அமெரிக்காவில் போர்வீரர்களின் நினைவு நாள்

0

நாகேஸ்வரி அண்ணாமலை

மே 25, அமெரிக்காவில் போர்வீரர்களின் நினைவுநாள்.  இதை ஆங்கிலத்தில் Memorial Day என்று அழைப்பார்கள்.  ஒவ்வோர் ஆண்டும் வரும் ஐந்து தேசிய விடுமுறைகளில் இதுவும் ஒன்று.  மே மாதத்தின் கடைசித் திங்கள் கிழமையை இந்த நினைவுநாளாகக் குறித்திருக்கிறார்கள்.

அமெரிக்கா புரிந்த போர்களில் கலந்துகொண்டவர்களை நினைவுகூரும் நாள். அமெரிக்கா புரிந்த பல போர்கள் தேவையில்லாதவை. அமெரிக்கா தன்னுடைய பண வலிமையையும் ராணுவ பலத்தையும் காட்டுவதற்காகப் புரிந்த போர்கள் அவை. அதிலும் வியட்நாமில் புரிந்த போர் அமெரிக்க ஜனாதிபதிகள் தங்கள் பெயரைக் காப்பாற்றிக்கொள்வதற்காகப் புரிந்த போர். வியட்நாம் போர் தீவிரமாக நடந்துகொண்டிருந்தபோது பதவியில் இருந்த இரண்டு ஜனாதிபதிகளும் தங்கள் பதவிக் காலத்தில் அமெரிக்கா தோற்ற போர் என்ற பெயர் தங்களுக்கு வந்துவிடக் கூடாது என்பதற்காகவே வீம்புக்காக நடத்திய போர். இந்தப் போரையும் சேர்த்து அமெரிக்கா புரிந்த போர்களில் கலந்துகொண்ட அமெரிக்கர்களை நினைவுகூரும் இந்தச் சமயத்தில் இந்தப் போர்களினால் எத்தனை நாடுகளில் எத்தனை சேதம் ஏற்பட்டது, எத்தனை பேர் உயிரிழந்தார்கள் என்பதைப் பற்றியெல்லாம் அமெரிக்கர்கள் கவலைப்படுவதில்லை. அதுவும் வியட்நாமில் நடந்த போரில்  இலட்சக்கணக்கான   வியநாம் வீரர்களும் குடிமக்களும் இறந்தார்கள் என்பதை யாரும் நினைத்துப் பார்ப்பதில்லை. கம்யூனிஸ்டுகள் தங்கள் குடிமக்களை நன்றாக மூளைச்சலவை செய்துவிடுகிறார்கள் என்று அமெரிக்கா போன்ற நாடுகள் பழி கூறுகின்றன. அமெரிக்காவில் மட்டும் என்ன வாழ்கிறது!  இந்தப் போர்கள் எல்லாம் அமெரிக்க நலனுக்காகப் புரிந்த போர்கள் என்று எளிதாக மக்களை நம்பவைத்துவிடுகிறார்கள். வியட்நாம் போர் நடந்துகொண்டிருந்தபோது ஆசியாவில் கம்யூனிஸம் பரவுவதைத் தடுப்பதற்காக நடந்துவரும் போர் என்று அமெரிக்க அரசு சொன்னதை எத்தனை இளைஞர்கள் நம்பினார்கள் தெரியுமா? வட வியட்நாமில் கம்யூனிஸ்டுகள் ஜெயித்துவிட்டால் ஆசியா முழுவதும் கம்யூனிஸம் பரவிவிடும் என்றும் பின்னர்  தங்கள் நாட்டிற்கே அது வந்துவிடும் என்றும் பயந்து, மக்களையும் நம்பவைத்து ஜனாதிபதி ட்ரூமன் வெறித்தனமாக வியட்நாம் கம்யூனிஸ்டுகளை எதிர்க்கப்  பிரான்ஸுக்கு ஆயுத உதவி செய்தார். அதுதான் வியட்நாம் போரின் ஆரம்பம். கம்யூனிஸம் உலகில் பரவுவதைத் தடுப்பது அமெரிக்காவின் கடமை என்று ட்ரூமனும் ஐஸன்ஹோவரும் சொன்னதை அப்படியே நம்பிவிட்ட அமெரிக்க இளைஞர்கள் பலர். ஒரு சின்ன உதாரணம். மோகி க்ராக்கர் என்னும் பதினேழே வயதான இளைஞனுக்கு பன்னிரெண்டு வயதிலிருந்தே போர் பற்றிய புத்தகங்களைப் படித்ததால் போர் என்றால் மிகவும் பிடிக்குமாம். சிறு வயதிலேயே அவனுக்கு ஏன் அப்படிப்பட்ட புத்தகங்களாக அவனுடைய பெற்றோர் படிக்கக் கொடுத்தார்கள் என்று புரியவில்லை. அவனுக்குச் சண்டையும் பிடிக்கும், அதிலும் நாட்டிற்காகப் போர் புரிவதென்றால் இன்னும் பிடிக்கும். பதினெட்டு வயது நிறைவவடைந்த பிறகுதான் ராணுவத்தில் சேர முடியும். அதற்கு முன்னரே பெற்றோர் சம்மதம் கொடுத்தால் ராணுவத்தில் சேரலாம். பெற்றோரிடம் சம்மதம் கொடுக்குமாறு வேண்டினான். பெற்றோர் சம்மதம் கொடுக்காததால் வீட்டை விட்டே வெளியேறினான். கடைசியாகச்  சம்மதம் பெற்று ராணுவத்தில் சேர்ந்து, சேர்ந்த சில மாதங்களிலேயே இறந்தும்விட்டான். அவனே வியட்நாமில் பிறந்திருந்தால் வியட்நாமியர்களின் சுதந்திர தாகத்தைப் புரிந்துகொண்டு அவர்களோடு சேர்ந்து போர்புரிந்திருப்பான் என்றும் அமெரிக்காவில் பிறந்துவிட்டதால் கம்யூனிஸம் பரவுவதைத் தடுக்க அமெரிக்கா போர் புரிய வேண்டும் என்று அமெரிக்க அரசியல் தலைவர்கள் சொன்னதை அப்படியே ஏற்றுக்கொண்டு வியட்நாமில் போர் புரியச் சென்றான் என்றும் அவனுடைய  சகோதரி கூறியிருக்கிறார்.  இது என்ன பேதமை. கம்யூனிஸம் பரவுவதைத் தடுப்பது அமெரிக்காவின் கடமை என்று தலைவர்கள் சொல்லிவிட்டால் அதை அப்படியே ஏற்றுக்கொள்வதா? இதுதான் தேசப்பற்றா?

இந்தத்  தினத்தை அமெரிக்கர்கள் எப்படிக் கொண்டாடுகிறார்கள் தெரியுமா? நாம் இந்தியாவில் காந்திஜி பிறந்த தினத்தைக் கொண்டாடுவது போலத்தான். (காந்திஜியை மறந்துகொண்டிருந்த இந்தியர்கள் அவரை இன்னும் முழுமையாக மறக்கட்டும் என்று பி.ஜே.பி. அரசு விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டிருந்த அந்த நாளை வேலை நாளாக மாற்றிவிட்டது என்பது இன்னொரு விஷயம்.) அமெரிக்காவில் தீநுண்மி கோவிட்-19 பரவுதல் இன்னும் முடியாமல் இருக்கும்போது பீச்சுகளைத் திறந்துவிட வேண்டும் என்று அடம்பிடித்து பீச்சுகளுக்குப் போய்க்கொண்டிருக்கிறார்கள். இதுதான் அவர்கள் நாட்டிற்காகத் தியாகம் புரிந்த வீரர்களை நினைவுகூரும் விதம். அதுவும் விஞ்ஞானிகளும் மருத்துவர்களும் பொது இடங்களை மக்களின் உபயோகத்துக்காகத் திறந்துவிடுவதற்கு இன்னும் கொஞ்சக்  காலம் காத்திருக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருக்கும்போது ‘எங்கள் சுதந்திரத்தை நீங்கள் பறிக்க வேண்டாம்’ என்று கோஷம் போடுகிறார்கள். நாட்டுக்காகப் போரிட்டவர்களையும் உயிர் துறந்தவர்களையும் நினைத்து ‘நாமும் நாட்டுக்காக என்ன செய்யலாம்’ என்று நினைப்பதற்குப் பதில் பீச்சுக்கு ஓடிக்கொண்டிருக்கிறார்கள். கோவிட்-19-ஐப் பற்றிக்கூட கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. வசந்த காலம் முடிந்து சீக்கிரமே கோடை காலமும் வரப் போகிறதாம், இந்த நாட்களை வீட்டிற்கு வெளியில் சென்று கொண்டாடியே ஆக வேண்டுமாம்.  இவர்களுக்கு வாய்த்திருக்கும் ஜனாதிபதி வேறு ‘வெளியே வாருங்கள்’ என்று இவர்களை உசுப்பேற்றிவிட்டுக்கொண்டிருக்கிறார்.  நல்ல நாடு, நல்ல மக்கள், நல்ல தலைவர்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *