-மேகலா இராமமூர்த்தி

சினத்தை கைவிடுதலும் மனத்தை அடக்கிப் பொறுமையைக் கைக்கொள்வதும் மனித வாழ்வைச் செம்மையாக்கும். ”பொறுத்தார் பூமி ஆள்வார்” என்பது முன்னோரின் பொன்மொழி அன்றோ?

அறிவ தறிந்தடங்கி அஞ்சுவ தஞ்சி
உறுவ துலகுவப்பச் செய்து – பெறுவதனால்
இன்புற்று வாழும் இயல்பினார் எஞ்ஞான்றும்
துன்புற்று வாழ்தல் அரிது.
(நாலடி – 74)
 

அறிந்துகொள்ள வேண்டியவற்றை அறிந்து, அடக்கமுடையவராய், அஞ்சத் தக்கவற்றிற்கு அஞ்சி, தமக்குத் தகுதியான செயல்களை உலகம் மகிழும் வண்ணஞ்செய்து, இன்பத்தோடு வாழும் இயல்பினர், என்றும் வாழ்வில் துன்புறுதல் இல்லை.

அடக்கமும், பொறுமையும், கிடைக்கும் வருவாயில் மனநிறைவோடு வாழும் பெற்றியும் மட்டும் ஒருவனுக்கு வாய்த்துவிடுமேயானால், அவன் வாழ்க்கை வெற்றிதான்!  ”பெற்றது மகிழ்ந்து சுற்றம் அருத்தி ஓம்பாது உண்டு கூம்பாது வீசி” வாழும் தமிழ்ப் புலவோரின் பொருள்பொதிந்த வாழ்வு குறித்துக் கோவூர்கிழார் கூறுவதை இங்கே பொருத்திப் பார்க்கலாம்.

மனிதரில் இருவகையினர் உளர். சிலர் உள்ளத்தே நஞ்சைவைத்துச் சொல்லில் தேனைக் குழைத்துப் பேசுவார்கள்; வேறுசிலர் உள்ளத்து அன்பை வெளிக்காட்டிக் கொள்ளாமல் கடுமொழிகளால் அறிவுறுத்துவார்கள். இவ்விருவரில் யார் சொல்லை நாம் மனங்கொள்ளவேண்டும் என்பதை நமக்குத் தெளிவுபடுத்துகின்றது நாலடியார்.

”பேரரும்புகளிலெல்லாம் விருப்பத்தையுடைய வண்டுகள் ஆரவாரிக்கும் வளம்நிறைந்த கடலையுடைய குளிர்ச்சிபொருந்திய கடற்கரைத் தலைவ! தமக்கு முன்னேற்றம் தருவதை அறிந்து செய்வாரைப் பெற்றால், அவர்கள் உள்ளன்பினால் நன்மை கருதிச் சொல்லும் கடுஞ்சொல், மனமகிழ்ந்து கூறும் அயலவர் இன்சொல்லினுந் தீதாகுமா? ஆகாது!” என்கிறது நாலடியார்.

காதலாற் சொல்லுங் கடுஞ்சொல் உவந்துரைக்கும்
ஏதிலார் இன்சொலின் தீதாமோ – போதெலாம்
மாதர்வண்டு ஆர்க்கும் மலிகடல் தண்சேர்ப்ப !
ஆவ தறிவார்ப் பெறின். 
(நாலடி – 73)

இனிக்க இனிக்கப் பேசினாலும் பகைவரின் சொற்கள் தள்ளத்தக்கன. கடுமையாய் மொழிந்தாலும் நட்டாரின் சொற்கள் தள்ளாது கொள்ளத்தக்கன. இனிப்புப் பண்டங்கள் வாய்க்குச் சுவை தந்தாலும் உடலுக்குத் தீங்கையும், கசப்புப் பண்டங்கள் வாய்க்குக் கைத்தாலும் உடலுக்கு நன்மையையும் தருவனவன்றோ? எனவே சொற்களின் சுவையில் மயங்குவதைக் காட்டிலும் அவை நமக்கு நல்கும் பயனறிந்து தெளிதலே நல்லது.

பொறையுடைமையைப் பல்வேறு தருணங்களில் பல்வேறு வகைகளில் வெளிப்படுத்தவேண்டிய கடப்பாடு சான்றோர்க்கு உண்டு. காட்டாக,  அறிவுடையோர் பேதையர்க்கு நல்லறிவு கொளுத்த எத்துணை முயன்றாலும் அதனை விளங்கிக்கொள்ளும் அறிவும் திறனும் பேதையர்க்கின்மையால் அவர்கள் அறிவுடையோர் கருத்துக்கு முரண்பட்டு ஏறுமாறாக ஏதேனும் பிதற்றிக்கொண்டுதான் இருப்பர். எனவே ஆன்றவிந்தடங்கிய சான்றோர் பேதையரோடு உரையாடுவதைத் தவிர்த்து அவ்விடத்தைவிட்டு வழுக்கிக் கழிதலே நல்லது என்கிறது நாலடியார்.

கோதை யருவிக் குளிர்வரை நன்னாட
பேதையோ டியாதும் உரையற்க – பேதை
உரைப்பிற் சிதைந்துரைக்கும் வகையான்
வழுக்கிக் கழிதலே நன்று.
(நாலடி – 71)

”பழமொழி நானூறும் இதே பொருள்பட,

”கல்லா தவரிடைக் கட்டுரையின் மிக்கதோர்
பொல்லாத(து) இல்லை ஒருவற்கு…” என்று சொல்லிச் சென்றிருப்பதை இங்கே நாம் எண்ணிப் பார்க்கலாம்.

மானுட வாழ்வில் ஒழுக்கம் மிகவும் இன்றியமையாதது. ’ஓதலின் சிறந்தன்று ஒழுக்கமுடைமை’ என்பது ஆன்றோர் வாக்கு. மனிதரை விலங்கினின்றும் வேறுபடுத்திக்காட்டும் அவ்வுயர் பண்பை மானுடர் உயிரினும் மேலாய் ஓம்பவேண்டும்.

’அறனெனப்பட்டதே இல்வாழ்க்கை’ என்று வள்ளுவரால் விதந்தோதப்படும் இல்லறமாம் நல்லறத்தில் ஈடுபட்டிருக்கும் ஆடவன் ஒருவன், தன் மனைவியைத் தவிர பிற பெண்டிரை நயப்பதும், அவர்கள்மாட்டுக் காமம்துய்க்க நினைப்பதும் மிகவும் தீது. அந்த இழிசெயலை – பழிசெயலைச் சான்றோர் என்றுமே விரும்பமாட்டார்கள்; ஏன்? புண்ணியம், புகழ், தக்கார் நேயம், பெருமிதம் தரும் ஆண்மை என்ற இந்நான்கும் பிறன்மனை விரும்புவாரிடத்திற் சேரமாட்டா; பகை, பழி, பாவம், அச்சம் எனும் நான்குமே அவர்களிடம் சேரும் என்பதால்.

அறம்புகழ் கேண்மை பெருமைஇந் நான்கும்
பிறன்தாரம் நச்சுவார்ச் சேரா – பிறன்தாரம்
நச்சுவார்ச் சேரும் பகைபழி பாவம்என்று
அச்சத்தோ டிந்நாற் பொருள். 
(நாலடி – 82)
 

இதையே குறளாசான்,

பகைபாவம் அச்சம் பழியென நான்கும்
இகவாவாம் இல்லிறப்பான் கண்.
 (பிறனில் விழையாமை – 146) என்றறைந்தார்.

திருமணம் ஆகா இளைஞன் ஒருவன் பிறன்மனை நயப்பதே கண்டிக்கத்தக்க தீயொழுக்கமாகும். அவ்வாறிருக்க, நல்லநாள் கேட்டறிந்து, அந்நன்னாளிற் பலரும் அறியும்படி மணமுரசு கொட்டித் திருமணம்செய்து தன் காவலிற் புகுந்த மெல்லியளான அன்புடை மனையாட்டியும் அகத்திருக்க, ஒருவன் அயலான் மனைவியை அடையக் கருதுவது ஏன்? என்று வியந்து வினாவெழுப்புகிறது நாலடி.

பல்லா ரறியப் பறையறைந்து நாள்கேட்டுக்
கல்யாணஞ் செய்து கடிப்புக்க – மெல்லியற்
காதன் மனையாளும் இல்லாளா என்ஒருவன்
ஏதின் மனையாளை நோக்கு. 
(நாலடி – 86)

ஆகவே இல்லறத்தானாயினும் சரி, மணமாகா இளைஞனாயினும் சரி இன்னொருவனின் இல்லக்கிழத்திபால் காமம்கொள்வது அவன் குடிக்குப் பெருங்கேடாய் முடியும். அதனால்தான் கீழான நெறியில் ஒழுகுகின்றவன் அனைவரினும் கடையன் – அறிவிலி, பிறனில் விழைந்து அவள் வீட்டு வாயிலில் காத்துக் கிடப்போன் என்று வெகுண்டுரைத்தார் தெய்வப் புலவர்.

அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை
நின்றாரின் பேதையார் இல்.  (பிறனில் விழையாமை – 142)

முறையற்ற பெண்ணாசையை ஒழித்தலே பேராண்மை என்பதே மேலோர் கருத்து.

[தொடரும்]

*****

துணைநூல்கள்:

1. நாலடியார் மூலமும் உரையும் – திரு. தி. சு. பாலசுந்தரம் பிள்ளை
2. திருக்குறள் தெளிவுரை – மு. வரதராசனார்
3. பழமொழி நானூறு – ம. இராசமாணிக்கம் பிள்ளை

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *