நிர்மலா ராகவன்

(பேரவா இருந்தால் சாதிக்கலாம்)

தொலைகாட்சியில் இரவு முழுவதும் திரைப்படங்கள் காட்டுகிறார்கள். காப்பி குடித்தாவது கண்விழித்து விடிய விடிய அவைகளைப் பார்க்கிறார்களே பலரும், எப்படி?

வெளிநாட்டில் நடக்கும் விளையாட்டு நிகழ்ச்சிகளை இரவு நேரங்களில் பார்ப்பவர்களும் இதே ரகம்தான்.

ஒருவருக்கு ஆர்வம் இருக்கும் காரியத்தைப் பார்க்கும்போதோ, செய்யும்போதோ சலிப்பு ஏற்படுவதில்லை. உற்சாகமாக இருக்கிறது. பொறுமையும் அதிகரிக்கும்.

‘புத்தகத்தைக் கையில் எடுத்தாலே கொட்டாவி வருகிறது’ என்னும் மாணவமணிகளுக்கு ஏன் படித்துத் தொலைக்க வேண்டும் என்ற எரிச்சல்.

ஒருவர் தனக்குள்ளிருக்கும் திறமைகளைப் பூரணமாகப் பயன்படுத்தாது போனால் எதையோ இழந்துவிட்டதுபோன்ற வெறுமை, எதிலும் சலிப்பு.

எந்தக் காரியமாக இருந்தாலும், அதில் ஆர்வம் இல்லாதபோது அதைச் சரியாக செய்து முடிக்க முடியாது.

சாதனையாளர்கள் வெற்றிமேல் வெற்றி அடைகிறார்கள். பணமோ, புகழோ மட்டும் அவர்களின் உந்துசக்தியாக இருப்பதில்லை.

முதலில், ‘இந்தக் காரியத்தைச் செய்யவேண்டும்,’ என்று தீர்மானிக்கிறார்கள். பிறகு, அதை எப்படிச் செய்வது என்று யோசித்து, கவனம் கலையாது, அதை நோக்கிச் செல்கிறார்கள். உற்றாரின் பக்கபலமும் இருந்தால் சிறப்பு. அப்படி இல்லாவிட்டாலும், இவர்கள் மனம் தளர்ந்துவிடுவதில்லை.

IRVING WALLACE என்பவர் பிரபலமான அமெரிக்க எழுத்தாளர். அவரைப் பார்க்கும்போதெல்லாம், அவருடைய உறவினர்கள், `இப்போதாவது உருப்படியாக ஏதாவது வேலை செய்கிறாயா?’ என்று கேட்பதாகச் சொல்லிச் சிரித்தார்.

பிரச்னைகளை எப்படி எதிர்கொள்வது என்று அவருக்குப் புரிந்திருந்தது. பிறருக்காக தான் விரும்பிச் செய்ததை நிறுத்தவில்லை. தம் புத்தகங்களின்வழி நிறையப் புகழும் பணமும் சேர்த்தாலும், தொடர்ந்து எழுதினார்.

கமல், ரஜனி போன்ற நடிகர்கள் வெற்றிப்பாதையில் நீடித்திருப்பதின் ரகசியம் என்ன?

‘எங்களுக்குப் பட்டம், பதவி இதிலெல்லாம் அக்கறை கிடையாது. நடிப்பது நடிப்பின்மேல் இருக்கும் வேட்கையால்’. இப்படி ஒரு நிகழ்ச்சியில் கமலஹாசன் கூற, மற்றவர் தலையசைத்து, ஒப்புக்கொண்டார்.

‘எனக்கும் ஆசைதான்..,’ என்று தயங்கியே காலம் தள்ளுவானேன்? துணிந்து இறங்க வேண்டியதுதான். நாம் ஈடுபடப்போகும் காரியத்தால் வேண்டாத விளைவுகள் ஏற்படக்கூடும். அப்போது ஏற்படும் அச்சத்தால் எடுத்த முயற்சியைக் கைவிடலாமா?

கதை

1987-ல், Rick E.Hunts என்ற தச்சர் தன் தலைமயிரைத் தானே வெட்டிக்கொள்ளும் கருவி ஒன்றைக் கண்டுபிடிக்க முடிவெடுத்தார்.

அவருக்கு எப்படி இந்த எண்ணம் பிறந்தது?

ஒரு தொலைகாட்சி நிகழ்ச்சியில், தலைமயிர் வெட்டிக்கொள்ள வருகிறவர்களைத் தலைகீழாகத் தொங்கவிட்டதைப் பார்த்ததும், அதற்குப் பதிலாக, புதிய முறை VACUUM CLEANER பயன்படுத்தி, மயிர் மேலே பறக்கச் செய்யலாமே என்று பொறி தட்டியதாம்.

தொடர்ந்து ஏழு வருடங்கள் நான்கு விதங்களைத் தயாரித்துச் சோதனை செய்திருக்கிறார். ஐம்பது மாற்றங்கள்!

மொத்த செலவு: இன்றைய ஐந்து லட்ச அமெரிக்க டாலருக்குமேல். (அதற்காகத் தன் கடையையும் விற்றிருக்கிறார்).

தச்சராக இருந்தவர் விஞ்ஞானியாக மாறியதில் பலமுறை தோல்வியுற்றாலும், மனம் தளரவில்லை. செய்யும் காரியத்தில் பேரவா இருந்ததால், சலிப்பு ஏற்படவில்லை. எங்கே தவறு என்று ஆராய்ந்து, அதிலிருந்து புதியவற்றைக் கற்றிருக்கிறார்.

இன்று பலருக்கும் அக்கருவி தேவைப்படுகிறது. ஒரு பெரிய கம்பெனி செய்து வைத்திருந்த அனைத்துக் கருவிகளும் விற்றுப்போய்விட்டனவாம்!

‘இப்போது வாழ்க்கை குழப்பமில்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறது. புதிதாக எதையாவது ஆரம்பித்து மாட்டிக்கொள்வானேன்!’ என்று எண்ணமிட்டு, ஏதோ ஒரு நியதியை எப்போதும் பின்பற்றிக்கொண்டிருந்தால் அமைதி கிடைக்கலாம். ஆனால், பெருமகிழ்ச்சி?

விளம்பரங்களைப் பாருங்கள். வித்தியாசமாக எதையாவது செய்பவர்களே நம் கவனத்தைக் கவர்கிறார்கள்.

கதை

பல வருடங்களுக்குமுன், குமுதம் பத்திரிகையைக் கையில் எடுத்தாலே மரிக்கொழுந்து வாசனை ஆளைத் தூக்கும். ஒரு செண்ட் தயாரிப்பாளர்களின் விளம்பர உத்தி அது.

விழாவென்றில், கையில் கிடைத்த புதிய பத்திரிகையை நான் ஆவலுடன் மூக்கருகே கொண்டுபோனேன்.

அருகிலிருந்த சிறு பெண்கள், “யார்?” என்று ஆவலுடன் விசாரித்தார்கள், நான் அட்டைப்படத்திலிருந்த ஏதோ நடிகரைக் கொஞ்சுவதாக எண்ணி!

மனிதர்களும் வித்தியாசமாகச் செயல்பட்டால்தான் கவனிக்கப்படுகிறார்கள்.

தன்னைப் பிறர் கவனிக்க வேண்டும் என்று அசட்டுத்தனமாக ஏதாவது செய்வதைவிட பிறருக்குத் தம் சக்தியைமீறி சேவை செய்பவர்களே பாராட்டுக்கு உரியவர்களாக ஆகிறார்கள்.

கதை (மலேசியாவில் நடந்தது)

அண்மையில், தொற்றுநோய் பரவாதிருக்க யாரும் வீட்டுக்கு வெளியே வரக்கூடாது என்ற நிலையில், பள்ளிகள் மூடப்பட்டன. கணினிமூலம் ஆசிரியர்கள் போதித்தனர்.

மலேசிய கிராமம் ஒன்றில் கணினி வசதி கிடையாது. ஏன், அங்கு செல்ல சரியான பாதைகூட கிடையாது.

ஏற்கெனவே வசதி குறைந்த குடும்பங்களிலிருந்து வந்திருக்கும் குழந்தைகள் மேலும் பின்தங்கிவிடுவார்களே என்று ஓர் ஆசிரியர் யோசித்தார்.

அதன் விளைவு: பிற ஆசிரியர்களை அவர்களது பாடத்திட்டத்தைத் தமக்கு அனுப்பும்படி கேட்டுக்கொண்டார். அவைகளைப் பிரதி எடுத்து, மிகுந்த சிரமத்துடன் அக்கிராமத்திற்குச் சென்று, மாணவர்களிடம் விநியோகித்தார்.

‘வீட்டுப்பாடத்தை உடனே முடித்துவிட்டேன்! அடுத்து எப்போது வருவீர்கள்?’ என்று ஒரு மாணவன் உற்சாகமாகத் தெரிவித்தது அவருக்குப் பெருமகிழ்ச்சி அளித்தது.

அதிகமான யோசனை ஆர்வத்துக்கு முட்டுக்கட்டை. ஒரு காரியத்தை ஆரம்பிக்குமுன் திட்டமிடுதல் அவசியம்தான். ஆனால், ‘வெற்றி பெறுவோமோ? யார் என்ன சொல்வார்களோ!’ என்றெல்லாம் ஐயம் எழுந்தால் ஓரடிகூட எடுத்து வைக்க முடியாது.

என்னுடன் வேலை பார்த்த ஆங்கில ஆசிரியை சொன்னாள்: “எனக்குக் கதை எழுத ஆசை. ஆனால், ஒரு வரி எழுதியதும், `இப்படி இருக்கலாமோ?’ என்ற சந்தேகம் வந்துவிடும். அதை மாற்றினால், இன்னொரு விதமாக எழுதத் தோன்றும். இப்படியே, செய்ததில், ஒரு வரிக்குமேல் செல்லவே முடியவில்லை!”

நல்லவேளை, எனக்கு அந்தக் குழப்பமெல்லாம் கிடையாது. மனதில் தோன்றுவதை ஆங்கில எழுத்துக்களில் வடித்தாலே பெரிய காரியம் என்று நினைத்து எழுதுவேன்.

“அது எப்படி, கணக்கு ஆசிரியை, பௌதிக ஆசிரியை என்று நீங்களெல்லாம் போட்டிகளில் பரிசு பெறுகிறீர்கள்!” என்று இன்னொரு ஆங்கில ஆசிரியை அதிசயப்பட்டாள்.

போட்டிகளில் பரிசுபெற்ற கதைகளைப் படித்தால் நீதிபதிகள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பது புரிந்துவிடும். கணக்கிலும் விஞ்ஞானத்திலும் இருப்பதுபோல் இதுவும் ஒருவித ஃபார்முலாதான்.

செய்யும் தொழிலே தெய்வம் என்கிறோம். ஆனால், பிடித்துச் செய்யும் காரியத்திற்குத்தான் அது பொருந்தும். அந்நிலையில், ‘இதனால் எவ்வளவு பணம் கிடைக்கும்?’ என்ற யோசனை எழாது.

பிடிக்காவிட்டாலும், செய்ய நேர்கிறதா?

WHAT IS WORTH DOING IS WORTH DOING WELL.

எதைச் செய்ய நேரிட்டாலும், முழுமையான கவனத்துடன், ஈடுபாட்டுடன் செய்யவேண்டும். பிறர் மெச்சுகிறார்களோ, இல்லையோ, திருப்தியாவது கிடைக்குமே!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *