றது” என்று அதன் இருவேறுபட்ட முகங்களை நமக்கு வெளிச்சமிட்டுக் காட்டுகின்றார் திருமிகு. கி. அனிதா.

தனிமை தனிமை மிக அழகானது
ஏன் என்றால் யாரிடமும் பேச்சுவாங்காமல் இருப்பதால்…
தனிமை சில நேரத்தில் கொடுமையானது….
எனக்கு என்று யாரும் இல்லை என நான் உணரும் பொழுது…
நான் இருப்பது தனிமையில்…
என் பாசமும் தனியே சென்று விட்டது …
இனி என் வாழ்நாள் முழுவதும் தனிமையே என் சொந்தம்…
இதை நான் தானே ஏற்கவில்லை …
ஏற்படுத்தித் தந்தவருக்கும் இந்நிலை வரும் என உணரவில்லை…
 ஏன் என்றால் இன்றும் என்னால் நேசிக்கப்படுவதால்…

*****

வாழ்க்கை அனுபவமிக்க இந்த அம்மையாரை வைத்து இனிய கவிதைகளை உருவாக்கித் தந்திருக்கும் கவிஞர்களுக்கு என் பாராட்டுக்கள்!

இவ்வாரத்தின் சிறந்த கவிதையாகத் தேர்வாகியிருப்பது அடுத்து…

போனவரைக் காணலியே!

போனவரைக் காணலியே பொழுதுபட்டுப் போகிறதே!
ஆரைவிட்டுத் தேடுறது? அவர் பசங்க வீடுவர
நேரம் போய்விட்டதுண்ணா நெலமையது என்னாகும்?
வெத்தில பத்தாதெண்ணு வெரட்டிவிட்டேன் வாங்கிவர
சுத்திக்கிட்டுத் தெருவெல்லாம் சோர்ந்து எங்க நிக்காரோ?
காலணா வெத்திலைக்குக் காசுகொண்டு போனவரு
மூலக்கடைய விட்டு முச்சந்தி போனாரோ!
முச்சந்தி போயி முழிபிதுங்கி நின்னவரு
வந்ததெருமறந்து பஸ்ஸேறிப் போனாரோ!
தேசமெங்கும் போற பஸ்ஸில் தெசமறந்து போனவரை
காசில்லையென்று கண்டக்டர் எறக்கிவிட
கூசிக்குறுகிமனங் குழம்பிப்போய் நிக்காரோ?

எம்புள்ள வீடுவர இரவாகிப் போயிடுமே!
கொப்பனக் காணமடா கூட்டிவர வேணுமின்னா
எப்படி நீதொலச்சே ஏன்தொலச்சே எம்பானே?
வெத்தலை நீ போடாட்டி விடியாமப் போயிடுமோ!
எத்தனை நாள் சொல்லிருக்கேன் ஏன் நீ அனுப்பிவச்சே
கண்பஞ்சடைந்ததென்றும் காதுமந்தமானதென்றும்
எண்ணாமல் அக்கிழத்தை ஏனனப்பி வைத்தாய் நீ?
என்று குதிப்பானே எனை வைது தீர்ப்பானே!

என்ன அது ஏதோ இருட்டில் அசைகிறதே
பூனையல்ல காட்டுப் புலிபதுங்கும் வீரநடை!
ஆஹா அவர்தான் என் ஆண்டவனே காத்தாய் நீ.
போகாம எங்குமவர் பொழுதோட சேர்த்தாய் நீ.

வெளியில் சென்ற தன் முதிய கணவனைக் காணாது அலைபாயும் மனத்தோடு இந்த மூதாட்டி,
”காலணா வெத்திலைக்குக் காசுகொண்டு போனவரு
மூலக்கடைய விட்டு முச்சந்தி போனாரோ!
முச்சந்தி போயி முழிபிதுங்கி நின்னவரு
வந்ததெருமறந்து பஸ்ஸேறிப் போனாரோ!”

என்றெல்லாம் எண்ணிக் கலங்குவதையும் இறுதியில் அம்முதியவரின் நடையொலிகேட்டு நிம்மதி பெறுவதையும் உணர்ச்சிமிகு சிறுகதையாய்க் கவிதையில் தவழவிட்டிருக்கும் திரு. சித்தி கருணானந்தராஜாவை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென்று அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

 

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “படக்கவிதைப் போட்டி 266இன் முடிவுகள்

  1. இந்தவாரம் சிறந்த படக்கவிதையாக ‘போனவரைக் காணலியே‘ என்ற எனது கவிதயைத் தெரிவு செய்து பாராட்டிய மேகலா இராமமூர்த்தியுட்பட வல்லமை தெரிவுக் குழுவினருக்கும், மேலும் பல கவிதைகளை எழுதியுள்ள நண்பர்களுக்கும் எனது நன்றியையும் வணக்கத்தையும் தெரிவிக்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *