நாங்குநேரி வாசஸ்ரீ

பெரியாரைப் பிழையாமை

பாடல் 161

பொறுப்பர்என்றெண்ணிப் புரைதீர்ந்தார் மாட்டும்
வெறுப்பன செய்யாமை வேண்டும்; – வெறுத்தபின்
ஆர்க்கும் அருவி அணிமலை நாட!
பேர்க்குதல் யார்க்கும் அரிது.

ஒலிக்கும் அருவிகளை அணிகலனாய்
அணிந்த மலைசூழ் நாட்டின் வேந்தனே!
பொறுத்துக்கொள்வர் என நினைத்து
பெரியோரிடம் அவர் வருந்துமாறு
குற்றம் செய்யாமை நன்று
அவர் வெகுண்டால் அதனை மாற்றுதல்
அத்துணை எளிதன்று எவருக்கும்.

பாடல் 162

பொன்னே கொடுத்தும் புணர்தற்கு அரியாரைக்
கொன்னே தலைக்கூடப் பெற்றிருந்தும் – அன்னோ
பயனில் பொழுதாக் கழிப்பரே, நல்ல
நயமில் அறிவி னவர்.

பொன்னையே கொடுத்தாலும் நெருங்கமுடியாப்
பெரியோரைச் செலவின்றி சேரத்தக்க நிலையைப்
பெற்றினும் நற்பண்பற்ற அறிவிலார்
பயனின்றி வீணாய்க் காலம் கழிப்பாரே.

பாடல் 163

அவமதிப்பும் ஆன்ற மதிப்பும் இரண்டும்
மிகைமக்க ளான்மதிக்கற் பால – நயமுணராக்
கையறியா மாக்கள் இழிப்பும் எடுத்தேத்தும்
வையார் வடித்தநூ லார்.

அவமதிப்பும் மிக்க மதிப்பும்
ஆகிய  இரண்டும் பெரியோரால்
மதிக்கத்தக்கன நல்லொழுக்கமற்ற
மனிதரின் பழிப்பையும் பாராட்டையும்
ஆராய்ந்த நூலறிந்த பெரியோர்
அற்பமாய்க் கருதி மதியார்.

பாடல் 164

விரிநிற நாகம் விடருள தேனும்
உருமின் கடுஞ்சினம் சேணின்றும் உட்கும்;
அருமை யுடைய அரண்சேர்ந்தும் உய்யார்
பெருமை யுடையார் செறின்.

படம்விரிக்கும் பாம்பு மலைப்
பிளப்பில் இருப்பினும் எழும்
இடியோசைக்கு அஞ்சுதல்போல்
மேன்மைமிகு பெரியோர்
மனதில் கோபம் கொள்வாராயின்
தவறிழைத்தோர் புக இயலா
தரமான கோட்டையிலிருப்பினும்
தப்பிப் பிழைக்கமாட்டார்.

பாடல் 165

எம்மை அறிந்தலிர் எம்போல்வார் இல்லென்று
தம்மைத்தாம் கொள்வது கோளன்று; – தம்மை
அரியரா நோக்கி அறனறியும் சான்றோர்
பெரியராக் கொள்வது கோள்.

எம்மை அறியமாட்டீர் இவ்வுலகில்
எமக்கு ஒத்தவர் எவருமிலர் எனத்
தம்மைத்தாமே மதித்தல்
தக்க குணம் ஆகா
அறம் உணர்ந்த பெரியோர் நம்
அருமை உணர்ந்து நம்மைப்
பெரியோர் என மதித்தலே
பெரும் பெருமையாம்.

பாடல் 166

நளிகடல் தண்சேர்ப்ப! நாணிழல் போல
விளியும் சிறியவர் கேண்மை; – விளிவின்றி
அல்கு நிழல்போல் அகன்றகன்று ஓடுமே
தொல்புக ழாளர் தொடர்பு.

பெருங்கடலின் குளிர்கரையுடையவனே!
முற்பகலின் நிழல் போல் குறைந்து
மறையும் சிறியோர் நட்பு
பழம்புகழ் மிக்க பெரியோரின் நட்போ
பிற்பகல் நிழல்போல் மிக்கு வளர்ந்து நீளூம்.

பாடல் 167

மன்னர் திருவும் மகளிர் எழில் நலமும்
துன்னியார் துய்ப்பர் தகல்வேண்டா – துன்னிக்
குழைகொண்டு தாழ்ந்த குளிர்மர மெல்லாம்
உழைதங்கண் சென்றார்க்கு ஒருங்கு.

அரசனின் செல்வத்தையும் பொதுமகளிரின்
அழகையும் நெருங்கினவர் துய்ப்பர்
அதற்குத் தகுதி வேண்டா எதுபோலெனில்
அருமையாய்த் தளிர்விட்டுத் தழைத்து
அமைந்த குளிர்மரமெல்லாம் தம்
அருகே வந்தவர்க்கு நிழல்தருதல் போல.

பாடல் 168

தெரியத் தெரியும் தெரிவிலார் கண்ணும்
பிரியப் பெரும்படர்நோய் செய்யும்; – பெரிய
உலவா இருங்கழிச் சேர்ப்ப யார்மட்டும்
கலவாமை கோடி யுறும்.

வற்றாத கழிக்கரையுடை
வேந்தனே! நன்மை தீமை
பிரித்துணரும் தெளிவிலாரிடம்
பழகிப்பின் பிரிய நேர்ந்தால் அப்
பிரிவு மிகு துன்பத்தைத் தருமெனவே
எவரிடமும் நட்பு கொள்ளாமை
எல்லோர்க்கும் கோடிபங்கு நன்மையாம்.

பாடல் 169

கல்லாது போகிய நாளும் பெரியவர்கண்
செல்லாது வைகிய வைகலும்; – ஒல்வ
கொடாஅ தொழிந்த பகலும் உரைப்பின்
படாஅவாம் பண்புடையார் கண்.

கற்கவேண்டிய நூல்களைக்
கல்லாமல் வீணாகக்
கழிந்த நாட்களும்
கேள்வியின் காரணமாய்ப்
கற்ற பெரியோரிடம் செல்லாது
கழிந்த நாளும் தம்மால்
கொடுக்கமுடிந்த அளவு
கேட்பவர்க்குக் கொடாது
கழிந்தநாளும் பண்புடையோரிடத்துக்
காணக் கிட்டாதவை.

பாடல் 170

பெரியார் பெருமை சிறுதகைமை ஒன்றிற்கு
உரியார் உரிமை அடக்கம் – தெரியுங்கால்
செல்வம் உடையாரும் செல்வரே தற்சேர்ந்தார்
அல்லல் களைப எனின்.

பெரியோருக்குப் பெருமை தருவது
பண்பான எளிமையுணர்த்தும் செருக்கிலாப்
பணிவுடைமையாம் கற்றோரின்
பண்பு அடக்கமுடைமையாம்
ஆராய்ந்து நோக்கின் தம்மை
அண்டியவரின் வறுமைபோக்குவாராயின்
செல்வம் உடையவரும் செல்வரே.

1 thought on “நாலடியார் நயம் – 17

  1. எளிதாகப் புரிந்தது
    பாராட்டுக்கள்

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க