பழகத் தெரிய வேணும் – 20
நிர்மலா ராகவன்
(நீடிக்கும் உறவுகள்)
ஐம்பது வருடங்களுக்குமேல் தாம்பத்தியத்தில் இணைந்திருப்பவர்களைப் பார்த்தால், அவர்களுக்குள் சண்டையே வந்திருக்காதா, எப்படி மனம் ஒத்துப்போயிற்று என்றெல்லாம் அதிசயமாக இருக்கும்.
நெருக்கமான உறவில் மட்டும் அடுத்தவருக்குப் பிடிக்காத குணங்கள் இருக்காதா, என்ன! வருத்தமும் ஆத்திரமும் ஏற்படுத்திய சம்பவங்களும் நடந்திருக்கலாம். இருப்பினும், அவற்றைக் கடந்தால்தான் உறவு நீடிக்கும் என்று புரிந்தவர்கள் அவர்கள்.
துணுக்கு
ஓர் இளைஞன் தன் தாயிடம் பெருமையாகச் சொன்னான்: என் காதலி நான் வேடிக்கையாகப் பேசுபவன், ஆணழகன், புத்திசாலி என்று சொல்கிறாள்.
தாய் கேட்டாள்: உனக்கு அவளிடம் என்ன பிடிக்கும்?
பதில்: அவள் என்னை வேடிக்கையாகப் பேசுபவன், ஆணழகன், புத்திசாலி என்று புகழ்வது.
தம்மிடமிருந்து, தாம் நம்புவதிலிருந்து, மாறுபட்டவர்களைக் கண்டால் பலருக்கும் ஏதோ பயம். அது கோபமாக மாறுகிறது.
கதை
என்னுடன் ஒரே மாதம் வேலைபார்த்த கணபதி, “நீங்கள் வெஜிடேரியனா?” என்று கேட்டபோது, “ஆமாம்,” என்றேன்.
உடனே கோபமாக, “எத்தனை பிராமணர்கள் ‘எல்லாவற்றையும்’ சாப்பிடுகிறார்கள், தெரியுமா?” என்று கத்தினார்.
நான் அமைதியாக, “நீங்கள் என்னைப் பற்றிக் கேட்டீர்கள். அதற்கு நான் பதில் சொன்னேன். ‘எல்லாப் பிராமணர்களும்’ என்று கேட்டிருந்தால், வேறு விதமாகப் பதில் அளித்திருப்பேன்,” என்றேன்.
அவருடைய முகம் சுருங்கிப்போயிற்று.
மனைவி என்றால் தனது அதிகாரத்தை ஏற்கவிருப்பவள் என்று எண்ணுவதுபோல் நடப்பவர் கணபதி. பேசும் சுதந்திரத்தைக்கூடத் தன் மனைவிக்கு அளித்திருக்கமாட்டார். பிறர் பேசும்போது அவள் எதுவும் பேசாது, சிரித்துக்கொண்டே இருப்பாள்.
ஏன் தன் மனைவி கலகலப்பாக இல்லை என்ற குழப்பம் எழ, “என் மனைவி படித்தவள். (இதை இருமுறை அழுத்தமாகக் கூறினார்). ஆனால், உங்களைப்போல் இல்லையே!” என்று என்னிடம் குறைப்பட்டார்.
என் பதில்: “நீங்கள் நினைப்பதை, சொல்வதை, பிறர் அப்படியே ஏற்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள். அப்படி இல்லாவிட்டால் கோபம் வருகிறது. உங்களுக்கு என்னைப் போன்ற மனைவி சரிப்படமாட்டாள்”.
அன்பு என்பது ஒருவரை அவர் உள்ளபடியே ஏற்பது. மற்றவரிடம் எதை எதையோ எதிர்பார்த்தால் ஏமாற்றம்தான் உண்டாகும்.
கதை
புதுமணத் தம்பதிகளான பிரபாவும் பார்த்திபனும் ஈராண்டுகள் மகிழ்ச்சியாகக் கழித்தனர். அப்போது மனைவியின் முகம் சிறிது கோணினாலும், உடனே மன்னிப்பு கேட்டுவிடுவான் பார்த்திபன். தான் தவறு செய்திருக்கலாமோ என்ற சந்தேகத்தால் அல்ல.
(புரியவில்லையா? உடல் நெருக்கம் மட்டுமே முக்கியமாக இருந்த காலம் அது).
பிரபாவின் கை ஓங்கியது. அதன்பின், அறிவு முதிர்ச்சி இன்றி, எந்த வாய்ச்சண்டையிலும் தான்தான் வெல்லவேண்டும் என்று நினைப்பவளாக ஆனாள்.
‘என்ன பேச ஆரம்பித்தாலும், ஏனோ வாக்குவாதத்தில் முடிகிறதே!’ என்று பார்த்திபன் அவளிடமிருந்து லேசாக விலகலானான்.
பொதுவாக, எல்லாத் தம்பதிகளையும்போல் பிரபாவின் பெற்றோரும் அவ்வப்போது வாக்குவாதம் செய்வதுண்டு. மௌனமாக இருப்பதற்கு அது மேல் என்று புரிந்தவர்கள்.
பிரபா தாயிடம் கலந்து ஆலோசித்தாள். “அது எப்படி, நீயும் அப்பாவும் இத்தனை வருடங்களாக ஒருவரையொருவர் பொறுத்துப் போனீர்கள்?”
“யாரிடம்தான் குறையில்லை? அடி, உதையில் இறங்காதவரை, பொறுத்துப் போக வேண்டியதுதான்,” என்று வாழ்க்கைத் தத்துவத்தை விளக்கினாள் தாய். “அப்பா சிறு தவற்றைச் செய்யும்போது, அதைக் கவனிக்காததுபோல் இருந்துவிடுவேன். அவரைப் பற்றிப் பிறரிடம் புகார் செய்வதும் கிடையாது”.
ஒருவர் கூறுவதை ஏற்க முடியாததால் சண்டை பிடிக்கத் தோன்றுகிறதா?
அமைதியாகப் பேசினால் பயன் கிடைக்கும். மௌனம் சாதித்தால், ஒருவர் மனத்தில் இருப்பதை மற்றவர் எப்படிப் புரிந்துகொள்ள இயலும்?
மற்றவர் செய்த பிழைகளைப் பெரிதுபடுத்தாது இருப்பது உறவைப் பலப்படுத்தும் என்றெல்லாம் மணவாழ்க்கை அவளுக்குக் கற்றுக் கொடுத்திருந்தது.
“குறையே இல்லாதவராக இருக்கவேண்டும் என்று எதிர்பார்த்தால் நடக்கிற காரியமா? நான் மட்டும் என்ன, தப்பே செய்யமாட்டேனா? விட்டுப்பிடி”.
ஒரு துணுக்கு
எல்லா நாடுகளிலும் பெண்கள் தலைவர்களாக இருந்தால் என்ன ஆகும்?
ஒருவரோடு ஒருவர் பேசாத நாடுகள் உருவாகும்!
பெண்ணின் எதிர்பார்ப்பு
நாம் விரும்பிய ஒருவர் இப்படித்தான் இருக்கவேண்டும் என்று நினைக்கிறோம். ஆனால், அவர் அப்படி இல்லாவிட்டால் ஏமாற்றம்தான் உண்டாகும்.
மனைவி தன்னை எப்போதும் சாடுகிறாளே என்று வருந்திய ஒருவனின் குமுறல்: “நான் அவளுக்குப் பூரண சுதந்திரம் கொடுத்திருக்கிறேன். அவள் பணக்கார குடும்பத்திலிருந்து வந்தவள், வீட்டு வேலை செய்யப் பிடிக்காது என்று வீட்டில் சமையலுக்குக்கூட ஆள் போட்டிருக்கிறேன். அவளுடைய சொந்த உபயோகத்திற்கு கார். இன்னும் என்ன வேண்டும்?”
கணவனுக்குப் பெரிய வேலை, அதனால் பொறுப்புகள் நிறைய இருக்கும் என்பதெல்லாம் அவளுக்கும் புரியாமலில்லை.
வேலை நிமித்தம் வெளிநாட்டுக்குப் போய்வரும்போதெல்லாம் பரிசுப் பொருட்கள் வாங்கி வருகிறான். இருந்தாலும், தனக்காக அவ்வளவு நேரத்தைச் செலவழிப்பதில்லை என்ற வருத்தம் கோபமாக மாறிவிட்டது.
காதலனாக இருந்தபோது இப்படியா இருந்தான்! எவ்வளவு எதிர்பார்ப்புடன், குடும்பத்தை எதிர்த்து அவனை மணந்தாள்!
இப்போது அவளுக்கு வேண்டியது அவனுடைய அன்பான கவனிப்பு. வேறு எதுவும் அதற்கு ஈடாகாது.
வெளிப்படையாகக் குறைகூறாது அனுசரித்து நடந்தால், இருவரில் ஒருவர் தானாக மாறலாம். இல்லை, மாற்ற முடியாததை ஏற்க வேண்டும்.
கதை
அமெரிக்கப் பெண்மணி லூயிஸ் கலகலப்பானவள். அவளுடைய கணவரோ நேர்எதிர். அழுமூஞ்சி என்று சொல்லத்தக்கவர்.
சற்று பழகியதும், நான் அவளிடம் கேட்டேன்: “உனக்கும் உன் கணவருக்கும் பொருத்தமே இல்லையே! எப்படி அவருடன் இருக்கிறாய்?”
(அவர்களுடைய பிரச்சினையில் நான் மூக்கை நுழைப்பதை அவள் தப்பாக எடுத்துக்கொள்ளமாட்டாள் என்று தெரியும்).
உடனே, “அப்படிப் பார்த்துக்கொண்டே இருந்தால், முடிவே கிடையாது,” என்று பதிலளித்தாள். சற்றுப் பொறுத்து, “என் கணவர் விவாகரத்து ஆனவர். அவருடைய முதல் மனைவியை ஒருமுறை சந்தித்தேன். என்னைப் போலவே இருந்தாள்,’ என்று தெரிவித்தாள்.
வெளிப்படையாகக் கட்டுப்படுத்தாது, அவருடைய குறைகளைப் புரிந்து, அவற்றுடன் அவரை ஏற்கும் விவேகம் நிறைந்தவள் லூயிஸ். அதனால் அவர்களுடைய தாம்பத்தியம் குறுகிய காலத்தில் முடிந்துவிடவில்லை. தன் குறைகளை உணர்ந்த கணவரும் அவளிடம் நன்றி செலுத்தும் விதமாக மிக்க அன்புடன் நடந்துகொண்டார்.
காதல் எதுவரை?
காதலர்களாக இருக்கும்போது, உல்லாசமாக ஊர்சுற்றி, செலவைப் பார்க்காமல் ஒருவர் மற்றவருக்கு ஏதாவது வாங்கிக் கொடுத்து, சிரிப்பும் களிப்புமாக இருப்பதோடு காதல் முடிந்து விடுவதில்லை. வாழ்க்கை நம்மைப் புரட்டிப் போடும்போது ஒருவருக்கொருவர் ஆதரவாக நடக்க வேண்டியதும் அவசியம்.