Author: ஜெயராமசர்மா

  • கந்தசஷ்டிப் பிரார்த்தனை [1 ம் நாள்]

    கந்தசஷ்டிப் பிரார்த்தனை [1 ம் நாள்]

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண் …. ஆஸ்திரேலியா 

    பேரரக்கர் தனையழித்த பெருமானே போற்றி
    பாருலகில் பேரரக்கர் பெருகுகிறார் நாளும்
    தீராத தொல்லையினை கொடுக்கின்றார் தினமும்
    சிவன்மைந்தா தீர்வுதந்து காத்துவிடு ஐயா

    ஊர்சிறக்க உழைக்கின்றார் ஒன்றுங் கிடையாமல்
    உளமுடைந்து உணர்விளந்து உழலுகிறார் ஐயா
    பாருலகில் கலியெழுந்து ஆடுகிறான் கந்தா
    பகையழித்த வேலவனே பொழிந்திடுவாய் கருணை

    ஆலமதை உண்டானின் அழகு திருக்குமரா
    நீலமயில் நீயமர்ந்து எமக்கருள வேண்டும்
    சீலமுடை வாழ்வுதனை தந்திடுவாய் முருகா
    திருவடியே சரணமையா சிவானாரின் மைந்தா

    Share
  • மனமகிழ தீபாவளி வருகிறது வாழ்வில்!

    மனமகிழ தீபாவளி வருகிறது வாழ்வில்!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண் …. ஆஸ்திரேலியா 

    மனமகிழ மனநிறைய கொண்டாடி நிற்க
    தினமதனை முன்னோர்கள் வகுத்துமே நின்றார்
    அறிவுடனும் தெளிவுடனும் அவரளித்த கொடையே
    ஆனந்தம் பெருக்குகின்ற திருநாட்க ளாகும்

    தீபமது வாழ்வினிலே சிறப்பளித்து நிற்கும்
    தீபவொளி எல்லோர்க்கும் மங்கலமே ஆகும்
    மாவிருளைப் போக்குதற்கு தீபவொளி தேவை
    மனமகிழ  தீபாவளி வருகிறது வாழ்வில்

    பக்தியொடு பக்குவமும் பாங்காகக் கொண்டு
    பலர்மகிழத் தீபாவளி வருகிறது பாரில்
    சுற்றமெலாம் சூழ்ந்திருந்து சுவைபயக்கும் நாளாய்
    இப்புவியில் தீபாவளி அமைந்திருக்கு எமக்கு

    தீமையெனு மெண்ணம் திசையறியாப் போக
    தீபாவளி எமக்கு வாய்த்திருக்கு வாழ்வில்
    ஞானமதை உணர்த்தி நற்கருமம்  ஆற்ற
    மாநிலத்தில் தீபாவளி வாய்த்திருக்கு எமக்கு

    புத்தாடை எமக்குப் புத்துணர்வை ஊட்டும்
    மத்தாப்பு பட்டாசு மனமகிழ்வைக் காட்டும்
    சொத்தான சுற்றங்கள் சுவைமிக்க உணவு
    அத்தனையும் தீபாவளி ஆனந்தப் பரிசே

    விலவாசி ஏற்றம் விண்ணைத் தொடுகிறது
    வேலையின்றி பலபேர் நாளுமே பெருகுகிறார்
    எரிபொருளின் விலையோ எரிச்சலைத் தருகிறது
    என்றாலும் தீபாவளி எமையணைக்க வருகிறதே

    போர்மேகம் ஒருபக்கம் போட்டியோ மறுபக்கம்
    பொறுப்பின்றி செயலாற்றும் நாடுகளோ பலபக்கம்
    வறுமை ஒருபக்கம் வாய்த்தர்க்கம் ஒருபக்கம்
    வரவிருக்கும் தீபாவளி இவைபோக்க உதவிடட்டும்

    தித்திப்பை மனமிருத்த தினமே நினைப்போம்
    எத்திக்கும் ஆனந்தம் பெருகிடவே எண்ணுவோம்
    சித்தமதில் இறையெண்ணம் என்றுமே இருந்திட்டால்
    இப்புவியில் எல்லாமே இன்பமாய் ஆகிவிடும்

    Share
  • பொற்பதம் பணிந்தோமம்மா நற்றுணை என்றும்நீயே! [சரஸ்வதி துதி]

    பொற்பதம் பணிந்தோமம்மா நற்றுணை என்றும்நீயே! [சரஸ்வதி துதி]

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா 
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண் …. ஆஸ்திரேலியா

    மாதரது குரலிலும் மழலையரின் மொழியிலும்
    கீதமென ஒலித்திடும் குயிலனது குரலிலும்
    பேதமற அமர்ந்துமே பெருங்கருணை பொழிகிறாய்
    வீணையினை மீட்டிடும் வெண்டாமரை வாணியே

    நூல்பல கற்கவேண்டும் நுண்பொருள் உணரவேண்டும்
    வாய்மையாய் வாழவேண்டும் மனவழுக் ககலவேண்டும்
    தாழ்மையாய் இருக்குமெண்ணம் தான்மன மமரவேண்டும்
    வாணியே வேண்டுகின்றோம் வழங்கியே நிற்பாயம்மா

    கற்றவர் அணைக்கவேண்டும் மற்றவர் மதிக்க வேண்டும்
    நற்றமிழ் நாவிலென்றும் நடமிட்டு நிற்கவேண்டும்
    சொற்றமிழ் சிறக்கவேண்டும் சுவையுடன் பாடவேண்டும்
    பொற்பதம் பணிந்தோமம்மா நற்றுணை என்றும்நீயே

    ஞானியர் போற்றுமம்மா நான்மறை உணர்த்துமம்மா
    தேனினும் இனிமைமிக்காய் தெளிவினை ஊட்டுகின்றாய்
    வானவர் வியக்குமாறு மதியினைத் தந்துநின்று
    வையத்தார்  விரும்புவண்ணம் வைத்திட்டாய் வாணித்தாயே

    ஏழைகள் கற்கவேண்டும் இருப்பவர் ஈய்தல்வேண்டும்
    வாழ்விலே கல்விச்செல்வம் வானோங்கி நிற்கவேண்டும்
    தோழமை உணர்வுகொண்டு கற்றவர் இணையவேண்டும்
    நாளெலாம் பரவுகின்றோம் நல்லருள் புரிவாயம்மா

    Share
  • அருளோடு பொருளை அளித்திடுவாய் அம்மா! [இலக்குமித் துதி – நவராத்திரி நன்னாள்]

    அருளோடு பொருளை அளித்திடுவாய் அம்மா! [இலக்குமித் துதி – நவராத்திரி நன்னாள்]

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ் மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண் …. ஆஸ்திரேலியா 

    பாருலகில் வாழப் படைத்துவிட்டாய் தாயே
    வாழ்வு வளமாகத் தனம்வேண்டுந் தாயே
    தினம் போற்றுமெம்மை திகப்படையா வண்ணம்
    அனுதினமும் எமக்கு அருள்புரிவாய் தாயே

    பொருளில்லா உலகில் பொழுது விடியாதே
    பொருளின்றி எதுவும் எமையணுக மாட்டா
    அருளோடும் பொருளும் உன்னிடத்தே உண்டு
    அருளோடு பொருளை அளித்திடுவாய் அம்மா

    நோயின்றி வாழ நூல்கள்பல கற்க
    வாய்மையுட னிருக்க வறுமையது போக
    ஆதார மனைத்தும் உன்கருணை அம்மா
    அருள்சுரந்து எம்மை அரவணைப்பாய் அம்மா

    தானதர்மம் செய்ய பெருமாசை தாயே
    தனமட்டும் எமக்குத் தங்குதில்லை தாயே
    ஆனமட்டும் நாமும் உழைக்கின்றோம் அம்மா
    ஆனாலும் தனமோ அணுகவில்லை அம்மா

    நீமனது வைத்தால் நிறைந்துவிடும் அம்மா
    நினைப் பெல்லாம் நீயாயிருக்கிறாய் அம்மா
    வாழ்நாளில் நாமும் வறுமையின்றி வாழ
    வரமருள்வாய் இலக்குமித் தாயேநீ எமக்கு

    Share
  • இவ்வுலகில் எம்மைக் காத்திடுவாய் அம்மா!

    இவ்வுலகில் எம்மைக் காத்திடுவாய் அம்மா!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண் … ஆஸ்திரேலியா

    ஈரமுடை நெஞ்சை ஈந்திடுவாய் தாயே
    இணையில்லா திருவடியைப் பற்றுகிறோம் தாயே
    கோரமுடை நினைப்பைக் கொன்றொழிப்பாய்  தாயே
    குவலயதில் வாழத் துணைநீயே தாயே

    ஆணவமாம் நினைப்பை அகற்றிவிடு தாயே
    அகந்தை அகமேறா ஆக்கிவிடு தாயே
    தீமையெமை அணுகா திருப்பிவிடு தாயே
    திக்கெட்டும் நிறைந்தாய் துர்க்கையம்மா நீயே

    சோர்வடையும் எண்ணம் துடைத்தெறிவாய் தாயே
    தொலைநோக்குப் பார்வை கொடுத்தருள்வாய் தாயே
    வாய்மையுடன் வாழ வரமருள்வாய் தாயே
    மாநிலத்தில் எமக்குத் துணைநீயே தாயே

    அச்சமதை அகற்ற அருகணைவாய் அம்மா
    ஐயநிலை போக்க அருள்புரிவாய் அம்மா
    இச்சைகொண்டு உன்னை இறைஞ்சுகிறோம் அம்மா
    இவ்வுலகில் எம்மைக் காத்திடுவாய் அம்மா

    Share
  • புத்தூக்கம் தரும் மருந்தாய் புவியதனில் திகழ்கின்றாய்!

    புத்தூக்கம் தரும் மருந்தாய் புவியதனில் திகழ்கின்றாய்!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண் … ஆஸ்திரேலியா

    முண்டாசுக் கவிஞனேநீ மூச்சுவிட்டால் கவிதைவரும்
    பண்டார மாயிருந்து பலகவிதை தந்தாயே
    தமிழ்வண்டாக நீயிருந்து தாகமெலாம் தீர்த்தாயே
    உண்டாலே அமுதமென உன்கவிதை இருந்ததுவே

    வறுமைத் தடாகத்தில் மலர்ந்திட்ட மாமலரே
    தறிகெட்ட மனிதரை குறிபார்த்த மாகவியே
    விடுதலைச் சிறகுகளை விரித்திட்ட பெருங்கவியே
    வீழ்வேனா எனவுரைத்து வித்தானாய் புரட்சிக்கு

    மடமைத் தனத்துக்கு மாலையிட்டார் மண்டியிட
    அடிமைத் தளையிருந்தார் அலறியே ஓடிவிட
    பொடிவைத்து பாட்டிசைத்து போக்கியே நின்றாயே
    பொல்லாதார் வசையெல்லாம் பொசுங்கிவிடச் செய்தனையே

    பாப்பாக்கு பாட்டுரைத்து பலகாரம் கொடுத்தாயே
    பாஞ்சாலி கதையெடுத்து பகர்ந்தாயே சுயவுணர்வை
    வருமென்னும் நம்பிக்கை மனமுழுக்க கொண்டதனால்
    வருமுன்னே விடுதலைக்கு பாடிவிட்டாய் பள்ளுதனை

    வேதத்தில் திளைத்தாலும் வில்லங்கம் வெறுத்தாயே
    பாதகத்தை மிதித்துவிட கோபத்தை விரித்தாயே
    சோதனைகள் அத்தனையும் சாதனையாய் கொண்டாயே
    சுறுசுறுப்பின் உருவாக சுடராக எழுந்தாயே

    மூடத் தனத்தை முற்றாக வெறுத்திட்டாய்
    முத்திக்கு வித்தான பக்குவத்தை விதைத்திட்டாய்
    வேண்டாத குப்பைகளை வீசியே எறிந்திட்டாய்
    வீண்வாதம் செய்வோரை வெந்தணலில் வீசிட்டாய்

    அச்சமதை மடமையென்று அனைவருக்கும் சொன்னாயே
    உச்சிமீது வான்விழினும் அச்சம்தவிர் என்றாயே
    மெச்சும்படி வாழுஎன்று மெய்சிலிர்க்கச் சொன்னாயே
    இச்சைகொண்டு தமிழதனை இணைத்தபடி இருந்தாயே

    பசியுந்தன் கூடவரும் பாட்டதற்கு விருந்தாகும்
    பசிகண்டு வெகுண்டதால் பாரழிப்பேன் என்றாயே
    பசிபற்றி நீயறிவாய் பசியழிக்க நீபுகன்றாய்
    பாரததத்தின் விடிவுக்காய் பட்டினியை யேற்றாயே

    அன்னைத் தமிழின் அக்கினிக் குஞ்சானாய்
    அமிழ்த மெனத்தமிழை அரியாசனம் வைத்தாய்
    அஞ்சாமைக் குணத்தை ஆளுமை ஆக்கினாய்
    அடிமை இருளகற்ற ஆகிநின்றாய் ஆதவனாய்

    முத்தமிழைப்  பாரதியுன் சொத்தாக ஆக்கினாய்
    முத்திரையாய் கவியுலகில் முன்வந்து நின்றாய்
    எத்திக்கும் உனைநினைக்க இவ்வுலகில் வாழ்ந்தாய்
    புத்தூக்கம் தரும்மருந்தாய் புவியதனில் திகழ்கின்றாய்

    Share
  • தமிழினைத் துறக்காத துறவி!

    தமிழினைத் துறக்காத துறவி!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    மட்டுநகர் வாவியிலே மீன்கள் பாடும்
    மகளிரது தாலாட்டில் தமிழ் மணக்கும்
    கட்டழகர் வாயிலெல்லாம் கவி பிறக்கும்
    கழனிகளில் நெற்பயிர்கள் களித்து நிற்கும்
    இட்டமுடன் கமுகு தென்னை ஓங்கிநிற்கும்
    இசைபாடிக் குயில்களெங்கும் மயக்கி நிற்கும்
    எத்திக்கும் இயற்கைவளம் தன்னைப் பெற்ற
    எழில் பெற்ற இடமே கிழக்கிலங்கையாகும்!

    ஈழத்தின் கிழக்காக இருக்கின்ற காரைதீவில்
    ஞானமாய் வந்துதித்தார் நம்துறவி விபுலாநந்தர்
    துறவியாய் ஆனாலும் தூயதமிழ் துறக்காமல்
    அமைதியாய் பணிசெய்து அவருயர்ந்தார் இமயமென!

    விஞ்ஞானம் படித்தாலும் விரும்பியே தமிழ்படித்தார்
    நல்ஞானம் அவரிடத்தில் நயமோடு இணைந்ததுவே
    சொல்ஞானம் சுவைஞானம் எல்லாமும் சேர்ந்ததனால்
    செல்லுமிட மெல்லாமே  சிறப்பவர்க்குச் சேர்ந்தனவே!

    ஈழத்தில் பிறந்தாலும் இந்தியா அவர்வாழ்வின்
    கோலத்தை மாற்றியதால் குன்றேறி அவர்நின்றார்
    பண்டிதராயிருந்த அவர் பல்கலைக்கழகம் தன்னில்
    பலபேரின் பாராட்டால் பதவியிலே உயர்ந்துநின்றார்!

    பண்டிதரால் வெறுக்கப்பட்ட பாரதியார் படைப்புகளை
    பண்டிதராய் இருந்தவரே பலபேரும் அறியச்செய்தார்
    பல்கலைக்கழகம் தன்னில் பாரதிக்கு இடம்கொடுத்து
    பாடமாய்ப் படிப்பித்தார் பண்பாளர் விபுலானந்தர்!

    பேராசிரிராய்ப் பெருமையுடன் பணி ஆற்றி
    ஆறாத காதலுடன் அவர்தமிழை வளர்த்தாரே
    தீராத பசியோடு தினமுமவர் தமிழ்கற்று
    யாருமே தொட்டிரா யாழ்தொட்டு நூல்செய்தார்!

    பலமொழிகள் தெரிந்தாலும் பற்றெல்லாம் தமிழ்மீது
    அவர்கொண்டு இருந்ததனால் அறிஞரெலாம் போற்றினரே
    இயலிசை நாடகத்துள் என்றுமவர் இணைந்ததனால்
    முத்தமிழ் வித்தகராய் எத்திக்கும் திகழ்ந்தாரே!

    துறவியாய் மாறினாலும் தமிழினைத் துறக்கவொண்ணா
    அறிவுசால் ஆசானாகி அருந்தமிழ் வளர்த்தே நின்றார்
    துறைபல கற்றுணர்ந்து தூயநற் பணிகள் ஆற்றி
    கறையிலா நெஞ்சங்கொண்டார் கருநிற அண்ணல்தாமும்!

    ஆசானாய் அதிபராகி அதியுயர் பதவிபெற்று
    மாசறு குணத்தனாக மாண்புறு மனத்தைப் பெற்று
    பாசமாம் வினையைப் போக்கும் பக்குவகுருவுமாகி
    தேசமே போற்றும்வண்ணம் திகழ்ந்தனர் விபுலாநந்தர்!

    Share
  • ஆடிமாதம் அம்மனின் மாதமாகும்!

    ஆடிமாதம் அம்மனின் மாதமாகும்!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா                                         
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    பன்னிரண்டு மாதங்களும் வருகின்றன. போகின்றன. சில மாதங்களை சிறப்பென்றும், சிலவற்றை ஒதுக்கிப் பார்ப்பதும் இயல்பாகிவிட்டது. ஆனால் அப்படி ஒதுக்க வேண்டியது – மனத்தில் எழுகின்ற ஒரு வித மயக்கம் என்றே எண்ண வேண்டி இருக்கிறது. எல்லா மாதங்களும் ஏதோ ஒரு விதத்தில் சிறப்புகளைத் தன்னகத்தே கொண்டு தான் வருகின்றன. மார்கழியைப் பீடை பிடித்த மாதம் என்கிறோம். புரட்டாசியையும் ஒரு பக்கம் தள்ளியே வைக்கிறோம். ஆடியை மங்கலம் அற்ற மாதம் என்கிறோம். பங்குனியை,  சித்திரையை, தையை, ஆவணியைக் கொண்டாடி வரவேற்கிறோம். இப்படி நோக்குவது எங்களிடம் இயல்பாகி விட்ட நிலையில்; மங்கலம் இல்லா மாதமாக எடுத்துக்கொள்ளும் ஆடி எங்களை நாடி வருகிறது! வருகின்ற ஆடியை விட்டு விட்டு விலகத்தான் எங்களால் முடியுமா? முடியவே முடியாது! நாடிவரும் ஆடி பற்றி பார்ப்போமா வாருங்கள்!

    ஆடி என்றவுடன் – ஆடிச்செவ்வாய், ஆடி வெள்ளி, ஆடிப்பூரம், ஆடிக்கார்த்திகை, ஆடித்தபசு, ஆடிப் பெருக்கு, ஆடி அமாவாசை, ஆடி பெளர்ணமி, என்று இறை வழிபாட்டுடன் இணைந்ததாக ஆடி மாதம் முழுவதும் அமைந்திருப்பதை நாமனைவரும் மனமிருத்த வேண்டியது அவசியம். ஆடி மாதத்தை அம்மனின் மாதம் என்பதையும் அகமிருத்தல் மிகவும் அவசியமேயாகும். அப்படி இருக்க ஆடியை நாடாமல் ஒதுக்கிப் பார்ப்பது முறையா?

    மார்கழியில் திருவெம்பாவை வருகிறது. ஆண்டாளின் திருப்பாவையும், மணி வாசகரின் திருவெம்பாவையும் மார்கழியில் கோவில்களில் பக்தி சிரத்தையுடன் பாடப்படுகிறது. வைணவர்களும், சைவர்களும் கொண்டாடும் மாதமாய் மார்கழி இருக்கிறது. மாதங்களில் நான் மார்கழி என்று கீதையில் கண்ணனே சொல்லுவதுதையும்  கருத்திருத்த வேண்டும். புரட்டாசியில் நவராத்திரி வருகிறது. கலைகளைப் போற்றும் விழாவாகக் கொண்டாடப்படுகிறது. சமயமும் கலைகளும் சங்கமிக்கும் மாதமாய் புரட்டாசி விளங்குகிறது. ஆடி, புரட்டாசி, மார்கழி இறைவழிபாட்டுக்குரிய மாதங்களாகும். அப்படி என்றால் மற்றைய மாதங்கள் இறை வழிபாட்டுக்கு ஏற்றன அல்லவா என்று வினா எழுகிறதல்லவா? ஆடி, புரட்டாசி, மார்கழி மாதங்களில் மங்கலமான நிகழ்வுகளான – வீடு குடுபுகுதல், திருமணம், திருமண நிச்சயார்த்தம், காது குத்தல், எதையும் செய்வதில்லை. காரணம் – இம்மாதங்கள் தேவர்களுக்கு உரிய மாதங்கள். மனிதர்களுக்கும் அவர்களின் இன்பங்களுக்கும் உரிய மாதங்கள் அல்ல என்பதுதான் காரணம்.

    சூரியனை அடிப்படையாகக் கொண்ட மாதங்கள்தான் நம்முடைய தமிழ் மாதங்கள். கடக ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் காலம்தான் ஆடி மாதம். ஆடி மாதம் தொடங்கி மார்கழி மாதம் வரையான ஆறு மாதங்களும் சூரியன் – தன்னுடைய வடக்கு நோக்கிய பயணத்தை முடித்துக் கொண்டு தெற்கு நோக்கி பயணிக்கிறார். தெற்கு என்பது பித்ருக்களுக்கு உரிய திசையாகும். இதனால் இம்மாதத்தை பித்ருக்குகளுக்கு வழி பாடாற்றும் மாதமாயும் கொள்ளும் நிலை ஏற்பட்டது.

    மனிதர்களுக்கு ஓராண்டு என்பது தேவர்களுக்கு ஒரு நாள் ஆகும். ஆடி தொடங்கி மார்கழி வரையான ஆறுமாதங்களும் சூரியனின் தெற்கு நோக்கிய பயணமாகும். தை தொடக்கம் ஆடிவரையான ஆறு மாதங்களும் சூரியனின் வடக்கு நோக்கிய பயணமாகும். வடக்கு நோக்கிய பயணக் காலத்தில் வெப்பம் அதிகமாய் இருக்கும். தெற்கு நோக்கி சூரியன் பயணிக்கும் பொழுது வெம்பம் தணிந்து – காற்று, மழை, பனி என்னும் காலநிலை வந்து நிற்கும். தெற்கு நோக்கிய சூரியனின் பயணக்காலம் தேவர்களுக்கு இராக்கால மாகும். அதாவது ஆடி என்பது தேவர்களின் இராக்கால தொடக்கமாகும். மார்கழி என்பது தேவர்களுக்கு விடியல் காலமாகக் கருதப்படுகிறது. ஆடி இரவின் தொடக்கம். மார்கழி விடியலின் தொடக்கம்.

    ஆடியில் சூரியன் கடகராசியில் சஞ்சரிக்கிறார் என்று பார்த்தோம். கடகராசி என்பது சந்திரனின் ஆட்சி வீடாகும். சூரியன் சிவனின் அம்சமாகும். அந்தச் சூரியன் சக்தியின் அம்சமான சந்திரனில் சஞ்சாரம் செய்யும் நிலை இக்காலத்தில் அமைகிறது. இதனால் சந்திரனின் ஆளுமை அதிகரிக்கிறது. இப்படி ஆவதால் ஆடி மாதம் என்பது சக்தியின் மாதமாய் விளங்குகின்றது. அக்காரணத்தால்தான் அம்மனின் மாதம் – ஆடி என்று ஆகிவிட்டது. அம்மனுக்கு உகந்த விழாக்கள் இம்மாதத்தில் முக்கியத்துவம் பெறுவது இதனால்த்தானோ என்று எண்ணிட  வைக்கிறது.

    அறிவியல் வழியில் சிந்திப்பதும் உகந்ததாகும். ஆடி மாதம் காற்றுக் காலமாகும். காற்றினால்  பரவும் நோய்கள்  அதிகரிக்கும் காலமாகவும் இக்காலம் அமைகிறது. இதனால், வேப்பிலை, மஞ்சள் என்பவற்றை வழிபாடு என்ற வகையில் அம்மனுக்கு உரியதாக்கி நிற்பதும் நோக்கத்தக்கது. அத்துடன் கூழ் காய்ச்சு வதும், அம்மனுக்கு வைத்து வழிபடுவது கூட அறிவியலை ஆன்மீகத்துடன் இணைக்கும் நிலையினையே காட்டுகிறது அல்லவா!

    ஆடி மாதத்தை கணக்கிட்டுத்தான் பண்டிகைகளின் தொடக்கமே அமைகிறது என்பதும் நோக்கத்தக்கது. கிராமங்கள் தோறும் அம்மனுக்குரிய விழாக்கள் நடைபெறுவதும் மனமிருத்த வேண்டியதே. அம்மனைப் பல நிலைகளில் வழிபடுவதும் நோக்கத்தக்கது. காவல் தெய்வமாய் கருதி போற்றி வழிபாடுகளில் ஈடுபடு வதையும் ஆடியில் காணக்கூடியதாய் இருக்கிறது.

    ஆடியில் ஆறுகளில் நீர்ப்பெருக்கு வருவதை அனைவரும் கொண்டாடி மகிழ்கின்றார்கள். இதனையே ஆடிப்பெருக்கு என்று அகமகிழ அழைக்கின்றார்கள். சுமங்கலிப் பெண்கள் தங்களின் தாலிக்கயிற்றை மாற்றுவதும், அம்மனுக்கு படையில் வைத்து ஆராதிப்பதும் இவ்வேளை இடம் பெறுகிறது என்பதும் மனங்கொள்ளத் தக்கதாகும்.

    பெண்கள் விரும்பி அனுட்டிக்கும் விரதமான வரலட்சுமி விரதம் ஆவணி மாதத்துக்குரியதாய் இருந்தாலும், பெரும்பாலன சமயங்களில் ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகளில் வருகிறது. ஆடி வெள்ளியில் மாரியம்மனுக்கு தேர்த்திருவிழா, தெப்பத்திருவிழா, தீமிதிப்பு எல்லாம் நடக்கும். அருள் மாரி யாய்  கருமாரி விளங்கிறாள் அல்லவா?  சின்னக் கோவில்கள், பெரிய கோவில்கள் எல்லாம் இந்த விழாக்கள் நடை பெறுவதும் நோக்கத்தக்கது.

    ஆடி மாதத்தில் வருகின்ற அமாவாசையும், தையில் வருகின்ற அமாவாசையும், கடலில் நீராட உகந்த தினங்களாகும். தஷிணாயன புண்ணிய காலம், உத்தராயன புண்ணிய காலம் என்று இக்காலங்களைச் சிறப்பித்துச் சொல்லுவார்கள்.

    இறைவனை அடைவதற்கு அன்னை பராசக்தி தவம் செய்ததும் ஆடி மாதத்தில்த்தான். சூடிக்கொடுத்த சுடர்கொடியான ஆண்டாள் நாச்சியார் ஆடியில்த்தான் அவதரிக்கின்றார். சுந்தரமூர்த்தி நாயனாரை இறைவன் அழைத்துக் கொண்டதும் ஆடியில்த்தான் என்பதும் அகமிருத்த வேண்டிய கருத்தெனலாம்.

    தையினை பொங்கல் திருநாளாய், அறுவடைத் திருநாளாய் கொண்டாடுவதற்கு வித்திடப்படுவதே ஆடியில்த்தான். “ஆடிப்பட்டம் தேடி விதை” என்னும் பழமொழியே ஆடியில் விதைத்தால்த்தான் தையில் அறுவடை செய்ய முடியும் என்பதைக் காட்டி நிற்கிறதல்லவா?

    ஆடிச் செவ்வாயினை மையமாய் கொண்டு “ஆடிச்செவ்வாய் தேடிக்குளி – அரைச்ச மஞ்சளைப் பூசிக்குளி” என்னும் முதுமொழியும் பழக்கத்தில் இருக்கிறது.

    ஆடி தெய்வீக மாதம். அம்மனின் மாதம், என்றெல்லாம் போற்றப்பட்டாலும் புதுமணத் தம்பதிகளுக்கு மட்டும் வெறுப்பான மாதமாய் இருக்கிறது. அவர்களுக்கு மட்டும் ஏன் வெறுப்பாய் இருக்கிறது என்பதையும் அறிவதும் அவசியம் அல்லவா! மணமான தம்பதிகளைப் பிரித்து விடுவார்கள். அதாவது பெண்ணைப் பிறந்த வீட்டு அனுப்பி விடுவார்களாம். சாஸ்த்திரம் என்று சொன்னாலும் – இங்கே எங்களின் முன்னோர்களின் நல்ல சிந்தனையும் கலந்தே இருக்கிறது. ஆடியில் கருவுற்றால் – பத்தாவது மாதமான சித்தியிரையில் பிரசவம் நடக்கும். சித்தியிரையில் புத்திரன் பிறந்தால் தந்தைக்கு நல்லதல்ல என்னும் கருத்து சாதரணமாக சமூகத்தில் நிலவுகிறது. இது எந்தளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை. சித்திரையில் கத்தரி வெயில் என்பதை அனைவரும் அறிவோம். வெப்பம் கூடிய காலத்தில் பிரசவம் நடந்தால் காலநிலை காரணமாக பிரசவிக்கும் பெண் பெரும் வேதனைக்கு ஆளாவாள். பிரசவ வேதனையுடன் வெயிலின் கொடுமையும் பெருவேதனையைத் தந்துவிடும் என்பதால் மணப்பெண்ணை பிறந்த வீட்டுக்கு ஆடியில் அனுப்பிய எங்களின் முன்னோர்களின் சிந்தனையினைப் பாராட்டாமல் இருக்கத்தான் முடியுமா?

    ஆடி என்றவுடன் ஆடிவேல் விழா அகத்தினில் அமர்ந்து விடும்!  எங்கள் தங்கத்தாத்தா சோமசுந்தரப் புலவரும் கட்டாயம் வந்து நிற்பார்.தாத்தாவின் வரவையும் , அவரின் ஆடிப்பிறப்பு ஆனந்தமான பாடலையும் நினைவுக்குக் கொண்டுவருவதும் நாடிவரும் ஆடி அல்லவா !

    ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை
    ஆனந்த மானந்தம் தோழர்களே!
    கூடிப்பனங்கட்டி கூழுங் குடிக்கலாம்
    கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!

    பாசிப்பயறு வறுத்துக்குத்திச் செந்நெல்
    பச்சை அரிசி இடித்துத் தெள்ளி,
    வாசப்பருப்பை அவித்துக்கொண்டு நல்ல
    மாவைப் பதமாய் வறுத்தெடுத்து,

    வேண்டிய தேங்காய் உடைத்துத் துருவியே
    வேலூரில் சக்கரையுங்கலந்து,
    தோண்டியில் நீர்விட்டு மாவை அதிற்கொட்டி
    சுற்றிக் குழைத்துத் திரட்டிக்கொண்டு.

    வில்லை வில்லையாக மாவைக் கிள்ளித்தட்டி
    வெல்லக் கலவையை உள்ளே இட்டு
    பல்லுக் கொழுக்கட்டை அம்மா அவிப்பாளே
    பார்க்கப் பார்க்கப் பசி தீர்ந்திடுமே!

    பூவைத் துருவிப் பிழிந்து பனங்கட்டி
    போட்டு மாவுண்டை பயறுமிட்டு
    மாவைக் கரைத்தம்மா வார்த்துத் துழாவுவள்
    மணக்க மணக்க வாயூறிடுமே

    குங்குமப் பொட்டிட்டு பூமாலை சூடியே
    குத்து விளக்குக் கொளுத்தி வைத்து
    அங்கிளநீர் பழம் பாக்குடன் வெற்றிலை
    ஆடிப் படைப்பும் படைப்போமே

    வண்ணப் பலாவிலை ஓடிப்பொறுக்கியே
    வந்து மடித்ததைக் கோலிக்கொண்டு
    அன்னை அகப்பையால் அள்ளி அள்ளி வார்க்க
    ஆடிப் புதுக்கூழ் குடிப்போமே

    வாழைப் பழத்தை உரித்துத் தின்போம் நல்ல
    மாவின் மாவின் பழத்தை அறுத்துத் தின்போம்
    கூழைச் சுடச் சுட ஊதிக்குடித்துக்
    கொழுக்கட்டை தன்னைக் கடிப்போமே

    நாடிவரும் ஆடி அமங்கல மான மாதம் அல்ல! அது தெய்வீக மாதம்! கொழுக்கட்டையும் சாப்பிட்டு கூழும் குடித்து மகிழும் காலம். ஆடிப்பட்டம் விட்டு அம்மனை போற்றிக் கொண்டாடி, தோழர்களுடன் பாடி மகிழுவோம் வாருங்கள்.

    Share
  • மா​னிட உருவில் பூமிக்கு வந்த தெய்வங்களே மருத்துவர்கள்!

    மா​னிட உருவில் பூமிக்கு வந்த தெய்வங்களே மருத்துவர்கள்!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா   
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    தேடிக் கண்டு கொண்டேன் – திரு
    மாலொடு நான்முகனும்
    தேடுத் தேடொணா தேவனை யென்னுள்ளே
    தேடிக் கண்டு கொண்டேன்

    என்னும் திருமுறைப் பாடல் இறைவனை உள்ளத்தினுள்ளே கண்டு கொண்டதாக உரைத்து நிற்கிறது. உள்ளத்தினுள் கண்ணுற்றேன் இறைவனை என்று சொல்லும் இந்தத் திருமுறைக்கு இப்போ என்னதான் அவசியம் என்று எண்ணுகிறீர்களா? கண்கண்ட தெய்வம் என்கிறோம் கலியுக வரதன் என்கிறோம். பார்க்குமிடமெல்லாம் நீக்கமற நிறைந்திருக்கும் பரம்பொருள் என்கிறோம். தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்கிறோம். கூப்பிட்ட  குரலுக்கு ஓடிவருவான் என்கிறோம். இப்படி எல்லாம்  நாங்கள்  நினைத்திருக்கும் கடவுளைக் கண்ணால் கண்டோமா என்றால் அதற்குச் சரியான பதிலை வழங்குவது கடினம். சரியான பதிலைத் தருகிறோம் என்று சிலர் முன்வந்தாலும்கூட அங்கும் சரியான பதில் கிடைக்குமா என்பதும் ஐயத்துக்குரியதே. கடவுளைக் காணமுடியுமா? என்பது உலகத்தில் அன்று தொடக்கம் இன்றுவரை மனதுக்குள் பதிந்திருக்கும் பெரு வினாவாகும். எதிர்பாராமல் எதிர்பாரா நேரத்தில் யாராவது உதவி நிற்கும் வேளை அவரை “கடவுள் போல வந்தீர்கள்” என்று அழைப்பது நம்வாழ்வில் காண்கிறோம். தக்க சமயத்தில் கைகொடுக்கும் செயலைக் கடவுளின் செயலாகக் கருதுகிறோம். தக்க சமயத்தில் உதவு நிற்பவர்களைக்கூட  சமூகத்தில் கடவுள் வடிவிலேயே  காணும் நிலையும் காணப்படுகிறது.  தேவ உலகம் இருக்கிறது. அங்கு தேவன் இருக்கின்றான். அந்தத் தேவன் உதவிடுவான் என்னும் நம்பிக்கை சமுகத்தில் வேரூன்றி இருக்கிறது எனலாம்.

    கடவுளை நம்பாதவர்கூட தம்மை அறியாமலே “கடவுளே” என்று சொல்லு வதையும் காண்கிறோம். கடவுளுக்கென பல பெயர்கள் பல உருவங்கள் கொடுக்கப்பட்டாலும் “கடவுள் ஒருவரே” என்னும் கருத்தை மறுப்பதற்கும் இல்லை என்பதும் கருத்திருத்த வேண்டியதே ஆகும். கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள்கூட “கடவுளை இயற்கை வடிவில் காண்கிறார்கள்” என்பதும் நோக்கத்தக்க தாகும். அதுமட்டுமல்ல கடவுள் என்னும் பெயரை உச்சரிக்க விரும்பாதவர்கள் “எமக்கு மேற் பட்ட சக்தி” என்று அழைப்பதும் கருத்திருத்தக் கூடியதே.

    மனிதன் வாழுகின்ற இந்தப்பூமி இப்போது அவலத்தின் மடியில் அல்லற்பட்டு நிற்கிறது. ஆர்வருவார் காப்பாற்ற என்று அவலக்குரல் எழுப்புகிறது. சாதரண வாழ்க்கை சீர்குலைந்து நிற்கிறது. சட்டமா ஒழுங்கா, சமயமா கோவிலா, என்றெல்லாம் எண்ணி நிற்கும் நிலையும் காணப்படுகிறது. இனத்துக் காய் சண்டை, மொழிக்காகச் சண்டை, மதத்துக்காய் சண்டை, என்று சண்டை செய்த மனோபாவம் மங்கிப்போய் நிற்கிறது. ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்  உணர்வுடன் கலக்க ஆரம்பிக்கின்றது.  சாதிகள் பறக்கின்றன. தத்துவங்கள் பறக்கின்றன. ஏதுவரும் எனவறியா ஏக்கமே மிகுகிறது. போதிமரப் புத்தரும், சிலுவைதரும் கர்த்தரும், பிறை காட்டும் அல்லாவும், விடையேறும் பெருமானும், பள்ளி கொள்ளும் திருமாலும் எல்லாமே சரியென்னும் நிலையிப்போ எழுகிறது.

    எல்லாக் கடவுளும் எல்லா மதங்களும் இணைகின்ற புரட்சியைத்தான் இப்போது காணுகிறோம். இந்தப் புரட்சிக்கு வித்திட்டு சமத்துவத்தை சமநிலையை சமதர்மத்தை உருவாக்கியது கொடுமையான கொரனோ என்னும் நோயாகும்.

    இது ஏன் வந்தது? யார் பரப்பியது? இதில் அரசியல் உண்டா? பொருளாதார நோக்குண்டா? என்றெல்லாம் வாதப்பிரதி வாதங்கள் நடந்து கொண்டு இருக்கிறது. ஒவ்வொருவரும் விமர்சனங்களையும் விதண்டா வாதங்களையும் வெளிப்படுத்துவதில் காலத்தை கழிக்கிறார்கள். தொலைக்காட்சிகள்,  முகநூல்கள், கைப்பேசிகள் யாவும் சரியான வகையில் பயன்படாமல் போகும் நிலையும் காணப் படுகிறது.

    இப்படியான விடயங்களை எதற்காக இங்கு காட்டுகிறீர்கள் என்னும் வினா உங்கள் எல்லோர் உள்ளத்திலும் நிச்சயமாக எழாமல் இருக்கவே முடியாது! அவசியம் கருதியே சொல்லும் நிலை! அனைவரின் மனத்திலும் அமரவேண்டிய நிலை! அதனாலேயே இத்தனை விளக்கங்கள்!

    கொரனோ வந்து கோரமாய்த் தாண்டவம் ஆடி, பல உயிர்களைப் பறித்தபடி இருக்கிறது. ஒருவரை ஒருவர் பார்க்கவோ பேசவோ கைகுலுக்கவோ முடியாத நிலையைக் கொரோனா ஏற்படுத்திவிட்டது. உறவுகள் பிரிவுகள் ஆகிவிட்டன. கூடினால் ஆபத்து!  குலவினால் ஆபத்து! நினைக்கவே இருள் எம்மைச் சூழந்த உணர்வே எழுகிறது.

    இந்த நிலையில் வைத்தியர்களும் தாதியர்களும் எப்படி இருக்கிறார்கள் என்றால் மண்மீது வந்த மருத்துவ தெய்வங்களாய் மாறியிருக்கிறார்கள் என்று தான் கொள்ள வேண்டும். சாதாரண வேளையில் மருத்துவம் பார்ப்பதைவிட இக்கட்டான  நிலையில் மருத்துவம் பார்ப்பதும் கம்பியில் நடப்பது போல் என்றுதான் சொல்லவேண்டும். கொரனோ காலத்தில்  வைத்தியர்களின் சேவையையும், மருத்துவத்தின் துணையினையும், போற்றாமல் இருக்கவே முடியாது! தொற்றியவர்களைப் பராமரிக்கும் மருத்துவர்களே கொரனோவுக்கு இலக்காகி உயிரை இழக்கும் நிலைகூட நேர்ந்திருக்கிறது.  வைத்தியர்களைப் பற்றி நினைத்துப் பார்ப்பவர்கள் மிகவும் குறைவென்றே சொல்லலாம். தங்களின் சிக்கல்கள் தீர்ந்தால் போதும் என்று எண்ணுபவர்கள் –  மருத்துவர்கள் படுகின்ற மனவுளைச்சல்களைப் பற்றி நினைத்துப் பார்க்கிறார்களா என்றால் – பெரும்பாலும் இல்லை.

    வைத்தியர்கள், தாதியர்கள் வானத்தால் வந்து குதித்தவர்கள் அல்ல. அவர்களும் எங்களை ஒத்தவர்களே. குடும்பம் அவர்களுக்கும் இருக்கிறது. அன்பான கணவன் ஆசையான குழந்தை, அன்பான மனைவி அணைத்திடக் குழந்தை, அப்பா, அம்மா, சகோதரங்கள், என்று உறவுகளால் பிணைக்கப்பட்டே  இருக்கிறார்கள். அப்படி அவர்கள் இருக்கிறார்கள் என்பதை நாம் மறந்தே விடுகிறோம். வைத்தியசாலை சென்றால் அது எந்த நேரமானாலும் எம்மைக் கவனித்துப் பராமரிக்கும் கடமை அவர்களுக்கு உண்டு என்பதை மட்டுமே நாமெல்லோரும் நினைவில் வைத்தபடியே இருக்கிறோமே தவிர – அவர்களும் மனிதர்களே அவர்களுக்கும் களைப்பு இருக்கும். அவர்களுள்ளும் பல நினைப்புகள் ஓடும் என்பதையெல்லாம் எவருமே எண்ணுவதே இல்லை. வைத்தியத்துக்குப் போய்விட்டால் சுகமாக்கி அனுப்புவது அவர்களது கடமை மட்டுமே என்றுதான் எண்ணுகிறோம். அப்படி நினைப்பதற்கு நாம் ஒருவரல்ல. எம்மைப் போல் பலரும் அங்கு வந்து நிற்கிறார்கள். அவர்கள் அனைவரையும் முகங் கோணாமல் சினங்காட்டாமல் பசியை நித்திரையை மறந்து மருத்துவர்கள் தாதியர்கள் வேலை செய்யவில்லை பணியாற்றுகிறார்கள் என்பதை எம்மில் பலரும் நினைத்துக்கூடப் பார்ப்பதே இல்லை.

    இரத்தமும், சதையும், மரணமும், ஓலமும் அவர்களின் நாளாந்த வாழ்க்கை ஆகிவிட்டது. அவர்கள் படுக்கைக்குப் போனாலும் அவர்கள் கனவில்கூட  ஓலமிட்டு நிற்பவரும், மரணவாயில் நிற்பவரும்தான் வந்து நிற்பார்கள். கார் இருந்தும், நல்ல வீடிருந்தும், நல்ல படுக்கை இருந்தும், அவர்களுக்கு நல்ல நித்திரைதான் வந்திடுமா? ஒருகணம் நாம் நினைத்துத்தான் பார்த்ததுண்டா?

    நாளாந்தம் இதுதான் அவர்களது நிலை. ஆனால் இப்போது இந்த நிலை இன்னும் மோசமாகிவிட்டது. இதுவரை நாளும் பணிக்குச் சென்றால் பணி முடிந்த பின்னர் வீடு வந்திடலாம். சிறிது பொழுதாவது குடும்பத்துடன் இருந்திடலாம். ஆனால் கொரனோவின் கோரத்தால் மருத்துவர்களோ தாதிகளோ மருத்துவ மனையிலேயே இருக்கும் நிலை உருவாகியது.  அதனால்  பணிகூட அவர்களுக்குப்  பயமாகிவிட்டது. தொற்றிவிடும் எனும் பயத்தால் எட்ட நிற்கும் நிலை. தொற்றிவிடும் எனும் பயத்தால் தொடமுடியா நிலை. பெற்ற பிள்ளை வீட்டில். பெற்றவரும் வீட்டில். கட்டிய கணவனும் வீட்டில். தொட்டி லிலும் ஒரு பிள்ளை. பால் கொடுக்க தாயில்லை. பார்க்கத்துடிக்கும் பிள்ளைக்கு அம்மாவைப் பார்க்கவே முடியாத நிலை.

    மூன்றுபிள்ளைகளின் தாயான மருத்துவர் பிள்ளைகளைக் கட்டி அணைத்து முத்தமிட்டுப் பிரியவிருப்பின்றி மருத்துவமனை செல்கின்றாள். சென்றவள் வீட்டுக்கு வரமுடியா நிலை. சின்னக் குழந்தைகள் அம்மாவைக் காணாது அடம் பிடிக்கின்றன. அப்பாவினால் அம்மாவை அணுகமுடியாத நிலை. கை பேசியில் கதைக்கிறார்கள். காணொளியில் பிள்ளைகளுக்கு முத்தம் இடுகிறாள். இரண்டு வாரத்தின் பின் காணொலியில் முத்தமிட்ட தாய் காணாமலே போய்விடுகிறாள். கட்டியகணவன் கதறி அழுகிறான். மருத்துவமாது மனிதம் காக்க தெய்வமாகிறாள்!

    இங்கிலாந்தில் இருதய அறுவை சிகிச்சை நிபுணராகக் கடமையாற்றியவர் இரண்டுபிள்ளைகளின் தந்தை. அர்ப் பணிப்புடன் பணியாற்றிய மருத்துவர். சகமருத்துவர்களால் பெருதும் மதிக்கப்பட்டவர். மருத்துவமனையிலேயே மனைவியைக் குழந்தையைத் தவிக்கவிட்டு மரணத்தை தழுவிக் கொள்ளுகின்றார். இந்தியரானவர் இங்கிலாந்து சென்று மருத்துவத்தில் பெரும்புலமை பெற்றார். மருத்துவத்துக்கே தன்னையே கொடுத்தும் விட்டார். மாடிமனை வீடிருந்தும் அவர் குடும்பத்தையே பார்க்காமலேயே பணியிலேயே பலியாகிவிட்டார்.

    வீடுசென்றால் மனைவிக்கும் குழந்தைக்கும் தொற்று பரவிடும் என்பதால் தனது வாகனத்தையே வீடாக்கி அதிலேயே தங்கி நோயாளரைக் கவனித்து வருகிறார் என்னும் செய்தியைப் பார்க்கும் பொழுது அவரை வணங்காமல் இருக்கத்தான் முடியுமா? மனைவியுடன் குழந்தையுடன் கைபேசியில் மட்டுமே தொடர்பில் இருக்கும் அவரும் எங்களைப் போல் ஒருவர்தானே!

    வருகிறேன் என்று சொல்லி விடைபெற்ற மருத்துவர் திரும்பி வரவேயில்லை. இரண்டு வயதுக் குழந்தையை காணொளி வாயிலாகக் கண்டு தனது அன்பு முத்தத்தை அளிக்கிறாள் அந்த மருத்துவமாது. தாயைக் கண்ட குழந்தை அழுகிறது. அழுகை தாங்கமுடியாக் கணவன் குழந்தையுடன் மருத்துவமனை செல்கிறான். மனைவியோ பக்கம் வரமுடியாமல் தூரவே நிற்கிறாள். தாயைக் கண்ட மழலை தவித்து அழுகிறது. தாயும் தவிக்கிறாள். அழுகிறாள். பார்த்திருக்கும் ஏனைய பணியாட்களும் அழுகிறார்கள். கணவன் கலங்கிய கண்களுடன் அழுங்குழந்தையுடன்! இதுதான் மருத்துவர்களின் நிலை! அழுகையை ஓரங்கட்டிவிட்டு தனது பணியில் இறங்கிவிடுகிறாள் அவள். இது இறை நிலை அல்லவா? விருப்பை வெறுப்பை வெளிக்காட்டா நிலை! பற்றற்ற நிலை!  

    தன்கையால் உணவு கொடுத்து தயாளமாய் தடவிக் கொடுத்த பலரின் மரணத்தை கண்டதும் தற்கொலை முயற்சிக்கே பல தாதியர்கள் சென்று விடுகிறார்கள். பேசியபடி வந்தவர்கள் பேசாமலே ஆகிவிடுதலைக் காணும் தாதியர்கள் எப்படி இருப்பார்கள்? மருத்துவர்கள் சேவை ஒருவிதம் தாதியர்கள் சேவை இன்னொருவிதம் “மக்கள் சேவை மகேசன் சேவை” இதைத்தான் மருத்துவர்களிடமும் தாதியரிடம் காணுகிறோம். “மக்கள் சேவையே மகேசன் சேவை” என்பதை மகான்களே மொழிந்திருக்கிறார்கள். மகான்களின் வழியில் செல்லும் மருத்துவர்களும் தாதிகளும் மண்ணுலகில் இன்று “கண் கண்ட தெய்வம்” ஆகின்றார்.

    விதண்டாவாதம் பேசுவதும், விஷமத்தனமாய் கருத்துகளைப் பதிவிடுவதும் குறைசொல்லி நிறைவடைவதும், நாட்டு நிலை புரியாமல் செயற்படுவதும் சமூக அக்கறையின்மையினையே காட்டும். வீட்டுக்கே வரமுடியாமல் நாட்டினைக் காத்திட தம்வாழ்வினையே அர்ப்பணிக்கும் மருத்துவர்களையும் தாதியர்களையும் வணங்கவே வேண்டும். “மானிட உருவில் பூமிக்கு வந்த தெய்வங்களே”  இவர்கள் என்பதை யாவரும் மனமிருத்தல் அவசியமாகும்.

    கடவுளைக் காண்பது என்பது அரிதினும் அரிது. கடவுள் எப்படி வருவார்? எப்போது வருவார்? அப்படிவரும் பொழுது அவரின் தோற்றம் எப்படி இருக்கும்? என்று அறிந்திடும் ஆவல் அனைவருக்கும் ஏற்படவே செய்யும். அப்படி ஆவலுடன் இருப்பவர்களே…. கடவுள் வேறெங்குமே இல்லை. மருத்துவ உலகில் மலர்ந்து நிற்கும் மருத்துவர்களே – கடவுளின் தோற்றமாய் வருகிறார்கள் என்பதுதான் நிதர்சனமாகும். மருத்துவர்கள் அனைவருமே ஆண்டவனால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களேயாவர். தான் படைத்த மனிதர்களுக்கு  உதவுவதற்காக கடவுள் கையில் எடுத்த வழிதான் மருத்துவமும், மருத்துவர்களும் என்றும் எடுத்துக் கொள்ளலாம் அல்லவா? எம்பெருமான் சிவனே மருத்துவம் பார்ப்பதற்கு வைத்தியராக வந்தார் என்று புராணங்கள் வாயிலாக அமையும் செய்தியும் இங்கு கருத்திருத்த வேண்டியதேயாகும். கடவுளே வைத்தியர் உருவினையே அகங்கொண்டார் என்பதிலிருந்து மருத்துவர்களின் உன்னதம் வெளிச்சமாய் தெரிகிறதல்லவா? வைத்திய நாதன், வைத்தீஸ்வரன், என்பதெல்லாம் ஆண்டவனின் திருநாமங்களாய் அமைந்திருப்பதையும் நாம் அகமிருத்துதல் அவசியமாகும்.

    Share
  • காலமெலாம் நெஞ்சில் சுமக்கும் அப்பா!

    காலமெலாம் நெஞ்சில் சுமக்கும் அப்பா!

    மகாதேவ ஐயர் ஜெயராம சர்மா 
    மெல்பேண், ஆஸ்திரேலியா 

    பெற்றிடுவாள் அன்னை பெரிதுவப்பார் அப்பா
    உற்ற துணையாகி உழைத்திடுவார் அப்பா
    கற்பனைகள் நிறைத்து கனவுகாண்பார் அப்பா
    காலமெலாம் எம்மைச் சுமந்திடுவார் அப்பா

    கைப்பிடுத்து எம்மைக் குருசேர்ப்பார் அப்பா
    கற்பவற்றைக் கற்க கையணைப்பார் அப்பா
    கல்வியென்னும் பயிரில் களையெடுப்பார் அப்பா
    கற்றவரின் அவையில் அமர்கவென்பார் அப்பா

    வளர்ச்சியினைக் கண்டு மனமகிழ்வார் அப்பா
    தளர்ச்சியினைக் கண்டால் தாங்கிடுவார் அப்பா
    விளைச்சலினை நோக்கி அழைத்திடுவார் அப்பா
    விகற்பநிலை வந்தால் விலக்கிடுவார் அப்பா

    பொய்யென்னும் கருவைப் பொசிக்கிடுவார் அப்பா
    பொறாமையெனும் நினைப்பைப் போக்கிடுவார் அப்பா
    மெய்யென்னும் கருவை விதைத்திடுவார் அப்பா
    மேதினியில் வாழ்வின் விளக்காவார் அப்பா

    நல்லநட்பை நாளும் நாடச்செய்வார் அப்பா
    நல்லறிஞர் பெருமை நயந்துரைப்பார் அப்பா
    எல்லையில்லா அன்பை ஈந்துநிற்பார் அப்பா
    இனிமையிலா நட்பை எடுத்தெறிவார் அப்பா

    வறியநிலை கண்டால் வதங்கிடுவார் அப்பா
    நெறிபிறழ்ந்த வாழ்க்கை நினைவிருத்தார் அப்பா
    அறமுரைக்கும் வள்ளுவம் அகநிறைப்பார் அப்பா
    அரைக்கணமும் வரம்பைக் கடந்துவிடார் அப்பா

    இலக்கியத்தை இங்கிதத்தை எனக்குரைப்பார் அப்பா
    இலக்குவிட்டுப் போகாது காத்திடுவார் அப்பா
    சமயநெறி, தத்துவங்கள் போதிப்பார் அப்பா
    சன்மார்க்க வழியினிலே கூட்டிச்செல்வார் அப்பா

    நான்விரும்பும் அத்தனையும் செய்திடுவார் அப்பா
    தான்விரும்பும் நல்லவற்றை எனக்களிப்பார் அப்பா
    வானிறங்கும் மழைபோல வழங்கிடுவார் அப்பா
    வாழ்நாளில் தெய்வமாய் விளங்குகிறார் அப்பா

    நோய்நொடிகள் அணுகாமல் வைத்தியராய் இருப்பார்
    நோய்வந்தால் அதைத்தீர்க்கும் மருந்தாயும் இருப்பார்
    உண்ணுகின்ற அத்தனையும் ஒழுங்காக்கி நிற்பார்
    உடலுளத்தை மனமிருத்தி ஒழுங்கமைப்பார் அப்பா

    வரமாக வாய்த்திட்ட மகவென்று சொல்வார்
    வாழ்வினிலே பெற்றிட்ட செல்வமெனப் புகழ்வார்
    நிலமீது மலர்ந்திட்ட பெருவாழ்வே என்பார்
    நெஞ்சினிலே எனையிருத்திக் கொஞ்சிடுவார் அப்பா

    பட்டம் நான்பெற்றேன் பலபதவி வகித்தேன்
    பலபேரும் மதித்திடவே பாங்குடனே வாழுகிறேன்
    பக்குவமாய் என்னைப் பாதுகாத்தார் அப்பா
    பக்கத்தில் இல்லாமல் படமிருந்தே பார்க்கின்றார்

    அப்பாக்கள் அனைவருக்கும் அருமருந்து ஆவர்
    அவரிளமை அத்தனையும் அர்ப்பணித்தார் எமக்கு
    அப்பாக்கள் வாழ்வினிலே ஆண்டவனே ஆவார்
    அவரன்பை அவர்பணியை அகமிருத்தி வாழ்வோம்

    Share
  • சேக்கிழார் பெருமானின் சிந்தனைகள்!

    சேக்கிழார் பெருமானின் சிந்தனைகள்!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மெல்பேண், ஆஸ்திரேலியா 

    “இலக்கியம் என்றால் இலக்கை நோக்கி அழைத்துச் செல்லுவது” என்பதுதான் அதற்கான பொருத்தமான பொருளாகியிருக்கிறது. அந்த இலக்கு எது என்பதைத் தெரிந்து கொள்ளுதல்தான் மிகவும் முக்கிய நிலையாகும். கற்பவர்க்கு இன்பத்தைப் பயப்பதுடன் அவர்களின் வாழ்வைத் திருத்திச் செம்மை செய்வதாய் இருக்க வேண்டும் என்னும் ஒரு கருத்தும், படிக்கும் பொழுதே இன்பத்தைப் பயப்பதைத் தவிர வெறொன்றுமே இல்லை என்றும், வேறு பயனை விளைவிக்கவும் கூடாது என்னும் கருத்தும் இருப்பதைக் காணமுடிகிறது. இவ்வாறு காணப்படும் கருத்தில் – முதலாவது கருத்தினையே தமிழ் இலக்கியங்களும், அதனைப் படைத்த ஆளுமைகளும் அகமிருத்திக் கொண்டார்கள் என்பது மனங்கொள்ளத் தக்கதாகும். இந்த நோக்கினை நன்றாகவே தனது குறிக்கோளாக்கிக் கொண்டவர்தான் “சேக்கிழார்” அவர்கள். இவரை பல கோணங்களில் பார்ப்பதும் பொருத்தமாய் அமையுமென்று கருதுகிறேன். அந்த வகையில் இவரின் சிறப்புக்கான காரணந்தான் என்னவாக இருக்க முடியும்?

    “பக்திச் சுவை நனி சொட்ட சொட்ட” பாடியதால் சேக்கிழார் சிறப்புப் பெறுகிறாரா? புதிய உத்தியைக் கையாண்டதால் சேக்கிழார் உயர்ச்சி பெறுகின்றாரா? முதலமைச்சர் ஆகவிருந்தமையால் சிறப்புப் பெறுகின்றாரா? புரட்சிகரமான கருத்துக்களை முன்வைத்தமையால் சிறப்பும் உயர்வும் பெறுகின்றாரா? அல்லது பெரியபுராணத்தைத் தந்தமையால் சிறப்பும் உயர்வும் பெறுகின்றாரா? என்று நினைக்கத் தோன்றுகிறதல்லவா?

    சேக்கிழார் வாழ்ந்த காலம் சோழப்பெருமன்னர்களின் ஆட்சிக் காலமாகும். சோழர்கள் படைநடத்திப் பெரும் வெற்றிகளைக் குவித்தார்கள். நாடு செல்வத்தில் சிறப்புற்றது. அரசர்களின் புகழ் பாடுவதிலேயே அனைவரும் இருக்கும் நிலையும் காணப்பட்டது. அப்படியான வேளையில் சேக்கிழார் சோழ அரசபையில் பொறுப்புவாய்ந்த முதல் அமைச்சராய் அமர்ந்திருக்கின்றார். வெற்றிச் செருக்கென்பது வீழ்ச்சிக்கே இட்டுச் செல்ல வல்லது என்பதை, வெற்றிக் களிப்பில் இருக்கும் எவருமே உணர்ந்திட மாட்டார்கள். மனம்போன போக்கில் மன்னர்கள் போகத்துடிப்பார்கள். மனத்தின் வழியே போய்க்கொண்டிருந்தால் முடிவில் வெற்றி என்பது வீழ்ச்சிக்கே வழிகோலியே விடும். அதனால் மனத்தை நல்வழியில் செலுத்தினால் நாடும் சிறக்கும். நாட்டு மக்களும் சிறப்பர். மன்னனும் வாழ்த்தப்படுவான் என்பதை – அமைச்சராக இருந்த சேக்கிழார் எண்ணிப் பார்க்கிறார்.

    இந்த எண்ணத்தினால், பிற்காலச் சோழமன்னரது போக்கை சேக்கிழார் விரும்பவில்லை. அவர்களின் மனோபாபம் வேறுவிதமாகப் போவதை அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அவர்களுக்கு நல்ல வழியைக் காட்டினால்த்தான் மக்களும் நாடும் மீண்டும் பழைய நிலைய அடையமுடியும் என்று கருதினார். எனவே மன்னர் மனம் மாற, மக்கள் விழிப்புப்பெற, அவர்கையாண்ட வழிதான்— ஆண்டவன் அடியாரை அறிமுகப்படுத்தும் அதி உன்னத பணியாக அமைந்தது. அடியார்கள் ஆண்டவனைத் தவிர வேறெதையும் அகமிருத்தாதவர்கள். அவர்களின் குறிக்கோள் என்றுமே உயரிய அந்தப் பரம் பொருள் பற்றியதாகவே அமைந்திருந்தது. அங்கே சிற்றின்பத்துக்கு இடமே இல்லை. பேரின்பம் மட்டுமே பேசுபொருளாக இருந்தது எனலாம். வெற்றிக் களிப்பில் திளைத்த சோழ மன்னன் இவ்வுலக இன்பத்தை எடுத்து வழங்கி நின்ற சீவக சிந்தாமணியிலே மூழ்கிக்கிடந்தான். இந்த நிலை நீடித்தால் அது நல்விளைவினை நல்காது என்பதை முதல மைச்சராய் இருந்த சேக்கிழார் மனஞ் சொல்லியது. இதனால் மன்னனை மடை மாற்றம் செய்ய வேண்டியது மிகவும் அவசியம். அதுவே காலத்தின் கட்டாயம் என்றும் அவர் கருதினார். அந்தக் கருத்தின் பயனாக மலர் ந்துதான் பெரியபுராணம் என்னும் பக்திப் பொக்கிஷம் எனலாம்.

    எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த சுந்தரரின் திருத்தொண்டர் தொகை, பத்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த நம் பியாண்டார் நம்பியின் திருத்தொண்டர் திருவந்தாதி இரண்டுந்தான் சேக்கிழார் மனத்தில் அமர்ந்து கொண்ட மிகவும் சிறந்த கருக்கள் எனலாம். இந்தக்கருக்களை மையப்படுத்தி, அரசனும் உய்ய வேண்டும்,  மக்களும் உய்ய வேண்டும் என்னும் , வாழ்வியலும் உய்ய வேண்டும், என்னும் நோக்கில்தான் பெரியபுராணம் வந்து வாய்க்கிறது என்பதைக் கருத்திருத்த வேண்டும். அடியார்கள் பலரின் ஆன்மீகமும், அவர்களின் அகத்தின் பாங்கும் வெளிப்படும் வகையில் பெரிய புராணத்தை அமைத்திட அவர் கொண்ட முக்கிய நோக்கம் – உண்மையான இன்பம் என்றால் என்னவென்று அறியாமல் மனத்தை அலைக்கழித்து நிற்கும் சோழ மன்னன், உண்மையான இன்பத்தை, நிலையான இன்பத்தை அறிய வேண்டும், அதன் வழியில் அவன் பயணப்படல் வேண்டும் என்பதற்கேயாம்.  “குடிஉயரக் கோனுயர்வான் ” என்பதை நன்கு அறிந்தவராகச் சேக்கிழார் இருந்தபடியால் குடிகள் உயர்வுபெற வேண்டுமானால்; கோன் — அதாவது அரசர்களை உயிர் ப்பூண்டவேண்டும் என எண்ணினார். அதனால் மன்னர்மனத்தில் இறையுணர்வை ஊட்டுவதே மிகச்சிறந் தவழி என்று அதனை மையமாகக் கொண்டுதான் பக்திச்சுவை சொட்டச் சொட்ட பெரியபுராணத்தை ஒரு காவியமாக்கிட எண்ணினார். ஆண்டவனின் மேல் அளவிட முடியாத நம்பிக்கை கொண்டவர் சேக்கிழார் அவர்கள். அந்த ஆண்டவனையே மனமெண்ணி அரசனை அணுகினார். அரசனின் கையிலிருந்த சீவகசிந் தாமணி எந்தபயனுமே நல்காது, அதற்குப் பதிலாக இதனை நீங்கள் அறிந்தால் எல்லாமே வாய்க்கும் என்று நயமாக எடுத்துரைத்தார். ஆண்டவன் அனுக்கிரகிரகம் வாய்க்கப் பெற்ற சேக்கிழார் வார்த்தைகள் அரசன் செவிகளில் புகுந்து அவன் அகத்தினையும் தொட்டு நின்றது. ஆண்டவன் அடியார் பெருமைகளை அவனிடம் சொன்னார். அரசனும் மனநிலை தெளிந்தவனாய் “உங்களின் உள்ளத்தில் உதித்த கருக்களைப் பாடுக“ எனப்பணித்தான்.  “அரசே அதிகாரத்தில் அமர்ந்து கொண்டு என்னால் அடியார் வரலாற்றைப் பாட இயலாது. ஆகையால் ஆடம்பரமும் வேண்டாம்,. அரச போகமும் வேண்டாம், அமைச்சுப் பதவியையும் துறக்கிறேன்” என்று கூறி விட்டு  ஆண்டவன் சன்னிதானத்தை அடைந்து அங்குதான் தன்னுடை அரிய பணியை ஆரம்பிக்கின்றார். “உலகெலாம்” என்னும் அடியானது அசரீரியாய் அமைந்திட பக்திப்பனு வலாய் பெரியபுராணம் மாநிலம் செழிக்க, மன்னவன் பயனுற , மக்கள் உய்திபெற்றிட வந்தமைகிறது.                             

    அமைச்சராய் இருந்த  சேக்கிழாரின் புலமை சாதாரணமானதல்ல. கம்பரைப்போல கவிபாடும் ஆற்றல் அவரிடம் வாய்த்திருந்தது. அவரும் கம்பர் வழியில் காவியம் பாடியிருந்திருந்தால் சில வேளை கம்பரா மாயணத்தைக்கூட விஞ்சியியும் இருந்திருக்க வாய்ப்பு வாய்த்தாலும் வாய்த்திருக்கும் அல்லவா? ஆனால் சேக்கிழாரின் நோக்கம் அப்படியானதாக இருக்கவே இல்லை. அதனால்த்தான் அடியார்கள் வரலாற்றைத் தேடிப் பிடித்திருக்கிறார். தேடிப் பிடித்ததோடு அமையாமல்  அதனை எப்படிக் கொடுக்க வேண்டுமோ அப்படிக் கொடுத்தும் தன் குறிக்கோளில் வெற்றியும் பெற்றவராக ஆகியும் விடுகிறார்.     

    சேக்கிழார் காவியத்தின் பாடுபொருளே  வித்தியாசமானதாகும். இளங்கோ அடிகள் சிலம்பினைப் பாட விளைந்த வேளை  உயர்திணை அல்லா ஒன்றை பாடுபொருளாகக் கொண்டிருந்தார். அதனைத் தனது மனத்திற்கொண்ட காரணத்தால் சேக்கிழாரும் “தொண்டையே” கருப்பொருளாக்கி பெரியபுராணத்தை காவியமாகப் படைத்து விடுவதைக் காண்கின்றோம். அறுபத்து மூன்று அடியவர் கதைகளை வைத்துக் கொண்டு ஒருகாவியத்தைப் புனைவது என்பது இலகுவான காரியமல்ல. இதனை நன்கு மனத்திற் கொண்ட காரணத்தால் எப்படியும் இந்த அடியார்களை இணைப்பதற்கு ஒரு மார்க்கம் கிடைக்காதா என்று சிந்தித்த பொழுதுதான் – அடியார்கள் எவ்வாறு இருப்பினும் அவர்கள் யாவரிடமும் தொண்டு மனப்பாங்கு இருப்பதை அவரால் உணர்ந்து  கொள்ள முடிந்தது எனலாம்.எனவே இப்பொழுது அடியார்கள் தொகை அவருக்குப் பெரிதாகப்படவில்லை. அங்கே தொண்டுதான் தலைமை வகித்தது. எனவே தொண்டை மையமாக வைத்து தொண்டர் பெருமையை பறைசாற்றும் காவியத்தை எழிதாகப் புனைந்து எமக்காகவே வழங்கியிருக்கிறார். இது சேக்கிழாரின் பெருமை என்றுதானே சொல்ல வேண்டும்.

    சுந்தரமூர்த்தி சுவாமிகளும், நம்பியும், பெரியபுராணத்தை அமைத்திட  சேக்கிழாருக்கு பெரிதும் கைகொடுத்தார்கள் என்பது மறுப்பதற்கில்லை.  அவர்களின் பேருதவியைப் பெற்று நின்ற சேக்கிழார் அவற்றோடு மட்டும் நின்றுவிடவில்லை என்பதும் நோக்கத்தக்கது. அடியார்கள் பற்றிய விஷயங்களை யெல்லாம் ஆதாரத்துடன் எடுக்க வேண்டும் என்னும் எண்ணத்தால் ஊர்கள் தோறும் சென்று பல தகவல்களையும் எடுப்பதில் அயராது நிற்கிறார். அமைச்சராக இருந்த காரணத்தால் அவர் ஊர்கள் தோறும் சென்று பல வரலாற்றுத் தகவல்களையும் கல்வெட்டுப் போன்ற வற்றையும் ஆராயும் நுண்மாண் நுழைபுலத்தைத் தன்னகத்தே கொண்டவராக விளங்கினார் என்பதும் கவனத்துக் குரியதாகும். இதனால் அவரின் காவிய மான பெரியபுராணம் தலை நிமிர்ந்து நிற்கின்ற நிலைக்கு வந்தமைந்தது. இஃது  அவருக்கு உயர்வையும் சிறப்பையும் அளிக்கத்தானே செய்யும் !

    பக்தியை ஊட்டுவதற்குப் பாடப்பட்டதுதான் பெரியபுராணம். எனினும்  சேக்கிழார்  அதன் ஊடாக பல சமூக சீர்திருத்தங்களையும் துணிந்து செய்ய நினைக்கின்றார். இது அவரின் பெரும் சமூக அக்கறையினையே காட்டி நிற்கிறது எனலாம். பலவிஷயங்களையும் கற்றுத் தேர்ந்தவர் என்ற காரணத்தால்த்தான் சோழமன்னனே அவருக்கு முதல் அமைச்சர் பதவி வழங்கி பெருமைப்படுத்துகின்றான். ஆட்சியில் அதிகாரத்தில் இருந்து வேலை பார்த்தவருக்கு நாட்டின் நிலை அங்கு வாழும் மக்களின் நிலை பற்றி முழுமையாகத் தெரிந்து கொள்ள வாய்ப்பிருந்தது. தனக்குக் கிடைத்த அனுபவங்களின் வெளிப்பாடுகளை பெரிய புராணத்தில் கொண்டுவந்து நிறுத்துவதன் மூலம் அவர் தனது  சமூக அக்கறையினை சொல்லியும் நிற்கிறார் எனலாம்.

    பெரியபுராணத்தில் இடம்பெறுகின்ற அடியவர்களைப் பார்க்கின்ற பொழுது அவர்கள் யாவருமே வெவ் வேறு சமூக நிலையில் இருந்து வந்தவர்களாகவே காணப்படுகிறார்கள். அந்தணர் இருக்கிறார். அரசர், இருக்கிறார். புலையர், வேட்டுவர், மீன்பிடிகாரர், வண்ணார், குயவர், மரமேறுபவர்கள், செக்கார், ஆதிசைவர், வேளாளர், இப்படிப்பல சாதிப்பிரி வினரும் இருக்கிறார்கள். இப்படியானார்களையெல்லாம் தமது ஒப்பற்ற காவியமான பெரியபுராணத்தில் காட்டி அவர்ககளை வணங்கத்தக்க நிலைக்கு கொண்டு வந்தமை யினை என்ன வென்று நோக்குவது? இதனைச் சேக்கிழாரின் புரட்சி என்பதா அல்லது அவருக்கு வாய்த்திட்ட சமூக அக்கறை என்பதா அல்லது அளவுக்கு மிஞ்சிய தனித் துணிச்சல் என்பதா? ஆணென்றோ, பெண் ணென்றோ பார்க்கவில்லை. அவர்களின், பொருளாதார ஏற்றத்தாழ்வு, கல்வியறிவு, சாதி, எதையுமே அவர் கருத்தில் கொள்ளவும் இல்லை. இவர்கள் அனைவரையும்  சமயம் என்னும் வரம்புக்குள் நிறுத்தி – இவர்கள் அனைவரும் இறைவனுக்குத் தொண்டு செய்கின்ற நிலையில் போற்றப்பட வேண்டியவர்கள் என்று காட்டி இருக்கும் சேக்கிழாரின் துணிச்சலைக் கட்டாயம் வியந்து பார்க்கவே வேண்டியிருக்கிறது.

    சமூகத்தில் சாதிக்கட்டுப்பாடு என்பது மிகவும் இறுக்கமாக இருந்திருக்கிறது என்பதைப் பெரியபுராணத்தின் வாயிலாக வருகின்ற அடியார்களின் வரலாற்றைக் கொண்டு அறிந்திட முடிகிறது. அது மட்டுமல்ல சமூதாயக் கட்டுப்பாடுகள் இறுக்கமாய் இருந்தமையால் பலர் ஆலயங்களுக்குள் பிரவேசிப்பதும், வணங்குவதும் கூட இயலாத ஒரு நிலை காணப்பட்டதையும் அறிந்திடக் கூடியதாகவும் இருக்கிறது. இதனைச் சேக்கிழார் மனித தர்மம் அற்றது எனக்கருதியிருக்கிறார். இதனால் தமது காவியத்தில் இடம் பெறுகின்ற அறுபத்து மூவரையும் அடியார்களாக்கி விடுகின்றார். பெரியபுராணத்தில் வருகின்ற அடியார்கள் பல சாதிகளைச் சேர்ந்திருந்த போதிலும் யாவரும் சிவமயமாக நின்று தொண்டையே தம்மனத்தில் இருத்திய காரணத்தால் சாதி அடிபட்டுப் போவதையே நாம் இதன் மூலம் கண்டு கொள்ள முடிகிறது.  “ஆண்டவன் சன்னிதானத்தில் அனைவரும் சமம்” என்னும் அரிய கருத்தை அனைவரதும் அகத்தினிலும் அமர்த்திட வேண்டும் என்னும் உயரிய, புரட்சிகரமான, சிந்தனையால் சேக்கிழார் என்னும் தமிழ்ப் புலவர் சிறந் தோங்கப் பார்க்கப்டுகிறார் எனலாம்.  ஒதுக்கி வைக்கப்பட்டவர்களை இன்று கோவில்கள் தோறும் சிலை வடிவில் உள்ளே வைத்து பூசனைகள் செய்தும், பெருவிழாஎடுத்தும், குருபூசை என்று குறித்துக் கொண்டாடியும் வருகின்றோம் என்றால்-அந்தப்பெருமைக்கும் சிறப்புக்கும் சேக்கிழார்தான் காரணம் என்பதை எவருமே மறந்து விடமுடியாது.

    சரித்திரம் என்பது வேறு. சம்பவம் என்பது வேறு.சம்பவங்களைச் சரித்திரமாக்கிய நிலையினை பெரிய புராணம் வாயிலாக சேக்கிழார் செய்திருக்கிறார். சமயத் தொண்டர் பற்றிக் கூறவந்தாலும், ஆயிரம் ஆண்டுகால தமிழ்ச்சமூகத்தின் வரலாற்றினையும், மொழிபற்றிய நிலையும், சமயங்களின் நிலையையும் முதன் முதாலாகப் பதிவு செய்து வித்தியாசமான ஒரு பார்வையினை சேக்கிழார் காட்டியிருக்கிறார் என்பதை மறுத்துரைத்துவிடல் முடியாது.

    வீரம் என்றால் என்ன என்பதற்கு ஒரு புது விளக்கத்தைச் சேக்கிழார் காட்டுகிறார். வீரம் எனும் பொழுது – உடலில் மிக்க வலிமை கொண்டிருப்பதையும், போர்களங்கள் பலவற்றைக் கண்டு அங்கு பல வெற்றிகளைக் குவிப்பதையுமே சொல்லுவதுதான் வழக்கமாகிவிட்டது. ஆனால் சேக்கிழாரோ வீரத்துக்கும், வீரர்களுக்கும், வித்தியாசமான விளக்கத்தை அளித்து  வீரம் என்பதற்கே புதுமையான கருத்தினை வெளிப்படுத்தி யாவரையும் வியக்கவே வைக்கின்றார் முதலமைச்சராக பதவியிலிமர்ந்து பல போர்களைக் கண்டிருக்கும் அனுபவம் அவருக்கு வாய்த்திருக்கிறது. ஆனாலும் அவற்றில் ஈடுபட்டவர்களை வீரர் என்றோ அவர்கள் பெற்றவை எல்லாமே  வெற்றிதான்  என்றோ அவரகம் ஏற்கவில்லை. அதாவது புறத்தே நடக்கும் போரைவிட அகத்தே நடக்கும் போரும் அதனை வெற்றி கொள்ளுதலுமே வீரமும் வெற்றியும் என்று வித்தியாசமாய் அவர் உணர்ந்து கொண்டார்.

    இந்த வித்தியாசமான சிந்தினையினை வெளிப்படுத்திக் காட்டிட – தன்னுடைய காவியத்தில் ஒரு அடியாரைக் கொண்டுவந்து நிறுத்துகிறார். அவர்தான் திருநீலகண்ட நாயனார். திருநீலகண்டரின் வரலாற்றில் அவரிடம் காணப்படும் புலனடக்கத்தைக் காட்டி – அதற்கான ஒரு புது விளக்கத்தை வீரமாய் பார்க்கும் சேக்கிழார் பார்வை மிகவும் புதுமையான பார்வை என்றே எண்ணிட வைக்கிறது. இந்திரியங்களை வெல்லுவதுதான் உண்மையான வெற்றி. இந்திரியங்களை யாரொருவர் வெற்றி கொள்ளுகிறாரோ அவரே பகைகள் அற்றவராய் இருப்பார்கள் என்பதை உள்ளத்தில் இருத்திட சேக்கிழார் எண்ணிய பாங்கினை மெச்சாமல் இருந்திடவே இயலாதிருக்கிறது. தொண்டுள்ளம் வருவதற்கு இத்தகைய வெற்றி என்பதே இன்றியமையாததது என்பதுதான் சேக்கிழாரின் உறுதியான நிலையாகும். இதுவேதான் வீரம் என்றும் அதற்கான வெற்றி என்றும் ஒரு புதிய விளக்கத்தை சேக்கிழார் தருகின்ற நிலையில் அவர் புதுமையை,   புர ட்சியை, விதைப்பவராகவே வந்து நிற்கிறார். 

    “வீரம் என்னால் விளம்பும் தகையதோ“ என்னும் சேக்கிழார் வாக்கினை நோக்குதல் மிகவும் அவசிய மானது. பற்றை நீக்கி குறிக்கோளுடன் துறவு மனப்பான்மை கொண்டு வாழும் தொண்டர்களின் நிலை யினையே தன்னுடைய நோக்கினுக்கான விளக்கமாக்கி இருக்கிறார் என்பதுதான் மிகவும் முக்கியமாகும். அதேவேளை “ஈர அன் பினர் யாதுங் குறைவிலார் — வீரம் என்னால் விளம்பும் தகையதோ” என்று மொழிந்து அதற்கு உரிய சான்றாக சிறுத்தொண்டர், எறிபத்தர், வீரம்படைத் தவரானாலும் ஈரமும் கொண்டவர்கள் என்று தனது பார்வையின் விசாலத்தை பரவவிடுகிறார். நாவுக்கரசர் வீரத்தை,  குங்கி லியக்கலையர், கண்ணப்பர், வீரத்தையெல்லாம் எளிதில் சொல்லிவிடமுடியாது என்று சேக்கிழார் காட்டுவது சேக்கிழாரின் புதுச்சிந்தனையை வெளிப்படுத்துவதாக தெரிகிறது அல்லவா? வீரத்துக்கு இவ்வ ளவு விளக்கமா என எண்ணத்தோன்றுகிறதா?  வீரம் மிக்கவர்கள் ஆனாலும் ஈரமும் மிக்கவர் என்பது தான் இங்கு சொல்லப்படும் முக்கிய  சிந்தனை எனலாம். இதனை “ஈர அன்பினர் யாதும் குறையிலார்” என்று சேக்கிழார் காட்டுவதை மனமிருத்தல் வேண்டும்.

    பொதுவாக இலக்கியங்களில் பெண்களை அதாவது சமகால இலக்கியங்களில். அவள் வந்தாள் என்று விழிக்கப்பட்ட நிலையில் அதனைப் புறந்தள்ளி  பெண்களுக்கு மரியாதை கொடுத்து அவர்” என்றும் “வந்தார்” என்றும் விழிக்கும் வண்ணம் சேக்கிழார் பெரியபுராணத்தில் அமைத்திருக்கும் பாங்கும் அவரின் புதிய சிந்தனையினையே வெளிப்படுத்தி நிற்கிறது எனலாம்.

    இலக்கியத்தில் பல சுவைகள் பாடப்படுகின்றன. எட்டுச் சுவைகள் என்பதுதான் வழக்கமாய் இருக்கிறது. ஆனால் சேக்கிழாரே புதுமையாய் சிந்திந்து ஒரு சுவையினைத் தொட்டிருக்கிறார். அதுதான் “பக்திச் சுவை”. பக்திச்சுவையினைப் பக்குவமாய் கையாண்ட பெரும் தமிழ் புலவராய் சேக்கிழாரே விளங்குகிறார். அவருக்கு முன்னோ அல்லது பின்னோ யாருமே இல்லை என்னும் அளவுக்கு பக்திச்சுவையினைக் கையாண்டு காவியம் படைத்தவர் என்னும் புத்திலக்கியச் சிற்பியாகவும் சேக்கிழாரே விளங்குகிறார் எனபதும் கருத்திருத்த வேண்டியதேயாகும். பக்தியினைக் காட்டும் வகையிலும் அவரது அணுகுமுறை புதுமையாய் இருப்பதையும் பெரியபுராணத்தால் அறிந்திட முடிகிறது.இதனால்த்தான் “பக்திச்சுவை நனி சொட்ட சொட்டப் பாடிய கவி வலவ” என்று ஏற்றி போற்றும் நிலைக்கு ஆளாகியிருக்கிறார் என்பது மனங்கொள்ளத்தக்கதாகும்.

    அன்பினைக் காட்டும் விதம், அறத்தினைக் காட்டும் விதம், அடியாரைக் காட்டும் விதம்,  கற்பனையினைப் புகுத்தும் விதம், அனைத்திலும் புதுமையை, புரட்சியையே காட்ட விளைகிறார் சேக்கிழார் எனலாம். உவ மையிலாக் கலைஞானம் உணர் வரிய மெஞ்ஞானம் அத்தனையையும் காட்டுகிறார். அப்படிக் காட்டும் வேளை பழமைவாதியாக ஆகிவிடாமல் புதுமையினைப், புரட்சியினை வெளிக்காட்டும் புதுமைப் புலவனாக, தெய்வீகப் புலவனாகவே தலை நிமிர்ந்து நிற்கிறார் என்பதை மறுத்துரைத்துவிடல் இயலாது.

                  என்றும் இன்பம் பெருகும் இயல்பினால்
                  ஒன்றுகாதலித்து உள்ளமும் ஓங்கிட
                  மன்றுளார் அடியாரவர் வான்புகழ்
                  நின்றதெங்கும் நிலவி உலகெலாம்

    Share
  • புகைபிடித்தல் கேடு தரும்!

    புகைபிடித்தல் கேடு தரும்!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    பணப்பயிராய்ப் புகையிலையைப் பார்த்தார்கள் பலபேரும்
    இணக்கமுடன் பயிரிட்டு இன்புற்று மகிழ்வடைந்தார்
    தமக்குரிய வருவாயைத் தருகின்ற கொடையாக
    புகையிலையை மனமெண்ணி புத்துணர்ச்சி பெற்றார்கள்

    மேல்நாட்டார் கீழ்நாட்டார் விரும்பிவிட்டார் புகையிலையை
    புகையிலையைக் காசாக்கி பெருவணிகம் கண்டார்கள்
    விதம்விதமாய்ப் புகையிலையை விரும்பிநிற்கும் பாங்கினிலே
    விற்பனையில் தந்திரமாய் வெளிகொணர்ந்தார் வர்த்தகர்கள்

    அமெரிக்கா ஐரோப்பா அணைத்திட்டார் புகையிலையை
    அதன்வழியே இந்தியா பயணப்பட்டு நின்றது
    சீனாதான் முந்திவிடச் சிறகடித்துப் பறந்தது
    ஸ்ரீலங்கா புகையிலையை வரவேற்றும் நின்றது

    புகையிலையின் பரம்பலோ பெருவேகம் ஆகியது
    புகையிலையில் பலவடிவம் புறப்பட்டும் வந்தது
    போதைதரும் பொருளாகப் புகையிலையும் மாறியது
    காதலுடன் பலபேரும் கையெடுத்தார் புகையிலையை

    புகையிலையைப் பயன்படுத்திப் போதைதரும் பலபொருட்கள்
    நவநவமாய் வர்த்தகத்தில் நலங்கெடுக்க வந்தது
    வெள்ளை நிறச்சுருட்டாக கருமைநிறச் சுருட்டாக
    உள்ளங்கவர் உருவத்தில் உலகில் வலம்வந்தது

    மூக்குப் பொடியாகி முன்வந்து நின்றது
    பாக்குடன் சேர்ந்திருக்கப் பலவகையில் வந்தது
    பான்பராக் எனும் பெயரில் பக்கற்றிலும் இருந்தது
    பலவுருவம் பலவண்ணம் புகையிலையும் எடுத்தது

    புகைப்பதனால் வருகின்ற கேடுதனை நோக்கிடுவோம்
    புகைபிடித்தல் நிலைபற்றி அறிந்திடுதல் அவசியமே
    புகைபிடிக்கும் பலவிடங்கள் புகைவிடுவார் மனநிலைகள்
    அவையனைத்தும் பார்த்துவிடல் அவசியமாய் அமைகிறது

    வண்டி இழுப்பாரும் வயல்வேலை செய்வாரும்
    வாயிலே சுருட்டுவைத்து வகைவகையாய்ப் புகைவிடுவார்
    சண்டித்தனம் செய்வாரும் சமையல்வேலை செய்வாரும்
    சளைக்காமல் சுருட்டதனைத் தம்பாட்டில் சுவைத்துநிற்பர்

    வங்கிகளைப் பார்த்தாலும் வைத்தியரைப் பார்த்தாலும்
    அங்குமே சுருட்டுவகை அமோகமாய் இடம்பிடிக்கும்
    தங்கிநிற்போம் எனவெண்ணித் தனியாக மரமொதிங்கின்
    அங்கிருந்து பலபேரும் அமர்ந்திருந்து புகைத்துநிற்பர்

    பாக்கிலும் புகைத்துநிற்பர் பஸ்ராப்பிலும் புகைத்துநிற்பர்
    போக்குவரத்தில் எல்லாம் புகைவிட்டே கொன்றொழிப்பர்
    நீக்கமற புகைப்பதிலே நீள்சுகத்தைக் கண்டதனால்
    பார்க்குமிடம் எல்லாம் பயமின்றிப் புகைத்துநிற்பர்

    பேருந்தில் ஏறியதும் பெரும்சிரிப்பைத் தந்தபடி
    பெரியதொரு பைக்கற்றை பிரித்துமே எடுத்திடுவார்
    வெள்ளையாய்த் தலைநீட்டும் வெண்சுருட்டை அணைத்தெடுத்து
    விதம்விதமாய் வாயில்வைத்து விட்டிடுவார் புகையனைத்தும்

    ஊதிவிடும் புகையனைத்தும் உட்கார்ந்து இருப்போரின்
    மூக்காலே உட்புகுந்து மூச்சுக்குழல் வரைசெல்லும்
    உட்புகுந்த புகையாலே உபாதைகொண்டு நிற்போரை
    ஓரக்கண்ணால் பார்த்தபடி உறிஞ்சிநிற்பார் புகைவிட்டோர்

    பணிமனைக்குச் சென்றாலும் பலபேரும் புகைத்துநிற்பார்
    பணிபார்க்க வருவோர்கள் தலைசுற்றி அங்குநிற்பார்
    துணிவாக எடுத்துரைக்க யாருமே வரமாட்டார்
    துணிவாகப் புகைவிடுவோர் பணிமனையை நிரப்பிடுவார்

    புகைகக்கும் வண்டியிப்போது போயுமே நாளாச்சு
    புகைவிடுவோர் கூட்டத்தால் வண்டியிப்போ புகையாச்சு
    ஏறிவிடும் கூட்டமதை எவருமே பார்ப்பதில்லை
    தாறுமாறாய்ப் புகைவிட்டு தத்தளிக்கச் செய்துநிற்பார்

    படித்தவரின் கைகளிலும் பாமரரின் கைகளிலும்
    அடுக்கடுக்காய்ச் சுருட்டுவகை அமர்ந்துமே இருக்கிறது
    நடிக்கின்றார் கைகளிலும் படம்பிடிக்கின்றார் கைகளிலும்
    நாகரிகச் சுருட்டுவகை நளினமுடன் அமர்கிறது

    காலைமாலை பார்க்காமல் கணக்கின்றிப் புகைபிடிக்கும்
    காளையரின் மத்தியிலே கன்னியரும் சேர்ந்துகொண்டார்
    நாலுவேளை குடிப்பதற்குக் கஞ்சியின்றி இருப்பாரும்
    நரகமாம் சுருட்டதனை நாளுமே குடித்துநிற்பார்

    பாடசாலை செல்வோரும் படிப்பிக்கும் ஆசானும்
    பாங்காகச் சுருட்டையெலாம் பைகளிலே வைக்கின்றார்
    கிடைக்கின்ற நேரமெலாம் எடுத்ததனைக் கையில்வைத்து
    துடுக்கெனவே வாயில்வைத்துத் துள்ளுநடை போடுகிறார்

    மங்கலமாம் நிகழ்ச்சிகளில் வந்திருக்கும் பலபேர்கள்
    வாயிலே சுருட்டைவைத்து வட்டமாய்ப் புகைவிடுவார்
    அங்கிருக்கும் குழந்தைகளை அன்பான தாய்மாரை
    வந்திருக்கும் யாரையுமே மனத்திலவர் கொள்வதில்லை

    நோயிலே தாய்படுத்து நூறுமுறை இருமிநிற்பார்
    பாயிலே தாயோடு பால்குடித்து தூங்கும்பிள்ளை
    யாரையுமே பொருட்டெனவே தன்மனத்தில் நினையாது
    வாயிலே சுருட்டோடு வலம்வருவார் அவ்வீட்டார்

    இருமுகின்ற நோயாளி இருதயத்தைச் சோதிக்கும்
    எங்களது வைத்தியரும் இருமலுடன் சோதிப்பார்
    சோதித்த பின்னாலே துண்டெடுத்து மருந்தெழுதி
    சுவைத்திடுவார் சுருட்டதனை, சுருண்டுநிற்பான் நோயாளி

    நம்வாயில் சுருட்டிருப்பின் நாகரிகம் எனநினைப்பார்
    நலன்கெட்டுப் போகையிலே நாகரிகம் என்னசெய்யும்
    நலன்வருமே எனவெண்ணி நாம்செய்யும் வேலையெலாம்
    நாளடைவில் நம்சுகத்தை நசுக்கியே விட்டுவிடும்

    பலபோதைச் சரக்குகளைப் பதப்படுத்தி கலந்தெடுத்து
    பற்பல உத்திகொண்டு பாங்காக உட்செலுத்தி
    விதம்விதமாய்ச் சுருட்டையெல்லாம் விளம்பரத்தின் ஊடாக
    விற்கின்றார் சந்தைகளில் விறுவிறுப்பு வெளிப்படவே

    அதைவாங்கிக் குடிப்பவர்கள் அடிமை நிலைக்காளாகி
    வதைபட்டு வதைபட்டு வாழ்க்கையினை இழக்கின்றார்
    இதையாரும் உணராமல் இன்னுமே வாங்கிவாங்கி
    சிதையிலே போகும்படி சீரழந்தே நிற்கின்றார்

    காலையிலே சுருட்டடித்தால் களைப்பெல்லாம் நீங்குமென்றும்
    வேலையிலே புகைவிட்டால் விறுவிறுப்பாய் இருக்குமென்றும்
    நாளதுமே எண்ணியெண்ணி நன்றாகப் புகைத்துவிடின்
    நாளாக நாளாக நம்முடம்பு படுத்துவிடும்

    புகைபிடிக்கும் யாவருக்கும் பலநோய்கள் வருமென்று
    பொழுதெல்லாம் பிரசாரம் நடக்குதிப்போ நாடெல்லாம்
    புகைபிடித்தால் கேடென்னும் விளம்பரத்தை ஒட்டுபவர்
    புகைபிடித்தே ஒட்டுவதால் போதனையால் என்ன பலன்?

    நலன்கெடுக்கும் புகையிலையை நாடாது இருந்திடுவோம்
    நிலங்கெடுக்கும் புகையிலையை நெஞ்சைவிட்டே அகற்றிடுவோம்
    உளங்கெடுக்கும் உணர்வுகளை ஒழித்துவிட முனைந்திடுவோம்
    உயிர்போக்கும் போதைகளை உலகைவிட்டே ஓட்டிடுவோம்

    குடியோடு புகையும்சேர்ந்து குடிகளை அழிக்குதென்று
    குடிகளே உணரும்போதே குடியோடு புகையும்போகும்
    துணிவுடன் எழுந்துவாரீர் தூயதைச் சமைப்போம்நாங்கள்
    அணியென ஒன்றுசேர்ந்து அகற்றுவோம் புகைத்தல்தன்னை !

    குடியோடு புகைசேர்ந்து குடியனைத்தும் குலைக்கிறது
    அடியோடு அதையொழித்து ஆனந்தம் பெற்றுநிற்போம்
    படுகுழியில் வீழ்த்துகின்ற பாதைகளைக் களைந்தெறிந்தால்
    விடிவெள்ளி எம்வாழ்வில் விரைவெனவே தோன்றிவிடும் !

    Share
  • சிவநெறித் திருக்குறளான திருவருட் பயன்

    சிவநெறித் திருக்குறளான திருவருட் பயன்

    மகாதேவ ஐயர் ஜெயராமமசர்மா 
    மெல்பேண், ஆஸ்திரேலியா 

    சமயம் என்றால் என்ன? சமயம் என்றாலே கடவுள் நெறி பற்றிச் சொல்லுவதா? என்னும் ஐயம் எழுவது இயல்பானதுதான். இதனால் சமயம் என்றால்  என்ன வென்று ஒரு தெளிவு அவசியமாய் வேண்டப்படுகிறது அல்லவா! சமயம் என்றால் “மக்கள் ஆன்மலாபத்தை அடைதற்குரிய வழியைத் தெரிவிப்பதே” என்று சொல்லப்படுகிறது. கடவுள் நெறிபற்றிக் கண்டு கொள்ளாமலே சமயம் என்று சொல்லிக் கொள்ளும் நெறிகளும் காணப்படுகின்றன என்பதும் நோக்கத்தக்கது.

    சமயங்கள் யாவுமே கடவுள் கொள்கையினை ஏற்றுக் கொண்டுள்ளனவா என்பதிலும் தடுமாற்றம் காணப்படுகிறது. சமயங்கள் என்று பெயரளவில் இருந்தாலும் கடவுள் என்னும் சிந்தனையினைத் தொடாதன வாகவும் சமயங்கள் இருப்பதையும் காணமுடிகிறது. கடவுள் கொள்கையினுக்கு முதன்மை கொடுக்காமல் ஓரளவு நிலையில் ஒத்துக் கொள்ளும் சமய ங்களும் இருக்கின்றன. அதேவேளை சமயம்  என்னும் பெயரில் இந்தியாவில் தோற்றம் பெற்ற பெளத்தமோ, சமணமோ கடவுள் என்னும் கருத்தை ஏற்றிடாச் சமயங்களாகவே இருக்கின்றன. தர்க்கம் வேறு. தத்துவம் வேறு. தர்க்கிப்பது என்பதை மூலமாய்க் கொண்டனவே பெளத்தமும், சமணமும். தத்துவத்தை முதன்மைப் படுத்தும் சமயங்கள் நிலை  வேறாய் அமைகிறது. அந்த வகையில் சைவசமயமானது சைவசித்தாந்தம்  என்னும் தத்துவத்தை முழுமையாக்கி கடவுள் நெறியினை வலிமையாக்கி நிற்கிறது என்பதைக் கருத்திருத்தல் அவசியமாகும்.

    உலகில் பிறக்கின்ற உயிர்களின் நிலையினை மையபடுத்தி சமயங்களின் நிலையினை நோக்குதல் அவசியமாகிறது. எல்லாச் சமயங்களுமே உயிரின் இறுதி நிலை என்ன என்பது பற்றி எடுத்துக் கொள்ளுவதில் நாட்டம் உடையனவாக இருக்கின்றன என்பதும் கருத்திருத்த வேண்டியதே. இந்த நோக்கில் பார்க்கின்ற பொழுது; உயிரின் முடிந்த பயன் என்பது “முத்தி” அல்லது  “வீடுபேறு” என்னும் நிலைக்குள் வந்து விடுகின்றன. ஆனால் இதிலும் ஒருமித்த நிலை இல்லை என்றே ஆகிறது. அந்தந்த சமயத்தின் நிலைக்கு ஏற்பவே  இந்த “முத்தி” என்பதும் எடுக்கப்படுகிறது என்பதும் மனங்கொள்ளத்தக்கது.

    இந்த நிலையில் சைவமசமயத்தை உற்று நோக்கும்பொழுது – கடவுள் கொள்கையினை முற்றிலும் முதன்மையாகக் கொண்டே விளங்குகிறது என்பது நோக்கத்தக்கதாகும். எது நடப்பதானாலும், எது நடந் தாலும், எது நடப்பதாக இருந்தாலும் அத்தனைக்கும் கடவுளே காரணம் என்றும் அவனது திருவருளே பெருந்துணை என்றும் அசையாத நம்பிக்கையினைக் கொண்டிருக்கிறது. “முத்தி என்னும் பெரும் பயனானது உயிர் இறைவனது திருவருளை அடைவதுதான்” என்பது சைவத்தின் நிலையாகும். திருவருளினை மையப்படுத்தி சைவசமயம் இருக்கின்ற காரணத்தால் சைவசமயத்தை “திருவருள் நெறி” என்று பெயரிட்டு அழைப்பது மிகவும் பொருத்தமாய் இருக்கும் அல்லவா!

    அருளே உலகெலாம் ஆள்விப்பது ஈசன்
    அருளே பிறப்பறுப்ப தானால் – அருளாலே
    மெய்ப்பொருளை நோக்கும் விதியுடையேன் எஞ்ஞான்றும்
    எப்பொருளும் ஆவ தெனக்கு

    காரைக்கால் தந்த தமிழ்ச் செல்வியின் இப்பாடல் இறைவன் திருவருளினைக் காட்டுவதும் நோக்கத் தக்கது.

    திருவருளினைப்பற்றி சித்தாந்த சாத்திரங்கள் யாவுமே விளக்கி நிற்கின்றன. ஆனால் எந்தச் சித்தாந்த சாத்திரங்களும் திருவருள் என்பதைத் தலை ப்பாக்கி அந்தப் பெயரில் இருக்கின்றனவா என்றால் – அந்த நிலையில் ஒன்று மட்டும் தன்னை முன்னிலைப்படுத்தி நிற்பதைக் காணமுடிகிறது, அதுதான் உமாபதி சிவாச்சாரியார் என்னும் அனுபூதிமானால் அளிக்கப்பட்ட மிகவும் பெருமைமிக்க “திருவருட் பயன்” ஆகும். ஒன்றே முக்கால் அடியில் அமைந்த வள்ளுவப் பெருமானின் திருக்குறள் காலத்தால் முந்தியது. கருத்துக்களால் நிறைந்தது. திருக்குறள் அறநெறியினை அள்ளித்தரும் நூல். திருக்குறள் வழியில் பயணித்து அவரின் குறள் வடிவினையே கையாண்டு அருள்நெறியினை வழங்கிடும் வண்ணம் அமைந்ததுதான் திருவருட் பயன். உலகிலே இருக்கின்ற மக்கள் உணரவேண்டிய நெறிகள் இரண்டு. ஒன்று உலகியல் நெறி. மற்றயது மெய்நெறி. இதில் உலகியல் என் பதை பொது நெறி என்றுதான் எடுக்கலாம். ஆனால் மெய்நெறி என்பதைச் சிறப்பு நெறி என்றே எடுத்திடல் வேண்டும். பொது நெறிக்கு திருக்குறள் வாய்த்தது. சிறப்பு நெறிக்கு அதன் வழியில் பயணப்பட்ட திருவருட் பயன் வாய்திருக்கிறது. உமாபதி சிவாச்சாரியார் வள்ளுவருக்கு பிற்பட்ட காலத் தவராய் இருந்த பொழுதும், வள்ளுவரின் வழியில் பயணப்பட்டு சித்தாந்த தத்துவத்தை மிகவும் சிறப்பாக ஒன்றே முக்கால் அடியில் கொண்டுவந்து தந்திருக்கும் ஆற்றலுக்குக் காரணமே அவருக்குக் கிடைத்த ஆண்டவனின் திருவருள் என்றுதான் எண்ண வேண்டியிருக்கிறது. உமாபதி சிவாச்சாரியார் காலத்தில் குறள் வடிவில் இலக்கியம் என்பது காணப்படா நிலையில் திருவருட் பயன்  குறள் வடிவில் வாய்த்திருக்கிறது என்பதும் ஆண்டவனின் கருணையென்றே கருதிட வைக்கிறதல்லவா! திருவருட் பயன் நூலினை “மெய்ந்நெறித் திருக்குறள்” என்று அழைப்பதும் பொருத்தமாய் இருக்கும் அல்லவா!

    குறள் வெண்பாவில் நூலினை ஆக்கிடப் பலருமே முன்வருவதில்லை. அதற்குக் காரணம் நினைத்த கருத்தினையெல்லாம் அத்தனை எளிதாகக் குறள் வெண்பாவில் கொண்டுவந்து காட்டிவிடல் இயலாத தாகும். அப்படிச் சொல்ல முற்பட்டாலும் சொற்சுவையும், பொருட்சுவையும் பொலிந்திடக் குறள் வெண் பாவினைக் கையாண்டு வெற்றி பெற்றவர்கள் என்னும் பொழுது ஒரு சிலரே வருவார்கள். அப்படியான வர்களுள் திருவருட்பயனை அருளிய உமாபதி சிவாச்சாரியார் அமைகிறார் என்பதும் சிறப்பாய் இருக்கிற தல்லவா!

    சைவசிந்தாந்த நூல்களில் மெய்கண்ட தேவரின் சிவஞான போதம் முக்கியமானது. அதுபோல் சிவஞான சித்தியாரும் முக்கியமானது. சிவஞான போதத்தின் வழிநூலே சிவஞான சித்தியாராகும். அப்படி இவை இர ண்டும் இருக்க உமாபதி சிவாச்சாரியார் சிவப்பிரகாசம் என்னும் நூலினை ஏன் படைக்க வேண்டும். என்னும் சிந்தனை எழுகிறதல்லவா? சிவஞான போதத்தை, சிவாஞான சித்தியாரை படித்து அதன் நுட்பங்களை எழுதில் அறிந்து கொள்ளுவது எல்லோர்க்கும் இலகுவானதாக இருக்கவில்லை. இந்த நிலையிலேதான் யாவரும் அணுகும் வகையில் இலகுவாக்க சிவப் பிரகாசம் நூலினை  உமாபதி சிவாச்சாரியார் வழங்கும் நிலை ஏற்பட்டது. சிவப்பிரகாசத்துக்கு உதவியாகவே திருவருட் பயனை அரு ளினார் என்பதும் நோக்கத்தக்கதாகும், திருவருட் பயனினை முதலில் தெரிந்து கொண்ட பின்னர் அது காட்டுகின்ற வழியில் சிவப் பிரகாசத்தைப் பயின்றால் சித்தாந்தப் பொருளினை முட்டினின்றி நன்றாய் விளங்கிடக் கூடிய தாக இருக்கும் என்பது கருத்திருத்த வேண்டிய முக்கிய விடயமாகும். சிவாகமக் கடலைக் கடக்க உதவிடும் மரக்கலம் சிவப்பிரகாசம் என்றால் அந்த மரக்கலத்தை இயக்கிடும் மாலுமியாக அமையப் பெற் றிருப்பதுதான் “திருவருட் பயன்” எனலாம். வள்ளுவத்தை மனமிருத்தி அவர் வழியில் பயணித்து சைவசித்தாந்த கருத்துக்களை வழங்கிட ஆசைப்பட்டார் உமாபதி சிவாச்சாரியார். வள்ளுவர் அறம்.  பொருள், இன்பம் என்னும் அளவில் நின்றுவிட உமாபதி சிவாச்சாரியார் அதற்கு அப்பால் சிந்தித்து “வீடு” பற்றி சொல்லுவதையே குறிக்கோளாக்குகிறார்.

    அந்த நிலையில்தான் திருவருட் பயன் வந்து அமைகிறது எனலாம். வள்ளுவரைப் பின்பற்றி அதிகா ரங்கள் வைக்கிறார். அதிகாரங்க ளுக்குள் வள்ளுவர் பாதையில் பத்துக்குறள் என்பதையும் அமைக்கி ன்றார். ஆனால் அவர் அமைக்கும் குறள்களின் அடிநாதம் மட்டும் வீடு பேற்றினையும் , திருவருள் பற்றி யதுமாகவே அமைகிறது என் பதுதான் மிகவும் முக்கிய நிலையாகும்.வள்ளுவரை விட்டு விட திருவருட் பயன் ஆசிரியருக்கு மனமில்லை. அதனால் தொடக் கத்திலேயே வள்ளுவர் வழியில் தானும் பயணப்ப டுவதையே காணமுடிகிறது.

    அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
    பகவன் முதற்றே உலகு

    என்றுதான் வள்ளுவர் திருக்குறளை ஆரம்பிக்கின்றார். திருவருட் பயன் ஆசிரியரும் அதனைப் பின்பற்றியே

    அகர உயிர்போல் அறிவாகி யெங்கும்
    நிகரில்இறை நிற்கும் நிறைந்து

    என்றே ஆரம்பிக்கின்றார். வள்ளுவர் அகரத்துக்குக் காட்டும் விளக்கத்தில் இறைவன் என்பது சொல்லாமல் சொல்லப்படுகிறது. ஆனால் இறைவனையும் அவன் திருவருளினையும் மட்டுமே காட்டும் வண்ணமாய் வந்திருக்கும் திருவருட்பயனின் நிலையோ வேறாக நிற்கிறது. அகரத்தை அங்கிங்கு அலைய விடாமல் இறைவனுடன் இணைத்தே இருப்பதுதான் திருவருட்பயனின் தனித்துவம்! அதன் தத்துவம்  என்றும் கொள்ளலாம் அல்லவா!

    வள்ளுவர் உலகியலை உட்பொருளாக்கியபடியால்தான் கூறவந்த யாவற்றையும் பொதுமை நோக்கிலேதான் பார்க்கிறார். அதற்கான வழியிலேதான் அனைவரையும் அழைத்தும் செல்லுகிறார். ஆனால் திருவருட் பயன் ஆசிரியர் வள்ளுவர்வழியில் பயணப்படப் புறப்பட்டாலும் அவரின் உட்கிடை இறை பற்றியதும். இறையினது திருவருள் நிலை பற்றியதுமாகவேதான் நிறைந்திருக்கிறது. வள்ளுவர் எந்த வொரு நிலையிலும் கடவுளின் பெயரினைக் காட்டாமலே திருக் குறளினை அமைத்திருக்கிறார். ஆனால் வள்ளுவர் வழியில் பயணப்பட்ட உமாபதி சிவாச்சாரியாரோ திருவருட் பயனின் காப்புச் செய்யுளிலே ஆனைமுகக் கடவுளைக் கொண்டு வந்து நிறுத்தி விடுவதைக் காணுகிறோம்.

    நற்குஞ் சரக்கன்று நண்ணிற் கலைஞானம்
    கற்குஞ் சரக்கன்று காண்

    இதற்குக் காரணம் திருவருட் பயன் இறைவனின் திருவருளினை வெளிக்கொணரும் பாங்கில் பயணப்படு வதேயாகும். அந்த வகையிலேதான் திருவருட் பயனின் அதிகார வைப்பு முறைகளும் இருக்கின்றன என்பது மனங்கொள்ளத் தக்கதாகும். பதிமுது நிலை, உயிரவை நிலை, இருள்மல நிலை, அருளுறு நிலை, அறியு நிலை, உயிர் விளக்கம், இன்புறு நிலை, ஐந்தெழுத்தருள் நிலை, அணைந்தோர் தன்மை. என்னும் பாங்கில் அத்தனை அதிகாரங்களுமே திருவருளோடு இணைந்தாகவே வீடு பேற்றின் நுட்பத்தை உணர்த் துவதாகவே, தத்துவ தரிசனமாகவேதான் அமைக்கப்பட்டிருக்கிறது. இதனால் வள்ளுவத்தின் போக்கில் இருந்து தனித்துவமாய் திருவருட் பயனை உமாபதி சிவாச்சாரியார் வழங்கியிருக்கிறார் என்பதே உண்மையாகும்.

    சமயபாடத்தைக் கல்வியில் இணைத்து அதனைக் கட்டாய பாட மாக்கிய நாடென்னும் வகையில் இலங்கைத் திருநாட்டைத்தான் குறிப்பிட வேண்டும். அரசாங்கத்தால் சமயபாடம் கல்வி அமைப்பில் கட்டாயம் ஆக்கப்பட்டிருக்கிறது. அவரவர் விரும்பிய சமயபாடத்தைக் கட்டாயம் படித்தே ஆக வேண்டும். அந்த வகையில் இலங்கையில் இருக்கின்ற சைவத்தமிழ் பிள்ளைகள் சைவசமயத்தைக் கற்றிடும் நல்லதோர் வாய்ப்பு வாய்த்திருக்கிறது. அங்கு சமயபாட திட்டத்தில் தோத்திர நூல்களும், சாத்திர நூல்களும் சேர்க்கப்பட்டிருக்கிறது. சாத்திர நூல்கள் என்னும் நிலையில் “திருவருட் பயன்” சேர்க்கப் பட்டிருக்கிறது என்பதுதான் இங்கு மிகவும் முக்கியமான செய்தியாகும். இந்தியாவில் தமிழ்நாட்டில்தான் தோத்திர நூல்களும், சாத்திர நூல்களும் தோன்றின. அதனை ஆக்கிய மகான்களுமே தோன்றினார்கள். ஆனால் அங்கு சமயபாடம் பாடசாலைகளில் கற்பிக்கப்படுவதே இல்லை என்பது நோக்கத்தக்கது. இதனால் இந்தியத் தமிழ்ப்பிள்ளைகளுக்குக் கிடைக்காத பெருவாய்ப்பு இலங்கை சைவத் தமிழ் பிள்ளைகளுக்கு வாய்திருக்கிறது என்பது இறைவனின் திருவருள் என்றுதான் எண்ணிட வைக்கிறது.

    சைவசித்தாந்தக் கருத்துக்கள் என்றாலே பலரும் தூரவே ஓடி விடுவார்கள். அப்படி ஓடுபவர்களை யெல்லாம் ஓடவிடமால் அருகில் அன்புடன் அரவணைக்கும் பாங்கில் அமையப் பெற்ற சித்தாந்த நூலாக அமையப்பெற்றிருப்பதுதான் திருவருட் பயனின் சிறப்பு என்று சொல்லலாம். சித்தாந்தக் கருத்துக்களை விரித்து உரைக்காமல், சிக்கலாக்கி நிற்காமல், தட்டுமுட்டு இல்லாது இலகுவாய் மனதில் பதியும் வண்ணம், குறைந்த அடியில், நிறைந்த கருத்துக்களை தந்து நிற்பதாய் அமையப் பெற்றிருப்பதுதான் திருவருட் பயன் என்றால் அது மிகையாது.

    நூறு குறட்பாக்களில் சித்தாந்தக் கருத்துக்களைத் தந்து நிற்கும் வகையில் திருவருட் பயன் அமையப் பெற்றிருக்கிறது என்பதும் அதன் சிறப்பினைக் காட்டி நிற்கிறது எனலாம். குறட்பாக்களைக் கையாண்டு கருத்துக்களை வெளிப்படுத்துவதில் வள்ளுவப்பெருமான் வல்லவரே. ஆனால் சித்தாந்தக் கருத்துக்களை குறப்பாவினால் வெளிப்படுத்தும் துணிவு உமாபதி சிவாச்சாரியாருக்கே உரித்தாகியிருப்பதையே திருவருட் பயன் தெளிவுறுத்தி நிற்கிறது. சித்தாந்தக் கருத்துக்களை யாவரும் தெளிவாய் மனதில் இருத்திட வேண்டும் என்னும் நோக்குடன், உவமைகளைக் கையாண்டு, திருவருட் பயனைத் தந்த நிலையினை வியந்து தான் பார்க்க வேண்டி இருக்கிறது எனலாம். வள்ளுவர் பெருமான் எடுத்துக்கொண்ட பொருளுக்கு, அவரின் நோக்குக்கு – வள்ளுவத்தில் உவமைகளைக் கையாழுவது அவ்வளவு கடினமானது அல்ல. ஆனால் சித்தாந்தத்தை காட்டும் வகையில் எழுந்த திருவருட்பயனில் காட்டி அதனையும் அகத்தினுள் அமர்ந்திடச் செய்திட்ட பாங்கினைப் பாராட்டி வியந்திடவே வைத்திட வைக்கிறதல்லவா! உவமைகளைக் கையாண்டதோடு மட்டுமல்லாமல் புதுமைவகை விளக்கத்தினையும் கையாண்டமையும் வியந்து பார்த்திட வேண்டியே இருக்கிறது.

    ஏகன் அநேகன் இருள்கருமம் மாயை இரண்டு
    ஆகஇவை ஆறு ஆதியில்

    என்னும் திருவருட் பயன் குறளில் புதுமையினை உமாபதி சிவாச் சாரியார் புகுத்தியிருக்கிறார். சைவசித் தாந்தப்படி பதி, பசு, பாசம் என்னும் முப்பொருள்களே உள்ளன என்று கொள்ளுவதுதான் வழக்கம். ஆனால் இவரோ ஆறு என்று திருவருட் பயனில் காட்டுவது புதுமை யாக இருக்கிறதல்லவா? ஆறு என்று சொல்லிவிடாமல் அதற்கு விளக்கமும் அந்தக் குறளில் தருவதுதான் சிறப்பாகும். அதாவது; இறைவன், உயிர்கள், ஆணவம் , கன்மம், சுத்தமாயை அசுத்தமாயை, என்று ஆறு என்று காட்டி, இவை அனைத்துமே அனாதியாக உள்ளன என்று கூறி தன்னுடைய புதிய பார்வையினை வெளிப்ப டுத்துவதும் கருத்திருத்த வேண்டியதேயாகும்.

    ஊமன்கண் போல ஒளியும் மிக இருளே
    யாம் மன்கண் காணா தவை

    கூகை என்னும் பறவை இங்கே உவமையாகக் காட்டப்படுகிறது. ஆணவமாகிய இருளினை அனைவர் மனத்திலும்பதித்திடக்  கையாண்ட இந்த உவமை புதுமையாய் இருக்கிறதல்லவா? பொருள்களை ஞானக் கண்ணால் காண முடியாத உயிர்களுக்கு ஞான மெல்லாம் அஞ்ஞானம் போலவே தோற்றமளிக்கும். அது எப்படி என்பதை விளக்கிடவே இங்கே கூகை வருகிறது. கூகைக்கு பகலிலும் கண் தெரியாது. பகலில் சூரியனின் வெளிச்சத்தைக் கூட கூகை இருளாகவே பார்க்கும். உவமையின் சிறப்பு தெரிகிறதல்லவா!

    ஒருபொருளும் காட்டாது இருள், உருவம் காட்டும்
    இருபொருளும் காட்டாது இது

    பலரைப் புணர்ந்தும் இருபாவைக்கு உண்டு என்றும்
    கணவற்குத் தோன்றாத கற்பு

    பால்ஆழி மீன்ஆழும் பான்மைத்து அருள் உயிர்கள்
    மால்ஆழி ஆளும் மறித்து

    பரப்பமைந்து கேண்மின் இது பாற்கலன் மேற் பூசை
    கரப்பு அருந்த நாடும் கடன்

    விடம்நகுலம் மேவினும் மேய்ப்பாவகனில் மீளும்
    கடனில் இருள்போவது இவன்கண்

    எங்கும் எவையும் எரியுறுநீர் போல்ஏகன்
    தங்குமவன் தானே தனி

    ஞானம் இவன்ஒழிய நண்ணியிடும் நற்கல்அனல்
    பானு ஒழியப் படின்

    இங்கே காட்டப்பட்ட திருவருட் பயன் குறள்களை உற்று நோக்கும் பொழுது சிந்தாந்தக் கருத்துக்களை அதாவது சிக்கலான கருத்துக்களை, சிந்தனைகளை இலகுவாக்கிட எடுத்திட்ட புதுமையும், உவமைகளும் புலனாகி நிற்கிறது அல்லவா!

    சித்தாந்த சாத்திரங்களைப் படித்திட நினைப்பார்கள் மிகவும் குறைவு. அதற்குக் காரணம் அவை அமைந்திருக்கும் பாங்கு என்று கூடச் சொல்லலாம். துணையில்லாமல் அவற்றைப் படித்து விளங்குவது என்பது சற்று கடினமாகவே காணப்படுகிறது என்பதையும் ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும். இவற்றை எல்லாம் மனதில் இருத்தியே யாவரும் எழுதில் சித்தாந்தத்தை நாடவேண்டும். அதனுள் மூழ்கிட வேண்டும் என்னும் நோக்கில் அமையப்பெற்றிருப்பதுதான் உமாபதி சிவாச்சாரிரியார் என்னும் அனுபூதிமானால் அருளிச் செய்யப்பட்ட “திருவருட் பயன்” என்னும் நூலாகும். படிப்போம்! பயன் பெறுவோம்! பரமனின் அருளினை  உணர்ந்திடுவோம்! பரி பக்குவமும் வந்து வாய்க்கும்!

    Share
  • ஆத்திகரும் நாத்திகரும் நேசித்த குமரகுருபரர்!

    ஆத்திகரும் நாத்திகரும் நேசித்த குமரகுருபரர்!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண் … ஆஸ்திரேலியா 

    ஞானிகளின் வரலாறு நமக்கென்றும் பெருவியப்பே.பிறப்பும் வியப்புத்தான். அவர்கள் வாழ்வும் வியப் புத்தான். அவர்களின் செயல்களும் வியப்புத்தான். அவர்களின் ஆற்றலும் வியப்புத்தான். வியப்பினை வரமாக்கி மாநிலத்தில் வந்து சேர்ந்தவர்களாகவே ஞானிகள் விளங்குகிறார்கள். நடந்திருக்குமா என்று ஐயங்கள் எழுந்திடும் வகையில் அவர்களின் வாழ்வையே நாம் உற்று நோக்க வேண்டியவர்களாக இருக்கிறோம்.அப்படி வியப்புடன் நோக்கும் வண்ணம் ஒருவர் மாநிலத்தில் பிறக்கிறார்.

    அல்லும் பகலும் அனைவரதமும் ஆண்டவனையே அகமிருத்தி வாழ்ந்து வந்தவர்களுக்கு ஆண் குழந்தை பிறக்கிறது. அளவிலா ஆனந்தம் அடைகிறார்கள் பெற்றவர்கள். ஆனால் அவர்களின் அளவிலா ஆனந்தமோ ஒரு மட்டோடு நின்று விடுகிறது. அழகான ஆண்பிள்ளை அம்மா, அப்பா என்று மழலை மொழியால் அழைப்பான் என்று ஆவலுடன் பார்த்திருந்த பெற் றாருக்கு பெருத்த ஏமாற்றமே கிடைத்தது. ஆசையுடன் பிறந்த ஆண்பிள்ளை பேசமுடியாத பிள்ளையாக இருப்பதைக் கண்டதும் பெற்றவர்கள் பேதலித்தே நின்றார்கள். எந்தக் கடவுளுக்கு விரதம் இருந்து இந்தக் குழந்தையைப் பெற்றார்களோ அந்தக் கடவுளின் சன்னதிக்கே பிள்ளையையும் கொண்டு அழுதபடி ஓடினார்கள். ஆண்டவன் சன்னதியில் குழந்தையைக் கிடத்தி “நீ தந்த குழந்தை பேசாதிருக்கின்றான். அவனைப் பேச வைத்திடு. இல்லாவிடின் நாங்கள் மடிந்து விடுவோம்” என்று பெரும் வேண்டுதலை விடுத்து பக்கமிருந்த கடலை நோக்கி ஓடினார்கள்.

    வைதாரையும் வாழவைப்பவன் முருகன் அல்லவா! அந்த முருகன் சன்னதியில் மனமுருகிடும் அடியாரின் வேண்டுதல் வீணாகிவிடுமா? குரல் கேட்டதும் குமரன் அருள் சுரந்தான். பேசாமல் இருந்த பிள்ளை பேசியது. பேசியதே அந்தப் பரம்பொருளான முருகனைப் பற்றியே ஆகும். ஐந்து வயதுவரை பேசாதிருந்த அந்தப்பிள்ளை அரன் மைந்தனை அகமிருத்தி “திருச்செந்தூர் கந்தர் கலிவெண்பா” என்னும் அற்புதமான பொக்கிஷத்தை திருவாய் மலர்ந்தருளுகிறது. பிள்ளையின் குரல் காதில் கேட்டதும் அளவிட முடியா ஆனந்தத்தத்துக்கும், ஆச்சரியத்துக்கும் ஆட்பட்ட பெற்ற வர்கள் தங்கருத்தை மாற்றி சன்னிதானதுக்கு ஓடோடோடி வந்தார்கள். கந்தப் பெருமான் “குருபரா” என வழைத்தார் என்பதைக் கேள்வியுற்ற பெற்றவர்கள் அந்தக் குருபரனோடு சேர்த்து , குமரனருளால் பேசுந்திறன் வாய்த் தமையால் “குமரகுருபரன்” என்றே தமது பிள்ளைக்கும் பெயரினைச் சூட்டி பேரானந்தம் அடைந்தார்கள் என்று அறிந்திட முடிகிறது. திருச் செந்தூர் பதியில்த்தான் இந்த அற்புதம் நிகழ்ந்ததாய் குமரகுருபரர் வரலாற்றால் பார்க்க க்கூடியதாக இருக்கிறது. ஐந்து வயதுவரை ஒரு வார்த்தை கூடப் பேசாதிருந்த பிள்ளை கந்தர் கலி வெண்பா என்னும் தத்துவ நூலினை எப்படித் தந்திருக்க முடியும் என்று ஒரு ஐயம் எல்லோரிடமும் எழத்தான் செய்யும் அல்லவா?

    இங்குதான் ஒரு கருத்தை மனமிருத்துதல் யாவருக்கும் அவசியமாகிறது. மூன்று வயதில் ஒரு குழந்தை அந்த முதல்வனையே காணுகிறது. காணுவதுடன் நின்றுவிடாமல் தமிழ் மழையாகவும் பொழிந்து நிற்கிறது. அதுவும் சாதாரண தமிழ் மழை அல்ல! இனிமைத் தமிழ் மழை! இங்கிதத் தமிழ் மழை! செறிவான தமிழ் மழை! சிந்தனைகள் நிறைந்த தமிழ் மழை! அநதச் சின்னவயதில் எப்படி அந்தக் குழந்தை அப்படிப் பாடியது என்பதையும் இங்கு மனமிருத்திப் பார்ப்பது உகந்ததாய் இருக்கும் அல்லவா? அதைத்தான் முன்னைத்தவம், முன் ஞானம் என்கிறோம். இங்கே ஐந்து வருடங்கள் பேசாதிருந்த பிள்ளை பேசப் புறப்பட்டதும் அதன் வாயிலிருந்து வெளிவந்ததும் தமிழால் ஆகிய தத்துவமே மூன்று வயதில் ஞானம் அன்று ஞானசம்பந்தக் குழந்தைக்கு வாய்த்தது. பேசாதிருந்த பிள்ளைக்கு ஐந்துவயதில் ஞானம் வாய்த்திருக்கிறது.

    ஞானம் என்பது எப்பொழுது யாருக்குக் கிடைக்க வேண்டுமோ அப்பொழுதுதான் அது கிடைக்கும் வெளியில் வரும் என்பதுதான் உண்மை நிலையாகும். அப்படித்தான் குமரகுருபரரை நாம் பார்த்திடல் பொருத்தமாய் அமையும். ஐந்து  வயதுவரை மோனத்தில் இருந்திருக்கலாம். மெளனம் என்பதுதான் மிகவும் உயர் நிலையாகும். அந்த மெளனத்தில் அந்தப் பரம் பொருளினையே அகமெண்ணியபடி வாய் பேசாதும் இருந்திருக்கலாம். என்று ஒரு சிந்தனையையும் ஆன்மீகத்தில் திளைத்தவர்கள் தெரிவிப்பதும் நோக்கத்தக்கது. அவ்வாறு அவர்கள் தெரிவிப்பதற்குக் காரணம் குமரகுருபரர் வழங்கிய படைப்புக்கள் எனலாம். இலக்கணம், இலக்கியம், தத்தவம், அறியாதவர், அவற்றைத் தேடி முறைப்படி கற்காதவர் எப்படி – இத்தனை அரியவற்றை ஆக்கினார் எனும் நிலையில் ஆன்மீகத் தலைவர்கள் தெரிவிக்கும் கருத்துக்கு உடன்பாடு சொல்லாமல் இருந்திட முடியாமலே இருக் கிறோம் அல்லவா! இங்குதான் கருவிலே திரு நிறைந்தவராக குமரகுரு பரர் இருந்திருக்கிறார் என்பது புலனாகி நிற்கிறதல்லவா! இப்படியாய் அமைந்தவர்களைத்தான் ஞாவான்கள் என்று அழைக்கின்றோம்.

    வாய்ந்திறந்ததும் வெளிவந்த “திருச்செந்தூர் கந்தர் கலிவெண்பா” சாதாரணமானது அல்ல. அதனுடைய உட்பொருளினை உற்று நோக்கும் ஆன் மீக ஆளுமைகள் அதனை “குட்டிக் கந்தபுராணம்” என்று உச்சிமேல் வைத்துப் போற்றியே நிற்கிறார்கள் என்பது மனங்கொள்ளத்தக்கதாகும். கந்தபுராணத்தை எங்களின் சொந்த புராணம் என்று கொள்ளும் ஒரு வழக்கம் எங்களிடம் நிறைந்தே காணப்படுகிறது. அந்தப் புராணத்துடன் இந்த குட்டிக் கந்தபுராணத்தையும் கருத்திருத்துவதும் சிறப்பாய் இருக்கும் என்று எண்ணுகின்றேன். கந்தர் கலிவெண்பாவில் – திருமுருகாற்றுப்படையினையும் காணலாம். அருணகிரியாரின் திருப்புகழையும் காணலாம் என்று அறிஞர்கள் சொல்லுவார்கள். அத்தனை சிறப்புக்களையும் கொண்டு விளங்குவதால் குமரகுருபரரின் முதல் வெளிச்சமாய் கந்தர் கலிவெண்பா பிரகாசித்துப் பக்தியுலகில் நிற்கிறது என்பதை மனமிருத்தல் வேண்டும். பக்திச்சு வையினையும், தத்துவ செறி வினையும், சொற் சுவையினையும், பொருட் சுவையினையும் தன்னகத்தே கொண்டு விளங்குகிறது என்பதும் நோக்க த்தக்கது. இதனைப் பாராயணம் செய்தால் வந்தவினையும், வருகின்ற வினைகளும் காணாமலே ஓடி விடும் என்பதையும் கருத்திருத்தல் வேண்டும். 

    குமரகுருபரர் ஆன்மீக வாதியாய் இருந்தார். அறநெறி காட்டுபவராய் இருந்தார். சமுதாய சிந்தனை மிக்கவராகவும் இருந்தார். தமிழ் இலக்கியப் பரப்பில் முத்திரை பதித்தவராகவும் இருந்தார். அது மட்டுமன்றி தவநெறியில் உயர்ந்தும் தனி ஒழுக்கத்தில் தலை சிறந்தும் அவர் இருந்திருக்கிறார். அவரின் அளவிட முடியாத ஆற்றல்களை யாவரும் அறியும் வண்ணம் அவரின் ஆக்கங்கள் அனைத்துமே அடையாளமாக இருக்கின்றன. பதினேழாம் நூற்றாண்டில் வாழ்ந்தவரான குமரகுருபரர் – தனது குருவைத் தேடியதும், குருவின் ஆணை யின்படி சைவத்தைப் பரப்பிடப் பயணப்பட்டதும் அதற்காக அவர் பட்ட சோதனைகளும், வேதனைகளும் அவரை உயர் ஞானியாகவே பார்க்கும் வண்ணம் ஆக்கி யேயிருக்கிறது.

    மாசிலா மணியான ஒருவர் இவரின் குருவாய் வாய்த்ததே ஒரு சோதனைதான். “உன்னால் பதில் சொல்ல முடியா நிலையில் உன் னை யார் கேள்வி கேட்கிறாரோ, நீ அவ்வேளை சொல்வதறியாது நிற்கிறாயோ அங்குதான் உன் குருவைக் காண்பாய்” என்று அசரீரி அவருக்கு குறிகாட்டி நின்றது. “ஐந்து பேரறிவும் கண்களே கொள்ள” என்னும் பெரிய புராணப்பாடலின் அனுபவத்தைச் சொல்லு என்று கேட்க அதற்கு உரிய பதிலினைக் கூறவியலாது மெளனித்து நிற்கிறார் குமரகுருபரர். அப்பொழுது அவர் மனத்தில் “கண்டேன் குருவை” என்னும் உணர்வு எழுகிறது. அவரின் அடி பணிகிறார். தொடர்கிறார் அவரிட்ட பணியியை. அந்தக் குருதான் தருமபுர ஆதீனத்தின் தலைமைப் பதவியிலிருந்த மாசிலாமணித் தேசிகராவார்.

    தமிழகத்திலிருந்து வடநாட்டுக்குச் சென்று சைவத்தை நிலை நிறுத்தி, அங்கு சைவத்துக்கென ஒரு மடத்தினை நிறுவியர் என் னும் பெருமையினைப் பெற்றவராக குமரகுருபரர் மட்டுமே விளங்குகிறார், அதுவும் தமிழராக இருந்திருக்கிறார் என்பதை மனமிருத்துவதே  முக்கியமாகும். குமரகுருபரர்  வடநாடு சென்று மடம் அமைத்திட உத்தரவு பெறுவதற்கு அக்காலத்தில் இருந்த இந்துஸ்தானி பேசுகின்ற முகம திய மன்னனனையே நாடும் தேவை இருந்தது. இவருக்கோ இந்துஸ்தானி தெரியாது. அவனுக்கோ தமிழ் தெரியாது. ஆனால் அவனுடைய தாய் மொழியில் சரளமாய் பேசினார் குமரகுருபரர். எப்படி இது நடந்தது. அதனை விளக்கவே “சகல கலா வல்லி மாலை” சான்றாக வந்து நிற்கிறது. சகலகலாவல்லி மாலையினைப் பாடியதும் இந்துஸ்தானி அவர் நாவில் அமர்ந்து விடுகிறது. சகலகலைகளுக்கும் அதிபதியான கலைமகள் கருணையினைப் பெற்று விடுகிறார் குமரகுருபரர். சைவத் தமிழர்களுக்குக் கிடைத்த பெரும் வரப்பிரசாதமாகவே சகலகலா வல்லிமாலையினைப் பார்க்கவேண்டும். ஒவ்வொரு சொல்லும், ஒவ்வொரு பொருளும், உள்ளத்தில் பக்தியின் உணர்வினை, தமிழின் உணர்வினை, இறையின் உணர்வினை, நிச்சயமாகவே எழச் செய்துவிடும் என்பதில் எள்ளளவும் ஐயம் இல்லை எனலாம். நவராத்திரி என்றதும் முன்னுக்கு வந்து நிற்கும் பக்திப் பாமாலை சகலவல்லிமாலைதான். அதனை மனமுருகிப் பாடுவதனைச் சகல சைவத்தமிழ் மக்களும் பெருவிருப்பமாக்கியே இருக்கிறார்கள் என்பது கருத்திருத்த வேண்டியதாகும்.

    திருவைகுண்டத்தில் பிறந்த குமரகுருபரரை சிற்றிலக்கிய வேந்தர் என்று பாராட்டுவது உகந்ததாகவே இருக்கும். அந்தளவுக்கு சிற்றிலக்கியத்தில் அவர் முத்திரை பதித்தவராகிறார் என்பதுதான் உண்மை எனலாம். அவரின் படைப்பாக; கந்தர் கலிவெண்பா, மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ், மதுரைக் கலம்பகம், நீதிநெறி விளக்கம், திருவாரூர் நான்மணிமாலை, முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ், சிதம்பர மும்மணிக்கோவை, பாண்டார மும்மணிக்கோவை, காசிக் கலம்பகம், சகலகலாவல்லி மாலை, மதுரை மீனாட்சியம்மன் குறம், தில்லைச் சிவகாமி அம்மை இரட்டைமணி மாலை, கயிலைக் கலம்பகம், காசித்துண்டி விநாயகர் பதிகம். சிற்றிலக்கியத்துக்கு எத்தனை கொடைகளை வழங்கியிருக்கிறார் என்பதை அவரின் படைப்புகளில் இருந்து பார்த்துவிடக் கூடியதாக இருக்கிறதல்லவா!

    மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் பாடப்பட்ட நிலையில் மீனாட்சி அம்மனே குழந்தையாய் வந்து அமர்ந்திருந்து கேட்டதாகவும், குமரகுருபரரின் தமிழ்ச் சுவையினைக் கண்டு முத்துமாலையினைக் கழுத்தில் அணிவித்து அருள் பாலித்ததாகவும் ஒரு வரலாறு சொல்லப்படுகிறது. நாத்திகர்கள் இதனை நம்புகிறார்களோ தெரியாது – ஆனால், இறைவனது ஆசியினைப் பெற்ற தமிழ்ப் புலவராக வெளிச்ச மிட்டுக் காட்டப்படுகிறார் என்பதுதான் இங்கு மனத்திருத்த வேண்டிய கருத்தெனலாம். இதனால் இவரை வரகவி என்றும் பார்க்கலாம் அல்லவா! மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழினைப் போற்றாத தமிழ் அறிஞர்கள் இல்லை என்றே சொல்லலாம். அந்தளவுக்கு சொற்சுவையும், பொருட்சுவையும் , அருட்சுவையும் இருங்கே அமைந்த பொக்கிஷம் என்றே எண்ண முடிகிறது.

    ” தொடுக்கும் கடவுள் பழம் பாடல் தொடையின் பயனே நறை பழுத்த
    துறைதீந் தமிழின் நறுஞ் சுவையே அகந்தைக் கிழங்கை அகழ்ந்து
    எடுக்கும் தொழும்பர் உளக் கோயிற்கு ஏற்றும் விளக்கே “
    ……… வஞ்சிக் கொடியே வருகவே !
    மலையத்துசன் பெற்ற பெரு வாழ்வே வருக … வருககவே!

    என்னும் பக்தியினைத் தொடும் இப்பாடல் வரிகளை மறக்கத்தான் முடியுமா? இதனைக் கேட்டதுமே உலகாளும் மீனாட்சியே குழந்தையாக சபைக்கு வந்தாளாம்!

    திருக்குறள் பருவத்தே பெற்ற பிள்ளை என்று யாவராலும் ஏற்றிப் போற்றிக் கொண்டாடப்படும் வகையில் குமமரகுருபரர் அகத்தினின்று வெளிவந்த ஆக்கந்தான் “நீதிநெறி விளக்கம்” நூலாகும். குமரகுரு பரரின் சிந்தனை ஓட்டம் எப்படியெல்லாம் பயணப்பட் டிருக்கிறது என்பதற்கு இந்த நூலே பெருஞ்சான் றாகி வந்தமைகிறது.

    நீரில் குமிழி இளமை நிறை செல்வம்
    நீரில் சுருட்டும் நெடுந்திரைகள் – நீரில்
    எழுத்து ஆகும் யாக்கை நமரங்காள் என்னே
    வழுத்தாது எம்பிரான் மன்று.

    இந்த ஒரு பாட்டே  நீதிநெறி விளக்கம் எப்படி இருக்கும் என்பதைக் காட்டி விடுகிறது அல்லவா!

    குமரகுருபரரின் அறச்சிந்தனைகள் மட்டுமல்லாது அவரின் கல்விச் சிந்தனைகளும் கருத்திருத்த வேண்டியனவேயாகும் என்பதில் எந்தவித ஐயமுமில்லை என்றே சொல்லலாம். சைவத்தின் காவலனாய் விளங்கினார். தமிழ் இலக்கியத்தில் தனியான இடத்தினைப் பெற்ற வராகவும் விளங்கினார். சமயத்தின் சாறாக இருந்து சரித்திரமாய் ஆகியவராய் இருந்தாலும், சமுதாயச் சிந்தனை மிக்கவராகவும் விளங்கி இருக்கிறார் என்பதும் நோக்கத்தக்கதாகும். சமயத்தில் நிற்பவர்கள் தத்துவங்களைச் சொல்லிவிட்டு நிற்பவர்களாய் இருப்பதைப் பெரும்பாலும் காணுகிறோம். ஆனால் பேசாதிருந்து பின் பேசப் புறப்பட்ட குமரகுருபரரோ தாய்மொழியான தமிழை நேசிக்கிக்கிறார். குருவை நேசிக்கிறார். தமிழ் இலக்கியத்தை நேசிக்கிறார். சமூகத்தை நேசிக்கிறார். நாத்திகர் போற்றும் வகையில் அவர்களின் அகத்தினாலும் நேசிக்கப்படுகிறார். ஆத்திகரும், நாத்திகரும், நேசிக்கும் ஒரு வராக குமரகுருபரர் விளங்கி இருக்கிறார் என்பதுதான் அவரை இன்றுவரை நாங்கள் அனைவருமே போற்றிப் பூசித்து அவருக் கென்று குருபூசை நன்னாளைக் கொண்டாட வைத்திருக்கிறது என்பதுதான் உண்மையாகும்..

    நாடும் பொருட்சுவை சொற்சுவை தோய்தர நாற்கவியும்
    பாடும் பணியிற் பணித்தருள் வாய்பங்க யாசனத்திற்
    கூடும் பசும்பொற் கொடியே கனதனக் குன்றுமைம்பாற்
    காடுஞ் சுமக்குங் கரும்பே சகல கலாவல்லியே.

    தூக்கும் பனுவற் துறைதோய்ந்த கல்வியுஞ் சொற்சுவைதோய்
    வாக்கும் பெருகப் பணித்தருள் வாய்வட நூற்கடலும்
    தேக்குஞ் செழுந்தமிழ்ச் செல்வமுந் தொண்டர்செந் நாவினின்று
    காக்குங் கருணைக் கடலே சகல கலாவல்லியே. 

    சொல்விற் பனமு மவதான முங்கவி சொல்லவல்ல
    நல்வித்தை யுந்தந் தடிமைகொள் வாய்நளி னாசனஞ்சேர்
    செல்விக் கரிதென் றொருகால முஞ்சிதை யாமைநல்கும்
    கல்விப் பெருஞ்செல்வப் பேறே சகல கலாவல்லியே. 

    மண்கண்ட வெண்குடைக் கீழாக மேற்பட்ட மன்னருமென்
    பண்கண் டளவிற் பணியச்செய் வாய்படைப் போன்முதலாம்
    விண்கண்ட தெய்வம்பல் கோடியுண்டேனும் விளம்பிலுன்போற்
    கண்கண்ட தெய்வ முளதோ சகல கலாவல்லியே

    Share