Category: கிரேசி மொழிகள்

கிரேசி மொழிகள்

  • சிரிப்பதிகாரம் (4)

    சிரிங்ககிரேசி மோகன்

    ————————————

    உம்மணா  மூஞ்சியோ! , உல்லாஸ மூஞ்சியோ !,

     எம்மனார்  கூப்பிட்டால்  ஏளணும், -சும்மனாங்

     காட்டி  சிரித்திட,  காயம்  மரிக்கையில்,

     சூட்டிகை,  ஆக்கும்  சிரிப்பு….

    எதுகைக்காக  ‘’எமனார்  எம்மனார்’’….

    காயம் -உடம்பு….

    Share
  • சிரிப்பதிகாரம் (3)

     

     

     

    சிரிங்ககிரேசி மோகன்

    ———————————–

    சிரிப்பொரு சஞ்சீவி, சீக்காளி தன்னை,
    உருக்கும்நோய் தீர உதவும், -இருக்கலாம்,
    பத்தியம், மாத்திரை, பக்க விளைவின்றி
    சத்திய மேவ சிரிப்பு….

    ”இப்பநான் பீச்சில் இறைக்க நடப்பது,
    உப்பெடுத்து இவ்வுடலை ஒப்பேற்ற, -அப்பெருமான்,
    காந்தி மகான்தன், கனிவான பொக்கையில்,
    சேந்திய உப்பே சிரிப்பு”…….

    Share
  • சிரிப்பதிகாரம் (2)

     

    கிரேசி மோகன்

    SiRinga_Crazy Mohan_Vallamai

    “ஏழை சிரிப்பில் இறைவன்; சிரிப்பினில், –
    ஏழையாய் மாற எமன்சைத்தான் -தோழமைதான்;
    வாழ்க வளமுடன் வாய்விட் டுசிரித்து,
    மூழ்கி எடுசிரிப்பில் முத்து”

    “சிரிக்கச் சிரிக்கச் சிதறுகின்ற முத்து,
    சிரிப்பதி காரச் சிலம்புள், -இருக்கு:
    கிறுக்கென்ற போதும், கிரேசியென்ற போதும்,
    உரக்கச் சிரித்தல் உரம்”

    ”வேண்டுதல் வேண்டாமை விட்டோன் சிரிப்பினில்,
    மூண்டெழும் மோன முகம்துதிக்க, -தீண்டுமோ,
    தீமைகள் நம்மை, திருவருணை யோகியார்
    ஆமை,நாம் குஞ்சாம் அவர்க்கு”.

    ”எல்லோரும் இன்புற்(று) இருப்பதல்லால், வேறொன்றும்
    சொல்லார், சிரிக்கவும் சிந்திக்க, -வல்லார்கள்,
    முல்லாபீர் பால்ராமன், மூஞ்சி சிடுசிடுப்பை,
    இல்லாமல் செய்யும் இறை”

    Share
  • சிரிப்பதிகாரம் (1)

     

     

    கிரேசி மோகன்…

     சிரிங்க

    சிரிப்பின் ஸ்தல புராணம்….ஒருமுறை சிவனைப் பார்க்க கைலாஸம் சென்ற மஹாவிஷ்ணுவின் , சக்கரத்தைப் பிள்ளையார் வாயிலிட்டு விழுங்கிவிட்டாராம்….வினாயகரோ, பெரிய வீட்டுப் பிள்ளை(சிவனின் சீமந்தப் புத்திரன்)….அதட்டவும் முடியாது….பார்த்தார் விஷ்ணு….தனது நான்கு(தோர்பி) கைகளால் காதைப்(கர்ணம்) பிடித்து….தோர்பி கர்ணம்தான் நாளடைவில் மருவி தோப்புக் கரணம் ஆனது…. நெடுமால் மேலும் கீழும் எழுந்து அமர்ந்து வேடிக்கைக்(ஸ்லாப்ஸ்டிக் ஹுயூமர்) காட்ட….குழந்தை வினாயகர் சிரித்ததில், வாயிலிட்ட சக்கிரம் உருண்டு விழுந்ததாம்….விஷ்ணு அதை எடுத்துக் கொண்டு சென்றாராம்….இதுதான் ‘’ஹாஸ்யம்’’ பிறந்த கதை….உபயம்-காஞ்சி பெரியவா….அதன் வெண்பாவாக்கம் கீழே….

    ‘’காப்புக் கரம்கொண்டு, காதைப் பிடித்துமால்,
    தோப்புக் கரணமிட தந்தியின்முன், -சாப்பிட்ட,
    சக்கிரம் வீழ சிரித்தனன், அக்கணம்,
    பொக்கென ஹாஸ்யம் பிறப்பு’’….(1)
    —————————————————————————————————————–

    ‘சிந்திக்கும் வேளை சிரிக்க இறைவனை,
    சந்திக் கலாமே சகஜமாய், -பந்திக்கு
    முந்துதல் போல முறுவலைப் பூத்திட,
    உன்திக்கில் வெற்றி உதிப்பு”….(2)
    —————————————————————————————————————–
    ‘சிரிமுடிந்தால் சிந்தி, சிரமமென்றால் மேலும்
    சிரி”சிரித்த பின்மூக்கை சிந்தி, -விரிசிறகை
    வானில் பறந்திடுவாய் வாய்விட் டுநகைக்க,
    ஊனில் குறையே(து) உனக்கு”….(3)
    ——————————————————————————————————-
    “வாகான வாயுனக்கு வந்ததேன்! , வீழ்த்திடும்,
    சோகானு பூதியைச் சொல்லவல்ல, -ஆகாயம்,
    கீழுள்ள ஆய கலையில் சிரிப்பின்றேல்,
    பாழுந்தன் வாய்ப்பந்தல் பேச்சு”….(4)

    ————————————————————————————————————–

    “சிந்தனை தோன்றும்முன், சீறிக் குதித்திடும்,
    பந்தென வாய்க்குள் பளேர்சிரிப்பு, -சிந்தனை,
    வாராது போனாலும், வாய்விட் டுச்சிரிக்க,
    வாராது நோயுன் வழிக்கு”….(5)
    ————————————————————————————————————-

    ‘கொல்லையில் பூத்து கொடியில் மணத்திடும்,
    முல்லையைப் போல முறுவலிக்க, -வல்லமை,
    தாராய் பராசக்தி, துன்பத்தில், தோல்வியில்,
    மாறா சிரிப்பாய் மலர்”…..(6)
    ————————————————————————————————————–

     

    Share
  • விடிகாலை வெளிச்சம்

    “வாகான வாயுனக்கு வந்ததேன்! , வீழ்த்திடும்,
    சோகானு பூதியைச் சொல்லவல்ல, -ஆகாயம்,
    கீழுள்ள ஆய கலையில் சிரிப்பின்றேல்,
    பாழுந்தன் வாய்ப்பந்தல் பேச்சு”….கிரேசி மோகன்….

    Share
  • பிள்ளையார் பிறப்பு

    கிரேசி மோகன்

    crazy

    பிள்ளையார் பிறப்பு
    ———————————–
    ”நீராடும் வேளை, நிலைவாசல் காவலுக்கு,
    ஓராளைத் தேடினாள் ஓங்காரி -சேறாக
    மேனியில் பூசிய மஞ்சளால் செய்தனள்
    ஞானி வினாயக னை”….

    ”ஆதியே ஆனாலும் அன்னை குளிக்கையில்
    பாதியில் வந்த பரம்பொருளை -வீதியில்
    தள்ளிய பிள்ளை தலையைத் தகப்பனரன்
    கிள்ளியங்கு வைத்தான் கஜம்”….

    ”COWசுகள் பேணிடும் கண்ணன் மருகோனே
    MOUSEயிக வாகனா மோதகா -HOUSEனுள்
    வாராய் வினாயகா வேளை சதுர்த்தியில்
    தாராய் அறிவில் தெளிவு….

    ”சோமன்த னைச்சென்னி சூடும் சிவகுடும்ப
    சீமந்த மைந்தன் சதுர்த்தியின்று -மாமன்தன்
    சக்கரத்தை உண்டுமிழ்ந்த சித்தி வினாயகனை
    வக்கிர துண்டனை வாழ்த்து”….

    ”அரச மரத்தடியில் ஆகாசம் பார்த்து
    உரசும் எலியோடு ஒண்டி -பெருசாய்
    எதிர்பார்ப்பு ஏதுமின்றி ஏழெட்டு தேங்காய்
    சதிராக யாதுமருள் வான்”….

    ”கமர்கட் கடலையுண்டை குச்சிஐஸ் மூன்றும்
    சமர்பிப்பேன் நானுக்கு என்றும் -அமர்ந்திட்டு
    செங்கழுநீர் பிள்ளையாரே சாப்பிட்டு த்ருப்தியாய்
    சங்கத் தமிழ்மூன்றும் தா”….கிரேசி மோகன்….

    Share
  • ராஜ சியாமளா தண்டகம்

    crazy

    ———————————————

    நிலாச்சில்லை தங்க நீள்முடியில் தாங்கி
    விலாநோகச் சேலை வலம்வரும் சின்ன
    இலாவல்லி இடையாள் சொலாச்சொல்லை உடையாள்
    கலாவல்லியை ராஜ ச்யாமளாவில் கண்டேன்….(1)

    சிரமுச்சித் தங்கும் சிறுபிறையும் அறிவும்
    கரும்பிச்சை கொள்ளும் கரும்பச்சை வடிவும்
    கரமர்ச்சிக்கின்ற கற்பனை யாழ் இசையும்
    தரும்பிச்சை கொள்வோர் தரணியிலே மேலோர்….(2)

    மேடான நெற்றி அதற்க்கீடாம் அம்மேரு
    தேடுகின்ற ஞானிக்கது திகழ்கின்ற ஊரு
    நாடுகின்ற அன்பர்க்கு நல்லறிவுச் சாறு
    பாடுஅவள் பேரு பயனடைவாய் பாரு….(3)

    ஓலையுற்ற செவிகள் ஓமிசைக்கும் கிளிகள்
    மாலையுற்ற கழுத்து மாலோலன் சங்கம்
    சேலையுற்ற தனங்கள் ஞானச்சீ தனங்கள்
    தாளையொற்றிப் பணிவீர் தாயளிப்பாள் குணங்கள்….(4)

    போகுமிடமெல்லாம் புகழ் உமக்குச் சேரும்
    ராகுகாலம் கூட மிகரம்யமாக மாறும்
    ஆதரவிக்கிங்கென்றும் அவளருளே போதும்
    ஆதலினால் அம்மா அபயமென்று ஓதும்….(5)

    சாமளையின் பாதச் சிலம்புனக்கு காப்பு
    கோமளையிரு காதின் குண்டலங்கள் யாப்பு
    நாமலைய வேண்டாம் நாலாயிரம் பாட
    தாமரையாள் தருவாள் நாமுகந்து நாட….(6)
    கல்வியவள் அருளால் கலவியாகப் படியும்
    வல்வினைகள் மாறி விளையாட்டாய் முடியும்
    செல்வமுனைத் தேர்ந்து சுவிகாரம் கொள்ளும்
    அல்மதியம் மாலை ஆதவனாய் ஒளிரும்….(7)

    ஸ்திரபுத்தியோடு ஸ்திதப் ப்ரஞ்ஞனாக
    பெருபக்தி கொண்டு பாரதிக்கு ஏக
    அறுபத்தி நான்கு ஆயகலை தம்மை
    குருவொத்து அளிப்பாள் வரசித்தி அம்மை….(8)

    ராணி லலிதாங்கி ராஜ சியாமளா
    வாணி மாதங்கி வாக்கிற் கதிபதியே
    பூநீ மகரந்தம் பொய்கை வண்டும்நீ
    நான்நீ ஆகிடயென் நாவில் அமர்வாயே….(9)
    மகரயாழை மடியினில் நீட்டி
    அகர உகர மகரம் மீட்டி
    சிகரமேரு சிரத்தினில் வீற்ற
    சகலகலா வல்லியைப் போற்று….(10)
    —————-

    Share
  • வேண்டுதல் வெண்பா – 36ம் ஆண்டு நிறைவு நாள்!

    ‘ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு’ என்ற முதுமொழியின் இலக்கணமாகத் திகழும் கிரேசி கிரியேசன்சு குழுவினருக்கு வல்லமையின் மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    இன்று கிரேசி கிரியேஷன்ஸ் 36 ஆண்டுகள் நிறைவுபெற்று, 37ல் அடியெடுத்து வைக்கிறது….இதற்கு காரணம் கிரேசி மோகனின் எழுத்தோ இல்லை மாது பாலாஜியின் நடிப்போ அல்ல….கூட்டுக் குடும்பமாக நாங்கள் இருந்ததுதான்….Being Together தான் காரணம்….ஒன்று பட்டால் உண்டு ஆண்டு….

    crazy

    வேண்டுதல் வெண்பா….
    ———————————————-
    ஆண்டுகள்முப் பத்திஆ(று), ஆச்சு அரங்கேறி,
    வாண்டுகள் ஆனோம் வயோதிகமாய், -நீண்டு,
    உலகளந்த உத்தமா, உற்சாகம் தந்து,
    அலகிலா ஏற்றம் அளி ….கிரேசி மோகன்….

    crazy0

    சாக்லேட் கிருஷ்ணா வேண்டுதல் வெண்பாக்கள்

    Share
  • ஹேப்பி கோகுலாஷ்டமி!

    –கிரேசி மோகன்

     

    Bala-Krishna

    நாளையவன் ஐயர்க்கு, நாமம் அணிந்தவர்க்கு,(வைணவர்க்கு),
    நாளை மறுநாள் நவநீதம் – வேளைதனில்,
    இஷ்டம்கொள்
     ளாதே, இரவில் உதித்த,
    அஷ்டமிக்கு அன்பே அவல்.

     

    Share
  • மதிய உதயம்

    -கிரேசி மோகன்

    -சூரி நாகம்மாள் ஸ்ரீ ரமணாஸ்ரம லேகுலு….

    பகவான் ஸ்ரீ ரமண மஹரிஷி தன்னை ‘’நானே லாஸ்ட்டில் ஃபர்ஸ்ட்(கடைசியில் முதல்)’’ என்று சொல்லிக் கொள்வாராம்…

    லாஸ்ட்டுலஃபர்ஸ்ட் ஆனால்லாங் லாஸ்டிங் நிறைவுண்டு,
    ஃபார்ஸ்ட்ஃபுட்டாம்  வாழ்வில்  பசியாறி – வேஸ்ட்டாகாய்:
    டேஸ்ட்டான்மா காண  திருவருணை  ஈசரின்,
    கோஸ்ட்டாம்(நிழல்)  ரமணபதம்  கொள்.

    Share
  • மதிய உதயம்!

    -கிரேசி மோகன்

    சூரி நாகம்மாள் ஸ்ரீ ரமணாஅஸ்ரம லேகுலு…

    பச்சைப்புல் பூண்டு படுத்திடப் பஞ்சணை,
    எச்சக்கை
    சோத்துக்கை ஏந்திட – பிச்சைக்கு,
    புண்ணிய
    மாதர்கள் போதாதா! வைராகிக்(கு)
    அன்னியர்முன்
    நிற்றல் அவம்.

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    கிரேசி மோகன்
    இந்த ஓவியத்தை ”கேசவ்” ஆடிப் பூரத்திற்காக அனுப்பியிருந்தார்….
    அச்சமயம் அடியேன் நாடகம் போட நாமக்கல் சென்றிருந்தேன்….
    வழக்கமான வெண்பா அனுப்ப அங்கு கம்ப்யூட்டரும் இல்லை,
    கேசவ் ஆண்டாள் போல் தூதாக அனுப்ப கிளியும் இல்லை….
    ஆகவே இன்று….என்ன ஆச்சரியம் இன்று ”கேசவ்”வுக்கு
    KSA TRUST “CHAMPION” பட்டம் கலைத்துறைக்காக கொடுத்தார்கள்….
    கொடுத்தது அடியேன்….கொடுக்க வைத்தவன் கண்ணன்….
    மேலும் கேசவ்விடம் பேசியபோது ”ஆண்டாள் தூதாக கிளியை
    அனுப்பியதன் தாத்பர்யத்தைச் சொன்னார்….வடமொழியில்
    கிளியை சுகம் என்பார்களாம்….பாகவதம் சொன்ன சுகமுனிக்கும்
    வதனம் கிளிரூபம்….
    இன்று கேசவ்வுக்கு விருது வழங்கும்போது…. பேசும்போது ”வெற்றிகரமான ஆணுக்கு பின் ஒரு பெண் இருப்பது போல
    CHAMPIONக்கு பின்புலமாக ஒரு ஜீனியஸ் கட்டாயம் இருந்தாக வேண்டும்….
    கேசவ் என்ற இந்த CHAMPION பின்புறம் இருக்கும் GENIUS கண்ணபிரான்….
    வெண்பாவுக்கு கருத்து கிடைத்தது….

     

    crazy

    திருவாடிப் பூரத்தாள் திருவரங்கனுக்கு தூது….
    ———————————————————————————

    ‘’வேத சுகக்கிளியை, தூதாய் அனுப்புகிறாள்,
    கோதை திருவரங்கக் கேள்வர்க்கு(கணவருக்கு), -போதிதன்(EVENT)
    ஆம்பியன்ஸை(AMBIENCE) கேசவ் , அழகாய்ப் படமளித்தாய்,
    சாம்ப்பியன்(CHAMPION)நீ, ஜீனியஸ்அச்(GENIUS) சேய்(கண்ணன்)’’….கிரேசி மோகன்….

    சேய்- ஆயர்பாடி குழந்தை கண்ணன்….

    Share
  • பிள்ளையார் வெண்பாக்கள்

    ஓங்கார முகன் ஓவியம் ஹிண்டு கேசவ்….
    —————————————————————————-

    பிள்ளையார் வெண்பாக்கள்
    ———————————–
    Narthana Vinayaka.

    கேசவ் ஓவியம் பார்த்து எழுதியது
    ——————————————–
    ‘’ஆத்தாவோ கற்பகம், அப்பன் கபாலீசர்,
    மூத்தோனாய் ஆனாய் முருகனுக்கு, -கூத்தாட,
    பத்தாக் குறைக்கு பவளக் கொடியாக
    மத்தாளும் கண்ணன்மா மன்”….(1)

    ‘’வானந்த கைலாஸம் வாழும் வினாயகர்,
    ஆனந்தம் கொண்டிங்கே ஆடுகிறார், -ஆநந்தன்(ஆக்களை மேய்க்கும் நந்தகோபன்)
    -பையனுக்கு முன்பே, பிறந்தநாள் காரணம்:
    அய்யனுக்கு பின்பே அரி’’….(2)
    ’’சோமன்த னைச்சென்னி சூடும் சிவகுடும்ப
    சீமந்த மைந்தன் சதுர்த்தியின்று -மாமன்தன்
    சக்கரத்தை உண்டுமிழ்ந்த சித்தி வினாயகனை
    வக்கிர துண்டனை வாழ்த்து….(3)

    ’’தம்பிக்கு காதல் துணைசென்ற தந்தியே
    தும்பிக்கை வேழமே, தேவர்கள் -ஸ்தம்பிக்க
    ஆட்சி கயிலாயத்தை அவ்வைக்(கு) அளித்தவா
    காட்சிக்(கு) இனியபிள்ளாய் காப்பு….(4)

    ’’தொந்தி குலுங்கிட தந்தி ஜொலித்திட
    முந்தி முழுமுதல் மோதகன்முச் -சந்தி
    அரசடியில் வீற்று அருள்பாலிக் கின்றான்
    முரசடித்தேன் தந்திக்கு முந்து….(5)
    ’’ஆனைக்கா அம்மையும் ஊனைக்கொள் ஊர்த்தவர்க்கும்
    சேனைக்கா வேலன் சகோதரனாய்-தீனர்க்காய்
    தோன்றிய பிள்ளாய், தமிழாக அவ்வைக்கோல்
    ஊன்றிய வேழா உதவு….(6)
    ’’அக்கினிக்கு முப்புரத்தை ஆட்படுத்த தேரேறி
    உக்கிரமாய் சென்ற உருத்திரர்க்கே -விக்கினமாய்
    அச்சொடித்து உன்னிருப்பை எச்சரிக்கை செய்தவரை
    உச்சரிக்க வைத்தாய் ஒழுங்கு….(7)

    ’’கணபதி ராயா மனிதச காயா
    பனிபதி கைலாசப் பையா -தனபதி
    மாலின் மருகோனே மயிலோனின் மூத்தோனே
    கோல வினாயகனே காப்பு….(8)

    ’’கயிலாய சீதனம் கற்பகச் செல்லம்
    மயிலாப்பூர் தோழன் மகோதரன் -பயிலோரும்
    பள்ளிப் பரிட்சையில் பெற்றிட வெற்றியை
    அள்ளித் தருவான் அவன்….(9)
    ’’அருகம்புல் தேங்காய் எருக்கம்பூ, மாலின்
    மருகன்பால் வைக்க மகிழ்ந்து -ஒருகொம்பால்
    நான்முகன் நம்தலையில் நட்ட விதையினை
    ஆனைமுகம் ஆக்கும் அரசு….(10)

    ’’cowசுகள் பேணிடும் கண்ணன் மருகோனே
    mouseயிக வாகனா மோதகா -houseனுள்
    வாராய் வினாயகா வேளை சதுர்த்தியில்
    தாராய் அறிவில் தெளிவு’’….(11)

    ’’மூஷிக வாகனனை தோஷ விநாசகனை
    பாஷைகள் போற்றும் ப்ரணவனை –வேஷமாய்
    வேழத்தோல் போர்த்திய தோழக் கடவுளை
    ஏழைகள் ஈசனை ஏத்து….(12)
    ’’அரச மரத்தடியில் ஆகாசம் பார்த்து
    உரசும் எலியோடு ஒண்டி -பெருசாய்
    எதிர்பார்ப்பு ஏதுமின்றி ஏழெட்டு தேங்காய்
    சதிராக யாதுமருள் வான்….(13)

    செங்கழுநீர் பிள்ளையார்….
    ————————————————–
    ’’கமர்கட் கடலையுண்டை குச்சிஐஸ் மூன்றும்
    சமர்பிப்பேன் நானுக்கு என்றும் -அமர்ந்திட்டு
    செங்கழுநீர் பிள்ளையாரே சாப்பிட்டு த்ருப்தியாய்
    சங்கத் தமிழ்மூன்றும் தா….(14)

    ’’தந்தி உடைய தரையில் அவசரமாய்
    முந்தி முருகனுக்கு முன்னால் -தொந்தி
    கணபதி தாய்ப்பால் உணவுண்ணும் காட்சி
    மனமதில் கொள்ள மகிழ்வு….(15)

    மலைக்கோட்டை வினாயகர் திருச்சி….
    ———————————————————-
    ’’மெச்சிட பக்தர்கள் மேதினியில் மாலவனை
    குச்சுக் குடித்தனம் கொள்ளவைத்த -உச்சி
    மலைக்கோட்டை பிள்ளாய் மனமுவப்பீர் நாடகக்
    கலைக்கோட்டை காபந்துன் கால்….(16)

    மனக்குள வினாயகர் புதுச்சேரி….
    ———————————————————-
    ‘’எனக்குள்ளே என்றும் மணத்திடும் வேழ
    மனக்குள மாலோன் மருகா -மனத்துள்ளே
    தோண்டி அழுக்கெடுப்பாய் வேண்டி விழைந்திடுவேன்
    பாண்டி வருகையில் பார்த்து….(17)

    ’’பந்திக்கு முந்தும் படபடப்பாய் பேர்புகழ்
    சந்திக்க ஓடி சலிப்படைவோம் -சிந்திக்க
    தொந்தி கணபதியை முந்தி வினாயகனை
    எண்திக்கும் ஏவல் எமக்கு….(18)

    வியாசன் உரைக்க வினாயகன் பாரதம் எழுதுதல்….
    —————————————————————————————-

    ’’முனிவன் உரைத்த மகாபா ரதத்தை
    பணிவும் குறும்பும் பெருகும் -வினய
    முகத்துடன் மூஷிக வாகனன் தந்த
    நகத்தால் வடித்தல் நயம்….(19)

    MOP வைஷ்ணவா காலேஜ் வினாயகர்
    ———————————————-
    ’’வயணமாய்க் குந்தி மரமருள்எம் ஓபி
    வயிணவக் கல்லூரி வேழா -பயனிவன்
    கேட்டதைத் தந்து குளிர்ந்திடச் செய்திடு
    வீட்டதன் சோகம் விலக்கு….(20)

    ’’காரைக்குடி சென்றபோது பிள்ளையார் பட்டி
    வினாயகர் தரிசனம்….
    ————————————————————-
    ’’கொள்ளை அழகனாய் பிள்ளைப் பெருமாளாய்
    வெள்ளைப் பணியார வேழத்தை -பிள்ளையார்
    பட்டிவாழ் வெல்லத்தை செட்டிமார் செல்லத்தை
    மட்டிலா மகோதரனை மேவு….(21)

    ’’வெற்பைப் பிளந்து வெளிவந்(து) அடியார்க்கு
    கற்பகமாய்க் கொட்டும் கணபதியே -நிர்பய
    நெஞ்சில் நினைவற்ற நிம்மதியைத் தந்தருள்வீர்
    அஞ்சு கரத்தால் எனக்கு….(22)

    வினாய சதுர்த்தியன்று எழுதியது….
    ———————————————
    ‘’பந்தியிடும் பார்வதி பாலுக்காய் தம்பியை
    முந்திட ஒற்றை மருப்புடைய -தொந்தி
    சரியத் தவழும் சதுர்த்தித் தலைவா
    விரியத் திறப்பாய் விழி….(23)

    ’’சலித்தது வாழ்வு சதுர்த்தி இறைவா
    வலுத்தது நெஞ்சில் விரக்தி -அளித்திடு
    ஆன்ம உணவுணர்வை ஆறா பசிதீர
    வான்மழை போல்பெய் விருந்து….(24)

    ’’கணபதி ராயா மனித சகாயா
    பனிபதி வாசரின் பையா -கனிதனை
    வென்றன்று பெற்றோர் வலம்வந்தோய் என்னுச்சி
    சிண்டென்றும் உன்தாள் சரண்….(25)

    ’’எருக்கம் அணிந்து எலிமீ(து) அமர்ந்து
    இருக்கும் இடத்தில் இருந்து -ஒருகொம்பன்
    வேண்டியதை நல்கிடும் வேற்றுமை பாராமல்
    ஆண்டிமுதல் ஆண்டான் அருள்….(26)

    ’’மாம்பலத்தில் கடல் குளியலுக்கு தயாராக
    உள்ள கணபதியைப் பார்த்து….
    ——————————————————
    ’’எருக்கம் அணிந்து எலிமீ(து) அமர்ந்து
    இருக்கும் இடத்தில் இருந்து -ஒருகொம்பன்
    வேண்டியதை நல்கிவிட்டு வாரிதியில் மூழ்கிடும்
    பாண்டிபஜார் பிள்ளையார் பார்….(27)

    ’’அப்பன் கனியருந்தி தொப்பையும் தொந்தியுமாய்
    சப்பை எலியேறி, சங்கடத்தைச் -செப்பிட,
    அக்கணமே வந்தருள்வான் விக்கினம் நீங்கிட
    பக்கவிளை(வு) இல்லா பலன்’’….(28)
    புது டிராமா ‘’கூகிள் கடோத்கஜனுக்காக’’ வேண்டி எழுதியது….
    ————————————————————————————————————-
    ’’அப்பனன்று செப்பிடாது முப்புரம் சென்றபோது
    சப்பர சக்கிரத்தை சோதித்த -அப்பனே
    கூகிள் கடோத்கஜன் கம்ப்யூட்டர் டவுன்லோடாய்
    ஏகஅஞ்சல் லாங்வேஜ் எழுத்து….(29)

    ’’சதுர்த்தி முடிந்தது சங்கடம் தீர்க்க
    உதித்த கணேசா உடனே -குதித்திட
    தங்கை மகன்காண தாய்மாமன் காத்திருக்கான்
    வங்கக் கடலோரம் வா….(30)

    ’’நான்ற வயிறாட, நாசிக் கரமாட
    மூன்று விழியாட மூஞ்சூரில் -தோன்றி
    நடமாடும் நீல நிறத்து கணேசா
    கடலாடப் போனதேன் கூறு….(31)

    ’’சீதப் பதங்களும் மோதகம் ஏந்துகையும்
    போதெருக்கம் மாலை புரள்மார்பும் -காதசைப்பும்
    ஆழ நினைந்து அழுது அழைத்திட
    வேழம் துணைக்கு வரும்….(32)

    பலஸ்ருதி….
    ———————–
    ’’பதினாறைப் பெற்று பெருவாழ்வு வாழ
    பதினாறு பேர்களைப் பெற்ற -அதிகாரி
    அக்கணேச ஆனைமுன் விக்கினங்கள் வைத்திட
    மக்கிடுமே மண்புழுவாய் மாய்ந்து’’….(33)….

    பதினாறு பேர்களைப் பெற்ற-ஷோடஸ கணபதி பதினாறு பெயருடையவர்….

    Share
  • TIMES OF INDIA – Interview

    Crazy Mohan

     

    crazy1

     

    crazy

    crazy3

     

    crazy4

     

     

    Share
  • அறுபடையோன் புகழ்….

    images (2)
    “சொந்தப்பாக்(கு) ஆரணம் தந்தப்பா தென்பழனி
    கந்தப்பா சோணை கிரிநாதர் -சந்தப்பா ,
    என்தப்பா வெண்பா எழுத்தில் தளைதட்டல் !
    குந்தப்பா என்நாவுக் குள்”….கிரேசி மோகன்….

    ஆரணம் -வேதம்….

    அறுபடையோன் புகழ்….
    ——————————————
    திருவேரகம்(சுவாமி மலை)….
    ————————————-
    ”குந்திக்கால் மண்டியிட்டு கூப்பியக் கைகொண்ட
    தந்தைக்கு சொன்ன தனயனை -சிந்தைக்குள்
    வேராக ஊன்றி விருட்ஷமாய் நட்டிடு
    ஏரகச் செல்வனை ஏத்து’’….(1)

    பழமுதிர்சோலை
    ——————–
    ”கூப்பாடு போட்டவுடன் கும்பல் கூடிடும்
    தோப்பாய் இருந்து தனிமரமாய் -மூப்பால்
    கிழமுதிரும் போதேனும் கந்தன்கை கோர்க்க
    பழமுதிர் சோலைக்குள் புகு’’….(2)

    திருத்தணி
    ————–
    ”விருத்தனாய் வந்து குறத்தியைக் கூடி
    திருத்தணி மேவும் தலைவா -மருத்துவன்
    வைதீஸ் வரன்பெற்ற வேலா யுதாவாழ்வில்
    பொய்தீசல் சேராது போக்கு’’….(3)

    திருச்செந்தூர்
    ——————-
    ”மாறுபடு சூரனுடல் வேறுபட வேலெய்து
    கூறுபட வைத்த குருநாதா -சீறுகடல்
    செந்தூரில் பத்தினிகள் சேர வளர்ந்திடும்
    சிந்தூர வண்ணனைச் சேர்’’….(4)
    பழனி
    ——–
    ”மாம்பழம் தந்தை மறுத்ததால் கோபித்து
    தீம்பிழம் பாகி தவக்கோலம் -நாம்பழனி
    குன்றினில் கண்டு களித்திட காட்சிதரும்
    நின்றிடும் ஆண்டி நமக்கு”….(5)

    திருப்பரங்குன்றம்
    ———————–
    ’’குரங்கென்ற நெஞ்சோடு கூடிக் குலாவி
    தரங்குன்றி தாழ்ந்தோம், தவித்தோம் -பரங்குன்றில்
    தெய்வானை கைப்பிடித்த தேவ சகாயனை
    கைவாய்மெய் கொண்டு கருது’’….(6)….கிரேசி மோகன்….

    Share