புகைபிடித்தல் கேடு தரும்!

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மெல்பேண், ஆஸ்திரேலியா

பணப்பயிராய்ப் புகையிலையைப் பார்த்தார்கள் பலபேரும்
இணக்கமுடன் பயிரிட்டு இன்புற்று மகிழ்வடைந்தார்
தமக்குரிய வருவாயைத் தருகின்ற கொடையாக
புகையிலையை மனமெண்ணி புத்துணர்ச்சி பெற்றார்கள்

மேல்நாட்டார் கீழ்நாட்டார் விரும்பிவிட்டார் புகையிலையை
புகையிலையைக் காசாக்கி பெருவணிகம் கண்டார்கள்
விதம்விதமாய்ப் புகையிலையை விரும்பிநிற்கும் பாங்கினிலே
விற்பனையில் தந்திரமாய் வெளிகொணர்ந்தார் வர்த்தகர்கள்

அமெரிக்கா ஐரோப்பா அணைத்திட்டார் புகையிலையை
அதன்வழியே இந்தியா பயணப்பட்டு நின்றது
சீனாதான் முந்திவிடச் சிறகடித்துப் பறந்தது
ஸ்ரீலங்கா புகையிலையை வரவேற்றும் நின்றது

புகையிலையின் பரம்பலோ பெருவேகம் ஆகியது
புகையிலையில் பலவடிவம் புறப்பட்டும் வந்தது
போதைதரும் பொருளாகப் புகையிலையும் மாறியது
காதலுடன் பலபேரும் கையெடுத்தார் புகையிலையை

புகையிலையைப் பயன்படுத்திப் போதைதரும் பலபொருட்கள்
நவநவமாய் வர்த்தகத்தில் நலங்கெடுக்க வந்தது
வெள்ளை நிறச்சுருட்டாக கருமைநிறச் சுருட்டாக
உள்ளங்கவர் உருவத்தில் உலகில் வலம்வந்தது

மூக்குப் பொடியாகி முன்வந்து நின்றது
பாக்குடன் சேர்ந்திருக்கப் பலவகையில் வந்தது
பான்பராக் எனும் பெயரில் பக்கற்றிலும் இருந்தது
பலவுருவம் பலவண்ணம் புகையிலையும் எடுத்தது

புகைப்பதனால் வருகின்ற கேடுதனை நோக்கிடுவோம்
புகைபிடித்தல் நிலைபற்றி அறிந்திடுதல் அவசியமே
புகைபிடிக்கும் பலவிடங்கள் புகைவிடுவார் மனநிலைகள்
அவையனைத்தும் பார்த்துவிடல் அவசியமாய் அமைகிறது

வண்டி இழுப்பாரும் வயல்வேலை செய்வாரும்
வாயிலே சுருட்டுவைத்து வகைவகையாய்ப் புகைவிடுவார்
சண்டித்தனம் செய்வாரும் சமையல்வேலை செய்வாரும்
சளைக்காமல் சுருட்டதனைத் தம்பாட்டில் சுவைத்துநிற்பர்

வங்கிகளைப் பார்த்தாலும் வைத்தியரைப் பார்த்தாலும்
அங்குமே சுருட்டுவகை அமோகமாய் இடம்பிடிக்கும்
தங்கிநிற்போம் எனவெண்ணித் தனியாக மரமொதிங்கின்
அங்கிருந்து பலபேரும் அமர்ந்திருந்து புகைத்துநிற்பர்

பாக்கிலும் புகைத்துநிற்பர் பஸ்ராப்பிலும் புகைத்துநிற்பர்
போக்குவரத்தில் எல்லாம் புகைவிட்டே கொன்றொழிப்பர்
நீக்கமற புகைப்பதிலே நீள்சுகத்தைக் கண்டதனால்
பார்க்குமிடம் எல்லாம் பயமின்றிப் புகைத்துநிற்பர்

பேருந்தில் ஏறியதும் பெரும்சிரிப்பைத் தந்தபடி
பெரியதொரு பைக்கற்றை பிரித்துமே எடுத்திடுவார்
வெள்ளையாய்த் தலைநீட்டும் வெண்சுருட்டை அணைத்தெடுத்து
விதம்விதமாய் வாயில்வைத்து விட்டிடுவார் புகையனைத்தும்

ஊதிவிடும் புகையனைத்தும் உட்கார்ந்து இருப்போரின்
மூக்காலே உட்புகுந்து மூச்சுக்குழல் வரைசெல்லும்
உட்புகுந்த புகையாலே உபாதைகொண்டு நிற்போரை
ஓரக்கண்ணால் பார்த்தபடி உறிஞ்சிநிற்பார் புகைவிட்டோர்

பணிமனைக்குச் சென்றாலும் பலபேரும் புகைத்துநிற்பார்
பணிபார்க்க வருவோர்கள் தலைசுற்றி அங்குநிற்பார்
துணிவாக எடுத்துரைக்க யாருமே வரமாட்டார்
துணிவாகப் புகைவிடுவோர் பணிமனையை நிரப்பிடுவார்

புகைகக்கும் வண்டியிப்போது போயுமே நாளாச்சு
புகைவிடுவோர் கூட்டத்தால் வண்டியிப்போ புகையாச்சு
ஏறிவிடும் கூட்டமதை எவருமே பார்ப்பதில்லை
தாறுமாறாய்ப் புகைவிட்டு தத்தளிக்கச் செய்துநிற்பார்

படித்தவரின் கைகளிலும் பாமரரின் கைகளிலும்
அடுக்கடுக்காய்ச் சுருட்டுவகை அமர்ந்துமே இருக்கிறது
நடிக்கின்றார் கைகளிலும் படம்பிடிக்கின்றார் கைகளிலும்
நாகரிகச் சுருட்டுவகை நளினமுடன் அமர்கிறது

காலைமாலை பார்க்காமல் கணக்கின்றிப் புகைபிடிக்கும்
காளையரின் மத்தியிலே கன்னியரும் சேர்ந்துகொண்டார்
நாலுவேளை குடிப்பதற்குக் கஞ்சியின்றி இருப்பாரும்
நரகமாம் சுருட்டதனை நாளுமே குடித்துநிற்பார்

பாடசாலை செல்வோரும் படிப்பிக்கும் ஆசானும்
பாங்காகச் சுருட்டையெலாம் பைகளிலே வைக்கின்றார்
கிடைக்கின்ற நேரமெலாம் எடுத்ததனைக் கையில்வைத்து
துடுக்கெனவே வாயில்வைத்துத் துள்ளுநடை போடுகிறார்

மங்கலமாம் நிகழ்ச்சிகளில் வந்திருக்கும் பலபேர்கள்
வாயிலே சுருட்டைவைத்து வட்டமாய்ப் புகைவிடுவார்
அங்கிருக்கும் குழந்தைகளை அன்பான தாய்மாரை
வந்திருக்கும் யாரையுமே மனத்திலவர் கொள்வதில்லை

நோயிலே தாய்படுத்து நூறுமுறை இருமிநிற்பார்
பாயிலே தாயோடு பால்குடித்து தூங்கும்பிள்ளை
யாரையுமே பொருட்டெனவே தன்மனத்தில் நினையாது
வாயிலே சுருட்டோடு வலம்வருவார் அவ்வீட்டார்

இருமுகின்ற நோயாளி இருதயத்தைச் சோதிக்கும்
எங்களது வைத்தியரும் இருமலுடன் சோதிப்பார்
சோதித்த பின்னாலே துண்டெடுத்து மருந்தெழுதி
சுவைத்திடுவார் சுருட்டதனை, சுருண்டுநிற்பான் நோயாளி

நம்வாயில் சுருட்டிருப்பின் நாகரிகம் எனநினைப்பார்
நலன்கெட்டுப் போகையிலே நாகரிகம் என்னசெய்யும்
நலன்வருமே எனவெண்ணி நாம்செய்யும் வேலையெலாம்
நாளடைவில் நம்சுகத்தை நசுக்கியே விட்டுவிடும்

பலபோதைச் சரக்குகளைப் பதப்படுத்தி கலந்தெடுத்து
பற்பல உத்திகொண்டு பாங்காக உட்செலுத்தி
விதம்விதமாய்ச் சுருட்டையெல்லாம் விளம்பரத்தின் ஊடாக
விற்கின்றார் சந்தைகளில் விறுவிறுப்பு வெளிப்படவே

அதைவாங்கிக் குடிப்பவர்கள் அடிமை நிலைக்காளாகி
வதைபட்டு வதைபட்டு வாழ்க்கையினை இழக்கின்றார்
இதையாரும் உணராமல் இன்னுமே வாங்கிவாங்கி
சிதையிலே போகும்படி சீரழந்தே நிற்கின்றார்

காலையிலே சுருட்டடித்தால் களைப்பெல்லாம் நீங்குமென்றும்
வேலையிலே புகைவிட்டால் விறுவிறுப்பாய் இருக்குமென்றும்
நாளதுமே எண்ணியெண்ணி நன்றாகப் புகைத்துவிடின்
நாளாக நாளாக நம்முடம்பு படுத்துவிடும்

புகைபிடிக்கும் யாவருக்கும் பலநோய்கள் வருமென்று
பொழுதெல்லாம் பிரசாரம் நடக்குதிப்போ நாடெல்லாம்
புகைபிடித்தால் கேடென்னும் விளம்பரத்தை ஒட்டுபவர்
புகைபிடித்தே ஒட்டுவதால் போதனையால் என்ன பலன்?

நலன்கெடுக்கும் புகையிலையை நாடாது இருந்திடுவோம்
நிலங்கெடுக்கும் புகையிலையை நெஞ்சைவிட்டே அகற்றிடுவோம்
உளங்கெடுக்கும் உணர்வுகளை ஒழித்துவிட முனைந்திடுவோம்
உயிர்போக்கும் போதைகளை உலகைவிட்டே ஓட்டிடுவோம்

குடியோடு புகையும்சேர்ந்து குடிகளை அழிக்குதென்று
குடிகளே உணரும்போதே குடியோடு புகையும்போகும்
துணிவுடன் எழுந்துவாரீர் தூயதைச் சமைப்போம்நாங்கள்
அணியென ஒன்றுசேர்ந்து அகற்றுவோம் புகைத்தல்தன்னை !

குடியோடு புகைசேர்ந்து குடியனைத்தும் குலைக்கிறது
அடியோடு அதையொழித்து ஆனந்தம் பெற்றுநிற்போம்
படுகுழியில் வீழ்த்துகின்ற பாதைகளைக் களைந்தெறிந்தால்
விடிவெள்ளி எம்வாழ்வில் விரைவெனவே தோன்றிவிடும் !

Leave a Reply

Your email address will not be published.