(Peer Reviewed) பண்ணோடு இயைந்த மகாகவி பாரதி

1

திரு. பாபு விநாயகம், நிறுவனர் மற்றும் தலைவர், உலகத்தமிழிசை ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக் கழகம், வாஷிங்டன் டி.சி, அமெரிக்கா.

முனைவர். ஆ. ஷைலா ஹெலின், தமிழ்த்துறை, கேரளப் பல்கலைக்கழகம், திருவனந்தபுரம், கேரளா, இந்தியா.

தன் எண்ணங்களையும் சிந்தனைகளையும் இலக்கிய உணர்வோடு வெளிப்படுத்துபவன் கவிஞன். எல்லாக் காலங்களிலும் எல்லா மொழிகளிலும் புற்றீசல் போல் முளைத்தெழும் கவிஞர்களுள் “மகாகவி” எனும் சிறப்புக்கு உரியவர் ஒரு சிலரே. அங்ஙனம் இவ்வுலகில் கி.பி.1882 முதல் கி.பி.1921 வரையிலாக மொத்தம் முப்பத்தொன்பது ஆண்டுகளே வாழ்ந்த சுப்பிரமணிய பாரதியார், ஒரு மகாகவி எனும் தகுதிக்குரியவர்.

பாரதியார் “பண்ணோடு இயைந்தவர்” என்றும், தமிழரின் மரபிசையான பண்ணிசையை மீட்டுருவாக்கிட பாரதியின் இரு பாடல்களுக்கு இக்கட்டுரையில்  பண்ணிசைக்கப்பட்டுள்ளன.

இசையோடு இயைந்த பாரதி

பாரதியின் பல்நோக்குப் பார்வையில் இசைசார் விளக்கங்கள் இல்லாமல் இல்லை. இசைப் பாடல்கள் பல இயற்றியும் அவற்றுள் இசை பற்றிய பல நுணுக்கங்களைக் குறிப்பிட்டும் தான் ஒரு சிறந்த இசை அமைப்பாளர்  என்பதையும் நிருபித்துள்ளார். தமிழிசைக் கலைச் சொற்களான பண், தாளம், சந்தம், பாடல், சங்கீதம் முதலியவைகளும் குழல், வீணை, முரசு, பேரிகை வெண்சங்கு ஆகிய இசைக் கருவிகளின் பெயர்களும் பாடல் வரிகளில் பொருத்தமாகக் கையாளப்பட்டுள்ளன. பாரதியார் கவிதைகளில் காணலாகும் பண் குறிப்புகளாவன:

“பண்ணில் இனிய பாடலோடு” (விடுதலை வேண்டும்)1
“பண்ணிலினிய சுவை பரந்த மொழியினால் ” (மனப் பீடம்)1
“பாட்டைத் திறப்பது பண்ணாலே” (அம்மாக்கண்ணு பாட்டு)1
“பண்ணே பண்ணே பண்ணே
பண்ணிற் கேயோர் பழுதுண்டாயின்
மண்ணே மண்ணே மண்ணே” (குயில் பாட்டு)1

“பாட்டுக் கலந்திடவே-அங்கேயொரு
பத்தினிப் பெண்வேணும் -எங்கள்
கூட்டுக் களியினிலே-கவிதைகள்
கொண்டுதர வேணும்-அந்தக்
காட்டு வெளியினிலே -அம்மா! நின்தன்
காவலுற வேணும்;என்தன்
பாட்டுத் திறத்தாலே-இவ்வையத்தைப்
பாலித்திட வேணும்” (காணி நிலம் வேண்டும்)1

“எண்ணுங் காரியங்க ளெல்லாம் – வெற்றி
யேறப் புரிந்தருளல் வேண்டும்-பல
பண்ணப் பெரு நிதியம் வேண்டும் -அதிற்
பல்லோர் துணை புரிதல் வேண்டும் -சுவை
நண்ணும் பாட்டினொடு தாளம் -மிக
நன்றாவுளத் தழுந்தல் வேண்டும் -பல
பண்ணிற் கோடிவகை இன்பம் – நான்
பாடத்திறனடைதல் வேண்டும்! ( யோக சித்தி – 7)1

“பண்ணை யிசைப்பீர்-நெஞ்சிற்
புண்ணை யொழிப்பீர் -இந்தப்
பாரினிலே துயர் நீங்கிடும் என்றிதை”( கண்ணன் பிறப்பு)1

“பண்ணில் இனிய பாடலோடு பாயு மொளியெலாம்
பாரில் எம்மை உரிமை கொண்டு பற்றி நிற்கவே”-(விடுதலை வேண்டும்)1

ஆகிய வரிகளுள் பண்ணிசைக் கூறுகளையும், தேசிய கீதங்கள், திருப்பள்ளி எழுச்சி பாடல்கள், தெய்வப் பாடல்கள் ஞானப் பாடல்கள், தனிப்பாடல்கள், கண்ணன் பாட்டு, தமிழர் பாட்டு, வள்ளிப் பாட்டு, காளி பாட்டு, நவராத்திரி பாட்டு முதலிய பாட்டுகளையும் பாரதி பாடியுள்ளார். பாடடினைத் தாளத்தோடு பாட வேண்டும் என்பதனை,

“தாளம் தாளம் தாளம்
தாளத்திற்கோர் தடையுண்டாயின்
கூளம் கூளம் கூளம்”- (குயில் பாட்டு)1

என்னும் பாடல் வரிகளால் அறியலாம்.

“பாட்டினைப்போல் ஆச்சரியம் பாரின்மிசை இல்லையடா!
பூதங்க ளொத்துப் புதுமைதரல் விந்தையெனில்
நாதங்கள் நேரும் நயத்தினுக்கு நேராமோ?
ஆசைதருங் கோடி அதிசயங்கள் கண்டதிலே,
ஓசைதரும் இன்பம் உவமையிலா இன்பமன்றோ”(குயிலும் மாடும்)1

எனும் வரிகளினால் பாரதியார் பாடல்களின்கண் காணலாகும் ஈர்ப்பு அறியலாகிறது.

பண்ணோடியைந்த பாரதி

“பாட்டுக்கொரு புலவன் பாரதியடா – அவன்
பாட்டைப் பண்ணோடு ஒருவன் பாடினானடா
கேட்டுக் கிறுகிறுத்துப் போனேனடா!” (அமரகவி)2

என்று கூறியுள்ள கவிமணியின் வரிகளிலிருந்து பாரதியின் பாடல்கள் பண்ணோடு பாடக்கூடியவைகளாக அமைந்திருக்கின்றன என்பதனை நன்கு உணர்ந்து கொள்ள முடிகிறது.

“மனந் திறப்பது மதியாலே
பாட்டைத் திறப்பது பண்ணாலே”  (அம்மாக்கண்ணு பாட்டு)1

இவ்வரிகளில் “பாட்டைத் திறப்பது பண்ணாலே” எனும் பாரதியின் தொடர் முலம், இவரின் பாடல்கள் பண்ணின் இலக்கணம் பெற்ற பாடல் என்பது பொருள். நெஞ்சு, மிடறு, நாக்கு, மூக்கு, அண்ணம், உதடு, பல், தலை என்னும் எட்டுப் பெருந்தானங்களில் எடுத்தல், படுத்தல், நலிதல், கம்பிதம், குடிலம், ஒலி, உருட்டு, தாக்கு எனும் எட்டு கிரியைகளால் பண்ணப்படுவதால் “பண்” எனப் பெயராயிற்று என்பதனை,

“பாவோடணைதல் இசை என்றார், பண் என்றார்
மேவார் பெருந்தானம் எட்டானும் – பாவாய்
எடுத்தல் முதலாய் இருநான்கும் பண்ணிப்
படுத்தமையால் பண்ணென்று பார்” (3:26.அடியார்க்.உரை.ப.105)3

என அரங்கேற்றுக் காதையில் அடியார்க்கு நல்லார் பண் குறித்துக் கூறியுள்ளார்.

பண்ணிலக்கணம்

பண்ணிலக்கணம் என்பது பண்ணீர்மையைக் குறிப்பதாகும். பண்ணீர்மைகள் என்பன பண்ணிற்குரிய ஓசைகளாலாகிய நிறங்கள். பண்ணின் நிறங்கள் பதினொன்றும் பண்ணின் சுரங்களைப் பல்வேறு வகைகளில் இசைத்தலால் வருவன. இதனை இளங்கோவடிகள் “வக்கிரித் திட்டம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

“இசையோன் வக்கிரித் திட்டத்தை உணர்ந்தாங்கு
அசையா மரபின் அதுபட வைத்து” (3:41,42.ப.63)3

என்னும் அடிகளுக்கு ஈருரைஞர்கள் (அடியார்க்கு நல்லார்,அரும்பத உரையார்) உரைத்துள்ள விளக்கம்,

“இவைப்புலவன் ஆளத்திவைத்த பண்ணீர்மையை முதலும், முறையும், முடிவும், நிறையும், குறையும், கிழமையும், வலிவும், மெலிவும், சமனும், வரையறை, நீர்மையும் என்னும் பதினொரு பாகுபாட்டினாலும் அறிந்து, அறிந்த வண்ணம் அவன் தாள நிலையில் எய்த வைத்த நிறம் தன் கவியினிடையேத் தோன்ற வைக்க வல்லோனாய்” (3:41,42 அடியார்க். உரை.ப.63, அரும்பத உரை.ப.108)3 என்பதாகும்.

1. முதற் சுரம் என்பது பண்ணின் எடுப்புச் சுரம் (கிரகச் சுரம்).

2. முறை என்பது பண்ணுக்குரிய சுரங்களின் வகைகளையும் அவை வரும் வரிசைகளையும் குறிப்பது.

3. முடிவு சுரம் என்பது பண்ணின் முடிவு பெரும் சுரமமாகும்.

4. நிறை என்பது ஒரு பண்ணை ஆலாபனை செய்கையில் நிரம்ப நிறுத்தல் சுரத்தை குறிக்கும்.

5. குறை என்பது ஒரு பண்ணை ஆலாபனை செய்கையில் மிகக் குறைவாக ஒலித்தற்குரிய சுரம்.

6. கிழமை சுரம் என்பது இணை, கிளை, நட்பு என்னும் குறியறிந்து புணரும் சுரங்கள் வந்து வந்து சேரும் சுரமாகும். இதனை ஜீவ சுரம் என்பர்.

7. வலிவு என்பது இராகத்தை வலிவு மண்டிலத்தில் நிறுத்தி பாடுவது.

8. மெலிவு என்பது இராகத்தை மெலிவு மண்டிலத்தில் நிறுத்தி பாடுவது.

9. சமன் என்பது சமன் மண்டிலத்தில் பண்களின் சுரங்களை இசைத்தல்

10. வரையறை என்பது பண்ணிற்கு என வரையறுக்கப்பட்ட நெறிகளும் முறைகளுமாகும்.

11. நீர்மை என்பது ஒவ்வொரு பண்ணுக்குரிய சுவை, உணர்வு, மெய்ப்பாடு, தாட்டு வரிசைகள் முதலியவைகளைக் குறிக்கும்.

பண்ணிலக்கணம் அல்லது பண்ணீர்மைகள் என்பது முதல், முறைமை, முடிவு, நிறை, குறை, கிழமை, வலிவு, மெலிவு, சமன், வரையறை, நீர்மை என்னும் பதினோரு பாகுப்புகளாக வகைப்படுத்திப் பாடும் திட்டமாகும்.(தொகுதி -3.ப.248)4

பண்ணிசையில் பாரதியார் பாடல்கள்

தென்னக இசையியலின் சிறப்புத் தன்மைகளுள் ஒன்றான இராக முறைக்கு முன்னோடியாகத் திகழ்வது தமிழிசையின் பண்களே.(ப.48)5 இப்பண்ணிசையை மீட்டுருவாக்கம் செய்வதோடு தமிழர் தம் பாரம்பரிய இசை முறையான பண்ணிசையினை அறிந்திருத்தலின் அவசியம் உணர்ந்து மகாகவி பாரதியின் இரண்டு பாடல்களுக்குப் பண்ணிசை அமைக்கப்பட்டு இங்கே  பணிந்தனுப்பப்பட்டுள்ளன.

1. சொல்

பண்: செம்பாலை          இராகம்: அரிகாம்போதி              தாளம் : ஆதி

சொல் ஒன்று வேண்டும்,தேவ சக்திகளை
நம்முள்ளே நிலைபெறச் செய்யும் சொல் வேண்டும்.

1.விரியும் அறிவுநிலை காட்டுவீர்-அங்கு
வீழும் சிறுமைகளை ஓட்டுவீர்:
தெரியும் ஒளிவிழியை நாட்டுவீர்-நல்ல
தீரப் பெருந்தொழிலில் பூட்டுவீர்.

2.“வலிமை,வலிமை”என்று பாடுவோம்-என்றும்
வாழுஞ் சுடர்க்குலத்தை நாடுவோம்;
கலியைப் பிளந்திடக் கை யோங்கினோம்-நெஞ்சில்
கவலை யிருளனைத்தும் நீங்கினோம்.

3.“அமிழ்தம்,அமிழ்தம்’‘என்று கூறுவோம்-நித்தம்
அனலைப் பணிந்துமலர் தூவுவோம்;
தமிழில் பழமறையைப் பாடுவோம்-என்றும்
தலைமை பெருமை புகழ் கூடுவோம்.1

2. முரசு

பண்: தனாசி                இராகம்: தன்யாசி                    தாளம்: ஆதி

வெற்றி எட்டுத் திக்கு மெட்டக் கொட்டு முரசே!
வேதம் என்றும் வாழ்க என்று கொட்டு முரசே!
நெற்றி யொற்றைக் கண்ணனோடே நிர்த்தனம் செய்தாள்
நித்த சக்தி வாழ்க வென்று கொட்டு முரசே!

1.சாதிக் கொடுமைகள் வேண்டாம்; – அன்பு
தன்னில் செழித்திடும் வையம்;
ஆதர வுற்றிங்கு வாழ்வோம்; – தொழில்
ஆயிரம் மாண்புறச் செய்வோம்

2.பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் – புவி
பேணி வளர்த்திடும் ஈசன்;
மண்ணுக் குள்ளே சிலமூடர் – நல்ல
மாத ரறிவைக் கெடுத்தார்

3.அன்பென்று கொட்டு முரசே! – மக்கள்
அத்தனை பேரும் நிகராம்.
இன்பங்கள் யாவும் பெருகும் – இங்கு
யாவரும் ஒன்றென்று கொண்டால்.1

முடிவுரை

“பாட்டுத் திறத்தாலே-இவ்வையத்தைப்
பாலித்திட வேணும்”1

எனக் கூறியுள்ள மகாகவி பாரதி தன் பல்நோக்குப் பார்வையினால் இறை உணர்வு, தேச உணர்வு, விடுதலை வேட்கை, சமூக எழுச்சி, கவித்துவம், சொற்சுவை, பொருட்சுவை முதலியவைகள் அடங்கிய பல்வேறு பாடுபொருள்களில் ஆவேசப் படைப்புகளைப் படைத்து, “மகாகவி” எனும் தகைமையுடையவராக மட்டும் அல்லாது “பண்ணோடு இயைந்தோன்” என்னும் தகைமையையும் பெற்றுத் திண்மையாக விளங்குகின்றார்.

தமிழரின் மரபிசை என்பது பண்ணிசையாகும். பண்ணிசைக் கூறுகளையும் தமிழிசையின் வேர்களைக் கொண்ட கருநாடக இசையின் கூறுகளையும் நன்கு அறிந்திருந்தமையால் பாரதி பிற புகழ்பெற்ற கவிஞர்கள் குறிப்பிடாத இப்பண்ணின் மேன்மையைத் தம் கவிதைகளுள் விரவியுள்ளார். இவரின் காலகட்டத்தில் பண்ணிசையின் ஆக்கம் விளிம்பு நிலையடைந்து, அயல் மொழியாளரின் கலப்பினால் கருநாடக இசை துளிர்விட்டுப் படர்ந்து பந்தலித்து வளரத் தொடங்கியிருந்தது.

இயற்றமிழ் வடிவில் பல்வேறு பாடுபொருள்களை மக்களின் மனதில் உறையச் செய்வதைக்காட்டிலும் இசை வடிவின் வாயிலாக மக்கள் மனதில் பதிப்பிப்பது மிக எளிமையாது என்பதனால், மகாகவி பாரதியின் பாடல்களுள் இரண்டு பாடல்களைத் தெரிவு செய்து, தமிழரின் மரபிசையான பண்ணிசையினை மீட்டுருவாக்கும் நோக்கோடு பண்ணிசைக்கப்பட்டு உள்ளன. இப்பாடல்கள் தமிழினத்தவரின் இசையுணர்வுகள், பண்ணுணர்வுகள், கலையுணர்வுகள் முதலியவைகள் மேம்படுத்துவதோடு, தமிழரின் மரபிசையாம் பண்ணிசை மக்களிடையே மீண்டும் உயிரோட்டம் பெறும் என்பது திண்ணம்.

துணை நின்றவைகள்

1. பாரதியார் கவிதைகள் – http://www.tamilvu.org/library/l9100/html/l9100ba1.htm

2. கவிமணியின் கவிதைகள்- http://www.tamilvu.org/library/l9302/html/l9302ind.htm

3. சிலப்பதிகாரம் மூலமும் அரும்பதவுரையும் அடியார்க்கு நல்லாருரையும்- முனைவர்.சாமிநாதய்யர்,உ.வே. தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் ,1985.

4. தமிழிசைக் கலைக்களஞ்சியம் தொகுதி(1-4)- சுந்தரம்.வீ.ப.கா. பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சிராப்பள்ளி, 2006.

5. பண்ணும் இலயமும் – முனைவர் அங்கயற்கண்ணி.இ. அருளானந்த நகர், தஞ்சாவூர், 2010.


ஆய்வறிஞர் மதிப்புரை (Peer Review):

பண்ணோடு  இயைந்த மகாகவி பாரதி என்னும் தலைப்பில் அமைந்த இக்கட்டுரையைப் பலமுறை பயின்று கட்டுரையின் அனைத்துக் கூறுகளையும் உள்வாங்கி ‘வல்லமை’ முன்மதிப்பீட்டு விதிகளைக் முழுமையாகக் கருத்திற்கொண்டு செய்யப்படும் முன்மதிப்பீடு

1. பாரதி இயற்றமிழ்ப் பாடல்களை (நான்குவகைப் பாக்கள் மற்றும் அவற்றின் இனங்கள் என) எழுதுகிறபோதே உணர்ச்சிவசப்பட்டு எழுதியவர். எனவே தம்முடைய இசைப்பாடல்களை எழுதிய போது அடைந்த உணர்ச்சி பிறழ்ந்து உணரப்பட்டுவிடக் கூடாது என்னும் எண்ணத்தால் பல பாடல்களுக்கு இராகம், மெட்டு, தாளம் எனக் குறிப்புகளைத் தந்திருக்கிறார்.

2. அவ்வாறு குறிப்புகள் பெறாத ஆனால் பெற்றிருக்க வேண்டிய பாடலகளில் இரண்டு பாடல்களைத் தேர்ந்தெடுத்துக் கட்டுரையாளர் இசையமைத்துத் தாளம் பற்றிய குறிப்புகளைக் கொடுத்திருப்பது பாராட்டுக்கு உரியது.

3. பாரதியைப் பற்றிய ஆய்வில் அவருடைய இசைப் பாடல்களைப் பற்றியன எண்ணிக்கையில் குறைவு. இவர் அப்பொருள் குறித்துத்  தமது ஆய்வுக் கடடுரையை அமைத்திருப்பது நல்ல முயற்சி.

4. சான்றெண் விளக்கத்துள் ஓரிடத்தில் ‘குயில்பாட்டு’ எனவும் பிறிதோரிடத்தில் ‘குயிலும் மாடும்’ எனவும் குறித்திருப்பது நெறியன்று. ஆய்வில் அவசரம் கூடாது.

5. வலிமையான தரவுகள் கொண்ட ஆய்வில்  ‘சுரமமாகும் ‘பாகுப்புக்கள்’ முதலிய தட்டச்சுப் பிழைகள் தவிர்த்திருக்கலாம். இதனால் ஆய்வுச்சாரம் குறையவில்லையாயினும் ‘பொலிவு’ குறைகிறதல்லவா?

6. ‘மஃகான் புள்ளி முன் அத்தே சாரியை’ (தொல் 1885)  என்பதனான் மனத்தில் என்றே இருத்தல் வேண்டும் ‘மரத்தில்’ ஏறினால் ‘பழத்தைப்’ பறிக்கலாமேயன்றி ‘மரமில்’ ஏறினால் ‘பழமை’ பறிக்க இயலாது. ‘முகத்தில்’ முகம் பாரக்கலாம் ‘முகமில்’ முகம் பார்க்க இயலாது. ‘மனத்துக்கண்’ என்பது நோக்குக. ‘மனதில்’ என்பது இலக்கணமுடையதன்று

7. பாரதியைப் பற்றிய வழக்கமான ஆய்வுத் தடம் விலகிப் புதுத்தடத்தில்  பயணிக்கும் முயற்சியும் அம்முயற்சியின் விளைவாக மகாகவியின் பாடல்களில் இரண்டினுக்கு இசையமைத்துக் காட்டியிருப்பதும் கட்டுரையின் சிறப்பை உயர்த்துகின்றன.


 

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “(Peer Reviewed) பண்ணோடு இயைந்த மகாகவி பாரதி

  1. பாரதியின் பண்ணோடு இயைந்த கவிதைகளை பரிமாறிய இந்த அழகு தமிழ்க் கட்டுரை முழுவதும் சிறப்பான நடையில், பல தகவல்களைத் தாங்கிய களஞ்சியமாய் திகழ்கிறது! அருமை!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.