நாங்குநேரி வாசஸ்ரீ

 8. பொறையுடைமை

பாடல் 71

கோதை யருவிக் குளிர்வரை நன்னாட
பேதையோடு யாதும் உரையற்க – பேதை
உரைப்பிற் சிதைந்துரைக்கும் ஒல்லும் வகையான்
வழுக்கிக் கழிதலே நன்று.

மாலைபோலும் குளிர்அருவி சூழ்
மலைகளை உடைய
மன்னனே! புத்தியில்லா
மனிதனிடம் எதையும் சொல்லாதே!
மீறிச்சொல்லுங்கால் அவன்
மாறுபட்டு பதிலுரைப்பான்
முடிந்தவரை அவனிடத்திருந்து
மீண்டு தப்பித்தல் நல்லது.

பாடல் 72

நேரல்லார் நீரல்ல சொல்லியக்கால் மற்றது
தாரித் திருத்தல் தகுதிமற்று – ஓரும்
புகழ்மையாக் கொள்ளாது பொங்குநீர் ஞாலம்
சமழ்மையாக் கொண்டு விடும்.

குணமற்றோர் பண்பற்றசொல்லைக்
கூறும்வேளை அச்சொல் பொறுத்து
இருத்தலே தகுதியாம் இயலாது பதில்
இயம்பின் அச்செய்கை கடல்சூழ்
உலகத்தாரால் புகழுக்குரியதாய்
உணரப்படாது பழிக்குரியதாய்க்
கொள்ளப்படும்.

பாடல் 73

காதலார் சொல்லுங் கடுஞ்சொல் உவந்துரைக்கும்
ஏதிலார் இன்சொல்லின் தீதாமோ – போதெல்லாம்
மாதர்வண்டு ஆர்க்கும் மலிகடல் தண்சேர்ப்ப!
ஆவ தறிவார்ப் பெறின்.

மலர்களிலெல்லாம் அழகான வண்டுகள்
மகிழ்ந்து ஒலிக்கும் நிறைந்த கடலின்
குளிர்ச்சிமிகு கரையயுடை வேந்தனே!
நன்மை தருவதை மட்டுமே ஆராய்ந்து
நவிலும் அறிஞரைத் துணையாகப் பெறின்
அன்பினால் அவர் கூறும் கடுஞ்சொல்
அயலார் மகிழ்ந்து உரைக்கும் இனிய
சொல்லினும் தீதாகுமோ?

பாடல் 74

அறிவது அறிந்தடங்கி அஞ்சுவது அஞ்சி
உறுவது உலகுவப்பச் செய்து – பெறுவதனால்
இன்புற்று வாழும் இயல்பினார் எஞ்ஞான்றும்
துன்புற்று வாழ்தல் அரிது.

அறியத்தகும் நன்மைதீமை அறிந்து
அடக்கமுடையாராகி
அஞ்சத்தகும் பழிபாவத்திற்கு
அஞ்சி செய்வனவற்றை
அகிலம் மகிழச்செய்து
அறநெறியில் வந்த பொருளால்
அகமகிழ்ந்து வாழும் இயல்புடையார்
அகிலத்தில் எக்காலத்தும் துன்பம்
அனுபவித்து வாழ்தல் இல்லை.

பாடல் 75

வேற்றுமை யின்றிக் கலந்திருவர் நட்டக்கால்
தேற்றா ஒழுக்கம் ஒருவன்கண் உண்டாயின்
ஆற்றுந் துணையும் பொறுக்க, பொறானாயின்
தூற்றாதே தூர விடல்.

பேதமையின்றிச் சேர்ந்து
பிரிக்கமுடியா நண்பர்களான
பின்பு தீயொழுக்கம் ஒருவனைப்
பற்றும்வேளை மற்றொருவன்
பொறுக்க முடிந்த அளவு
பொறுத்துக்கொள்க! முடியாமற்
போகின் அவன் குற்றத்தைப்
பிறர் அறிய வெளிப்படுத்திப்
பழிக்காமல் விட்டுவிலகுக!

பாடல் 76

இன்னா செயினும் இனிய ஒழிகென்று
தன்னையே தான்நோவின் அல்லது – துன்னிக்
கலந்தாரைக் கைவிடுதல் கானக நாட!
விலங்கிற்கும் விள்ளல் அரிது.

வனங்கள் நிறை நாட்டுடை
வேந்தனே! நண்பர்கள் நமக்கு
தீமை செய்யினும் அவை
தமக்கு நன்மையாக மாறும்
என நம்பி அச்செயல் வினைப்பயன்
என்றெண்ணி தன்னைத்தான்
வெறுப்பதல்லாமல் நெருங்கி
வந்து ஒன்றிப் பழகியவரை
விடாதே!  சேர்ந்தபின் பிரிதல்
விலங்கினிடத்தும் இல்லை.

பாடல் 77

பெரியார் பெருநட்புக் கோடல்தாம் செய்த
அரிய பொறுப்ப என்றன்றோ – அரியரோ
ஒல்லென் அருவி உயர்வரை நன்னாட!
நல்லசெய் வார்க்குத் தமர்.

ஒல் என்றொலிக்கும் அருவிகளுடன்
ஓங்குயர் மலைகளுடை வேந்தனே!
பெரியோருடனான மேன்மைமிகு நட்பு
பொறுப்பர் அவர் நம் அரிய குற்றங்களை
என்றெண்ணத்தாலன்றோ? நன்மைகளே
எக்காலத்தும் புரிவார்க்கு நல்ல நட்பு
கிடைத்தலும் அரிதோ?

பாடல் 78

வற்றிமற் றாற்றப் பசிப்பினும் பண்பிலார்க்கு
அற்றம் அறிய உரையற்க – அற்றம்
மறைக்கும் துணையார்க்கு உரைப்பவே தம்மைத்
துறக்கும் துணிவிலா தார்.

உடல்மெலியும் பசித்துன்பம் வரினும்
உதவும் குணமில்லாதோரிடம்
உம் வறுமையச் சொல்லாதீர்!
உயிரை விடும் துணிவில்லாதவர்
உதவும் குணமுடையாரிடம் வறுமையை
உரைக்கலாமேயல்லாது மற்றவரிடத்திலல்ல.

பாடல் 79

இன்பம் பயந்தாங்கு இழிவு தலைவரினும்
இன்பத்தின் பக்கம் இருந்தைக்க – இன்பம்
ஒழியாமை கண்டாலும் ஓங்கருவி நாட!
பழியாகா ஆறே தலை.

இன்பம் தந்த செயலில்
இழிவு நேரினும்
இன்பம் வருகிற பக்கம்
இருக்கின்ற உனக்கு
இன்பம் இடையறாது பெருகி
இருந்து நீங்காமல்
இருப்பதைக் கண்டாலும்
இடையூறு கிளக்கும் பழி
இல்லாத செயல் புரிவதே சிறந்தது.

பாடல் 80

தான்கெடினும் தக்கார்கேடு எண்ணற்க தன்னுடம்பின்
ஊன்கெடினும் உண்ணார்கைத்து உண்ணற்க – வான்கவிந்த
வையக மெல்லாம் பெறினும் உரையற்க
பொய்யோடு இடைமிடைந்த சொல்.

தான் கெட்டாலும் நல்லவர்க்குத்
தீமை செய்ய நினையாதே!
தம் உடலின் சதை முழுதும்
தாங்க முடியாத பசியால் உலரினும்
தகுதியற்ற உண்ணத்தகாதவர்
தரும் உணவை உண்ணாதே!
தூய வானம் மூடிப்போர்த்த
தரணி கிட்டுமாயினும் பொய்கலந்த
தீச்சொற்களைச் சொல்லாதே!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *