நிர்மலா ராகவன்

 (குடும்பத்தினருடன் நெருக்கமா!)

நூறு வருடங்களுக்கு ஒருமுறை வரும் பேரிடர்கள் நாம் மறந்துவிட்ட முக்கியமான ஒன்றை உணர்த்துகின்றன.

சொத்து, சுகம், தொழில் என்று எவ்வளவுதான் இருந்தாலும், ஆபத்து சமயத்தில் உதவவோ, அனுசரணையாக இருக்கவோ குடும்பத்தினர், நெருக்கமான உறவினர்கள்போல் எவரும் கிடையாது.

தற்போது, உலகிலுள்ள பல நாடுகளிலும் தொற்றுநோய் பரவாமலிருக்க மனிதர்கள் வீட்டுக்குள்ளேயே இருக்கவேண்டிய நிலை.

‘எப்போதும் நம்முடன் இருப்பவர்களேதாமே!’ என்ற அலட்சியத்துடன் பலர் தம் குடும்பத்தினரைக் கவனிப்பதோ, அவர்களுடன் அதிகம் பேசுவதோ குறைந்துவிட்டது. இந்த நிலையில் அவர்களுடன் மட்டுமே நாள் முழுவதும் புழங்கவேண்டும் என்ற கட்டுப்பாடு பலருக்குத் தண்டனை போலத்தான்.

‘என் வீட்டில் நிம்மதியே கிடையாது!’ என்பவர்கள் அன்பு, மகிழ்ச்சி இவற்றால் கிடைக்கக்கூடிய நிம்மதி நாம் பிறருக்கு அளிப்பதைப் பொருத்திருக்கிறது என்பதை உணர்வதில்லை.

குடும்பத்தில் சிறு சிறு சச்சரவுகள் ஏற்படுவது இயற்கை. குடும்பத் தலைவரோ, தலைவியோ தான் சொல்வதையே எல்லாரும் கடைப்பிடிக்கவேண்டும் என்று எதிர்பார்த்தால் யாருக்குத்தான் நிம்மதி கிடைக்கும்?

ஹிட்லரைப் போன்றவர்களைப் பற்றிப் படித்திருக்கிறோம். குடும்பத்திலும் இப்படிப்பட்ட சர்வாதிகாரிகள் இருக்கிறார்கள். எல்லா நாடுகளிலும், இனங்களிலும்.

ஒரு சூழ்நிலையிலிருந்து வித்தியாசமான ஒன்றிற்கு மாறுகையில், ‘என் பழக்க வழக்கங்கள்தாம் சிறந்தவை!’ என்று வலுக்கட்டாயமாக அவற்றைத் தம் சந்ததியினரிடம் புகுத்துவது பலரது வழக்கம். இதனால் பாதிப்பு என்னவோ இளைய தலைமுறையினருக்குத்தான்.

கதை

எங்கள் குடும்ப நண்பர் சண்முகம் தன் தங்கைக்கு மனநிலை சரியாக இல்லை என்று வருத்தத்துடன் தெரிவித்தார். அதில் அலுப்பும் தென்பட்டது. செலவாகிறதே என்று இல்லை.

“உண்மையைச் சொல்கிறேன். எங்கப்பாதான் இதற்குக் காரணம். அவர் தோட்டப்புறத்திலிருந்து நகரத்துக்கு வந்தவர். ஆனால், இன்றும், அவர் சிறுவயதில் கடைப்பிடித்த பழக்கவழக்கங்களை நாங்களும் பின்பற்ற வேண்டும் என்று எதிர்பார்த்தால் எப்படி!” என்று புலம்பினார் என்னிடம்.

உத்தியோகம் புருஷ லட்சணம் என்று சொல்லி வைத்திருக்கிறார்கள்.

அன்றாடம் செய்வதற்கு உருப்படியாக எந்த வேலையும் இல்லாவிட்டால் மனம் எந்த நிலைக்கு ஆளாகும்? இதோ ஒரு கதை.

தந்தைதான் பெரும்பொருள் சேர்த்து வைத்திருக்கிறாரே, உத்தியோகத்திற்கு வேறு போய்ச் சம்பாதிக்க வேண்டுமா என்று வீட்டிலேயே இருந்து காலத்தைக் கழிக்க எண்ணினார் வெங்கட்ராமன்.

நண்பர்களிடம் இனிமையாகப் பேசுவார். வீட்டுக்கு வெளியில் பலருக்கும் இவரைப் பிடித்திருந்தது.

வீட்டிலோ!

‘தனக்குத்தான் எல்லாம் தெரியும்,’ என்ற மிதப்புடன், மகன் சங்கர் செய்யவேண்டிய ஒவ்வொரு காரியத்தையும் விளக்குவார். தந்தையே செய்து காட்டியிருந்தால், தானே அதைப்போல் செய்திருப்பான்.

அவன் குடும்பத்துக்கு மூத்த மகன் ஆதலால் இயற்கையிலேயே பொறுப்புணர்வு மிக்கவன்.

மகனுக்குச் சுயபுத்தியே கிடையாது என்று நிச்சயித்தவர்போல் அவர் நடந்து கொண்டது,  சங்கரைத் தன் திறமையையே சந்தேகிக்க வைத்தது.

அவன் அடைந்த பலவீனத்தால் அவருடைய அதிகாரம் அதிகரித்தது. எப்படியெல்லாம் கையாண்டால் அவனை அதிகமாகத் துன்புறுத்தலாம், அவனுடைய பயம் அதிகரிக்கும் என்று யோசித்தவர்போல், வார்த்தைகளை வீசுவார். ‘நீ செய்து கிழித்தாய்!’ என்ற கேலி, ‘நான்தான் சொன்னேனே, உன்னால் முடியாதென்று!’ என்ற ஏளனம்.

அவரையே தன் முன்மாதிரி என்று எண்ணியதால், அவர் சொல்வதில் உண்மை இருக்கும் என்று நம்பும் நிலைக்குத் தள்ளப்பட்டான் சங்கர். தந்தையை எதிர்த்து நிற்க முடியாத நிலை.

இருபத்தைந்து வயதானபோதும், அவனைச் சிறுபிள்ளைபோலவே நடத்தினார். வேலை முடிந்து, அவன் நேராக வீடு திரும்பவேண்டும். சற்றுத் தாமதமானால், நெடுநேரம் வசவு தொடரும்.

வெங்கட்ராமனைப்போன்ற சர்வாதிகாரிகள் மாற மாட்டார்கள். தாம் செய்வதுதான் சரியென்று வாதாடுவார்கள்.

‘என்மேல் எந்தத் தவறும் இல்லை,’ என்று புரிந்து, அவர்கள் கையில் சிக்கிக்கொண்ட அபாக்கியவான்கள் தாமே விலகினால்தான் உண்டு. ஆனாலும் அது எளிதன்று. துணிச்சல் அறவே பறிக்கப்பட்ட நிலையில், வாழ்நாள் முழுவதும் பிறருடன் பழகுவதில் கலக்கம்தான் விளையும்.

சரித்திர சர்வாதிகாரிகளின் பரம்பரை

ஹிட்லருக்குக் குழந்தைகள் கிடையாது. அவருடைய தந்தையின் முதல் மனைவிமூலம் பிறந்த ஐந்து சகோதர சகோதரிகளும் தமது பரம்பரை தொடரக்கூடாது, ஹிட்லரின் மரபு அவர்களிடம் இருந்துவிடக்கூடும் என்ற பயத்தில் அதை ஒழிக்க எண்ணி, குழந்தைகளே வேண்டாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டார்களாம்.

கம்போடியாவின் KILLING FIELDS பற்றிக் கேள்விப்படிருப்பீர்கள். 20,000 பேர் சித்ரவதை செய்யப்பட்டு, தூக்கிலிடப்பட்டனர். சுற்றுலாப்பயணிகளின் பார்வைக்காக அவர்களுடைய மண்டையோடுகளைக் குவித்து வைத்திருப்பதை நேரில் பார்த்தபோது, எனக்கு அளவில்லாக் கலக்கம் ஏற்பட்டது. நாற்பத்து ஐந்து ஆண்டுகளுக்குமுன் நடந்த படுகொலையாக இருந்தால் என்ன! ஒரு மனிதனின் ஈவிரக்கமற்ற செயலால் விளைந்த பாதிப்பு இன்றும் அதிர வைக்கிறது.

இந்த வதைக்குக் காரணமாக இருந்தவர் POL POT. இப்போது, இவருடைய மகள் நெல் பயிரிடும் விவசாயி.

ருஷ்யாவின் ஸ்டாலின், இத்தாலியின் முஸ்ஸோலினி ஆகிய கொடுமைக்கார சர்வாதிகாரிகளின் வழித்தோன்றல்கள் கலைத்துறையில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

நாடுகளை விடுங்கள்! குடும்பத்தில் ஏன் ஒருவர் சர்வாதிகாரியாகச் செயல்படுகிறார்?

கதை1

ஒருவரோடு இணைந்து தொழிலில் இறங்கியவர் முருகேசன். அந்த ‘நண்பர்’ பணத்தைச் சுருட்டிக்கொண்டு போனதால், முருகேசனுக்குப் பெரும் நஷ்டம். பணப்பிரச்னை மட்டுமின்றி, குடும்பத்தினர்முன் ஏமாளியாக நிற்க வேண்டியிருக்கிறதே என்ற அவமானம்.

அதை மறைக்க, அவர்களை முந்திக்கொண்டார். உத்தியோகத்தில் வெற்றிநடை போட்ட மனைவியை ‘முட்டாள்’ என்று பழித்தார். அப்படியும் மனம் ஆறாது, தன் மகளையும் ஓயாது அதிகாரம் செய்தார்.

அவரது மனநிலை புரிந்து மனைவி அடங்கிப்போனாள். மகளுக்கோ தந்தைமேல் வெறுப்புத்தான் ஏற்பட்டது. பலர் முன்னிலையில் மரியாதை இல்லாது அவரிடம் பேச முற்பட்டாள்.

பேச்சுச் சுதந்திரம், கருத்துச் சுதந்திரம் எதுவுமின்றி அடிமைபோல் வாழ நேரிட்டால், தம்மை அவ்வாறு நடத்தும் குடும்பத் தலைவர்மீது ஆத்திரம் வராமல் என்ன செய்யும்?

தன் பொறுப்பில் இருப்பவர்களைப் பாதுகாப்பதும், அவர்களுக்காக உழைப்பதும் ஒரு குடும்பத் தலைவரின் கடமை. அது புரியாது, ‘என்னை யாரால் எதிர்க்க முடியும்!’ என்ற திமிருடன் நடந்தால், பாதிக்கப்பட்டவர் மட்டுமின்றி, அக்குடும்பத்திலுள்ள அனைவருமே பாதிக்கப்படுவார்கள்.

கதை 2

ஒரு தெருவிபத்தில் மாட்டிக்கொண்ட கந்தசாமிக்குக் கைவசம் இருந்த தொழில் போயிற்று. சுயவருமானமின்றி, மனைவியின் உழைப்பில் காலம் தள்ளவேண்டிய நிலை. மனம் நொந்து, தன் குடும்பத்தினரிடம் அதிகாரம் செலுத்த ஆரம்பித்தார். தன் மனம் நொந்ததுபோல், பிறரும் அவதிப்படவேண்டும் என்ற சிறுபிள்ளைத்தனமான வீம்பின் விளைவு அது.

தனக்கு ஒப்பாத காரியத்தை யாரும் செய்துவிடக்கூடாது என்று உறுதியாக இருந்தார் கந்தசாமி. எல்லாருக்கும் நிம்மதி பறிபோயிற்று.

முருகேசன், கந்தசாமி இருவருமே தம்மைப் பலவீனர்களாக உணர்ந்தவர்கள். அதை மறைக்க, அதிகாரத்தை நாடினார்கள்.

வாழ்க்கையில் சறுக்குவது எவருக்கும் நடக்கக்கூடியதுதான். எப்படி மீண்டும் தலை நிமிரலாம் என்று யோசித்தால் நிலைமையை ஓரளவு சமாளிக்கத் தெம்பு வரும்.

கதை

மைமூனாவுக்கு ஐம்பது வயது இருக்கும். பிரசவமான பெண்களுக்கும், பிறருக்கும் உடம்பு பிடித்துவிட்டு, அதில் கிடைக்கும் சொற்ப சம்பாத்தியத்தில் உடலை வளர்ப்பவள்.

“என் மகனுக்கு ஆண்குறி வளைந்திருக்கும். மருத்துவர் அறுவைச் சிகிச்சையால் அதை நேராக்கிவிட முடியும் என்றார். நான், ‘வேண்டாம்’ என்றுவிட்டேன். இவனும் எங்காவது போய்விட்டால், கடைசிக் காலத்தில் என்னை யார் வைத்துக் காப்பாற்றுவார்கள்?” என்று அவள் சொல்லிக்கொண்டே போனபோது, எனக்கு அதிர்ச்சிதான் ஏற்பட்டது. கணவன் தன்னை நிராதரவாக விட்டுப்போனதற்கு, தன்னையும் அறியாது மகனைத் தண்டிக்கிறாள்!

தான் எவ்வளவு கஷ்டப்பட்டாலும், பிள்ளைகளுக்காவது நல்ல வாழ்க்கை அமையவேண்டும் என்று பொறுமை காத்து, அன்புடன் அவர்களை வளர்த்தால், அந்த அன்பைத் திருப்பிக் கொடுக்க மாட்டார்களா!

‘பலர் அப்படி நடப்பதில்லையே!’ என்கிறீர்களா?

எது முக்கியம் என்பதை உணர்த்தவே சக குடும்பத்தினருடன் வீட்டைவிட்டு நகராது இருக்க மகுடத் தொற்றி வந்திருக்கிறதோ?

அதிகாரப்போக்கு, அல்லது எதற்கெடுத்தாலும் சண்டை பிடிப்பது என்று இருந்தால், வாழ்க்கை நரகம்தான்.

எல்லாரும் ஒரேமாதிரி சிந்திக்க வேண்டியதோ, நடக்க வேண்டியதோ இல்லை என்று உணர்ந்து நடந்தால் எவரது சுதந்திரமும் பறிக்கப்படுவதில்லை. ஒருவருடைய ஆற்றலும் முழுமையாக வெளிப்படும்.

சில குடும்பங்களில் ஒவ்வொருவருமே சிறந்து விளங்குவதன் ரகசியம் இதுதான்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *