Category: ஆய்வுக் கட்டுரைகள்

ஆய்வுக் கட்டுரைகள்

  • நந்திக்கலம்பகத்தில் அறத்தொடுநிற்றல்

    -க.கவின்பிரியா                                     

    முன்னுரை    

    அன்பின் ஐந்திணை சார்ந்த களவுத் துறைகளுள் அறத்தொடு நிற்றல் தனிப்பெருஞ் சிறப்புடையதாகும். கற்புநெறி தவறாது, களவொழுக்கத்தை முறையாகப் பெற்றோரிடம் வெளிப்படுத்துதல் என்பது இத்துறையின் பொருள். தலைவி தலைவனுடனான காதலை, தோழிக்குக் கூறி அறத்தொடு நிற்பாள். பின்னா்த் தோழி தன் வளா்ப்புத் தாயாகிய செவிலிக்கு அறத்தொடு நிற்பாள். செவிலி தலைவியின் தாயான நற்றாய்க்கு அறத்தொடு நிற்பாள். நற்றாய் தலைவியின் தந்தைக்கும், உடன்பிறந்தோர்க்கும்  வெளிப்படையாய்க் கூறாமல் அவா்கள் அறிந்து கொள்ளுமாறு குறிப்பாகப் புலப்படுத்துவாள். இதனை,

    ”தந்தையும் தன்னையும் முன்னத்தின் உணா்ப” (தொல்.1083) எனத் தொல்காப்பிய நூற்பா குறிப்பிடும். தலைவி, தோழி, செவிலி, நற்றாய் ஆகிய நால்வரும் பெண்பாலார். அவா்கள் ஒருவருக்கொருவா் தம் உள்ளத்து உணா்வுகளை வெளிப்படுத்திக் கொள்வதில் சிக்கல் இல்லை. இருப்பினும் வெளிப்படையாகக் கூறாமல் குறிப்பாக வெளிப்படுத்துவா். தந்தையும் அண்ணனும் நெருங்கிய உறவினரே ஆயினும் அவா்கள் ஆண்பாலார். ஓா் இளம்பெண்ணின் களவொழுக்கத்தினைக் குறிப்பினால் அவா்கள் உணருமாறு செய்தலே நல்லது என்ற நெறி சாலச்சிறந்தது.

    அறத்தொடு நிற்றல்

    தலைவியின் களவொழுக்கம் பற்றி அலா் எழும்போதும், அவளின் உடற்கண் நேரும் மாற்றங்களுக்குக் காரணம் அறியாமல் அன்னை வேலனை வேண்டி வெறியாட்டு நிகழ்த்தும்போதும், இற்செறிப்பு நிகழும்போதும், வேற்றுவரைவுக்கான ஏற்பாடுகள் நிகழும்போதும், தலைவனின் வரைவு மறுக்கப்படும்போதும் தலைவியின் களவொழுக்கத்தினை மறைத்து வைக்காமல் வெளிப்படுத்துவதே அறனெனக் கருதித் தலைவி தோழியிடம் தன்னுடைய காதலை வெளிப்படுத்துவாள். தோழி செவிலியிடம் கூறுவாள். செவிலி நற்றாயிடம் வெளிப்படுத்துவாள். நற்றாய் தலைவியின் தந்தை மற்றும் தமையனுக்கும் வெளிப்படுத்துவாள்

    நந்திக்கலம்பகத்தில் அறத்தொடு நிற்றல்

    அகமும், புறமும் கலந்துவரப் படைக்கப்படும் கலம்பக இலக்கியமாக நந்திக்கலம்பகம் அகப்பொருளும், புறப்பொருளும் கலந்து இலக்கிய இன்பம் தருகின்றது. நந்திக்கலம்பகத்தில் அகத்துறைகளுள் ஒன்றான அறத்தொடு நிற்றல் என்னும் துறையில் மூன்று பாடல்கள் அமைந்தள்ளன. தோழி செவிலிக்கு அறத்தொடு நிற்பதாக இரண்டு பாடல்களும், செவிலி நற்றாய்க்கு அறத்தொடு நிற்பதாக ஒரு பாடலும் அமைந்துள்ளது.

    தோழி அறத்தொடு நிற்றல்

    தலைவி பிறா் அறியாதவாறு தலைவன்பால் காதல்கொண்டு அவனைச் சந்திப்பாள். தன்னுடைய காதல் ஒழுக்கத்தை வெளிப்படையாக வெளிப்படுத்தமாட்டாள். தோழியானவள் தலைவியிடம் காணப்படும் மாற்றங்களை வைத்தே கண்டறிவாள். பிறகு தலைவி தோழியிடம் தன் காதலைப் பற்றிக் கூறுவாள். தலைவி அறத்தொடு நிற்பதாக நந்திக் கலம்பகத்தில் பாடல் இடம்பெறவில்லை.

    தோழி செவிலிக்குத் தலைவியின் களவொழுக்கத்தினைக் கூறுவதாக பின்வரும் பாடல் இடம்பெற்றுள்ளது.

    ”புனத்து நின்ற வேங்கைமேல் புகைந்தெழுந்த ஆனையின்
    சினத்தை அன்றொழித்தகைச் சிலைக்கை வீரா் தீரமோ
    மனத்துள் நின்ற வெஞ்சினம் மலைத்தல் கண்ட தீா்ந்தமான்
    வனத்தகன்ற தீர்ந்ததோ நந்தி மல்லை ஆா்ப்பதே” (நந்தி.34)

    தலைவி தலைவன் மீது கொண்ட காதலால் உடல் இளைத்து காதல் நோயுற்றாள். இதைக்கண்டு செவிலி தோழியிடம் தலைவியின் நிலை குறித்துக் கேட்கிறாள். வெறியாட்டு நிகழ்த்த எண்ணுகிறாள் செவிலி. தோழிக்கு தலைவியின் நோயின் காரணம் நன்கு தெரிந்திருந்தாலும் அதை எவ்வாறு செவிலியிடம் உரைப்பது? வெளிப்படையாகக் கூறவும் முடியாது. கூறாவிட்டாலும் தலைவியின் நோய் தீராது. கூறினாலும் தலைவியின் தாய் தந்தையரால் தலைவிக்கும், தலைவனுக்கும் ஊறு நோ்ந்தால் என்ன செய்வது? என்று பலவாறு சிந்தித்துக் கொண்டிருக்கும் வேளையில் மாமல்லபுரத்தின் நான்கு பக்கங்களிலும் பேரிரைச்சல் ஒலி வருவதை உணா்ந்து, அந்த இரைச்சலை வைத்தே தலைவியின் களவொழுக்கத்தைச் செவிலிக்கு உணா்த்த முற்படுகிறாள்.

    நாங்கள் தினைப்புனங் காக்கச் சென்றிருந்த வேளையில் அங்கு வேங்கைமரத்தினடியில் பரணமைத்திருந்தோம். அங்கு மதங் கொண்ட யானை ஒன்று பேரிரைச்சல் இட்டுக்கொண்டு எங்களை நோக்கி வந்தது. நாங்கள் அஞ்சி நடுங்கி நின்றோம். அந்த சமயம் முருகனைப் போன்ற இளங்குமரன் வில்லேந்தி யானையை நோக்கி அம்பு எய்தினான். எங்களைப் பார்த்து அஞ்சாதீா்கள் என்று ஆறுதல் மொழி கூறினான். அவனைப் பார்த்த தலைவி வியந்து நின்றாள். அன்று வேங்கை மரத்தை நோக்கி வெகுண்ட யானையை அம்பெய்து வென்ற வீரா் இங்கே வர அவரைக் கண்டு ஊா் மக்கள் இரைச்சலிடுகின்றனரோ? அல்லது நந்திமன்னனின் பட்டத்து யானை கட்டுத்தறியை  முறித்துக் கொண்டு சங்கிலியை உடைத்தெறிந்து ஓடிவிட்டதோ? அதைப்பிடிப்பதற்கு வீரா்கள் இரைச்சலிடுகின்றனரோ? தெரியவில்லையே? எந்தக் காரணத்தினால் ஒலி உண்டாயிற்றோ? என்று இவ்வாறு கூறி தலைவியின் காதலைச் செவிலிக்கு அறத்தொடு நிற்கிறாள்.

    இதே பொருண்மையில், யானையை அம்பெய்து தலைவியைக் காத்ததாகப் பின்வரும் குறிஞ்சிப்பாடலும் உணா்த்துகின்றது.

    ”மையல் வேழம்
    அண்ணல் யானை அணிமுகத்தழுத்தலின்
    புண்ணுமிழ் குருதி முனம்பாய்ந்தழிதரம் ”  (குறிஞ்சி.165-174)

    தலைவியின் காதல் நோய்க்கு நந்திவா்மனே காரணம் எனவும், தலைவியின் நோய்தீர அவனுக்கே மணம் செய்தல் அறமாகும் எனத் தோழி செவிலித்தாய்க்கு அறத்தொடு நிற்பதாக பின்வரும் பாடல் அமைந்துள்ளது.

    ”துயக்குவித்தான் துயில் வாங்குவித்தான் துயில் வித்திவனை
    வயக்குவித்தானுள்ளம் வஞ்சனை யான் மலா்க் காவகத்து
    முயக்குவித்தான் துகில் வாங்குவித்தான் முனம் நின்றிவளை
    மயக்குவித்தான் மானோதயனென்று வட்டிப்பனே”    (நந்தி.63)

    தலைவி உண்ணாமல், உறங்காமல் சோர்வாகக் காணப்படுவதைக் கண்டு செவிலி தோழியிடம் வினவ, நந்திமன்னன் தலைவியின் நெஞ்சில் குடிகொண்டான்; சோர்வை ஏற்படுத்தினான்;  தூக்கத்தை விலக்கினான். பின் தூங்கச்செய்து கனவில் தோன்றி இவளைத் தன் வசமாக்கித் தன் அன்பிற்கு உாியவளாக்கி, மலர்ச்சோலையில் தன்னைத் தழுவுமாறு செய்து அவளது ஆடைகளை நெகிழச் செய்தான். தலைவி உணா்வினை இழந்து மயக்கங்கொள்ளுமாறு செய்தான் என்பதை நான் உறுதியாகக் கூறுவேன். அவனுக்கே தலைவியை மணம் முடித்தல் நலமாகும். இல்லையேல் தலைவி நெடுநாட்கள் உயிர்வாழாள் என்று தோழி செவிலிக்கு அறத்தொடு நிற்கிறாள்.

    இக்கருத்தொடொப்பப் பின்வரும் திருக்கோவையார் பாடல் அமைந்துள்ளது.

    ”சினக்கலியானை கடிந்தார் ஒருவா் செவ்வாய்ப்பசிய
    புனக்கலியும் கடியும் வரைச் சாரற் பொருப்பிடத்தே” (திரு.293) 

    செவிலி நற்றாய்க்கு அறத்தொடு நிற்றல்

    தலைவியின் களவொழுக்கத்தைத் தோழி செவிலிக்குக் கூற, செவிலி நற்றாய்க்கு (தலைவியின் தாய்க்கு) கூறுவதாக நந்திக்கலம்பகத்தில் பின்வரும் பாடல் அமைந்துள்ளது.

    பெண்களில் சிறந்த தாயே! தெள்ளாறு எனும் இடத்தில் பகைவரை வென்று சினம் தணிந்த நந்திவா்மனுக்கே என் புதல்வியாகிய நம் தலைவி தன் வெண்ணிறச் சங்குகளான வளையல்களை இழந்து வெறுங்கையளாய் நின்றாள் என்று செவிலி நற்றாய்க்குக் கூறுவதாகப் பின்வரும் பாடல் அமைந்துள்ளது.

    ”வேண்டார் எண்ணும் வேந்தா் பிராற்கே மெய்யன்பு
    கொண்டாள் நங்காய் அன்றிவள் என்றால் பொல்லாதோ
    மூண்டார் தெள்ளாற் றுள்ளே மூழ்க முனிவாறி
    மீண்டான் நந்திக்கு என்மகள் தோற்கும் வெண்சங்கே” (நந்தி.71)

    பகைவா்கள் நினைந்து அச்சம் கொள்கின்ற நந்திவா்மனிடம் உள்ளன்பு கொண்டிருக்கிறாள் என்று கூறினால் குற்றம் ஆகுமோ? ஆகாது. உண்மையைக் கூறுவது தவறில்லை. ஆதலால் நந்திவா்மனுக்கே விரைவில் தலைவியை மணம் செய்வித்தலே நன்மையாகும் என்று செவிலி நற்றாய்க்கு அறத்தொடு நிற்கிறாள். 

    முடிவுரை

    தலைவியின் காதலை வெளிப்படையாக வெளிப்படுத்தாமல் குறிப்பாக வெளிப்படுத்தும் பண்பு சிறந்ததாகும். தலைவியின் உடல்நிலை மாற்றங்களுக்குத் தலைவனே காரணம் என்பதை அறிந்தும் அது கருப்பொருளோடு குறிப்பாக வெளிப்படுத்தப்படுவதை அறிய முடிகிறது.

    *****

    துணைநூல்:

    நந்திக்கலம்பகம் – மர்ரே எஸ். ராஜம் அவர்கள் 1960-இல் வெளியிட்ட நூலின் மறுபதிப்பு- நியூசெஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட்.

    *****

    கட்டுரையாளர் – முழுநேர முனைவா்பட்ட ஆய்வாளா்
    தமிழ்த்துறை,  அரசு கலைக் கல்லூரி (தன்னாட்சி)
    சேலம் -7.
    Cell:9442193166

     

    Share
  • பழந்தமிழக வரலாறு – 9

    கனியன்பாலன்

    அ.மாமூலனாரும் செருப்பாழிப்போரும் செங்குட்டுவனும்

         .

           தென்னிந்தியக் கல்வெட்டுகள்(South Indian Inscription) என்கிற நூல்  தொகுதிகளை மிகக் கவனமாக தொகுத்தளித்த புகழ் பெற்ற வரலாற்று அறிஞர் உல்ட்ச்(Hultzsch)  என்பவர், முதலாம் கயவாகு மன்னனும், சேரன் செங்குட்டுவனும் ஒரே காலத்தவர் என்கிற கருத்தை ஏற்கவில்லை(1). மேலும் மகாவம்சம் குறிப்பிடும் கயவாகுவின் காலம், அந்தக் கயவாகு சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்காக நடத்திய விழாவில் கலந்து கொண்டான் என்கிற செய்தி ஆகிய இரண்டுமே அடிப்படை வரலாற்றுச் சான்றுகள் அற்றவை. அவை வரலாற்றுக்கு பொருந்தாதவை. ஆகவே, அவைகளைக் கொண்டு தமிழக வரலாற்றின் காலங்களைக் கணிப்பது முறையான காலக்கணிப்பாக இருக்காது. ஆகவே இந்தியாவின் மேல் அலெக்சாந்தர் படையெடுப்பு நடத்திய காலத்தையும், மாமூலனார் பாடல்களில் குறிப்பிடப்பட்டுள்ள மகதத்தில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களையும், அதன்பின் தமிழகத்தின்மேல் மேற்கொள்ளப்பட்ட மௌரியப் படையெடுப்புக்காலத்தையும், அசோகன் கல்வெட்டையும் கணக்கில்கொண்டு, நமது தமிழக வரலாற்றுக்கான காலம் கணிக்கப்பட்டு உறுதிப்படுத்தப் படவேண்டும்.  இவைகளின் மூலம் மட்டுமே  நமது தமிழக வரலாறு உலக வரலாற்றுக் காலத்தோடு இணைக்கப்பட்டு, ஒரு முறையான, நிலையான, உறுதியான காலவரையறையைக் கொண்ட வரலாறாக ஆகும்.

    பழந்தமிழக வரலாற்றில் அசோகன் கல்வெட்டும் சம்பைக் கல்வெட்டும்:

           அதியமான் திருக்கோவிலூர்ப் போரில் மலையமான் காரியை வென்ற போது, பரணர் அதியமானைப் பாடியுள்ளதாக ஔவையார் குறிப்பிடுகிறார். ஆகவே, பரணர் அதியமான் காலத்தவர் ஆகிறார். பரணர் சேரன் செங்குட்டுவனை, 5ஆம் பதிற்றுப்பத்திலும், புறம்-212, 369;  அகம்-376 ஆகிய மூன்று பாடல்களிலும் பாடியுள்ளார். ஆகவே, சேரன் செங்குட்டுவன் பரணர் காலத்தவனாகிறான். இவைகளின் காரணமாக சேரன் செங்குட்டுவன், அதியமான், பரணர் ஆகியோர் சம காலத்தவர் ஆகின்றனர்.

         அதியமானின் சம்பைக் கல்வெட்டில் உள்ள “சதியபுதோ” என்கிற சொல்லும் அசோகர் கல்வெட்டில் உள்ள “சதியபுதோ” என்கிற சொல்லும் ஒரே மாதிரி எழுதப்பட்டு, இரண்டும் அதியமான்களை அவர்களது பரம்பரையைத் தான் குறிப்பிடுகிறது. பண்டைய எழுத்தியல்- கல்வெட்டியல்(palaeography – orthography) படி, அசோகரின் கல்வெட்டில் இருக்கும் எழுத்துக்கள் போன்றே சம்பை கல்வெட்டிலும் இருப்பது என்பது இரண்டும் ஒரே காலத்தைச் சேர்ந்தவை என்பதை உறுதி செய்கிறது.  அசோகர் கல்வெட்டின் காலம் கி.மு.256 ஆகும். ஆகவே சம்பைக் கல்வெட்டின் காலம் தொல்லியல் அறிஞர் நடன காசிநாதன் அவர்களின் கருத்துப்படி கி.மு. 270-230 ஆகும். அதாவது அசோகன் கல்வெட்டுக்குச் சில வருடங்கள் முன்பின் என்பதே அதன் கருத்தாகும்(2). நாம் அதனை கி.மு. 3ஆம் நூற்றாண்டு எனலாம். அசோகன் கல்வெட்டு, சம்பை கல்வெட்டு ஆகியவற்றின் காலம் கி.மு. 3ஆம் நூற்றாண்டு என்பதால் சம்பைக் கல்வெட்டை வெட்டிய அதியமான், அதியமானைப்பாடிய பரணர், பரணர் பாடிய சேரன் செங்குட்டுவன் ஆகிய மூவரின் காலமும் கி.மு. 3ஆம் நூற்றாண்டு என உறுதிப்படுத்தலாம்.

         ‘பழந்தமிழ்ச்சமுதாயமும் வரலாறும்’ என்ற எனது நூலில் அசோகன் கல்வெட்டு, சம்பை கல்வெட்டு ஆகியன போக, புகளூர் கல்வெட்டு; மாமூலனாரின் நந்தர்கள், மௌரியர்கள், சேர, சோழ வேந்தர்கள் குறித்த பாடல்கள்; அதியமான், சேரன் செங்குட்டுவன் குறித்த பரணரின் பாடல்கள்; பாலைபாடிய பெருங்கடுங்கோ, மாமூலனார் ஆகியவர்களின் நன்னன் குறித்த பாடல்கள்; தலைவடிவப் பெருவழுதி நாணயங்கள்; மாக்கோதை, குட்டுவன் கோதை நாணயங்கள்; ஆகியவைகளைக் கொண்டு செங்குட்டுவனின் காலம் கி. மு. 3ஆம் நூற்றாண்டு என்பது பல தளங்களில், பல கோணங்களில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது(3).

    மகாவம்ச நூலும் செங்குட்டுவனின் காலமும்:

         வில்கெம் கெய்கர் அவர்களின் மகாவம்ச நூலின்படி புத்தர் இறந்தபின் 248 ஆண்டுகள் கழித்து அசோகர் முடிசூட்டிக்கொண்டார்(4). மகாவம்ச நூலின் ஆண்டுப்பட்டியல் கி.மு. 483இல் இருந்து தொடங்குகிறது. ஆனால் கி.மு. 483 என்பது எந்தவிதத்தில் இந்திய அல்லது உலக வரலாற்றுக் காலவரையரையோடு இணைக்கப்பட்டது என்பதற்கான அடிப்படைச் சான்றுகள் எதுவும் அந்த நூலில் தரப்படவில்லை. அந்த நூல் தந்துள்ள மன்னர்களுடைய ஆட்சி ஆண்டுகளை அடிப்படையாகக் கொண்டுதான் கயவாகுவின் காலம் சொல்லப்பட்டுள்ளது. கி.மு. 483இல் தொடங்கும் பட்டியல் கி.பி. 352இல் முடிகிறது. அநுராதபுரத்தில் கிட்டத்தட்ட சுமார் 835 ஆண்டுகள் ஆட்சி செய்த 61 மன்னர்களை அது குறிப்பிடுகிறது. இந்த ஆண்டுகள் ஆரம்பம் முதல் இடையில் கூட உலக, இந்திய காலவரையரைகளோடு இணைக்கப்படவில்லை-(5).

         புகழ்பெற்ற வரலாற்று ஆசிரியர் வின்சுடன் சுமித் அவர்கள் கி.மு. 483 முதல் கி.பி. 124 வரையான, 607 வருடகால மகாவம்ச நூலின் வரலாற்றை,  அதன் ஆண்டுகளை முழுமையாக நிராகரித்துள்ளார்.  தேவநாம்பியதீச என்கிற மன்னன் சார்ந்த 10 அத்தியாயங்களை “அபத்தங்களால் முடையப்பட்ட வேலைப்பாடு” என்கிறார் அவர்-(6). அதனால்தான் புகழ் பெற்ற வரலாற்று அறிஞர் கூல்ட்ச்(Hultzsch) அவர்கள் சேரன் செங்குட்டுவன், கயவாகுவின் காலத்தைச் சேர்ந்தவன் என்பதை ஏற்றுக்கொள்ளவில்லை. இந்நூல், எந்த வெளிநாடும் செல்லாத புத்தர் மூன்றுமுறை இலங்கை வந்ததாகக் கதை சொல்லுகிறது. தனது 99 சகோதரர்களைக்கொன்றபின் அசோகர் ஆட்சிக்கு வந்தார் என்கிறது-(7). புத்தசமயத்துக்கு மாறுவதற்கு முன் அசோகர் தீயவராக, கொடூரமானவராக இருந்தார் என அந்நூல் சொல்வதற்கு வரலாற்றுச் சான்றுகள் எதுவும் இல்லை என்கிறார் வின்சுடன் சுமித்(8).

         பல அறிஞர்களின் கருத்துப்படி அசோகர் இலங்கை பற்றித் தனது கல்வெட்டில் எதுவும் சொல்லவில்லை. அசோகருக்கு மகிந்த, சங்கமித்ர என்கிற மகனோ, மகளோ இருக்கவில்லை. அவர்கள் இலங்கை போகவும் இல்லை. மகிந்த அவருடைய தம்பி ஆவார். அவர்தான்  தமிழகம் வந்தார். இலங்கை போனார். தமிழ்நாட்டில் இருந்துதான் புத்தமத நிறுவனங்கள் இலங்கைக்குப் பரவின. இவை வின்சுடன் சுமித் அவர்கள் தனது அசோகர் என்கிற நூலில் தரும் தரவுகளாகும்-(9). மகாவம்ச நூல் என்பது பௌத்தமத நம்பிக்கையாளர்கள் ஓதுவதற்கும், நினைவில் வைத்துக் கொள்ளவும், அவர்களுக்கு இன்பமும், பரவசமும் ஊட்டவும் எழுதப்பட்டது என்கிறார் அதனை கி.பி. 6ஆம் நூற்றாண்டு வாக்கில் எழுதிய ‘மகாநாம’ என்கிற புத்த பிக்கு. அந்நூல் புத்த மடாலங்களின் அத்தகதா கதைகளையும், புத்தமத மடாலயங்களுக்கு உதவிய மன்னர்கள், அவர்களின் உதவிகள் பற்றிய தரவுகள்  முதலியனவற்றையும் கொண்ட  கி.பி. 3ஆம் நூற்றாண்டு தீபவம்ச நூலைப் புதுப்பித்து எழுதப்பட்டதாகும்-(10).

             ஆகவே எந்தவித அடிப்படைச் சான்றுகளும் இல்லாத, கி.பி. 6ஆம் நூற்றாண்டு வாக்கில், மதக் காரணங்களுக்காக எழுதப்பட்ட, இலங்கையின் பௌத்தமத நூலான மகாவம்சம், இடைச் செருகல்கள் நிறைந்த சிலப்பதிகாரக் காப்பியப் பதிகம் ஆகியவைகளைக் கொண்டு நிர்ணயிக்கப்பட்ட, சேரன் செங்குட்டுவனின்காலம் கி.பி. 2ஆம் நூற்றாண்டு என்பதைவிட, சங்க இலக்கியங்கள் தரும் அடிப்படைச் சான்றுகளைக் கொண்டும் உலக வரலாற்றுக்காலத்தோடு இணைக்கப்பட்ட, அசோகன் கல்வெட்டு, புகளூர் கல்வெட்டு, சம்பைக் கல்வெட்டு, தலைவடிவப்பெருவழுதி நாணயங்கள், மாக்கோதை, குட்டுவன் கோதை நாணயங்கள் போன்றவைகளின் காலத்தைக் கொண்டும் கணிக்கப்பட்ட சேரன் செங்குட்டுவனின் காலம் கி.மு. 3ஆம் நூற்றாண்டு என்பதே பல கோணங்களிலும் பொருந்திப்போகிறது. இரண்டு காலங்களுக்கும் இடையே கிட்டத்தட்ட 400 ஆண்டுகள் இடைவெளி இருக்கிறது என்பதையும், சங்க இலக்கியம் இயற்கையானது, நம்பத்தகுந்தது என்பதையும், பதிற்றுப்பத்து கூறும் சேர வேந்தர்களும், பிற சங்க இலக்கியங்கள் கூறும் பல தமிழக வேந்தர்களும் வரலாற்றில் இருந்தவர்கள் என்பதையும் அகழாய்வுகளும், கல்வெட்டுகளும், நாணயங்களும் இன்ன பிற தரவுகளும் உறுதி செய்துள்ளன என்பதையும் கருத்தில்கொண்டு சேரன் செங்குட்டுவனின் காலம் கி.மு. 3ஆம் நூற்றாண்டு என்பதே முறையானதாகும்.

    மாமூலனாரும் செருப்பாழிப்போரும்:

         சங்ககாலப் புலவர்களும், பாணர்களும் வேந்தன் இருக்குமிடம் சென்று, அவனை நேரடியாகப் புகழ்ந்து பாடி பரிசுகள் பெற்று வருவதே சங்ககால வழக்கமாக இருந்து வந்துள்ளது. இதனால் தங்கள் காலகட்டத்துக்கு முந்தைய புரவலர்களைப் பாடும் பழக்கம் அவர்களிடத்தில் இருக்கவில்லை. புறப் பாடல்களில் மட்டுமின்றி அகப்பாடல்களிலும் இதே நிலை தான் இருந்து வந்துள்ளது. முந்தைய காலகட்டப் புரவலர்களை மட்டுமல்ல, முந்தைய காலகட்ட நிகழ்வுகளையும் அவர்கள் பெரும்பாலும் பாடுவதில்லை. புரவலர்களை நேரடியாக அவர்களின் இடத்திற்கே சென்று சந்தித்து அவர்களிடம் நேரடியாகத் தங்கள் புகழ்ந்துரைகளைப் பாடல்களாகப் பாடிப் பரிசில்பெறுவது என்பது பாணர், புலவர்களின் மிகப் பழமையான, தொன்று தொட்டு இருந்து வருகிற ஒரு மரபாகும். அதனால் தங்கள் காலத்துக்கு  முந்தையவர்களை, இறந்து மறைந்து போன பழைய தலைமுறைப் புரவலர்களை அல்லது தலைவர்களைப் பாடும் பழக்கம் என்பது சங்ககாலப் புலவர்களிடம் இருக்கவில்லை.

            சான்றாகக் கபிலர் பாரியிடமும், ஔவையார் அதியமானிடமும், பரணர் செங்குட்டுவனிடமும், அரிசில்கிழார் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறையிடமும், நக்கீரர் தலையாலங்கானத்து செருவென்ற நெடுஞ்செழியனிடமும் நேரடியாகச் சென்று தான் பாடிப் பரிசில் பெற்றார்கள் என்பதை சங்க இலக்கியங்கள் உறுதிப்படுத்துகின்றன. பொதுவாகச் சங்க காலப் புலவர்கள் பழைய தலைமுறைப் புரவலர்களைப் பாடவில்லை என்பதற்குச் சில சான்றுகளைக் கீழே காண்போம்.

    மாமூலனார்:

          மாமூலனார் தனது இளவயதில் உதியஞ் சேரலாதனைப் பாடினார். பின் அவனது மகனான இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனைப் பாடினார். பின், இந்த நெடுஞ்சேரலாதனுடன் போரிட்ட சோழன் முதல் கரிகாலனைப் பாடினார். ஆனால் இவர் சேர வேந்தர்களில் உதியஞ்சேரலாதனுக்கு முந்தைய தலைமுறையைச் சேர்ந்த யாரையும் பாடவில்லை. தனது காலத்திய மகத நாட்டு நந்தர்களின் செல்வ வளம் குறித்துப் பாடியுள்ளார். நந்தர்களுக்குப் பின் மகத ஆட்சிக்கு வந்த மௌரியர்களின் தமிழகப் படையெடுப்பு குறித்துப் பாடியுள்ளார். மாமூலனார் காலத்தில் நடந்த நிகழ்வுகள்தான், இவர் பாடல்களின் பாடுபொருளாக இருந்தன. தனக்கு முந்தைய காலத்தைச் சேர்ந்த பண்டைய நிகழ்வுகள் குறித்து இவர் எதுவும் பாடவில்லை.

    பரணர்:

         மாமூலனார் முதியவராக இருந்த போது இளையவராக இருந்த, மிக நீண்ட காலம் வாழ்ந்த பரணர், மிக அதிகமான வரலாற்றுக் குறிப்புகளைத் தந்தவர். இவர் தனது இளவயதில் மாமூலனார் பாடிய முதல் கரிகாலனைப் பாடியுள்ளார். பின் அவனது மகனான உருவப்பஃறேர் இளஞ்சேட் சென்னியைப் பாடியுள்ளார். முதல் கரிகாலனுக்குப் பிந்தைய சேரன் செங்குட்டுவனைப் பாடியுள்ளார். ஆனால் சேரன் செங்குட்டுவனுக்கு முந்தைய மாமூலனரால் பாடப்பட்ட இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனையோ, உதியஞ்சேரலாதனையோ அவர் பாடவில்லை. அதுபோன்றே, முதல் கரிகாலனுக்கு முந்தைய சோழ வேந்தர்களான செருப்பாழி எறிந்த இளஞ்சேட்சென்னியையோ அல்லது பெரும்பூட்சென்னியையோ அவர் பாடவில்லை.

         பாண்டியர்களில் நம்பி நெடுஞ்செழியனையும் அவனுக்குப் பின் வந்த பசும்பொன் பாண்டியனையும் பாடினாரே ஒழிய அவர்களுக்கு முந்தைய  முது குடுமிப் பெருவழுதி மற்றும் கருங்கை ஒள்வாள் பெரும் பெயர் வழுதி போன்ற பாண்டிய வேந்தர்களைப் பரணர் பாடவில்லை. இவர்களைப் போன்று தான் பெரும்பாலான புலவர்கள் தங்கள் கால கட்ட நிகழ்காலப் புரவலர்களை, நிகழ்கால நிகழ்வுகளை மட்டுமே பாடியுள்ளனர். பரணர் தமது காலத்துக்குச் சற்று முன்பு நடந்த மௌரியப் படையெடுப்பு குறித்துக் கூடப் பாடவில்லை. ஆகவே பொதுவாக நிகழ்கால நிகழ்வுகளை, நிகழ்காலப் புரவலர்களை மட்டுமே சங்க காலப் புலவர்கள் பாடி உள்ளார்கள் என்பது வரலாற்றுக்கு மிகப்பெரிய அளவில் துணை செய்கிறது எனலாம். புலவர்கள் மற்றும் புரவலர்களின் காலத்தை உறுதிசெய்வதற்கு இது மிகப்பெரிய உதவியாக இருக்கிறது என்றால் அது மிகையாகாது.

    பார்வை:

    1.நீலகண்ட சாத்திரி, சோழர்கள், தமிழில் கே.வி. இராமன், புத்தகம்-1, நவம்பர்-2009, பக்: 4, 69.

    2.. TAMILS HERITAGE – NATANA KASINATHAN, APRIL-2006, PAGE: 25-30.

    3.பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும், கணியன்பாலன், எதிர்வெளியீடு, சூன்-2016, பக்: 317-329

    4.மகாவம்ச-சிங்களர்கதை, வில்கெம் கெய்கர், தமிழில் எசு.பொ. அவர்கள், அக்டோபர்-2009, பக்:36.

    5.மகாவம்ச-சிங்களர்கதை, வில்கெம் கெய்கர், தமிழில் எசு.பொ. அவர்கள், அக்டோபர்-2009 பின்னிணைப்பு-அ.

    6.மகாவம்ச-சிங்களர்கதை, வில்கெம் கெய்கர், தமிழில் எசு.பொ. அவர்கள், முன்னுரைப்பக்:28, அக்டோபர்-2009.

    1. “ “     பக்:36.

    8.வின்சுடன் சுமித், அசோகர், இந்தியாவின் பௌத்தப்பேரரசர், 2009, பக்:21.

    1. “ “       பக்; 38-40.

    10.மகாவம்ச-சிங்களர்கதை, வில்கெம் கெய்கர், தமிழில் எசு.பொ. அவர்கள்,  பக்:1; & முன்னுரைப்பக்: 20, 21,   அக்டோபர்-2009.

    Share
  • குறுந்தொகை – பாடுபொருள் நுவல்தலில் பறவைகள்

    -கு. பூபதி 

    சங்க இலக்கியங்கள் தொன்மையால் பெருமை வாய்ந்தவை. நுண்ணிய கட்டமைப்பு விதிகளுக்கு இயைந்த வடிவுடையவை. முதற்பொருள் நிலமும், பொழுதுமாக அமைவதாலும் கருப்பொருளாக தெய்வம் தொடங்கி நிலம்சார் மக்கள், நிலையுயிர்களான தாவரங்கள் புள் உள்ளிட்ட இயங்குயிர்கள், இயற்கை உழுத செயற்கை உருவாக்கங்கள் என இயற்கைக்கு மிகுதியும் இடமளிப்பவை. எனவே உரிப்பொருள் உணர்வுகளைப்பாட இயற்கையை இயல்பாகவே துணைக்கழைத்துக் கொண்டனர் சங்கப்புலவர்கள்.

    தலைவன், தலைவி, தோழி கூற்றில் ஆளப்படும் உவமைகளுக்குக் கூட நுண்ணிய விதிகளும், தெற்றெனக்காட்டும் எல்லைகளையும் இலக்கணமாகக் கொண்டவை சங்கத்தமிழ் இலக்கியங்கள். தலைவி தான் கண்டவற்றையே உவமையாக்கவேண்டும் எனத் தொல்காப்பியம் விதிக்கிறது. இக்காரணங்களால் பறவைகள், விலங்குகள், மலர்கள், செடி, கொடி, மரங்கள் என அவ்வுணர்வைக் காட்டவும், அறிவு கொளுத்தவும் பயின்று வரும் உவமைகள் பெருமையுள்ளன. அவற்றில் குறுந்தொகைப் பாடுபொருளில் பயின்றுவரும் பறவைகள் குறித்த செய்திகளை ஆராய்வதாக இக்கட்டுரை அமைகிறது.

    பறவைகளும், திணைகளும்

    பறவைகள் தம் இயல்பான வாழிடங்களுக்கேற்ற நிலங்களில் காணப்படுதல், இயல்பான வாழிடங்கள் அல்லாத இடங்களில் காணப்படுதல், அல்லது பறவைகளை இன்னதென விளங்காமல் உரைகாரர்களால் நேர்ந்த மயக்கம் ஒன்றுக்கு மேற்பட்ட நிலங்களில் பயின்று வருதல் எனப் பொதுவகைமையிற் கொண்டுவரவியலும்.

    பறவைச்சகுனம்

    பறவைகளைச் சகுனத்தின் குறியீடாகக் கொள்ளுதல் தற்காலத்திலும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. காகம் கரைதல் விருந்தினர் வருதலையும் சகுனமாகக் கொண்டுள்ளனர். இச்சகுனம் பார்த்தல் சங்ககாலந்தொட்டே கடைப்பிடிக்கப்பட்டு வந்துள்ளது. தலைவன் வரவை எதிர்நோக்கி ஆற்றியிருக்கும் போதும், நல்வினையைத் துவங்கும் போதும் நல்ல நிமித்தம் பார்த்தலும் நற்சொல் கேட்டலும் நற்குறிகளாகக் கொள்வது நெடிய பண்பாட்டுக் குறியீடுகள். புள்ளூர்தல் என்பது பறவைகளை நன்னிமித்தமாகக் கொள்தல், விரிச்சிகேட்டல் என்பது நல்ல சொல் கேட்டல் இதை,

    ‘புள்ளும் ஓராம் விரிச்சியுமில்லாம்
    உள்ளலும் உள்ளாம் அன்றே’ (குறு : 218) என்பதிலிருந்தும்,

    ‘வேதின வெரிநி னோதி முதுபோத்
    தாறுசென் மாக்கள் புட்கொளப் பொருந்தும்’ என்பதிலிருந்தும் அறியலாம்.

    உட்பிரிவுகள்

    பொதுவாகப் பார்த்த பறவைகளைப் பாடல்களில் உவமையாக்குவது என்பதைக் கடந்து கூர்ந்து கவனித்து, நுணுக்கமான ஒப்புமைகளைக் கைக்கொள்வது, அப்பறவைகள் இணையோடு சேர்ந்து வாழ்தல், பிரிந்து செல்லும்போது வருந்துதல், கருவுற்ற பேடைக்குக் கூடமைத்துக் கொடுத்தல் ஆகிய நுட்பமான செய்திகள், பல சங்கப் புலவர்களை பறவை ஆர்வலராகக் காட்டும். ஒரு வகைப் பறவையினத்தினைச் சாந்து நிறத்தால், வரவால், வாழிடத்தால், உணவு முறையால் வேறுபட்ட அவற்றின் உட்பிரிவுகளைக் கூறும் திறம் மூலம் பறவை ஆராய்ச்சியாளரின் நோக்கு அப்புலவர்களுக்கு அமைந்திருந்ததைக் குறிக்கிறது. உதாரணமாக கழுகுகளில் இருவகை, ஆந்தையில் ஆறு வகை, காக்கையில் இருவகை, வல்லூறு மூவகை, புறாக்கள், நீர்ப்பறவைகளின் வகைகள் போன்றவை சங்கப்பாடல்களில் காணக் கிடைக்கின்றன.

    கணந்துள்

    குறிஞ்சி திரிந்த பாலை நிலத்தில் வழிப்போக்கர்களை ஆறலை கள்வரிடம் அகப்படாமல் நீங்கிச் செல்ல கணந்துள் பறவை எச்சரிக்கும். இச்செய்தி,

    “நெடுங்காற் கணந்து ளாளறி வுறீஇ
    ஆறுசெல் வம்பலா் படைதலை பெயர்க்கும்”    (குறு: 350) என்ற பாடலில் கூறப்படுகிறது.

    “கம்புட் கோழியும் கனைகுர னாரையுஞ்
    செங்கா லன்னமும் பைங்காற் கொக்கும்
    கானக் கோழியும்நீா்நிறக் காக்கையும்
    உள்ளும் ஊரலும் புள்ளும் புதாவும்
    வெல்போர் வேந்தா்முனையிடம் போலப்
    பல்வேறு குழூக் குரல் பரந்த வோதையும்”      (சில -10-114-117)

    என்ற சிலம்பு, புகார்க்காண்டம், நாடுகாண் காதைப் பாடல் உரையில் புள் என்பதைக் கணந்துள் எனக் குறிப்பிட்ட அடியார்க்கு நல்லார், கானக் கோழி- காட்டுக்கோழி என்பாருமுளா். நிறம்- தன்மை, ஊரல் – நீா்மேலூர்வது ஆதலின் ஆகுபெயா் என்பர். காவிரியாற்றங்கரையில் நீா்த்துறைப் பறவைகளைப் பட்டியலிடும் போது கணந்துள் பறவையும் சேர்த்துக் குறிப்பிடுவது ஆய்வுக்குட்பட்டது.

    கற்பாங்கான வறட்சியான வாழிடத்தைக் கொண்ட கணந்துள் பறவை ஆள் வருகையை எச்சரித்துக் கூறும் செய்தி நற்றிணைப் பாடலிலும் உறுதிப்படுத்தப்படுகிறது.

    “பார்வை வேட்டுவன் படுவலை வெரீஇ
      நெடுங்கால் கணந்துள் புலம்புகொள் தௌ்விளி
      சுரஞ்சொல் கோடியர் கதுமென இசைக்கும்”     (நற்: 212)

    என நற்றிணைப் பாடலுக்கு  வரைந்த உரையில் பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயா் “ இது நீா்வாழ் பறவை என்று கூறப்படுதலின்,  எந்நில மருங்கிற்  பூவும் புள்ளும்” (தொல். பொரு.19) என்றபடி பாலைக்கண் வந்ததெனெக்கொள்க எனத் திணைமயக்கமாகக் கொள்கிறார்.

     கற்பாங்கான வறண்ட பகுதியில் வாழும் கணந்துள் நீா்ப்பறவை எனக் கொள்ளப்பட்டமை ஆய்வுக்குரியதாகிறது.

    ஆள் வருகையைக் காட்டும் கணந்துள் ‘ஆள்காட்டிக் குருவி’ என்பது மருவி தற்காலத்தில் ஆக்காட்டுக் குருவி’ என கிராமப்புறங்களில்  அடையாளப்படுத்தப்படுகிறது.

    மஞ்சள் மூக்கையுடைய கணந்துள் (Vanellus malabaricus) கற்பாங்கான வாழிடத்தையுடையது என்றும் அதேபோல் உருவம் கொண்ட சிவப்பு மூக்கையுடைய பறவையே (Venelius indicus) குளம் குட்டை ஆறு பொன்ற நீா்த்துறைகளில் வாழ்தல் என்பதையும் (en. Wikipedia.org) இணையதளம் வழி அறியலாம். குறுந்தொகைப் பாடல்களில் சுட்டப்படும் கணந்துள் மஞ்சள் மூக்கையுடையது என தெளியலாம்.

    கொக்கு

    “மாரியாம்ப லன்ன கொக்கின்
    பார்வ லஞ்சிய பருவர லீர்நெண்டு”       (குறு: 117)

    என வடிவத்திலும், வண்ணத்திலும் பொருத்தமாகக் கொக்கின் கூரும் ஆம்பல் முகையும் ஒப்புமைப் படுத்தப்படுகிறது. மாரிக்காலத்து மழையில் நனைந்து கூம்பியிருக்கும் கொக்கை ‘மாரிக்கொக்கின் கூரல்’ என நற்றிணை (100) சுட்டுகிறது.

    கொக்கி போன்ற வடிவை உடையதால் கொக்கு என்ற காரணப்பெயர் கொண்ட இப்பறவை, உரிய காலம் வரை பொறுமையாகக் காத்திருந்து வினையாற்றுவதற்கு உவமையாக மூதுரையில் சுட்டப்படுகிறது.

    கூகை

    உவமையால் பெயர்பெற்ற புலவர்கள் வாரிசையில் கூகையை உவமையாக்கி,

    “கூகைக் கோழியானாத் தாழிய பெருங்காடு”               (புற: 364)

    என்ற பாடல் எழுதிய புலவர் கூகைக் கோழியார் எனக் குறிப்பிடப்படுகிறார்.

    “குன்றக் கூகைக் குழற்று முன்றிற்
    பலவி னிருஞ்சினைக் கலைபாய்ந் துகளினும்”     
               (குறு: 153) என்ற கபிலர் பாடல் வழி குன்றில் வாழ்வதால் குன்றக்கூகை எனச் சுட்டப்படுவதை அறியலாம். கோழியிலிருந்து கூவ வேண்டிய இடத்துக் கூகை கூவியதால் ‘கூகைக் கோழி’ எனக் கூறப்பட்டதாக,

    “கூகைக் கோழி வாகைப் பறந்தலை”   (குறு: 393) என்ற பரணர் பாடலுக்கு உ.வே.சா உரை வழங்குவார். கூகை கூவுதலை ‘குழறுதல்’ என்பர். பொருளற்ற ஒலியை எழுப்புவது குழறல் எனப்படும்.

    சங்கப் பாடல்களில் ஆந்தை என்ற பொதுவகையில் கூகை, கூகுரால், குடிஞை, ஊமன், ஆண்டலை ஆகியவற்றைக் குறிக்கிறது. புறநானூறு, அகநானூறு பாடல்களில் ‘ஆந்தை’ என்ற சொல் பயன்படுத்தப்படாமை மேலாய்வுக்குரியது.

    கூகைக் குழறலுக்கு மகளிர் அஞ்சும் செய்தி நற்றிணைப் (218) பாடலில் கூறப்பட்டுள்ளது.

    காக்கை

    நிமித்தம், பராய்க்கடன் குறித்த செய்திகளில் காக்கை மிகுதியும் புலவர்களால் பயன்படுத்தப்பட்டதை பல அகப் பாடல்கள் வழி அறிய முடிகிறது.

    “விருந்துவரக் கரைந்த காக்கையது பலியே”      (குறு: 210)

    என்ற குறுந்தொகைப் பாடலை இயற்றிய புலவர் காக்கை பாடினியார் நச்செள்ளையார் என்ற உவமை வழி அடையால் அறியப்படுகிறார்,

    பலியுண்ணும் காக்கையே சங்கப் பாடல்களில் சுட்டப்படுகிறது.

    “உகுபலி அருந்திய தொகுகருங் காக்கை”                (நற்: 343)

    எனப் பலியுண்ணும் காக்கையை நற்றிணை காட்டுகிறது. காக்கை கரைதல் தலைவன் வரவுக்கு நிமித்தமென்றும், அவ்வாறு கரைந்தால் இன்னது தருவேன் எனக் கூறியவாறு இடும் உணவை பலியென்றும் கூறுதல் மரபு.

    தமிழ்நாட்டுக் காக்கைகள், ஊர்க்காக்கை (Corras Splendens), அண்டங் காக்கை (Corras Macrorhynchos) என இருவகையானவை. உடல் கருப்பாகவும், கழுத்து சாம்பல் நிறத்திலும் உள்ளவை ஊர்க் காக்கைகள். உடல் முழுவதும் அடர்கருப்பாக உள்ளவை அண்டங் காக்கைகள்.

    சங்கப் பாடல்களில் கூறப்படுபவை அண்டங் காக்கைகள் என்பது ‘கருங்காக்கை’ என்ற அடைவழிப் பெறப்படுகிறது.

    “கம்புட் கோழியும் கனைகுர னாரையுஞ்
    செங்கா லன்னமும் பைங்காற் கொக்கும்
    கானக் கோழியும்நீர்நிறக் காக்கையும்
    உள்ளும் ஊரலும் புள்ளும் புதாவும்” என்ற சிலப்பதிகாரப் பாடலில் கூறப்படும் ‘நீர்நிறக் காக்கை’ என்பது காக்கையினத்தைச் சார்ந்தது அல்ல. அது ஒரு நீர்ப்பறவை. பெயரைத் தவிர மற்றவற்றில் காக்கையோடு ஒப்புமையற்றது.

    கிளி

    மொச்சை மலரை கிளிமூக்கிற்கு உவமையாக்குகிறது

    “பனிப்புத லிவர்ந்த பைங்கொடி யவரைக்
    கிளிவா யொப்பி னொளிவிடு பன்மலர்”      (குறு: 240) என்ற குறுந்தொகைப் பாடல்.

    “செவ்வாய்க் கிளியைத் தத்தை என்றலும்” என தொல்-மரபியல் காட்டும். கிளி வாயில் உள்ள வேப்பம்பழத்தை கொல்லன் கையில் உள்ள பொற்காசினை ஒப்பக் காட்டுகிறது பின்வரும் அள்ளளுர் நன்முல்லாயார்பாடல்.

    “உள்ளார்கொல்லோ தோழி கிள்ளை
    வளைவாய்க் கொண்ட வேப்ப வொண்பழம்
    புதுநா ணுழைப்பா னுதிமாண் வள்ளுகிர்ப்
    பொலங்கல வொருகா சேய்க்கும்”      (குறு: 67)

    ‘கிளிமூக்கு’ எனும் சொல் இன்றும் கிளிமூக்கு மாங்காயில் தொடங்கி, பட்டுச்சேலையில் இடம்பெறும் கிளிமூக்குப் பூவடிவம் வரையில் பெருவழக்காக உள்ளது. காலத்தினூடே பயணிக்கும் வீரியமிக்க உவமையாக விளங்குவதை உறுதிப்படுத்துகிறது.

    எழால்

    பிற பறவைகளை அடித்துக் கொன்று தின்னும் எழால் எனும் பறவை வழிநடை ஆபத்துக்குக் குறியீடாக விளங்குகிறது.

    “எழாலுற வீழ்ந்தெனக் கணவற் காணாது”            (குறு: 151)

    “குடுமி யெழாலொடு கொண்டு கிழக் கிழிய”               (பதி: 36-10)

    என எழால் சங்கப் பாடல்களில் காட்டப்படுகிறது.

    குறும்பூழ்

    தினைத்தாளன்ன கால்களையுடைய குருகு முதல் ‘பூரிக்கா லன்ன செங்கா லுழந்தது’ வரையில் சங்கப் பாடல்களில் சிறு பறவைகள் மிகுதியாக இடம்பெற்றுள்ளன.

    ‘நிலங்கு குறும்பூழ் என்பன காடை’ என திவாகர நிகண்டு கூறுகிறது.

    “பாரீஇ வித்திய வேனற்
    குரீஇ யோப்புவாள் பெருமழைக் கண்ணே”              (குறு: 72)

    பாடலில் திணைக் குருவி போல, சிட்டுக் குருவிகள், முனியாக் குருவிகள் போன்ற சிறு குருவிகள் குறுந்தொகைப் பாடல்களில் இடம்பெற்றுள்ளன.

    அன்றில்

    பிரிவுத் துன்பம் சிறுபொழுதேயாயினும் தாளாமல் தவிக்கும் தலைவிக்கு அன்றில் பறவைகளை உவமையாக்கி,

    “மனைசேர்பெண்ணை மடிவாய் அன்றில்
    துணைஒன்று பிரியினும் துஞ்சா காண்”                  (அக: 50)

    என அகநானூறு கூறும். இதுதான் அன்றில் என அடையாளம் காட்டுகின்றன குறுந்தொகைப் பாடல்கள்.

    “நெருப்பி னன்ன செந்தலை யன்றில்”                     (குறு: 160)

    “கருங்கா லன்றிற் காமர் கடுஞ்சூல்”                  (குறு:301)

    செந்தலையும், கருங்காலும் கொண்ட அன்றில் பறவைகள் பகலில் வெளியே செல்லாது பனைமரக் கூட்டில் தங்கி, இரவில் இரை தேடச் செல்லும் இயல்புடையவை. ‘பனங்கிளி’ என்று பெருவழக்காக அன்றில் அறியப்படுகிறது.

    தொகுப்புரை

    தான் கண்டவற்றையே உவமையாக்க வேண்டும் என்பதால் இயல்பான தோற்றத்தில் பறவைகள் தலைவி கூற்றில் பாடுபொருளாக விளங்குகின்றன. எனவே உயர்வு நவிற்சியும், மிகைப்படுத்தப்பட்ட முருகியலும் இன்றி உள்ளது உள்ளவாறே பறவைகளின் வாழிடம், தோற்றம், நுட்பமான செயல்கள், உணவுமுறை ஆகியவற்றைப் பதிவு செய்துள்ள குறுந்தொகைப் பாடல்கள் இலக்கிய இன்பம் மட்டுமின்றி, அறிவியல் ஆய்வாளர்களுக்குக் கூடுதல் செய்திகளைக் கூறுவதாகவும் அமைந்துள்ளன.

    பார்வை நூல்கள்

    1. குறுந்தொகை மூலமும் உரையும் (2009), டாக்டர் உ.வே.சா நூல் நிலையம், சென்னை.

    2. நற்றிணை மூலமும் உரையும், (2016), ஔவை துரைசாமிப் பிள்ளை, சாரதா பதிப்பகம், சென்னை.

    *****

    கட்டுரையாசிரியர் – பகுதிநேர முனைவர் பட்ட ஆய்வாளார், தமிழ்த்துறை, கற்பகம் உயர்கல்வி கலைக்கழகம், ஈச்சநாரி, கோவை-21.
    முனைவர் ஆறுச்சாமி.செ. நெறியாளர், உதவிப் பேராசிரியர் தமிழ்த்துறை, கற்பகம் உயர்கல்வி கலைக்கழகம், ஈச்சநாரி, கோவை-21.

     

     

    Share
  • சங்க கால நிலவியல் பகுப்புகளின் அடிப்படையில் விளைந்த குறிஞ்சிநிலத் தொழில்கள்

    -த. வாசுகி 

    முன்னுரை

    தொல்காப்பியர் தொழில் என்பதனை வினை என்ற பொருளில் பல இடங்களில் பயன்படுத்தியுள்ளார். இதனை, “வினைவயின் பிரிந்தோன் மீண்டுவரு காலை இடைச் சுர மருங்கில் தவிர்தல் இல்லை” (தொல். பொருள். அகத்திணையியல், நூ.1140) என்ற நூற்பாவின் மூலம் அறியலாம். தமிழகராதியானது தொழில் என்பதற்குச் செயல், வேலை, ஏவல் என்ற பொருளினைத் தருகின்றது. நிலவியல் பகுப்புக்களான குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை போன்றவற்றில் சங்க காலத்தில் வாழ்ந்த மக்கள் இயற்கை வள ஆதாரங்களோடு நேரிடையாக இணைந்து செயல்பட்டனர். இவ்வாறு இயற்கையோடு நேரிடையாக தொடர்புடைய தொழிலானது தற்காலத்தில், முதன்மைத் தொழில்கள் அல்லது முதல்நிலைத் தொழில்கள் என்று அழைக்கப்படுகின்றன. இவற்றை பழைமையான தொழில்கள் என்று தற்காலத்தில் வரையறை செய்கின்றனர். இவற்றில் அடங்கும் தொழில்களாகக் கருதப்படுபவை:

    1. உணவு சேகரித்தல்
    2. வேட்டையாடுதல்
    3. மரம் வெட்டுதல்
    4. வேளாண்மை
    5. மீன்பிடிப்பு
    6. சுரங்கத் தொழில்
    7. காடுகள் பராமரிப்பு

    போன்றவை ஆகும். இத்தகைய தொழில்களில் சங்க காலத்திலேயே மக்கள் ஈடுபட்டிருந்தனர் என்பதனைச் சங்க நூல்களின் மூலம் அறிய முடிகின்றது. மேலும் சங்க இலக்கியங்களில் நிலம்சார்ந்த தொழில் முறைகள், நுணுக்கங்கள் போன்ற தொழில்சார்ந்த செய்திகள் ஏராளமாக அடங்கியுள்ளன. சங்க காலத்து நிலவியல் பகுப்புகளின் அடிப்படையில் விளைந்த குறிஞ்சிநிலத் தொழில்கள் பற்றி ஆராய்வதே இக்கட்டுரையின் முக்கியமான நோக்கமாகும்.

    குறிஞ்சிநிலத் தொழில்கள்

    குறிஞ்சி நிலம் என்பது மலை சார்ந்த பகுதிகளைக் குறிக்கின்றது. மலைக்குன்றுகள், அடர்ந்த மரங்கள், கொடிகள், சுனைகள், அருவிகள், பறவைகள், விலங்குகள் போன்றவை மலையின் அங்கங்களாகும். இந்த நிலப் பகுதிகளுக்கு ஏற்ப மக்கள் தங்கள் வாழ்விடங்களை அமைத்துக் கொண்டு, அங்கு நிலவும் தட்ப வெப்பநிலை, பருவ காலங்கள், அந்நிலத்தின் தன்மை போன்றவைகளை அறுதியிட்டு அதற்கு ஏற்ப தங்களது தொழில்களை அமைத்து செழிப்புடன் வாழ்ந்தனர் என்பதனை சங்கப் பாடல்களின் மூலம் அறியலாம். உழவரால் உழுது விதைவிக்கப்படாத இயற்கை வளத்தை உடையது குறிஞ்சி நிலம் என்பதனைப் புறநானூற்றுப் பாடல் (புறம். 109: 3-8) குறிப்பிடுகின்றது.

    வேளாண் தொழில்கள்

    குறிஞ்சி நிலத் தொழில் என்பது மலைவளத்தையும், புன்செய் வேளாண்மையையும், வேட்டைத் தொழிலையும் அடிப்படையாய்க் கொண்டமைந்துள்ளது. தினை, ஐவன வெண்ணெல்லும், புல்லரிசியும், மூங்கிலரிசியும், அவரையும், கிழங்கும், தேனும், வேட்டைப் பொருள்களும் குறிஞ்சி நில மக்களின் அடிப்படை உணவுகள் ஆகும்.

    தினை (ஏனல்)

    எக்காலத்திலும் புன்செய் நிலங்களில் வளர்வதற்கு ஏற்ற பயிராக தினை விளங்குகின்றது. புன்செய் நிலம் என்பது மழை நீரினால் விளைச்சலைத் தரக்கூடிய நிலத்தினைக் குறிக்கும். குறிஞ்சி நிலம் என்பது மலையும் மலைசார்ந்த இடமுமாக இருப்பதினால் அங்கு மழையின் அளவு அதிக அளவில் இருக்கும். இதனால் மனித முயற்சியின்றி இயற்கையாகவே நீராதாங்களைப் பெற்ற நிலமாக குறிஞ்சி நிலம் அமைகின்றது. இந்நிலத்தின் முக்கிய பயிராகிய தினையினைப் பற்றியப் பல குறிப்புகள் சங்கப் பாடல்களில் காணப்படுகின்றன. தினை, தினை வகைகள், தினை விதைத்தல், கொல்லையில் விதைத்தல், தினை முளைத்தல், களை நீக்குதல், முதிர்ந்த தினை கதிர்கள், தினை விளைந்த பதம், தினைப்புனத்திற்கு வரும் பாதிப்புகள், யானை தினைப்புனம் புகுதல், பன்றிகள் தினையைச் சேதப்படுத்தல், கானங்கோழி, கிளி போன்றவை தினையினைக் கவர்தல், தினையைப் பாதுகாத்தல், பன்றியைப் பொறி வைத்துப் பிடித்தல், அம்பெய்து விரட்டுதல், விளக்கேற்றி விரட்டுதல், தொண்டகப் பறை முழக்குதல் போன்று பல விதமான உத்திகளைத் தினையினைக் கவர வரும் விலங்கு, பறவைகளை விரட்டப் பயன்படுத்தியுள்ளனர். மேலும், பரணில் இருந்து புனம் காத்தல், தினையின் அறுவடைக் காலம், தினையைக் காயவைத்தல், தினை இடித்தல் போன்ற தினையினைப் பற்றிய செய்திகளை அறியலாம். இதனை,

    “மலை அயற் கலித்த மைஆர் ஏனல்”32   (நற். 108 : 1) என்னும் நற்றிணைப் பாடலானது தினையினை, ‘மலைப்பக்கத்தே முளைத்துச் செழித்துக் கரிய நிறமுடைய தினை’ என்று குறிப்பிடுகின்றது.

    தினை அறுவடைக்குப் பின் தினைத்தாளைக் கொண்டு குடிசை வேயப்பட்டது என்பதனை,

    “இருவி வேய்ந்த குறுங்காற் குரம்பை”33   (குறிஞ்சிப்பாட்டு, வரி. 153) என்னும் குறிஞ்சிப்பாடலானது குறிப்பிடுகின்றது. இதன்மூலம் குறிஞ்சி நில மக்களின் நிலம் சார்ந்த வாழ்வியல் திறத்தினை அறிய முடிகின்றது.

    ஐவனம் அல்லது மலைநெல்

    குறிஞ்சி நிலத்தில் ஐவனநெல் என்னும் வெண்ணெல், தோரை என்னும் நெல், மூங்கிலரிசி போன்றவற்றை விளைவித்தனர். புல்லரிசியானது எறும்புப் புற்றிலிருந்து கிடைக்கப்பெற்ற உணவாக இருந்திருக்கின்றது. மதுரைக் காஞ்சியானது குறிஞ்சி நிலத்தில் விளையும் நெல் பற்றியும், அவற்றுடன் எவையெவை பிணைந்து வளரும் என்பதனை,

    “நறுங்காழ் கொன்று கோட்டின் வித்திய
    குறுங்கதிர்த் தோரை, நெடுங்கால் ஐயவி,
    ஐவன வெண்ணெலொடு அரில் கொள்பு நீடி;
    இஞ்சி, மஞ்சள், பைங்கறி, பிறவும்

    பல்வேறு தாரமொடு, கல்லகத்து ஈண்டி” (மதுரைக்காஞ்சி, வரி. 286-290) என்ற பாடல்வரிகள் குறிப்பிடுகின்றன. இப்பாடலானது, மணம் கமழும் அகிலையும், சந்தனத்தையும் வெட்டி, மேட்டு நிலங்களில் விதைக்கப்பட்ட குறிய கதிர்களையுடைய தோரை என்னும் நெல்லும், நெடிய தாளினையுடைய வெண்சிறு கடுகும், ஐவன நெல் என்னும் வெண்ணெல்லுடன் பிணைந்து வளர்ந்த இஞ்சியும், மஞ்சளும், பசுமை வாய்ந்த மிளகுக் கொடியும், ஒழிந்த பல்வேறு பண்டங்களும் கல் தரையில் குவிக்கப்பட்டிருப்பதனைச் சுட்டுகின்றது. 

    குறுந்தொகையில் வரும் குறிஞ்சிப் பாடலொன்று, ‘காந்தளை இயற்கை வேலியாக உடைய இச்சிறுகுடியில் வாழ்பவர், அருவியை உடைய பரந்த நிலத்தில் மலை நெல்லை விதைப்பர். அவற்றிடையே களையாக வளர்ந்துள்ள பருத்த இலையையுடைய காட்டு மல்லிகையையும், பசிய மரலை எனப்படும் ஒருவகை கற்றாழையையும் பறித்து எறிவர். இதனை,

    “அருவிப் பரப்பின் ஐவனம் வித்திப்
    பருஇலைக் குளவியொடு பசுமரல் கட்கும்
    காந்தள்அம் சிலம்பில் சிறுகுடி”  (குறுந். 100 : 1-3) என்றப் பாடலின் மூலம் அறியலாம்.

    எள்

    எள் பற்றிய செய்தியானது சங்கப் பாடல்களில் காணக்கிடைக்கின்றது. கார் காலத்தில் முதலில் தோன்றும் மழை, புதுப்பெயல் எனவும், இளமழை எனவும் கூறப்படும். அக்காலத்தில் தொடர்ந்து பெய்யும் மழை, ‘பழமழை’ எனப்படும். அப்பருவத்தின் இறுதியில் பெய்யும் மழை ‘சில் பெயல்’ எனப்பட்டது. எள்ளிற்கு அதிக மழை பெய்தால், காய்கள் பதனழிந்து, உள்ளீடின்றிப் போகும். உள்ளீடில்லாத காய்கள் ‘சிதட்டுக் காய்’ என்றும் கூறப்படும். இத்தகைய கருத்துக்களைத் தாங்கி நிற்கும் குறுந்தொகைப் பாடலொன்று, பழமழையால் பதம்கெட்டு உருகிய எள்ளின்காய், சின்மழையால் இனிதாய் விளங்கினாற் போல என்பதனை,

    “பழமழை பொழிந்தெனப் பதன் அழிந்து உருகிய
    சிதட்டுக்காய் எண்ணின் சில்பெயற் கடைநாள்”   (குறுந். 261 : 1-2) என்ற பாடல் வரிகளின் மூலம் விளக்குகின்றது. எள்ளிலிருந்து எண்ணெய் பிழிந்து எடுக்கப்பட்ட செய்தியை நற்றிணைப் பாடலானது “எண் பிழி நெய்யொடு வெண் கிழி வேண்டாது”  (நற். 328 : 8) என்ற வரிகளில் குறிப்பிடுகின்றது. மேலும், மலைபடுகடாம் என்ற பாடலானது, ‘பலவாகக் கிளைத்த பசிய எள்ளின் இலைகள் எல்லாம் நீலமணியின் நிறத்தையுடையனவாய் வளர்ந்தன. அவை விதைக்கப்பட்ட கொல்லையின் பக்கத்தில், நீர் இறைக்கும் சால் போன்ற வடிவத்தையுடைய நீர் நிறைந்த சுனைகள் விளங்கின. அக்காட்டின்கண் அரக்குப் பாயாமல், மழைத்துளி தழுவுதலால், இளங்காயாகிய தன்மை நீங்கி, ஒரு பிடியில் ஏழு காய்களைப் பெற்று, எள், நெய் உள்ளே கொள்ளும்படி வளர்ந்தன. இதனை (மலைபடுகடாம், 102-106) என்ற பாடல் வரிகளின் மூலம் அறியலாம். இவற்றிலிருந்து குறிஞ்சி நில மக்களின் வாழ்வில் எள் இடம்பெற்றிருந்தது என்பதனை அறியலாம்.

    அவரை

    குறிஞ்சி நில மக்கள் தினைக்கு ஊடுபயிராக அவரையைப் பயிரிட்டுப் பயன்பெற்றனர் என்பதனை சங்கப் பாக்கள் அறிவிக்கின்றன. மலைபடுகடாம் என்ற பத்துப்பாட்டு நூலானது, ‘அவரைகள், தினை அரிந்த தாள்களில் முற்றிய தயிரின் பிதிர்ந்த சிதறல் போன்ற பூக்கள் உதிர்ந்து, அரிவாள் போன்ற வளைந்த காய்களைக் கொண்டன’  என்றுக் குறிப்பிடுகின்றது. இதனை “விளைதயிர்ப் பிதிர்வின் வீஉக்கு, இருவி தொறும், குளிர் புரை கொடுங்காய் கொண்டன, அவரை” (மலைபடுகடாம், 109-110) என்ற பாடலின் மூலம் அறியலாம். மேலும், குறுந்தொகைப் பாடலொன்று இதே செய்தியினைப் “பெரும்புனக் குறவன் சிறுதினை மறுகால் கொழுங்கொடி அவரை பூக்கும்” (குறுந். 82 : 4-5) என்பதில், தினைப் புனத்தில் விதைத்த அவரை, அதன் மறுதாளில் படர்ந்து, பூத்துக் காய்களை உண்டாக்கும். அதாவது, குறவன் ஒருமுறை விதைத்த தினையின் கதிர்களைப் பெற்று மகிழ்வதோடு, அவற்றின் மறுகாலில் விளையும் அவரைக் காய்களையும் பெற்று இன்பம் நுகர்வான் என்பதனை அறியலாம்.

    கிழங்கு அகழ்தல்

    சங்க கால மக்களின் உணவுப் பொருளாக கிழங்கு வகைகள் இருந்துள்ளன. கவலைக் கிழங்கு, வள்ளிக் கிழங்கு, பனங்கிழங்கு, நூற் கிழங்கு, சேமங்கிழங்கு போன்ற பல கிழங்கு வகைகளைப் பற்றிய செய்திகளும், அவை உணவாகப் பறிமாறப்பட்டன என்ற செய்திகளும் சங்கப் பாடல்களில் காணக்கிடைக்கின்றது. கிழங்கினைப் பண்டமாற்றுப் பரிவர்த்தனைக்கும் பயன்படுத்தியுள்ளனர் என்பதனையும் அறிய முடிகின்றது. கிழங்கு அகழ்வதற்காக வெட்டப்பட்ட குழி, முதலில் அகழ்ந்தவர்க்கு உரித்தாதலும், அதனைப் பிறர் அகழாமையும் மலைவாழ் மக்களிடம் காணப்படும் இயல்பாக இருந்துள்ளதனை அறியமுடிகின்றது. இத்தகைய ஒழுங்குமுறையினைக் காணும் பொழுது, குறிஞ்சி நில மக்கள் கிழங்கினைப் பயிர் செய்யாமல் இயற்கையாகவே மலைகளில் கிடைக்கப்பெற்ற உணவுப் பொருளாக இருந்துள்ளதை ஒருவாறு உணரமுடிகின்றது. கானவன், அகழ்ந்த குழியில் கிழங்கு முற்றாமை கண்டு, பிற்றை நாள் அகழ்ந்ததை, குறுந்தொகைப் பாடலானது (குறுந். 379 : 1-2) குறிப்பிடுகின்றது. கானவர் கிழங்ககழ்வதற்கு நெடுங்குழி தோண்டிய செய்தியினை ஐங்குறுநூற்றுப் பாடலானது (ஐங். 208 : 1-2) குறிப்பிடுகின்றது.

    தேனெடுத்தல்

    குறிஞ்சி நிலத்தில் மரங்கள் மிகுதியாகக் காணப்பட்டதால் தேன் மிகுந்து காணப்பட்டது. குறிஞ்சி நில மக்கள் தேனெடுக்கும் தொழிலில் ஈடுபட்டனர். தேன் என்பது மலையின் வளத்தினைக் குறிக்கும் ஒரு பொருளாக திகழ்ந்திருக்கின்றது. தேன் சிறந்த உணவுப் பொருள் என்பதனை நற்றிணைப் பாடலானது, வண்டுகள் உண்ணுமாறு மலர்ந்த கரிய அடிப்பகுதியைக் கொண்ட வேங்கை மரத்தின் பெரிய கிளையிலே தொடுத்த கொழுவிய கண்களையுடைய தேனடையில் தேனீக்கள் மொய்த்தலால் தேன் கசிந்து கல்லின் குழிகளிலே வடியும். குறவர்களின் இளமகார் அதனை வழித்துண்பர். அவர் உண்டது போக எஞ்சியதை மெல்லிய தலையுடைய மந்தியின் வலிய குட்டிகள் சென்று உண்ணும் என்பதனை  (நற். 168 : 1-5) என்ற பாடல் வரிகள் விளக்குகின்றது. தேனை எடுப்பதற்குக் கருவிகளை பயன்படுத்தியுள்ளனர் என்பதனை மலைபடுகடாம் பாடலானது (மலைபடுகடாம், 315-317), முசுக்கலை தன்னால் ஏறமுடியாது என்று செயலற்றுப் போகக் காட்சிக்கு இனிய உயர்ந்த மலையில் நிலைபேறுண்டாகக் கூட்டி நட்ட கண் ஏணி வழியாகச் சென்று, பெரிய பயன் உண்டாகுமாறு, தேனீக்கள் திரட்டிவைத்த தேனை அழித்துக் கொண்டு வந்ததனைக் குறிப்பிடுகின்றது. இதனைப் போன்றே, மலையின் பக்கத்தில் உயர்ந்த மரங்களிலும், பாறைகளிலும் உள்ள தேனடைகளை எடுப்பதற்கு கண்ணேணி மற்றும் தமாலம் என்னும் கொடியினைப் பயன்படுத்தி ஏறியுள்ளனர் என்பதனை (நற். 292 : 1-3), (கலி. 39 : 9) என்ற இருபாடல்களின் மூலம் அறியலாம்.

    வேட்டையாடுதல்

    ஆதிகாலத்தில் உணவிற்காக வேட்டையாடிய மனிதன், உணவினை உற்பத்தி செய்யக் கற்றுக்கொண்ட பின்னரும் இன்றுவரை வேட்டையாடுதல் என்னும் தொழிலினைத் தொன்மமாகத் தொடர்கின்றான். வேட்டைத் தொழில் என்பது வீரத்தினை வெளிப்படுத்தும் கலையாக இன்று விளங்குகின்றது. குறிஞ்சி நில மக்கள் வேட்டைத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர் என்பதைச் சங்கப் பாக்கள் எடுத்துரைக்கின்றன. அவர்கள் புலி வேட்டை, யானை வேட்டை, மான் வேட்டை போன்ற பல வேட்டைகளில் ஈடுபட்டுள்ளனர். நாய்களைப் பழக்கி வேட்டைக்குப் பயன்படுத்தியுள்ளனர். மேலும், வலையைப் பயன்படுத்துதல், பொறி வைத்தல் போன்ற நுட்பமான முறைகளை கையாண்டுள்ளனர் என்பதனை (அகம். 172 : 6-10), (அகம். 58 :3-4), (நற். 276 : 1-3), (குறுந். 272 : 4-5), (அகம். 182 : 5-8), (அகம். 272 : 13-15), (நற். 212 : 1) என்ற பாடல்களின் மூலம் அறியலாம்.

    முடிவுரை

    குறிஞ்சிநிலப் பகுதிகளுக்கு ஏற்ப மக்கள் தங்கள் வாழ்விடங்களை அமைத்துக் கொண்டனர். அங்கு நிலவும் தட்ப வெப்பநிலை, பருவ காலங்கள், அந்நிலத்தின் தன்மை, நீர் நிலைகள் போன்ற இயற்கை வள ஆதாரங்களோடு நேரிடையாக இணைந்து தங்களது தொழில்களை அமைத்து செழிப்புடன் வாழ்ந்தனர் என்பதனையும், குறிஞ்சி நிலம் சார்ந்த தொழில் முறைகள், நுணுக்கங்கள் போன்ற செய்திகளையும் சங்க இலக்கியங்கள் பதிவு செய்துள்ளன. நிலவியல் பகுப்புகளினால் விளைந்த தொழில்களானது, பழைமையான தொழில்கள் என்று தற்காலத்தில் வரையறை செய்யப்பட்டுள்ள தொழில்களுடன் ஒத்துப்போவதனையும் அறியமுடிகின்றது.

    துணைநூற்பட்டியல்

    1. இளம்பூரணர் (உரை), தொல்காப்பியம் பொருளதிகாரம், திருநெல்வேலித் தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை. முதற்பதிப்பு (1986)
    2. கார்த்திகேசு சிவத்தம்பி, பண்டைத் தமிழ்ச் சமூகம், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை, இரண்டாம் பதிப்பு (2017)
    3. முனைவர் ப. சரவணன், சங்க காலம், கிழக்கு பதிப்பகம், சென்னை, முதற்பதிப்பு (2015)
    4. பெ. மாதையன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை, இரண்டாம் பதிப்பு (2010)

    *****

    கட்டுரையாளர் – முனைவர்பட்ட ஆய்வாளர்,
    தமிழ்த்துறை,
    ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரி,
    மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்,
    திருநெல்வேலி – 627 008.

     

    Share
  • நல்வாழ்வுக்கு வழிகாட்டும் நாலடி – 7

    -மேகலா இராமமூர்த்தி

    மக்கள் வாழ்க்கையானது இன்பமும் துன்பமும் கலந்தது; நன்மையும் தீமையும் நிறைந்தது. எனவே வாழ்க்கையில் எது வந்தாலும் கலங்காது, வாழ்க்கையின் மெய்த்தன்மையை உணர்ந்து வாழ்தலே சிறந்தது.

    நாம் எத்தனையோ பேரை வாழ்வில் சந்திக்கிறோம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வோர் இயல்பு இருப்பதையும் காண்கின்றோம். சிலரின் பண்புகள் நம்மை அவர்களிடம் நெருங்கச் செய்கின்றன. வேறுசிலரின் பண்புகளோ அவர்களைவிட்டுக் காததூரம் விலகி ஓட வைக்கின்றன.

    சரியோ தவறோ யாருமே அவரவர் இயல்பை மாற்றிக்கொள்ளத் தயாராக இருப்பதில்லை. இதனைச் ’சுவை’யோடு விளக்குகின்றது நாலடியார்.

    தக்காரும் தக்கவ ரல்லாரும் தந்நீர்மை
    எக்காலுங் குன்றல் இலராவர் – அக்காரம்
    யாவரே தின்னினும் கையாதாம் கைக்குமாம்
    தேவரே தின்னினும் வேம்பு. 
    (நாலடி – 112) 

    ”சான்றோரும் சான்றோர் அல்லாதாரும் தத்தம் இயல்புகளிலிருந்து குன்றுதல் இலர்.  கருப்பங்கட்டியை யார் தின்றாலும் கசக்காது; ஆனால் விண்ணாளும் தேவரே தின்றாலும் வேப்பங்காய் கசக்கவே செய்யும்.” இதைத்தான் நாட்டுவழக்கில் ’நாய் வாலை நிமிர்த்த முடியாது’ என்கிறார்களோ?

    அறம் பொருள் இன்பம் என்ற முப்பொருளில் இடையிலுள்ள ’பொருளே’ அறத்துக்கும் இன்பத்துக்கும் ஆதாரமாக இருக்கின்றது என்பது அறிஞர்கள் துணிபு. முனிவர்களே ஆயினும் நாலடியாரின் ஆசிரியர்களும் அதற்கு எதிரானவர்கள் அல்லர்.

    வடுவிலா வையத்து மன்னிய மூன்றில்
    நடுவண தெய்த இருதலையும் எய்தும்
    நடுவண தெய்தாதான் எய்தும் உலைப்பெய்
    தடுவது போலுந் துயர்.  
    (நாலடி – 114)

    ”குற்றமில்லாத உலகத்தில் இன்றியமையாதனவாய்ப் பொருந்திய அறம் பொருள் இன்பம் என்னும் மூன்று உறுதிப் பொருள்களுள், நடுவில் நின்றதான ‘பொருள்’ என்பதை ஒருவன் அடைந்தால், அது காரணமாக, அதன் இருபக்கத்தனவான ‘அறம்’ ‘இன்பம்’ என்னும் இரண்டையும் அவன் அடைவான். அவ்வாறு நடுவில் நின்றதான செல்வப்பொருளை அடையாதவன், கொல்லன் உலையில் இட்டு இரும்பைக் காய்ச்சுவது போலும் வறுமைத் துன்பத்தை அடைந்து நைவான்” என்கிறது மேற்கண்ட நாலடியார் பாடல்.

    ஆம், இல்லானை இல்லாளும் வேண்டாள்; ஈன்றெடுத்த தாயும் வேண்டாளே!

    செந்நாப்போதாரும், இதே கருத்தைச் சுருக்கமாக,

    ”ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க்கு எண்பொருள்
    ஏனை இரண்டும் ஒருங்கு” (760) என்று கூறிப் போந்தார்.

    உலகத்தாரில் பலர், பணம் புகழ் பதவி இவை வலுத்தோரிடம் பல்லிளிப்பதையும், தமக்கு அவர்களால் ஏதேனும் ஆதாயம் கிடைக்கக்கூடும் எனும் ’குருட்டு’ நம்பிக்கையில் அவர்கள் தம்மை இழிவுபடுத்துவதைச் சகித்துக்கொள்வதையும் காண்கிறோம்.  இது சரியா?

    நாலடியார் சொல்வதைக் கேட்போம்!

    தம்மை இகழ்வாரை தாமவரின் முன்னிகழ்க
    என்னை அவரொடு பட்டது – புன்னை
    விறற்பூங் கமழ்கானல் வீங்குநீர்ச் சேர்ப்ப
    உறற்பால யார்க்கும் உறும். 
    (நாலடி – 117)

    ”அவரவற்குரிய நன்மை தீமைகள் அவரவர்க்கு வந்துசேரும். ஆதலால், புன்னையின் வலிமைவாய்ந்த மலர்மணங் கமழ்கின்ற சோலைகளையுடைய கடற்கரைத் தலைவ! தம்மைப் புறக்கணிப்பவரை அவரினும் முற்படத் தாம் புறக்கணிக்கவேண்டும். அவமானப்பட்டேனும் அவர்களோடு அப்படி என்ன தொடர்பு வேண்டிக்கிடக்கிறது?” என்று கண்டிக்கிறது நாலடியார்.

    நமக்கென்று உள்ளது நமக்குக் கிட்டாமல் போகாது. ’உறற்பால தீண்டா விடுதல் அரிது’ என்ற பிறிதொரு நாலடியார் பாடலை இங்கே நாம் நினையலாம். அதுபோல், என்னதான் ஓடிஓடித் தேடினாலும் நமக்கில்லாத ஒன்று நமக்குக் கிட்டாது. அப்புறம் எதற்குத் தன்மானத்தையும் கண்ணியத்தையும் இழந்து பிறரை நத்திக்கிடப்பது?

    ’எடுத்த காரியம் யாவினும் வெற்றி’ என்று பூரிப்போடு வெற்றிகளையே வாழ்வில் குவிக்கவும், வாழ்வின் ஒவ்வொரு நாளையும் மகிழ்வோடு கழிக்கவுமே சராசரி மனித மனம் அவாவி நிற்கின்றது. ஆனால் உலகின் இயல்பு அவ்வாறிருப்பதில்லை.

    நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் மனிதன் மனிதனாக இருக்கமாட்டான் என்று கருதியோ என்னவோ இயற்கை அவனுக்குத் துன்பப் பாடங்களைப் பாடத்திட்டத்தில் சற்றுக் கூடுதலாக வைத்துத் தக்க அனுபவங்களைப் படிப்பினையாய்த் தருகின்றது.

    யாஅர் உலகத்தோர் சொல்லில்லார்? தேருங்கால்
    யாஅர் உபாயத்தின் வாழாதார்? – யாஅர்
    இடையாக இன்னாத தெய்தாதார்? யாஅர்
    கடைபோகச் செல்வம்உய்த் தார்? 
    (நாலடி – 119)

    ”உலகியலை ஆராய்ந்து பார்த்தால், ஒரு பழிச்சொல்லைக்கூட அடையாதவர் இவ்வுலகில் யார்? ஏதேனும் ஓர் காரணம் பற்றி உலகில் வாழாதார் யார்? வாழ்வின் இடையே இடரும் இடுக்கணும் அடையாதார் யார்? வாழ்வின் இறுதிவரையிற் செல்வத்தை நுகர்ந்தவர் யார்?” என்று கேள்விக்கணைகளைத் தொடுக்கின்றது நாலடியார். இதற்கெல்லாம் ஒரே பதில் “யாருமில்லை!” என்பதுதான்.

    ஆதலால் இன்ப துன்பமும் கலந்து வருவதே உலகியற்கை என்பதை உணர்ந்து, அவற்றுக்கு மனம் கலங்காதிருப்பவனே வாழத்தெரிந்த மனிதன் ஆவான்.

    நமக்கு வாய்க்கும் வாழ்க்கை, ’இன்பமே எந்நாளும் துன்பமில்லை’ என்று மகிழ்ந்துபாடும்படி அமைந்தாலும் சரி, ’துன்பங்களே எமக்குத் தொடர்கதையோ’ என்று வருந்தும்படி இருந்தாலும் சரி… அதற்காக நல்வழியிலிருந்து நீங்கித் தீவினைகள் ஆற்றக்கூடாது; அவ்வாறு செய்தால் அது மேன்மேலும் நமக்குத் துன்பத்தையும் கெடுபலன்களையுமே கொடுக்கும் என்று குறிப்பிடும் நாலடியார், மனிதர்களுக்கு மட்டுமல்லாது பிற உயிர்களான பறவைகளுக்கும் விலங்குகளுக்கும்கூடத் தீங்குசெய்வதோ அவற்றைக் கொல்வதோ மா பாவம் என்கின்றது.

    அக்கேபோல் அங்கை யொழிய விரலழுகித்
    துக்கத் தொழுநோய் எழுபவே – அக்கால்
    அலவனைக் காதலித்துக் கான்முரித்துத் தின்ற
    பழவினை வந்தடைந்தக் கால். 
    (நாலடி – 123)

    ”முற்பிறப்பில் நண்டின் ஊனை விரும்பித் தின்றவனுடைய பழவினை இப்பிறப்பில் வந்தடையும்போது, சங்குமணிபோல வெண்ணிறமாய் உள்ளங்கைகள் மட்டும் இருக்க, ஏனைய விரல்களெல்லாம் அழுகிக் குறைந்து துன்பம்தரும் தொழுநோய் உண்டாகப் பெறுவான் அவன்” என்று எச்சரிக்கின்றது நாலடியார்.

    பிற உயிர்களை வருத்துபவன் அவ்வாறே தானும் துன்புறுவான் என்பதே இதன் வாயிலாய் நாம் பெறும் பாடம்!

    ”பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா
    பிற்பகல் தாமே வரும்”  (319) என்ற வள்ளுவத்தை ஈண்டு உள்ளுவம்; உயிர்க்கொலையைத் தள்ளுவம்!

    சில நேரங்களில் நாம் ’உயர்ந்தவர்’ என்று கருதி ஒருவரிடம் பழகுவோம். நெருங்கிப் பழகியபின்தான் தெரியவரும் அச்சொல்லுக்கு அவர் சிறிதும் அருகதை அற்றவர் என்பது. அப்போது நமக்கு ஏற்படும் அதிர்ச்சியை அழகிய உவமை ஒன்றின்மூலம் விளக்குகின்றது நாலடியார்!

    சான்றோ ரெனமதித்துச் சார்ந்தாய்மன் சார்ந்தாய்க்குச்
    சான்றாண்மை சார்ந்தார்கண் இல்லாயின் சார்ந்தாய்கேள்
    சாந்தகத் துண்டென்று செப்புத் திறந்தொருவன்
    பாம்பகத்துக் கண்ட துடைத்து. 
    (நாலடி – 126)

    ”நீ சிலரைக் குணம் நிறைந்தவர் எனமதித்து மிகுதியும் உறவு கொள்கின்றனை; அவ்வாறு உறவுகொள்ளும் நினக்கு நீ சார்வோரிடத்தில் குணநிறைவு காணப்படாதாயின், ஆராயாமல் உறவுகொள்வோனே, கேட்பாய்! அச்செயல், சந்தனம் உள்ளே இருக்கின்றதென்று கருதிச் சிமிழைத் திறந்த ஒருவன் பாம்பை அதனுள் கண்டாற்போன்ற தன்மையுடையது” என்பது இப்பாடலின் பொருள்.

    மனித இயல்பு விசித்திரமானதுதான்! எவ்வளவு நெருங்கிப் பழகினாலும் சிலரை நம்மால் புரிந்துகொள்ள முடிவதில்லை. தன்னலம் ஒன்றே குறியாய், சூழ்நிலைக்குத் தக்கபடி நிறம் மாறும் அவர்களைத் தெரிந்து தெளிதல் மிகக் கடினம்.

    ”எனைவகையான் தேறியக் கண்ணும் வினைவகையான்
    வேறாகும் மாந்தர் பலர்” (514) என்று அறிவிற் சிறந்த வள்ளுவரே இப்பச்சோந்தி மனிதர்களைப் புரிந்துகொள்ள முடியாமல் உளம் சோர்ந்திருக்கிறார் எனும்போது நாமெல்லாம் எம்மாத்திரம்?

    கூடுமானவரை நன்கு ஆராய்ந்தபின்னரே எவரோடும் நட்புக்கொள்ள வேண்டும். அந்நட்பு, தீ நட்பாகவோ கூடா நட்பாகவோ இருக்குமானால் எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் அந்நட்பைக் கொல்லவேண்டும். அதுவே நம்மை நாம் காத்துக்கொள்ளும் நல்வழி!

    [தொடரும்]

    *****

    துணைநூல்கள்:

    1. நாலடியார் மூலமும் உரையும் – திரு. தி. சு. பாலசுந்தரம் பிள்ளை
    2. திருக்குறள் தெளிவுரை – மு. வரதராசனார்

     

    Share
  • சங்ககாலப் போர்வீரர்களின் பண்புகள்

    -முனைவர் திருமதி. வி. அன்னபாக்கியம்

    முன்னுரை

    வீரர்களின் புறவாழ்க்கையில் மிக இன்றியமையாதப் பணி போர் புரிவதாகும். வீரர்கள் போர்த் தொழிலில் விருப்பத்தோடு ஈடுபட்டுள்ளனர். தம் உயிரின் மீது சிறிதும் பற்று இல்லாதவர்களாய் செயல்பட்டுள்ளனர். போர்ப்பறை கேட்டவுடன் வீறுகொண்டு எழும் வீரர்களின் பண்புகளைத் தொல்காப்பியப் புறத்திணையியல் மற்றும் புறநானூற்றுப் பாடல்கள் சிறப்பான முறையில் எடுத்துரைத்துள்ளன.

    போர்வீரர்களின் பண்புகள்

    பழந்தமிழ் மறவர்களின் போர்ப்பண்புகளை அறிந்து கொள்வதற்குப் புறநானூற்றுப் பாடல்கள் பேருதவி புரிகின்றன.

    1. தெய்வங்களை ஒத்த வீரம் உடையவர்கள் (புறம்.14,15,23,56,374)
    2. போர் என்றவுடன் வீரக்கழல் புனைபவர்கள் (புறம்.31)
    3. படைக்கருவிகளை இயக்குவதில் தேர்ச்சி பெற்றவர்கள் (புறம்.72,169,260)
    4. எறிகோலுக்கு அஞ்சாத அரவு போன்றவர்கள் (புறம்.89)
    5. வாள் பாய்ந்ததால் உண்டாகிய தழும்பு பொருந்தியவர்கள் (புறம்.98)
    6. புறமுதுகுகாட்டாத கொள்கை உடையவர்கள் (புறம்.139)
    7. கண்ணுக்கு இன்னார் செவிக்கு இனியர் (புறம்.167)
    8. கொல்லன் உலையில் உள்ள பட்டடைக்கல் போன்ற
    9. வலிமையும்    ஆண்மையும்   உடையவன் (புறம்.170)
    10. பார்ப்பனர்க்குப் பணியும் தன்மை (புறம்.43,170)
    11. புலவர் புகழ்வதை விரும்புதல் (புறம்.282,307)
    12. களிறு எறிந்து பெயர்தலாகிய காளையின் கடமையை நிறைவேற்றுதல்       (புறம்.310)
    13. வஞ்சினம், நெடுமொழி கூறிப் போருக்குச் செல்லுதல் (புறம்.71-73,298,376)

    என்பன போர்வீரர்களின் பண்புகளாகப் புறநானூற்றில் புலவர்களால் பதிவு செய்யப்பட்டுள்ளன. இத்தகைய உயர்ந்த பண்புகளைக் கொண்ட வீரர்கள், போரில் புண்பட்டு வீழ்ந்தபொழுதும், அப்புண்ணினை ஆற்றிக்கொண்டு உயிர்வாழ வேண்டும் என எண்ணாதவராய்ப் போரிலேயே மடிந்து புகழ் எய்தவே விரும்பினர்.

    பகைப்படைக்கு அஞ்சாத நிலை

    போரில் வீரனொருவன் தன்மேல் வந்த யானையைக் கொன்று, தன்னை எதிர்த்து வந்த பகைவரின் வேலை வாங்கி மடித்து, அவர்தம் தலைவனை உயரத் தூக்கி நிலத்தில் மோதியடித்தமையை,

       “பீலிக் கண்ணிப் பெருந்தகை மறவன்
         மேல்வருங் களிற்றொடு வேல்துரந்து இனியே
         தன்னும் துரக்குவன் போலும் – ஒன்னலர்
         எஃகுடை வலத்தர் மாவொடு பரத்தரக்
         கையின் வாங்கி தழீஇ
         மொய்ம்பின் ஊக்கி மெய்க்கொண் டனனே”             (புறம்.274:2-7)

    என உலோச்சனார் பாடியுள்ளார். உயிர் நீங்கிய பகைவன் உடலைப் பற்றிக் கொண்டு, தன்னை எதிர்க்கும் பகைப்படைக்கு அஞ்சாமல் நிற்கின்றான். இவ்வாறு போர்க்களத்தில் வீரர்கள் எதற்கும் அஞ்சாதவர்களாக விளங்கியுள்ளனர்.

    தோழனைக் காக்கும் பொருட்டு போரிடுதல்

    போரில் தன் படைசார்ந்த நண்பன், பகைவரால் சூழப்பட்டிருப்பதை அறிந்த வீரனொருவன், நண்பனைக் காக்கும் பொருட்டு முன்னேறிச் சென்று காக்கும் தன்மையினை,

    “திணிநிலை அலறக் கூழை போழ்ந்துதன்
    வடமாண் எஃகம் கடிமுகத்து ஏந்தி
    ஓம்புமின் ஓம்புமின் இவண்! என ஓம்பாது
    தொடர்கொள் யானையின் குடர்கால் தட்பக்
    கன்று அமர் கறவை மான
    முன்சமத்து எதிர்ந்ததன் தோழற்கு வருமே ”         (புறம்.275:4-9)

    என ஒரூஉத்தனார் புகழ்ந்துள்ளார்.  அதாவது சங்கிலியால்கட்டப் பெற்ற களிற்றின் கால்களைப் போல இறந்த வீரர்களின் குடல்கள் முன்னேறும் வீரர்களின் கால்களைச் சுற்றிக் கொள்கின்றன. பகைவரும் பலர் தடுக்கின்றனர். இதைப் பற்றியெல்லாம் கவலையுறாது கன்றை நோக்கி ஓடும் பசுவைப் போல பகைவரால் சூழப்பட்ட தன் நண்பனைக் காக்க வீரனொருவன் விரைந்து செல்கின்றான்.

    பகைவர் படைக்கு நோய் போன்றவன்

    போரில் வீரனொருவன் பகைவர் படை முழுவதையும் கலக்கிச் சிதறடித்தான். பகைவர் படை உடைந்து கெடுவதற்குரிய நோய் போன்றவனாகச் செயல்பட்டதை,

    “மடப்பால் ஆய்மகள் வள்உகிர்த் தெறித்த
    குடப்பால் சில்உறை போலப்
    படைக்குநோய் எல்லாம் தான்ஆ யினனே ”                 (புறம்.276:4-

    என மதுரைப்பூதன் இளநாகனார் பாடியுள்ளார். குடத்தில் உள்ள பாலின் அளவறிந்து இட்ட உறை அப்பால் முழுவதையும் கலங்கச் செய்வது போல வீரனொருவன் மாற்றார் படை முழுதும் கலங்கும் படியாக அப்படைக்கு பெரும் நோய் போல அச்சத்தையும் துன்பத்தையும் கொடுத்துள்ளான்.

    வாய்ப்புக்காகக் காத்திராமல் போரிடுதல் 

    போரில் ஈடுபட்டுள்ள வீரனொருவன் தான் பகைவரை எதிர்த்துச் செல்லும் முறை வரும்வரை காத்திராமல் மறவுணர்வு மிக்கவனாய் முன்னேறிச் சென்று தன் முன்னே வரும் பகைவரின் பெரும்படையை எதிர்க்கின்றான்.

    ”என்முறை வருக என்னான் கம்மென
    எழுதரு பெரும்படை விலக்கி
    ஆண்டு நிற்கும் ஆண்தகை யன்னே”               (புறம்.292:6-8)

    என நன்னாகனார் நவின்றுள்ளார். இவ்வாறாக வீரர்கள் போரிலே தனக்கான வாய்ப்புகள் வரும் வரை காத்திராமல் தாமே முன்வந்து ஈடுபாட்டோடும் பொறுப்புணர்வோடும் செயல்பட்டுள்ளனர்.

    அரவு உமிழ் மணி அன்ன தன்மை 

    போர்க்களத்தில் இருபக்கத்து வீரர்களும் மிகக் கடுமையாகப் போர்செய்கின்றனர். அப்பொழுது வீரனொருவன் தன் பெயரையும் தன் மன்னன் பெயரையும் சொல்லி, உங்களுள் வாழ்நாள் எல்லை முடிந்தவர் என்னோடு போர் செய வாருங்கள் என்று அழைக்கின்றான். அவன் போர்த்திறமை கண்ட பகைவர் அவனை நெருங்குவதற்கு அஞ்சுகின்றனர். இதனை,

    ”தமர்பிறர் அறியா அமர்மயங்கு அழுவத்து
    இறையும் பெயரும் தோற்றி நுமருள்
    நாள்மறை தபுத்தீர் வம்மின் ஈங்குஎன
    போர்மலைந்து ஒருசிறை நிற்ப யாவரும்
    அரவு உமிழ் மணியின் குறுகார்
    நிரைதார் மார்பின் நின்கேள்வனைப் பிறரே ”          (புறம்.294:4-9)

    என பாம்பு உமிழ்ந்த மணியை நெருங்குவதற்கு எவ்வாறு அஞ்சுவாரோ அவ்வாறே அவ்வீரனை நெருங்குவதற்கும் அஞ்சுகின்ற தன்மையைப் பெருந்தலைச் சாத்தனார் பெருமிதத்தோடு கூறியுள்ளார். இவ்வாறாக  வீரர்கள்  பகைவரும் நெருங்குவதற்கு அஞ்சக்கூடிய தன்மையுடையவர்களாகச் செயல்பட்டுள்ளனர்.

    அண்ணனுக்காகத் தம்பி போர் செய்தல் 

    போர் பல நாட்கள் நடைபெறுவதுண்டு. அந்நிலையில் முந்தைய நாள் நடந்த போரில் தன் அண்ணனைக் கொன்றவனைத் தேடிக்கொண்டு மறுநாள் அவன் தம்பிவருகின்றான். அவ்வீரனின் கண்கள் அகலில் போடப்பெற்ற குன்றி மணியைப் போல சுழன்று நோக்கியது. இதனை,

    ”நெருநல் எல்லைநீ எறிந்தோன் தம்பி
    அகல்பெய் குன்றியின் சுழலும் கண்ணன்
    பேர்ஊர் அட்ட கள்ளிற்கு
    ஓர்இல் கோயின் தேருமால் நின்றே ”                (புறம்.300:3-6)

    என அரிசில்கிழார் தான் கண்டு அதிசயித்த அண்ணன் தம்பி பாசத்தைப் பதிவு செய்துள்ளார். அவன் கண்கள் பெரிய ஊரில் காய்ச்சப் பெற்ற கள்ளைப் பெறுவதற்குத் தன் வீட்டில் புகுந்து ஒரு கலயத்தைத் தேடுபவனைப் போல பகைவனைத் தேடியது. இவ்வாறாக வீரர்கள் பகைவாpன் படைவீரர்களைப் பகைத்து அழித்தாலும் தன் படைவீரர்கள் மீது பாசவுணர்வோடு செயல்பட்டுள்ளனர்.

    பகைத்துப் பார்த்தாரை அழித்தல் 

    போர்க்களத்திலே வீரனொருவன் தன்னைப் பகைத்துப் பார்ப்பவரை எல்லாம் அழிக்கும் காளை போன்றவனாகச் செயல்பட்டுள்ளான். அவன் தன் மறவுணர்வின் மிகுதியால் களத்திலே கொன்று குவித்த களிறுகளின் எண்ணிக்கை மிகப் பலவாகும் என்பதை,

    ”நோக்கினர்ச் செகுக்கும் காளை ஊக்கி,
    வேலின்அட்ட களிறு பெயர்த்து எண்ணின்
    விண்இவர் விசும்பின் மீனும்
    தண்பெயல் உறையும் உறைஆற் றாவே ”               (புறம்.302:8-11)

    என்ற பாடலடிகள் விளக்குகின்றன. இங்குப் புலவர் கற்பனையாக விண்மீன்களையும் மழைத்துளிகளையும் விடக் களிறுகளின் எண்ணிக்கை அதிகமானது என்கின்றார். இவ்வாறாக வீரர்கள் பகைவர்களின் பார்வையைத் தம் உள்ளுணர்வால் அளவிட்டு அவர்களை அழித்துள்ளனர்.

    படையணிகளைப் பிளந்து போரிடுதல் 

    ஒன்றாகச் சேர்ந்திருக்கக் கூடியவற்றில் பிளவு ஏற்பட்டால் அதன் பலம் பாதியாகக் குறைந்துவிடும். இங்கு வீரனொருவன் ஒன்றாகச் சேர்ந்திருக்கும் பகைவரின் படைகளிடையே பிளவை ஏற்படுத்தி பின் அவர்களை அழிக்கின்றான். அவன் போர்க்களத்தில் தன் மறவுணர்வு மேம்பட வெறி கொண்டவனாய்த் தன் கை வேலால் எதிர்ப்பட்டவரின் மார்பைக் குத்திக் கொல்கின்றான். பின்பு கடலைப் பிளந்து கொண்டு செல்லும் படகைப் போல பகைவரின் படையணிகளைப் பிளந்து கொண்டு சென்று அப்பகைவரின் களிறுகளை அழிக்கின்றான். இதனை,

    “எள்ளுநர்ச் செருக்கும் காளை கூர்த்த
    வெந்திறல் எஃகம் நெஞ்சுவடு விளைப்ப
    ஆட்டிக் காணிய வருமே – நெருநை
    உரைசால் சிறப்பின் வேந்தர் முன்னர்க்
    கரைபொரு முந்நீர்த் திமிலின் போழ்ந்து அவர்
    இலங்குமருப்பு யானை எறிந்த எற்கே”              (புறம்.303:3-8)

    என எருமை வெளியனார் எடுத்துரைத்துள்ளார். இவ்வாறாக ஒன்றாக இருந்த பகைவரின் பலத்தை முதலாவது குறைத்து விட்டு பின்பு அவர்களை வெறியுணர்வோடு அழித்துள்ளான்.

    தம்பிக்காகப் போரிடுதல்

    முதல் நாள் போரில் வீரனொருவனின் தம்பி பகைவரால் கொல்லப்படுகின்றான். அதனை அறிந்து அவன் அண்ணன், என் தம்பியைக் கொன்றவனை மறுநாள் போரில் அவன் தம்பியோடு சேர்த்துக் கொல்வேன். அதுவரை சிறிதளவு கூட உண்ணமாட்டேன் என நெடுமொழி கூறுகின்றான். 

    “…….. …………………… நெருநை;
    எம்முன் தப்பியோன் தம்பியொடு, ஓராங்கு
    நாளைச் செய்குவென் அமர்எனக் கூறிப்
    புன்வயிறு அருத்தலும் செல்லான் பன்மான்
    கடவும் என்ப பெரிதே; அதுகேட்டு
    வலம்படு முரசின் வெல்போர் வேந்தன்
    இலங்கும் இரும் பாசறை நடுங்கின்று ”                  (புறம்.304:4-10)

    என ஒற்றறிந்தவன் பகை வீரரிடம் சென்று சொல்ல அப்பகைவர் பாசறையே நடுங்கிற்று. இவ்வாறு வீரர்கள் தம் படைவீரர்கள் மீது உள்ள பாசவுணர்வால் பகைவரின் படைகளே அஞ்சி நடுங்கும்படியாகப் போர் புரிந்துள்ளனர்.

    முடம்பட்ட எருமை போன்று போரிடுதல் 

    உதவுவார் யாரும் இல்லா காட்டித்தே உப்பு வணிகரால் கைவிடப்பட்ட முடமான எருமையானது தன் அருகே கிடைத்த அனைத்தையும் தின்று தீர்ப்பது போல மறவன் ஒருவன் அசையாமல் ஓரிடத்து நின்று தன்னை எதிர்த்து வரும் பகைவர் அனைவர் உயிரையும் கவர்கின்றான். இதனை,

    ”நீரும் புல்லும் ஈயாது உமணர்
    யாரும்இல் ஒருசிறை முடத்தொடு துறந்த
    வாழா வான்பகடு ஏய்ப்பத் தெறுவர்
    பேர்உயிர் கொள்ளும் மாதோ ”          (புறம்.307:7-10)

    என்ற பாடலடிகள் விளக்குகின்றன. இங்கு வீரனொருவனின் போர்க்களச் செயலானது முடம்பட்ட எருமையின் செயலோடு ஒப்பிடுவதன் வாயிலாக பகைவரை அழித்த வீரனின் பெருமை வெளிப்படுகின்றது.

    பகைவரை நடுங்கச் செய்தல்

    வீரனொருவன் போர் செய்வதற்காகப் பாசறையில் வந்து தங்குகின்றான். இவன் நல்ல பாம்பு வாழும் புற்றைப் போலவும், கொல்லேறு திரி தரும் மன்றம் போலவும் வலிமையுடையவனாகக் காணப்படுகின்றான். இம்மறவனின் வருகையறிந்து பகைவர் நடுங்குவதை,

    “நல்அரா உறையும் புற்றம் போலவும்
    கொல்ஏறு திரிதரும் மன்றம் போலவும்
    மாற்றுஅருந் துப்பின் மாற்றோர் பாசறை
    உளன்என வெரூஉம் ”                          (புறம்.309:3-6)

    என கோசிகனார் பாடியுள்ளார். இவ்வாறாகக் கண்டாரைக் கொல்லும் காளை போன்ற தன்மையுடைய, பிறரால் வெல்வதற்கு அரிய வீரர்களின் வருகையை அறிந்து பகைவர்கள் அஞ்சி நடுங்கியுள்ளனர்.

    பகைவர் படைக்குத் தடைக்கல்லாகச் செயல்படுதல் 

    போர்க்களத்தில் தன் மன்னன் பகைவரால் துன்புற்றபோது மறவனொருவன் கொடியை உயர்த்தி, படைத்தலைமையேற்று, கட்டுக்கு அடங்காமல் வரும் பகைவரின் பெரும்படையைத் தடுத்து நிறுத்தும் தடைக்கல்லாகச் செயல்படுகின்றான். இதனை,

    “…………………. ………. கொடிஎடுத்து
    நிறை அழிந்து எழுதரு தானைக்குச்
    சிறையும் தானே – தன்இறைவிழு முறினே ”               (புறம்.314:5-7)

    என ஐயூர் முடவனார் பாடியுள்ளார். இவ்வாறாக வீரர்கள் தம் பகைவர் படைகளின் முன்னேற்றத்திற்குத் தடைகற்களாகச் செயல்பட்டுள்ளனர்.

    ஆழி போன்று செயல்படுதல்

    வீரனொருவன் தன் மன்னன் படையின் முன்பகுதி அழியாமல் இருக்க, பகைப்படையை அழிக்க வாளை ஏந்தி நிற்கின்றான். இம்மறவனே பகைப்படை தன்னைக் கடந்து மேலே செல்லாதவாறு தடுத்து நிறுத்துகின்றான். இதனால் இவன் பெரிய கடலுக்குக் கரை போன்றவன் என்று பாராட்டப்படுகின்றான்.

    “வேந்துடைத் தானை முனைகெட நெரிதர
    ஏந்துவாள் வலத்தன் ஒருவன் ஆகித்
    தன்இறந்து வாராமை விலக்கலின் பெருங்கடற்கு
    ஆழி அனையன் மாதோ”                    (புறம்.330:1-4)

    என்ற பாடலடிகள் வீரர்கள் கடல் போன்ற தன் படைக்குக் கரையாக இருந்து காத்தமையை விளக்குகின்றன.

    இவ்வாறாக அனைத்துப் போர்களிலும் வீரர்கள் அடுத்தவர்களுக்காகக் காத்திருக்காமல் தன்னால் முடிந்த மட்டும் உயிரைப் பணயம் வைத்துப் போரிட்டுள்ளனர்.

    முடிவுரை

    வீரர்கள்  போரின்போது தன் குடும்பத்தைப் பற்றிய எந்த நினைவுகளும் இல்லாமல் முழுமையான பலத்தோடு வலிமை மிக்கவர்களாகவும் சுறுசுறுப்பானவர்களாகவும் வெற்றி ஒன்றையே நோக்கமாகக் கொண்டுச் செயல்பட்டுள்ளனர். பகைவர்களைப் பார்க்கும் போது மறவுணர்வு மேம்பட்டும் தன்படை வீரர்களைப் பார்க்கும் போது பாசவுணர்வு மேம்பட்டும் செயல்பட்டுள்ளனர். வீரர்களின் இப்பண்புகளைப் பல்வேறு உவமைகள் வாயிலாகப் புலவர்கள் பதிவுசெய்துள்ளனர்.

    குறிப்புகள்

    1. தொல்காப்பியம், பொருளதிகாரம், இளம்பூரணர் உரை
    2. புறநானூற்றுப் பாடல்கள், கழக உரை

    *****

    கட்டுரையாளர் – தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர்,
    தி  ஸ்டாண்டர்டு ஃபயர்ஒர்க்ஸ் இராஜரத்தினம் மகளிர் கல்லுாரி,
    சிவகாசி – 626 123.

     

    Share
  • பழந்தமிழக வரலாறு – 8

    கணியன்பாலன்

                 பண்டைய வடஇந்திய அரசுகள்

         கி.மு. 6ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 3ஆம் நூற்றாண்டு வரையிலான வட இந்தியக் காலகட்டமே சங்ககால வரலாற்றுக் காலகட்டமாகும். பழங்காலத்தமிழக வரலாற்றை முழுமையாகக் கட்டமைக்க, அக்காலகட்ட தக்காண, வடஇந்திய அரசுகளின் வரலாறு குறித்தப் புரிதல் தேவை என்பதால் அவை இங்கு சுருக்கமாகத் தரப்பட்டுள்ளன. கி.மு. 8ஆம், 7ஆம் நூற்றாண்டுகளில் 16 ஜனபதங்கள் எனப்படுகிற 16 நகர்மைய அரசுகள் வட இந்தியாவில் இருந்தன. கி.மு. 6ஆம் நூற்றாண்டு வாக்கில்  அவைகளுக்கிடையே நடந்த போட்டிகளில் மகத அரசு வெற்றி பெற்று ஒரு பேரரசாக வளர்ச்சிபெற்றது. அரியங்கா(கி.மு. 600-413) வம்சத்தைச்சேர்ந்த பிம்பிசாரனும்(கி.மு. 543-493), அவனது மகன் அசாத்சத்ருவும்(கி.மு. 493-461) மகதத்தைப் பேரரசாக ஆக்குகின்றனர். அரியங்கா வம்சத்திற்குப்பின் கி.மு. 413இல் சிசுநாகர் வம்சம்(கி.மு. 413-345) தோன்றுகிறது. அதன் அழிவில் நந்த வம்சம்(கி.மு. 345-323) உருவாகிறது. நந்த வம்சத்தின் மகாபத்ம நந்தன் மகத அரசை இந்தியாவெங்கும் புகழ்பெற்ற ஒரு பேரரசாக ஆக்குகிறான். அதன்பின் அந்த நந்த வம்சத்தின் அழிவில்தான் மௌரிய வம்சம் உருவாகிறது.

         இந்த ஆட்சிமாற்றத்தின் போதுதான் மாமூலனார் என்கிற பெரும் வரலாற்றுப்புலவர் தமிழகத்தில் வாழ்ந்துள்ளார். மௌரிய வம்சம் கி.மு. 323-187 வரை இருந்தது. அலெக்சாந்தர் கி.மு. 327இல் வடஇந்தியா மீது படையெடுக்கிறான். கி.மு. 325இல் வடஇந்தியாவைவிட்டு வெளியேறி கி.மு. 323இல் இறந்து விடுகிறான். அவன் வடஇந்தியாவை விட்டு வெளியேறிய உடன் சந்திரகுப்த மௌரியன் நந்தர்களைத் தாக்கி வென்று கி.மு. 321 வாக்கில் மகத அரசின் அரியனையில் அமருகிறான். 24 ஆண்டுகள் அவன் அரசாள்கிறான். அதன் பின் கி.மு. 297இல் அவனது மகன் பிந்துசாரன் அரசனாகிறான். அவனது ஆட்சிக்காலம் என்பது கி.மு. 297-272 வரையான  25 வருடங்கள் ஆகும். அதன்பின் அவனது மகன் அசோகர் கி.மு. 268இல்தான் முடிசூடுகிறார். அவரது ஆட்சிக்காலம் கி.மு. 268-232 வரையான சுமார் 34 வருடங்கள் ஆகும். அசோகருக்குப்பின் வந்தவர்கள் பலவீனமானவர்களாக இருந்தனர். அதன் கடைசி அரசனை, புசுயமித்திரன் என்கிற பிராமணத்தளபதி  கொன்றுவிட்டு  சுங்க வம்சத்தைத் தொடங்குகிறான். சுங்க வம்சத்தின் காலம் கி.மு. 187-75 ஆகும். அதன்பின் கன்வ வம்சம் கி.மு. 75-30 வரை 45 வருடம் ஆள்கிறது. சுங்கவம்சம், கன்வவம்சம் இரண்டும் பிராமண வம்சங்கள் ஆகும். அதன்பின் மகத அரசு இல்லாதுபோகிறது. மகதத்தைச்சுற்றி பல சிறு சிறு இனக்குழு அரசுகள் தங்களை நிலை நிறுத்திக்கொள்கின்றன.

         மௌரியர்களுக்குப்பின் சுங்க வம்ச ஆட்சிக் காலத்தில் வட மேற்கிலிருந்து கிரேக்கர்கள் மகத அரசைத் தொடர்ந்து தாக்கி வந்தனர். அவர்களுள் மினான்டர்(கி.மு. 150-135) என்பவன் பாடலிபுத்திரம் வரை படையெடுத்து வந்தான் எனப்படுகிறது. இந்தோகிரேக்க மன்னர்களில் இவனே புகழ்பெற்றவன் ஆவான். இந்தோ கிரேக்கர் ஆட்சி நீண்டகாலம் நீடிக்க வில்லை. சைத்தியர்கள் எனப்படும் சாகர்கள் இவர்களை கி.மு. முதல் நூற்றாண்டிலிருந்து வடக்கிலிருந்து தாக்கத் தொடங்கினர். அவர்கள் பெரிய எதிர்ப்புகள் இல்லாமல் இந்தியாவின் பல பகுதிகளை வென்றனர். சாகர்கள்  கிரேக்கர்களைவிட பலபகுதிகளை இந்தியாவில் ஆண்டனர். சாகர்களில் ஐந்து பிரிவினர், ஆப்கானிஸ்தான், தட்சசீலம், மதுரா, மேற்கு இந்தியா, மேல்தக்காணம் ஆகிய ஐந்து இடங்களில் ஆண்டனர். இதே காலகட்டத்திலும் கி.பி. முதல் நூற்றாண்டிலும் பல இனக்குழுக்கள் வடக்கிலிருந்து இந்தியாவைத் தாக்கின. மதுராவைத் தலைநகராகக் கொண்ட சாகர்கள் 200 ஆண்டுகள் ஆண்டனர்.  மேற்கு இந்தியாவில் இருந்த மேற்கு சத்ரப் எனப்படும் சாகர்களின் ஆட்சிதான் கி.பி. 400 வரை நீடித்தது. இவர்களில் புகழ்பெற்றவன் இருத்ரதாமன்(கி.பி. 130-150) ஆவான். அந்நிய அரசனான இவன்தான் முதன் முதலாக சமற்கிருதத்தில் ஒரு நீண்ட கல்வெட்டுப் பொறிப்பை உருவாக்கினான். மேற்கு சத்ரப் அல்லது சாகர்களின் ஆட்சி என்பது கி.பி. 35 முதல் கி.பி. 405 வரை நீடித்தது.

         சாகர்கள் மேற்கு இந்தியாவில் ஆட்சியைத் தொடங்கிய போது குசானர்கள் இந்தியாவின் வடக்கே தங்கள் ஆட்சியைத் தொடங்கினர். அவர்களது ஆட்சி கி.பி. 30 முதல் கி.பி. 230வரை இருந்தது. இதில் புகழ்பெற்றவர் கி.பி. 78இல் ஆட்சியைத் தொடங்கிய கனிசுகர் ஆவார். இவர்தான் கி.பி. 78இல் தொடங்கிய,  சக சகாப்தம் என்பதைத் தொடங்கியவர் ஆவார். இவர் கிழக்கில் பாடலிபுத்திரம் வரை படையெடுத்தார். கனிசுகர் ஆட்சிக்காலம் என்பது கி.பி. 78-101 வரையாகும். சுங்க, கன்வ மகத அரச வம்சங்கள், சாதவாகனர்கள், சாகர்கள், குசானர்கள் ஆகிய ஐந்து அரச வம்சங்கள் தான் இக்காலத்தில் வடக்கிலும் தக்காணத்திலும் ஆண்டவர்கள் ஆவர். சாதவாகனர்கள் குறித்து முன்பே சுருக்கமாகச் சொல்லப்பட்டுள்ளது. சுமார் கி.மு. 230இல் இருந்து கி.பி 220 முடிய 450 வருடம் சாதவாகனர்கள் தக்காணத்தில் ஆண்டனர். இடையே கலிங்கமன்னன் காரவேலன் போன்றவர்கள் ஆண்டனர். இந்தக் காலகட்டத்தில்தான் தமிழ் அரசுகளின் வட படையெடுப்புகள் இருந்தது. ஆகவே வட அரசுகளின் காலத்தை அறிதல் ஒரு தெளிவை வழங்கும்.

                    வட இந்திய அரசுகள்(கால அட்டவணை)

    வம்சம்               அரசன்          காலம்               ஆண்டுகள்

    அரியங்கா வம்சம்                     கி.மு. 600-413         187

    அரியங்கா வம்சம்     பிம்பிசாரன்      கி.மு. 543-493         50

    அரியங்கா வம்சம்     அசாத்சத்ரு      கி.மு. 493-461         32

    சிசுநாகர் வம்சம்                      கி.மு. 413-345         68

    நந்த வம்சம்                          கி.மு. 345-325         20

    கலவரங்களும், குழப்பங்களும்          கி.மு. 325-322         04

    இமயவரம்பனின் வடபடையெடுப்பு       கி.மு 325-323           03*

    மௌரிய வம்சம்                      கி.மு. 322-187         135

    சந்திரகுப்த மௌரியன்                 கி.மு. 321-297         24

    பிந்துசாரன்                           கி.மு. 297-272         25

    மௌரியப்படையின் தோல்வி                கி.மு 297-288          11*

    அசோகர்  ஆட்சிக்காலம்               கி.மு. 268-232         36

    செங்குட்டுவனின் வடபடையெடுப்பு      கி.மு. 232-230           03*

    சாதவாகன வம்சம்                    கி.மு. 230-கி.பி. 220    450

    சாதவாகன வம்சம்    சிமுகா          கி.மு. 230-207         23

    இந்தோகிரேக்கர்       டெமிட்ரியசு-1    கி.மு. 200-180         34

    சுங்க வம்சம்(மகதம்)                  கி.மு. 187-75                112

    கலிங்கம்             காரவேலன்      கி.மு. 180-165         15

    சாதவாகன வம்சம்    சதகர்னி         கி.மு. 180-124         56

    இந்தோகிரேக்கர்       மினான்டர்      கி.மு. 150-135         15

    நலங்கிள்ளியின் உச்சயினி படையெடுப்பு கி.மு.  82-80            03*

    சுங்க வம்சத்தின் இறுதி ஆண்டு        கி.மு.  75               –

    கன்வ வம்சம்(மகதம்)                 கி.மு. 75-30           45

    சாதவாகன வம்சம்    புலுமாயி        கி.மு. 30-6            24

    குசான வம்சம்                        கி.பி. 30-230           200

    மேற்குசத்ரப்,சாகா வம்சம்              கி.பி. 35-405           370

    குசான வம்சம்        கனிஷ்கர்        கி.பி. 78-101           23

    சக சகாப்தம் தொடங்கிய ஆண்டு       கி.பி. 78                –

    சாதவாகன      கௌதமிபுத்ர சதகர்னி கி.பி. 106-130                24

    சாதவாகன      வசிட்திபுத்ர புலுமாயி  கி.பி. 130-160                30

    மேற்கு சத்ரப்         உருத்ரதாமன்    கி.பி. 130-150                20

    சாதவாகன      யாஜன சதகர்னி       கி.பி. 170-199                29

    குறிப்பு: * இக்குறியிட்டவை தமிழகம் சார்ந்த தகவல்கள் ஆகும்.

         “மௌரியர்களுக்குப்பின் வந்த வடஇந்திய அரச வம்சங்களின் காலவரிசை ஒரு பொழுதும் சரியானவாறு வரையறுக்கப்படவில்லை எனவும் கி.மு.327இல் அலெக்சாந்தர் நிகழ்த்திய பஞ்சாப் படையெடுப்புதான் முதன்முதலாக ஒரு வரலாற்றுக் காலத்தை(வடஇந்தியாவுக்கு) உறுதி செய்தது எனவும்” கூறுகிறார் டி.டி. கோசாம்பி(1). “கி.மு. முதல் நூற்றாண்டு முதல் கி.பி. 2ஆம் நூற்றாண்டு வரையிலான இந்திய அரசியல் வரலாறு தங்களுக்குள் சண்டையிட்டுக்கொள்ளும் இனக்குழுக்கள், மன்னர்கள், வீரமிக்க ஆக்ரமிப்பாளர்கள் ஆகியோரைப்பற்றிய ஒரு குழப்பமான சித்திரத்தைதான் அளிக்கின்றன” என்கிறார் டி. என். ஜா(2). ஆகவே கி.மு. 1ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 2ஆம் நூற்றாண்டு வரை வட இந்தியாவில் ஒரு குழப்பமான நிலைதான் இருந்து வந்தது எனலாம்..

    பார்வை & ஆதார நூல்கள்:

    1.பண்டைய இந்தியா, டி.டி. கோசாம்பி, தமிழில் ஆர்.எசு. நாராயணன், NCBH வெளியீடு, செப்டம்பர்-2006. பக்:386; பக்; 286

    2.பண்டைக்கால இந்தியா, டி. என். ஜா, தமிழில் அசோகன் முத்துசாமி, பாரதி புத்தகாலயம், டிசம்பர் 2011, பக்: 150.

    பிறஆதார நூல்கள்: 3.இந்திய வரலாறு ஒரு அறிமுகம், டி.டி. கோசாம்பி அவர்கள், தமிழில் சிங்கராயர், விடியல் பதிப்பகம், அக்டோபர்-2011,.

    4.அசோகர், விசென்ட்.சுமித், தமிழில் சிவமுருகேசன், 2009.

    5.தென் இந்திய வரலாறு, டாக்டர் கே.கே. பிள்ளை, எட்டாம் பதிப்பு-2011.

    6.சாதவாகனர்கள், குசானர்கள், சாகர்கள், மகத அரசுகள், இந்தோ கிரேக்கர்கள், மன்னன் காரவேலன் ஆகியோர் பற்றிய விக்கிபீடியா, இணைய தள தரவுகள்.

    Share
  • சங்கப்பெண் கவிஞர்களின் புறப்பாடல்களில் காணலாகும் உலக வழக்கைத் தழுவிய மெய்ப்பாடுகள்

     

    ப.சூர்யலெக்ஷ்மி,
    பதிவு எண்: 12178
    முனைவர் பட்ட ஆய்வாளர்,
    தமிழ் உயராய்வு மையம்,
    தமிழியல் துறை,
    ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரி,
    திருநெல்வேலி.
    ஆய்வு மையம்: மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்,
    அபிசேகப்பட்டி, திருநெல்வேலி-627012 தமிழ்நாடு, இந்தியா.

    நெறியாளர்: ந.வேலம்மாள், உதவிப் பேராசிரியர்,
    தமிழியல் துறை, ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரி, திருநெல்வேலி-627008

     

     

    முன்னுரை:-

    தொல்காப்பியர் மெய்ப்பாட்டியலில் பொது மெய்ப்பாடு என்பது எண்வகை மெய்ப்பாடு அவை நாடக வழக்கினைச் சார்ந்து வரும். அதில் நானான்கு வகையினைக் கூறி 32 என்பார். அவை அல்லாத அதில் அடங்காத 32 மெய்ப்பாடும் உலக வழக்கினைப் பெரிதும் தழுவிய மெய்ப்பாடு ஆகும். உரையாசிரியரான இளம்பூரணரும் பேராசிரியரும் இந்த 32 மெய்ப்பாடுகளும் அகத்திற்கும் புறத்திற்கும் பொதுவாக நிகழும் என்கிறார். “ச.சோமசுந்தர பாரதியார் இவை மூப்பத்திரண்டும்  எவ்வெட்டாய் முறையே இயற்கைப்புணர்ச்சி, இடந்தலைப்பாடு, பாங்கொடு தழாஅல், தோழியிற்புணர்வு என்ற நான்கு பகுதிகட்கும் தொகுக்கப்பட்டுள்ளன என்றும் இவை அகத்துறைக்கே சிறப்பாக வரும் என்றும் ஏதுக்காட்டி நிறுவுவதுடன் பழைய உரையாசிரியர் இருவர் கொள்கைகளையும் மறுத்துவிடுவர்”. உரையாசிரியர்களின் மாறுபட்ட கருத்தினை நினைவில் கொண்டு சங்கப்பெண் கவிஞர்களின் புறநானூற்றுப் பாடல்களில் உலக வழக்கினைத் தழுவிய மெய்ப்பாட்டினைக் கண்டறிவதே இவ்வாய்வின் நோக்கமாகும்.

    உலகவழக்கினைத் தழுவிய மெய்ப்பாடு:-

    உலக வழக்கைத் தழுவிய மெய்ப்பாடு 32 ஆகும். அவை உடைமை, இன்புறல், நடுவுநிலை, அருளல், தன்மை, அடக்கம், அன்பு, கைம்மிகல், நலிதல், சூழ்ச்சி, வாழ்த்தல், நாணுதல், துஞ்சல், அரற்று, கனவு, முனிதல், நினைதல், வெரூவுதல், மடிமை, கருதல், ஆராய்ச்சி, விரைவு, உயிர்ப்பு, கையாறு, இடுக்கண், பொச்சாப்பு, பொறாமை, வியர்த்தல், ஐயம், மிகை, நடுக்கம் என்பவையாகும்.

    உடைமை:-

    உடைமை என்பது “செல்வம் உரியப்பொருள், அணிகலன், உரியவை” என்று தமிழ் தமிழ் அகராதி பொருள் கூறுகிறது.

    உடைமை என்பதனை “யாதானுமொரு பொருளை உடையனாயினால் வருதலாகும் மனநிகழ்ச்சி என்று இளம்பூரணர் கூறுகிறார். “உடைமை என்பது செல்வம், செல்வநுகர்ச்சியாயின் உவகைப்பொருளாம்; இஃது அன்னதன்றி நுகராதே அச் செல்வந்தன்னை நினைந்து இன்புறுதற்கு ஏதுவாகிய பற்றுள்ளம் என்று பேராசிரியர் கூறுகிறார். உடைமை மெய்ப்பாடு பின்வருமாறு,

    நிலப்பரப்பு நம்முடையது என்று உரிமை உடைய மன்னன் ஆனவன் இறந்து விட்டால் வலிமை உடையவர்களுக்கு நிலமானது உடைமை உடையதாகும் என்ற செய்தி ஔவையின் பாடலில் பின்வருமாறு, “தமவே ஆயினும் தம்மொடு செல்லா, வேற்றோர் ஆயினும் நோற்றோர்க்கு ஒழியும்” (புறம் 367,2-3), பாரிமகளிர் தம்முடைய பறம்பு மலையும் தந்தையும் முன்பு தமக்கு உடமையாக இருந்தமையைப் பாடலில் வெளிப்படுத்தியுள்ளார் “எந்தையும் உடையேம்; எம்குன்றும் பிறர் கொளார்” (புறம் 112, 2).

    நடுவுநிலை:-

    நடுவுநிலை என்பது “நீதி ஒரு பக்கம் சாயாமை” என்று தமிழ்-தமிழ் அகராதி விளக்கம் தருகிறது.

    நடுவுநிலை என்பது “ஒருமருங்கு ஓடாது நிகழும் மனநிகழ்ச்சி” என்று இளம்பூரணர் கூறுகிறார். நடுவுநிலை என்பது “ஒன்பது சுவையுள் ஒன்றென நாடக நிலையுள் வேண்டப்படுஞ் சமநிலை” என்று பேராசிரியர் விளக்கமளிக்கிறார்.

    சோழன் போரவைக் கோப்பெருநற்கிள்ளி ஆமூர் மல்லனோடு மற்போர் புரிந்தான். சிலர் கிள்ளி வெற்றிபெறுவான் என்றனர்; பனை மரத்தின் அடியில் தான்நின்று நடுநிலையோடு அக்காட்சியைக் கண்டதனை நக்கண்ணையார் கூறுவது பின்வருமாறு, “ஆடாடென்ப வொருசா ரோரே, ஆடன்றென்ப வொருசா ரோரே, நல்ல பல்லோ ரிருநன் மொழியே” (புறம் 85, 3-5).

    அருளல்:-

    அருளல் என்பது “ஈதல், அருள்செய்தல், உண்டாக்கல், காத்தல், கற்பித்தல், கொடுத்தல், அசைதல், சொல்லல், விழித்தல், கட்டளையிடல்” என்று தமிழ்-தமிழ் அகராதி பொருள் கூறுகிறது. “அருளாவது எல்லா உயிர்க்கும் அளிசெய்தல்” என்று இளம்பூரணர் கூறுகிறார். பேராசிரியர் அருளென்பது “மக்கள் முதலிய சுற்றத்தாரை அருளுதல்” என்கிறார்.

    குழந்தையின் மழலைச் சொற்கள் தந்தைக்கு அருளுவது போல ஔவைக்கு அதியமான் அருளுகிறான் என்று ஔவை கூறுவது பின்வருமாறு,   “அருள் வந்தனவால், புதல்வர்தம் மழலை, என்வாய்ச் சொல்லும் அன்ன; ஓன்னார்” (புறம் 92, 3-4). அதியமான் பரிசில் தருவது தாழ்ப்பினும் அவன் தருவது தவறாது அருளுடையவன் என்பதனை “கோட்டிடை வைத்த கவளம் போலக் கையகத் ததுவது பொய்யா காதே” (புறம் 101, 7-8). பொகுட்டெழினி துன்ப இருளினைப் போக்கி நிலவு போன்று அருளும் தன்மையுடையவன் என்பதனை “இசைவிளங்கு கவிகை நெடியோய்! திங்கள், நாள்நிறை மதியத்து அனையை; இருள்” (புறம் 102, 6-7). விறலியிடம், ஔவை பரிசிலரைப் பாதுகாக்க அதியமான் உண்கலத்தில் அருளுவான் என்கிறாள். பின்வருமாறு, “மெழுகுமெல் அடையின் கொழுநிணம் பெருப்ப” என்கிறாள். (புறம் 103, 10).

    நாஞ்சில் வள்ளுவன் ஆய் அண்டிரனிடம் விறலியர் சமைக்க அரிசியை ஔவை வேண்ட, அவனோ ஆராயாமல் பெருங்களிறு சுமக்கும் அளவில் உணவினை ஈந்து அருளிய செய்தி பாடலில், “பெருங்களிறு நல்கியோனே யன்ன தோர்” (புறம் 140, 8) காணலாகிறது. அதியமான் இறந்த பின்பு அவன் செய்த அருள் தன்மையினை ஔவை பாடலில் பதிவு செய்துள்ளார் அவை பின்வருமாறு, “சிறிய கட்பெறினே, எமக்கு ஈயும் மன்னே! பெரிய கட்பெறினே, யாம் பாடத் தான் மகிழ்ந்து உண்ணும்; மன்னே! சிறு சோற்றானும் நனிபல் கலத்தன்; மன்னே!” (புறம்235,1-5).

    இழந்த தன் கணவனின் அருள் தன்மையினை அவன் மனைவி எண்ணிப் பார்க்கிறாள். இரவலர்க்கு உணவு வழங்கி அவர்கள் கண்ணீரினைப் போக்கி அருளியமையைப் பாடலில் “இரவலர்த் தடுத்த வாயில் புரவலர் கண்ணீர்த் தடுத்த தண்நறும் பந்தர்” (புறம் 250, 2-3).

    தன்மை:-

    தனிமை என்பது “இயல்பு, குணம், நிலைமை, பெருமை, மெய்மை, அழகு,” என்று தமிழ்-தமிழ் அகராதி பொருள் தருகிறது.

    தன்மை என்பது “சாதியியல்பு” என்று இளம்பூரணர் கூறுகிறார். தன்மையென்பது, சாதித்தன்மை; அவையாவன: “பார்ப்பாராயிற் குந்தி மிதித்துக் குறுநடை கொண்டு வந்து தோன்றலும், அரசராயின் எடுத்த கழுத்தொடும் அடுத்த மார்பொடும் நடந்து சேறலும், இடையராயிற் கோற்கையுங் கொடுமடியுடையும் விளித்த வீளையும் வெண்பல்லுமாகித் தோன்றலுமென் றின்னோரன்ன வழக்குநோக்கிக் கொள்க” என்று பேராசிரியர் கூறுகிறார்.

    மற குலப்பெண் ஒருத்தி மண்ணாசையால் போர் செய்யும் பகைவேந்தர் உருவாக வேண்டும் என்று நடுகல்லைத் தொழுத செய்தி பின்வருமாறு, “ஓ…..வேந்தனொடு, நாடுதரு விழுப்பகை எய்துக எனவே” (புறம் 306, 6-7). மறகுலபெண்ணைப் பற்றி வினவியவனிடம் இவள் தந்தை வயலில் தனியே வென்ற மன்னருக்கு மனம் பேசியுள்ளார் என்கிறார், அள்ளூர் நன்முல்லையார். மறக்குலத்தின்வீரம் பொருந்திய தன்மையைக் காட்டுகிறது பாடலில், “கரந்தைஅம் செறுவின் பெயர்க்கும், பெருந்தகை மன்னர்க்கு வரைந்திருந் தனனே” (புறம் 340, 8-9). என்கிறார். மறக்குலப்பெண் முன்னொரு நாள் தந்தையையும் கணவனையும் போரில் பறிகொடுத்தாள் இருப்பினும் தன் ஒரே மகனான இளைய மகனையும் வெள்ளாடை உடுத்தி வேலைக் கையில் கொடுத்து போருக்கு அனுப்பும் செய்தி பாடலில், “வேல்கைக் கொடுத்து வெளிது விரித்து உடீஇ” (புறம் 279, 8).

    அதியமானைப் பகைத்த மன்னனிடம் அவன் நுண்ணிய பூண் அணிந்த மார்பினை உடையவன் நற்போரினைச் செய்யும் தன்மையன் அதனால் அவனை பகைக்க வேண்டாம் என்று எச்சரிக்கிறாள் பாடலில், “கதிர்விடு நுண்பூண் அம்பகட்டு மார்பின்” (புறம்88, 4).

    ஏறைக்கோன் குறிஞ்சி நிலத்துக் குறுநிலத் தலைவன் இவன் பிறர் வருகை கண்டு நாணமடைபவன். தனக்குரியோர் பிழை செய்யின் அதனைப் பொறுப்பவன். பலியிடத்து வலிமையுடையவன் அரசனிடத்தில் வலிமையுடையவன் இத்தகைய தன்மை வாய்ந்தவை என்று குறமகள் இளவெயினி கூறுவது பின்வருமாறு, “தமர்தற் றப்பி னதுநோன் றல்லும், பிறர்கை யறவு தானா ணுதலும்” (புறம் 157, 1-2).

    அன்பு:-

    அன்பு என்பது “பற்று, ஆசை, தயை, நேசம், கருணை, பிரியம், அருள், பக்தி, சிவம், என்று தமிழ்-தமிழ் அகராதி பொருள் கூறுகிறது. அன்பு என்பது “பயின்றார்மாட்டுக் காதல்” என்று இளம்பூரணர் கருதுகிறார்.

    “பேராசிரியர் அன்பென்பது, “அருட்கு முதலாகி மனத்தில் நிகழும் நேயம், அஃதுடையார்க்குப் பிறர்கண் துன்பங் கண்டவழிக் கண்ணீர் விழுமாதலின் அவ்வருளானே “அன்புடைமை விளங்கும்” என்று விளக்கம் தருகிறார்.

    அதியமான் ஔவையின் மீது பேரன்பு வைத்ததன் காரணமாக அரிய வகை நெல்லிக்கனியைத் தான் உண்ணாது புலவருக்கு ஈந்தமை பாடலில், “சிறியிலை நெல்லித் தீங்கனி குறியாது,.. சாதல் நீங்கஎமக்கு ஈத்தனையே” (புறம் 91, 9,11).

    வாழ்த்தல்:-

    வாழ்த்தல் என்பது “ஆசி கூறு, கடவுள் துதி, மங்களம் பாடுதல்” என்று தமிழ்-தமிழ் அகராதி பொருள் தருகிறது.

    வாழ்த்தல் என்பது “பிறனை வாழ்த்துதல்” என்று இளம்பூரணர் கூறுகிறார். வாழ்த்தல் என்பது “பிறரால் வாழ்த்தப்படுதல், இது பிறவினையன்றோவெனின் ஒருவனை நீடு வாழ்க என்று வாழ்த்தல் பிறவினையாயினும் அவன் வாழ்விக்கப்படுதலின் அவன் அவ்வாறு கூறல் அமையுமென்று” என்று பேராசிரியர் விளக்கம் தருகிறார்.

    ஔவையாருக்கு அதியமான் நெல்லிக்கனி ஈந்தமைக்காக நீலமணி போன்ற கரிய கழுத்தினையுடைய இறைவன் போல் வாழ்க என்று வாழ்த்துவது பின்வருமாறு, “நீல மணிமிடற்கு ஒருவன் போல மன்னுக-பெருமே! நீயே”  (புறம் 91, 6-7). ஔவையாரின் மற்றொரு பாடலில் சேரமான் மாவண்கோவும், பாண்டியன் கானப்பேர் தந்த பெருவழுதியும், சோழன் இராயசூயம் வேட்ட பெருநற்கிள்ளி மூவேந்தர்களும் ஒன்றாக இருக்கும்போது நல் அறத்தினைச் செய்தால் வானத்து விண்மீனைக் காட்டிலும், மழைத்துளிகளைக் காட்டிலும் நெடுநாள் வாழ்க என்று வாழ்த்துவது, “வானத்து வயங்கித் தோன்றும் மீனினும், இம்மெனப் பரந்து இயங்கு மாமழை உறையினும், உயர்ந்துமேந் தோன்றிய பொலிகநும் நாளே” (புறம் 367, 15-18).

    பொகுட்டெழினியிடம் திறை செலுத்தாத பகைமன்னன் நாட்டைக் கழுதையேர் பூட்டி அழித்தாய் நீ வாழ்வாயாக என்று வறியவன் ஒருவன் பாடினான் என்ற செய்தியை ஔவை பாடலில் பின்வருமாறு, “வைகல் உழவ வாழிய பெரிது” கூறுகிறார், (புறாம் 392,11).

    அரற்று:-

    அரற்று என்பது “அழுது புலம்பு, பலவும் சொல்லி அழுது தன் குறை கூறுதல், ஒலி செய்” என்று தமிழ்-தமிழ் அகராதி விளக்கம் தருகிறது.

    அரற்று என்பது “உறக்கத்தின்கண் வரும் வாய்ச்சோர்வு” என்று இளம்பூரணர் கூறுகிறார். அரற்று என்பது “அழுகையின்றிப் பலவுஞ்சொல்லி தன்குறை கூறுதல்” என்று பேராசிரியர் விளக்கம் தருகிறார்.

    போரில் கணவன் மார்பில் விழுப்புண்பட்டுக் கிடந்தான் அவனை எடுத்து உன் தாய் இந்நிலை அறிந்தால் என்ன பாடுபடுவாளோ என்று அரற்றுகிறாள். பின்வருமாறு, “யங்கா குவள்கொ வழியில் டானே”(புறம் 254, 11).

    ஆராய்ச்சி:-

    “ஆராய்ச்சி என்பது துருவிப் பார்த்தால், நுணுகிப் பார்த்தால், புதியன காணல், சோதனை, என்று தமிழ்-தமிழ் அகராதி பொருள் தருகிறது.

    ஆராய்ச்சி என்பது ஒரு பொருளைக் குறித்து அதன் இயல்பு எத்தன்மைத்தென ஆராய்தல்” என்று இளம்பூரணர் கூறுகிறார். ஆராய்ச்சி என்பது ஒரு பொருளை நன்று தீதென்று ஆராய்தல் என்று பேராசிரியர் விளக்கம் தருகிறார்.

    தொண்டைமான் அதியமானிடம் பகை கொண்டான்; போரில் ஈடுபடக் கருதினான். போரின் கொடுமையை அதியமான் எண்ணி ஆராய்ந்து ஔவையைத் தூது அனுப்பியமை பின்வருமாறு, “பகைவர்க் குத்திக் கோடுநுதி சிதைந்து” (புறம் 95, 4). ஔவையின் மற்றுமொரு பாடலில் அதியமானுக்குத் திறை செலுத்தாத மன்னனிடம் திறை செலுத்த மறுப்பின் உங்கள் மனைவி உங்கள் தோளினைப் பிரிவது உறுதி என்று ஆராய்ந்து கூறுவது “குறுந்தொடி மகளிர் தோள்விடல், இறும்பூது அன்று; அஃது அறிந்து ஆடுமினே” (புறம் 97, 24,25).

    அதியமானுக்கும் கோவலூர் மலாடர் கோவிந்தனுக்கும் பகை உண்டாயிற்று. இடையிலுள்ள அதனைக் கண்டு அஞ்சியதனை ஔவை பார்க்கிறார். அதியமானைப் போரில் எதிர்த்து நிற்பவர் யார் போரின் தன்மையை நினைந்து ஆராய்வது பின்வருமாறு, “இறங்குகதிர் அலம்வரு கழனி, பெரும்புனற் படப்பை, அவா அகன் தலைநாடே”  (புறம் 98, 19-20).

    நடுக்கம்:-

    நடுக்கம் என்பது “அச்சம் துன்பம் கிறுகிறுப்பு” என்று தமிழ்-தமிழ் அகராதி விளக்கம் தருகிறது.

    நடுக்கம் என்பது “யாதானும் ஒரு பொருளை இழக்கின்றோமென வரு மனநிகழ்ச்சி என்று இளம்பூரணர் கூறுகிறார். நடுக்கம் என்பது “அன்பும் அச்சமும் முதலியன உடம்பிற் புலப்படுமாற்றான் உள்ளம் நடுங்குதல், புதல்வாக்குப் பிணி இல்வழியும் எவனாங்கொலன்று நடுங்குதல் அன்பான் நடுங்குதலாம்.” என்று பேராசிரியர் கூறுகிறார்.

    நக்கண்ணையார் பெருநற்கிள்ளியை கூடப் பொறாமையால் தாய்க்கும் ஊருக்கும் அஞ்சி நடுங்குவது பாடலில், “தொடிகழித் திடுதல்யான் யாயஞ் சுவலே அடுதோண் முயங்கல் லவைநா ணுவலே” (புறம் 83, 3-4).

    முடிவுரை:-

    புறப்பாடல்களில் உலக வழக்கினைப் பெரிதும் தழுவிய மெய்ப்பாடு உடைமை, நடுவுநிலை, அருளல், தன்மை, வாழ்த்தல், அரற்று, ஆராய்ச்சி, நடுக்கம் என்பதாகும். இவை மனித மனத்தின் உள்ளுணர்வின் புறதோற்றங்களாக வெளிப்படுகின்றன.

    துணைநூற்பட்டியல்:-

    1. ஔவை சு.துரைசாமிப் பிள்ளை (வி.வு), 1977, புறநானூறு (1-200 பாட்டுக்கள்), திருநெல்வேலி, தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட், சென்னை -1
    2. ஔவை சு. துரைசாமிப் பிள்ளை (வி.வு) , 1996, புறநானூறு (201-400) திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட் சென்னை- 18
    3. சுப்புரெட்டியார். ந2011 தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை; சந்தியா பதிப்பகம் சென்னை-

    அகராதி:-

    1. மு. நிலாமணி (தொ.ஆ) கலா.கே.தாக்கர்(தொ.ஆ), 2005 தமிழ்-தமிழ் அகராதி நல்லற்பதிப்பகம், சென்னை – 600017.
    2. வின்சுலோ.எம், 1984,தமிழ் ஆங்கில அகராதி, ஏசியன் எஜிகேஷனல் சர்வீஸ், நியூ டெல்லி.

    *****

    கட்டுரையாளர் – முனைவர்பட்ட ஆய்வாளர், தமிழ் உயராய்வு மையம், தமிழியல் துறை,
    ராணி அண்ணா அரசு மகளிர்க் கல்லூரி,  (மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்),
    திருநெல்வேலி.

     

     

    Share
  • நல்வாழ்வுக்கு வழிகாட்டும் நாலடி – 6

    -மேகலா இராமமூர்த்தி 

    மனித யாக்கையும் செல்வமும் நிலையில்லா இயல்புடையவை என்பதை நாலடியார் பாடல்கள் பலவும் திரும்பத் திரும்ப நினைவுறுத்தி மனிதர்களை மனப்பக்குவமும் புலனடக்கமும் கொண்டவர்களாய் வாழ வலியுறுத்துகின்றன.

    வாழ்க்கை நிலையில்லாத் தன்மையுடையதே எனினும், உயிரோடு வாழும்வரை மனிதர்கள் செல்வத்தைத் தேடித் தொகுக்க வேண்டியவர்களாகவே இருக்கின்றார்கள். அப்போதுதான் பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பமுடியும். எனினும், வாணாள் முடியும்வரை பொருளைத் துரத்திக்கொண்டே இருப்பதில் பொருளுண்டோ? 

    முன்னரே சாநாள் முனிதக்க மூப்புள
    பின்னரும் பீடழிக்கும் நோயுள – கொன்னே
    பரவன்மின் பற்றன்மின் பாத்துண்மின் யாதுங்
    கரவன்மின் கைத்துண்டாம் போழ்து. 
    ( நாலடி 92 )

    மனிதர்கள் தம்மை வரவேற்கக் காத்திருக்கும் கிழப்பருவத்தையோ மரணத்தையோ தள்ளிப்போட முடியாது. அதுபோதாதென்று, உடல்நலத்தைக் குலைக்கும் பிணிகளுக்கும் வாழ்வில் பஞ்சமில்லை. இத்துணைத் துன்பங்கள் ஒன்றன்பின் ஒன்றாய் வாழ்வில் அணிவகுத்து நிற்பதால், செல்வம் உள்ள ஒருவன், மேலும் செல்வத்தைத் தேடி அலைவதிலோ, இருக்கும் செல்வத்தைத் தனக்குமட்டுமே பயன்படவேண்டும் என்று ஒளித்து வைப்பதிலோ, வாழ்வைக் கொன்னே கழியாது, பகுத்துண்ண வேண்டும் என்பது நாலடியார் வழங்கும் அறிவுரை.

    ஈதல், இசைபட வாழ்தலே உயிர்களுக்கு உண்மையான ஊதியமாகும்.

    ஈகை, வாழ்வில் அனைவரும் கைக்கொள்ளவேண்டிய நல்லறம் என்பதில் ஐயமில்லை. எனினும், நாம் யார்க்குக் கொடுக்கிறோம் எதற்குக் கொடுக்கிறோம் என்பதன் அடிப்படையும் ஆராயவேண்டிய ஒன்றாகும். ”இன்று இவருக்கு நான் நூறு ரூபாய் ஈந்தால் நாளை இவரிடமிருந்து இருநூறு ரூபாய் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்” என்று மனக்கணக்குப் போட்டுச் செய்யும் உதவியெல்லாம் அறமென்றோ ஈகையென்றோ கொள்ளத்தக்கவை அல்ல. அவை பயனை எதிர்பார்த்துச் செய்யும் வணிகம் போன்றவையே.

    இதனைப் பின்வரும் நாலடியார் பாடல் சிறப்பாக விளக்குகின்றது. 

    ஏற்றகைம் மாற்றாமை என்னானுந் தாம்வரையா
    தற்றாதார்க் கீவதாம் ஆண்கடன் – ஆற்றின்
    மலிகடல் தண்சேர்ப்ப மாறீவார்க் கீதல்
    பொலிகடன் என்னும் பெயர்த்து
    .  (நாலடி – 98)

    வளம் நிறைந்த கடலின் குளிர்ந்த கரையை உடையவனே, ஒருவர்க்கு ஒன்று உதவுவதானால், இரந்த கையை மாற்றாமல் (மறுக்காமல்) இயன்றது எதையேனும் வேறுபாடின்றி, கைம்மாறு செய்ய இயலாத வறிஞர்க்கு உதவுவதே ஓர் ஆண்மகனின் கடமையாகும். எதிருதவி செய்வார்க்கு ஒன்று உதவுதல் ’விளக்கமான கடன்’ என்னும் பெயருடையது; அஃது ஈகையில் சேராது!

    இதே கருத்தையே வள்ளுவரும்,

    ”வறியார்க்கொன் றீவதே ஈகைமற் றெல்லாம்
    குறியெதிர்ப்பை நீர துடைத்து”
    என்றார்.  (ஈகை – 221)

    புறநானூற்றுப் பாடலொன்றும் இதே கருத்தை ஒரு மன்னனின் செயலோடு தொடர்புபடுத்திச் சுவைப்படச் செப்புகின்றது.

    ”இம்மையில் ஒருவருக்கு உதவுவது இம்மைப் புகழுக்கும், மறுமையில் கிட்டும் துறக்கவின்பம் கருதியுமே என்பது உலகத்தார் பலரின் எண்ணம். ஆனால் எம் மன்னனாகிய ஆய் அண்டிரனோ இம்மைச் செய்தது மறுமைக்காகும் என்றெண்ணி அறத்துக்கு விலைகூறும் வணிகன் அல்லன். இல்லாதோர்க்குக் கொடுத்துதவ வேண்டியது இருப்போரின் கடன் எனும் சான்றோர் நெறிபற்றி அமைந்ததே அவன் கொடைப்பண்பு” என்று ஆய் அண்டிரனைப் பாராட்டுகின்றார் ஏணிச்சேரி முடமோசியார்.

    இம்மைச் செய்தது மறுமைக் காமெனும்
    அறவிலை வணிக னாயலன் பிறரும்
    சான்றோர் சென்ற நெறியென
    ஆங்குப் பட்டன் றவன்கைவண் மையே.
      (புறம் – 134)
     

    கையிலுள்ள பொருளைப் பிறர்க்கு ஈந்துவிட்டால் நாளை நம் நிலைமை என்னவாகும்? என்று அஞ்சும் குணம்படைத்த பணம்படைத்தோரையும் குவலயத்தில் குறைவின்றிக் காணலாம். அவர்கட்கும் ஏற்றதொரு பதிலைச் எடுத்துரைக்கின்றது நாலடியார்.

    நடுக்குற்றுத் தற்சேர்ந்தார் துன்பந் துடையார்
    கொடுத்துத்தான் துய்ப்பினும் ஈண்டுங்கால் ஈண்டும்
    இடுக்குற்றுப் பற்றினும் நில்லாது செல்வம்
    விடுக்கும் வினையுலந்தக் கால். 
    (நாலடி – 93)
     

    பிறருக்குப் கொடுத்துத் தான் துய்ப்பினும், பொருள்சேரும் காலமென்றால் சேரும்; அதுவே நல்வினைப்பயன் முடிந்துபோய்விட்டதென்றால், சேர்த்த செல்வத்தை எவ்வளவுதான் நாம் இறுக்கிப்பிடித்தாலும் அது நில்லாது போய்விடும். இவ்வுண்மையை அறியாதோரே வறுமை வந்துவிடுமோ என்று நடுக்குற்றுத் தம்மைச் சேர்ந்தோரின் வாட்டத்தைப் போக்காது தம் செல்வத்தைப் பூட்டிவைப்பர். 

    ”பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச்
    சொரியினும் போகா தம.
    ” (ஊழ் – 376) என்று நம் உளங்கொளும் வகையில் வள்ளுவமும் இதே கருத்தை விளம்பியிருப்பதை ஈண்டு நாம் எண்ணிப் பார்க்கலாம்.

    மனிதர்கள் வாழ்வில் நற்பலன்கள் பெறுவதற்கும் கெடுபலன்கள் அடைவதற்கும் அவர்தம் முன்வினைப்பயனே காரணம் என்கின்றனர் நாலடியார் இயற்றிய சமண முனிவர்கள்.

    பண்டை வினைகள் தக்க காலத்தில் தம் பலனைத் தராமல் போவதில்லை என்பதை அறிந்துகொள்ளச் சிலப்பதிகாரத்தினும் சிறந்த சான்றில்லை. ”ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும்” என்பதைக் காப்பிய உண்மைகளில் ஒன்றாகவே படைத்தளித்தவர் அல்லரோ அடிகள்!

    பல பசுக்களின் இடையில் விடப்பட்டாலும் இளைய ஆன்கன்றானது தன் தாயினைத் தேடித் தெரிந்தடைதலைப்போலத் தொன்று தொட்டுவரும் பழவினைகளும் தன்னைச் செய்த உரிமையாளனைத் தப்பாமல் தேடி அடையும் தன்மையுடையவை என்கிறது நாலடியார்.

    பல்லாவுள் உய்த்து விடினும் குழக்கன்று
    வல்லதாம் தாய்நாடிக் கோடலைத் – தொல்லைப்
    பழவினையும் அன்ன தகைத்தேதற் செய்த
    கிழவனை நாடிக் கொளற்கு. 
    (நாலடி – 101)
     

    உலக வாழ்க்கையில் நாம் புரிந்துகொள்ள முடியாத புதிர்கள் பலவுண்டு. அவற்றில் ஒன்று…”நல்லறிஞர்களெல்லாம் விரைவில் வீழ்வதும் (மாள்வதும்), பயனற்ற வீணர்கள் புவியில் நெடுநாள் வாழ்வதும் ஏன்?” என்பது. அதற்குத் தக்கதோர் விடையிறுத்து நம்மைத் தெருட்டுகின்றது நாலடியார்.

    பலவகைப்பட்ட பரந்த நூற்கேள்விகளின் பயனை அறிந்தொழுகுங் கற்றோர் உலகில் விரைவில் இறக்கவும், கல்லாதார் நீடுவாழ்வது எங்ஙனமென்று கருதுவீராயின், அதற்குக் காரணம் அறிவென்னும் அப்பிழிவு வீணர்களிடம் இன்மையால் அவர்களை வெறுங்கோது (சக்கை) என்று கருதிக் கழித்துவிடுகின்றான் கூற்றுவன்.

    பல்லான்ற கேள்விப் பயனுணர்வார் வீயவும்
    கல்லாதார் வாழ்வ தறிதிரேல் – கல்லாதார்
    சேதனம் என்னுமச் சேறகத் தின்மையால்
    கோதென்று கொள்ளாதாம் கூற்று. 
    (நாலடி – 106)
     

    கற்றார் அறிவுச்சாறு பெற்றுக் கனிந்துவிட்டவராதலின் பிறவிப்பயனை அவர்கள் அடைந்துவிட்டமை கருதி அதனினும் மேனிலையுறும் பொருட்டு அவர்தம் ஊனுடல் விரைவில் கழற்றப்பட்டதெனவும், கல்லாதார் இன்னும் அத்தகுதி பெறாமையால் இவ்விடமே கழித்து விடப்பட்டனரெனவுந் தெரிவித்து, அதன்வாயிலாக, விரைவில் நல்வினை செய்து நன்னிலையுறுகவென அறிவுறுத்துகின்றது இச்செய்யுள்.

    ”…இளமையும் செல்வமும் யாக்கையும் நிலையா
    உளநாள் வரையாது ஒல்லுவ தொழியாது
    செல்லுந் தேஎத்துக் குறுதுணை தேடுமின்
    மல்லன்மா ஞாலத்து வாழ்வீ ரீங்கென்.” 
    ( சிலம்பு – வரந்தரு காதை: 199-202)  
    என்ற வரந்தரு காதை அடிகள் மூலம் இளங்கோ அடிகள் நமக்கு வலியுறுத்துவதும் இதைத்தானே?

    [தொடரும்]

     

     

     

    Share
  • பழங்குடியினரும் பாறை ஓவியங்களும்

    -ரா. பிரசன்னாதேவி

    முன்னுரை

    பண்டைய தமிழக வரலாறு, பழக்கவழக்கங்கள், பண்பாடுகள், நாகரிகம், வாழ்வியல் நெறிகள் ஆகியவற்றை அறிய தொல்வரலாற்று ஆய்வுகளை மேற்கொள்ளத் தேவையான ஆதாரங்களில் பாறை ஓவியங்கள் முக்கியமானவை. ஓவியம், சிற்பம், இலக்கியம் முதலியவற்றின் செய்திகளும், பயன்பாடுகளும் அறிய பாறை ஓவியங்கள் பெரிதும் பயன்படுகின்றன. இவை வாழ்வியல் நெறிகளை வழிநடத்திச் செல்லும் சட்டங்களாகவும், சான்றுகளாகவும் உள்ளன. (தமிழ்ப்பொழில் கல்வெட்டுகளில் இலக்கியச் சான்றுகள்.ப.321) கலைகளைப் பற்றி அறிந்துகொள்ள உதவுகின்றன. வரலாற்றுக்கு முந்தைய காலத்திலிருந்து இன்றுவரை உலகின் எல்லாப் பகுதிகளிலும் பாறை ஒதுக்குகள் மற்றும் கற்குகைகள் ஆகியவற்றில் கற்செதுக்குகளாகவோ வண்ண எழுத்தோவியங்களாகவோ காணப்படுகின்றன. இந்த ஓவியங்கள் அந்தந்தக் காலகட்டங்களில் வாழ்ந்த மனிதர்களின் சமூகப் பொருளாதார மற்றும் கலாசார நிகழ்வுகளை வெளிப்படுத்தும் பதிவுகளாய் உள்ளன. பழைய கற்காலம், புதிய கற்காலம் அல்லது இரும்புக்காலம், வரலாற்றுக்காலம் என எல்லாக் காலகட்டங்களிலும் நடந்த பலநிகழ்வுகளைப் பதிவு செய்துள்ளவை இவை. இவைகளின் ஊடே பழங்குடியினாரின் பாறை ஓவியங்கள் பற்றி விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

    பாறை ஓவியங்களின் நோக்கங்கள்

    பொதுவாக இந்தப் பாறை ஓவியங்களை அவற்றின் நோக்கங்களின் அடிப்படையில் இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். தகவல் பரிமாற்றம், அலங்காரம் என அவற்றைப் பெயரிட்டு அழைக்கலாம். பொதுவாக ஓவியம் ஒருவனது மனக்கிடக்கையில் இருக்கும் காட்சிகள், அவற்றுடன் இணைந்த உறவுகள் ஆகியன நிலைத்த வடிவமின்றி இலகுவாய் மாற்றியமைக்கும் கட்டமைப்புக்கு உரியனவாய், உகந்த காலம் மற்றும் இடத்திற்கேற்ப வெளிப்படுத்த விழையும் உந்துதலில், கோடுகளாய் உருவெடுத்து, அலங்காரமாய்ப் பரிணமித்து, கனபரிமாணமாய் நீண்டு, வண்ணங்களால் நிறைவுபெற்றுத் தகவல்களைப் பரிமாறும் கால ஓட்டத்தில் உருமாறிப் புதிய பரிணாமங்களோடு தொடர்ந்து பயணிக்கிறது.

    தமிழகப் பாறை ஓவியங்கள்

    தமிழகத்தில் இதுவரை சுமார் 75 இடங்களில் பாறை ஓவியங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இவை பெரும்பாலும் பாறை ஒதுக்குகளிலும் பெருங்கற்கால ஈமச் சின்னங்களிலும், சில இடங்களில் குகைகளிலும், வரையப்பட்டுள்ளன. தமிழகத்தில் பாறை ஓவியங்கள் தருமபுரி, கிருட்டிணகிரி, திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், கோயம்புத்தூர், மதுரை, தேனி போன்ற மாவட்டங்களில் பரவலாகக் காணப்படினும், இதுவரை வடக்கு மற்றும் வடமேற்குத் தமிழகத்தில்தான் அதிக எண்ணிக்கையில் இவ்வோவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. (இந்தியப் பழங்குடிப் பண்பாடும் தமிழ்ப் பண்பாடும் ப.131) இவை பெரும்பாலும் இடைக்கற்கால, புதிய கற்கால, பெருங்கற்கால, இரும்புக்கால மற்றும் வரலாற்றுக்கால ஓவியங்கள் எனக் கருதப்படுகின்றன. மேலும் பல இடங்களில் தொல்லியல் சின்னங்களுக்கு அருகிலேயே பாறை ஓவியங்கள் காணப்படுகின்றன. இதுவரை தமிழகத்தில் கண்டறியப்பட்ட பாறை ஓவியங்களில் பெரும்பான்மையானவை இருளர் (நீலகிரி, தருமபுரி மற்றும் வடதமிழகப் பகுதிகளில் வாழ்பவர்கள்), குறும்பர், தோடர், கோத்தர், (நீலகிரி), இரவாளர், மலசர், பளியர், புலையர், முதுவர், மூப்பார் (கோயம்புத்தூர், திண்டுக்கல், தேனி, மதுரை மற்றும் விருதுநகர் மாவட்டங்கள்) போன்ற பழங்குடி மக்கள் வாழும் குறிஞ்சி நிலப்பகுதிகளில் தான் காணப்படுகின்றன. இருப்பினும் கால்நடை மற்றும் சிறு வேளாண்மை செய்யும் சமூகங்கள் வாழும் முல்லை நிலப்பகுதிகளிலும் இது போன்ற பாறை ஓவியங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

    ஓவியங்களின் வண்ணங்கள்

    சிறுமலை, மயிலாடும் பாறை, உல்கோம்பை போன்ற இடங்களில் இடைக்கற்கால ஓவியங்கள் உள்ளன. தமிழகத்தில் புதிய கற்காலக் கருவிகளும் வாழ்விடங்களும் மயிலாடும் பாறை, மூனாண்டிப்பட்டி, கீழ்வாலை, பெருமுக்கல், மல்லப்பாடி, மையம்பள்ளி போன்ற இடங்களில் ஓவியங்களோடு காணப்படுகின்றன. அதுபோலவே சில தமிழ் பிராமிக் கல்வெட்டுக்கள் உள்ள குகைத் தலத்தின் விதானத்தில் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. இவை அங்குள்ள எழுத்துக்களைவிடக் காலத்தால் முந்தியவையாகும். தமிழகத்தில் காணப்படும் பாறை ஓவியங்கள் பெரும்பாலும் சிவப்பு மற்றும் வெள்ளை வண்ணங்களால் வரையப்பட்டுள்ளன. இருப்பினும் கறுப்பு மற்றும் மஞ்சள் வண்ண ஓவியங்கள் சில இடங்களில் கிடைக்கின்றன. சிவப்பு மற்றும் வெள்ளை ஓவியங்கள் சில இடங்களில் சேர்ந்தும், சில இடங்களில் தனியாகவும் உள்ளன.

    பாறை ஓவியங்களின் தன்மைகள்

    இப்பாறைகளில் பெரும்பாலும் ஓவியன் தான்கண்ட உருவங்களை எளிய முறையிலேயே வரைந்துள்ளான். இருப்பினும் வெள்ளாரிக்கோம்பை, ஆலம்பாடி போன்ற இடங்களில் உருவங்கள் நாம் எளிதில் புரிந்து கொள்ளமுடியாத நிலையில் வரையப்பட்டள்ளன. இவை அவ்வோவியனது உளக்கிடக்கையில் அமைந்த அச்சம், நம்பிக்கை ஆகியவற்றை வெளிப்படுத்துபவைகளாகக் காணப்படுகின்றன. ஆனால் குறியீடுகளும் அலங்காரக் கூறுகளும் தமிழகப் பாறை ஓவியங்களில் அதிக எண்ணிக்கையில் காணக் கிடைக்கவில்லை. குறியீடுகள் பெரும்பாலும் தகவல் பரிமாற்றம் செய்யவும் அலங்கார ஓவியங்கள் சடங்குகளின்போது ஒப்பனைக்காகவும் வரையப்பட்டள்ளன. பாறை ஓவியங்கள் யாவும் அழகியல் நோக்கில் சிறப்பானவை அல்ல. இருப்பினும் அவற்றின் நோக்கம், காலம், கருத்து வெளிப்பாடு போன்ற தன்மைகளில் அவை சிறப்பிடம் வகிக்கின்றன.

    பாறை ஓவியங்களின் சிறப்பு

    இந்தப் பாறை ஓவியங்கள் கடும் மழைக்காலங்களில் ஒதுங்கிய பாறையின் விதானங்கள், சுவர்கள், நீர்நிலைகளுக்கு அருகில்உள்ள பாறை ஒதுக்குகள், உயரமான தேன்பாறையின் சுவர்கள், வழிபாடு மற்றும் வழித்தடங்களுக்கு அருகில் உள்ள பாறைமுகடுகள் எனப் பிறர்வந்து போகும் பொதுஇடங்கள் ஆகியவற்றில்தான் அதிகம் வரையப்பட்டுள்ளன. சில சமயங்களில் ஓவியன் மிக உயரமான பாறைகளில் ஏறிக் கடும் சிரத்தையை மேற்கொண்டு, தன் சாகசத்தை வெளிப்படுத்தும் விதமாக ஓவியங்களை வரைந்துள்ளான். இந்த ஓவியங்கள் நேர்த்தியான தோற்றம் உடையவைகளாகவும் குறியீடுகளாகவும் அடையாளப்படுத்த முடியாத உருவங்களாகவும் அமைந்துள்ளன. இப்பாறை ஓவியங்கள் உள்ள இடங்களுக்குப் பிற்காலத்தில் வந்த இனக்குழுக்கள் தங்க நேர்ந்ததால் அவர்களது ஓவியங்களும் ஏற்கனவே வரைந்த ஓவியங்களுக்கு மேல் வரையப்பட்டுள்ளன. பாறை ஓவியங்கள் வரையப்பட்டுள்ள இடங்கள் சில இன்று வரை உள்ளுர் மக்களால் வழிபாட்டுத் தலங்களாகக் கருதப்படுகின்றன.

    பழங்குடிகளும் பாறை ஓவியங்களும்

    பாறை ஓவியங்கள் தொல்மாந்தரின் சமகால வாழ்வியல் சூழலை மட்டும் அல்லாமல் நம்பிக்கை மற்றும் தத்துவார்த்த வாழ்வியலை குறியீடுகளாகவும் நேர்த்தியான உருவங்களாகவும் அலங்காரங்களாகவும் பதிவு செய்துள்ளன. ஒலிகளற்ற இம்மொழி நெடிய காலங்கடந்தும் இன்றுவரை தகவல்களைப் பரிமாற்றிக் கொண்டிருக்கின்றன. எழுத்து உருவாவதற்கு முன்னரே தொல்மாந்தரின் கற்பனை மற்றும் கலை உருவாக்கங்கள் பாறை ஓவியங்களில் காணப்படுகின்றன. பாறை ஓவியங்கள் ஆப்பிரிக்கா, ஆசியா, ஐரோப்பா, அமெரிக்கா என உலகின் எல்லாப் பகுதிகளிலும், இதுவரை சுமார் 50 மில்லியன் ஓவியங்கள் கண்டறியப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. உலகில் இதுவரை கண்டறியப்பட்ட ஓவியங்களில் மிகத் தொன்மையானவை ஆப்பிரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் உள்ளன. இவை சுமார் 30,000 – 40,000 ஆண்டுகளுக்கு முந்தையன என்று கார்பன் 14 போன்ற அறிவியல் ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் மத்தியப் பிரதேசத்தில் உள்ள பிம்பெட்காவில் கிடைத்த தீக்கோழியின் முட்டையின்மீது வரையப்பட்ட ஓவியங்கள், சுமார் 25,000 ஆண்டுகளுக்கு முற்பட்டவை எனக் கண்டறிந்துள்ளனர். (இந்தியப் பழங்குடிப் பண்பாடும் தமிழ்ப் பண்பாடும் ப.130) தொடர்ந்து இந்தியாவில் காஷ்மீர் முதல் தமிழ்நாடுவரை எல்லா மாநிலங்களிலும் பாறை ஓவியங்கள் பரவலாகக் காணப்படினும் மத்தியப் பிரதேசம், உத்திரப் பிரதேசம், ஒரிசா போன்ற மாநிலங்களில் அவை அதிக எண்ணிக்கையில் காணப்படுகின்றன.

    உலகில் கிடைக்கப்பெற்ற பாறை ஓவியங்களில் 80% சதவீதம் பழங்குடியினர் வாழும் பகுதிகளில் மட்டுமே காணப்படுகின்றன. சமூக மற்றும் பொருளாதார நோக்கில் இந்த ஓவியங்களை நான்கு வகைகளாகப் பிரிக்கலாம்.

    1. தொன்மையான வேட்டைச் சமூகம்
    2. வளர்ந்த வேட்டைச் சமூகம்
    3. கால்நடைச் சமூகம்
    4. கலப்புப் பொருளாதாரச் சமூகம் 

    தொன்மையான வேட்டைச் சமூகம்

    இந்த வேட்டைச் சமூகத்தில் வில், அம்பு குறித்த அறிவு இல்லை எனலாம். இவர்களது ஓவியங்களில் உருவங்களும் குறியீடுகளும் பெரும்பாலும் சேர்ந்தே காணப்படுகின்றன.

    வளர்ந்த வேட்டைச் சமூகம்

    இச்சமூகத்தில் வில், அம்பின் பயன்பாடு உள்ளது. ஓவியங்கள் எளிமையாகப் புரிந்து கொள்ளும் தன்மையில் உள்ளன.

    கால்நடைச் சமூகம்

    கால்நடைகளைப் பிரதானமாய்க் கொண்டுள்ள சமூகத்தின் ஓவியங்களில் பெரும்பாலானவை கால்நடைகளைப் பழக்கப்படுத்துதல் மற்றும் அதன் தொடர்பானவை.

    கலப்புப் பொருளாதாரச் சமூகம்

    வேளாண்மையைப் பிரதானமாகக் கொண்ட இச்சமூகத்தில் பலதரப்பட்ட பொருளாதாரச் சூழலில் இருந்து கலைப்படைப்புகள் உருவாகியுள்ளன. மேலும் இறைநம்பிக்கை, இதன் தொடர்பான கதைகள், குறியீடுகள், திட்டமிட்ட உருவத் தொகுப்புகள் ஆகியன இவர்களது ஓவியங்களில் அதிகம் காணப்படுகின்றன.

    காரிக்கையூர் ஓவியங்கள்

    தமிழகத்தில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள பாறை ஓவியங்களில் மிகப்பெரியன, அதிக எண்ணிக்கையில உருவங்கள் அமைந்தன. நீலகிரி மாவட்ட கோத்தகிரி தாலுகாவில், இருளர் பழங்குடிகள் வாழும் காரிக்கையூர் ஓவியங்கள் ஆகும். காலனிய சுலிவன் என்பவனின் அசுர பாதம் பதிந்த முதல் நீலகிரி மலைக்கிராமம் இது. இங்குள்ள பொறிவரை என்னும் பாறை ஒதுக்கு பவானி ஆறு பாயும் நீண்ட பள்ளத்தாக்கின் உயரமான விளிம்பில் கிழக்கு முகத்தில் அமைந்துள்ளது. இங்கு சுமார் 200 அடி நீளத்திற்கு, 20 அடி உயரத்தில், 500 க்கும் மேற்பட்ட ஓவியங்கள் சிவப்பு மற்றும் வெள்ளைவண்ணங்களில் வரையப்பட்டுள்ளன. இங்கு விலங்குகள், மனிதர்கள், விலங்குகளுடன் மனிதர்கள், குறியீடுகள், அடையாளங் காணமுடியாத உருவங்கள் எனப் பல வகை ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. உருவங்கள் தனியாகவும் தொகுப்பாகவும் உள்ளன. மேலும் இங்குள்ள ஓவியங்கள் தொடர்ந்து பல்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு ஓவியர்களால் வரையப்பட்டவை. சில இடங்களில் ஏற்கனவே வரையப்பட்டுள்ள ஓவியங்களின் மேல் வேறு ஓவியங்களைப் பின்னால் வந்த ஓவியர்கள் வரைந்துள்ளனர். இங்குள்ள ஓவியங்களில் வேட்டையாடுதல், அதன் தொடர்பான சடங்குகள், விலங்குகளைப் பழக்கப்படுத்துதல், நடனம், இசை மற்றும் பிற வன வாழ்வியற் சூழல் ஆகியன சிறப்பிடம் பெறுகின்றன. மனிதன் வேட்டையாடும் விலங்குகள், மனிதனை வேட்டையாடும் விலங்குகளின் இயல்பான வாழ்க்கையையும் அவற்றின் விளையாட்டுகளையும் அதிகம் கொண்டுள்ளன. இருப்பினும் பறவைகள், தாவரங்கள் மற்றும் ஊர்வன ஆகியன குறைந்த எண்ணிக்கையிலேயே காணப்படுகின்றன. மனிதர்களைவிட, விலங்குகளே பிரதானமாக வரையப்பட்டுள்ளன. எருமை, பன்றி, மான், சருகுமான், உடும்பு மற்றும் யானை வேட்டை பற்றிய காட்சிகள் இங்குக் காட்டப்பட்டுள்ளன. அதுபோலவே, வேட்டைக்குப் பயன்படும் நாய்களும் வரையப்பட்டுள்ளன.

    மனித உறவுகளைப் பல்வேறு நிலைகளில், வெவ்வேறு காலச்சூழல்களைப் பிரதிபலிக்கும் வண்ணம் ஆயுதங்களும் அவற்றைப் பயன்படுத்தும் விதமும் காட்டப்பட்டுள்ளது. இங்குள்ள ஆரம்பகால ஓவியங்களில் மனிதர்கள் வேட்டையின்போது, கையில் தடிமனான மரத்தடிகளுடன் உள்ளனர். பின்னர் வில், அம்பு, வில் அம்போடு வாள், வாளோடு கேடயம் என வெவ்வேறு வடிவங்களில் ஆயுதங்கள் காட்டப்பட்டுள்ளன. இங்கு வரையப்பட்டுள்ள போர்க்காட்சிகள் மிகவும் கவனமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. மலைகளில் நடைபெற்ற மற்றும் தரைப்பகுதிகளில் நடந்த போர்க்காட்சிகளை வேறுபடுத்திக் காட்டும் விதமாக உருவங்கள் தொகுக்கப்பட்டுள்ளன. நீலகிரியில் வாழும் கோத்தர்கள், வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் இருந்து இரும்பின் பயன்பாட்டை அறிந்து, அதைத் தங்கள் தேவைக்குத் தகுந்தாற்போல் உருவாக்கியும்; பயன்படுத்தியும் வந்துள்ளனர். ஆயுதங்களைப் பெருமளவில் உற்பத்தி செய்து, பிற பழங்குடியினரான இருளர், குறும்பர், தோடர் போன்றவர்களிடம் விற்றுப் பண்டமாற்று வணிகம் செய்து வந்துள்ளனர். அக்காலத்தில் இவர்கள் உருவாக்கிய இரும்பு ஆயுதங்கள் இன்று இங்குள்ள ஓவியங்களின் வழியாக மட்டுமே நமக்குக் காணக்கிடைக்கின்றன.

    தோடர்கள் காலங்காலமாக எருமை மாடுகளையே தங்கள் வாழ்வாதாரமாகக் கருதி வாழ்ந்து வருகின்றனர். தொல்பழங்காலத்தில் பெரும்பாலான சமூகத்தவர் வேட்டையைப் பிரதானமாகக் கொண்டிருந்த போது, தோடர் போன்ற பழங்குடியினர் கால்நடைகளைப் பழக்கப்படுத்தி அவற்றின் பயன்பாடுகளை அறிந்து பராமரித்து வந்தனர். இக்காட்சிகள் யாவும் காரிக்கையூர் பாறை ஓவியங்களில் தெளிவாகக் காட்டப்பட்டுள்ளன. இங்குள்ள ஓவியங்கள் செய்நேர்த்தியோடும் அழகியல் தன்மையோடும் சிறப்பாகக் காணப்படுபவை. கூட்டமாய் மாடுகள் நடந்து செல்வது, நுனி மரக்கிளையில் குரங்குகள் ஏறுவது, கூட்டங் கூட்டமாய் மான்கள் மேய்வது, நீண்ட உடும்புகள் ஊர்வது, மனிதர்கள் ஒருவருக்கொருவர் வரவேற்பது, பன்றி வேட்டை, நடனம், விலங்குகள் தங்கள் குட்டிகளுக்குப் பால்கொடுப்பது, வேட்டை நாய்களுடன் உறங்கும் மனிதன், குழந்தையைப் பலி கொடுத்தல், போர்க்காட்சிகள் போன்றவைகளாகும். 

    எழுத்துப்பாறை ஓவியங்கள்

    இயற்கையின் மாற்றங்களைப் புரிந்து வாழ்வியலைத் தன் வசப்படுத்திய மனிதன் சில சமயங்களில் இயற்கையின் சீற்றங்களையும் மாறுபாடுகளையும் பற்றிய புரிதலின்றிப் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகின்றான். அச்சத்திலிருந்து மீளத் தெரியாது. ஒன்றின் மேல் நம்பிக்கை கொண்டு, சடங்குகளும் நம்பிக்கைகளும் இடத்திற்கு இடம், இனத்திற்கு இனம் மாறுபடும். அது போல, நீலகிரியில் வாழும் பழங்குடிகள் மத்தியில் குறும்பர் இன மக்களின் வாழ்வியலும் நம்பிக்கைகளும் பிற மலைவாழ் மக்களிலிருந்து மாறுபடுகிறது. இவர்கள் பெரும்பாலும் அடர்ந்த வனப்பகுதிகளில் பாறைச் சரிவுகளிலும், இயற்கையாய் அமைந்த குகைகளிலும் வாழ்ந்து வந்தனர். இவர்கள் இயற்கையையும் பிற எதிரிகளையும் எதிர்கொள்ளச் சடங்குகளின் மீது அபார நம்பிக்கை கொண்டு, மாந்திரிக வழிபாட்டை மேற்கொண்டனர். அதன் ஒரு பகுதியாக, இன்றுவரை, தங்கள் வழிபாட்டுத் தலமான “எழுத்துப்பாறையில் ஆண்டுக்கு ஒருமுறை சென்று வழிபாடு செய்கின்றனர். இவ்வழிபாட்டின் போது வெள்ளை மற்றும் சிவப்பு வண்ணங்களில் நேர்த்தியான குறியீட்டு ஓவியங்களை வரைந்துள்ளனர். இங்குள்ள பழமையான ஓவியங்கள் சுமார் 3,000 ஆண்டுகளுக்கு முற்பட்டவை எனத் தொல்லியல் ஆய்வாளர்கள் கணிக்கின்றனர். இந்த ஓவியங்கள் இயற்கைச் சீற்றம் மற்றும் பிற இனக்குழுக்களின் தொல்லைகளில் இருந்து தங்களைக் காப்பாற்றும் என்பது இவர்களின் நம்பிக்கை. இவ்வகை ஓவியங்கள் நீலகிரி மாவட்டத்தில் வெள்ளாரிக்கோம்பை, குறும்பவரை மற்றும் சேலகொரை போன்ற இடங்களில் காணப்படுகின்றன.

    ஜவ்வாது மலைப் பாறை ஓவியங்கள்

    ஜவ்வாது மலை மலையாளியினர் திருமணச் சடங்கின்போது, மணமகன் வீட்டில், திருமணத்திற்கு முதல் நாள், வாசலுக்கு அருகில் ஒரு சோடிக் கால் பாதங்களை வரைகின்றனர். அதுபோல் திருமணம் முடிந்த பின்னர் மற்றுமொரு சோடிக் கால் பாதங்கள் அருகிலேயே வரையப்படும். அது போல் கார்த்திகை தீபம், பொங்கல் மற்றும் துர்க்கை அம்மன் திருவிழாக்களின் போது வீடுகளைச் சுண்ணாம்பு கொண்டு வெள்ளையடித்துக் கோலம் போட்டு, அலங்கரிக்கின்றனர். குறிப்பிட்ட செம்மண்ணிலிருந்து சிவப்பு வண்ணமும் அவரை இலையை அரைத்துப் பச்சை வண்ணமும் தயாரித்துக் கம்பந்தாள் கொண்டு ஓவியங்கள் வரையப்படுகின்றன. இங்கு ஓவியங்கள் வரையும் மரபு பெண்களிடம் மட்டுமே காணப்படுகின்றது. இந்த ஓவியங்கள் சமயத்திருவிழாக்களின் போது மட்டுமே வரையப்படுகின்றன. இருப்பினும் தங்களின் முன்னோர்களை வழிபடும் விதமாக அவர்களையும் இத்திருவிழாக்களின் போது குறியீடுகளாக வரைந்து வழிபட்டு வருகின்றனர்.

    மதுரை மாவட்டத்துச் சுவர் ஓவியங்கள்

    மதுரை மாவட்டத்தில் வாழும் பழங்குடியினரான பிறன்மலைக் கள்ளர் சமூகத்தில் கல்யாணத்தின்போது, மணமகன் வீட்டின் முகப்புச் சுவர்கள் கல்யாணத்திற்கு முதல் நாள் பெண்களால் அலங்கரிக்கப்படுகின்றன. இவை “பச்சைக் கோலம்” என்று அழைக்கப்படுகின்றன. (இந்தியப் பழங்குடிப் பண்பாடும் தமிழ்ப் பண்பாடும் ப.137) இந்த ஓவியங்கள் பச்சை இலை மற்றும் தழைகள்கொண்டு உருவாக்கப்படுகின்றன. இந்த ஓவியங்களில் பெரும்பாலானவை மண்ணால் கட்டப்பட்ட சுவர்களிலேயே வரையப்பட்டு வந்தன. தற்போது சிமெண்ட் மற்றும் கான்கிரிட் கலாசாரம் வந்தபின் இந்த ஓவியமரபு மறைந்துகொண்டு வருகின்றது. இருப்பினும் அளவுகள் குறைந்து குறியீடுகளாக இன்றுவரை வரையப்பட்டு வருகின்றன.

    தஞ்சாவூர் பாறை ஓவியங்கள்

    தஞ்சையிலுள்ள பிரகதீசுவர் கோயிலில் பிரதட்சண வீதிச் சுவர்களிலும், கர்ப்பக்கிருகத்தைச் சுற்றியுள்ள இருண்ட பாதையிலும் இரண்டு அடுக்கு ஓவியங்கள் காணப்படுகின்றன. மேலாகத் தெரியும் ஓவியங்கள் 17-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. அவை முக்கியமானவையல்ல. அவற்றினடியில் உள்ளவை 11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. இராசராசசோழன் காலத்தில் தீட்டப்பெற்றவை. மேலேயுள்ளவை சில விடங்களில் மட்டுமே உரிந்து வந்திருக்கின்றன. இதில் சிவன் பிராமணக் கிழவன் போல் சுந்தரருடைய திருமணத்தன்று வந்து அவரை அடிமையாக உரிமை கொண்டாடுதல் வரையப்பட்டுள்ளன. (கலைக் களஞ்சியம் தொகுதி-2 ப.738)

    முடிவுரை

    பொதுவாக மலைவாழ் பழங்குடி மக்கள் தங்களது பூர்வீகக் கலை மற்றும் கலாசாரங்களோடு இணைந்து வாழ்ந்தாலும் சமவெளியில் வாழும் பிற மக்களுடைய கலாசாரம் இவர்களது வாழ்வியலோடு இரண்டறக் கலந்துள்ளது. இவர்களுக்குள் பண்டமாற்று வணிகம் காலங்காலமாக இருந்து வருகின்றது. இடையர்கள் போன்ற கால்நடை வளர்ப்புச் சமூகங்கள் மலைவாழ் பழங்குடிகளுக்கும் சமவெளியில் வாழும் மக்களுக்கும் இடையே நட்புப் பாலமாய் உள்ளனர். இவர்கள் வழியாகச் சமவெளியில் வாழும் மக்களுடைய நம்பிக்கை, சடங்குகள், திருவிழாக்கள் மற்றும் பிற கலாசாரப் பரிமாற்றங்கள் தொடர்ந்து இன்றுவரை இருந்து வருகின்றன. அதே சமயம் பழங்குடி மக்களது பூர்வீகக் கலாசாரமானது ஊடகங்கள் மற்றும் பிற மக்களின் தொடர்பால் அழிந்து வருகின்றது. குறிப்பாக இவர்களது நடனம், இசை, பாடல்கள், செவிவழி மரபுகள் ஆகியன பெரும்பாலான இடங்களில் வேகமாக மறைந்து வருகின்றன. நவீன தொழினுட்பத்தின் உதவியோடு இம்மரபுகளை ஆவணப்படுத்துதல் மிக அவசியமானதாகும்.

    *****

    ஆய்விற்குரிய நூல்கள்

    1. இந்தியப் பழங்குடிப்பண்பாடும் தமிழ்ப் பண்பாடும், முனைவர் அ. மரியசூசை, தூய நெஞ்சக் கல்லூரி திருப்பத்தூர்.
    2. தமிழ்ப்பொழில், தமிழாராய்ச்சித் திங்களிதழ், ஆவணி மலர்-7, ஆகஸ்ட் 2017.
    3. கல்வெட்டுக்கள் கூறும் உண்மைகள், தி.வை.சதாசிவபண்டாரத்தார், மணிவாசகர் பதிப்பகம் சென்னை-08.
    4. இலக்கியமும் கல்வெட்டுக்களும், தி.வை.சதாசிவபண்டாரத்தார், மணிவாசகர் பதிப்பகம் சென்னை-08.
    5. கலைக்களஞ்சியம், தொகுதி இரண்டு, தமிழ் வளர்ச்சிக் கழகம்,பதிப்பு-1955 சென்னை.

    *****

    கட்டுரையாளர் – முனைவர்பட்ட ஆய்வாளர்
    தமிழியல் துறை,
    அண்ணாமலைப் பல்கலைக்கழகம்,
    அண்ணாமலை நகர்,
    சிதம்பரம்.

     

    Share
  • பழந்தமிழக வரலாறு – 7

    பாலன் நாச்சிமுத்து

     

    பண்டைய தக்காண அரசுகள்

                 (சாதவாகனர்களும் காரவேலனும்)

    சாதவாகனர்:

            அசோகருக்குப் பின் மகத அரசு சிதைந்து போனது. கி.மு.230 அளவில் சாதவாகனர்கள்(SATAVAHANA) தமிழரசுகளின் ஆதரவோடு தக்காணப் பகுதியில் தங்களது தனி ஆட்சியை நிறுவினர். கி.மு.230 முதல் கி.பி.220 வரை சுமார் 450 ஆண்டுகள் அவர்கள் தக்காணத்தை ஆண்டனர். சாதவாகனர்களை, தமிழில் நூற்றுவர் கன்னர் அல்லது சாதவ கன்னர்(சாதவ என்பது சதம், அதாவது நூறு ஆகும்) என்பர். இவர்கள் தமிழ், பிராகிருதம் ஆகிய இரு மொழிகளையும் ஆட்சி மொழிகளாகக் கொண்டு ஆட்சி செய்தனர். இவர்கள் வெளியிட்ட நாணயங்களில் ஒரு பக்கம் தமிழும், மறுபக்கம் பிராகிருதமும் இருந்தன(1).        சாதவாகனர் சங்ககாலத்தின் ஆரம்பம் முதல் இறுதிவரை தமிழகத்தோடு போர் செய்ததாகவோ, வெற்றி பெற்று தமிழகப் பகுதிகளைப் பிடித்துக் கொண்டதாகவோ தகவல் இல்லை. அவர்கள் தமிழ் அரசுகளின் கூட்டணி ஆட்சியின் கீழ் இருந்த தக்காணப் பகுதிகளைத் தாக்கி வென்றிருக்கலாம். ஆனால்  உடனடியாகத் தமிழ் அரசுகளால் அவை திரும்பக் கைபற்றப்பட்டது. கிருட்டிணா நதிக்குக் கீழ் அவர்கள் வரவில்லை. சங்ககாலம் வரை தமிழ் அரசுகள் மிக வலிமையோடு இருந்தன. கி.பி. 2ஆம் நூற்றாண்டின் இடைக்கால வாக்கில் இந்நிலை மாறியிருக்கலாம். சாகர்கள், மேற்கு சத்ரப் அரசுகள், மகத அரசு போன்ற பிற வடநாட்டு அரசுகளோடு தான் சாதவாகனர்கள் போர் புரிந்ததாக அவர்களது கல்வெட்டுகளும், அவர்களைப்பற்றிய இன்ன பிற குறிப்புகளும் கூறுகின்றன.

         டாக்டர் கே. கே. பிள்ளை,  ஆர். எசு. சர்மா ஆகிய இருவரும் தங்களது நூல்களில் சிமுகா(கி.மு. 230-207), சதகர்னி(கி.மு. 180-124),  கௌதமிபுத்ர சதகர்னி(கி.பி 106-130), வசிட்திபுத்ர புலுமாயி(கி.பி 130-160), யாஜன சதகர்னி(கி.பி. 170-199)  ஆகிய ஐந்து சாதவாகன அரசர்களை மட்டுமே குறிப்பிட்டுள்ளனர்(2). கி.பி.2ஆம் நூற்றாண்டில் ஆண்ட மூன்று முக்கிய அரசர்கள் குறித்துத்தான் ஓரளவு தரவுகள் உள்ளன. பிற அரசர்களின் ஆண்டுகள் புராணங்கள் தரும் ஆண்டுகளை வைத்தே தரப்பட்டுள்ளன. கி.மு. 180-124 வாக்கில் ஆண்ட சதகர்னி குறித்து கலிங்க மன்னன் காரவேலன் தனது அத்திக்கும்பா கல்வெட்டில் குறித்துள்ளான்.சாதவாகனர்கள் தங்கள் ஆட்சி மொழியாகத் தமிழ், பிராகிருதம் ஆகிய இரு மொழிகளையும் கொண்டிருந்தனர். தமிழர்களின் கடற்படை வலிமையை, அவர்களது ஐக்கிய கூட்டணியின் வலிமையை, பொருள் உற்பத்தி, தொழிநுட்ப மேன்மை, வணிகம் ஆகியவற்றில் தமிழர்களின் உயர்நிலையை சாதவாகனர்கள் அறிந்ததன் காரணமாக, தமிழ் அரசுகளோடு அவர்கள் ஆரம்பம் முதல் இறுதிவரை பகைமை பாராட்டாமல் இருந்தனர் எனலாம். சாதவாகனர்கள் அரசு அழிந்த உடன் தமிழகமும் களப்பிரர்களால் கைப்பற்றப்பட்டு விட்டது.

    மொழிபெயர் தேயம்:

        தமிழ்மொழி இருக்கிற நிலையில் இருந்து பெயர்ந்து கொடுந்தமிழாக மாறியிருந்த நிலையை மொழி பெயர்ந்தநிலை எனவும் அவ்வாறு மொழி பெயர்ந்த நிலையில் உள்ள கொடுந்தமிழைப் பேசும் பகுதியை மொழிபெயர் தேயம் எனவும்  பண்டைய தமிழர்கள் குறிப்பிட்டனர். கி.மு.4-ஆம், 3-ஆம் நூற்றாண்டு வாக்கில் அல்லது அதற்கு முன்பு தக்காணம் முழுவதும் கொடுந்தமிழே பேசப்பட்டு வந்தது. வடக்கே பிராகிருதமும், தெற்கே தமிழும் செல்வாக்கு பெற்றிருந்தன. அதனால் தமிழர்கள் இடைப்பட்ட பகுதியை, தமிழ்மொழி தேய்ந்து, கொடுந்தமிழே பேசப்பட்ட பகுதியை, மொழிபெயர் தேயம் என்றனர். இந்த மொழிபெயர் தேயம் தமிழ் மூவேந்தர்களால் பாதுகாக்கப்பட்ட பகுதியாக இருந்து வந்தது என்பதை மாமூலனாரின் அகம் 31 ஆவது பாடல் உறுதிப் படுத்துகிறது. மொழிபெயர் தேயம் தமிழ் மூவேந்தர்களின் பாதுகாப்பின் கீழ் இருந்து வந்தது என்றால் மூவேந்தர்கள் ஒன்று சேர்ந்து செயல்பட்டிருக்க வேண்டும். அவர்கள் அவ்வாறு ஒன்று சேர்ந்து செயல்பட அவர்களிடையே ஒரு ஐக்கிய கூட்டணி இருந்திருக்க வேண்டும் என்பது உறுதியாகிறது.

    கலிங்க மன்னன் காரவேலன்:

               கலிங்க மன்னர் காரவேலனின் அத்திக்கும்பா கல்வெட்டு தமிழர்களின் ஐக்கிய கூட்டணி குறித்துப் பேசுகிறது. அத்திக்கும்பா கல்வெட்டின் காலம் கி.மு.165 ஆகும். அதன் 11வது மற்றும் 13வது வரிகள் தமிழரசுகள் குறித்துப் பேசுகிறன.

    Hathigumpha inscription: Sadananda Agrawal has prepared the text in Sanskrit, which has been published in his book Śri Khāravela, 2000.

    Line 10-11 – And in the eleventh year [His majesty] secured jewels and precious stones from the retreating [enemies]. [His Majesty] caused to be cultivated Pithunda, founded by former kings of Kalinga, with ploughs drawn by asses. Also [His Majesty] shattered the territorial confederacy of the Tamil states having populous villages, that was existing since thirteen hundred years.

     Line 13 – [His Majesty] caused to erect towers with strong and beautiful gateways at the cost of two thousand coins. [His Majesty] obtained horses, elephants and jewels losing strange and wonderful elephants and ships. The King of Pandya caused to be brought here Kalinga various pearls, jewels and precious stones hundred thousand in number(3).

    11வது வரி :     11ஆம் ஆட்சியாண்டில், 1300 ஆண்டுகளாக இருந்து வந்த, மக்கள்தொகை நிறைந்த ஊர்களையும், நகரங்களையும் கொண்ட, தமிழரசுகளின் கூட்டணியை உடைத்து முந்தைய கலிங்க மன்னர்களால் உருவாக்கப்பட்ட, “பித்துண்டா” என்ற நகரத்தைப் பிடித்து, அதனை கழுதை கொண்டு உழுது, பின் வாங்கிய எதிரிகளிடம் இருந்து விலை மதிப்பற்ற ஆபரணங்களையும், கற்களையும் கைப்பற்றிக் கொண்டேன்.”

    13வது வரி :     “12ம் ஆட்சியாண்டில் பாண்டிய அரசன் நூறு ஆயிரம் அளவிலான, விலை மதிப்பற்ற கற்களையும், முத்துக்களையும், ஆபரணங்களையும் கலிங்கத்தின் தலை நகருக்கே கொண்டு வந்து ஒப்படைக்கும் சூழ்நிலையை உருவாக்கினேன்” என்கிறான் கலிங்க மன்னன் காரவேலன்

    பித்துண்டா நகரம்:

          “பித்துண்டா” என்கிற நகரம் முந்தைய கலிங்க மன்னர்களால் உருவாக்கப்பட்ட நகரம் என்பதைத் தெளிவாகக் காரவேலன் கல்வெட்டு குறிப்பிடுகிறது. கலிங்கத்தில் இருந்த முந்தைய கலிங்க மன்னர்களால் உருவாக்கப்பட்ட இந்நகரம் (பித்துண்டா நகரம்)  தமிழக ஐக்கிய கூட்டணி அரசுகளின் நகரமாக, அவர்களின் காவல் அரணாக இருந்து வந்துள்ளது என்கிற செய்தி, தமிழகத்தின் வட எல்லையில் இருந்து கலிங்கத்தின் தென் எல்லை வரையான கடலை ஒட்டிய இன்றைய ஆந்திரப் பகுதி முழுவதும் தமிழக ஐக்கிய கூட்டணி அரசுகளின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்து வந்துள்ளது என்பதை மறைமுகமாகத் தெரிவிக்கிறது எனலாம். அதன் மூலம் மொழிபெயர் தேயம் என்பது தமிழ் மூவேந்தர்களின் பாதுகாப்பின் கீழ் தான் இருந்து வந்தது என்கிற மாமூலனார் அவர்களின் செய்தி, இக்கல்வெட்டின் மூலம் உறுதிபடுத்தப்படுகிறது.

    தமிழக அரசுகளின் ஐக்கியக் கூட்டணி :

        மேலும் இந்நகரம் மீண்டும் தமிழக ஐக்கியக் கூட்டணி  அரசுகளின்கீழ் வந்து விடக் கூடாது என்பதற்காக, அது தரை மட்டமாக்கப்பட்டு கழுதைகொண்டு உழப்பட்டுள்ளது. டி.என். சன்பக் (D.N.Shanbhag) அவர்கள், தமிழக ஐக்கியக் கூட்டணி  அரசுகள் பலமுறை கலிங்க அரசுக்கு தொல்லைகள் கொடுத்து வந்ததாகவும், காரவேலன் வடநாட்டின் மீது படை எடுத்துச் சென்ற போது, அவை கலிங்கத்தை தங்கள் காவல் அரணான பித்துண்டா நகரத்தைத் தலைமை இடமாகக் கொண்டு தாக்கியதாகவும், அதற்குப் பதிலடி தரும் விதமாகத்தான் காரவேலன் பித்துண்டா நகரத்தைத் தாக்கி, தமிழரசுகளின் நீண்ட கால ஐக்கியத்தை உடைத்து, விலை உயர்ந்த பொருட்களை கைப்பற்றியதாகவும், பித்துண்டா என்பது ஒரு துறைமுக நகரம் எனவும் குறிப்பிடுகிறார்(4).

         சன்பக் அவர்கள் தரும் செய்திகள், பித்துண்டா என்பது கலிங்கத்தின் தென் கிழக்கு எல்லையில் கடலோரத்தில் இருந்த தமிழக அரசுகளின் துறைமுகக் காவல் அரண் என்பதை உறுதி செய்கின்றன. தமிழக அரசுகள் மகதத்துக்கு அருகிலுள்ள வலிமையான, காரவேலனின் கலிங்க அரசுக்கு அடிக்கடி தொல்லை கொடுக்கும் அளவு வலிமை மிக்கவனாக இருந்தன என்ற அவரது செய்தி, தமிழ் அரசுகளிடையே ஐக்கியக் கூட்டணி இருந்தது என்பதை, மொழிபெயர் தேயப் பகுதிகள் இக்கூட்டணி அரசுகளின் கீழ் இருந்தன என்பதை சந்தேகமின்றி ஆதாரத்தோடு உறுதிப் படுத்துகின்றன.

         அடுத்த வருடம் (13வது வரியில்), காரவேலனின் வலிமையை உணர்ந்த பாண்டிய அரசன் தொடர்ந்து வட நாடுகளோடு வணிகம் செய்ய, காரவேலனின் ஒத்துழைப்பும் ஆதரவும் அவசியம் என்பதை உணர்ந்து , அவனோடு சமாதானம் செய்து கொள்ளும் பொருட்டு, பெரும் அளவிலான பரிசுப் பொருட்களை அனுப்பி, காரவேலனோடு நட்புக் கொண்டுள்ளான். அதைத்தான் காரவேலன் பாண்டியனே எனக்கு நிறைய பரிசுப்பொருட்களை அனுப்புமாறு நான் செய்வித்தேன் என்கிறான். மாமூலனாரின் பாடல்களும்  காரவேலனின் அத்திக்கும்பா கல்வெட்டும் தமிழக அரசுகளிடையே ஐக்கிய கூட்டணி ஒன்று மிக நீண்ட காலமாக இருந்து வந்தது என்பதையும், மொழிபெயர்தேயப் பகுதிகளான ஆந்திரம், கர்நாடகம் முதலியன தமிழக அரசுகளின் கூட்டணியின் கீழ் பாதுகாக்கப்பட்டு வந்தன என்பதையும் உறுதிபடுத்துகின்றன.  இந்த பித்துண்டா நகரம் குறித்து, ஒரிசாவின் பொருளாத வரலாறு என்கிற நூலும், விக்கிபீடியாவும் தரும் தகவல்களைக் காண்போம்.

         பண்டைய கலிங்கத்தின் மிக முக்கிய நகரம் பித்துண்டா((PITHUNDA) ஆகும். மகாவீரர் (கி.மு. 599-527) காலத்தில், இந்தப் பித்துண்டா நகரம் கலிங்கத்தின் மிக முக்கிய நகர் மையமாக இருந்துள்ளது என உத்தரதயான சூத்திரம் (UTTARADHAYANA  SUTRA) என்கிற சமண நூல் குறிப்பிடுகிறது. இந்த பித்துண்டா துறைமுக நகரம் குறித்து டாலமி(கி.பி. 90-168) தனது புவியியல் நூலில்(GEOGRAPHY OF PTOLEMY) குறிப்பிட்டுள்ளார். இந்தப் பித்துண்டா துறைமுகம், பண்டைய கலிங்கத்தின் கிழக்குக் கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள முக்கியத் துறைமுகம் எனவும் இரண்டாவது பெரிய துறைமுகம் எனவும் விக்கிபீடியா குறிப்பிட்டுள்ளது. இந்த நகரத்தைக் காரவேலன் தமிழ் அரசுகளின் கூட்டணியிடமிருந்து கைப்பற்றிக் கழுதைகளைக் கொண்டு உழுதான் என்ற தகவலும் தரப்பட்டுள்ளது. காரவேலனின் ஆண்டு கி.மு. 209-170 எனச் சொல்லப்பட்டுள்ளது(5).

         நிகார் இரஞ்சன் பட்னாய்க் அவர்களும், விக்கிபீடியாவும் தரும் செய்திகள் இந்தப் பித்துண்டா நகரம் கலிங்கத்தின் பண்டைய இரண்டாவது பெரிய துறைமுக நகரம் என்பதையும், கலிங்கத்தின் கிழக்குப் பகுதியில் அமைந்திருந்த துறைமுக நகரம் என்பதையும் தமிழரசுகளின் கூட்டணியிடமிருந்து கலிங்க மன்னன் காரவேலனால் இந்நகரம் கைப்பற்றப்பட்டு கழுதை கொண்டு உழப்பட்டது என்பதையும் உறுதி செய்கின்றன. டாலமியின் புவியியல் நூலும் இந்நகரம் குறித்துக் குறிப்பிட்டுள்ளது என்கிற செய்தி இந்நகரம் முன்பிருந்தே ஒரு புகழ் பெற்ற துறைமுக நகரமாக இருந்துள்ளது என்பதை உறுதி செய்கிறது.

    பார்வை:

    1.இந்து ஆங்கில நாளிதழ், ஐராவதம் மகாதேவன், “An epigraphic perspective on the antiquity of Tamil”, நாள்: 24/6/2010.

    2.பண்டைக்கால இந்தியா, ஆர். எசு. சர்மா-தமிழி மாஜினி,  ஜூன் 2004, பக: 260-264.  2.தென் இந்திய வரலாறு, டாக்டர் கே. கே. பிள்ளை, 8ஆம் பதிப்பு, 2011    பக்: 34-37) 3. விக்கிபீடியா(SATAVAHANA DYNASTY).

    3.www.jatland.com/home/Hathigumpha– inscription & சதானந்த அகர்வால் அவர்கள் சமற்கிருதத்தில் எழுதிய “சிரி காரவேலா” என்கிற நூலில் இருந்து இணையதளம் வழியாக இப்பகுதி எடுக்கப்பட்டுள்ளது.

    4.சன்பக் (D.N. Shanbhag), www.freeindia.Org/biographies/kharavela/index.htm.

    5.ஒரிசாவின் பொருளாதார வரலாறு-நிகார் இரஞ்சன் பட்னாய்க், பக்: 22, 24, 131, 137. (ECONOMIC  HISTORY OF ORISSA BY  NIHAR RANJAN  PATNAIK, PAGES – 22, 24, 131,137) & பித்துண்டா(PITHUNDA)-விக்கிபீடியா

    Share
  • சங்க இலக்கியத்தில் நிகழ்த்துக்கலைகள்

    -கி. ரேவதி

    தமிழர்களின் வாழ்க்கையோடு பின்னிப்பிணைந்தவை கிராமியக் கலைகள். கிராமங்களில் வசிக்கும் மக்களின் வாழ்க்கையில் இருக்கும் இன்ப துன்பங்களில் முதன்மையானவையாக இருப்பது கிராமியக் கலைகள். இதனை நாட்டுப்புறக்கலைகள் என்றும் அழைக்கின்றோம். வழிபாட்டுச் சடங்குகளின் ஒரு பகுதியாகவோ, பொழுதுபோக்கிற்காகவோ மக்களால் உருவாக்கப்படும் அல்லது நிகழ்த்தப்படும் மரபுவழிக் கலைகள் நாட்டுப்புறக் கலைகள் எனலாம்.

    நாட்டுப்புற கலைகள்

    பழந்தமிழகத்தில் கிராமங்களே மிகுதியாக இருந்தன. கிராம மக்களின் உயிரோடும் உணர்வோடும் ஓங்கி வளர்ந்தவை கிராமியக் கலைகளாகும். நாட்டுப்புறக்கலை என்பது வளர்ந்து கொண்டேயிருப்பது. மனித உள்ளத்தில் சிந்தனை வளம் இருக்கும் வரை கலைகள் இருந்துக்கொண்டேயிருக்கும். நாட்டுப்புறக்கலைகள் தொடந்து வளர்ந்து கொண்டே போவதற்கு அடிப்படைக்காரணம் அக்கலைகளுடன் பழகும் மனிதனது உணர்ச்சியே ஆகும்.

    கூத்துக்கலை

    தமிழர் போற்றி வளர்த்த கலைகளில் கூத்தும் ஒன்றாகும். இசைக் கலையோடு இணைந்து வளர்ந்த கலை இதுவாகும். விழாக்களின்போது மக்களைத் தம் ஆடல்பாடல்களால் மகிழ்வித்தனர். பண்டையக் காலத்தில் கூத்து நடத்தியவர்கள், கூத்தர், பொருநர், விறலியர், கோடியர் எனப்பெயர் பெற்றனர்.

    வள்ளிக்கூத்து

    பண்டைய மக்கள் ஆடிய ஆடல்களில் வள்ளிக்கூத்து என்பதும் ஒன்று. நாட்டுக்கு வளமும், வெற்றியும் பெற்றுத்தந்த வள்ளிக்கொடியின் பெருமையைப்பாடி ஆடுவது ஆகும்.

    “வாடா வள்ளியின் வளம்பல தருஉம்
      நாடுபல கழிந்த பின்றை”     (பெரும்.பாண்.370- 371)

    என்ற பாடல்வரிகள் இக்கூத்துப் பற்றி விளக்குகின்றன. இக்கூத்தினை ஆடவரும், பெண்டிரும் ஆடுவர்.

    குரவைக்கூத்து

    பண்டைய கலைகளின் நினைவுச் சின்னங்களில் ஒன்றாகக் குரவைக்கூத்து விளங்குகின்றது. சிறுபறையைக் கொண்டு மகிழ்வோடு ஆடியது இக்கூத்தாகும்.

    ”பரதவர் மகளிர் குரவையொடு ஒலிப்ப”    (மதுரைக்காஞ்சி 96-97) என்னும் அடியின் மூலம் குரவை ஆடினர் என்ற செய்தியை அறிய முடிகின்றது.

    துணங்கை ஆட்டம்

    துணங்கை என்பது மற்றொரு வகைக் கூத்தாகும். பண்டைய மக்கள் விழாக்களின் போது துணங்கை ஆடினர். இதனை,

    ”விழவு நின்ற வியன் மறுகில்
    துணங்கை
    ”         (மதுரைக்காஞ்சி 327 – 329) என்ற பாடல் அடிகள் உறுதிப்படுத்துகின்றன. துணங்கைக் கூத்தில் ஆண்கள், பெண்கள் எனக் குடிமக்களும் அரசரும் கலந்து கொண்டனர்.

    துடிக்கூத்து

    வெட்சித்திணையில் இடம்பெறும் கூத்துகளில் துடிநிலையும் ஒன்றாகும்.

    ”மறங்கடை கூட்டிய துடிநிலை சிறந்த
    கொற்றவை
    நிலையும் அகத்திணைப்புறனே”  (தொல்.பொருள்.புறத்.நு.4)

    தங்களின் விருப்ப தெய்வமாகிய குலதெய்வத்தை வணங்கித் தாங்கள் நிகழ்த்தவிருக்கும் போரினை வெற்றிமுகமாகச் செய்யுமாறு வேண்டுதல்  நிகழ்த்துவர். போர் மறவர்கள் துடி என்னும் இரு முகப்பறையை முழக்கிக் கொற்றவையை வணங்குதலே துடிநிலை எனப்படும்.

    போர்க்காலங்களில் போருக்கு முன் வெற்றி பெறவேண்டும் என்று கொற்றவையை வணங்கித் துடியை இயக்கிக்கொண்டு ஆடியதால் இக்கூத்து எனப்பெயர் பெற்றது. மிகுந்த வெறியுடன் ஆடப்பட்டதாக இருந்திருக்க வேண்டும். துடிக்கூத்து போர் மறவர்களால் மட்டுமின்றி முருகனாலும் ஆடப்பட்டுள்ளதாகப் பத்துப்பாட்டு பதிவு செய்துள்ளது.

    முருகன் திருச்சீரலைவாய்க் கடலில் சூரபதுமனை அழித்ததான். அவனது ஆறு முகங்களில் ஐந்தாவது முகம் இச்செயலைச் செய்துள்ளது என்பதைச்,

    ”செறுநர்த் தேயத்துச் செல்லும் முருக்கி
    கறுவுகொள்
    நெஞ்சமொடு களம் வேட்டன்றே ஒருமுகம்”  (திரு.99-100)

    என்னும் திருமுருகாற்றுப்படை அடிகள் கூறுகின்றன. கடலில் மரமாக நின்ற சூரபதுமனை அழிக்க அன்னை பார்வதியிடம் வேல் வாங்கிச் சென்றவன். கெட்டவனை அழிக்கக் கொற்றவையிடம் வேலை வாங்கிச் சென்றான். போரில் எதிர்க்கும் எதிரிகளை வேலால் குத்தி வீசித் துடியடித்து அவன் அன்னை கொற்றவையைப் பரவினான். திருப்பரங்குன்றத்து இயல்புகளைப் பேசும் பரிபாடலில்,

    ”துடியின் அடி பெயர்த்து தோளசைத்து தூக்கி
    அடுநறா மகிழ்தடப ஆடுவான் தகைமையின்” (பரி.21)

    என்னும் அடிகள் முருகன் ஆடிய துடிக் கூத்தையே குறிப்பதாகப் பண்டைய தமிழ்ச் சமூகத்தில் நாடகம் என்னும் நூலில் காணலாம்.

    துடியின் ஓசை

    துடியின் ஓசை மிகக் கடுமையுடையதாக இருக்கும் என்பதைப் பல சங்கப் பாடல்கள் எடுத்துரைக்கின்றன.

    ‘உருள்துடி மகுளியின் பொருள்தெரிந்து இசைக்கும்
    கடுங்குரற்
    குடிஞையநெடும் பெருங்குன்றம்” (அகம்.19)

    என்றும்,
    ‘இழிபிறப் பாளன் கருங்கை வன்கண் கடுந்துடி
    புலிதுஞ்சு
    நெடுவரைக் குடிஞையோடு இரட்டும்” (புறம்.170)

    என்றும்,
    ‘கடுந்தடித் தூங்கும் கணைக் காற் பந்தர்”              (பெரு.124)
    என்றும்,
    ‘கோள் தெங்கின் குலை வாழை
    கொழுங்காந்தள்
    மலர் நாகத்து
    துடிக்
    குடிஞைக் குடிப் பாக்கத்து”                    (பொரு.208)

    என்றும் இலக்கியங்கள் பதிவு செய்துள்ளன.

    துடியன்

    துடியை இயக்குபவர் துடியன் என்று அழைக்கப்பட்டுள்ளனர்.

    ‘உவலைக் கண்ணித் துடியன் வந்தென” (புறம்.269-6)
    ‘துடியன் கையறு வேலே அடிபுணர்” (புறம்.285-2)

    துடியர்கள் போர்க்காலங்களில் மட்டும் துடியை இசைக்கும் கலைஞர்களாகப் பதிவு பெற்றுள்ளனர்.

    துடியன் எனப்படுபவன் பலப்பல மலர்களால் ஆன மாலைகளைச் சூடிக்கொண்டு போரைத் தொடங்குவதற்கான துடியை முழங்குவான். துடியின் கடுமையான ஒலியால் எதிரிகள் மிரண்டு செல்வர். அவ்வாறு மிரண்டு ஓடும்போது கடுமையான ஒலியை எழுப்பி வீரர்கள் துடியை இசைத்துள்ளனர். இதனை,

    ‘அருமுனை அலைந்த பெரும்புகல் வலத்தார்
    கனைகுரற்
    கடுந்துடிப் பாணி தூங்கி” (அகம்.159-8-9)

    என்றும்,

    ‘வில்லோர் குறும்பில் ததும்பும்
    வல்வாய்க்
    கடுந்துடிப் பாணியும் கேட்டே” ( அகம்.261 14-15)

    என்றும் அகப்பாடல்கள் பதிவு செய்துள்ளன.

    தொகுப்புரை

    நாட்டுப்புற ஆடல்களில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. இந்த மாற்றங்கள் மரபு சார்ந்த கலைகளை அடுத்த தலைமுறையினருக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.

    அடிக்குறிப்பு:

    1.வையாபுரிப்பிள்ளை, சங்க இலக்கியம், பாரிநிலையம், சென்னை,2004.

    2.நாகராசன். வி, குறுந்தொகை, நியூசெஞ்சுரி புத்தக நிலையம், சென்னை, 2004.

    3.நாகராசன். வி, புறநானூறு, திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற் பதிப்புக்கழகம், சென்னை, 2002.

    4.நாகராசன். வி, அகநானூறு, நியூசெஞ்சுரி புத்தக நிலையம், சென்னை, 2004.

    5.நாகராசன். வி, பத்துப்பாட்டு, நியூசெஞ்சுரி புத்தக நிலையம், சென்னை, 2004.

    *****

    கட்டுரையாளர் – உதவிப் பேராசிரியர்,
    தெய்வானை  அம்மாள்  மகளிர்க்  கல்லூரி, (தன்னாட்சி), விழுப்புரம்.

     

    Share
  • பாணப்பாட்டும் பண்பாட்டு மரபுகளும்

    -முனைவர். ஹெப்சி ரோஸ் மேரி. அ

    ’பாணப்பாட்டு’ என்பது பாணர் இன மக்கள் பாடும் பாட்டாகும். இதனைத் துயிலுணர்த்துப்பாட்டு, பாணர்பாட்டு என்றெல்லாம் அழைப்பர்.  பாணரினமக்கள் பல தலைமுறைகளாக இப்பாடலைப் பாடிவருகின்றனர்.  கால மாற்றத்திற்கேற்ப இப்பாடலில் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. இக்கட்டுரை மலையாளத்திலுள்ள பாணப்பாட்டை அறிமுகம் செய்து அதன்வாயிலாக அறியலாகும் தமிழர் பண்பாட்டு மரபுகளை எடுத்துரைக்க முயல்கிறது.

    பாணர்களின் தோற்றம்

    பாணர்களின் தோற்றம் பற்றிய பலகதைகள் மலையாள நாட்டுப்புறப் பாடல்கள்களில் நிலவுகின்றன. கணிதசாஸ்திரத்தில் பண்டிதனாக விளங்கியவர் வரருசி. இவர் பறையர் இனத்தைச் சார்ந்த பெண்மணியைக் காதலித்துத்  திருமணம் செய்தார்.  இவர்கள் ஜோதிடத்தையும் கணிதத்தையும்  நாடெங்கும் சுற்றித்திரிந்து பரப்பினர்.  பிராயாணம் செய்யும்போது பல இடங்களில் வைத்தும் பதினோரு பிள்ளைகளைப் பெற்றார்.  ஒவ்வொரு குழந்தையும் பிறக்கும்போதும் ‘வாய் இருக்கிறதா’ என்று கேட்பார். இருக்கிறது என்று சொன்னால் அக்குழந்தையை அங்கேயே விட்டுவிட்டு சென்றனர். பன்னிரெண்டாவது குழந்தை பிறந்ததும் அதன் தாய் அக்குழந்தைக்கு வாய் இல்லை என்று கூறினார். எனினும் பலன் இல்லை. அதனையும் அங்கேயே விட்டுவிட்டுச் சென்றனர்.  வரருசி விட்டுச் சென்ற பன்னிரெண்டு பிள்ளைகள் யாரெல்லாம் என்று கேரள இலக்கிய வரலாற்றில் உள்ளூர் குறிப்பிடுகிறார்.

    மேழத்தோளக்னி கோத்திரி ரஜகனுளியனூர்த்தச்சனும் பின்னே வள்ளோன்
    வாயில்லாகுந் நிலப்பன் வடுதலமருவும் நாயர் காரய்க்கல் மாதா
    செம்மே கேளூப்புகுற்றன், செறிய திருவரங்கத்தெழும் பாணனாரும்
    நேரே நாராயண பத்திரனு முடநகவூர் சாத்தனும் பாக்குனாரும்
    இதில் வரும் திருவரங்கத்தெழும் பாணனார் என்பது சுருங்கி காலப்போக்கில் திருவரங்கன் என்றானது.  இக்கதைப் பாணர்களின் தோற்றத்தைக் குறிப்பிடுகிறது.  இக்கதையினையே பாணர்கள் துயிலெழுத்துப்பாடலில் பாடி வருகின்றனர்.

    தொல்காப்பியத்தில் பாணர்

    தொல்காப்பியத்தில் பாணர் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.  தொல்காப்பியம் பொருளதிகாரத்தில், நிலம்பெயர்ந்து உரைத்தலும் அவள் நிலை உரைத்தல் கூத்தர்க்கும் பாணர்க்கும் யாத்தவை உரிய தொல். பொரு:167. தலைவியைவிட்டுத் தலைவர் பிரிந்துசென்ற இடத்தில் சென்று தலைவியின் நிலையைக் கூறும் மரபு கூத்தருக்கும் பாணர்க்கும் உரிய மரபாகும்.  தலைவன் தலைவியரின் அந்தரங்க இரகசியங்களையும் பாணர்கள் அறிந்திருந்தனர் என்பதை இச்சூத்திரம் தெளிவுபடுத்துகிறது.  மேலும்

    ”தோழி தாயே பார்ப்பான் பாகன்
    பாணன் பாட்டி இளையர் விருந்தினர்
    கூத்தர் விறலியர் அறிவர் கண்டோர்
    யாத்த சிறப்பின் வாயில்கள் என்ப” – (தொல் பொரு.194)

    என்று தொல்காப்பியம், பொருளதிகாரம் கூறுகிறது.  இச்சூத்திரத்தில் மிக முக்கியமான செய்திப் பரிமாற்றத்திற்குரிய வாயில்களுள் பாணரும் பாட்டியும் குறிப்பிடத்தக்கவர்களாவர்.  இங்கு பாணன் என்ற சொல் ஆடவரையும் பாட்டி என்ற சொல் பாணர்குலப் பெண்களையும் குறிக்கிறது.  தொல்காப்பியர் கூறும் பாட்டி என்ற சொல் சங்ககாலத்தில் பாடினி என்று வழங்கப்பட்டது.  ’பாட்டி’ என்ற சொல்லுக்குத் திவாகர நிகண்டு பாணர் இனப் பெண்டிரைக் குறிப்பதாகக் கூறுகிறது.  சங்ககாலத்தில் இப்பாணர்கள் யாழ் இசைத்துப் பாடினர். அவ்யாழ் சீறியாழ், பேரியாழ் என இரண்டுவகைப்பட்டதென்று ஆற்றுப்படை நூல்கள் வாயிலாக அறியலாம்.  மேலும் பெரும்பாணாற்றுப்படையும் சிறுபாணாற்றுப்படையும் பாணர்களின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கிறது.  யாழ்ப்பாணர், இசைப்பாணர், மண்டைப்பாணர் என்ற மூன்று வகைப்பட்ட பாணர்களைப் பெரும்பாணாற்றுப்படை குறிப்பிடுகிறது.  இவர்களுள் இசைப்பாணர்களை உயர்ந்தவர்களாகக் கருதுகின்றனர். இவர்கள் போர்க்களத்திற்குச் சென்று பெரும் வீரர்கள் போர்செய்யும் முறையைக் கண்டு அவர்களைப் பற்றிப்பாடும் உரிமையைப் பெற்றிருந்தனர்.  மண்டைப்பாணர்கள் தாழ்ந்தவர்களாகக் கருதப்பட்டனர். காரணம் இவர்களுக்குக் குறிப்பிடத்தக்க தொழில்கள் இல்லாமல் ஊர் ஊராக அலைந்து திரிந்து மன்னர்களையும் நிலக்கிழார்களையும் புகழ்ந்து பாடல்கள்பாடிப் பரிசில்பெற்று வாழ்க்கை நடத்தினர். இவர்கள் பழுமரம் தேரும் பறவை போலத் தங்கள் உணவிற்காகப் பல்வேறு இடங்களிலுள்ள மன்னர்களை நாடிச்சென்றனர் என்பதை,

    பழுமரம் தேரும் பறவை போல
    கல்லென் சுற்றமொடு கால் கிளர்ந்து திரிதரும்
    புல்லென யாக்கைப் புலவுவாய் பாண
    (பெரும்பாணாற்றுப்படை)

    என்ற பெரும்பாணாற்றுப்படைப் பாடல்களால் அறிகிறோம். இவர்கள் மன்னர்களை நாடிச்சென்றதற்குக் கேரள நாட்டுப்புறக் கதைப்பாடல்களில்  பல  கதைகள் வழங்குவதைக் காணலாம்.

    கைலாயமலையில் சிவனும் பார்வதியும் சூதாடினர். அப்பொழுது சிவபெருமான் தோற்கவே அதைக் கண்டுகொண்டிருந்த பாணன் மாதரிடம் தோற்றுவிட்டாய் என்று சிவபெருமானைக் கேலி செய்கிறான். கோபம் கொண்ட சிவபெருமான் சூதை எடுத்து தரையில் வீசினார்.  பூமியில் வந்த பாணன் சிவபெருமானைச் சபித்தான். உடனே சிவபெருமானும்   நோய்வாய்ப்பட்டார். அவருடைய நோயைப் போக்குவதற்கு ஆயிரம் கன்னிகைகள் குரவையிட்டனர், ஆயிரம் பேர் பள்ளிச் சங்கு ஊதினர். அப்படி இருந்தும் சிவபெருமான் எழவில்லை. இறுதியில் வேலனிடம் சிவபெருமானின் நோய்க்கான காரணத்தை வினவ பாணன் இட்ட சாபமே அதனைப் பாணன்தான் போக்கவேண்டும் என்றான். பாணன் சிவபெருமானின் திருச்சன்னிதியில் நின்று அவரைப் புகழ்ந்து பாடவே சிவபெருமான் சாபம் நீங்கித் துயிலுணர்ந்தார். உடனே சிவபெருமான் உனக்கு என்ன வேண்டும் என்று கேட்கவே ஏதாவது ஒருவரம் தந்தால் போதும் என்று பாணனும் கூறுகிறான் அதற்குச் சிவபெருமான்,

    ஏதும் ஒந்நுமே இல்லாத்தானு
    ஏழு வீடே துயிலுணரு ஞான் தோற்றிட்டுண்டிதேடா
    மலநாட்டிலே மகாஜனங்ஙளே என்னயெந்நே நினப்பவரு
    விளக்குடனே கொளுத்துமடா
    அறியாத்த பாபிகளு படியடச்சு விலக்குமெடா
    விலக்கும் வீட்டில் மறந்நிட்டுமே என்றே நாமமே ஸ்துதிக்கருது
    ஈ வரமே தன்னிதேடா நினக்கும் நின்றே சந்ததிக்கும். –  (பாணன்மார் பாட்டு – 53-59) என்று வரம் கொடுக்கிறார்.

    சிவபெருமான் கொடுத்த வரங்கள் பற்றி மேலும் பல கதைகள் வழங்குவதைக் காணலாம்.  என்ன வரம் என்று கேட்டதற்கு ஒரு யானையைக் கொடுத்தார்.  யானையை வளர்க்கத்தெரியாத பாணன் சிவபெருமானிடம் அதனைத் திரும்பக் கொடுக்கவே அவர் அவன் உழுது பிழைப்பதற்காக இரண்டு எருமைகளைக் கொடுக்கிறான். அவ்வெருமைகளைக் கலப்பையின் இரு துருவங்களிலும் கட்டிஉழத் துவங்குகிறான். இரண்டும் எதிர்திசையைப் பார்த்து செல்லவே அவ்வெருமைகளையும் சிவபெருமானிடம் திரும்பக் கொடுக்கிறான். உடனே சிவபெருமான்’ ’ஒந்நுமில்லாத்தான் ஏழு வீட்டில் போய் பாடி வாழ்க’ என்று வரம் கொடுப்பதாகக் கூறுகின்றனர்.

    இன்றும் கேரளத்தில் வாழும் பாணர்களின் தொழில் வீடுவீடாகச் சென்று பாடிப் பொருள்கள் பெறுவதாகும்.  இவர்கள் பாடும் பாட்டினைத் துயிலுணர்த்துப்பாட்டு என்று அழைப்பர்.  பாணனும் பாட்டியும் அதிகாலைப் பொழுதில் துடி, கிண்ணம், கைமணி முதலிய இசைக்கருவிகளை இசைத்த வண்ணம் ஒவ்வொரு வீடாகச் சென்று வீட்டின் வெளியில் நின்று முதலில் துடி முழக்கி கனைத்துக் காட்டுவர்.  வீட்டார் பாணன் வரவை அறிந்து முற்றத்தில் விளக்கேற்றி அலங்கரித்துப் பாணரை அழைப்பர்.  பாணன் முற்றத்தில் அமர்ந்து சிவபெருமான் தங்களை இத்தொழில் செய்வதற்கு வரம் கொடுத்த கதையான திருவரங்கன் கதையைப் பாடுவர்.  பின்னர் வீட்டாரின் விருப்பத்திற்கேற்ப ஹரிச்சந்திர சரிதம், கிருஷ்ண லீலை முதலிய சில கதைப் பாடல்களையும் பாடும் மரபு உண்டு.  பொதுவாக இவர்கள் கர்க்கடக மாதம் அதாவது ஆடி மாதத்தில்தான் பாடச் செல்வர்.  பாணர்கள் பாடியதற்காக அரிசி, தேங்காய், எண்ணெய் முதலிய பொருட்களை வழங்குவர். வடக்கன் பாட்டிலும் பாணர்கள் பல பகுதிகளில் அலைந்து திரிந்து பாடிப் பரிசில் பெறுகின்ற தன்மையைக் காணமுடிகிறது.

    பாணப்பாட்டில் பண்பாட்டு மரபுகள்

    சமூக அமைப்பு ஒரு காலத்திலிருந்து மற்றொரு காலத்திற்கு மாறிவரும் தன்மையுடையது.  பண்பாட்டு வரலாற்றில் ஓர் இனத்தாருடைய பழக்கவழக்கங்களும் எண்ணங்களும் மாறிவருவதைக் காணலாம்.  ஒரு சமூகத்தின் பழமையான பழக்கவழக்கங்களை நாம் நாட்டுப்புறவியல் வழியாக அறிந்துகொள்ள முடியும்.  ஒவ்வொரு பிரிவினரிடையேயும் வெவ்வேறு பழக்கவழக்கங்கள் நிலவி வந்துள்ளன. இப்பாணப்பாட்டு வழியாகப் பாணர் சமூகத்தின் பண்பாடுகளை அறிந்துகொள்ள முடிகிறது.

    பாணர்கள் தங்களுக்கென்று ஒரு தொழில் அறியாதவர்கள் என்றும் இவர்கள் வீடுவீடாகச் சென்று சிவபெருமானின்  பெருமைகளைப் பாடிக் கிடைக்கும் பரிசில்களை வைத்தே வாழ்ந்தனர் என்பதையும் பாணப்பாட்டு மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. இவர்கள் பாடிப் பொருள் பெறுதல் மட்டுமன்றி இவர்களுள் சிலர் யானைக்கு நெற்றிப்பட்டம் கட்டுதல், முத்துக்குடை தைத்தல், கோவிலுக்குத் தேவையான ஓலையாலாகிய பொருட்களைப் பின்னுதல் முதலிய வேலைகளில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் ஊர் ஊராகச் சுற்றித்திரிந்து வருகின்ற காட்சியை,

    ’நந்நு நந்நே திருவரங்கா
    இத்தற நாளுமே போகருதே’ (பா.பா 106-107)

    என்று கூறுவதில் இருந்து ஒரு இடத்தில் தரித்து நிற்காமல் சுற்றித்திரியும் தன்மையுடையவன் என்றும் அவனைப் போகாமல் இருப்பதற்காக வேண்டுவதாகவும் இவ்வரிகள் அமைகின்றன.

    ஒருவர் நோய்வாய்பட்டால் முதலில் இறைவனுக்கு வழிபாடு செய்தனர். என்பதைப் இப்பாணப்பாட்டு வாயிலாக அறிகிறோம். சிவபெருமான் நோய்வாய்பட்டபோது ஆயிரம் கன்னிகைகள் தாலப்பொலி எடுத்தனர், ஆயிரம் பேர் சங்கு ஊதினர், வேலனை அழைத்து இதற்கான காரணத்தை அறிந்தனர். இதனை,

    ஆயிரமே பிராமணரு ஆனவர்ஷமே நமஸ்காரம்
    ஆயிரமே கன்னிகளு கைவிளக்கே தாலப்பொலி
    ஆயிரமே மங்கமாரு மாடித்தற்றோ வாய்க்கரவ
    ஆயிரமே சங்குகாரு பள்ளிசங்குணர்த்து ந்நவரு – (பா.பா 28-31)

    என்ற வரிகள் உணர்த்துகின்றன. இது சங்ககாலம் முதல் தமிழகத்தில் நிலவிய பாணர் பண்பாட்டினை விவரிக்கிறது.  பாணர்கள் துயிலுணர்த்தி  இறைவன் புகழ் பாடியதற்கு,

    ஒரு நெல்லுமே அன்னம் வேண்டா
    ஒருழக்குப் பாலும் வேண்டா’   ( பா.பா 75.76) என்ற வரிகளில் இருந்து அன்னமும் பாலும் பரிசிலாக வழங்கினர் என்பதையும் பாலை உழக்கால் அளந்தனர் என்பதையும் அறிகிறோம். மட்டுமல்லாமல் ஆணும் பெண்ணும் சூதாடும் வழக்கம் அக்காலத்தில் இருந்ததை’ பொன்னினெந்த சூதெடுத்து பகவானும் திரிச்சு வச்சு’ என்ற வரிகள் வாயிலாக உணர்கிறோம்.

    மாலைப் பொழுதில் கிருட்டினனின் பெருமைகளைப் பஜனையாகப் பாடும் வழக்கம் இருந்தது. இன்றும் கேரளப் பாணரிடையே இம்மரபு நின்று நிலைக்கின்றன.

    வச்சுண்ணான் கொச்சுருளி
    இட்டுண்ணான் இலத்தளிக
    கண்கான்மானணி விளக்கு
    நீர்குடிப்பான் வெள்ளிக்கிண்டி
    வெயில் தாங்கும் குடையெடுத்து ( பா.பா 220 -223) என்ற வரியில் இருந்து பாணர்கள் உருளியில் உணவெடுத்து, தளிர் இலையில் உணவுண்டு, வெள்ளிக்கிண்டியில் நீர்பருகி, வெயிலிற்கும் குடைபிடித்து வந்தனர் என்பதை இவ்வரிகள் உணர்த்துகின்றன. இறைவனுக்குக் கிழக்குப் பார்த்தே விளக்கு ஏற்றினர். இது இன்றும் தமிழரிடையே காணப்படும் ஒரு பண்பாடாகும்.

    ஹரிச்சந்திரபுராணத்தில் இறப்புச்சடங்கு நிகழ்த்தும் முறை காணப்படுகிறது.  பாலுள்ள விறகை அருகில் அடுக்கி நெய்யுள்ள விறகை நெஞ்சில் அடுக்கியே ஈமக்கடனைச் செய்தனர்.

    பாணப்பாட்டைப் பார்க்கும்போது பண்டைய சங்ககாலத்திய தமிழர் மரபுகள் இவர்களது பாடலில்  இலைமறை காயாகப் பதிவாகியுள்ளதைக் காணலாம். பாணர் மரபையும் அவர்களது வாழ்வியலையும் இப்பாணப்பாட்டு எடுத்துரைக்கிறது.  காலமாற்றத்திற்கேற்ப நிகழ்ந்த பண்பாட்டு மாற்றத்தையும் இது எடுத்துரைக்கத் தவறவில்லை. கேரளீயருக்கே ஆன சில பண்பாடுகளும் பாணப்பாட்டில் பதிவாகியுள்ளன.

    *****

    துணை நூல் பட்டியல்

    1. ஆனந்தகுமார் .பா இலக்கியமும் பண்பாட்டு மரபுகளும்,  நியூ        செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, 2005.
    2. இராமநாதன். ஆறு நாட்டுப்புறப் பாடல் களஞ்சியம், மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம், 2002.
    3. குளோரி. தா நாட்டுப்புறப் பாடல்களில் இடம்பெறும் பழக்கவழக்கங்களும் நம்பிக்கைகளும், காவ்யா, சென்னை, 2008
    4. பார்கவன் பிள்ளை. ஜி கேரளத்திலே பாணன்மார் பாட்டுகள்,   நேஷணல் புக் ஹவுஸ், கோட்டயம்,2009.
    5. பார்கவன் பிள்ளை. ஜி கேரளத்திலே நாடோடிப் பாட்டுகள், சாகித்திய வேதி, திருவல்லா.

    *****

    கட்டுரையாளர் – உதவிப்பேராசிரியர்,
    கேரளப் பல்கலைக்கழகம்.

     

    Share
  • நல்வாழ்வுக்கு வழிகாட்டும் நாலடி – 5

    -மேகலா இராமமூர்த்தி

    சினத்தை கைவிடுதலும் மனத்தை அடக்கிப் பொறுமையைக் கைக்கொள்வதும் மனித வாழ்வைச் செம்மையாக்கும். ”பொறுத்தார் பூமி ஆள்வார்” என்பது முன்னோரின் பொன்மொழி அன்றோ?

    அறிவ தறிந்தடங்கி அஞ்சுவ தஞ்சி
    உறுவ துலகுவப்பச் செய்து – பெறுவதனால்
    இன்புற்று வாழும் இயல்பினார் எஞ்ஞான்றும்
    துன்புற்று வாழ்தல் அரிது.
    (நாலடி – 74)
     

    அறிந்துகொள்ள வேண்டியவற்றை அறிந்து, அடக்கமுடையவராய், அஞ்சத் தக்கவற்றிற்கு அஞ்சி, தமக்குத் தகுதியான செயல்களை உலகம் மகிழும் வண்ணஞ்செய்து, இன்பத்தோடு வாழும் இயல்பினர், என்றும் வாழ்வில் துன்புறுதல் இல்லை.

    அடக்கமும், பொறுமையும், கிடைக்கும் வருவாயில் மனநிறைவோடு வாழும் பெற்றியும் மட்டும் ஒருவனுக்கு வாய்த்துவிடுமேயானால், அவன் வாழ்க்கை வெற்றிதான்!  ”பெற்றது மகிழ்ந்து சுற்றம் அருத்தி ஓம்பாது உண்டு கூம்பாது வீசி” வாழும் தமிழ்ப் புலவோரின் பொருள்பொதிந்த வாழ்வு குறித்துக் கோவூர்கிழார் கூறுவதை இங்கே பொருத்திப் பார்க்கலாம்.

    மனிதரில் இருவகையினர் உளர். சிலர் உள்ளத்தே நஞ்சைவைத்துச் சொல்லில் தேனைக் குழைத்துப் பேசுவார்கள்; வேறுசிலர் உள்ளத்து அன்பை வெளிக்காட்டிக் கொள்ளாமல் கடுமொழிகளால் அறிவுறுத்துவார்கள். இவ்விருவரில் யார் சொல்லை நாம் மனங்கொள்ளவேண்டும் என்பதை நமக்குத் தெளிவுபடுத்துகின்றது நாலடியார்.

    ”பேரரும்புகளிலெல்லாம் விருப்பத்தையுடைய வண்டுகள் ஆரவாரிக்கும் வளம்நிறைந்த கடலையுடைய குளிர்ச்சிபொருந்திய கடற்கரைத் தலைவ! தமக்கு முன்னேற்றம் தருவதை அறிந்து செய்வாரைப் பெற்றால், அவர்கள் உள்ளன்பினால் நன்மை கருதிச் சொல்லும் கடுஞ்சொல், மனமகிழ்ந்து கூறும் அயலவர் இன்சொல்லினுந் தீதாகுமா? ஆகாது!” என்கிறது நாலடியார்.

    காதலாற் சொல்லுங் கடுஞ்சொல் உவந்துரைக்கும்
    ஏதிலார் இன்சொலின் தீதாமோ – போதெலாம்
    மாதர்வண்டு ஆர்க்கும் மலிகடல் தண்சேர்ப்ப !
    ஆவ தறிவார்ப் பெறின். 
    (நாலடி – 73)

    இனிக்க இனிக்கப் பேசினாலும் பகைவரின் சொற்கள் தள்ளத்தக்கன. கடுமையாய் மொழிந்தாலும் நட்டாரின் சொற்கள் தள்ளாது கொள்ளத்தக்கன. இனிப்புப் பண்டங்கள் வாய்க்குச் சுவை தந்தாலும் உடலுக்குத் தீங்கையும், கசப்புப் பண்டங்கள் வாய்க்குக் கைத்தாலும் உடலுக்கு நன்மையையும் தருவனவன்றோ? எனவே சொற்களின் சுவையில் மயங்குவதைக் காட்டிலும் அவை நமக்கு நல்கும் பயனறிந்து தெளிதலே நல்லது.

    பொறையுடைமையைப் பல்வேறு தருணங்களில் பல்வேறு வகைகளில் வெளிப்படுத்தவேண்டிய கடப்பாடு சான்றோர்க்கு உண்டு. காட்டாக,  அறிவுடையோர் பேதையர்க்கு நல்லறிவு கொளுத்த எத்துணை முயன்றாலும் அதனை விளங்கிக்கொள்ளும் அறிவும் திறனும் பேதையர்க்கின்மையால் அவர்கள் அறிவுடையோர் கருத்துக்கு முரண்பட்டு ஏறுமாறாக ஏதேனும் பிதற்றிக்கொண்டுதான் இருப்பர். எனவே ஆன்றவிந்தடங்கிய சான்றோர் பேதையரோடு உரையாடுவதைத் தவிர்த்து அவ்விடத்தைவிட்டு வழுக்கிக் கழிதலே நல்லது என்கிறது நாலடியார்.

    கோதை யருவிக் குளிர்வரை நன்னாட
    பேதையோ டியாதும் உரையற்க – பேதை
    உரைப்பிற் சிதைந்துரைக்கும் வகையான்
    வழுக்கிக் கழிதலே நன்று.
    (நாலடி – 71)

    ”பழமொழி நானூறும் இதே பொருள்பட,

    ”கல்லா தவரிடைக் கட்டுரையின் மிக்கதோர்
    பொல்லாத(து) இல்லை ஒருவற்கு…” என்று சொல்லிச் சென்றிருப்பதை இங்கே நாம் எண்ணிப் பார்க்கலாம்.

    மானுட வாழ்வில் ஒழுக்கம் மிகவும் இன்றியமையாதது. ’ஓதலின் சிறந்தன்று ஒழுக்கமுடைமை’ என்பது ஆன்றோர் வாக்கு. மனிதரை விலங்கினின்றும் வேறுபடுத்திக்காட்டும் அவ்வுயர் பண்பை மானுடர் உயிரினும் மேலாய் ஓம்பவேண்டும்.

    ’அறனெனப்பட்டதே இல்வாழ்க்கை’ என்று வள்ளுவரால் விதந்தோதப்படும் இல்லறமாம் நல்லறத்தில் ஈடுபட்டிருக்கும் ஆடவன் ஒருவன், தன் மனைவியைத் தவிர பிற பெண்டிரை நயப்பதும், அவர்கள்மாட்டுக் காமம்துய்க்க நினைப்பதும் மிகவும் தீது. அந்த இழிசெயலை – பழிசெயலைச் சான்றோர் என்றுமே விரும்பமாட்டார்கள்; ஏன்? புண்ணியம், புகழ், தக்கார் நேயம், பெருமிதம் தரும் ஆண்மை என்ற இந்நான்கும் பிறன்மனை விரும்புவாரிடத்திற் சேரமாட்டா; பகை, பழி, பாவம், அச்சம் எனும் நான்குமே அவர்களிடம் சேரும் என்பதால்.

    அறம்புகழ் கேண்மை பெருமைஇந் நான்கும்
    பிறன்தாரம் நச்சுவார்ச் சேரா – பிறன்தாரம்
    நச்சுவார்ச் சேரும் பகைபழி பாவம்என்று
    அச்சத்தோ டிந்நாற் பொருள். 
    (நாலடி – 82)
     

    இதையே குறளாசான்,

    பகைபாவம் அச்சம் பழியென நான்கும்
    இகவாவாம் இல்லிறப்பான் கண்.
     (பிறனில் விழையாமை – 146) என்றறைந்தார்.

    திருமணம் ஆகா இளைஞன் ஒருவன் பிறன்மனை நயப்பதே கண்டிக்கத்தக்க தீயொழுக்கமாகும். அவ்வாறிருக்க, நல்லநாள் கேட்டறிந்து, அந்நன்னாளிற் பலரும் அறியும்படி மணமுரசு கொட்டித் திருமணம்செய்து தன் காவலிற் புகுந்த மெல்லியளான அன்புடை மனையாட்டியும் அகத்திருக்க, ஒருவன் அயலான் மனைவியை அடையக் கருதுவது ஏன்? என்று வியந்து வினாவெழுப்புகிறது நாலடி.

    பல்லா ரறியப் பறையறைந்து நாள்கேட்டுக்
    கல்யாணஞ் செய்து கடிப்புக்க – மெல்லியற்
    காதன் மனையாளும் இல்லாளா என்ஒருவன்
    ஏதின் மனையாளை நோக்கு. 
    (நாலடி – 86)

    ஆகவே இல்லறத்தானாயினும் சரி, மணமாகா இளைஞனாயினும் சரி இன்னொருவனின் இல்லக்கிழத்திபால் காமம்கொள்வது அவன் குடிக்குப் பெருங்கேடாய் முடியும். அதனால்தான் கீழான நெறியில் ஒழுகுகின்றவன் அனைவரினும் கடையன் – அறிவிலி, பிறனில் விழைந்து அவள் வீட்டு வாயிலில் காத்துக் கிடப்போன் என்று வெகுண்டுரைத்தார் தெய்வப் புலவர்.

    அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை
    நின்றாரின் பேதையார் இல்.  (பிறனில் விழையாமை – 142)

    முறையற்ற பெண்ணாசையை ஒழித்தலே பேராண்மை என்பதே மேலோர் கருத்து.

    [தொடரும்]

    *****

    துணைநூல்கள்:

    1. நாலடியார் மூலமும் உரையும் – திரு. தி. சு. பாலசுந்தரம் பிள்ளை
    2. திருக்குறள் தெளிவுரை – மு. வரதராசனார்
    3. பழமொழி நானூறு – ம. இராசமாணிக்கம் பிள்ளை

     

     

    Share
  •  கருவூரார் திருவுள்ளம்

    முனைவர் இரா. மதன் குமார்

    முன்னுரை

    ஒன்பதாம் திருமுறை ஆசிரியர்களுள் ஒருவராகிய கருவூரார் அருளிச்செய்த திருப்பதிகங்கள், பத்து. ‘கருவூர் சித்தர்’ என்ற பெயரால், மக்களால் நன்கறியப்படுகின்ற அவர்தம் திருப்பதிகங்கள், மெய்யியல் அனுபவப் பதிவுகளாகவும், இறைவனால் அவர் ஆட்கொள்ளப்பெற்ற அருளியல் பதிவுகளாகவும் விளங்குகின்றன. சீரிய உவமைநயங்களால் பாடுபொருளை எடுத்துரைக்கின்ற பாங்கினையும், சைவநெறிகளைத் தத்துவநோக்கில் எடுத்தாளுகின்ற போக்கினையும் அவர்தம் திருப்பாடல்களில் காணலாம். தமது திருப்பதிகங்கள் வழியே,  அவர் பக்திநெறி காட்டுகின்ற திறமானது இக்கட்டுரையில் ஆய்ந்துரைக்கப்பெறுகிறது.

    கருவூரார் திருப்பதிகப் பொருள்நிலை

    தில்லைத் திருத்தலத்தில், இறைவன் கோயில் கொண்டுள்ள நிலையினை, அதன் இயற்கைச் சூழலுடன் கோயில் திருப்பதிகமாகப் பாடியுள்ளார். இறைவனின் திருஅழகினை உருக்காட்சியாகக் காட்டுவதாக, திருக்களந்தை ஆதிச்சேச்சரத்துத் திருப்பதிகம் விளங்குகிறது.  இறைவனார், தமக்கு அருளியவகையினை திருமுகத்தலைத் திருப்பதிகத்திலும், கங்கைகொண்ட சோளேச்சரத்துத் திருப்பதிகத்திலும் குறித்தருளியுள்ளார். திருப்பூவணத் திருப்பதிகம், பல்பொருள் பதிகமாகவும், திருச்சாட்டியக்குடித் திருப்பதிகம், இறைவரது பெருமையையும், அத்தல அந்தணர்க்குப் பெருமான் அருளுதலையும் விளக்குகின்றன. திருஇடைமருதூர் திருப்பதிகத்தில், தமக்கு ஞானக்கண் விழிப்பருளி, உயிர்களை வாழ்விக்கப் பாமாலை பாடுதற்கு வரமருளிய சிறப்பினைக் குறித்துள்ளார். அத்துடன், ‘அகத்துறை வழியே, அருள்துறையைப் பாடுதல்’ என்னும் நோக்கில்,  திருக்கீழ்க்கோட்டூர் மணியம்பலம்,  திரைலோக்கிய சுந்தரம் மற்றும் தஞ்சை இராசராசேச்சரம் ஆகிய திருப்பதிகங்களையும் அருளியுள்ளார்.  இவற்றுள் மண்ணாசை, பெண்ணாசை மற்றும் பொன்னாசை ஆகியன, அரனை அடைதற்குரிய வகையில் அமையக் கருவூரடிகள் அறிவுறுத்துகின்றார்.

    கருவூரார் திருவுள்ளம்

    முக்கண் பரமனார், பிச்சை உகக்கின்ற பெருமானாக வந்து, அடியார்தம் வினைகளைத் தமது கையோட்டில் ஏற்றருள்கின்றார் என்பது தத்துவநோக்கு. ‘வானவர் அனைவரும், பெருமானின் ஆணையின்வண்ணம் சேவை செய்யக் காத்திருக்கின்ற வேளையில், பெருமானோ, மண்ணுலகில் உயிர்கள் உய்யும்பொருட்டு, அவற்றின் தீவினைகளைப் பிச்சையேற்று அவற்றை உய்விக்க இரங்கியருள்கின்றான்’ என்கின்றார் கருவூரடிகள்.

    ‘இந்திர லோக முழுவதும் பணிகேட்டு

                                  இணையடி தொழுதெழத் தாம்போய்

                          ஐந்தலை நாக மேகலை யரையா

                                  அகந்தொறும் பலிதிரி யடிகள்’                            (9ஆம் திருமுறை:17: 2)

    பெருமானது மெய்யடியாராகிய கருவூரரும் உயிர்கள்தம் வினைகளைப் பிச்சையாக ஏற்று,  அவை பிறவிப்பிணி நீங்கி உய்ய, தமது அருஞ்சொல் மாலைகளைத் தந்தருளியுள்ளார். ‘அங்கை ஓடு ஏந்தி பலிதிரி கருவூர்’ என்பது, திருப்பதிகத்தின்வழி, கருவூரடிகள் தம்மைச் சுட்டியுள்ள அகச்சான்றாகும். பக்திநெறியினை வாழ்வியலாக அல்லாமல், வெற்றுச் சடங்குகளாகவும், வீண் பயிற்சிகளாகவும் மேற்கொள்கின்ற பொய்யர்தம் அறிவு, சிற்றறிவாகவே விளங்கும்.       அருள்கடலாக விளங்கவல்ல இறைவனைச் சிற்றறிவுடைய உயிர்களால் நிறைவாக ஆய்ந்தும், அறிந்தும், இன்புற இயல்வதில்லை. அதனால்,  ‘நாடகத்தால் உன் அடியார் போல நடிக்கின்றேன்’ என்று கலங்கி பல்லுயிர்களும், பிறவியென்னும் பெருஞ்சுழியில் பட்டு மாய்கின்றன.  உயிர்கள், அறியாமை என்னும் பெருஞ்சுழியிலிருந்து விடுபட்டு, பிறவி என்னும் பெருங்கடல் நீந்திக் கரையேறுதற்குக் கருவூரர்தம் திருப்பதிகங்கள் சிறந்த வழித்துணையாகின்றன.

     ‘அங்கையோடேந்திப் பலிதிரி கருவூர்

                                          அறைந்த சொன்மாலையால், ஆழிச்

                                  செங்கையோ டுலகில் அரசுவீற்றிருந்து

                                         திளைப்பதுஞ் சிவனருட் கடலே’                     (9ஆம் திருமுறை:8: 2)

    என்று கருவூரடிகள், மண்ணில் நல்ல வண்ணம் வாழ்ந்து, பேரின்பமாகிய அருள்கடலில் திளைக்க வழிகாட்டுகின்றார்.

    உடல் என்னும் உத்தமனார் விமானம்

    ‘நந்தவனத்தில் ஓர் ஆண்டி – அவன் நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டிக் கொண்டு வந்தானொரு தோண்டி – மெத்தக் கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத் தாண்டி’ என்றமைந்த கடுவெளிச் சித்தர்தம் பாடல், உடலிடத்தே இடம்கொண்ட உத்தமனை மறந்து, நிலையில்லாச் சிற்றின்பச் சேற்றில் உழல்கின்ற உயிர்களின் அவலத்தைச் சுட்டியுரைப்பதாகும். அத்தகைய அவலம் தமக்குத் திருவருள் துணையால் நேரிடாத வகையினைக் கருவூரடிகள் விளக்கியுரைக்கின்றார்.

    ‘மனித வாழ்க்கையோ, சிற்றின்பச் சேறு; அதற்கென அமைந்த உடம்போ, பச்சை மண்ணாக, வாழ்நாள் என்னும் பெருமழை வெள்ளத்தில் கரைந்து அழியக்கூடியது. இதுவே சிற்றறிவுடைய மனிதர் வாழ்க்கை. ஆனால், தமது வாழ்க்கையால், மண்ணுலகு முழுமையும் பயன்பெறும்படி முகத்தலைப் பெருமான், முப்புராதியர்க்கும் அருளிய பாங்கினோடு, தனக்கும் அருள்செய்தார்’ என்று கருவூரார் அருளியுள்ளார். ‘முப்புரமாவது, மும்மல காரியம்’ என்பது திருமூலரின் திருநோக்கு. அவ்வகையில், அளவுகடவாத மண்ணாசை, பெண்ணாசை மற்றும் பொன்னாசை எனப் பண்பட்டால், உயிர்கள் இறைவனை உணர்ந்துய்யலாம். அதற்கு, ‘ஐம்புலன்களால் ஆன உடம்பே கருவி’ என்கின்றார்.

    திருவருள் துணையால், தமது ஐம்புலநாட்டம் அளவுகடக்கவில்லை. அதனால்,  ‘இறைவனைச் சார்தல்’ என்னும் அகத்தீ தம்முள் மேலெழுந்தது; அத்தீயானது மெல்லப் பெருகி, உடலைச் சுட்டு, உத்தமனுக்குரிய விமானமாக்கியது’ என்கின்றார்.

     ‘புனல்பட உருகி மண்டழல் வெதும்பிப்

                                  பூம்புனல் பொதிந்துயிர் அளிக்கும்

                         வினைபடு நிறைபோல் நிறைந்தவே தகத்தென்

                                  மனம்நெக மகிழ்ந்தபே ரொளியே

                         முனைபடு மதில்மூன் றெரித்த நாயகனே

                                  முகத்தலை யகத்தமர்ந் தடியேன்

                         வினைபடும் உடல்நீ புகுந்துநின் றமையால்

                                  விழுமிய விமானமா யினதே’                                                (9:11:6)

    திருவருள் துணையால் உயிர்கள் இத்தகைய அரும்பேற்றுக்கு ஆட்படுதற்கு, தம்மியல்பினை உணர்தலாகிய மெய்யுணர்வுக்கு நாளும் தலைப்படவேண்டும்’ அதனைக் கருவூரார், ’திருந்துயர் பருவத்து அறிவுறுதல்’ என்று குறித்தருள்கின்றார்.

    திருந்துயர் பருவத்து அறிவுறுதல்

    இறைவன், இன்பமே  வடிவானவன். அனைத்துயிர்க்கும் இன்பம் அருள்கின்ற அவனது அளப்பருந்தன்மையால் அவன், ‘சங்கரன்’ எனப்பெறுகின்றான். அவனால் பிறப்பூட்டப்பெறுகின்ற உயிர்கள், இன்பநுகர்ச்சியே தமது இயல்பாக விளங்கவல்லவை. கருவெனத் தோன்றுகின்ற நொடி முதலாகவே அனைத்துயிரினுள்ளும் இறைவன் நிறைந்திருந்து அவற்றை, தனது நிலையாகிய பேரின்பத்துக்கு ஆற்றுப்படுத்த வல்லவன். பெற்றதாயினும் இனிய பெருமானின் கருணையாகி பெருந்திறத்தைக் கருவூரடிகள், ‘தாயின் நேர் இரங்குபவன்’ (9:8:3), ‘அன்னை ஒக்க அமுதூட்டுவான்’ (9:8:8), ‘தாயினும் நல்ல முக்கணான்’ (9:9:1) என்று போற்றியுள்ளார். பெருமானின் இத்தகைய பெருந்திறத்துக்கு ஆட்படுதற்கு, உயிர்க்கு மெய்யறிவு வாய்த்தல் வேண்டப்படும். அறிவாய், அறிதத்துவமாய், அறிபொருளாய், அதன்வழியான இன்பம் என அனைத்துமாக விளங்கவல்ல பெருமான், தன்னை அறிவித்து, தன்னிலையாகிய இன்பத்தை அனைத்துயிர்க்கும்  அருளவேண்டி,  அணுப்பொழுதும் உயிருக்குள் உயிராக இருந்து அவற்றை இயக்குகிறான். ஆனால், உயிர்களின் அறியாமையால், அவை மலச்சார்பில் கட்டுண்டு, இறைவனை உணர இயலாதவகையில், கீழ்நிலையில் செல்கின்றன. ஆணவம் முதலான மும்மலங்களின் உருவாகி, அவமே புரிந்து திரிந்த முப்புராதிகளின் அறியாமையைப் பெருமான் பொறுத்தருளி, அவர்களைத் தமது அடியவர்களாகவும் ஏற்றருளிய பெருந்திறத்தைக் கருவூரார்,

     ‘நிசிசரர் இருவரோ டொருவர்

    காதலிற் பட்ட கருணையாய்’                                     (9:13:7)

    என்று குறித்தருளியுள்ளார். வினைவயத்தால் தம்மை மறந்த திரிபுராதியரிடத்திலும் காதல் கொண்டு கருணைசெய்த பெருமான், உயிர்க்குயிராக, உயிரில் கலந்திருத்தலை உயிர்கள் கணப்பொழுதும் கருதுவதில்லை. மாறாக, உடன்தோன்றி, அறியாமைக்கு வாயிலாகி, உயிரறிவைக் கீழ்நிலைக்குத் தள்ளுகின்ற ஐம்புலன்களையே, நாளும்நாளும் உறுதியாக நம்பி, வாழ்வைக் கீழ்நிலையில் செலுத்துகின்ற சிற்றின்பத்தில் ஆழ்கின்றன. பெறுவதற்கு அரிய மனிதப் பிறப்பினைப் பெற்றிருந்தும்கூட, அறியாமையால் உயிர்கள், சிற்றின்பச் சார்பே தமது நிலையென விளங்குகின்றன. அதனால், ஐம்புல இன்பத்தில், சிந்தை மயங்குகின்றன. ஐம்புலப் பகைமை அகற்றி, அகவொளி ஏற்றுகின்ற பாங்கில்,

    ‘இவ்வரும் பிறவிப் பௌவநீர் நீந்தும்

                                 ஏழையேற் கென்னுடன் பிறந்த

                         ஐவரும் பகையே’                                                                     (9:8:2)

    எனக் கருவூரார் நன்னெறி உரைக்கின்றார். இவ்வாறு,  உயிர்களுக்கு ஐம்புலச் சேட்டைகளால் விளைகின்ற பெருந்துன்பங்களைத் தாமுற்ற துன்பமாகக் கருதிப் பாடுகின்றார்.

    வினைகளாம், பாசப் பெருங்கடல்

    பொருளல்லாதவற்றைப் பொருளென மயங்கி, நிலையில்லாத சிற்றின்பச்சேற்றில் உழல்கின்ற உயிர்கள்,  திருவருளால் மீட்சி பெறுகின்ற நன்னிலையினைச் சிவஞானபோதம், நயம்மிக்க உவமையால் விளக்கியுரைக்கிறது. ‘அரசன் மகனொருவன், தனது அறியாத பருவத்தில் கானகத்தில் தனது தந்தையைப் பிரிந்தான். கானகத்தில் இருந்த வேடுவர் கூட்டத்தால் அவன் கண்டெடுக்கப்பட்டு, அன்று முதலாக வேடர் குலப் பிள்ளையாகவே வளர்ந்தான். ஆயினும், திருவருளால் உரியகாலம் வாய்க்கப்பெற்று, கானகத்தில் தன் மகனைக் கண்ட அரசன், அவனது உயர்ப்பிறப்பு முதலானவற்றை உணர்த்தி, அவனைத் தன்பால் மீளக்கொண்டு இளவரசன் என்ற உண்மைநிலையாகிய உயர்வளித்தான்’ எனச் சிவஞானபோதம் விளக்குகிறது.

    ‘அரசன், கானகத்தில் பிரிந்த தன் மகனை உடனே கண்டு பிடித்திருக்கலாமே?; அவனது செல்வாகினால் ஆகாத ஒன்றில்லை என்னும்நிலையில், பல காலம் கழிந்து அவன், தன்மகனைக் காணநேரிட்டது ஏன்?’ என்னும் வினா எழுகிறது. ‘அவன் அரசனே என்றாலும், அவன் பிள்ளையைப் பிரிந்து வாடவேண்டும்’ என்பதும், அப்பிள்ளையும், ‘தனது பெற்றோரைச் சில காலங்கள் பிரிந்து, தனது செல்வாக்கினை மறந்து, வேடனென வாழவேண்டும்’  என்பதும் அவர்களது வினைப்பயனாக அமைந்தது எனலாம். இராமாவதாரத்தில், தசரதன் பிள்ளைக்காக ஏங்கியமையும், பெருவரமாகப் பரம்பொருளையே பிள்ளையாகப் பெற்றும்கூட, கண்பார்வைத் திறனற்ற பிள்ளை மீது அறியாமல் அம்பெய்திய தீவினைப்பயனால் அவன், இராமனைப் பிரிந்து, அவன் பொருட்டு உயிர்த் துறக்கவும் நேரிட்டதை இவ்விடத்தில் நினையலாம்.

    பல பிள்ளைகளுக்கும் தாயொருத்தியே என்றாலும், அவற்றின் குணமும் அறிவும் நடத்தையும் வேறுபடக் காண்கிறோம். அந்நிலையில், ஒவ்வொரு குழந்தைக்குமான வளர்ப்பும், அணுகுமுறையும் அவளிடத்தில் வேறுபடுகின்றன. ஆயினும், குழந்தைகளிடத்தில் அவள் கொள்கின்ற தாயன்பு ஒரு நாளும் மாறுபடுவதில்லை. காட்டாக, சமயக்குரவர் நால்வர்க்கும் இறைவனார்,  தாயாக நின்றருளினார். திருஞானசம்பந்தப்பெருமானுக்கு, அறக்கருணையாகப் பாலைத் தந்து ஆட்கொண்ட பெருமான், திருநாவுக்கரசுப் பெருமானுக்கு, மறக்கருணையாகச் சூலையைத் தந்து ஆட்கொண்டார். அதுபோன்றே சுந்தரர்பெருமானுக்கு, இருவகைக் கருணையாலும் ஓலை தந்து அருள்செய்தார். மணிவாசகர் பொருட்டு, தாமே ஞான குருவாகிவந்து ஆட்கொண்டார். ‘தமதுரை, சிவனுரைத்தவையாக, பாடிப் பாடி, தேடித் தேடி உருகுதற்குப் பேறுபெற அவர்களது முந்தை வினைப்பயனே காரணம் எனலாம்.  ‘ஏடுடைய மலரால், அரனைப் பூசித்ததன் பெரும் பயனே, திருஞானசம்பந்தர்தம் மறுபிறப்பில், அம்மையால் ஞானப்பாலமுதூட்டும் வகையில் ஆட்கொள்ளப்பெற்றார். இவ்வாறே பிற குரவர் பெருமக்கள்தம் மண்ணுலகவாழ்வும், உலகம் உய்ய அமைந்த சைவப் பெருவாழ்வாக அமைந்திலங்க அவர்கள்தம் மெய்யறிவே வகைசெய்தது எனலாம். அவர்கள் பாடிப்பரப்பிய பெருநெறியே, அறுபத்துமூவர் முதலானோரின் மண்ணுலக வாழ்வும் அருளுடைய திருவாழ்வாக மலரத் துணைசெய்தது. அம்மேன்மக்கள் இறைவனை உணரத் துணைநின்ற வாழ்க்கைச்சூழலையே  கருவூரடிகள்,  ‘திருந்துயர் பருவம்’ என்று அறிவுறுத்துகின்றார்.

    அறிவுற்றோர் திருவாழ்க்கை

    மனிதராகப் பிறந்த அனைவருக்கும் அத்தகைய வாய்ப்பினைப் பெருமான் அருளவல்லவன்; ஆயினும், அதனை உணர்கின்ற அறிவுநிலையிலான பக்குவத்தை நாம் அனைவரும் பெற விழைவதில்லை. ‘தமது மனைவியார், திருநீலகண்டத்தின் மீது உரைத்த ஆணையின் வண்ணம், அவரைத் தீண்டாத திருநெறியினராக வாழ்ந்திட்ட திருநீலகண்டரைப் போன்றோ, செல்வம் அனைத்தாலும் அடியார்க்கு அன்றாடம் அன்னமிடுகின்ற திருத்தொண்டு புரிந்துயர்ந்த இளையான்குடிச் செல்வரைப் போன்றோ, திருநாவுக்கரசரது தொண்டின் உரைப்பினைக் கேட்டு அவர்க்கே அடிமையாகி, தொண்டு செய்ய விழைந்து, வாசிப்பதும், நேசிப்பதும், சுவாசிப்பதும், ‘திருநாவுக்கரசு’ என்னும் திருநாமமென்று விளங்கி உயர்ந்த அப்பூதி அடிகள் போன்றோ, ‘யான் பெற்ற இன்பம்; பெறுக இவ்வையகம்’ என்று வாழ்ந்த திருமூலரைப் போன்றோ, அனைத்தையும் நாம் துறந்து, துறவுநிலை வாழ்க்கையினை மேற்கொள்ள வேண்டும்’ என்று கருவூரடிகள் வலியுறுத்தவில்லை. மாறாக, ‘பெருங்கடலிற் காயம் கலந்த செய்கை’ யெனப் பயனற்றுச் செயல்புரியாது, கொண்ட மனிதப்பிறப்பினைப் பெரும்பயன் உள்ளதாகப் பண்படுத்திக் கொள்வதற்கு அறிவுறுத்துகின்றார்.

    இறைவனைச் சார்தலாகிய மெய்யுணர்வும், மெய்யுணர்வின் நிலைப்பினால் பெறப்படுவதாகிய மெய்யறிவும் வாய்ப்பதற்கு, ‘தன்னை உணர்ந்து, தன்னுள் தெளிதல்’ என்னும் பக்குவநிலையினைக் கருவூரடிகள் வலியுறுத்துகின்றார். ‘சிவத்தைச் சார்தலே தனது உண்மை நிலை’ என்று தெளிந்து, தன்னுள் சிவத்தின் இருப்பினை உணர இயலாத உயிர்களின் அவலம் சொல்ல ஒண்ணாதது. ‘ஓடி ஓடிச் சேர்க்கின்ற செல்வம், கனவு போல உடனே மறையக் கூடியது; அச்செல்வத்தைக் கருவியாக்கி, சிவத்தைச் சார்ந்து அறம் புரிவதில்லை. அச்செல்வத்தின் பயன் பெண்ணின்பம் துய்த்தலே’ என்றவாறு, பயனற்று வாழ்கின்றீர்கள்’ என உயிர்களின் அறியாமைக்காக இரங்குகின்ற அடிகள், ‘நிலையில்லாத செல்வத்தைச் சேர்ப்பதிலும், பெண்ணின்பத்தைப் பேணுவதிலும் கொள்கின்ற ஆர்வத்தில், இலட்சத்தில் ஒரு பங்கைச் சிவத்தைச் சார்வதற்குக் கொண்டால், அமரருலகப் பேற்றுக்குஉயரலாம்’ என்றுரைக்கின்றார்.

     ‘அக்கனா அனைய செல்வமே சிந்தித்

                                 தைவரோ டென்னொடும் விளைந்த

                         இக்கலாம் முழுதும் ஒழிய’                                       (9 :11: 5) என்றும்,

                         ‘தத்தையங் கனையார் தங்கள்மேல் வைத்த

                                 தயாவைநூ றாயிரங் கூறிட்டு

                          அத்திலங் கொருகூ றுன்கண்வைத் தவருக்

                                 அமருல களிக்கும்நின் பெருமை’                 (9 :11: 5) என்றும்

    அமைந்த நன்னெறிகளை ஏற்காத உள்ளத்தை, ‘கருங்கல்லும் பார்த்து நகைக்கின்ற இழிவுடையது’ என்கின்றார்.

    ‘கன்னகா உள்ளக் கள்வனேன் நின்கண்

                       கசிவிலேன் கண்ணின்நீர் சொரியேன்

                முன்னகா வொழியேன்’                                         (9:11:3)

    என்றமைந்த தொடர்கள், ‘பெருமானை நினைந்துருகாத உள்ளம் கொண்ட உடலும் பயனற்றதே’ என்றுணர்த்துவன.

    காலம் இதுவே; விரையுங்கள்

    ‘பிறப்பானது, இலை தளிர்ப்பது போன்றது; இறப்பு, தளிர் இலை, பழுத்து உதிர்வது போன்றது. இடைப்பட்ட சிறிது காலமே வாழ்க்கை. அச்சிறு நாளில், உடல்கொண்டு உத்தமனைச் சாராது, ஐம்புலச் சார்பின் அறியாமையால், காலத்தை அவமே போக்குகின்றீர்கள்; பின், இறப்பு நேரிடுங்கால் பெருமானை நினைந்து எவ்விதப் பயனும் இல்லை’ என்பதனை,

     ‘தனிப்பெருந் தாமே முழுதுறப் பிறப்பின்

                                          தளிர்இறப் பிலையுதிர் வென்றால்

                                   நினைப்பருந் தம்பாற் சேறலின் றேனும்

                                          நெஞ்சிடிந் துருகுவத தென்னோ’               (9:16:7)

    என்று அறிவுறுத்தியுள்ளார். ‘பிண்டமே, அண்டத்தின் விரிவு’. அதை உணராத சிற்றறிவினால், உடல் வீணே மண்ணுக்கு இரையாவதைத் தவிர்க்க இயலாது. உயிர்களின் இவ்வறியாமை நிலையினை, தலைவியின் நிலையாகப் பதிவுசெய்கின்றார்.

    ‘முழுவதும்நீ யாயினும்இம்

                                          மொய்குழலாள் மெய்ம்முழுதும்

                                   பழுதெனவே நினைந்தோராள்’                      (9:12:6)

     

     

     

    பேரறிவால்  சிவத்தையே சார்கின்ற பெற்றி

    ’வாய்த்தது நந்தமக்கு ஈதோர் மனித்தப் பிறவி மதித்திடுமின்’ என்பது, திருநாவுக்கரசுப் பெருமானின் அறிவுரை. முந்தைய நல்வினைப் பயனே நமக்குப் பெற்றகரிய மனிதப்பிறப்பைப் பெற்றுத்தருகிறது. அப்பிறப்பினைக் கருவியாகக் கொண்டு, நாம் பிறவாமை என்னும் பெருநிலையினைப் பெற்றுய்யவேண்டும். காரணம், ஈ, எறும்பு முதலான குறையறிவுடைய உயிர்களும்கூட இறைவனைப் பணிந்து, பெறற்கரும் பேறுபெற்றுச் சிறந்தமைக்கு முறையே திருஈங்கோய்மலையும், திருஎறும்பியூரும் சான்றாக உள்ளன. ஆனால், ஆறறிவால் பண்பட வேண்டிய நாமோ, உண்டு, உடுத்து, உயிர் வளர்க்கின்ற சிற்றின்பமே பெரிதெனக் கருதி, மனிதப் பிறப்பினைப் பயனின்றிக் கழிக்கின்றோம். உயிர்களை, தொடர்ந்த பல்பிறப்புகள் என்னும்  பிறவிச்சுழலுக்கு ஆட்படுத்துகின்ற வினையின் அவலத்தைக் கருவூரார்,

    ‘கடுவினைப் பாசக் கடல்’                              (9: 14: 5)

    என்று உருவகிக்கின்றார். இவ்வாறு, அறிவு மயங்கிய வாழ்க்கையினைக் கருவூரடிகள், ‘மைக்கடா அனைய கிடக்கின்றோம்’ என்று இடித்துரைக்கின்றார்.

    உணர்வற்று, தன்னை மறந்து, அறியாமைச் சேற்றில் உழல்கின்ற எருமைக்கடாவைப் போன்று வாழ்கின்ற நமது அறியாமையாகிய அவலத்தை அடிகள் தம்பால் ஏறிட்டுக்கொள்வது, அவர்தம் கருணையுள்ளத்தின் வெளிப்பாடு. அந்நிலை அகன்று, மண்ணில் நல்ல வண்ணம் வாழ, பக்திநெறி துணையாக வேண்டும். ‘காய்ச்சப்படுகின்ற பாலிலிருந்து நீர் முதலில் அகன்று, தூயபால் மட்டும் எஞ்சிநின்று  பயன்தரும். அதுபோன்றே,  பல பிறப்புகளிலும் உயிரின் தீவினைப் பயன்கள் துய்த்தொழிக்கப்படுகின்ற நிலையில், எஞ்சிய நல்வினைப் பயனால் உயிர்க்கு,  பெறுதற்கு அரிய மனிதப்பிறப்பும் வாய்க்கும். அப்பிறப்பில் மனம், வாக்கு, காயம் ஆகிய முக்கரணங்களாலும் புரிகின்ற சிவபுண்ணியங்களாகிய நல்வினைகள், திருவருள் வீழ்ச்சியாகிய சத்திநிபாதத்தையும், மலபரிபாகத்தையும் உயிரறிவில் விளங்கச்செய்து,  சரியை முதலான தவங்களுக்கு ஆட்படுத்தும்’ . இத்திருநெறியினைக் கருவூரடிகள்,

    ‘பண்ணிய தழல்காய் பாலளாம் நீர்போற்

                                          பாவமுன் பறைந்துபா லனைய

                                  புண்ணியம் பின்சென் றறிவினுக் கறியப்

                                          புகுந்ததோர் யோகினிற் பொலிந்து’                (9:13:9)

    என்று அறிவுறுத்துகிறார்.  அன்றாட வாழ்வின் அனைத்துச் செயல்களும் சிவபுண்ணியங்களாக விளைவதற்கு, உண்பதும், உடுப்பதும், கேட்பதும், பார்ப்பதும், நுகர்வதும், திருவருளாணையால் நிகழ்வனவே என்றுணர்கின்ற மெய்யுணர்வில் நிலைக்கவேண்டும். செய்கின்ற செயலிலும், அதன் பயனிலும், பற்றொழிக்க வேண்டும். காரணம், செயலின்பால் கொள்கின்ற ஈர்ப்பு, தன்முனைப்பையும், ‘யான்’,‘எனது’ என்னும் ஆணவப்பற்றையும், ‘யான் மட்டுமே வெற்றிகொண்டு அனைத்தையும் ஆளவேண்டும்’ என்றவழி, தீராத வினைத்தொடர்பையும், அதைத் துய்த்துத் தீர்க்கின்ற துன்பப்பிறவிகளையும் அடுக்கடுக்காகத் தரும். எனவே, பற்றொழித்த உள்ளத்தால் பரமனுக்குப் பணிசெய்க’ என்பவராக,

    ’உண்ட ஊண் உனக்காம் வகை’                        (9:13:6)

    எனப் பாடுகின்றார். ‘அன்றாடம் உண்ணுகின்ற உணவானது, வீணே உடலை வளர்ப்பதற்கு என்றில்லாமல், சிவப்பணியாகிய அறப்பணிக்காக அமைதற்குத் திருவருள் கூட்டவேண்டும்’ என்று பணிகின்றார்.

    பணி செய்வார்க்கு இரங்கும் பசுபதி

    அரும்பொருளான இறைவனைப் பெறுவதற்கு இயைந்த நன்னெறியாகிய சரியை முதலானவற்றுக்குத் தலைப்பட, அடியார் இணக்கமே கருவியாகும்.  அவ்வடியார்கள், தொண்டில் நிலைப்புடையவர்கள். அவர்களே உண்மையடியார்கள். அவர்கள், வாழினும், தாழினும், தொண்டிலிருந்து ஒருபொழுதும் நிலைப்பெயராதவர்கள். அவர்கள், ‘அவமே புரியார்’ என்பது கருவூரடிகள்தம் திருவாக்கு. அவர்களைச் ‘செம்மனக் கிழவோர்’ என்று கருவூரடிகள் போற்றுகின்றார். ‘அவர்களுடன் கூடி பணிசெய்வதே பெருமானைப் பெற்றுத்தரும்’ என்று சாற்றுகின்றார். ‘பணி செய்வார்க்கு இரங்கும் பசுபதி’  என்பது, கருவூரடிகளின் உறுதித்திருவாக்கு. பெருமான்,  தம்மையும் செம்மனக் கிழவோராகிய அடியார்களுடன் கூட்டுவித்தருளிய அருள்சிறப்பினைக் கருவூரடிகள்,

     ‘கண்பனி  அரும்பக் கைகள் மொட்டித்தென்

                                 களைகணே ஓலமென் றோலிட்

                        டென்பெலா முருகும் அன்பர்தங் கூட்டத்

                                 தென்னையும் புணர்ப்பவன்’                                               (9:8:5)

    எனப் போற்றியமைகின்றார்.

     

    முடிவுரை

    அளவு கடவாத ஐம்புல நாட்டமும், அடியவர்களை என்றும் இணைபிரியாதத் தொண்டுள்ளமே,  நம்மை அன்புநெறிக்கு ஆட்படுத்தும். அன்புநெறி, அனைவரையும் உறவாகக் கருதுகின்ற இன்பத்தைத் தந்தருளும். அனைவரும் உறவாக விளங்குகின்ற சுற்றுப்புறமே, சிவனிருப்பாக நம்மால் உணரப்படும். அந்நிலையில், உயிருள் பொருளும், உயிரில் பொருளும் சிவனிருப்பாக விளங்குதலை உணரலாம். அவ்வாறு பண்பட்ட கருவூரடிகளது கருணைத் திருநோக்கமே, போகத்துயில் கொண்ட புன்மக்களாகிய நமது அறியாமைக்கு மருந்தாகிய திருப்பதிகங்களைத் தந்துள்ளது.

     ‘ஒருங்கிரு கண்ணின் எண்ணில்புன் மாக்கள்

                                            உறங்கிருள் நடுநல்யா மத்தோர்

                                   கருங்கண்நின் றிமைக்குஞ் செழுஞ்சுடர் விளக்கங்

                                            கனந்தெனக் கலந்துணர் கருவூர்’                    (9: 17: 10)

    என்று பாடி கருவூரார், தமது பதிகச் சொல்மாலைகளின் திருநோக்கத்தைத் தலைக்கட்டியுள்ளார். அவர்தம் திருப்பதிக  நெறிவழியே,   அனைத்துயிரும் பிறவாமைக்குத் தலைப்படுவதே, அடிகளின் திருவுள்ளம்.

     

    ஆய்வுத் துணைநூல்கள்:

    1. ஒன்பதாம் திருமுறை, வசந்தகுமார்.இரா.,டாக்டர்., (ப.ஆ).,

    பன்னிரு திருமுறை ஆய்வுமைய வெளியீடு,

    கற்பகம் உயர்கல்வி கலைக்கழகம், கோயம்புத்தூர் – 21.

    1. சிவஞானபோதம், திருநெறி வரிசை, www.thevaaram.org

    கட்டுரையாளர்

    முனைவர் இரா. மதன் குமார்., இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை,கற்பகம் உயர்கல்வி கலைக்கழகம், கோயம்புத்தூர் – 21.

     

     

     

     

     

     

     

     

     

     

     

    Share