வாழ்க்கை அறிவு

0

முனைவர்.நா.தீபா சரவணன்
உதவிப்பேராசிரியர்
ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி, கோவை.

மார்பு வரை ஏற்றிவிட்ட தவிட்டு நிறத்தில் உள்ள கால்சட்டையும், ஆங்காங்கு ஓட்டைகள் இடப்பட்ட வெள்ளை நிற பனியனும் அணிந்து, ஷேவ் செய்து பளிச்சென ஒரு சின்ன அறையில் சுழல் நாற்காலியில், புகைக்குழலுடன் அமர்ந்திருக்கும் மருத்துவரின் முன்னால், விருப்பமில்லாத ஒரு கர்ப்பத்தின் தயங்கலுடன் ஒரு கிராமத்து இளம்பெண்ணும், ஒரு இளைஞனும் சென்றனர்.

என்ன நடந்தது என்பதை மருத்துவரின் அனுபவப்பூர்வமானக் காட்சி ஒரு நிமிடத்தில் உணரவைத்தது. பரிசோதனைக்காக வழக்கம்போல இருண்ட அறைக்கு அவர் அப்பெண்ணை அழைத்தார். அவள் அவரை பின்தொடர்ந்தாள். அறையின் கதவடைந்தது.

“நீ ஒரு குட்டி கெட்டிக்காரி” மேசைமீது நீண்டு நிமிர்ந்து கிடக்கும் பெண்ணிடம் டாக்டர் கூறினார். அவர் பரிசோதனைத் தொடங்கினார்.

பக்கத்து அறையிலிருந்து அங்கு கிடக்கும் ஏதோ வெளியீடுகளின் பக்கங்களை திருப்பிப்திருப்பிப் பார்த்துக் கொண்டிருக்கும் இளைஞனுக்கு  வாசிப்பதில் கவனம் செலுத்த முடியவில்லை. அடுத்த அறையில் பரிசோதனைக்குச் சென்றிருக்கும் பெண்ணுடன் தான் நடத்திய உறவு அவனது சிந்தனையைக் கலக்கியது. ஒரு வாழைத்தோப்பின் தனிமையையும், வாழைகளுக்கு நடுவில் அடிக்கடி வீசுகின்ற குளிர்ந்தகாற்றையும் மண்ணின் வாசனையையும் அவன் சபித்தான். அப்படியொரு வாழைத்தோப்பு இல்லாதிருந்திருந்தால் கடும் பச்சையும் இளம்பச்சையுமான வாழையிலைகளுக்கு குளிர்ந்தகாற்று வீசாதிருந்திருந்தால்! மண்ணிற்கு போதையேற்றக்கூடிய வாசம் இல்லாதிருந்திருந்தால்!.

கதவு திறந்தது. டாக்டர் ஒரு பாத்டவலில் கையைத் துடைத்துக் கொண்டு அறைக்கு வந்தார்.

“ஒன்றோ ரெண்டோ மாசமல்ல. இத்தனநாள் ஏ வெச்சிட்டிருந்தீங்க?”  தனது நாற்காலியில் போய் உட்கார்ந்து அவர் கேட்டார்.

“அவ இப்பதா சொன்னா” – இளைஞன் கூறினான்.

“அப்படீனா அவளுக்கு வேற ஏதாவது உத்தேசம் இருக்கும்” மருத்துவர் கூறினார்.

அவன் அதை மறுக்கவில்லை.

கதவிற்குப் பின்னால் பெண்ணின் நிழல் ஆடியது.

“நீ வெளில போய் உட்காரு. நாங்க பேசட்டும்.” டாக்டர் அவளிடம் கூறினார்.

“அவளின் முகத்தில் வெறுப்பு தெரிந்தது. இளைஞன் அவள் பின்னாலேயே வெளியில் வந்தான்.

“ம் ஹீம்?”

“அவன எனக்குச் சுத்தமாப் பிடிக்கல”

“உனக்கு அவன புடிக்க வேண்டா”

“அவனொரு கேவலமானவெ, நாம போகலாம்”

டாக்டர் அதக் கேட்டிருவாறோன்னு  இளைஞனுக்குத் தோன்றியது.

“எடீ நமக்கு, நமக்கு நம்மோட கார்யம் நடக்க வேண்டாமா?. இவ்வளவு தூரம் வந்திட்டுத் திரும்பிப்போறதா? கஷ்டம்னு அவர் சொல்றாரு. நா போய் அவர எப்படியாவது சொல்லி சம்மதிக்க வெக்கிறே”

“அதவிட நல்லது  என்னக்கொல்றதுதா”

“நீ கொஞ்சம் அடங்கியிரு”

அவன் திரும்பவும் டாக்டரின் அறைக்குச் சென்றான்.

டாக்டர்  தன்னுடைய  புகையிலைக் குழலை பற்றவைத்துக் கொண்டிருந்தார். ஒரு புன்சிரிப்புடன் அவர் இளைஞனை வரவேற்றார். அவர்களுக்குள் சர்ச்சை தொடங்கியது. அது நீண்டு கொண்டே சென்றது.

“இதுதா இருக்கு எங்கையில” இளைஞன் சட்டைப்பையிலிருந்து பேப்பர்ல் கட்டிவைக்கப்பட்ட பணத்தை டாக்டர் முன்னால் வைத்தார்.

கட்டை விரித்து பணத்தை எண்ணியபோது அவர் கொஞ்சம் கூட திருப்பதி அடைந்தவராகக் காணப்படவில்லை. நெற்றியில் சுருக்கத்துடன் அவர் இளைஞனைப் பார்த்தார். அவர்ககளுக்குள் விவாதம் இரண்டாம் கட்டத்தை நெருங்கியது.  இந்தமுறை வெளியில் இருக்கும் இளம்பெண்ணும் விவாதத்திற்கு உட்படுத்தப்பட்டாள். அவள் ஒரு சின்ன கெட்டிக்காரியும் அமைதியான அழகுமுடையவள்னு நான் நெனக்கறேன்னு டாக்டர் வெளிப்படுத்தினார். அவள் ஒரு வறுமையானக் குடும்பத்தைச் சார்ந்தவள் என்று இளைஞன் கூறினான்.  வறுமையின் நிழல் அவளது உடலில்லை என்றார் டாக்டர். அவளுடைய மனது மிகவும் மிருதுவானது இளைஞன் கூறினான். நான் அதை விரும்பறேன்னு டாக்டர் கூறினார். இளைஞன் நிசப்தமானான். மேசைக்குள்ளிருந்த சின்ன கண்ணாடியெடுத்து அதில் முகம் பார்த்தார். பிறகு பின்னாலுள்ள பீரோவிலிருந்து பர்ஃப்யூமை கைநீட்டி எடுத்தார். உடம்பில் வாசனை திரவம் ஸ்ப்ரே பண்ணும் சத்தம் கேட்டது. ஷ்… ஷ்…

இளைஞனின் மனதில் எதிர்பாராமல் குளிர்ந்த காற்று வீசியது. வாழைகளின் நிழல்கள் அவனைத் தடவியது.

“வேண்டா  என்னோட பணத்தக்குடுங்க!” அவன் ஏதோ தாளம் மாறிய விதத்தில் கூறினான்.

அவனும் அப்பெண்ணும் வெளியிலிறங்கி நடந்தனர். இருவரும் மௌனம் பாலித்தனர். சிறிது நேரம் கழித்து அவள் அவனை நோக்கினாள்.

“என்ன  யோசிக்கறீங்க?” அவள் கேட்டாள்.

அவனின் பதில் உடனே வந்தது.

“உன்னே எப்படிக் கொல்லலாம்னு”

அவள் ஒரு நொடி பதைத்தாள். ஆனால் உடனே சுயமாக மீண்டெழுந்தாள். சில அடிகள் நடந்தபிறகு அவள் மனமுருகிக் கூறினாள்.

“உங்க கையால எப்படி சாகறதுக்கும் எனக்கு விருப்பம்தா……… போதுமா?”

மூல நூலாசிரியர்: சி.வி.பாலகிருஷ்ணன்
மொழி : மலையாளம்
தமிழில்: முனைவர்.நா.தீபா சரவணன்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.