சேக்கிழார் பெருமானின் சிந்தனைகள்!

0

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மெல்பேண், ஆஸ்திரேலியா 

“இலக்கியம் என்றால் இலக்கை நோக்கி அழைத்துச் செல்லுவது” என்பதுதான் அதற்கான பொருத்தமான பொருளாகியிருக்கிறது. அந்த இலக்கு எது என்பதைத் தெரிந்து கொள்ளுதல்தான் மிகவும் முக்கிய நிலையாகும். கற்பவர்க்கு இன்பத்தைப் பயப்பதுடன் அவர்களின் வாழ்வைத் திருத்திச் செம்மை செய்வதாய் இருக்க வேண்டும் என்னும் ஒரு கருத்தும், படிக்கும் பொழுதே இன்பத்தைப் பயப்பதைத் தவிர வெறொன்றுமே இல்லை என்றும், வேறு பயனை விளைவிக்கவும் கூடாது என்னும் கருத்தும் இருப்பதைக் காணமுடிகிறது. இவ்வாறு காணப்படும் கருத்தில் – முதலாவது கருத்தினையே தமிழ் இலக்கியங்களும், அதனைப் படைத்த ஆளுமைகளும் அகமிருத்திக் கொண்டார்கள் என்பது மனங்கொள்ளத் தக்கதாகும். இந்த நோக்கினை நன்றாகவே தனது குறிக்கோளாக்கிக் கொண்டவர்தான் “சேக்கிழார்” அவர்கள். இவரை பல கோணங்களில் பார்ப்பதும் பொருத்தமாய் அமையுமென்று கருதுகிறேன். அந்த வகையில் இவரின் சிறப்புக்கான காரணந்தான் என்னவாக இருக்க முடியும்?

பக்திச் சுவை நனி சொட்ட சொட்ட” பாடியதால் சேக்கிழார் சிறப்புப் பெறுகிறாரா? புதிய உத்தியைக் கையாண்டதால் சேக்கிழார் உயர்ச்சி பெறுகின்றாரா? முதலமைச்சர் ஆகவிருந்தமையால் சிறப்புப் பெறுகின்றாரா? புரட்சிகரமான கருத்துக்களை முன்வைத்தமையால் சிறப்பும் உயர்வும் பெறுகின்றாராஅல்லது பெரியபுராணத்தைத் தந்தமையால் சிறப்பும் உயர்வும் பெறுகின்றாராஎன்று நினைக்கத் தோன்றுகிறதல்லவா?

சேக்கிழார் வாழ்ந்த காலம் சோழப்பெருமன்னர்களின் ஆட்சிக் காலமாகும். சோழர்கள் படைநடத்திப் பெரும் வெற்றிகளைக் குவித்தார்கள். நாடு செல்வத்தில் சிறப்புற்றது. அரசர்களின் புகழ் பாடுவதிலேயே அனைவரும் இருக்கும் நிலையும் காணப்பட்டது. அப்படியான வேளையில் சேக்கிழார் சோழ அரசபையில் பொறுப்புவாய்ந்த முதல் அமைச்சராய் அமர்ந்திருக்கின்றார். வெற்றிச் செருக்கென்பது வீழ்ச்சிக்கே இட்டுச் செல்ல வல்லது என்பதை, வெற்றிக் களிப்பில் இருக்கும் எவருமே உணர்ந்திட மாட்டார்கள். மனம்போன போக்கில் மன்னர்கள் போகத்துடிப்பார்கள். மனத்தின் வழியே போய்க்கொண்டிருந்தால் முடிவில் வெற்றி என்பது வீழ்ச்சிக்கே வழிகோலியே விடும். அதனால் மனத்தை நல்வழியில் செலுத்தினால் நாடும் சிறக்கும். நாட்டு மக்களும் சிறப்பர். மன்னனும் வாழ்த்தப்படுவான் என்பதை – அமைச்சராக இருந்த சேக்கிழார் எண்ணிப் பார்க்கிறார்.

இந்த எண்ணத்தினால், பிற்காலச் சோழமன்னரது போக்கை சேக்கிழார் விரும்பவில்லை. அவர்களின் மனோபாபம் வேறுவிதமாகப் போவதை அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அவர்களுக்கு நல்ல வழியைக் காட்டினால்த்தான் மக்களும் நாடும் மீண்டும் பழைய நிலைய அடையமுடியும் என்று கருதினார். எனவே மன்னர் மனம் மாறமக்கள் விழிப்புப்பெறஅவர்கையாண்ட வழிதான்— ஆண்டவன் அடியாரை அறிமுகப்படுத்தும் அதி உன்னத பணியாக அமைந்தது. அடியார்கள் ஆண்டவனைத் தவிர வேறெதையும் அகமிருத்தாதவர்கள். அவர்களின் குறிக்கோள் என்றுமே உயரிய அந்தப் பரம் பொருள் பற்றியதாகவே அமைந்திருந்தது. அங்கே சிற்றின்பத்துக்கு இடமே இல்லை. பேரின்பம் மட்டுமே பேசுபொருளாக இருந்தது எனலாம். வெற்றிக் களிப்பில் திளைத்த சோழ மன்னன் இவ்வுலக இன்பத்தை எடுத்து வழங்கி நின்ற சீவக சிந்தாமணியிலே மூழ்கிக்கிடந்தான். இந்த நிலை நீடித்தால் அது நல்விளைவினை நல்காது என்பதை முதல மைச்சராய் இருந்த சேக்கிழார் மனஞ் சொல்லியது. இதனால் மன்னனை மடை மாற்றம் செய்ய வேண்டியது மிகவும் அவசியம். அதுவே காலத்தின் கட்டாயம் என்றும் அவர் கருதினார். அந்தக் கருத்தின் பயனாக மலர் ந்துதான் பெரியபுராணம் என்னும் பக்திப் பொக்கிஷம் எனலாம்.

எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த சுந்தரரின் திருத்தொண்டர் தொகை, பத்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த நம் பியாண்டார் நம்பியின் திருத்தொண்டர் திருவந்தாதி இரண்டுந்தான் சேக்கிழார் மனத்தில் அமர்ந்து கொண்ட மிகவும் சிறந்த கருக்கள் எனலாம். இந்தக்கருக்களை மையப்படுத்தி, அரசனும் உய்ய வேண்டும்,  மக்களும் உய்ய வேண்டும் என்னும் , வாழ்வியலும் உய்ய வேண்டும், என்னும் நோக்கில்தான் பெரியபுராணம் வந்து வாய்க்கிறது என்பதைக் கருத்திருத்த வேண்டும். அடியார்கள் பலரின் ஆன்மீகமும், அவர்களின் அகத்தின் பாங்கும் வெளிப்படும் வகையில் பெரிய புராணத்தை அமைத்திட அவர் கொண்ட முக்கிய நோக்கம் – உண்மையான இன்பம் என்றால் என்னவென்று அறியாமல் மனத்தை அலைக்கழித்து நிற்கும் சோழ மன்னன், உண்மையான இன்பத்தை, நிலையான இன்பத்தை அறிய வேண்டும், அதன் வழியில் அவன் பயணப்படல் வேண்டும் என்பதற்கேயாம்.  “குடிஉயரக் கோனுயர்வான் ” என்பதை நன்கு அறிந்தவராகச் சேக்கிழார் இருந்தபடியால் குடிகள் உயர்வுபெற வேண்டுமானால்கோன் — அதாவது அரசர்களை உயிர் ப்பூண்டவேண்டும் என எண்ணினார். அதனால் மன்னர்மனத்தில் இறையுணர்வை ஊட்டுவதே மிகச்சிறந் தவழி என்று அதனை மையமாகக் கொண்டுதான் பக்திச்சுவை சொட்டச் சொட்ட பெரியபுராணத்தை ஒரு காவியமாக்கிட எண்ணினார். ஆண்டவனின் மேல் அளவிட முடியாத நம்பிக்கை கொண்டவர் சேக்கிழார் அவர்கள். அந்த ஆண்டவனையே மனமெண்ணி அரசனை அணுகினார். அரசனின் கையிலிருந்த சீவகசிந் தாமணி எந்தபயனுமே நல்காது, அதற்குப் பதிலாக இதனை நீங்கள் அறிந்தால் எல்லாமே வாய்க்கும் என்று நயமாக எடுத்துரைத்தார். ஆண்டவன் அனுக்கிரகிரகம் வாய்க்கப் பெற்ற சேக்கிழார் வார்த்தைகள் அரசன் செவிகளில் புகுந்து அவன் அகத்தினையும் தொட்டு நின்றது. ஆண்டவன் அடியார் பெருமைகளை அவனிடம் சொன்னார். அரசனும் மனநிலை தெளிந்தவனாய் “உங்களின் உள்ளத்தில் உதித்த கருக்களைப் பாடுக எனப்பணித்தான்.  “அரசே அதிகாரத்தில் அமர்ந்து கொண்டு என்னால் அடியார் வரலாற்றைப் பாட இயலாது. ஆகையால் ஆடம்பரமும் வேண்டாம்,. அரச போகமும் வேண்டாம், அமைச்சுப் பதவியையும் துறக்கிறேன்” என்று கூறி விட்டு  ஆண்டவன் சன்னிதானத்தை அடைந்து அங்குதான் தன்னுடை அரிய பணியை ஆரம்பிக்கின்றார். “உலகெலாம்” என்னும் அடியானது அசரீரியாய் அமைந்திட பக்திப்பனு வலாய் பெரியபுராணம் மாநிலம் செழிக்க, மன்னவன் பயனுற , மக்கள் உய்திபெற்றிட வந்தமைகிறது.                             

அமைச்சராய் இருந்த  சேக்கிழாரின் புலமை சாதாரணமானதல்ல. கம்பரைப்போல கவிபாடும் ஆற்றல் அவரிடம் வாய்த்திருந்தது. அவரும் கம்பர் வழியில் காவியம் பாடியிருந்திருந்தால் சில வேளை கம்பரா மாயணத்தைக்கூட விஞ்சியியும் இருந்திருக்க வாய்ப்பு வாய்த்தாலும் வாய்த்திருக்கும் அல்லவா? ஆனால் சேக்கிழாரின் நோக்கம் அப்படியானதாக இருக்கவே இல்லை. அதனால்த்தான் அடியார்கள் வரலாற்றைத் தேடிப் பிடித்திருக்கிறார். தேடிப் பிடித்ததோடு அமையாமல்  அதனை எப்படிக் கொடுக்க வேண்டுமோ அப்படிக் கொடுத்தும் தன் குறிக்கோளில் வெற்றியும் பெற்றவராக ஆகியும் விடுகிறார்.     

சேக்கிழார் காவியத்தின் பாடுபொருளே  வித்தியாசமானதாகும். இளங்கோ அடிகள் சிலம்பினைப் பாட விளைந்த வேளை  உயர்திணை அல்லா ஒன்றை பாடுபொருளாகக் கொண்டிருந்தார். அதனைத் தனது மனத்திற்கொண்ட காரணத்தால் சேக்கிழாரும் “தொண்டையே” கருப்பொருளாக்கி பெரியபுராணத்தை காவியமாகப் படைத்து விடுவதைக் காண்கின்றோம். அறுபத்து மூன்று அடியவர் கதைகளை வைத்துக் கொண்டு ஒருகாவியத்தைப் புனைவது என்பது இலகுவான காரியமல்ல. இதனை நன்கு மனத்திற் கொண்ட காரணத்தால் எப்படியும் இந்த அடியார்களை இணைப்பதற்கு ஒரு மார்க்கம் கிடைக்காதா என்று சிந்தித்த பொழுதுதான் – அடியார்கள் எவ்வாறு இருப்பினும் அவர்கள் யாவரிடமும் தொண்டு மனப்பாங்கு இருப்பதை அவரால் உணர்ந்து  கொள்ள முடிந்தது எனலாம்.எனவே இப்பொழுது அடியார்கள் தொகை அவருக்குப் பெரிதாகப்படவில்லை. அங்கே தொண்டுதான் தலைமை வகித்தது. எனவே தொண்டை மையமாக வைத்து தொண்டர் பெருமையை பறைசாற்றும் காவியத்தை எழிதாகப் புனைந்து எமக்காகவே வழங்கியிருக்கிறார். இது சேக்கிழாரின் பெருமை என்றுதானே சொல்ல வேண்டும்.

சுந்தரமூர்த்தி சுவாமிகளும், நம்பியும், பெரியபுராணத்தை அமைத்திட  சேக்கிழாருக்கு பெரிதும் கைகொடுத்தார்கள் என்பது மறுப்பதற்கில்லை.  அவர்களின் பேருதவியைப் பெற்று நின்ற சேக்கிழார் அவற்றோடு மட்டும் நின்றுவிடவில்லை என்பதும் நோக்கத்தக்கது. அடியார்கள் பற்றிய விஷயங்களை யெல்லாம் ஆதாரத்துடன் எடுக்க வேண்டும் என்னும் எண்ணத்தால் ஊர்கள் தோறும் சென்று பல தகவல்களையும் எடுப்பதில் அயராது நிற்கிறார். அமைச்சராக இருந்த காரணத்தால் அவர் ஊர்கள் தோறும் சென்று பல வரலாற்றுத் தகவல்களையும் கல்வெட்டுப் போன்ற வற்றையும் ஆராயும் நுண்மாண் நுழைபுலத்தைத் தன்னகத்தே கொண்டவராக விளங்கினார் என்பதும் கவனத்துக் குரியதாகும். இதனால் அவரின் காவிய மான பெரியபுராணம் தலை நிமிர்ந்து நிற்கின்ற நிலைக்கு வந்தமைந்தது. இஃது  அவருக்கு உயர்வையும் சிறப்பையும் அளிக்கத்தானே செய்யும் !

பக்தியை ஊட்டுவதற்குப் பாடப்பட்டதுதான் பெரியபுராணம். எனினும்  சேக்கிழார்  அதன் ஊடாக பல சமூக சீர்திருத்தங்களையும் துணிந்து செய்ய நினைக்கின்றார். இது அவரின் பெரும் சமூக அக்கறையினையே காட்டி நிற்கிறது எனலாம். பலவிஷயங்களையும் கற்றுத் தேர்ந்தவர் என்ற காரணத்தால்த்தான் சோழமன்னனே அவருக்கு முதல் அமைச்சர் பதவி வழங்கி பெருமைப்படுத்துகின்றான். ஆட்சியில் அதிகாரத்தில் இருந்து வேலை பார்த்தவருக்கு நாட்டின் நிலை அங்கு வாழும் மக்களின் நிலை பற்றி முழுமையாகத் தெரிந்து கொள்ள வாய்ப்பிருந்தது. தனக்குக் கிடைத்த அனுபவங்களின் வெளிப்பாடுகளை பெரிய புராணத்தில் கொண்டுவந்து நிறுத்துவதன் மூலம் அவர் தனது  சமூக அக்கறையினை சொல்லியும் நிற்கிறார் எனலாம்.

பெரியபுராணத்தில் இடம்பெறுகின்ற அடியவர்களைப் பார்க்கின்ற பொழுது அவர்கள் யாவருமே வெவ் வேறு சமூக நிலையில் இருந்து வந்தவர்களாகவே காணப்படுகிறார்கள். அந்தணர் இருக்கிறார். அரசர், இருக்கிறார். புலையர், வேட்டுவர், மீன்பிடிகாரர், வண்ணார், குயவர், மரமேறுபவர்கள், செக்கார், ஆதிசைவர், வேளாளர், இப்படிப்பல சாதிப்பிரி வினரும் இருக்கிறார்கள். இப்படியானார்களையெல்லாம் தமது ஒப்பற்ற காவியமான பெரியபுராணத்தில் காட்டி அவர்ககளை வணங்கத்தக்க நிலைக்கு கொண்டு வந்தமை யினை என்ன வென்று நோக்குவது? இதனைச் சேக்கிழாரின் புரட்சி என்பதா அல்லது அவருக்கு வாய்த்திட்ட சமூக அக்கறை என்பதா அல்லது அளவுக்கு மிஞ்சிய தனித் துணிச்சல் என்பதா? ஆணென்றோ, பெண் ணென்றோ பார்க்கவில்லை. அவர்களின், பொருளாதார ஏற்றத்தாழ்வு, கல்வியறிவு, சாதி, எதையுமே அவர் கருத்தில் கொள்ளவும் இல்லை. இவர்கள் அனைவரையும்  சமயம் என்னும் வரம்புக்குள் நிறுத்தி – இவர்கள் அனைவரும் இறைவனுக்குத் தொண்டு செய்கின்ற நிலையில் போற்றப்பட வேண்டியவர்கள் என்று காட்டி இருக்கும் சேக்கிழாரின் துணிச்சலைக் கட்டாயம் வியந்து பார்க்கவே வேண்டியிருக்கிறது.

சமூகத்தில் சாதிக்கட்டுப்பாடு என்பது மிகவும் இறுக்கமாக இருந்திருக்கிறது என்பதைப் பெரியபுராணத்தின் வாயிலாக வருகின்ற அடியார்களின் வரலாற்றைக் கொண்டு அறிந்திட முடிகிறது. அது மட்டுமல்ல சமூதாயக் கட்டுப்பாடுகள் இறுக்கமாய் இருந்தமையால் பலர் ஆலயங்களுக்குள் பிரவேசிப்பதும், வணங்குவதும் கூட இயலாத ஒரு நிலை காணப்பட்டதையும் அறிந்திடக் கூடியதாகவும் இருக்கிறது. இதனைச் சேக்கிழார் மனித தர்மம் அற்றது எனக்கருதியிருக்கிறார். இதனால் தமது காவியத்தில் இடம் பெறுகின்ற அறுபத்து மூவரையும் அடியார்களாக்கி விடுகின்றார். பெரியபுராணத்தில் வருகின்ற அடியார்கள் பல சாதிகளைச் சேர்ந்திருந்த போதிலும் யாவரும் சிவமயமாக நின்று தொண்டையே தம்மனத்தில் இருத்திய காரணத்தால் சாதி அடிபட்டுப் போவதையே நாம் இதன் மூலம் கண்டு கொள்ள முடிகிறது.  “ஆண்டவன் சன்னிதானத்தில் அனைவரும் சமம்” என்னும் அரிய கருத்தை அனைவரதும் அகத்தினிலும் அமர்த்திட வேண்டும் என்னும் உயரிய, புரட்சிகரமான, சிந்தனையால் சேக்கிழார் என்னும் தமிழ்ப் புலவர் சிறந் தோங்கப் பார்க்கப்டுகிறார் எனலாம்.  ஒதுக்கி வைக்கப்பட்டவர்களை இன்று கோவில்கள் தோறும் சிலை வடிவில் உள்ளே வைத்து பூசனைகள் செய்தும், பெருவிழாஎடுத்தும், குருபூசை என்று குறித்துக் கொண்டாடியும் வருகின்றோம் என்றால்-அந்தப்பெருமைக்கும் சிறப்புக்கும் சேக்கிழார்தான் காரணம் என்பதை எவருமே மறந்து விடமுடியாது.

சரித்திரம் என்பது வேறு. சம்பவம் என்பது வேறு.சம்பவங்களைச் சரித்திரமாக்கிய நிலையினை பெரிய புராணம் வாயிலாக சேக்கிழார் செய்திருக்கிறார். சமயத் தொண்டர் பற்றிக் கூறவந்தாலும், ஆயிரம் ஆண்டுகால தமிழ்ச்சமூகத்தின் வரலாற்றினையும், மொழிபற்றிய நிலையும், சமயங்களின் நிலையையும் முதன் முதாலாகப் பதிவு செய்து வித்தியாசமான ஒரு பார்வையினை சேக்கிழார் காட்டியிருக்கிறார் என்பதை மறுத்துரைத்துவிடல் முடியாது.

வீரம் என்றால் என்ன என்பதற்கு ஒரு புது விளக்கத்தைச் சேக்கிழார் காட்டுகிறார். வீரம் எனும் பொழுது – உடலில் மிக்க வலிமை கொண்டிருப்பதையும், போர்களங்கள் பலவற்றைக் கண்டு அங்கு பல வெற்றிகளைக் குவிப்பதையுமே சொல்லுவதுதான் வழக்கமாகிவிட்டது. ஆனால் சேக்கிழாரோ வீரத்துக்கும், வீரர்களுக்கும், வித்தியாசமான விளக்கத்தை அளித்து  வீரம் என்பதற்கே புதுமையான கருத்தினை வெளிப்படுத்தி யாவரையும் வியக்கவே வைக்கின்றார் முதலமைச்சராக பதவியிலிமர்ந்து பல போர்களைக் கண்டிருக்கும் அனுபவம் அவருக்கு வாய்த்திருக்கிறது. ஆனாலும் அவற்றில் ஈடுபட்டவர்களை வீரர் என்றோ அவர்கள் பெற்றவை எல்லாமே  வெற்றிதான்  என்றோ அவரகம் ஏற்கவில்லை. அதாவது புறத்தே நடக்கும் போரைவிட அகத்தே நடக்கும் போரும் அதனை வெற்றி கொள்ளுதலுமே வீரமும் வெற்றியும் என்று வித்தியாசமாய் அவர் உணர்ந்து கொண்டார்.

இந்த வித்தியாசமான சிந்தினையினை வெளிப்படுத்திக் காட்டிட – தன்னுடைய காவியத்தில் ஒரு அடியாரைக் கொண்டுவந்து நிறுத்துகிறார். அவர்தான் திருநீலகண்ட நாயனார். திருநீலகண்டரின் வரலாற்றில் அவரிடம் காணப்படும் புலனடக்கத்தைக் காட்டி – அதற்கான ஒரு புது விளக்கத்தை வீரமாய் பார்க்கும் சேக்கிழார் பார்வை மிகவும் புதுமையான பார்வை என்றே எண்ணிட வைக்கிறது. இந்திரியங்களை வெல்லுவதுதான் உண்மையான வெற்றி. இந்திரியங்களை யாரொருவர் வெற்றி கொள்ளுகிறாரோ அவரே பகைகள் அற்றவராய் இருப்பார்கள் என்பதை உள்ளத்தில் இருத்திட சேக்கிழார் எண்ணிய பாங்கினை மெச்சாமல் இருந்திடவே இயலாதிருக்கிறது. தொண்டுள்ளம் வருவதற்கு இத்தகைய வெற்றி என்பதே இன்றியமையாததது என்பதுதான் சேக்கிழாரின் உறுதியான நிலையாகும். இதுவேதான் வீரம் என்றும் அதற்கான வெற்றி என்றும் ஒரு புதிய விளக்கத்தை சேக்கிழார் தருகின்ற நிலையில் அவர் புதுமையை,   புர ட்சியை, விதைப்பவராகவே வந்து நிற்கிறார். 

“வீரம் என்னால் விளம்பும் தகையதோ என்னும் சேக்கிழார் வாக்கினை நோக்குதல் மிகவும் அவசிய மானது. பற்றை நீக்கி குறிக்கோளுடன் துறவு மனப்பான்மை கொண்டு வாழும் தொண்டர்களின் நிலை யினையே தன்னுடைய நோக்கினுக்கான விளக்கமாக்கி இருக்கிறார் என்பதுதான் மிகவும் முக்கியமாகும். அதேவேளை “ஈர அன் பினர் யாதுங் குறைவிலார்  வீரம் என்னால் விளம்பும் தகையதோ” என்று மொழிந்து அதற்கு உரிய சான்றாக சிறுத்தொண்டர், எறிபத்தர், வீரம்படைத் தவரானாலும் ஈரமும் கொண்டவர்கள் என்று தனது பார்வையின் விசாலத்தை பரவவிடுகிறார். நாவுக்கரசர் வீரத்தை,  குங்கி லியக்கலையர், கண்ணப்பர், வீரத்தையெல்லாம் எளிதில் சொல்லிவிடமுடியாது என்று சேக்கிழார் காட்டுவது சேக்கிழாரின் புதுச்சிந்தனையை வெளிப்படுத்துவதாக தெரிகிறது அல்லவா? வீரத்துக்கு இவ்வ ளவு விளக்கமா என எண்ணத்தோன்றுகிறதா?  வீரம் மிக்கவர்கள் ஆனாலும் ஈரமும் மிக்கவர் என்பது தான் இங்கு சொல்லப்படும் முக்கிய  சிந்தனை எனலாம். இதனை “ஈர அன்பினர் யாதும் குறையிலார்” என்று சேக்கிழார் காட்டுவதை மனமிருத்தல் வேண்டும்.

பொதுவாக இலக்கியங்களில் பெண்களை அதாவது சமகால இலக்கியங்களில். அவள் வந்தாள் என்று விழிக்கப்பட்ட நிலையில் அதனைப் புறந்தள்ளி  பெண்களுக்கு மரியாதை கொடுத்து அவர்” என்றும் “வந்தார்” என்றும் விழிக்கும் வண்ணம் சேக்கிழார் பெரியபுராணத்தில் அமைத்திருக்கும் பாங்கும் அவரின் புதிய சிந்தனையினையே வெளிப்படுத்தி நிற்கிறது எனலாம்.

இலக்கியத்தில் பல சுவைகள் பாடப்படுகின்றன. எட்டுச் சுவைகள் என்பதுதான் வழக்கமாய் இருக்கிறது. ஆனால் சேக்கிழாரே புதுமையாய் சிந்திந்து ஒரு சுவையினைத் தொட்டிருக்கிறார். அதுதான் “பக்திச் சுவை”. பக்திச்சுவையினைப் பக்குவமாய் கையாண்ட பெரும் தமிழ் புலவராய் சேக்கிழாரே விளங்குகிறார். அவருக்கு முன்னோ அல்லது பின்னோ யாருமே இல்லை என்னும் அளவுக்கு பக்திச்சுவையினைக் கையாண்டு காவியம் படைத்தவர் என்னும் புத்திலக்கியச் சிற்பியாகவும் சேக்கிழாரே விளங்குகிறார் எனபதும் கருத்திருத்த வேண்டியதேயாகும். பக்தியினைக் காட்டும் வகையிலும் அவரது அணுகுமுறை புதுமையாய் இருப்பதையும் பெரியபுராணத்தால் அறிந்திட முடிகிறது.இதனால்த்தான் “பக்திச்சுவை நனி சொட்ட சொட்டப் பாடிய கவி வலவ” என்று ஏற்றி போற்றும் நிலைக்கு ஆளாகியிருக்கிறார் என்பது மனங்கொள்ளத்தக்கதாகும்.

அன்பினைக் காட்டும் விதம், அறத்தினைக் காட்டும் விதம், அடியாரைக் காட்டும் விதம்,  கற்பனையினைப் புகுத்தும் விதம், அனைத்திலும் புதுமையை, புரட்சியையே காட்ட விளைகிறார் சேக்கிழார் எனலாம். உவ மையிலாக் கலைஞானம் உணர் வரிய மெஞ்ஞானம் அத்தனையையும் காட்டுகிறார். அப்படிக் காட்டும் வேளை பழமைவாதியாக ஆகிவிடாமல் புதுமையினைப், புரட்சியினை வெளிக்காட்டும் புதுமைப் புலவனாக, தெய்வீகப் புலவனாகவே தலை நிமிர்ந்து நிற்கிறார் என்பதை மறுத்துரைத்துவிடல் இயலாது.

              என்றும் இன்பம் பெருகும் இயல்பினால்
              ஒன்றுகாதலித்து உள்ளமும் ஓங்கிட
              மன்றுளார் அடியாரவர் வான்புகழ்
              நின்றதெங்கும் நிலவி உலகெலாம்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.