கருவாகி உருவாகி கவினுலகைக் காணும் வரை…

ஆ. செந்தில் குமார்.

தந்தையின் உயிரணு ஆற்றலைப் பெற்று…
தாயின் கருமுட்டை சுவற்றைத் துளைத்து…
உட்புகுந் ததனுள் ஒன்று கலந்து…
உயிரின் கருவாய் மாற்றம் பெற்றது…!

மாற்றம் பெற்ற அச்சிறு கருவும்…
மெல்ல நகர்ந்து கருப்பையை அடைந்து…
கருப்பை சுவற்றில் ஒட்டிக்கொண்டு…
குழந்தை உருவாய் மாறத் துடித்தது…!

செல்களின் பகுப்பு வேகமாய் நடந்து…
செல்களின் வளர்ச்சி துரிதமாய் நடந்து…
செல்களின் பகுப்பும் துரித வளர்ச்சியும்…
சேர்ந்தொரு சதையின் பிண்டமாய் ஆனது…!

நஞ்சுக்கொடி யொன்று வளரப் பெற்று…
பிஞ்சுக் குழந்தைக்குத் தேவையான…
சுவாசக் காற்று சத்துப் பொருட்கள்…
சடுதியில் தாயிடம் பெற்றுக் கொடுக்கும்…!

மூன்றாம் நான்காம் வாரத்திற் குள்ளே…
முதுகுத் தண்டு மூளை தோன்றி…
இரத்த அணுக்கள் நாளங்கள் தோன்றி…
இதயம் தோன்றி துடித்திடத் துவங்கும்…!

உள்ளுறுப் பனைத்தும் மெல்லத் தோன்றி…
உடலில் கைகால் குருத்துகள் தோன்றி…
காது மடல்கள் எலும்புகள் நரம்புகள்…
கருக் குழந்தைக்கு வளர்ந்திட லாச்சு…!

எட்டாம் வார இறுதிக்குள் எல்லாம்…
எலும்புகள் தசைகள் நரம்புகள் கொண்ட…
ஒற்றை அங்குல நீளக் கருவில்…
உறுப்புகள் மொத்தமும் தோன்றி யிருக்கும்…!

குரல் தசைநார்கள் வளரத் துவங்கும் …
புறப் பாலுறுப்பு தோன்றத் துவங்கும்…
கைகால் நகங்கள் வளரத் துவங்கும்…
கைரேகை எல்லாம் தோன்றத் துவங்கும்…!

பன்னிறு வாரங்கள் கடந்த பிறகு…
பல மடங்காக எடையும் கூடும்…
சிசுவின் வாயுள் இருக்கும் நாவில்…
சுவையை உணரும் அமைப்புகள் தோன்றும்…!

தோல் அடுக்கெல்லாம் முதிரத் துவங்கும்…
தலைமுடி யனைத்தும் வளரத் துவங்கும்…
காற்றை சுவாசிக்கும் திறமை தோன்றும்…
கேட்கும் திறமை எல்லாம் தோன்றும்…!

கருப்பை திரவத்தில் மிதக்கும் கருவில்…
கழுத்தைத் திருப்பும் தலையை அசைக்கும்…
திடுக்கிடும் கைகால் அசைவுகள் பலவும்…
துடிப்புள்ளதாக உணர்ந்திட முடியும்…!

இருபத்து நான்கு வாரங்கள் கழித்து…
இமைக ளிரண்டும் மெல்லத் திறக்கும்…
சிசுவின் தோலில் சுருக்கங்கள் குறையும்…
சிசுவின் மூளை துரிதமாய் வளரும்…!

சுவாச மண்டலம் எலும்பு மண்டலம்…
செரிமான மண்டலம் தசை மண்டலம்…
நரம்பு மண்டலம் குருதியோட்ட மண்டலம்…
நிணநீர் மண்டலம் அனைத்தும் வளரும்…!

முப்பத்தாறு வாரம் கழிந்தப்பின்…
முழுதாய் வளர்ந்த அக்கருக் குழந்தை…
நாற்பதாம் வார இறுதிக்குள் பிறந்து…
நம்மைத் தாங்கும் உலகைக் கண்டது…!

குறிப்பு :-
நிணநீர் மண்டலம்
நிணநீர் என்பது என்ன? சிவப்பணு நீங்கிய குருதி. வெளிர்ப் பாய்மம். கொழுப்பு முண்டுகளால் உண்டாக்கப்படுவது. உடல் பாதுகாப்பிற்குப் பயன்படுவது. நிணநீர் மண்டலத்திலுள்ள உறுப்புகள் யாவை? நுண்ணிகள், குழாய்கள், முண்டுகள், நிணநீர்ச் சுரப்பிகள் ஆகியவை.
நிணநீர் ஒட்டம் எவ்வாறு ஏற்படுகிறது, தசை அசைவுகளாலும் மூச்சு அசைவுகளாலும் நிணநீர் ஒட்டம் நடைபெறுகிறது. நிணநீர் மண்டலத்தின் வேலைகள் யாவை? 1. ஊட்டப்பொருள்களையும் உயிர்வளியையும் திசுக்களுக் களித்தல். 2. திசுக்கள் உண்டாகும் கழிவுகளை மீண்டும் குருதி யோடு சேர்த்தல். 3. உயிரணுக்களுக்கிடையே நிரம்பி அவற்றை உயிர் வாழச் செய்தல். 4. குடற் பால் குழலில் தங்கிக் கொழுப்பை உறிஞ்சுதல். 5. இதிலுள்ள வெள்ளணுக்கள் நோய் நுண்ணங்களைக் கொல்லுதல்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *