இறையியல் சிந்தனைகள் – ஸ்டீவ் ஜாப்ஸும் வள்ளலாரும் – 20

0

அவ்வைமகள்

20. இந்து சமயம் எனும் சிகரம்  

பிரெஞ்சு நேசம் பற்றி நாம் பேசிக்கொண்டுவரும் வேளையில், அன்றைய காலனி ஆதிக்க நாளில், காலனி ஆதிக்க நாயகர்களுக்கு இடையே பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனி, தீவிரமான காலனி வெறியின்றியும் , மதத் திணிப்பு – மதமாற்ற  நோக்கமின்றியும் நடந்து கொண்டதோடு, அவர்கள் இந்தியருடன் நட்பு பாராட்டி உதவிகள் செய்தத் தருணங்களை நாம்  நினைவு கூர்ந்து வருகிறோம்.

இந்திய மக்கள் பால் அவர்கள் காட்டிய இந்த நேசமும் உதவியும், பற்பல  நெருக்கடிகளுக்கிடையே நெஞ்சார்ந்து வழங்கப்பட்ட உதவிகள் என்பதை நாம் நன்றியுடன் நினைத்துப் பார்க்கக் கடமைப் பட்டிருக்கிறோம். ஏனெனில், உலக அரங்கில் மற்றும் தன்  உள்நாட்டில் அன்று பிரெஞ்சு பட்ட சிரமங்கள் போலவே, அந்நாளில், காலனி  ஆதிக்கக் காலகட்டங்களில்,  இந்தியாவில் பிரான்ஸ் இருக்கிறபோது அவர்கள் பட்ட சிரமங்கள் ஒன்றிரண்டல்ல. ஒருபுறம் போர்ச்சுக்கீசிய மற்றும்  டச் (நெதர்லாந்து) தந்த பிரச்சினைகள்  மற்றொருபுறம் மிகப்பெரிய அளவில் பிரிட்டிஷ் தந்த பிரச்சினைகள்  என பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவில், உண்மையில், படாத பாடுபட்டது.

அன்று இந்தியாவை அபகரித்துக் குடியேற,  ஐரோப்பிய நாடுகள் கடுமையாய் முயன்றன – காரணம், இந்தியா, அந்நாளைய உலக வர்த்தக மார்க்கத்தின் (Silk Road) வழித்தடமான பட்டுவழிப் பாதை அல்லது பட்டுச் சாலை எனப்படும் பிரதான வணிகப் பாதையில் நடுநாயகமாக விளங்கியது.

 

பட்டுச் சாலை (Silk Road) என்பது உலகில் இருந்த ஆதிகாலத்து வணிகப்பாதை. மேக்கிற்கும் கிழக்கிறகும் இடையேயான வாணிகம் பட்டுச்சாலை வழியாகத்தான் நடைபெற்று வந்தது. கடல்வழிப் பட்டுச்சாலை  நீல வண்ணத்திலும். தரைவழிப் பட்டுச் சாலைசிவப்பு வண்ணத்திலும் காட்டப்பட்டுள்ளது. https://en.wikipedia.org/wiki/Muziris

முப்புறம் கடலும் வடக்கே பிறநாடுகளுடன் நிலவழித் தொடர்பும் கொண்டதாய், மிகக்கணிசமான நிலப்பரப்புடன், மிக சாதகமான சீதோஷ்ண நிலையுடன், கள்ளம் கபடமற்ற நெஞ்சமும் தர்மசிந்தனையும் உள்ள மக்கள் கொண்ட ஒரு வசதியான தீபகற்பமாக விளங்கும் இந்தியாவைப் போல தோதான நாடு உலகில் இல்லவே இல்லை. எனவே, அன்று, அனைவர் கழுக்குப் பார்வையிலும் இந்தியா விழுந்தது! இவ்வாறான சூழலில், இந்தியாவைக் குடியீரம் செய்து அபகரிக்க, ஐரோப்பிய நாடுகள் ஒன்றையொன்று விஞ்சிவிடக்  கடுமையாய் முயன்றன. எத்தனை எத்தனை கொடூரமுண்டோ, நயவஞ்சகம் – தந்திரம் உண்டோ அத்தனையும் பிரயோகப்படுத்தப் பட்டன.

படைபலம் மற்றும் தந்திர சூழ்ச்சிகளில், பிரெஞ்சுப் படைகள்  பலசமயங்களில் பிறரைவிட பலமாக இயங்க இயலவில்லை என்பதற்கு நிறைய காரணங்கள் இருந்தன. அதில் பொருளாதாரப் பிரச்சினைகளும் அடக்கம். பல தருணங்களில், பிரெஞ்சு, தான் ஆக்கிரமித்தப் பகுதிகளை பிரிட்டிஷிடம் இழந்தும் கூட போனது. (உலக அரங்கில், நெப்போலியனின் போர் வெற்றிகளுக்குப் பிறகு இப்பகுதிகளை, பிரிட்டிஷ் மீண்டும் பிரெஞ்சுக்குத் தரவேண்டியும் நேரிட்டது).

இவ்வாறான, நெருக்கடிகள், இப்போது நாம் மீள்பார்வையாகப்  பேசுவதற்கு எளிதாகத் தெரியும் ஆனால், நிதர்சனமாக இந்த நெருக்கடிகளைக் கடந்து அவர்கள் சென்ற காலம் அவை எத்துணைக் கடினமானவையாய் இருந்தன என்பதையும் நாம் எண்ணுதல் வேண்டும்.

பொதுவாகவே, நெப்போலியன் காலத்திலிருந்து, பிரான்சின் வரலாற்றைப் பார்த்தால், விடுதலை பெறவிரும்பும் நாடுகளுக்கு உதவிக்கரம் நீட்டித் துணைபுரியும் சார்பு புரியும். அமெரிக்க விடுதலையில் பிரெஞ்சின் பங்கு மகத்தானது என்பதை நாமறிவோம். உலக மக்கள் எவரேயாயினும் அவர்கள் விடுதலைக்காகப் போராடும்போது அங்கே முதலில் குரல் கொடுப்பதும் உதவிக்கு வருவதும்  பிரான்ஸ் தான் என்கிற கீர்த்தி பிரான்சுக்கு எப்போதும் உண்டு. அமரிக்காவின் மிகமுக்கிய வரலாற்று அடையாளமான சுதந்திரதேவியின் சிலை (Statue of Liberty) பிரான்சால் அமரிக்காவுக்கு வழங்கப்பட நினைவுப்பரிசு என்றால், விடுதலை என்பது உலக அரங்கில் முதன்மைப் பொருளாய் இருக்கவேண்டும் என்று தீராத ஆவல் உடைத்த ஒரு நாடாய் பிரான்ஸ் விளங்கிவந்திருப்பது புரியும்.

காலனி வெறியோடு மதவெறியும் கலந்துதான் நம் நாட்டை, போர்ச்சுக்கீசிய, டச்சு மற்றும், பிரிட்டிஷ் ஆகியோர் நெருங்கினர். இவர்களின் ஒருமித்த கொள்கை யாதென்றால்,இந்தியாவில், சுதேசி சமயங்களை இழித்துரைப்பதும் – கோவில்களை – வழிபாட்டுத்தலங்களை, அழிப்பதுமாகும். சுதேசி சமயக்   கோயில்களை அழித்துத் தரைமட்டமாக்கி அங்கே கிறித்துவ தேவாலயங்களை நிறுவுவது சாமர்த்தியமான செயலாக, வெறித்தன்மையுடன் அரங்கேறி வந்தது.

முன்பு வந்து, முகலாய ஆதிக்கம் சுதேசி சமயங்களுக்கு செய்த கெடுதல் போதாதென்று, இவர்கள் வந்து, வரிந்து கட்டிக்கொண்டு செய்த நாசவேலைகள் ஏராளம் ஏராளம். கிறித்துவ மதம், சுதேசி சமயங்களை விட உயர்வானது என்பதாகக்  கூறிக்கொண்டு சுதேசி சமயங்களை இழிப்பதும், பொய்யுரைத்தும், போலிக் கவர்ச்சி காட்டியும், பலவகைகளில் மனிதர்களுக்கு மனநெருக்கடியும், புத்திக்குழப்பமும் ஏற்படுத்தியும், ஏன் மிரட்டியும், துன்பறுத்தியும் கூட, பலவகையானும் யுத்திகள் செய்து, சுதேசி சமயங்களிலிருந்து மக்களை கிறித்துவ மதத்தின் பால் இழுத்து, மதமாற்றம் செய்வது, ஒரு தொழிலாகவே நடைபெற்று வந்தது.

முகலாய மன்னர்களின் ஆட்சி சரியத் தொடங்கிய காலத்திலிருந்தே, பிரான்சின் சிந்தை என்னவென்றால், மெல்ல மெல்ல இந்தியர்களுக்கு இந்தியவிடுதலையில் ஒத்தாசை செய்வது என்பதுதான்.

எனவேதான், காலனி ஆதிக்கத்தின் போது, இந்தியர்களுடன், குறிப்பாக, தமிழர்களுடன் பிரெஞ்சு மக்கள் நெருங்கிப் பழகத் தொடங்குகின்றனர்.  பிரெஞ்சின் தலைமை பாண்டிச்சேரி என்பதால், தமிழர்கள்  மிகவும் நெருக்கமானவர்கள் ஆகிறார்கள் .

தமிழர் பண்பாடுகளை  அவர்கள் வெறுமனே கவனிப்பதோடு நின்றுவிடாது,  அவற்றை  அணுகி ஆய்ந்து, அவற்றில் பொதிந்துள்ள உண்மைகளை – பின்னணிகளை  அறிந்து கொள்ளவும் செய்தனர்.  இவ்வாறான, தமிழர் பற்றிய ஞான வளர்ச்சியினால், பிரெஞ்சுக் குடியேற்றம் இருந்த அந்தக் காலகட்டத்தில், இந்தியாவின் பெருமைகள் – தமிழர்களின் பெருமைகள் யாவும் பிரான்சில் பேசப்பட்டன. பார்க்கப்போனால், 1731லேயே ரிக் வேதம் பாரிஸின் ராயல் நூலகத்தில் இடம் பெற்றுவிட்டது. அடுத்ததாக,  இந்திய நாகரீகத்திற்கான துறை பல்கலைக் கழகங்களில் உருவானது.  வடமொழி, தமிழ் மொழி உள்ளிட்ட இந்திய மொழிகளை ஆய்வு செய்யும், மொழிபெயர்ப்பு செய்யும், தமிழ் கலாச்சாரம் உள்ளிட்ட கருத்துகளைத் தாங்கியதான இலக்கியங்களை பிரெஞ்சு  மொழியில் ஆக்குதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை பிரான்ஸ் மேற்கொண்டது.

பிரான்சின் புகழ்பெற்ற தமிழ் வித்தகரும் தமிழ் எழுத்தாளருமான கோர் சொல்லுவதைப் பாருங்கள்: “என்னுடைய நாடி நரம்புகளில் பரிபாடல் வரிகள் ஓடிக்கொண்டே இருக்கின்றன.  தமிழ் எனக்கு வாய்க்கப்பெற்ற மொழி – இம்மொழியின் மூலமாக, தமிழகத்தின் கலாச்சாரத்தைப் பார்க்கிறேன்” https://www.livemint.com/Specials/JBdbjIeHpi8wwyAkjz592H/Francois-Gros-Explorations-in-classical-Tamil.html

பிரான்சில் தமிழும் தமிழர்களும் அதிகம் அறிப்பட்டதன் காரணம் தமிழ் மண்ணான பாண்டிச்சேரி பிரெஞ்சுக் குடியேற்ற்றத்தின் தலைமைப் பீடமானதால் தான் என்று ஏற்கனவே பார்த்தோம்.  தமிழ் பற்றி தமிழகம் பற்றி, இங்குள்ள மக்களின் பண்புகள்  பற்றி பிரான்ஸில்  மிக அதிகமாகவே இன்றும் அறியப்படுகிறது பேசப்படுகிறது என்பதன் தொடக்கம் அன்றே நிகழ்ந்தது எனலாம்.

அதே போன்றே, பாண்டிச்சேரித் தமிழர்கள் மட்டுமல்லாது இன்னபிற தமிழர்களுக்கும் பிரான்ஸ் பற்றி – அம்மக்கள் பற்றி, அதிகமாகவே தெரிய ஆரம்பிக்கலானது அன்றே ஏனென்றால் பாண்டிச்சேரிக்குள் தமிழர்கள் அனுமதிக்கப்பட்டது தான்.

இவ்வாறன நேசவுணர்வால் உந்தப்பட்ட பிரெஞ்சு மனிதர்கள், கிறித்துவ மிஷினரிகள் வேரூன்றிப் பெருகுவது மட்டுமல்லாது இந்துமதத்திற்கு எதிரான பிரச்சாரங்களையும், இந்துக்களின் பழக்கவழக்கங்களி இழிவாகப் பேசுவதையும் கண்ணுற்றவாறு இருந்த  அதே நேரத்தில், இந்தியாவில் உள்ள இந்து சமயத்தில் இருக்கிற, செம்மார்ந்த சமய உணர்வுகள், ஆன்மீகச்  சிந்தனைகள், இழித்துப் பேசப்படும் தன்மையல்லாதன என்பதை அவர்கள் முழுதாய் உண்ரகிறார்கள்.

இந்துமதத்திற்கு எதிராக பிரிட்டிஷ், டச்சு, போர்ச்சுக்கீசிய ஆட்களால்   பரப்பப்படும் பொய்யான கருத்துக்களை அவர்கள் புறந்தள்ளிவிட்டு, இந்து சமயத்தில் இருக்கிற ஆன்மீகப் பயிற்சிகளை, ஆன்மீகச் செழுமையை – ஆன்மீகத்தில் காணப்படுகிற தன்னேரில்லாச் சுதந்திரத்தை ஆராதிக்கிறார்கள்.

இந்து சமயத்தில் உள்ள உள்சமயங்களில் இருக்கிற வித்தியாசங்களில் பொதிந்திருக்கிற குடியாண்மையை, மனித மதிப்பை, தனிமனித உரிமைகளை பிரெஞ்சு மக்கள் மிக அதிகமாகவே தெரிந்து கொள்கிறார்கள். அவர்களை அன்று இந்துசமயத்தின் பெருமைகளாகப் பார்த்த விஷயங்கள் இதோ:

இந்து சமயம்   எத்தனை பெருந்தன்மையானது – எத்தனை சுதந்திரமாக எவரொருவரும் இந்த சமயத்தில் இயங்க முடியும் என்பது அவர்களால் வாயாரப் புகழப்பட்டது. பரம்பொருள் எனும் ஒப்பற்ற சக்தியை அவரவருக்குப் பிடித்த உருவத்தில், அவரவருக்குத் தோதான வழிபாட்டுமுறைகளோடு, அவரவர்க்குத் தோதான நேரத்தில் வணங்கிகொள்ளமுடியும்.  அல்லது வெறுமனே மனதாலும் எண்ணிக்கொள்ளமுடியும். இயன்றபோது கோவிலுக்குப் போகலாம், போகாமலேயும் இருக்கலாம். விட்டு விட்டும் போகலாம். ஒரு நாள் ஒரு கோவிலுக்குப் போகலாம் – இன்னொரு நாள்  வேறொரு கோவிலுக்குப் போகலாம். பூசலார் போல் மனதுக்குள்ளேயே கோவில் கட்டிக் குடமுழுக்கு செய்யலாம் – தனிமனிதருக்கு ஏற்றார் போல் சமயம் என்பது எளிவந்து நற்கிற  வசதியோ வசதி. இங்கு சமயம், வாழ்வோடு இணைந்த சுயம்புவான சங்கதி! இங்கே – சமயம் என்பது பாரமான புறத்திருந்து திணிக்கப்படுகிற சுமை இல்லை.

இங்கே, வழிபாட்டுத்  தோத்திரத்துக்கு எந்த தோத்திரத்தை வேண்டுமானாலும் அவரவர் இஷ்டப்படி எடுத்துக் கொள்ளலாம். சிறுதெய்வங்களை நினைத்துக் கொள்ளலாம் – கிராம தேவதைகளை கும்பிட்டுக்கொள்ளலாம் – எதுவுமே வேண்டாமென்று வெறும் தீபத்தை  ஏற்றி வைத்து வணங்கிக்  கொள்ளலாம். சூரியனை வணங்கலாம் – குளத்தை, –  நதியை – கடலை – காற்றை – நெருப்பை –  மலையை – ஆகாயத்தை  வணங்கலாம்.

ஆடம்பரப் பதார்த்தங்கள் செய்து  தடபுடலாய் வணங்கலாம் – வெறுமனே ஒரு சொட்டு நீரை  அர்ப்பணம் செய்து  வணங்கலாம்.

இங்கே சமயத்தில் ஒவ்வொரு தனிமனிதனுக்கும், தங்கு தடையற்ற வசதி வாய்ப்புக்கள்! சுதந்திரமான  எண்ண எழுச்சிகள் – செயல் திறங்கள் !!

தனிமனித உரிமைகள் – விருப்பு வெறுப்புக்கள் யாவற்றையும் அனுமதிக்கிற ஒரே சமயம் – இந்து சமயம்.

இச்சமயத்தில், கடவுளை எப்படி வேண்டுமானாலும்  விளிக்கலாம் – தோழனாக -வேலைக்காரனாக – எஜமானனாக – காதலனாக -காதலியாக – குழந்தையாக – ஆணாக  – பெண்ணாக – அலியாக – பிசாசாக – பேயாக – முனியாக – காட்டேரியாக – அன்னபூரணியாக, – பாம்பாக, பசுவாக, பன்றியாக!

கடவுளை, பாடி  வணங்கலாம் – நடமாடி வணங்கலாம், கூத்தாடி வணங்கலாம் – திட்டியும் வணங்கலாம்!

வேறெந்த சமயமும் அளித்திராத எண்ணிலா தனிமனித சுதந்திரங்கள் தந்திருக்கிற – தந்து கொண்டிருக்கிற ஒரே சமயம்!

இந்த சமயம் தரும் பேச்சுரிமை – எழுத்துரிமை – சிந்தனை உரிமைகள் ஒன்றா இரண்டா?  இங்கே எவரும் இந்து  மதத்தை விவாதிக்க முடியும் –  குறைகாணமுடியும் – செப்பனிடமுடியும் – காலத்திற்கேற்ப மாறுதல்களை ஏற்படுத்தி சமயத்தை தகவமைப்பு செய்து அதனை வளர்க்கமுடியும்.

இங்கே சமயத்தில் இவருக்கு எத்தனை தூரம் எத்தனை ஆழமாகப் பயணிக்கமுடியுமே அத்தனை அளவு பயணிக்கமுடியும். வேதங்கள், இதிகாசங்கள், பக்தி இலக்கியங்கள் என்று எண்ணிலடங்கா சமய இலக்கியங்களின் நவரசத்தை நுகரமுடியும் – அத்தகு இலக்கியங்களை உருவாக்கவும் முடியும்.

புதுப் புது சீர்திருத்தவாதிகள்   புதுப் புது கிளைகள் – புதுப்புது  பூக்கள் என்று ஒய்யாரமாய் –  என்றும் பசுமையாய் ஜீவிக்கும் சமயம் இந்து சமயம்.

சமயம் என்பது ஜீவனுள்ள விஷயம் என்பதால் அது பரிணாம வளர்ச்சி  கண்டேயாகவேண்டும் என்பதனை இயல்பாய் எடுத்துக்காட்டும் எளியமதம். இங்கே மதகுருமார்களுக்கு ஒவ்வொரு குடிமகனும், தனது வருவாயில்   பத்து சதவீதம்  மாதம் செலுத்தவேண்டும் என்கிற வற்புறுத்தல் இல்லை – இங்கே மதக்குருமார்களுக்கு அடிமைகளாக அவர்கள் இடும் வேலையைச் செய்து  பிழைப்பு நடத்தும் தேவை எவருக்கும் இல்லை.

இந்த சமயத்தைப் போல் எந்த சமயமும் இல்லை  என்பதான பேச்சுக்களை அந்நாளிலேயே பிறநாட்டார் பேசம் ஒரு நிலையம் மெல்ல மெல்ல மவுனமாய் வளர்ந்தது என்றால் அதற்கு, பிரெஞ்சு மக்களின் பங்கு இன்றியமையாதது. (இன்னுமும் இந்தக் கணிப்பில் எவ்விதக் குறைவும் மாறுதலும் இல்லை).

அதுபோலவே, பிரான்சிலும் இந்துமதக் கோட்பாடுகளைஅன்று  வெகுவாக ஆராதித்தார்கள் – இன்று ஆராதிக்கிறார்கள்.

பின்னாளில் (1914), உலகப் பிரசித்தியான  விஷயம் ஒன்று நிகழ்ந்ததை நாம் கருத்தில் கொள்ளவேண்டும். மிர்ரா அல்பாஸா எனும் பிரெஞ்சுப் பெண்மணி, இந்துமதம் தழுவுகிறார்;  பாண்டிச்சேரி வருகிறார் அரபிந்தோ கோஷுடன் இணைந்து  ஆன்மிகம் வளர்க்கிறார் – அரபிந்தோ ஆசிரமமும் ஆரோவில் சமுதாயமும்  உருவாகின்றன – நூற்றாண்டுகளுக்கும் மேலாக ஆல்போல் வளர்ந்து  அருகுபோல் வேரூன்றி அவையிரண்டும் இன்றும் நின்று மனித குலத்திற்குத் தொண்டு செய்து கொண்டு இருக்கின்றன – இவை நமக்குத் தெரிந்த சேதிகளே. அன்னை என்று நாம் அனைவரும் அன்புடன் அழைக்கும் அப்பெண்மணி பிரஞ்சு தேசத்திலிருந்து இங்கு வந்து நம்முடன் வாழ்ந்து நம் மண்ணில் கலக்க, அவாமிகக் கொண்டு நம்மிடம் வந்தவள்!!

அன்றைய நாளில், பிரெஞ்சு மக்கள் இந்தியாவைப் பற்றி அறிந்துகொண்ட இன்னொரு விஷயம் தர்மபரிபாலனம். குற்றரசர்கள், சிற்றரசர்கள், பேரரசர்கள் என இந்தியாவில் மன்னராட்சி நடந்து கொண்டிருந்த அக்காலகட்டத்தில், ஒவ்வொரு மன்னனும், தர்ம பரிபாலனம் நடத்தியது  அவர்கள் அறிவுக்கு எட்டியது . ஒவ்வொவொரு மன்னனும் மூன்று தட்டு ஆட்சியமைப்பை நிலைநாட்டி, வெகுசெம்மையாக , தமது நிலப் பகுதியை ஆண்டுவந்தான்.

இந்த மூன்று தட்டு ஆட்சி என்னவென்றால், சட்டம், நிர்வாகம், நீதி என்பது. ஒவ்வொரு மன்னனும் தெளிவான சட்டங்களை இயற்றி வைத்திருந்தான். ஒவ்வொருவனும் அமைச்சு சார்ந்த நேர்மையான நிர்வாகம் இயற்றினான். ஒவ்வொரு மன்னனும் மிகத் தேர்ந்த நீதித்த துறையை வைத்திருந்தான். முடியாட்சி தான் எனினும் குடியாட்சியின் மாட்சிமையோடு மன்னர்கள் ஆண்டுவந்த  இந்தியா உலக அதிசயமாக – முன்னோடியான  கலாச்சாரப் பண்புகள் கொண்ட ஒரு நாடாக அன்று உலகில் வியக்கப் பட்டது. இத்தகைய மூன்று தட்டு ஆட்சிமுறைமையைக் கொண்ட நாடுகளை அந்நாளில் மேற்கில்  காண இயலவில்லை.

பிரெஞ்சு -இந்திய வாஞ்சை எத்தனை  வலிமையானது என்பதற்கு இன்னும் ஒரு எடுத்துக்காட்டைப் பார்க்கலாம்.

முதலாம் உலகப்போர், இரண்டாம் உலகப்போர், மற்றும் ஏனைய பிரெஞ்சுப்  போர்களிலும் இந்தியச்  சிப்பாய்கள் ஈடுபட்டுபி போரிட்டு, பிரெஞ்சுக்கு ஒத்தாசை செய்கிறார்கள்.

இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னெவென்றால், பிரெஞ்சுக்காகப் போராடிய இந்திய  சிப்பாய்களின், இந்திய அதிகாரிகளின் மத உணர்வுகள் மதிக்கப்பட்டன. தலைப்பாகை மற்றும் தமது இஷ்ட மதத்தின் சின்னங்களைத் தரித்தபடி – தனது மதத்தின் வழிபாட்டு முறைகளை போர்க்களத்திலும்  அவர்கள்  பின்பற்றமுடியும் அதற்கு எந்தத் தடையும் இல்லை. மாட்டுக்கொழுப்பாலான குண்டு உறைகளை வாயில் கடித்து உடைக்குமாறு சிப்பாய்கள் துன்புறுத்தப் படவில்லை. போர்முறைகளை தர்மசிந்தையோடு மட்டுமே செய்யவேண்டும் என்கிற இந்திய போர்வீரர்களின் நற்சிந்தனைக்கும் எவ்வித எதிர்ப்புமில்லை.

போரென்றால் போர்வீரர்கள் இறப்பது தவிர்க்கவியலாதது அல்லவா? இந்தப் போர்களில், எண்ணிறந்த இந்தியச் சிப்பாய்கள் இறக்க நேரிடுகிறது. அவர்களின் சடலங்களில் யாவும் அவரவர் சமய ஒழுக்கத்தின் படி நேர்த்திக்கடன்களோடு எரிக்கப்பட்டது.

ஆனால், நாம் ஏற்கனவே பார்த்தபடி, பிரிட்டிஷ் அரசு, கிறித்துவ மதத்தைப்  பகிரங்கமாகவே புகுத்தியும் – இந்து மதப் பழக்கவழக்கங்களைக் கொச்சைப் படுத்தியும் – இந்திய சிப்பாய்களையும், அதிகாரிகளையும் அவர்களது மதஉணர்வு புண்படுமாறு நடத்தியும், அதர்மமான போர் முறைகளை அவர்கள் மேற்கொள்ளுமாறு, அவர்களை வலுக்கட்டாயம் செய்தும் துன்புறுத்தியது. பிரிட்டிஷின் கட்டளைக்கு அடிபணிய மறுத்த இந்திய சிப்பாய்களும் அதிகாரிகளும் மனிதாபிமானம் இல்லாமல் கொன்று குவிக்கப்பட்டனர்.

மண்ணாசை மட்டுமே கொண்டு இவ்வுலகைத் தனது  ஆளுகையின் கீழ் கொண்டுவரவேண்டும் என்கிற பேராசையும் ராட்சஸத் தன்மையும் கொண்ட பிரிட்டிஷாரின் நாடு பிடிக்கும் வெறி, எத்தனை எத்தனை சாகசங்களைச் செய்து நாடுகளை அடிமைப் படுத்தும், கிறித்துவ மதத்தை அங்கே திணிக்கும் என்பதை அப்பட்டமாய் நேரடியாய் இந்திய மண்ணில் பிரான்ஸ் புரிந்து கொண்டதுபோன்ற நேரடி அனுபவம் வேறு எங்கும் அதற்குக் கிடைக்கவில்லை.

நேர்மை என்றால் அது ஆங்கிலேயர்களிடம் இல்லாதது. சூழ்ச்சிகள் செய்வது – மக்களுக்கிடையே பேதத்தை உண்டு பண்ணி – அவர்களுக்குஎதிராக அவர்களையே பயன்படுத்துவது என்பதெல்லாம் பிரிட்டிஷின் கைவந்த கலையாக இருப்பதை, பிரெஞ்சு இந்தியாவில் மிகநன்றாகவே புரிந்துகொண்டது ஆக, பிரெஞ்சு அரசுக்கு, இந்தியா என்பது பிரிட்டிஷை, மிக அருகில் நின்றபடி  அறிந்து கொள்ளும் ஒரு கல்விப் பணிமனை  – கற்றல் பணிமனை என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும். அதே கற்றலில், ஒரு நாட்டின் சாதாரண குடிமக்களின் – பிரயாசைகள், ஆசைகள், தேவைகள், எதிர்பார்ப்புக்கள், அவர்களது வாழ்வியல் ஆதாரங்கள், அவர்களது நம்பிக்கைகள், அவர்களுக்கு இருக்கிற ஞானம், விடுதலை வேட்கை, சுதந்திர தாகம் ஆகியனவும் பிரெஞ்சுக்குப் புரிகின்றன.

வேறு எவரும் செய்யத்துணியாத செயலான பிரிட்டிஷை எதிர்ப்பது மற்றும்  சொந்தநாட்டில் மதவெறியை ஒடுக்குவது  என்கிற துணிச்சலை பிரெஞ்சு செய்தது என்றால் அதற்கு இந்தியாவில் பிரிட்டாஷாரிடம் இந்தியர்களும் – இந்தியர்களோடு தாங்களும் பெற்ற நேரடி அனுபவங்களும்  கூட ஒரு காரணம் என்று கருதுவதும் தகும்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *