நாலடியார் நயம் – 23

நாங்குநேரி வாசஸ்ரீ
23. நட்பிற் பிழை பொறுத்தல்
பாடல் 221
நல்லா ரெனத்தாம் நனிவிரும்பிக் கொண்டாரை
அல்லா ரெனினும் அடக்கிக் கொளல்வேண்டும்
நெல்லுக் குமியுண்டு, நீர்க்கு நுரையுண்டு
புல்லிதழ் பூவிற்கும் உண்டு.
நெல்லுக்கும் உமி உண்டு
நீருக்கும் நுரை உண்டு
பூவிற்கும் புற இதழ் உண்டு
பற்றோடு நாம் நல்லவர் எனக்
கண்டு விரும்பி நட்பு கொண்டவர்
கெட்டவராயிருப்பினும் அதைத் தம்
மனதுள்ளே இருத்தி வெளிக்காட்டாது
மதித்துப் பழக வேண்டும்.
பாடல் 222
செறுத்தோறு உடைப்பினும் செம்புனலோடு ஊடார்
மறுத்தும் சிறைசெய்வர் நீர்நசைஇ வாழ்நர்
வெறுப்ப வெறுப்பச் செயினும் பொறுப்பரே
தாம்வேண்டிக் கொண்டார் தொடர்பு.
அடைக்குந்தோறும் கரையினை
உடைத்துக்கொண்டேயிருப்பினும்
நல்நீருடன் சினம் பாராட்டாது
நன்கு அடைத்துக் கட்டுதல்போல்
விரும்பிக் கொண்ட நண்பர்
வெறுக்கத்தக்க செயல் செய்யினும்
பொறுத்துப் போவர் சான்றோர்.
பாடல் 223
இறப்பவே தீய செயினும் தம் நட்டார்
பொறுத்தல் தகுவதொன்று அன்றோ – நிறக்கோங்கு
உருவவண்டு ஆர்க்கும் உயர்வரை நாட!
ஒருவர் பொறைஇருவர் நட்பு.
பொன்னிற கோங்க மலரில்
பாங்காய் வண்டுகள் ஆரவாரிக்கும்
உயர்மலைகளுடை நாட்டின் அரசனே!
ஒருவரின்பொறுமையினால்
இருவரின் நட்புவளருமாதலால்
தம் நண்பர் மிகுதியாய்த்
தீங்குகள் செய்யினும் பொறுத்தல்
தகுதியான செயல் அன்றோ?
பாடல் 224
மடிதிரை தந்திட்ட வான்கதிர் முத்தம்
கடுவிசை நாவாய் கரையலைக்கும் சேர்ப்ப!
விடுதற்கு அரியார் இயல்பிலரேல் நெஞ்சம்
சுடுதற்கு மூட்டிய தீ.
மடிந்துவிழும் அலைகள் குவித்த
மின்னும் ஒளி முத்துக்களை
மிகுந்த வேகமுள்ள கப்பல்கள்
மீட்டுக் கரையிலே அலையச்செய்யும்
கடற்கரையுடை அரசனே!
கைவிடற்கரிய நண்பர்கள்
நற்குணம் இல்லாதவராயின்
நம் நெஞ்சைச் சுடுவதற்காக
நம்மாலேயே மூட்டப்பட்ட
நெருப்பு போன்றவராவர்.
பாடல் 225
இன்னா செயினும் விடற்பாலர் அல்லாரைப்
பொன்னாகப் போற்றிக் கொளல்வேண்டும்; – பொன்னொடு
நல்லிற் சிதைத்த தீ நாடொறும் நாடித்தம்
இல்லத்தில் ஆக்குத லால்.
பொன்னோடு கூட நல்ல வீட்டைப்
பொசுக்கும் நெருப்பையும் தேவை கருதி
நாளும் வீட்டில் உண்டாக்குதல்போல்
நடுநடுவே துன்பம் செய்யினும்
கைவிடற்கரிய நண்பர்களைக்
காத்து பொன்போல் உயர்வாய்க்
கருதல் வேண்டும்.
பாடல் 226
இன்னா செயினும் விடுதற்கு அரியாரைத்
துன்னாத் துறத்தல் தகுவதோ – துன்னருஞ்சீர்
விண்குத்து நீள்வரை வெற்ப! களைபவோ
கண்குத்திற்று என்றுதம் கை.
அடைதற்கரிய வானத்தைக் குத்தும்
அளவு நீண்ட மூங்கில்கள் கொண்ட
மலைக்கு உரியவனே!
மாளாத் துன்பம் செய்யினும்
விடக்கூடாத நண்பர்களை
விட்டுவிடல் தகுந்ததோ?
கண்ணைக் குத்திற்று என
கைவிரலை வெட்டுவார்களோ?
பாடல் 227
இலங்குநீர்த் தண்சேர்ப்ப! இன்னா செயினும்
கலந்து பழிகாணார் சான்றோர்; – கலந்தபின்
தீமை எடுத்துரைக்கும் திண்ணறி வில்லாதார்
தாமும் அவரின் கடை.
விளங்கும் நீர்நிறை குளிர்கரையுடை
வேந்தனே! தீமையே செய்யினும்
நண்பரிடத்தே குற்றம் காணார் பெரியோர்
நட்புகொண்டபின் குற்றத்தைத்
தெளிவாக எடுத்தியம்பும்
திடமான அறிவற்றோர்
தீமைசெய்யும் நண்பரைவிடத்
தாழ்ந்தவர் ஆவர்.
பாடல் 228
ஏதிலார் செய்தது இறப்பவே தீதெனினும்
நோதக்கது என்னுண்டாம் நோக்குங்கால்! – காதல்
கழுமியார் செய்த கறங்கருவி நாட!
விழுமிதாம் நெஞ்சத்துள் நின்று.
ஆர்ப்பரித்தொலிக்கும் அருவிகளுடை நாட்டின்
அரசனே! அயலார் செய்த தீங்கு
அளவிற் கொடியதாயினும் விதியால்
விளைந்தது என்றெண்ணுங்கால்
வெறுப்பதற்கு என்ன உண்டு?
மனதில் அன்பு மிக்கவர் புரிதீமை
மனதுள் நின்று சிறந்ததாகிவிடும்.
பாடல் 229
தமரென்று தாம்கொள்ளப் பட்டவர் தம்மைத்
தமரன்மை தாமறிந்தார் ஆயின், – அவரைத்
தமரினும் நன்கு மதித்துத் தமரன்மை
தம்முள் அடக்கிக் கொளல்.
தம் உறவினராய்த் தாம் ஏற்றுக்கொண்டவர்
தம் உறவிற்குப் பொருந்தாமை செய்ததைத்
தான் அறிந்துகொண்டாராயின் அவரைத்
தம்மவரினும் மேலாகக் கொண்டு அத்
தன்மையைத் தம் மனதில் அடக்கிக் கொள்க!
பாடல் 230
குற்றமும் ஏனைக் குணமும் ஒருவனை
நட்டபின் நாடித் திரிவேனேல் – நட்டான்
மறைகாவா விட்டவன் செல்வழிச் செல்க
அறைகடல்சூழ் வையம் நக.
நண்பனாய்க் கொண்ட பின் ஒருவனின்
நெறியற்ற செயலையும் மற்ற குணங்களையும்
ஆராய்ந்து அலைவேனாயின் நண்பனுக்கு
அல்லல் விளைக்கும் இரகசியத்தைக் காக்காமல்
வெளிவிட்ட பாவி அடையும் நரகத்திற்கு ஒலிக்கும்
கடல்சூழ் உலகத்தார் இகழ நான் போகக்கடவேன்.