Author: ஜெயராமசர்மா

  • எண்ணியெண்ணி அழுகின்றோம்!

    மகாதேவ ஐயர்  ஜெயராமசர்மா …. மெல்பேண் …. அவுஸ்திரேலியா 

    இரக்கமின்றி கொலைசெய்ய
    எம்மதமும் சொன்னதுண்டா?
    வணக்கத்தலம் வன்முறைக்கு
    வாய்த்ததென்றும் சொன்னதுண்டா?

    அரக்ககுணம் மனமிருத்தி
    அனைவரையும் அழிக்கும்படி
    அகிலமதில் எம்மதமும்
    ஆணையிட்டு சொன்னதுண்டா!

    ஈஸ்டர்தின நன்னாளில்
    இலங்கையினை அதிரவைத்த
    ஈனச்செயல் தனைநினைக்க
    இதயமெலாம் நடுங்குகிறதே!

    துதிபாடி துதித்தவர்கள்
    துடிதுடித்தார் குருதியிலே
    அதையெண்ணி அகிலமுமே
    அழுதேங்கி நிற்கிறதே!

    பிராத்தனைக்குச் சென்றவர்கள்
    பிணமாகிக் கிடந்தார்கள்
    பேயாட்டம் நடந்தேறி
    பெருந்துயரே எழுந்ததுவே

    இன்னுயிரை ஈந்தளித்த
    யேசுபிரான் சன்னதியில்
    இரத்தவெறி அரங்கேறி
    எடுத்ததுவே பலவுயிரை!

    மதங்கடந்து இனங்கடந்து
    மக்கள்மனம் சேரவேண்டும்
    மதவெறியை இனவெறியை
    மனம்விட்டு அகற்றவேண்டும்

    புவிமீது பொல்லாங்கு
    நிகழ்த்துகின்றார் அனைவருமே
    அறவழியில் வருவதற்கு
    ஆண்டவனை வேண்டிநிற்போம் !

    ஈழத்தின் துயரமதை
    எண்ணியெண்ணி அழுகின்றோம்
    வாழுகின்ற வயதினிலே
    மண்மீது சாய்ந்தார்கள்,

    ஆழமாய்ப் பதிந்துவிட்ட
    அவலமதை நினைக்கையிலே
    அழுகின்ற நிலைமாற
    ஆண்டுபல ஆகிடுமே!

                                    

                                   

    Share
  • இதோ, நம் வேட்பாளர்!

    மகாதேவ ஐயர் ஜெயராம சர்மா, மெல்பேண் , ஆஸ்திரேலியா

    தேர்தல்தேர்தல் தேர்தலென்று
    தெருவெல்லாம் திரிகிறார்
    ஆளைஆளை அணைத்துபடி
    அன்புமுத்தம் பொழிகிறார்
    நாளைவரும் நாளையெண்ணி
    நல்லகனவு காண்கிறார்
    நல்லதெதுவும் செய்துவிட
    நாளுமவர் நினைத்திடார்  !

    மாலை மரியாதையெல்லாம்
    வாங்கிவிடத் துடிக்கிறார்
    மக்கள்வாக்கை பெற்றுவிட
    மனதில்திட்டம்  தீட்டுறார்
    வேலைபெற்றுத் தருவதாக
    போலிவாக்கை விதைக்கிறார்
    வாழவெண்ணும் மக்கள்பற்றி
    மனதிலெண்ண மறுக்கிறார்  !

    ஆட்சிக்கதிரை ஏறிவிட
    அவர்மனது துடிக்குது
    அல்லல்படும் மனதுபற்றி
    அவர்நினைக்க மறுக்கிறார்
    அதிகசொத்து பதவியாசை
    அவரைசூழ்ந்து நிற்குது
    அவரின்காசை அனுபவித்தார்
    அவர்க்குத்துதி பாடுறார் !

    அறத்தைப்பற்றி நினைத்திடார்
    அக்கறையை விரும்பிடார்
    இருக்கும்வரை அரசியலால்
    எடுத்துச்சுருட்ட நினைக்கிறார்
    வாக்களிக்கும் மக்கள்தம்மை
    போக்குக்காட்டி ஏய்க்கிறார்
    வாக்குக்கொண்டு போகுமாறு
    வாக்களிப்போம் வாருங்கள் !

    படத்துக்கு நன்றி: http://www.mowval.in
    Share
  • நலம்விளைப்பாய் சித்திரையே!

    மகாதேவ ஐயர் ஜெயராம சர்மா (மெல்பேண், ஆஸ்திரேலியா)

    புத்தாடை வாங்கிடுவோம்
    புத்துணர்வு பெற்றிடுவோம்
    முத்தான முறுவலுடன்
    சித்திரையைக் காத்திருப்போம்
    எத்தனையோ சித்திரைகள்
    எம்வாழ்வில் வந்தாலும்
    அத்தனையும் அடிமனதில்
    ஆழமாய்ப் பதிந்திருக்கும்!

    சொத்துள்ளார் சுகங்காண்பர்
    சொத்தில்லார் சுகங்காணார்
    எத்தனையோ துயர்வாதை
    இருந்தேங்க வைக்கிறது
    அத்தனையும் பறந்தோட
    சித்திரைதான் உதவுமென
    நம்பிடுவார் வாழ்வினிலே
    நலம்விளைப்பாய் சித்திரையே!

    வெள்ளப் பெருக்காலே
    வேதனைகள் ஒருபக்கம்
    உள்ளத்தை வதைக்கின்ற
    உணர்வற்றார் ஒருபக்கம்
    கள்ளத்தை விதைக்கின்ற
    கயவரெலாம் ஒருபக்கம்
    கழன்றோடக் காத்துள்ளோம்
    கைகொடுப்பாய் சித்திரையே!

    அரசியலில் அறமிப்போ
    அருகியே போகிறது
    ஆண்டவனின் சன்னிதியில்
    அநியாயம் நிகழ்கிறது
    அறமுரைப்போர் அனைவருமே
    அடக்கமாய் ஆகிவிட்டார்
    அடங்கிநிற்பார் தனையெழுப்பி
    அழைத்துவா சித்திரையே!

    புலம்பெயர்ந்து வந்தவர்கள்
    புலனெல்லாம் பிறந்தமண்ணின்
    நலம்பற்றி நினைப்பதிலே
    நாளதனைப் போக்குகின்றார்
    வந்தவர்கள் சிலபேர்கள்
    வம்புகளை வாங்குகின்றார்
    அந்தநிலை அகற்றுவிட
    வந்துவிடு சித்திரையே!

    ஈழத்தில் தமிழ்மக்கள்
    இடர்களின்றி வாழவேண்டும்
    ஆளுகின்ற அரசமைப்பில்
    அவரமைதி பெறவேண்டும்
    வாழுகின்ற இடத்திலவர்
    வாழ்வாங்கு வாழுதற்கு
    வகைநல்கும் பாங்கினிலே
    வந்திடுவாய் சித்திரையே!

    வாழ்வளிக்கும் நாடதனில்
    வழிமுறைகள் மாற்றுகிறார்
    ஈனமுடை செயலனைத்தும்
    எண்ணியெண்ணி ஆற்றுகிறார்
    பிறந்தமண்ணின் துயரங்களை
    பிய்த்தெறிந்து நிற்குமவர்
    மனந்திருத்தும் மருந்துடனே
    வந்திடுவாய் சித்திரையே!

    சன்மார்க்கச் சாலையெல்லாம்
    சரிவையொட்டிப் போகிறது
    பொல்லாத கூட்டமொன்று
    பொறுப்பேற்று நிற்கிறது
    நல்லவல்ல நாட்டினிலே
    நாளும்வாழ்க்கை போராட்டம்
    அல்லலெல்லாம் அகற்றிவிட
    அமைந்திடுவாய் சித்திரையே!

    எத்தனைதான் இடர்வரினும்
    இறைவனே துணையென்னும்
    எண்ணமதை மனங்களிலே
    இருத்திவிடு சித்திரையே
    இன்பமொடு சுகவாழ்வு
    எல்லோர்க்கும் கிடைக்கவென்று
    எண்ணமுடன் எழுச்சிபெற்று
    எழுந்துவா சித்திரையே!

    Share
  • தங்கச் சிலம்பொலியார்!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா, மெல்பேண், அவுஸ்திரேலியா

    சித்திரை பிறக்குமுன்னர் சிலம்பொலி அடங்கியதே!
    மொத்தமுள்ள தமிழறிஞர் முழுப்பேரும் அழுகின்றார்!
    எத்தனையோ பட்டங்கள் ஏற்றநிறை விருதெல்லாம்
    அத்தனையும் அவர்பிரிவால் அழுதபடி நிற்கிறதே!

    உலகமெலாம் சென்றிருந்தார் உவப்புடனே தமிழ்கொடுத்தார்!
    நிலைபெறு மாறெண்ணிநிற்க நிறைவாக அவர்கொடுத்தார்!
    அளவில்லாக் கட்டுரைகள் அவர்கொடுத்தார் உலகினுக்கு!
    அழவிட்டு சிலம்பொலியார் அவ்வுலகு சென்றுவிட்டார்!

    மாநாடு பலகண்டார் மலர்கள் பலகொடுத்தார்!
    பூமாலை புகழ்மாலை தேடியவர் போகவில்லை!
    கோமகனாய் கொலுவிருந்தார், கொழுகொம்பாய்த் தமிழ்கொண்டார்!
    பாவலரும் காவலரும் பதறியழச் சென்றுவிட்டார்!

    தேன்தொட்டத் தமிழ்பேசி, திசையெங்கும் வசங்கொண்டார்!
    தான்விரும்பி சிலம்பதனைத் தமிழருக்கு எடுத்துரைத்தார்!
    நானென்னும் அகங்காரம் காணாத வகையினிலே
    தான்சிலம்பார் வாழ்ந்ததனால் தானுலகம் தவிக்கிறது!

    சங்கத்தமிழை அவர் இங்கிதமாய் எடுத்துரைத்தார்!
    எங்குமே சிலம்பொலியார் என்பதே பேச்சாச்சு!
    பொங்கிவரும் தமிழுணர்வால் பொழுதெல்லாம் தமிழானார்!
    தங்கச் சிலம்பொலியார் தவிக்கவிட்டு போனதேனோ!

    Share
  • ஏக்கமுற்று நாமிருப்போம்

    -மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா … மெல்பேண் … அவுஸ்திரேலியா

    இளமையெனும் பூங்காற்று 

    இதயமதில் எழும்போது 

    உலகமெலாம் காலடியில்

    விழுகுதென நினைத்திடுவோம் 

    தலைநிமிர்ந்து ஆணவமாய்

    தான்சாமி ஆடிடுவோம் 

    நிலைதளர்ந்து போகுமென

    நினைவினுக்கு வருவதில்லை 

    ஆடாத ஆட்டமெலாம்

    ஆடிநாம் பார்த்திடுவோம் 

    கூடாத கூட்டமெலாம்

    கூடியே குலவிடுவோம் 

    தேடாத பெயரயெல்லாம்

    தேடியே பெற்றிடுவோம்

    தெருமுழுக்க எம்பெயரை

    செதுக்கும்படி ஆக்கிடுவோம் 

    இளமையெனும் முறுக்காலே

    முழுவாழ்வை தொலைத்திடுவோம்

    நிலைமையது தெரிகையிலே

    நெடுந்தூரம் வந்திருப்போம்

    எவ்வளவு முயன்றாலும்

    எம்மிளமை போனதுதான்

    ஏக்கமுற்று நாமிருப்போம்

    இதுபோன்ற  நிலைமையிலே 

    Share
  • துணை அவள்!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா (மெல்பேண், ஆஸ்திரேலியா)

    பெண்புத்தி தனைக்கேட்டால்
    பின்விளைவு நன்றாகும்!
    நன்புத்தி நவில்பவளே
    நம்முடைய தாயன்றோ!
    துன்மதிகள் தானகல
    துணிச்சலுடன் நின்றிடுவாள்!
    துயர்துடைக்கும் கரமாக,
    துணையாக அவளிருப்பாள்!

    Share
  • காதல் எனும் கனியமுது !

    மகாதேவஐயர் ஜெயராமசர்மா ….. மெல்பேண் .. அவுஸ்திரேலியா

    இளமையிலும் காதல் வரும்
    முதுமையிலும் காதல் வரும்
    எக்காதல் இனிமை என்று
    எல்லோரும் எண்ணி நிற்பர்
    இளமையிலே வரும் காதல்
    முதுமையிலும் தொடர்ந்துவரின்
    இனிமைநிறை காதலென
    எல்லோரும் மனதில் வைப்போம்

    காதலுக்குக் கண்ணும் இல்லை
    காதலுக்குப் பேதம் இல்லை
    காதல் என்னும் உணர்வுதனைக்
    கடவுள் தந்தார் பரிசெனவே!
    காதலிலே மோதல் வரும்
    காதலிலே பிரிவும் வரும்
    என்றாலும் காதல் எனில்
    எல்லோரும் விரும்பி நிற்பார்!

    காதல் என்று சொன்னவுடன்
    கவலை எல்லாம் ஓடிவிடும்
    கனவுபல தோன்றி வந்து
    கண்ணுக்குள் புகுந்து நிற்கும்
    கற்பனையில் உலா வந்து
    களிப்புடனே நாம் இருப்போம்
    காதல் என்னும் உணர்வில்லார்
    கல்லினுக்கே சமம் ஆவார்

    காவியத்தில் காதல் வரும்
    ஓவியத்தில் காதல் வரும்
    கல்வியிலும் காதல் வரும்
    காசினிலும் காதல் வரும்
    அக்காதல் கொள்ள மனம்
    ஆசை பட்டு நின்றாலும்
    அழகு மங்கை தரும்காதல்
    அனைவருக்கும் பிடிக்கும் அன்றோ

    மனித குலம் முழுவதற்கும்
    மகிழ்வு எனும் மருந்தாக
    வரமாகக் காதல் அது
    வந்து அமைந்து இருக்கிறது
    புவிமீது நாம் வாழப்
    பொலிவு தரும் அமிர்தமென
    காதல் எனும் கனியமுதைக்
    கடவுள் எமக்களித்துள்ளார்!

    Share
  • நல்லதை நாளும் செய்வோம்!

    -மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா …. மெல்பேண் ….. அவுஸ்திரேலியா

    மண்ணிலே நல்ல வண்ணம்
    வாழவே வேண்டு மாயின்
    கண்ணிலே கருணை கொண்டு
    கடவுளை நினைக்க வேண்டும்

    எண்ணிடும் எண்ண மெல்லாம்
    இனியதாய் இருந்தே விட்டால்
    மண்ணிலே எங்கள் வாழ்வு
    மங்கலம் தந்தே நிற்கும்

    புண்ணியம் பாவம் என்று
    எண்ணியே இருந்தே விட்டால்
    கண்ணிலே தெரியும் யாவும்
    கலக்கமாய் தெரியு மன்றோ

    பெரியவர் சென்ற பாதை
    விரிவென நிற்கும் போது
    குறுகிய பாதை சென்று
    குழம்பி நாம் நிற்கலாமா

    வறுமையில் வாழும் போதும்
    வாய்மையை மனதில் கொண்டு
    நெறியொடு வாழ்வோ மாயின்
    நிம்மதி வந்தே சேரும்

    அறிவொடு நடந்து கொள்வோம்
    அனைவர்க்கும் உதவி நிற்போம்
    பெருமைகள் வந்தே சேரும்
    பிறந்ததில் மகிழ்ச்சி கொள்வோம்

    நல்லதை நாளும் செய்வோம்
    நாளெலாம் உழைத்தே நிற்போம்
    வெல்லுவோம் என்று எண்ணி
    வெற்றியை நோக்கிச் செல்வோம் !

    Share
  • நன்றாகப் பொங்கிடுவோம்

    எம் . ஜெயராமசர்மா …. மெல்பேண் … அவுஸ்திரேலியா

    மனங்கவரும் மார்கழியில்
    மகத்தான நாட்கள்வரும்
    இந்துக்கள் கிறீத்தவர்கள்
    எல்லோரும் பங்குகொள்வர்
    வைஷ்ணவமும் சைவமும்
    வாழ்த்திநிற்கும் திருவெம்பா
    மார்கழியின் முக்கியமாய்
    மனமாசை அகற்றிநிற்கும் !

    ஒளிவிழா எனும்பெயரால்
    உத்தமராம் யேசுபிரான்
    வழிநிற்போர் அனைவருமே
    வாழ்த்துக்கூறி நிற்பார்கள்
    பீடுடைய மாதமாய்
    மார்கழியும் அமைந்துதுநின்று
    பெருமகிழ்சி வருவதற்கு
    தைதனக்கு வழிகொடுக்கும் !

    தைபிறந்தால் வழிபிறக்கும்
    என்கின்ற நம்பிக்கை
    தளர்வுநிலை அகன்றுவிட
    தானுரமாய் அமைந்திருக்கு
    பொங்கலென்னும் மங்கலத்தை
    பொறுப்புடனே தருகின்ற
    எங்கள்தையை எல்லோரும்
    இன்பமுடன் வரவேற்போம் !

    புலம்பெயர்ந்த நாட்டினிலும்
    பொங்கலுக்குப் பஞ்சமில்லை
    நிலம்பெயர்ந்து வந்தாலும்
    நீங்கவில்லை பண்பாடு
    நலந்திகழ வேண்டுமென்று
    யாவருமே நினைத்தபடி
    உளம்மகிழப் பொங்கலிட்டு
    உவகையுடன் இருந்திடுவோம் !

    வாசலிலே தோரணங்கள்
    வடிவாகக் கட்டிடுவோம்
    வண்ணப் பொடிகொண்டு
    கோலங்கள் போட்டிடுவோம்
    எண்ணமெலாம் இறைநினைவாய்
    எல்லோரும் இருந்திடுவோம்
    எங்கள்வாழ்வு விடிவுபெற
    இணைந்து நின்றுபொங்கிடுவோம் !

    நிலமெங்கும் சமாதானம்
    நிலைக்கவென்று பொங்கிடுவோம்
    வளம்கொளிக்க வேண்டுமென்று
    வாழ்த்திநின்று பொங்கிடுவோம்
    இளம்மனசில் இறையெண்ணம்
    எழுகவென்று பொங்கிடுவோம்
    எல்லோர்க்கும் நல்வாழ்வு
    இருக்கவென்று பொங்கிடுவோம்

    குறையெல்லாம் அகன்றுவிட
    கூடிநின்று பொங்கிடுவோம்
    மறைவாகப் பேசிவிடும்
    மனமகலப் பொங்கிடுவோம்
    திறமுடனே தமிழரெலாம்
    தலைநிமிரப் பொங்கிடுவோம்
    சீர்சிறப்பு வரவேண்டி
    சிரித்தபடி பொங்கிடுவோம்

    ஆரோக்கியம் ஆனந்தம்
    அனைவருக்கும் வரவெண்ணி
    ஆண்டவனை மனமிருத்தி
    ஆவலுடன் பொங்கிடுவோம்
    வேண்டுகின்ற அத்தனையும்
    விரைவாகக் கிடைத்துவிட
    நாங்களெல்லாம் ஒன்றுசேர்ந்து
    நன்றாகப் பொங்கிடுவோம் !

    Share
  • வல்லதொரு ஆண்டாக மலர்ந்துவிடு புத்தாண்டே!

    -மகாதேவஐயர் ஜெயராமசர்மா … மெல்பேண் … அவுஸ்திரேலியா

    புத்தாண்டே நீ வருக
    புத்துணர்வை நீ தருக
    நித்தமும் நாம் மகிழ்ந்திருக்க
    நிம்மதியை நீ தருக
    சொந்தம் எலாம் சேர்ந்திருக்க
    சுப ஆண்டாய் நீவருக
    எம்தமிழர் வாழ்வில் என்றும்
    இன்பம் பொங்க நீவருக

    வாருங்கள் என அழைத்து
    வரும் மக்கள் வரவேற்கும்
    சீர் நிறைந்த நாட்டிலிப்போ
    சீர் அழிந்து நிற்கிறது
    யார் வருவார் சீர்திருத்த
    எனும் நிலையே இருக்கிறது
    நீ வந்து புத்தாண்டே
    நிலை திருத்தி வைத்துவிடு

    ஆட்சி பீடம் ஏறுகின்றார்
    அறம் வெறுத்து ஒதுக்குகிறார்
    ஆட்சி பீடம் அமரச்செய்தார்
    அல்லல் பட்டே உழலுகிறார்
    அறம் வெறுத்து நிற்பவர்கள்
    அறம் பற்றி உணர்வதற்கு
    திறல் உடைய மருந்துடனே
    நீ வருவாய் புத்தாண்டே

    மதம் என்னும் பெயராலும்
    இனம் என்னும் பெயராலும்
    மனித உயிர் மாய்க்கின்ற
    மாண்பற்ற செயல் ஆற்றும்
    ஈனத் தனம் மிக்கோர்க்கு
    இரக்கம் பற்றி உணர்த்துதற்கு
    இரண்டு ஆயிரத்து பத்தொன்பதே
    எழுந்து வா எழுச்சியுடன்

    நல்ல வல்ல தலைவர்கள்
    நமை விட்டுச் சென்றுவிட்டார்
    நல்ல பல செய்திவந்தும்
    நம்மில் பலர் திருந்தவில்லை
    சொல்ல வல்ல வாழ்க்கையினை
    எல்லோரும் வாழ்ந்து நிற்க
    வல்லதொரு ஆண்டாக
    மலர்ந்து விடு புத்தாண்டே

    Share
  • பெரும் பேறாய் போற்றுகின்றோம் !

    மகாதேவஐயர் ஜெயராமசர்மா … மெல்பேண்… அவுஸ்திரேலியா

    முண்டாசுக்   கவிஞனே   நீ
    மூச்சுவிட்டால் கவிதை வரும்
    தமிழ் வண்டாக நீயிருந்து
    தமிழ் பரப்பி நின்றாயே
    அமிழ் துண்டாலே வருகின்ற
    அத்தனையும் வரும் என்று
    தமிழ் உண்டுமே பார்க்கும்படி
    தரணிக்கே உரைத்து நின்றாய்

    ஏழ்மையிலே நீ   இருந்தும்
    இன் தமிழை முதலாக்கி
    தோள் வலிமை காட்டிநின்று
    துணிவுடனே உலவி வந்தாய்
    வாய்மை கொண்டு  நீயுரைத்த
    வரமான வார்த்தை எல்லாம்
    மக்களது  மனம் உறையின்
    வாழ்வு வளம் ஆகிடுமே

    அடிமை  எனும்  மனப்பாங்கை
    அழித்துவிட  வேண்டும் என்றாய்
    அல்லல்  தரும்  சாதியினை
    தொல்லையென  நீ  மொழிந்தாய்
    பெண்மைதனை  சக்தி  என்று
    பெருங்குரலில் நீ  மொழிந்தாய்
    பெரும் புலவா உனையென்றும்
    பெரும்  பேறாய் போற்றுகின்றோம்

     

    Share
  • வளங்கொடுக்கும் வாழ்விலென்றும்

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா … மெல்பேண் … அவுஸ்திரேலியா

    பார்வையினை இழந்தவர்கள் பலபேர்கள் இருக்கின்றார்
         வாய்பேச இயலாமல் வகைவகையாய் இருக்கின்றார்
    கையிழந்து காலிழந்து பலரிப்போ இருக்கின்றார்
         கருத்தளவில் அவர்களெல்லாம் கனதியுடன் வாழுகிறார்

    குறைபாடு இல்லாமல் பிறந்தவர்கள் யாவருமே
         குறைபாடு உடையாரை குறையுடனே நோக்குகிறார்
    குறையுடனே பிறந்துவிட்டோம் எனவெண்ணும் குறையுடையார்
        குறைபற்றி நினையாமல் நிறைவுநோக்கி நகர்கின்றார்

    வலது குறைந்தவர்கள் எனும்வர்க்கம் இப்போது
       மாற்றுத் திறனாளிகளாய் மலர்ந்துமே நிற்கிறது
    நிலம்மீது வந்து பிறந்துவிட்ட அனைவருமே
       நலம்பற்றி எண்ணிவிட்டால் நல்வாழ்வு அமையுமன்றோ

    புலனிழந்து விட்டுவிட்டோம் எனவெண்ணி இருக்காமல்
       புலனுடையார் ஆற்றுகின்ற அத்தனையும் ஆற்றுகிறார்
    நலந்திகழும் எண்ணமதை நாளுமவர் மனமிருத்தி

        புலனுடையார் வியந்தேற்ற பொறுப்புடனே வாழுகிறார்

    குறைவந்து விட்டதென மறைந்துமவர் நிற்காமல்
        குறையுடனே துணிந்திறங்கி குவலயத்தில் வாழுகிறார்
    குறையில்லா வகையினிலே பிறந்துவிட்ட  நிலையினிலும்
         கறையுடைய மனத்தினராய் வாழுதலே குறையன்றோ

    மாற்றுத் திறனாளிகளாய் மலர்ந்துநிற்கும் மாந்தர்தமை
         மாறாத மனமுடைய மாந்தரெலாம் மனமிருத்தி
    மாசுநிறை மனமதனில் மாசுதனை அகற்றிநின்றால்
        மாற்றமது வந்துநின்று வளங்கொடுக்கும் வாழ்விலென்றும்

    Share
  • பாடம் தரும் நிலவு

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா…. மெல்பேண் .. அவுஸ்திரேலியா 

    வானமீதில் நீந்தியோடும் வண்ணநிலாவே – உன்
    வடிவழகைப் பாடாத கவிஞரில்லையே
    நானுமுன்னைப் பாடவெண்ணும் ஆசையினாலே  – இங்கு
    பாடுகிறேன் பால்நிலவே நின்றுகேட்டிடு !

    உண்ணமறுக்கும் குழந்தைக் கெல்லாம் உன்னைக்காட்டியே – இங்கு
    உணவையூட்டி உளம்மகிழ்வார் உலகில்பலருமே
    விண்ணில்நீயும் ஓடியோடி விந்தை காட்டுவாய் – அதை
    வியந்துவியந்து பிள்ளைபார்த்து விரும்பி மகிழ்ந்திடும் !

    பூரணையாய் வந்துநீயும் பொலிந்து விளங்குவாய் – அதை
    பூரிப்போடு பலரும்பார்த்து உளம் மகிழுவார்
    காதலர்க்குக் களிப்பையூட்ட களத்தில் இறங்குவாய் – அதை
    கவிதையிலே பலகவிஞர் கண்டு வாழ்த்துவார் !

    உன்வரவை ஆவலோடு உலகம் நோக்கிடும் – இங்கு
    உன்வரவால் பலரும்வாழ்வில் உளம் மகிழுவார்
    மின்மினிகள் வானில்சூழ விரைந்து ஓடுவாய் – நாளும்
    உன்னொளியால் உலகைநாளும் உவகை யூட்டுவாய் !

    இறைவனது தலையின் மீது இருக்கிறாயென – இங்கு
    இந்துமதம் சொல்லியுன்னை உயர்த்தி நிற்குது
    குறையுடைய நிலவேயுன்னை நிறைவு படுத்தவே – நாளும்
    இறைவன் உன்னை தன்னிடத்து ஏற்றுக்கொண்டனன் !

    மதியைப்பற்றி பலகதைகள் மதங்கள் சொல்லிடும் – ஆனால்
    மதியைப்பற்றி யோசித்தால் நம்மதி தெளிந்திடும்
    பாதிநாளில் மதியின்வாழ்வு இருண்டு போயிடும் – ஆனால்
    மீதிநாளை வெளிச்சமாக்கி மதி கொணர்ந்திடும் !

    உயர்வுதாழ்வு உலகவாழ்வில் இயற்கை என்பதை – இங்கு
    உணர்த்திநிற்கும் செயலைநிலவே தெளிவாய் காட்டுது
    வெளிச்சம் கொடுக்கநாளும் நிலவு விண்ணில்வருகுது – ஆனால்
    வெளியில் குறையைக் காட்டிக்கொள்ள நிலவும்விரும்புது !

    கூடுகின்ற காதலர்க்கு குளிர்ச்சி  கொடுக்குது    – இங்கு
    வாடுகின்ற காதலர்க்கு வரட்சி காட்டுது
    நிலவுஅது வானமீது தவழ்ந்து போகுது – ஆனால்
    மனிதமனம் விதம்விதமாய் மாய்ந்து போகுது !

    மனதில்மகிழ்ச்சி மலரும்போது நிலைவை வாழ்த்துவோம்  – இங்கு
    மனமகிழ்ச்சி தொலையும்போது நிலைவைத் தூற்றுவோம்
    நிலவுஎன்றும் வான்வழியாய் தவழ்ந்து போகுமே – அது
    கவலைகொண்டு போவதைநாம் காணமுடியுமா !

    துன்பமின்ப மெல்லாமே சுழலும் சக்கரம் – அதை
    இன்பமுடன் ஏற்றுக்கொண்டால் எமக்கு இன்பமே
    தேய்ந்து வளர்கின்றபாதை நிலவின் பாதையே – அதை
    ஆய்ந்து பார்த்தால் மனிதவாழ்வில் அமைதிதோன்றுமே !

    இருட்டும்வரும்  வெளிச்சம்வரும் எனவுணர்த்திட – இங்கு
    எல்லோர்க்கு பாடமதை நிலவு நடத்துது
    மனிதரெலாம்  நிலவைப்பார்த்து மதியைத்தீட்டுவோம் – இங்கு
    நிலவின் பாடம் நிதமெமக்கு வழியைக்காட்டிடும் !

     

    Share
  • அர்த்தமே இல்லையே !

     

    மகாதேவஐயர் ஜெயராமசர்மா … மெல்பேண்… அவுஸ்திரேலியா

    கோடி கோடியாய் பணம் இருந்தாலும்
    மாடி மாடியாய் மனை குவிந்தாலும்
    வாடி நிற்பவர் மனம் அறியாதவர்
    வாழும் வாழ்விலே அர்த்தமே இல்லையே

    கோவில் கோவிலாய் சென்றுமே வணங்கினும்
    குடம் குடமாய் பாலினைக் கொடுக்கினும்
    வாய் இல்லாத சீவனை வதைப்பவர்
    வாழும் வாழ்வினை மனதுதான் ஏற்குமா

    வாதம் வாதமாய் மன்றிலே நிகழ்த்தியே
    வழக்கை பணத்துக்காய் நீட்டியே நிற்பவர்
    நீதி தேவனின் நெஞ்சிலே மிதிப்பவர்
    நிம்மதி என்பது வாழ்வினில் நிலைக்குமா

    பட்டம் பட்டமாய் பெற்றுமே நிற்பவர்
    பதவி பெற்றுமே உயர்நிலை வகிப்பவர்
    பெற்ற தாய்தந்தை பேணிடா நின்றிடின்
    கற்ற கல்வியும் காறி உமுழுமே

    Share
  • காண அருள் தாமுருகா !

     

    மகாதேவஐயர் ஜெயராமசர்மா
    மெல்பேண் .. அவுஸ்திரேலியா

    தேவரை வதைத்த சூரர்
    திருந்திடச் செய்த வேலா
    பூவுலகு எங்கும் அசுரர்
    புரிகின்ற கொடுமை தன்னால்
    மேவிய துயரம் கொண்டு
    விக்கித்து நிற்கும் மக்கள்
    ஓலங்கள் போக நீயும்
    ஓடியே வருவாய் ஐயா !

    உபதேசம் அளித்த குருவே
    உலகுளோர் துயரம் பார்நீ
    நிலையான அறத்தை மறந்து
    நிற்கின்றார் மனதை மாற்று
    விலைபேசும் நிலையில் உள்ளார்
    வெற்றிவேல் என்றிட செய்வாய்
    குலையாத ஞானம் தன்னை
    குமராநீ கொடுக்க வேண்டும் !

    காமம் நிறை மக்களெலாம்
    காமம் அற்ற கந்தனுக்கு
    கல்யாணம் செய்து வைத்து
    களிப் பெய்தி நின்றிடுவர்
    சேமம் உற வாழ்வதற்கு
    சேவல் கொடி வேலவனார்
    பாதமதை பற்றி நின்று
    பாடி நிற்போம் கவசந்தனை

    வள்ளி தெய்வ யானையுடன்
    காட்சி தரும் திருமுருகா
    உள்ள மெலாம் உன்நினைவை
    இருத்தி விடு திருமுருகா
    கள்ளம் நிறை எண்ணமெலாம்
    கழன்றோடச் செய் முருகா
    கால மெலாம் திருமுகத்தை
    காண அருள் தாமுருகா !

    Share