பொற்பதம் பணிந்தோமம்மா நற்றுணை என்றும்நீயே! [சரஸ்வதி துதி]

0

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா 
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் …. ஆஸ்திரேலியா

மாதரது குரலிலும் மழலையரின் மொழியிலும்
கீதமென ஒலித்திடும் குயிலனது குரலிலும்
பேதமற அமர்ந்துமே பெருங்கருணை பொழிகிறாய்
வீணையினை மீட்டிடும் வெண்டாமரை வாணியே

நூல்பல கற்கவேண்டும் நுண்பொருள் உணரவேண்டும்
வாய்மையாய் வாழவேண்டும் மனவழுக் ககலவேண்டும்
தாழ்மையாய் இருக்குமெண்ணம் தான்மன மமரவேண்டும்
வாணியே வேண்டுகின்றோம் வழங்கியே நிற்பாயம்மா

கற்றவர் அணைக்கவேண்டும் மற்றவர் மதிக்க வேண்டும்
நற்றமிழ் நாவிலென்றும் நடமிட்டு நிற்கவேண்டும்
சொற்றமிழ் சிறக்கவேண்டும் சுவையுடன் பாடவேண்டும்
பொற்பதம் பணிந்தோமம்மா நற்றுணை என்றும்நீயே

ஞானியர் போற்றுமம்மா நான்மறை உணர்த்துமம்மா
தேனினும் இனிமைமிக்காய் தெளிவினை ஊட்டுகின்றாய்
வானவர் வியக்குமாறு மதியினைத் தந்துநின்று
வையத்தார்  விரும்புவண்ணம் வைத்திட்டாய் வாணித்தாயே

ஏழைகள் கற்கவேண்டும் இருப்பவர் ஈய்தல்வேண்டும்
வாழ்விலே கல்விச்செல்வம் வானோங்கி நிற்கவேண்டும்
தோழமை உணர்வுகொண்டு கற்றவர் இணையவேண்டும்
நாளெலாம் பரவுகின்றோம் நல்லருள் புரிவாயம்மா

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *