இலக்கியம்கவிதைகள்

உள்ளம் என்ன செய்யும்?

சுதா வேதம்

போலிப் பூச்சைக் கண்டே மயங்கும்;-இது
பொய்யை மெய்யாய் நம்பும்!
கோலி அளவுக் கவலை விதையையும்
கோடி மரம்போல் நெம்பும்!!

தோலில் துளைக்கும் ஊசியைப் போலத்
தோல்வியைப் பெரிதாய் விரிக்கும்;
சோலி இல்லா வம்புப் பேச்சையும்
சொர்க்கம் மாதிரி திரிக்கும்;

பிறகு? பிறகு? என்றே திரியும்;
பிடிவா தத்தில் துடிக்கும்;
இறகு போலே மென்மை கொள்வாய்
என்றால் நன்றாய் நடிக்கும்!

உயரப் பறக்கும் பறவை போலே
உற்சாக வானில் தொடங்கும்;
துயரமும் சோர்வும் வந்தால் புழுப்போல்
துவண்டே மூலையில் முடங்கும்!

ஆசையாம் தூண்டிலில் மீன்போல் சிக்கி
அதற்கோர் இலக்கணம் சொல்லும்;
மீசை நரைத்துத் தளர்ந்த போதிலும்
மிகவும் மையல் கொள்ளும்;

சிறகுகள் இன்றியும் எப்படி என்மனம்
சிந்தனை வானில் பறக்கிறது?
முருகா! உன்போல் எத்தனை அசுரரை
முழுதாய் தினம்நான் அழிக்கிறது?

Print Friendly, PDF & Email
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க