நிர்மலா ராகவன்

(தாயும் மகளும்)

வீட்டுடன் இருக்கும் பெண், ‘நான் எந்த வேலைக்கும் போவதில்லை,’ என்று சற்றுக் கூசியபடி கூறுகிறாள்.

நாள் முழுவதும் ஓடியாடி உழைத்தாலும், வீட்டுக்குள் இலவசமாக வேலை செய்வதால் அதன் மதிப்பு வெளியில் தெரிவதில்லை.

தாயான எந்தப் பெண்ணாவது எப்போதும் ஓய்வாக இருந்துவிட முடியுமா என்ற கேள்வி எழுகிறது.

தடுக்கி விழுந்து அடிபட்டுக் கொள்ளும்போதும், தந்தை காரணமில்லாமல் கோபிக்கும்போதும், பள்ளியில் உடன்படிப்பவர்கள் நட்புடன் பழகாதிருக்கும்போதும் குழந்தைகள் நாடுவது யாரை?

குழந்தையுடன் பேசுங்கள்

முதன்முறையாக அம்மா ஆனவர்களுக்கு குழந்தைகளை எப்படி வளர்ப்பது என்பது புரிவதில்லை. மடியில் வைத்துக்கொண்டு கொஞ்சினால் போதும் என்று நினைக்கிறார்கள்.

என் மூத்த மகளுக்கு ஒரு வயதானபோது, அவள் தன்பாட்டில் பொம்மையை வைத்துக்கொண்டு விளையாடிக்கொண்டிருப்பாள். நான் ஏதாவது செய்துகொண்டிருப்பேன்.

நாம் பார்ப்பது, கேட்பது எல்லாவற்றையும் விளக்கிக்கொண்டிருந்தால்தான் குழந்தையின் அறிவு விசாலமடைகிறது என்று அனுபவத்தில் கண்டிருந்த என் அன்னை, “குழந்தையிடம் பேசினால்தானே அதற்கு மூளை வளரும்?” என்று புத்தி புகட்டினாள்.

அன்று பேச ஆரம்பித்தவள்தான் நான்.

பேசாமல் நம் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தோமானால் குழந்தையும் பேசாது உட்கார்ந்திருக்கும். அதற்குப் பேசத் தெரியவில்லையே என்று காத்திருக்கலாமா? மிருகங்களுக்குக்கூட நாம் பேசுவது புரிகிறதே!

அக்கம்பக்கத்தில் தமிழர்கள் யாருமில்லை என்ற நிலையில், சாயந்திர வேளைகளில் உலவப் போகும்போது, ‘இது புல். இது மரம்,’ என்று பார்ப்பதையெல்லாம் குழந்தைகளுக்குச் சொல்லிக்கொடுப்பேன். கூடவே அதன் ஆங்கில மொழிபெயர்ப்பு. இரண்டு வயதிலிருந்து, புத்தகங்கள் கைகொடுத்தன.

அவளது இருமொழி ‘பாண்டித்தியம்’ இப்படி வெளிவந்தது: `ஒக்காச்சி, சித்தம்’ (Sit down)!

ஏதாவது காரியமாக நான் வெளியே போனால், வீடுதிரும்பியதும் அதைப்பற்றி குழந்தைகளிடம் விவரமாகச் சொல்வது வழக்கம். அவர்கள் பெரியவர்களானதும், தம்மையும் அறியாது அதே வழக்கத்தைப் பின்பற்றினார்கள். அதனால், ‘நமக்குத் தெரியாமல் என்ன செய்கிறார்களோ!’ என்ற கவலை எழுந்ததில்லை.

தாயின் திட்டு

ஒரு பெண் தானே தாய்மை அடைந்தபின்னர், ‘நம்மை வளர்க்க அம்மா எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பாள்!’ என்ற ஞானோதயம் ஏற்படுகிறது. அதன் விளைவாக, அம்மாவிடம் வாங்கிய வசவு, அதன் பாதிப்பு, கணிசமாகக் குறையும்.

‘பெண்’ என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும் என்று மகளைச் சிறுவயதிலேயே நம்ப வைத்துவிடுவாள் பெற்றவள். தாயானபின்னர், அவளும் அதையே தம் மகளுக்குப் போதிப்பாள்.

என் தலைமுறையிலிருந்த பிற பெண்களைப்போல் நான் இல்லை என்ற கவலை என் அம்மாவுக்கு. ஓயாமல் கண்டிப்பாள். அதனால் தந்தையிடம் நெருங்கிப்போனேன். தாய்க்கும் மகளுக்கும் ஏற்பட்ட போட்டியில் இன்னும் நிறைய வசவு கிடைக்க, ‘திட்டு வாங்கறதுக்குன்னே பிறந்த ஜன்மம்!’ என்ற கேலிக்கு ஆளானேன்.

இப்போது பெண்கள் என்னைக் கேட்கிறார்கள், “ஒங்களைமாதிரி எப்படி ஆகிறது?” என்று.

அதற்கு நான் நேரிடையாகப் பதிலளிக்காது, “உங்களை, ‘என்ன இருந்தாலும் நீ ஒரு பொண்ணு!’ என்று சொல்லி வளர்த்திருப்பார்கள்,” என்றேன்.

அதிர்ச்சியுடன், “ஆமாம். இல்லே?” என்று ஒருவரையொருவர் கேட்டுக்கொள்கிறார்கள்.

இணக்கமான உறவு

கதை 1

எட்டு வயதிலேயே, “யார் உன்னுடன் இவ்வளவு பேசுவது?” என்று ஆசிரியை கேட்க, என் இளைய மகள் சித்ரா பூரிப்புடன், “எங்கம்மா!” என்றிருக்கிறாள்.

அவளுக்குப் பன்னிரண்டு வயதானபோது, வகுப்பில் எல்லோர் முன்னிலும் ஆங்கிலத்தில் ஒரு வாக்கியம் கூறவேண்டும் என்ற வீட்டுப்பாடம் அளிக்கப்பட்டிருந்தது.

மகள் என் உதவியை நாடினாள். “பிறர் ஏதாவது சொல்லும்போது, எல்லாரும், ‘ஆமாம், ஆமாம்,’ என்றுவிடுகிறார்கள். நீ மட்டும் அப்படிச் செய்வதில்லை. ஏம்மா?”

நான் மெல்லச் சிரித்து, “என்னைப்போல் இருப்பவர்களை NON-CONFORMIST என்பார்கள். தவறு என்று எனக்குத் தோன்றினால், பிறர் கூறுவதையோ, செய்வதையோ நான் ஏற்பதில்லை”.

மறுநாள், “I want to be a non-conformist like my mother,” என்றவள் கூற, ஆசிரியை அயர்ந்துபோனாள்.

கதை 2

சித்ரா பன்னிரண்டாவது படிக்கும்போது, ஆண்களும் பெண்களும் ஒன்றாகப் படித்தார்கள்.

ஒருமுறை, வகுப்பில் நுழைந்த இளம் ஆசிரியையிடம், “பாடம் நடத்தவேண்டாம். இன்று உங்களுக்கு களைப்பாக இருக்குமே!” என்று ஒரு பையன் கிண்டல் செய்ய, “உங்களுக்கென்ன அதைப்பற்றி?” என்று அவள் கோபிக்க, எல்லாரும் சிரித்தார்கள்.

என் மகளுக்கு ஒன்றும் புரியவில்லை.

“நீ சின்னப்பெண். இதெல்லாம் உனக்குப் புரியாது,” என்று நமட்டுச்சிரிப்புடன் அவர்கள் விளக்க மறுத்துவிட்டார்கள்.

“சொல்லாவிட்டால் போங்கள். என் அம்மாவைக் கேட்டுக்கொள்கிறேன். நான் எது கேட்டாலும் பதில் சொல்வாள்,” என்று வீறாப்பாகச் சொல்லிவிட்டு, என்னிடம் கேட்டாள்.

இம்மாதிரி பரஸ்பர நம்பிக்கை தாய்க்கும் மகளுக்கும் இருந்தால், எத்தனை வயதானாலும் நெருங்கிய தோழிகளாகவே இருப்பார்கள்.

எப்படிப்பட்ட கேள்வியானாலும், அதைக் கேட்கும் சிறுவர்கள் அதன் பதிலுக்குத் தயாராகிவிடுகிறார்கள். ‘இது என்ன வயதுக்குமீறிய கேள்வி!’ என்று கோபிக்காவிட்டால், அவர்களுடைய அறிவு விசாலமடையும்.

‘வியாழக்கிழமை மனைவியுடன் உடலுறவு கொண்டால் ஏதோ நன்மை விளையும் என்ற நம்பிக்கை சில இனத்தவர்களுக்கு,’ என்று என் சக ஆசிரியர் கூறியிருக்கிறார். அந்த வழக்கம் தெரிந்துதான் மறுநாள் மாணவர்கள் கேலி செய்திருக்கிறார்கள்.

கதை 3

இருபது வயதானபோது, அவளைவிட மூத்த பெண்கள் கூறிய அறிவுரை: “உன் அம்மா, ‘சீக்கிரமே கல்யாணம் பண்ணிக்கொள்,’ என்று வற்புறுத்தி இருப்பார்கள். ஆனால், முப்பது வயதுக்குமேல் பண்ணிக்கொள்”.

அவள் உடனே, “எங்கம்மா அப்படிச் சொன்னதே கிடையாது,” என்று எதிர்த்தாளாம்.

தன்னைத்தானே புரிந்துகொள்ளாத ஒரு பெண் இளம் வயதில் கல்யாணமானால், கணவனுக்குப் பயந்து நடக்கிறாள். கணவன் அருகில் இருக்கும்போது, பிறரிடம் பேசக்கூடத் தயங்குகிறாள் –- அவளுக்கென ஒரு தனிப்பட்ட கருத்து இருப்பதை அவன் விரும்பமாட்டான் என்ற அச்சத்தில்.

கதை

தாய்க்கும் மகளுக்கும் இடையே போட்டி, பொறாமை விளைவதும் உண்டு.

பள்ளிப்படிப்பு முடிந்ததுமே தெரிந்தவர்கள்மூலம் மாதுரி நல்ல வேலையில் அமர்ந்தாள். கணிசமான சம்பளம்.

அதிகப் படிப்போ, சுயசம்பாத்தியமோ இல்லாத அவளுடைய தாய், ‘நாளை மகள் தன்னை மதிப்பாளா?’ என்று கலக்கமடைந்தாள்.

“வேலைக்குப் போய்விட்டு வந்தால் ஓய்ந்துவிடுகிறாய். வேலையை விட்டுவிடு.  நீ மேலே படி,” என்று ஆசைகாட்டினாள், போலிப்பரிவுடன்.

மேற்படிப்புக்குப் பணமில்லை என்பதை இருவருமே அப்போது யோசிக்கவில்லை.

உடன் வேலை செய்தவர்கள் எவ்வளவோ எடுத்துச்சொல்லியும் கேளாது, மாதுரி வேலையை விட்டாள்.

தன் தவறு புரிந்தபின், திரும்பவும் போய் வேலை கேட்க வெட்கம். தாயின்மேல் ஏற்பட்ட வருத்தத்தை வெளியில் காட்டிக்கொள்ளவும் முடியவில்லை.

தான் பெற்ற மகள் அல்லது தன்னிடம் பயின்ற மாணவி தன்னைவிட சிறந்தால் பெருமைப்படாத தாயோ, ஆசிரியையோ எதில் சேர்த்தி?

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *