வளங்கொடுக்கும் வாழ்விலென்றும்

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா … மெல்பேண் … அவுஸ்திரேலியா

பார்வையினை இழந்தவர்கள் பலபேர்கள் இருக்கின்றார்
     வாய்பேச இயலாமல் வகைவகையாய் இருக்கின்றார்
கையிழந்து காலிழந்து பலரிப்போ இருக்கின்றார்
     கருத்தளவில் அவர்களெல்லாம் கனதியுடன் வாழுகிறார்

குறைபாடு இல்லாமல் பிறந்தவர்கள் யாவருமே
     குறைபாடு உடையாரை குறையுடனே நோக்குகிறார்
குறையுடனே பிறந்துவிட்டோம் எனவெண்ணும் குறையுடையார்
    குறைபற்றி நினையாமல் நிறைவுநோக்கி நகர்கின்றார்

வலது குறைந்தவர்கள் எனும்வர்க்கம் இப்போது
   மாற்றுத் திறனாளிகளாய் மலர்ந்துமே நிற்கிறது
நிலம்மீது வந்து பிறந்துவிட்ட அனைவருமே
   நலம்பற்றி எண்ணிவிட்டால் நல்வாழ்வு அமையுமன்றோ

புலனிழந்து விட்டுவிட்டோம் எனவெண்ணி இருக்காமல்
   புலனுடையார் ஆற்றுகின்ற அத்தனையும் ஆற்றுகிறார்
நலந்திகழும் எண்ணமதை நாளுமவர் மனமிருத்தி

    புலனுடையார் வியந்தேற்ற பொறுப்புடனே வாழுகிறார்

குறைவந்து விட்டதென மறைந்துமவர் நிற்காமல்
    குறையுடனே துணிந்திறங்கி குவலயத்தில் வாழுகிறார்
குறையில்லா வகையினிலே பிறந்துவிட்ட  நிலையினிலும்
     கறையுடைய மனத்தினராய் வாழுதலே குறையன்றோ

மாற்றுத் திறனாளிகளாய் மலர்ந்துநிற்கும் மாந்தர்தமை
     மாறாத மனமுடைய மாந்தரெலாம் மனமிருத்தி
மாசுநிறை மனமதனில் மாசுதனை அகற்றிநின்றால்
    மாற்றமது வந்துநின்று வளங்கொடுக்கும் வாழ்விலென்றும்

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க