உன் அழகுத் தோட்டத்தில் – ஆர்.எஸ்.மணி கவிதை
இது, கனடா ஆர்.எஸ்.மணி, 2007 மார்ச் 18 அன்று எனக்கு அனுப்பிய கவிதை. அவருடைய “Idle Tears” தொகுப்பிலிருந்து அவரே மொழிபெயர்த்த கவிதை. இந்த ஓவியத்தை வரைந்தவரும் அவரே. இந்தக் கவிதைக்கு இசையமைத்தவரும் அவரே. எனக்கு மிகவும் பிடித்த கவிதை. – அண்ணாகண்ணன்.
இந்தக் கவிதையை ஆர்.எஸ்.மணி குரலில் இங்கே கேட்கலாம்
உன் அழகுத் தோட்டத்தில்
ஒரு மூலையின் ஓரத்தில்
மலராய் நான் பூத்திடுவேன்.
உன்னுடைய மென்பாதம்
வேறெங்கோ நடந்தாலும் – என் மனமோ
உன்னையே சுற்றிவரும்.
பரந்த உன் வீதியிலே – உன்
கால்பட்ட மண்தரையில்
பாடகனாய்த் திரிந்திடுவேன்.
முற்றத்தில் நீஅமர்ந்து
மலர்களைத் தொடுத்தாலும் – என் இசையோ
உனைத் தொட்டு முத்தமிடும்.
உன் அழகு மாளிகையில்
ஒரு மூலைப் பிறையினிலே
சிறுவிளக்காய் நானிருப்பேன்
கருத்த உன் விழிகளென்னைக்
காணாமல் இருந்தாலும் – நான் அங்கே
காலமெல்லாம் எரிந்திருப்பேன்.