தொல்தமிழகத்து விருந்துணவில் முதன்மை பெற்ற இனிப்பு

ச.கண்மணி கணேசன் (ஓய்வு),
முதல்வர்& தமிழ்த்துறைத்  தலைவர்,
ஸ்ரீகாளீஸ்வரி கல்லூரி, சிவகாசி.
kanmanitamilskc@gmail.com

முன்னுரை

பண்டைத்தமிழர் உணவுமுறை பற்றிக் கட்டுரைகள் உள; எனினும் விருந்துணவில் முதன்மை பெற்ற இனிப்பு பற்றி ஆழமாகவும் முழுமையாகவும் கூர்ந்து நோக்கி விளக்குவது இக்கட்டுரையின் நோக்கமாகும். அகநானூறு – 86ம் & ஐங்குறுநூறு – 211ம்; இவ்இனிப்புப் பண்டம் பற்றித் தெளிவாகவே பேசுகின்றன. புறநானூறு-381 அதே இனிப்பைக்  குறிப்பாகச் சுட்டுகிறது.

இனிப்பு எது?

திருமண விருந்தை விவரிக்கும் அகப்பாடலில் உழுந்தங்களி இடம்பெறுகிறது. அது நல்லாவூர் கிழாரின்;

“உழுந்து தலைப்பெய்த கொழுங்களி மிதவை”(அகம்.- 86) என்று தொடங்கும் பாடலாகும். மேற்சுட்டிய பாடலடி மூலம் அறியக்கூடிய செய்திகளாவன:

  1. இப்பண்டத்தில் உழுந்து தலைமைப் பொருளாகும்.
  2. அது ‘களி’ என்று சொல்லக்கூடிய பதத்தில் இருந்தது.
  3. அதில் ஊட்டச்சத்து மிகுவதற்கேற்ப பிற பொருட்களும் சேர்க்கப்பட்டன.
  4. அத்துடன் சேர்த்துச் சுவைக்க ஒரு நீர்மப் பொருள் பயன்பட்டது.

‘உழுந்து தலைப்பெய்த’ என்னும் தொடர்; இவ்வுணவுப் பண்டத்தில் உழுந்தே முதன்மைப் பொருள் என்று உணர்த்துகிறது. ஏனென்றால் துணைப்பண்டத்தைத் தொகைஇலக்கியம் ‘கண்ணுறை’ என்று சுட்டுகிறது. சான்றாக ஒளவையாரின் புறநானூற்றுப் பாடல் (பா – 140) கீரை சமைக்கக் கண்ணுறையாகச் சில அரிசி வேண்டியமை பற்றிக் குறிப்பிடுகிறது. ஒளவை சு.துரைசாமிப்பிள்ளை இப்பாடல் சுட்டும் அரிசி துவரை மணிகள் என்றே உரை கூறுகிறார். இன்றளவும் கீரைக்கூட்டுக்குத் துவரம்பருப்பு சேர்க்கும் வழக்கம் உள்ளது. பக்கஉணவாகிய கீரையில் துணைப்பொருளாக அமையக்கூடிய துவரையைக் கண்ணுறை என்று ஒளவையார் கூறுவதால்; அதற்கு மறுதலைப்பட்டு ‘உழுந்து தலைப்பெய்த’ என்னும் தொடர் உழுந்தை முதன்மைப் பொருள் என்றுரைப்பது உறுதிப்படுகிறது.

‘கொழுங்களி’ என்னும் தொடர் அவ்வுணவுப் பண்டத்தின் பதம் பற்றியும், அது வளமான பிற பொருட்களுடன் சேர்த்துச் சமைக்கப் படுவதையும் குறிப்பாகப் புலப்படுத்துகின்றது. தொகை இலக்கியத்தில் ‘கொழு’ என்னும் பண்புப் பெயர்ப் பகுதி ‘வளம் மிகுந்த’ என்னும் பொருளில் பயின்று வருகிறது.

“கொடுத்த தந்தை கொழுஞ்சோறு கொள்ளாள்” (நற்றிணை – 110) இங்கு கொழுஞ்சோறு வளம் மிகுந்த சத்துணவு என்றே பொருள்படுகிறது. இதே  போன்றே ‘கொழுங்களி’ எனும் தொடருக்கும் பொருள் கொள்வது  ஏற்புடைத்து.

மிதவை என்னும் சொல் உணவுடன் சேர்க்கும் நீர்மப் பொருளைக் குறிக்கும். மலைபடுகடாம் அவரைப்புளிங்கூழ் ஊற்றிய மூங்கிலரிசிச் சோறு பற்றிப் பேசும்போது;

“வேய்கொள் அரிசி மிதவை சொரிந்த
சுவல்விளை நெல்லின் அவரையம் புளிங்கூழ்” (அடி- 435)

என்கிறது. நீர்மப்பொருளையே ‘சொரிந்த’ என்ற சொல்லால் குறிக்க இயலும். பாலூற்றி உண்ணும் உணவு ‘பாலின் மிதவை’ என்று அழைக்கப்படும் (மலைபடுகடாம்- அடி- 417). தயிர் ஊற்றிய உணவு ‘தயிர்மிதி மிதவை’ (அகம்- 340) என்று அழைக்கப்பட்டது. மோர்க்குழம்பு “ஆய்மகள் அட்ட அம்புளி மிதவை” (புறம்- 215) என்றழைக்கப்பட்டது. இதனால் உழுந்தங்களியுடன் சேர்த்த மிதவை ஒரு நீர்மப் பொருள் என்று ஐயமின்றித் தெளியலாம்.

ஐங்குறுநூறு உழுந்தாலான உணவு கெட்டுப்போவது பற்றிப் பேசுகிறது.  “நெய்யொடு மயக்கிய உழுந்து நூற்றன்ன” (பா- 221)

என்னும் தொடர் காண்க. அத்துடன் அகநானூறு உழுந்தங்களியைக் ‘கொழுங்களி’ என்றழைத்த காரணமும் இப்பாடலடியில் வெளிப்படுகிறது. ‘நெய்யோடு மயக்கிய’ செய்முறை; மிதமிஞ்சிய நெய் சேர்த்துச் செய்யப்பட்டது என்னும் பொருளைத் தருகிறது. உழுந்தங்களி கிண்டும் போது அளவிறந்த நல்லெண்ணெயைக் குடிக்கும் என்பது நடைமுறை உண்மை. இங்கே சுட்டப்படும் நெய் எள்ளிலிருந்து எடுக்கப்படுவதாகும்.

தொகைநூற் காலத்தில் எள்ளினின்றும் எடுக்கப்படுவது நெய் என்றே அழைக்கப்பட்டது. மலைபடுகடாம் ‘ஒருபிடி அளவிற்றாய தண்டில் ஏழு காய் அளவு நெய்மிக்கு எள் விளைந்திருந்த தன்மையை;

“கெளவை போகிய கருங்காய் பிடியேழ்
நெய்கொள ஒழுகின பல்கவர் ஈர்எள்” எனப் பாடி எள்ளில்
இருக்கும் நெய்யைச் சுட்டுவது காண்க.

பொ.வே.சோமசுந்தரனார் மேற்சுட்டிய ஐங்குறுநூற்றுப் பாடலுக்கு உரை எழுதுங்கால்; அதை உழுந்தங்களி என்று சுட்டவில்லை; மாறாக உழுந்தினின்று செய்யப்படும் வடகம் என்கிறார். இது ஏற்றுக்கொள்ளத் தக்கதன்று. ஏனெனில்; அப்பாடலடியில் ‘நூற்றுப் போவதைப் போல’ என்னும் உவமை இடம் பெறுகிறது. வடகம் என்னும் உணவு வகை வெய்யிலில் காயவைத்துச் செய்யப்படும். அது நூற்றுப் போக வழியில்லை. ஆனால் உழுந்தில் செய்த பிற உணவுப்பண்டங்கள் நூற்றுப்போகும் வாய்ப்பு மிகுதி. ‘ஊசிப்போதல்’ என்ற இக்கால வழக்கே பாடலில் நூற்றுப்போதல் எனச் சொல்லப்படுகிறது. ஊசிப்போன உழுந்துப் பலகாரத்தில் இருந்து கெட்ட வாடையுடன் நூல்போன்ற கசிவு ஏற்படும். இந்த நடைமுறை அனுபவ அறிவுடன் கபிலர் பாடியிருப்பது வியந்து போற்றத்தக்கது. உழுந்தங்களி உண்ணக் காலம் தாழ்த்தினால் நூற்றுப் போய் உண்ணத் தகுதியற்றதாகிவிடும்; அதுபோல் தலைவன் தந்த தழையாடையை ஏற்றுக்கொண்டு அணியாவிடில் வாடிப்போய் உடுத்தும் தகுதியை இழந்துவிடும் என்பதே பாடலின் பொருளாகும்.

கரும்பனூர் கிழானைப் பாடும் புறப்பாடலில் உழுந்தங்களி ‘மிதவை’ என்று அழைக்கப்பட்ட காரணம் இடம்பெறுகிறது. அவன் கலைஞர்களை எவ்வாறு விருந்தயர்ந்தான் எனப் புலவர் பாடும்போது அவனளித்த உணவு வகைகள் இடம் பெறுகின்றன. அவ்வரிசையில்;

“பாகின் கொண்டவும்” (புறம் – 381) எனும் தொடர் உள்ளது.

பாலோடு சேர்த்துண்பவற்றையும்; பாகோடு சேர்த்துண்பவற்றையும் தாராளமாகக் கொடுத்தான் என்கிறார். பண்டைத் தமிழகத்துப் பாகு கருப்பட்டி என்று இன்று அழைக்கப்படும் பனம்பாகு ஆகும். இன்றும் உழுந்தங்களிக்கும், வெந்தயம் சேர்த்துச் செய்யும் வெந்தயக்களிக்கும் நடுவில் குழித்து; கருப்பட்டிப்பாகு ஊற்றிச் சேர்த்துச் சுவைக்கும் வழக்கம் உள்ளது. பாகு நீர்மப் பொருளாகையால் அத்துடன் சேர்த்து உண்ணும் களியை மிதவை என்று பாடியுள்ளனர்.

விருந்து முறை:

அகநானூற்றுப் பாடல் திருமணநிகழ்வுகளை வரிசைப்படுத்துங்கால்;

“உழுந்து தலைப்பெய்த கொழுங்களி மிதவை
பெருஞ்சோற்று அமலை நிற்ப” (மேற்.) என முதலில்

விருந்தை வருணிக்கிறது. அந்த விருந்தில் முதலிடம் பெற்றது உழுந்தங்களி ஆகும். அதைத்தொடர்ந்து பெருஞ்சோற்றமலையுடன் விருந்து தொடர்ந்து நடந்தது  என்கிறார். இன்று உலகமயமாகும் சூழலில் ஐந்து நட்சத்திர உணவகங்களில் dessert என்று அழைக்கப்படும் இனிப்பு வகைகள் உண்ணும் வரிசையில் பின்னிடத்தைப் பெறுகின்றன. உணவக மேலாண்மையியல் சொல்லும் பாடங்களும் இனிப்பை இறுதியில் வழங்குவதை அறிவுறுத்துகின்றன. ஆனால் தமிழகப் பாரம்பரியம் விருந்தில் இனிப்பை முதலில் பரிமாறும் வழக்கத்தை ஈராயிரம் ஆண்டுக்காலப் பழமை வாய்ந்தது என்று காட்டுவது அறிந்து இன்புறத்தக்கது.

முடிவுரை:

பண்டைத் தமிழரின் ஒவ்வொரு உணவுமுறையையும் இங்ஙனம் ஆழமாக நோக்கும்போது உணவுமுறை சார்ந்த பண்பாட்டு நுட்பங்கள் புலப்பட வாய்ப்பு உள்ளது. அன்றைய திருமணவிருந்திலும், கலைஞர்க்குத் தலைவர் கொடுத்த விருந்திலும் முதலிடம் பெற்றது உழுந்தங்களி என்னும் இனிப்பு ஆகும்.


Brief note on author

Dr.(Mrs)S.Kanmani Ganesan a lecturer in Tamil published ‘chilappathikaaram kaattum naadum nakaramum’- her Ph.D thesis in 1992. It’s worthy to mention her publication – ‘Murukan Cult In Cilappathikaaram’ in Murukan The Lord Of The Kurinchi Land released by the Institute Of Asian Studies, Chennai. She has also translated the traumatology section of the book- An Introduction To Orthopaedics And Traumatology authored by Dr.M. Natarajan as ‘kaaya aruvaiyiyal maruththuvam’ which was published by the Madurai Kamaraj University; sponsored by the Text Book Society of Tamilnadu, Chennai. The booklet makalir udalnalach chikkalkal was published by her as the proceedings of a symposium sponsored by the UGC, New Delhi. She retired as a principal of an autonomous institution.


 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *