கருவூரார் திருவுள்ளம்

முனைவர் இரா. மதன் குமார்

முன்னுரை

ஒன்பதாம் திருமுறை ஆசிரியர்களுள் ஒருவராகிய கருவூரார் அருளிச்செய்த திருப்பதிகங்கள், பத்து. ‘கருவூர் சித்தர்’ என்ற பெயரால், மக்களால் நன்கறியப்படுகின்ற அவர்தம் திருப்பதிகங்கள், மெய்யியல் அனுபவப் பதிவுகளாகவும், இறைவனால் அவர் ஆட்கொள்ளப்பெற்ற அருளியல் பதிவுகளாகவும் விளங்குகின்றன. சீரிய உவமைநயங்களால் பாடுபொருளை எடுத்துரைக்கின்ற பாங்கினையும், சைவநெறிகளைத் தத்துவநோக்கில் எடுத்தாளுகின்ற போக்கினையும் அவர்தம் திருப்பாடல்களில் காணலாம். தமது திருப்பதிகங்கள் வழியே,  அவர் பக்திநெறி காட்டுகின்ற திறமானது இக்கட்டுரையில் ஆய்ந்துரைக்கப்பெறுகிறது.

கருவூரார் திருப்பதிகப் பொருள்நிலை

தில்லைத் திருத்தலத்தில், இறைவன் கோயில் கொண்டுள்ள நிலையினை, அதன் இயற்கைச் சூழலுடன் கோயில் திருப்பதிகமாகப் பாடியுள்ளார். இறைவனின் திருஅழகினை உருக்காட்சியாகக் காட்டுவதாக, திருக்களந்தை ஆதிச்சேச்சரத்துத் திருப்பதிகம் விளங்குகிறது.  இறைவனார், தமக்கு அருளியவகையினை திருமுகத்தலைத் திருப்பதிகத்திலும், கங்கைகொண்ட சோளேச்சரத்துத் திருப்பதிகத்திலும் குறித்தருளியுள்ளார். திருப்பூவணத் திருப்பதிகம், பல்பொருள் பதிகமாகவும், திருச்சாட்டியக்குடித் திருப்பதிகம், இறைவரது பெருமையையும், அத்தல அந்தணர்க்குப் பெருமான் அருளுதலையும் விளக்குகின்றன. திருஇடைமருதூர் திருப்பதிகத்தில், தமக்கு ஞானக்கண் விழிப்பருளி, உயிர்களை வாழ்விக்கப் பாமாலை பாடுதற்கு வரமருளிய சிறப்பினைக் குறித்துள்ளார். அத்துடன், ‘அகத்துறை வழியே, அருள்துறையைப் பாடுதல்’ என்னும் நோக்கில்,  திருக்கீழ்க்கோட்டூர் மணியம்பலம்,  திரைலோக்கிய சுந்தரம் மற்றும் தஞ்சை இராசராசேச்சரம் ஆகிய திருப்பதிகங்களையும் அருளியுள்ளார்.  இவற்றுள் மண்ணாசை, பெண்ணாசை மற்றும் பொன்னாசை ஆகியன, அரனை அடைதற்குரிய வகையில் அமையக் கருவூரடிகள் அறிவுறுத்துகின்றார்.

கருவூரார் திருவுள்ளம்

முக்கண் பரமனார், பிச்சை உகக்கின்ற பெருமானாக வந்து, அடியார்தம் வினைகளைத் தமது கையோட்டில் ஏற்றருள்கின்றார் என்பது தத்துவநோக்கு. ‘வானவர் அனைவரும், பெருமானின் ஆணையின்வண்ணம் சேவை செய்யக் காத்திருக்கின்ற வேளையில், பெருமானோ, மண்ணுலகில் உயிர்கள் உய்யும்பொருட்டு, அவற்றின் தீவினைகளைப் பிச்சையேற்று அவற்றை உய்விக்க இரங்கியருள்கின்றான்’ என்கின்றார் கருவூரடிகள்.

‘இந்திர லோக முழுவதும் பணிகேட்டு

                              இணையடி தொழுதெழத் தாம்போய்

                      ஐந்தலை நாக மேகலை யரையா

                              அகந்தொறும் பலிதிரி யடிகள்’                            (9ஆம் திருமுறை:17: 2)

பெருமானது மெய்யடியாராகிய கருவூரரும் உயிர்கள்தம் வினைகளைப் பிச்சையாக ஏற்று,  அவை பிறவிப்பிணி நீங்கி உய்ய, தமது அருஞ்சொல் மாலைகளைத் தந்தருளியுள்ளார். ‘அங்கை ஓடு ஏந்தி பலிதிரி கருவூர்’ என்பது, திருப்பதிகத்தின்வழி, கருவூரடிகள் தம்மைச் சுட்டியுள்ள அகச்சான்றாகும். பக்திநெறியினை வாழ்வியலாக அல்லாமல், வெற்றுச் சடங்குகளாகவும், வீண் பயிற்சிகளாகவும் மேற்கொள்கின்ற பொய்யர்தம் அறிவு, சிற்றறிவாகவே விளங்கும்.       அருள்கடலாக விளங்கவல்ல இறைவனைச் சிற்றறிவுடைய உயிர்களால் நிறைவாக ஆய்ந்தும், அறிந்தும், இன்புற இயல்வதில்லை. அதனால்,  ‘நாடகத்தால் உன் அடியார் போல நடிக்கின்றேன்’ என்று கலங்கி பல்லுயிர்களும், பிறவியென்னும் பெருஞ்சுழியில் பட்டு மாய்கின்றன.  உயிர்கள், அறியாமை என்னும் பெருஞ்சுழியிலிருந்து விடுபட்டு, பிறவி என்னும் பெருங்கடல் நீந்திக் கரையேறுதற்குக் கருவூரர்தம் திருப்பதிகங்கள் சிறந்த வழித்துணையாகின்றன.

 ‘அங்கையோடேந்திப் பலிதிரி கருவூர்

                                      அறைந்த சொன்மாலையால், ஆழிச்

                              செங்கையோ டுலகில் அரசுவீற்றிருந்து

                                     திளைப்பதுஞ் சிவனருட் கடலே’                     (9ஆம் திருமுறை:8: 2)

என்று கருவூரடிகள், மண்ணில் நல்ல வண்ணம் வாழ்ந்து, பேரின்பமாகிய அருள்கடலில் திளைக்க வழிகாட்டுகின்றார்.

உடல் என்னும் உத்தமனார் விமானம்

‘நந்தவனத்தில் ஓர் ஆண்டி – அவன் நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டிக் கொண்டு வந்தானொரு தோண்டி – மெத்தக் கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத் தாண்டி’ என்றமைந்த கடுவெளிச் சித்தர்தம் பாடல், உடலிடத்தே இடம்கொண்ட உத்தமனை மறந்து, நிலையில்லாச் சிற்றின்பச் சேற்றில் உழல்கின்ற உயிர்களின் அவலத்தைச் சுட்டியுரைப்பதாகும். அத்தகைய அவலம் தமக்குத் திருவருள் துணையால் நேரிடாத வகையினைக் கருவூரடிகள் விளக்கியுரைக்கின்றார்.

‘மனித வாழ்க்கையோ, சிற்றின்பச் சேறு; அதற்கென அமைந்த உடம்போ, பச்சை மண்ணாக, வாழ்நாள் என்னும் பெருமழை வெள்ளத்தில் கரைந்து அழியக்கூடியது. இதுவே சிற்றறிவுடைய மனிதர் வாழ்க்கை. ஆனால், தமது வாழ்க்கையால், மண்ணுலகு முழுமையும் பயன்பெறும்படி முகத்தலைப் பெருமான், முப்புராதியர்க்கும் அருளிய பாங்கினோடு, தனக்கும் அருள்செய்தார்’ என்று கருவூரார் அருளியுள்ளார். ‘முப்புரமாவது, மும்மல காரியம்’ என்பது திருமூலரின் திருநோக்கு. அவ்வகையில், அளவுகடவாத மண்ணாசை, பெண்ணாசை மற்றும் பொன்னாசை எனப் பண்பட்டால், உயிர்கள் இறைவனை உணர்ந்துய்யலாம். அதற்கு, ‘ஐம்புலன்களால் ஆன உடம்பே கருவி’ என்கின்றார்.

திருவருள் துணையால், தமது ஐம்புலநாட்டம் அளவுகடக்கவில்லை. அதனால்,  ‘இறைவனைச் சார்தல்’ என்னும் அகத்தீ தம்முள் மேலெழுந்தது; அத்தீயானது மெல்லப் பெருகி, உடலைச் சுட்டு, உத்தமனுக்குரிய விமானமாக்கியது’ என்கின்றார்.

 ‘புனல்பட உருகி மண்டழல் வெதும்பிப்

                              பூம்புனல் பொதிந்துயிர் அளிக்கும்

                     வினைபடு நிறைபோல் நிறைந்தவே தகத்தென்

                              மனம்நெக மகிழ்ந்தபே ரொளியே

                     முனைபடு மதில்மூன் றெரித்த நாயகனே

                              முகத்தலை யகத்தமர்ந் தடியேன்

                     வினைபடும் உடல்நீ புகுந்துநின் றமையால்

                              விழுமிய விமானமா யினதே’                                                (9:11:6)

திருவருள் துணையால் உயிர்கள் இத்தகைய அரும்பேற்றுக்கு ஆட்படுதற்கு, தம்மியல்பினை உணர்தலாகிய மெய்யுணர்வுக்கு நாளும் தலைப்படவேண்டும்’ அதனைக் கருவூரார், ’திருந்துயர் பருவத்து அறிவுறுதல்’ என்று குறித்தருள்கின்றார்.

திருந்துயர் பருவத்து அறிவுறுதல்

இறைவன், இன்பமே  வடிவானவன். அனைத்துயிர்க்கும் இன்பம் அருள்கின்ற அவனது அளப்பருந்தன்மையால் அவன், ‘சங்கரன்’ எனப்பெறுகின்றான். அவனால் பிறப்பூட்டப்பெறுகின்ற உயிர்கள், இன்பநுகர்ச்சியே தமது இயல்பாக விளங்கவல்லவை. கருவெனத் தோன்றுகின்ற நொடி முதலாகவே அனைத்துயிரினுள்ளும் இறைவன் நிறைந்திருந்து அவற்றை, தனது நிலையாகிய பேரின்பத்துக்கு ஆற்றுப்படுத்த வல்லவன். பெற்றதாயினும் இனிய பெருமானின் கருணையாகி பெருந்திறத்தைக் கருவூரடிகள், ‘தாயின் நேர் இரங்குபவன்’ (9:8:3), ‘அன்னை ஒக்க அமுதூட்டுவான்’ (9:8:8), ‘தாயினும் நல்ல முக்கணான்’ (9:9:1) என்று போற்றியுள்ளார். பெருமானின் இத்தகைய பெருந்திறத்துக்கு ஆட்படுதற்கு, உயிர்க்கு மெய்யறிவு வாய்த்தல் வேண்டப்படும். அறிவாய், அறிதத்துவமாய், அறிபொருளாய், அதன்வழியான இன்பம் என அனைத்துமாக விளங்கவல்ல பெருமான், தன்னை அறிவித்து, தன்னிலையாகிய இன்பத்தை அனைத்துயிர்க்கும்  அருளவேண்டி,  அணுப்பொழுதும் உயிருக்குள் உயிராக இருந்து அவற்றை இயக்குகிறான். ஆனால், உயிர்களின் அறியாமையால், அவை மலச்சார்பில் கட்டுண்டு, இறைவனை உணர இயலாதவகையில், கீழ்நிலையில் செல்கின்றன. ஆணவம் முதலான மும்மலங்களின் உருவாகி, அவமே புரிந்து திரிந்த முப்புராதிகளின் அறியாமையைப் பெருமான் பொறுத்தருளி, அவர்களைத் தமது அடியவர்களாகவும் ஏற்றருளிய பெருந்திறத்தைக் கருவூரார்,

 ‘நிசிசரர் இருவரோ டொருவர்

காதலிற் பட்ட கருணையாய்’                                     (9:13:7)

என்று குறித்தருளியுள்ளார். வினைவயத்தால் தம்மை மறந்த திரிபுராதியரிடத்திலும் காதல் கொண்டு கருணைசெய்த பெருமான், உயிர்க்குயிராக, உயிரில் கலந்திருத்தலை உயிர்கள் கணப்பொழுதும் கருதுவதில்லை. மாறாக, உடன்தோன்றி, அறியாமைக்கு வாயிலாகி, உயிரறிவைக் கீழ்நிலைக்குத் தள்ளுகின்ற ஐம்புலன்களையே, நாளும்நாளும் உறுதியாக நம்பி, வாழ்வைக் கீழ்நிலையில் செலுத்துகின்ற சிற்றின்பத்தில் ஆழ்கின்றன. பெறுவதற்கு அரிய மனிதப் பிறப்பினைப் பெற்றிருந்தும்கூட, அறியாமையால் உயிர்கள், சிற்றின்பச் சார்பே தமது நிலையென விளங்குகின்றன. அதனால், ஐம்புல இன்பத்தில், சிந்தை மயங்குகின்றன. ஐம்புலப் பகைமை அகற்றி, அகவொளி ஏற்றுகின்ற பாங்கில்,

‘இவ்வரும் பிறவிப் பௌவநீர் நீந்தும்

                             ஏழையேற் கென்னுடன் பிறந்த

                     ஐவரும் பகையே’                                                                     (9:8:2)

எனக் கருவூரார் நன்னெறி உரைக்கின்றார். இவ்வாறு,  உயிர்களுக்கு ஐம்புலச் சேட்டைகளால் விளைகின்ற பெருந்துன்பங்களைத் தாமுற்ற துன்பமாகக் கருதிப் பாடுகின்றார்.

வினைகளாம், பாசப் பெருங்கடல்

பொருளல்லாதவற்றைப் பொருளென மயங்கி, நிலையில்லாத சிற்றின்பச்சேற்றில் உழல்கின்ற உயிர்கள்,  திருவருளால் மீட்சி பெறுகின்ற நன்னிலையினைச் சிவஞானபோதம், நயம்மிக்க உவமையால் விளக்கியுரைக்கிறது. ‘அரசன் மகனொருவன், தனது அறியாத பருவத்தில் கானகத்தில் தனது தந்தையைப் பிரிந்தான். கானகத்தில் இருந்த வேடுவர் கூட்டத்தால் அவன் கண்டெடுக்கப்பட்டு, அன்று முதலாக வேடர் குலப் பிள்ளையாகவே வளர்ந்தான். ஆயினும், திருவருளால் உரியகாலம் வாய்க்கப்பெற்று, கானகத்தில் தன் மகனைக் கண்ட அரசன், அவனது உயர்ப்பிறப்பு முதலானவற்றை உணர்த்தி, அவனைத் தன்பால் மீளக்கொண்டு இளவரசன் என்ற உண்மைநிலையாகிய உயர்வளித்தான்’ எனச் சிவஞானபோதம் விளக்குகிறது.

‘அரசன், கானகத்தில் பிரிந்த தன் மகனை உடனே கண்டு பிடித்திருக்கலாமே?; அவனது செல்வாகினால் ஆகாத ஒன்றில்லை என்னும்நிலையில், பல காலம் கழிந்து அவன், தன்மகனைக் காணநேரிட்டது ஏன்?’ என்னும் வினா எழுகிறது. ‘அவன் அரசனே என்றாலும், அவன் பிள்ளையைப் பிரிந்து வாடவேண்டும்’ என்பதும், அப்பிள்ளையும், ‘தனது பெற்றோரைச் சில காலங்கள் பிரிந்து, தனது செல்வாக்கினை மறந்து, வேடனென வாழவேண்டும்’  என்பதும் அவர்களது வினைப்பயனாக அமைந்தது எனலாம். இராமாவதாரத்தில், தசரதன் பிள்ளைக்காக ஏங்கியமையும், பெருவரமாகப் பரம்பொருளையே பிள்ளையாகப் பெற்றும்கூட, கண்பார்வைத் திறனற்ற பிள்ளை மீது அறியாமல் அம்பெய்திய தீவினைப்பயனால் அவன், இராமனைப் பிரிந்து, அவன் பொருட்டு உயிர்த் துறக்கவும் நேரிட்டதை இவ்விடத்தில் நினையலாம்.

பல பிள்ளைகளுக்கும் தாயொருத்தியே என்றாலும், அவற்றின் குணமும் அறிவும் நடத்தையும் வேறுபடக் காண்கிறோம். அந்நிலையில், ஒவ்வொரு குழந்தைக்குமான வளர்ப்பும், அணுகுமுறையும் அவளிடத்தில் வேறுபடுகின்றன. ஆயினும், குழந்தைகளிடத்தில் அவள் கொள்கின்ற தாயன்பு ஒரு நாளும் மாறுபடுவதில்லை. காட்டாக, சமயக்குரவர் நால்வர்க்கும் இறைவனார்,  தாயாக நின்றருளினார். திருஞானசம்பந்தப்பெருமானுக்கு, அறக்கருணையாகப் பாலைத் தந்து ஆட்கொண்ட பெருமான், திருநாவுக்கரசுப் பெருமானுக்கு, மறக்கருணையாகச் சூலையைத் தந்து ஆட்கொண்டார். அதுபோன்றே சுந்தரர்பெருமானுக்கு, இருவகைக் கருணையாலும் ஓலை தந்து அருள்செய்தார். மணிவாசகர் பொருட்டு, தாமே ஞான குருவாகிவந்து ஆட்கொண்டார். ‘தமதுரை, சிவனுரைத்தவையாக, பாடிப் பாடி, தேடித் தேடி உருகுதற்குப் பேறுபெற அவர்களது முந்தை வினைப்பயனே காரணம் எனலாம்.  ‘ஏடுடைய மலரால், அரனைப் பூசித்ததன் பெரும் பயனே, திருஞானசம்பந்தர்தம் மறுபிறப்பில், அம்மையால் ஞானப்பாலமுதூட்டும் வகையில் ஆட்கொள்ளப்பெற்றார். இவ்வாறே பிற குரவர் பெருமக்கள்தம் மண்ணுலகவாழ்வும், உலகம் உய்ய அமைந்த சைவப் பெருவாழ்வாக அமைந்திலங்க அவர்கள்தம் மெய்யறிவே வகைசெய்தது எனலாம். அவர்கள் பாடிப்பரப்பிய பெருநெறியே, அறுபத்துமூவர் முதலானோரின் மண்ணுலக வாழ்வும் அருளுடைய திருவாழ்வாக மலரத் துணைசெய்தது. அம்மேன்மக்கள் இறைவனை உணரத் துணைநின்ற வாழ்க்கைச்சூழலையே  கருவூரடிகள்,  ‘திருந்துயர் பருவம்’ என்று அறிவுறுத்துகின்றார்.

அறிவுற்றோர் திருவாழ்க்கை

மனிதராகப் பிறந்த அனைவருக்கும் அத்தகைய வாய்ப்பினைப் பெருமான் அருளவல்லவன்; ஆயினும், அதனை உணர்கின்ற அறிவுநிலையிலான பக்குவத்தை நாம் அனைவரும் பெற விழைவதில்லை. ‘தமது மனைவியார், திருநீலகண்டத்தின் மீது உரைத்த ஆணையின் வண்ணம், அவரைத் தீண்டாத திருநெறியினராக வாழ்ந்திட்ட திருநீலகண்டரைப் போன்றோ, செல்வம் அனைத்தாலும் அடியார்க்கு அன்றாடம் அன்னமிடுகின்ற திருத்தொண்டு புரிந்துயர்ந்த இளையான்குடிச் செல்வரைப் போன்றோ, திருநாவுக்கரசரது தொண்டின் உரைப்பினைக் கேட்டு அவர்க்கே அடிமையாகி, தொண்டு செய்ய விழைந்து, வாசிப்பதும், நேசிப்பதும், சுவாசிப்பதும், ‘திருநாவுக்கரசு’ என்னும் திருநாமமென்று விளங்கி உயர்ந்த அப்பூதி அடிகள் போன்றோ, ‘யான் பெற்ற இன்பம்; பெறுக இவ்வையகம்’ என்று வாழ்ந்த திருமூலரைப் போன்றோ, அனைத்தையும் நாம் துறந்து, துறவுநிலை வாழ்க்கையினை மேற்கொள்ள வேண்டும்’ என்று கருவூரடிகள் வலியுறுத்தவில்லை. மாறாக, ‘பெருங்கடலிற் காயம் கலந்த செய்கை’ யெனப் பயனற்றுச் செயல்புரியாது, கொண்ட மனிதப்பிறப்பினைப் பெரும்பயன் உள்ளதாகப் பண்படுத்திக் கொள்வதற்கு அறிவுறுத்துகின்றார்.

இறைவனைச் சார்தலாகிய மெய்யுணர்வும், மெய்யுணர்வின் நிலைப்பினால் பெறப்படுவதாகிய மெய்யறிவும் வாய்ப்பதற்கு, ‘தன்னை உணர்ந்து, தன்னுள் தெளிதல்’ என்னும் பக்குவநிலையினைக் கருவூரடிகள் வலியுறுத்துகின்றார். ‘சிவத்தைச் சார்தலே தனது உண்மை நிலை’ என்று தெளிந்து, தன்னுள் சிவத்தின் இருப்பினை உணர இயலாத உயிர்களின் அவலம் சொல்ல ஒண்ணாதது. ‘ஓடி ஓடிச் சேர்க்கின்ற செல்வம், கனவு போல உடனே மறையக் கூடியது; அச்செல்வத்தைக் கருவியாக்கி, சிவத்தைச் சார்ந்து அறம் புரிவதில்லை. அச்செல்வத்தின் பயன் பெண்ணின்பம் துய்த்தலே’ என்றவாறு, பயனற்று வாழ்கின்றீர்கள்’ என உயிர்களின் அறியாமைக்காக இரங்குகின்ற அடிகள், ‘நிலையில்லாத செல்வத்தைச் சேர்ப்பதிலும், பெண்ணின்பத்தைப் பேணுவதிலும் கொள்கின்ற ஆர்வத்தில், இலட்சத்தில் ஒரு பங்கைச் சிவத்தைச் சார்வதற்குக் கொண்டால், அமரருலகப் பேற்றுக்குஉயரலாம்’ என்றுரைக்கின்றார்.

 ‘அக்கனா அனைய செல்வமே சிந்தித்

                             தைவரோ டென்னொடும் விளைந்த

                     இக்கலாம் முழுதும் ஒழிய’                                       (9 :11: 5) என்றும்,

                     ‘தத்தையங் கனையார் தங்கள்மேல் வைத்த

                             தயாவைநூ றாயிரங் கூறிட்டு

                      அத்திலங் கொருகூ றுன்கண்வைத் தவருக்

                             அமருல களிக்கும்நின் பெருமை’                 (9 :11: 5) என்றும்

அமைந்த நன்னெறிகளை ஏற்காத உள்ளத்தை, ‘கருங்கல்லும் பார்த்து நகைக்கின்ற இழிவுடையது’ என்கின்றார்.

‘கன்னகா உள்ளக் கள்வனேன் நின்கண்

                   கசிவிலேன் கண்ணின்நீர் சொரியேன்

            முன்னகா வொழியேன்’                                         (9:11:3)

என்றமைந்த தொடர்கள், ‘பெருமானை நினைந்துருகாத உள்ளம் கொண்ட உடலும் பயனற்றதே’ என்றுணர்த்துவன.

காலம் இதுவே; விரையுங்கள்

‘பிறப்பானது, இலை தளிர்ப்பது போன்றது; இறப்பு, தளிர் இலை, பழுத்து உதிர்வது போன்றது. இடைப்பட்ட சிறிது காலமே வாழ்க்கை. அச்சிறு நாளில், உடல்கொண்டு உத்தமனைச் சாராது, ஐம்புலச் சார்பின் அறியாமையால், காலத்தை அவமே போக்குகின்றீர்கள்; பின், இறப்பு நேரிடுங்கால் பெருமானை நினைந்து எவ்விதப் பயனும் இல்லை’ என்பதனை,

 ‘தனிப்பெருந் தாமே முழுதுறப் பிறப்பின்

                                      தளிர்இறப் பிலையுதிர் வென்றால்

                               நினைப்பருந் தம்பாற் சேறலின் றேனும்

                                      நெஞ்சிடிந் துருகுவத தென்னோ’               (9:16:7)

என்று அறிவுறுத்தியுள்ளார். ‘பிண்டமே, அண்டத்தின் விரிவு’. அதை உணராத சிற்றறிவினால், உடல் வீணே மண்ணுக்கு இரையாவதைத் தவிர்க்க இயலாது. உயிர்களின் இவ்வறியாமை நிலையினை, தலைவியின் நிலையாகப் பதிவுசெய்கின்றார்.

‘முழுவதும்நீ யாயினும்இம்

                                      மொய்குழலாள் மெய்ம்முழுதும்

                               பழுதெனவே நினைந்தோராள்’                      (9:12:6)

 

 

 

பேரறிவால்  சிவத்தையே சார்கின்ற பெற்றி

’வாய்த்தது நந்தமக்கு ஈதோர் மனித்தப் பிறவி மதித்திடுமின்’ என்பது, திருநாவுக்கரசுப் பெருமானின் அறிவுரை. முந்தைய நல்வினைப் பயனே நமக்குப் பெற்றகரிய மனிதப்பிறப்பைப் பெற்றுத்தருகிறது. அப்பிறப்பினைக் கருவியாகக் கொண்டு, நாம் பிறவாமை என்னும் பெருநிலையினைப் பெற்றுய்யவேண்டும். காரணம், ஈ, எறும்பு முதலான குறையறிவுடைய உயிர்களும்கூட இறைவனைப் பணிந்து, பெறற்கரும் பேறுபெற்றுச் சிறந்தமைக்கு முறையே திருஈங்கோய்மலையும், திருஎறும்பியூரும் சான்றாக உள்ளன. ஆனால், ஆறறிவால் பண்பட வேண்டிய நாமோ, உண்டு, உடுத்து, உயிர் வளர்க்கின்ற சிற்றின்பமே பெரிதெனக் கருதி, மனிதப் பிறப்பினைப் பயனின்றிக் கழிக்கின்றோம். உயிர்களை, தொடர்ந்த பல்பிறப்புகள் என்னும்  பிறவிச்சுழலுக்கு ஆட்படுத்துகின்ற வினையின் அவலத்தைக் கருவூரார்,

‘கடுவினைப் பாசக் கடல்’                              (9: 14: 5)

என்று உருவகிக்கின்றார். இவ்வாறு, அறிவு மயங்கிய வாழ்க்கையினைக் கருவூரடிகள், ‘மைக்கடா அனைய கிடக்கின்றோம்’ என்று இடித்துரைக்கின்றார்.

உணர்வற்று, தன்னை மறந்து, அறியாமைச் சேற்றில் உழல்கின்ற எருமைக்கடாவைப் போன்று வாழ்கின்ற நமது அறியாமையாகிய அவலத்தை அடிகள் தம்பால் ஏறிட்டுக்கொள்வது, அவர்தம் கருணையுள்ளத்தின் வெளிப்பாடு. அந்நிலை அகன்று, மண்ணில் நல்ல வண்ணம் வாழ, பக்திநெறி துணையாக வேண்டும். ‘காய்ச்சப்படுகின்ற பாலிலிருந்து நீர் முதலில் அகன்று, தூயபால் மட்டும் எஞ்சிநின்று  பயன்தரும். அதுபோன்றே,  பல பிறப்புகளிலும் உயிரின் தீவினைப் பயன்கள் துய்த்தொழிக்கப்படுகின்ற நிலையில், எஞ்சிய நல்வினைப் பயனால் உயிர்க்கு,  பெறுதற்கு அரிய மனிதப்பிறப்பும் வாய்க்கும். அப்பிறப்பில் மனம், வாக்கு, காயம் ஆகிய முக்கரணங்களாலும் புரிகின்ற சிவபுண்ணியங்களாகிய நல்வினைகள், திருவருள் வீழ்ச்சியாகிய சத்திநிபாதத்தையும், மலபரிபாகத்தையும் உயிரறிவில் விளங்கச்செய்து,  சரியை முதலான தவங்களுக்கு ஆட்படுத்தும்’ . இத்திருநெறியினைக் கருவூரடிகள்,

‘பண்ணிய தழல்காய் பாலளாம் நீர்போற்

                                      பாவமுன் பறைந்துபா லனைய

                              புண்ணியம் பின்சென் றறிவினுக் கறியப்

                                      புகுந்ததோர் யோகினிற் பொலிந்து’                (9:13:9)

என்று அறிவுறுத்துகிறார்.  அன்றாட வாழ்வின் அனைத்துச் செயல்களும் சிவபுண்ணியங்களாக விளைவதற்கு, உண்பதும், உடுப்பதும், கேட்பதும், பார்ப்பதும், நுகர்வதும், திருவருளாணையால் நிகழ்வனவே என்றுணர்கின்ற மெய்யுணர்வில் நிலைக்கவேண்டும். செய்கின்ற செயலிலும், அதன் பயனிலும், பற்றொழிக்க வேண்டும். காரணம், செயலின்பால் கொள்கின்ற ஈர்ப்பு, தன்முனைப்பையும், ‘யான்’,‘எனது’ என்னும் ஆணவப்பற்றையும், ‘யான் மட்டுமே வெற்றிகொண்டு அனைத்தையும் ஆளவேண்டும்’ என்றவழி, தீராத வினைத்தொடர்பையும், அதைத் துய்த்துத் தீர்க்கின்ற துன்பப்பிறவிகளையும் அடுக்கடுக்காகத் தரும். எனவே, பற்றொழித்த உள்ளத்தால் பரமனுக்குப் பணிசெய்க’ என்பவராக,

’உண்ட ஊண் உனக்காம் வகை’                        (9:13:6)

எனப் பாடுகின்றார். ‘அன்றாடம் உண்ணுகின்ற உணவானது, வீணே உடலை வளர்ப்பதற்கு என்றில்லாமல், சிவப்பணியாகிய அறப்பணிக்காக அமைதற்குத் திருவருள் கூட்டவேண்டும்’ என்று பணிகின்றார்.

பணி செய்வார்க்கு இரங்கும் பசுபதி

அரும்பொருளான இறைவனைப் பெறுவதற்கு இயைந்த நன்னெறியாகிய சரியை முதலானவற்றுக்குத் தலைப்பட, அடியார் இணக்கமே கருவியாகும்.  அவ்வடியார்கள், தொண்டில் நிலைப்புடையவர்கள். அவர்களே உண்மையடியார்கள். அவர்கள், வாழினும், தாழினும், தொண்டிலிருந்து ஒருபொழுதும் நிலைப்பெயராதவர்கள். அவர்கள், ‘அவமே புரியார்’ என்பது கருவூரடிகள்தம் திருவாக்கு. அவர்களைச் ‘செம்மனக் கிழவோர்’ என்று கருவூரடிகள் போற்றுகின்றார். ‘அவர்களுடன் கூடி பணிசெய்வதே பெருமானைப் பெற்றுத்தரும்’ என்று சாற்றுகின்றார். ‘பணி செய்வார்க்கு இரங்கும் பசுபதி’  என்பது, கருவூரடிகளின் உறுதித்திருவாக்கு. பெருமான்,  தம்மையும் செம்மனக் கிழவோராகிய அடியார்களுடன் கூட்டுவித்தருளிய அருள்சிறப்பினைக் கருவூரடிகள்,

 ‘கண்பனி  அரும்பக் கைகள் மொட்டித்தென்

                             களைகணே ஓலமென் றோலிட்

                    டென்பெலா முருகும் அன்பர்தங் கூட்டத்

                             தென்னையும் புணர்ப்பவன்’                                               (9:8:5)

எனப் போற்றியமைகின்றார்.

 

முடிவுரை

அளவு கடவாத ஐம்புல நாட்டமும், அடியவர்களை என்றும் இணைபிரியாதத் தொண்டுள்ளமே,  நம்மை அன்புநெறிக்கு ஆட்படுத்தும். அன்புநெறி, அனைவரையும் உறவாகக் கருதுகின்ற இன்பத்தைத் தந்தருளும். அனைவரும் உறவாக விளங்குகின்ற சுற்றுப்புறமே, சிவனிருப்பாக நம்மால் உணரப்படும். அந்நிலையில், உயிருள் பொருளும், உயிரில் பொருளும் சிவனிருப்பாக விளங்குதலை உணரலாம். அவ்வாறு பண்பட்ட கருவூரடிகளது கருணைத் திருநோக்கமே, போகத்துயில் கொண்ட புன்மக்களாகிய நமது அறியாமைக்கு மருந்தாகிய திருப்பதிகங்களைத் தந்துள்ளது.

 ‘ஒருங்கிரு கண்ணின் எண்ணில்புன் மாக்கள்

                                        உறங்கிருள் நடுநல்யா மத்தோர்

                               கருங்கண்நின் றிமைக்குஞ் செழுஞ்சுடர் விளக்கங்

                                        கனந்தெனக் கலந்துணர் கருவூர்’                    (9: 17: 10)

என்று பாடி கருவூரார், தமது பதிகச் சொல்மாலைகளின் திருநோக்கத்தைத் தலைக்கட்டியுள்ளார். அவர்தம் திருப்பதிக  நெறிவழியே,   அனைத்துயிரும் பிறவாமைக்குத் தலைப்படுவதே, அடிகளின் திருவுள்ளம்.

 

ஆய்வுத் துணைநூல்கள்:

  1. ஒன்பதாம் திருமுறை, வசந்தகுமார்.இரா.,டாக்டர்., (ப.ஆ).,

பன்னிரு திருமுறை ஆய்வுமைய வெளியீடு,

கற்பகம் உயர்கல்வி கலைக்கழகம், கோயம்புத்தூர் – 21.

  1. சிவஞானபோதம், திருநெறி வரிசை, www.thevaaram.org

கட்டுரையாளர்

முனைவர் இரா. மதன் குமார்., இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை,கற்பகம் உயர்கல்வி கலைக்கழகம், கோயம்புத்தூர் – 21.

 

 

 

 

 

 

 

 

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *