இறையியல் சிந்தனைகள் – ஸ்டீவ் ஜாப்ஸும் வள்ளலாரும் – 18

0

அவ்வைமகள்

18. மொழியும் உடையும், கொடியும்  

புரட்சியாளர்கள் பொதுவாக, மூன்று விஷயங்களில் தம் புரட்சியை போதிக்கின்றனர்; ஒன்று: மொழி, இரண்டு: உடை, மூன்று: கொடி. புரட்சியியலில், மொழியும், உடையும், கொடியும் புரட்சியின் கருவிகள்  என்று கூறப்படுவது வழக்கம் [1].

மொழியும்,  உடையும், கொடியும்  மனித சமூகத்தின்  மிகப்பெரும் அடையாளங்கள் – எனவே இவை மூன்றும், புரட்சிக்கு முக்கிய அடையாளங்களாக எடுத்துக் கொள்ளப்படுவது புரட்சியாளர்களின் வழக்கமெனவே தெரிகிறது.

எடுத்துக்காட்டாக, பிரெஞ்சுப் புரட்சியை (மே 5, 1789 – நவம்பர் 9, 1799) எடுத்துக் கொள்வோம். பிரெஞ்சு மொழியில் அதுகாறும் து (tu) என்பது (vous) என்று மாறி, பிரெஞ்சு மொழியின் இலக்கணத்தையே மாற்றியது  பிரெஞ்சுப் புரட்சியே.

அதுபோன்றே, பிரெஞ்சுப் புரட்சியில், ஆண்-பெண் இருபாலரின் உடைகளும் – அவற்றின் மூவண்ணங்களும் கோடுகளும், ரிப்பன்களும் ஆண்டானின் ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்தும், சுயஆட்சிக்கு ஆதரவு தெரிவிப்பதுமானதாக அணிந்து கொள்ளப்பட்டன. அவ்வாறே, பிரெஞ்சுப் புரட்சியின் கொடியும் மூவண்ணப் புரட்சிக் கொடியாக வடிமைக்கப்பட்டு ஏற்றப்பட்டது – ஏந்தப்பட்டது.

பிரெஞ்சுப் புரட்சியின் நூற்றாண்டு நெருங்கும் தறுவாயில்தான், இங்கே, வள்ளலார், ஆன்மீகப் புரட்சி விளைக்கிறார்.  தம் புரட்சிக்கு அவர் தெரிந்தெடுத்தது, மொழியும், உடையும், கொடியுமே.

வள்ளலாரின் தமிழ் வெகு எளிமையானது – இலகுவானது – இசைநயம் உடையது – பொருளாழம் பொதிந்தது. “பருகியும் அறியேன் – விழுங்கியும் ஆறேன்” என்று ஆற்றா இன்பமாய் ஊற்றுப் பெருக்கெடுக்கும் சுவை பொதிந்தது.

வள்ளலாரின் உடை  என்பது ஆன்மீக உலகத்தில் புதுப் புரட்சி. முன்னெப்போதும் அவரைப்போல உடைத் தோற்றத்தை ஒரு புரட்சிப் பொருளாய் எவரும், ஆன்மீகத்தில் எடுத்தாளவில்லை.

அவர் உருவாக்கி அளித்த வெண்மை- மஞ்சள் இருவண்ண ஆன்மீகக் கொடி மகத்தான அறிவியல் – உடலியல் தத்துவம். வள்ளலாரின் மொழி, உடை, கொடி ஆகியன அவரது ஆன்மீகப் புரட்சியின் கருவிகளாக இயங்கிய தன்மை பற்றி விரைவில் விரிவாக விவாதிக்க இருக்கிறோம்.

அதற்கு முன், ஸ்டீவ் ஜாப்ஸின் உடைப் புரட்சி பற்றி சிந்தித்துவிட்டு, வள்ளலாருக்குச் செல்வோம்.

கணிணிப் பொருட்களில் தொழில்நுட்பப் புரட்சி செய்த ஸ்டீவ் ஜாப்ஸும் கூட, தனது மொழியில் புரட்சி செய்ததைப் போல, தனது  உடையிலும்  புரட்சியை விளைத்தவரே. ஒரு காலக்கட்டத்திற்குப் பிறகு (1980க்குப் பிறகு), அவர், ஆமைக்கழுத்துச் சட்டை எனப்படும் உயர்கழுத்தும் நீள்கைகளும் கொண்ட பனியன் துணியாலான கருப்பு நிறச் சட்டையை மட்டுமே அணியத் தொடங்கினார் – அதனுடன் எப்போதும்  அவர் அணிந்தது  நீல நிற ஜீன்ஸ் பேண்ட் மட்டுமே – இறக்கும் வரையில் இதுவே அவர் உடையானது.

சொல்லப் போனால்,  முதலில்,  இதனை ஆப்பிள் நிறுவனத்தின் சீருடையாக்கும் எண்ணமும் கூட அவருக்கு இருந்தது. அந்த முதல்படிகளில் ஆப்பிள் நிர்வாகத்திற்கும் அதன் பணியாளர்களுக்கும்  இவ்வுடையின் சிறப்புத் தெரியவில்லை போலும். அதற்கு அவர்கள் ஆதரவு அளிக்கவில்லை. அதனால், ஜாப்ஸ் தளர்ந்தாரில்லை. இந்த உடையைத் தனது சீருடை என்றே அழைத்து, ஜாப்ஸ் அதனையே தொடர்ந்து அணிந்து வரலானார்.

உடையின் எளிமை, உடையின் கண்ணியம், செய்யும் பணிக்கு ஏற்ப உடை தரும்  வசதி,  அதன் தனித்துவ   அடையாளம், மற்றும் அது பிறருக்குச் சொல்லும் ஒட்டுமொத்தச் சேதி, ஆகிய  ஐந்தையும் கருத்தில் கொண்டே ஜாப்ஸ் இந்தச் சீருடையைத்  தனக்காகத்  தெரிந்தெடுத்துக் கொண்டார்.

ஜாப்ஸ் தெரிந்தெடுத்த உடை, தொழிலாளியின் உடை (Workman attire) – முதலாளித்துவத்தைத் தூக்கியெறிந்தது. தொழிலாளிதான் தொழிலகத்தில் முதன்மையானவன் என்பதை இடையறாது எடுத்தியம்பும் ஊடகமாக ஜாப்ஸ் தெரிந்தெடுத்த சீருடை அமைந்தது.

“இந்த நிறுவனத்திலே – பணியாளர்களே முக்கியம்” என்னும் அதே நேரத்தில் பணியாளர்கள் செய்யும் பணிதான் இந்த நிறுவனத்தின் ஜீவநாடி என்று முரசறைவைது போல உரைப்பதாய், ஆனால் மவுனமாய் எடுத்தியம்புவதாக அவரது உடை அமைந்தது.

பின்னாளில், எவ்வித அறிவுறுத்தலுமின்றி, தன்னியல்பாய்த் தன்னாலேயே  இவ்வுடை  ஆப்பிளின், வலியுறுத்தப்படாத சீருடையானது.

ஒருவர்பின் ஒருவராக, ஜாப்ஸ் அணிந்து கொண்ட உடைக்கு அனைவரும் மாறலானார்கள்.

காலர் வைத்த சட்டைகளை ஒதுக்கிவிட்டு, பாமரமான – எளியோர்களும் சர்வ சாதாரணமாய் அணிந்து கொள்வதுமான பனியன் துணி உயர்க்கழுத்துச் சட்டைகளைத் தம் அடையாளமாகக் கொள்வதை,  ஆப்பிள் நிறுவனத்தில் உள்ளோர் பெருமிதமாய்க் கருதத் தொடங்கினர்.

கீழே உள்ள புகைப்படத்தில், இடப்புறம் உள்ளவர் ஆப்பிளின் தலைமை நிர்வாக அதிகாரி குக் என்பவர்;  வலப்புறம் உள்ளவர்  ஸ்டீவ் ஜாப்ஸ் .

சீருடை, ஜாப்ஸைத் தாண்டி இன்ன பிறர்க்கும் பரவி நிற்பதைக் காண்க.

https://nypost.com/2015/03/13/5-people-who-famously-were-super-committed-to-their-bosses/

மனித சமுதாயத்தோடு நேரடித் தொடர்பில் இருப்பவர்கள்  சாதாரண மனிதர்களின் சாயலில் இருப்பதை, தொழில்ரீதியாகவும், வியாபாரரீதியாகவும் சாதகமான அடையாளம் என்று  ஆப்பிளில் உள்ளவர்கள் உணர்ந்தது சுயவெளிச்சமே தவிர எவ்வித வற்புறுத்தலாலும் இல்லை.

புரட்சியாளர்களின் எளிவந்த புரட்சியின் வலிமையை உண்மையான சான்றாக அறிவிக்க, இந்த உண்மை நிகழ்வு சிறந்த எடுத்துக்காட்டாக அமையும்.

புரட்சியாளர்கள் தம் புரட்சிக்கான வித்துகளை,  பிறரது வெற்றி எடுத்துக்காட்டு களிலிருந்து ஆய்ந்து தெரிவு செய்துகொள்கிறார்கள் என்றால் அது உண்மையே.

ஜாப்ஸிற்குச் சீருடை பற்றிய எண்ணம் எவ்வாறு தோன்றியது என்றால், அது அவருடைய ஜப்பானியப் பயணத்தின் போதுதான். 1980இல் ஜப்பானில் உள்ள சோனி நிறுவனத்திற்குச் சென்றபோது அங்கே அனைவரும் சீருடை அணிந்திருப்பதைப் பார்த்த ஜாப்ஸ், சோனி நிறுவனத்தின் தலைவரான, அகியோ  மொரிட்டாவிடம் அதுபற்றிக் கேட்கிறார்.

அப்போது ஜாப்ஸிடம் அகியோ சொன்னதாவது: “போருக்குப் பிறகு எங்கள் மக்களுக்கு உடுத்திக்கொள்ள உடை இல்லை. எனவே நாங்கள் எங்கள் நிறுவனத்திலிருந்து, எங்கள் பணியாளர்களுக்கு தினப்படி அணிந்துகொள்ள உடை வழங்கி உதவினோம். நாங்கள் அவர்களுக்குத் தந்த உடையின் வடிவமைப்பு அவர்களுக்கு வெகுவசதியாக இருப்பதை அவர்கள் பாராட்டியதோடு, போரின் தாக்கத்திலிருந்து மீண்டு, பொருளாதாரம் சற்று மேம்பட்ட பிறகும்கூட, அவர்கள், நாங்கள் வழங்கிய எளிய உடையையே தினப்படி விடாமல், அணிந்து வந்தார்கள்! எங்கள் பணியாளர்களுக்கும், எங்கள் நிறுவனத்திற்கும் இடையே ஒரு நிலைத்த  பாசப் பிணைப்பை இந்த உடை உருவாக்கியது என்றே சொல்லவேண்டும்.”

“அதன்பிறகு, காலப்போக்கில், இதேஉடையே  சீருடையாகியது; உடை வடிமைப்பாளர் ஐஸீ மியாக்கே என்பவரிடம் சொல்லி, சிறுமாறுதல்களை ஏற்படுத்தி, கூடுதல் வசதியுடன் எங்களது சீருடைகள்  தயாராகின!”

அகியா, இதனைச் சொன்ன மாத்திரத்தில், ஐஸீ மியாக்கேவை ஜாப்ஸ் சந்திக்கிறார். தனது ஆப்பிள் நிறுவனத்திற்கு ஏற்றாற்போல் உடை ஒன்று வடிவமைத்துத் தர முடியுமா என்று கேட்கிறார். அவரும்  சில மாதிரிகளைத் தயார் செய்து கொடுக்கிறார். அந்த மாதிரிகளை  எடுத்துக்கொண்டு அமெரிக்கா திரும்பியவர், சோனி நிறுவனத்தில் தான் கண்ட  சீருடை பற்றி ஆப்பிளில்  பேசுகிறார். ஆப்பிளிலும், இவ்வாறு உடுத்திக்கொள்ளலாமா என்று கேட்கிறார். ஆனால், நான் ஏற்கெனவே சொன்னது போல, ஆப்பிளில் எவரும் சீருடையை எண்ண அளவில் கூட முதலில் ஏற்றுக்கொள்ளவில்லை.

ஆனால், ஜாப்ஸ், பணியாளர் சீருடையில் மட்டுமே, தான் எப்போதும் அலுவலகத்தில் தோன்றுவேன் என உறுதி செய்துகொண்டு ஜப்பானில் மியாக்கேவைத் தொடர்பு கொண்டு,  தன்னுடைய அளவுக்கு, கருப்பு நிறத்தில் ஆமைக்கழுத்து கொண்ட நீள் கைவைத்த பனியன் சட்டைகளைத் தயாரித்து அனுப்ப முடியுமா எனக்கேட்க, அவரும் நூறு சட்டைகளை ஜாப்ஸின் அளவுக்குத் தயாரித்து அனுப்பி வைத்தார். அதை நித்தமும் தவறாமல், தான் இறக்கும்  வரையில் அணிந்தார் ஜாப்ஸ்.

அவர் இவ்வாறு நேரடியாய், வெட்ட வெளிச்சமாய் எளிய உடையில் வாழ்ந்து காட்டிய வாக்கில் மெல்ல மெல்லப் பணியாளர்கள் தாமே முன்வந்து அவ்வுடையைப் பின்பற்றினர் என்பதோடல்லாது, கணினித் தொழில்நுட்பத் துறையிலும் இன்னபிற துறையிலும் இருக்கும் நிர்வாகத் தலைவர்கள்  எவரும் ஜாப்ஸ் போன்றே உடையணிய ஆரம்பித்தனர்.

சொல்லப் போனால், ஜாப்ஸ் ஏற்படுத்திய உடைப் புரட்சி, இன்னும் ஒருபடி மேலே போய் – வெற்றியாளர்களாக விரும்புபவர்கள்  யாவரும் தினமும் ஒரே உடையை அணியவேண்டும் – உடை வடிவத்தில் மாற்றம் நிகழ்த்திக்கொள்ளக் கூடாது என்கிறதான ஒரு கொள்கை உலகில் உருவாகி, அது ஜீவிதமாய் நிற்பதைக் கண்கூடாகப் பார்க்கிறோம்.

சீருடை என்பது பணியாளர்களுக்கிடையிலும், பணியாளர்களுக்கும் நிர்வாகத்துக்கும் இடையிலும் பாசப் பிணைப்பை ஏற்படுத்துகிறது என்று சோனி தலைவர் கூறியது ஆப்பிள் நிறுவனத்தில் நிதர்சனமாய் நிகழ்ந்தது.

கணையத்தில் புற்றுக்கட்டி ஏற்பட்டு, மருத்துவமனையில், ஜாப்ஸ் கிடக்க, அவருக்கு  மாற்றுக் கல்லீரல் பொருத்தும் முகமாகக் கொடையாளியாக “நான் வருகிறேன்” “நான் வருகிறேன்” என்று போட்டி போட்டுக்கொண்டு, ஆப்பிள் நிறுவனத்தின் ஒவ்வொரு பணியாளரும் இசைவு தெரிவித்தனர். அவர்களுள் ஒரே ஒருவருக்கு மட்டுமே கொடையாளிக்கான பொருத்தம் அமைகிறது. அவர் தான் ஆப்பிளின் தலைமை நிர்வாக அதிகாரியான குக். அவரது  இரத்தம்  மற்றும் கல்லீரல், ஜாப்ஸின்  மாற்றுக் கல்லீரல் அறுவைச் சிகிச்சைக்குத் தோதாக இருப்பதாக அறியப்படுகிறது.

குக் தனது கல்லீரலின் ஒரு பகுதியை ஜாப்ஸிற்குத் தர ஆர்வத்தோடும் முழு மனதுடனும் முன்வருகிறார். இந்த நெகிழ்ச்சியை விட நெகிழ்ச்சியான தருணம் என்னெவென்றால் ஜாப்ஸ் அதை மறுத்தது.

“உங்கள் உழைப்பைத் தந்து என் நிறுவனத்தை உயிருடன் வாழவைத்துக் கொண்டிருக்கிற  நீங்கள் நீடூழி வாழவேண்டும் – என் உயிர் என் நிறுவனத்தில் தான் இருக்கிறது என்று உங்களுக்குத் தெரியாதா?” என்று குக்கிடம் ஜாப்ஸ் கேட்டு, அவரது கல்லீரல் கொடையைப் பெருந்தன்மையாய் மறுத்துவிட்டார்.

அதற்குப் பிறகு, சிறிது காலத்திற்குப் பிறகு, இறந்த ஒருவரின் உடலிலிருந்து பெறப்பட்ட கல்லீரலைக் கொண்டு, கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து பொருத்தப்படுகிறது. இருப்பினும், ஜாப்ஸ் அதிக நாட்கள் உயிர் வாழ முடியவில்லை என்பது இறைவனின் சித்தம் என்றே கொள்கிறோம்.

ஆப்பிள் நிறுவனத்திற்கு, கொடி இல்லை – கொடி தேவையில்லை என்றாலும், ஆப்பிள் என்ற எளிமையான ஜனரஞ்சகமான பெயரும் – ஒருவாய் கடித்துச் சுவைத்த ஆப்பிள் என்பதான அதன் சின்னமும் ஜாப்ஸின் புரட்சியின் மௌனமான முத்தாய்ப்புகள். அதிக சிரத்தையும், அதிக வார்த்தைகளும் இன்றி ஆப்பிள் நிறுவனம் புரட்சிகரமாய் மண்ணில் வேரூன்றப்பட்ட சாகசத்தை இன்று எவருமே வியந்து – வியந்து போற்றியவண்ணம் இருக்கிறார்கள்.

(மேலும் பேசுவோம்)     

துணை நின்றவை

[1] Frey L., Frey M. (2018) Instruments of the Revolution: Language and Dress. In: The Culture of French Revolutionary Diplomacy. Studies in Diplomacy and International Relations. Palgrave Macmillan, Cham

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *